Star Mountain

My travels and other interests

 ஜெயகாந்தனின் அமெரிக்கப் பயணம் (2000)

 ஜெயகாந்தனின் அமெரிக்கப் பயணம்
ந. முருகானந்தம், நியூ ஜெர்சி

ஜெயகாந்தன் எனது அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய எழுத்தாளர். தற்காலத் தமிழ் மொழியின் அழகினை நான் ரசிக்க உதவியவர். தமிழ்ச் சமூகத்தின் மீது எனக்கிருக்கும் அன்பையும், மதிப்பையும் பன்மடங்கு பெருக்கியவர். எழுத்தாளர். பேச்சாளர். சிந்தனையாளர். சுமார் 25ஆண்டுகளாய், கல்வி, தொழில் காரணங்களால், வெளி மாநிலங்களிலும், அமெரிக்காவிலும் வாழ்ந்து வரும் எனக்கு, தமிழ் நாட்டு ஞாபகம் வரும் போதெல்லாம் சுலபமாக பாஸ் போர்ட், விசா இல்லாமல், ஆகாய விமானம் ஏறாமல் தமிழகம் சென்று, வாழும் அனுபவத்தை ஜெயகாந்தன் எழுத்துக்கள் எனக்குத் தருவதை பல முறை உணர்ந்திருக்கிறேன். இது தமிழ் மொழியின் சிறப்பா? இல்லை, மொழியின் சிறப்பா? அல்லது, எழுத்தின் சிறப்புத்தானா? என்று நான் வியந்ததுண்டு. இருப்பினும், எனது 20 ஆண்டு அமெரிக்க வாழ்க்கையில் ஒரு தடவைகூட ஜெயகாந்தன் அமெரிக்கா வரவில்லை என்பது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவரை எவ்வாறேனும் அமெரிக்காவிற்கு அழைத்து வரவேண்டும் என்ற எண்ணத்தை மனத்தில் விதைத்தது.

ஜூலை 30, 1999. நான் தயாரித்து, நண்பர் அம்ஷன் குமார் இயக்கத்தில் வெளிவந்தது சுப்ரமணிய பாரதி டாக்குமெண்டரிப் படம். விழா, சென்னை தென்னிந்திய திரைப்பட அரங்கில் நடந்தது. ஜெயகாந்தன் அவர்களைத் தலைமை தாங்க அழைத்திருந்தோம். முதல் தடவையாக ஜெயகாந்தன் அவர்களை நான் அன்று சந்தித்தேன். நான் வரவேற்புரை ஆற்றும்போது “ஜெயகாந்தன் என்ற தனி மனிதனை நேரில் சந்தித்து அறியாதவன் நான். ஆனால் அவரது பாத்திரங்களான பாண்டுப் பையனையும், பஞ்சவர்ணத்தம்மாளையும், சபாபதிப் பிள்ளையையும், அவரது ஸ்வீகார புத்திரனான ஹென்றிப் பிள்ளையையும், நந்த வனத்து ஆண்டியையும், வேலியோரத்தில் சுள்ளி பொறுக்குகிற முருகாயியையும், பன்னீர் மரத்தடியில் நீள் துயிலில் ஆழ்ந்திருக்கும் இருளனையும் அறிவேன். ஆயின் ஜெயகாந்தனை அறியேன். கடவுள் எங்கே இருக்கிறான்? சாத்தான் எங்கே இருக்கிறான்? கடவுளும் இங்கே தான் இருக்கிறான்? சாத்தானும் இங்கே தான் இருக்கிறான்? நல்ல நெனப்பு கடவுள். கெட்ட நெனப்பு சாத்தான் என்று நடை பாதையில் ஞானோபதேசம் செய்கிறானே? பாவா. அந்தப் பாமர ஞானியை நான் நன்றாக அறிவேன். எனினும் ஜெயகாந்தன் அவர்களை நேரில் சந்தித்து அறியவில்லை. இக்குறை நேற்று வரை இருந்தது. இன்று அது தீர்ந்தது” என்று பேசினேன். இந்த உரைக்குப்பின் விழா நடத்துனர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் மேடையில் ஜெயகாந்தன் அவர்களுக்கு அடுத்த இருக்கையில் என்னை உட்கார வைத்தார். பின்னர் ஜெயகாந்தன் அவர்களின் தலைமையுரை. பாரதி எப்படி நமது ஊனிலும், உயிரிலும் கலந்துள்ளான் என்பதை நிருபிக்கும் உணர்ச்சிமயமான பேச்சு. காலம் கடந்து வாழ்கிற, நாடு கடந்து வாழ்கிற நம் எல்லோரையும் இணைய வைக்கும் உந்து சக்தியாய் பாரதி விளங்குவதைக் குறிப்பிட்டார். பாரதி டாக்குமெண்டரி முயற்சி என்னிடமும், அமெரிக்காவிடமும் அவருக்கு அபிமானம் ஏற்படுத்துவதை உணர்ந்தேன். ஜெயகாந்தன் தனது தலைமையுரையை முடித்து தனது இருக்கைக்கு வந்தார். சிறிது நேரம் என்னைப் பற்றிய சில விவரங்களை கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது நான் அவரிடம் அடுத்த வருடம் அமெரிக்கா வரமுடியுமெனில் முயற்சிகள் மேற்கொள்வேன் என்றேன். அவரும் சரியென்றார். இதுவே ஜெயகாந்தனின் அமெரிக்க விஜயத்திற்கு நான் அடிக்கோல் இட்ட நிகழ்ச்சி.

நவம்பர் 28, 1999. அடுத்த ஆண்டு அமெரிக்கக் கூட்டுத் தமிழ் சங்க மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராய் ஜெயகாந்தனை அழைக்கக் கோரியும், அவருக்கு மாட்சிமைப்பரிசு கொடுக்கக்கோரியும் கூட்டுத் தமிழ் சங்கத்தலைவர் டாக்டர் ராஜசேகரன் அவர்களுக்கு கடிதம் எழுதினேன்

டிசம்பர் 4, 1999 டாக்டர் ராஜசேகரன் கூட்டுத் தமிழ் சங்கம் என் பரிந்துரையை ஏற்பதாய் தொலைபேசியில் தெரிவித்தார்

மே 19, 2000 அக்கினிப் பரிட்சை (Trial by Fire) என்ற ஆங்கில மொழியாக்கப் புத்தகம் சென்னையில் அச்சிடும் வேலை முடிந்தது

ஜூன் 5, 2000 (?) அமெரிக்க கான்சுலேட் ஆபீசர் (Office of American Consulate, Chennai) ஜெயகாந்தன் அவர்களை நேரில் வரச்சொல்லி, விருந்தும் விசாவும் வழங்குதல்

ஜூன் 25, 2000. ஜெயகாந்தன், திருமதி. கௌசல்யா அவர்களை நியூயார்க் ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில், நானும் எனது துணைவி சாரதாம்பாளும் வரவேற்று, நியூ ஜெர்சியில் உள்ள எங்கள் இல்லத்திற்கு அழைத்துச்சென்றோம். ஜூன் 26 ம் தேதி அருகிலுள்ள பிரின்ஸ்டன் நகரத்திற்கு அழைத்துச் சென்று வாஷிங்டன் நினைவுச் சின்னத்தைக் காட்டினேன். அடுத்த நாள் நண்பர் சிவக்குமாரும், நானும் ஜெயகாந்தன் அவர்களையும், திருமதி கௌசல்யா அவர்களையும் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்குக் கூட்டிச்சென்றோம். ஜூன் 28 ம் நாள் பிலடெல்ஃபியா நகரில் உள்ள சுதந்திர மணி (Liberty Bell), சுதந்திரக் கட்டிடம் (Independence Hall), ஃபிராங்ளின் இன்ஸ்டிட்யூட் முதலியவைகளை பார்வையிட்டனர். ஜூன் 29 ம் நாள் ஜெயகாந்தன் அந்திவானம் (Twilight Zone) என்ற 1960 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த அமெரிக்க ஆன்மீகத்தொடரைப் பார்த்து வெகுவாக ரசித்தார். ஒரு நாள் ஓய்விற்கு பின், ஃப்ளாரிடா மாநிலத்தில் உள்ள டேம்பா நகரிற்கு ஜூன் 30 ம் தேதி சென்றோம். ஜூலை 3 ம் நாள் வரை வட அமெரிக்கக் கூட்டுத் தமிழ் சங்க நிகழ்ச்சிகளில் ஜெயகாந்தன் பங்கேற்றார். ஜூலை 2 ம் நாள், ஜெயகாந்தன் அவர்களுக்கு கூட்டுத் தமிழ் சங்கத் தலைவர் டாக்டர் இராஜசேகரன் “மேதகு எழுத்தாளர்” விருதினை அளித்தார். தமிழ் இலக்கியத்திற்கு ஜெயகாந்தன் அவர்களின் வாழ் நாள் பங்களிப்பிற்காக கொடுக்கப்பட்ட இந்த விருதினை ஆமோதித்து, சபையோர் எழுந்து நின்று கௌரவித்தனர்.

விருதினையேற்ற ஜெயகாந்தன் நேற்றைய கனவுகளும் இன்றைய வெற்றிகளும் என்ற தலைப்பில் ஒரு சிற்றுரை வழங்கினார். கனவுகள் நனவாவதின் ரகசியம் என்ன? கனவுகள் உன்னதமாய் இருப்பதன்றோ?. இதனால்தானே பாரதியும் நம் தலைவர்களும் கண்ட கனவுகள் நனவாவதை இன்று நாம் காண்கிறோம். அமெரிக்கத் தமிழரின் உயர்ந்த தரத்திற்கும் கூட இந்த உன்னதக்கனவு, நனவாவதே காரணம் என்று பேசினார்.

ஜெயகாந்தனின் அமெரிக்க வருகையை ஒட்டி நானும் எனது நண்பர்களும் நடத்துகிற சிந்தனை வட்டத்தின் சார்பில் “அக்கினிப் பரிட்சை” என்ற தலைப்பில் ஒரு ஆங்கிலப் புத்தகத்தையும் அன்று மேடையில் வெளியிட்டோம். ஜெயகாந்தன் சிறுகதைகள் 12 -இன் சீரிய ஆங்கில மொழிபெயர்ப்பு இந்நூல். இதன் ஆசிரியர் கலிபோர்னியாவில் வசித்து வரும் அனந்தரங்கன் சுந்தரேசன். இந்நூல் யோசனையை எனக்குச் சொல்லி, ஜெயகாந்தன் பற்றிய நல்லதொரு அறிமுக உரையையும் வழங்கினார் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட். “ஜெயகாந்தன் முழுக்க முழுக்க ஒரு நவீன எழுத்தாளர். அவரது கதைகள் யதார்த்தமானவை. அவரது பாத்திரங்களின் பேச்சு நடை, மக்களின் இன்றைய பேச்சு வழக்கைத் துல்லியமாய் தமிழில் பதிவு செய்துள்ளது. அவரது கதாநோக்கு இருபதாம் நூற்றாண்டின் இயல்பான பண்புகளை, முரண்பாடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இருப்பினும், ஜெயகாந்தனை இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ் இலக்கியமும், பாரம்பரியமுமே உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நவீன இலக்கியக் கோட்பாடுகளை நன்குணர்ந்தவராயினும், அரிதினும் அரிதான பண்டைத் தமிழ் இலக்கிய மரபுகளையே பின்பற்றுவர் ஜெயகாந்தன்” என்று எழுதினார் ஹார்ட். இப்புத்தகத்தை சென்னயில் அச்சிட்டு எனக்கு உதவியவர் எழுத்தாளர் S. இராமகிருஷ்ணன்.

ஜூலை 2 ம் தேதியன்று கூட்டுத்தமிழ் சங்கத்தார், வருகை புரிந்துள்ள தமிழறிஞருடன் கேள்வி-பதில் நேரத்தை ஒதுக்கியிருந்தனர். ஜெயகாந்தன் அவர்களும் பங்கேற்றுக்கொண்டார். தனக்குப் பிடித்த பாத்திரங்கள் யார் என்ற கேள்விக்கு ஆண்களில் ஹென்றி, பெண்களில் கங்கா என்று பதிலளித்தார். முன்போல் அவர் ஏன் இப்பொழுது அதிகமாய் எழுதுவதில்லை என்று பல கேள்விகள் எழுந்தன. ஏன் எழுதுகிறாய் என்பதைவிட ஏன் எழுதுவதில்லை என்ற கேள்வி தனக்குப் பெருமை தருகிறது என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

ஜூலை 4, 5, 6 தேதிகளில் டாக்டர்கள் ரத்தினசாமி, செல்வகுமார், ராஜசேகரன், கிருஷ்ணமூர்த்தி முதலியோரின் உபசரிப்பில் எப்காட் செண்டர் போன்ற ஃப்ளாரிடா சுற்றுலா இடங்களைப் பார்வையிட்டார்.

ஜெயகாந்தன் அடுத்து ஜார்ஜியா மாநிலத்து அட்லாண்ட்டா நகரத்திற்கு தமிழ் சங்கத்தின் அழைப்பையேற்று சென்றார். அங்குள்ள மார்ட்டின் லூதர் கிங் ஞாபகார்த்த சின்னமும், காந்தியடிகள் சிலையும் அவரை வெகுவாகக் கவர்ந்தன. ஜூலை 8 ம் தேதி விழாவன்று ஜார்ஜியா தமிழ் சங்கம் அவருக்கு ஒரு சிறப்பு பட்டயம் வழங்கியது. நமக்கு நாமே நண்பன் என்ற அவரது பேச்சு அறிவார்த்தமாய், மனதிற்கு உற்சாகம் தருவதாய் இருந்தது என்று சங்கத்தார் கூறினர்.

ஜூலை 9, 2000. ஜெயகாந்தன், திருமதி கௌசல்யா அவர்கள் டாக்டர் கோம்ஸ் கணபதி அவர்களின் அழைப்பிற்கிணங்கி டென்னசி மாநிலத்தில் உள்ள ஓக் ரிட்ஜ் நகரில் தங்கினார். இந்நகரம் அணு ஆராய்ச்சிக்குப் பிரசித்தி பெற்ற நகரம் என்று கணபதி கூறினார். இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பானை அடக்கிய அணு ஆயுதங்கள் பற்றிய ஆராய்ச்சிகள் பல அங்குள்ள ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றதாம். அன்று, ஓக் ரிட்ஜ் நகர மேயர் அங்குள்ள தமிழரின் வேண்டுகோளுக்கிணங்கி, எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களை ஓக் ரிட்ஜ் நகர கௌரவ பிரஜையாக்கி, சர்டிபிகேட் ஒன்றையும், அந்நகரின் சாவியையும் ஜெயகாந்தன் அவர்களுக்கு அளித்தார். இக்கௌரவம் ஜெயகாந்தன் மனதைத் தொட்ட சம்பவமாய் நான் உணர்கிறேன். பின்னர் நடந்த விருந்துபசார நிகழ்ச்சியில், “நானும் எனது சினிமாவும்” என்ற தலைப்பில் ஜெயகாந்தன் பேசினார்.

அடுத்த சில நாட்கள் நண்பர் இராஜாராம், திருமதி சந்திரா அவர்களின் விருந்தினராய், அவர்கள் விருந்தோம்பலையும், இலக்கிய ஆர்வத்தையும் ரசித்தவாறு ஜூலை 10, 11, 12 தேதிகள் கனெக்டிகட், நியூயார்க் மாநிலங்களில் ஜெயகாந்தன், திருமதி கௌசல்யா செலவளித்தனர். நயாகரா நீர் வீழ்ச்சியையும், கண்ணாடி மியூசியத்தையும் கண்டு களித்தனர்.

ஜூலை 13 ம் நாள் நியூ ஜெர்சியில் என் இல்லத்தில் ஓய்வு. போஸ்ட்மேன் எனும் இத்தாலியப் படத்தைக் காட்டினேன். கவிஞர் பாப்லோ நெருடா தனது சிலி நாட்டிலிருக்க முடியாமல், தற்காலிகமாய் இத்தாலி நாட்டில் உள்ள ஒரு தீவில் வசிக்கும்போது, அவருக்கும் ஒரு எளிய போஸ்ட்மேனுக்கும் இடையே வளரும் நட்பைச் சித்தரிக்கும் படம். கற்பனைப் படம். ஜெயகாந்தன் இப்படத்தை ஒரு கவிதை என்றும், நயாகரா நீர் வீழ்ச்சியை விட மேலானது என்றும் சொல்லி எனக்குக் கைகொடுத்தார்.

ஜூலை 14 ம் நாள் டெக்சாஸ் மாநிலத்திற்குப் பயணம்.ஆர்லிங்டன் நகரில் டாக்டர் வெங்கடேசன், திருமதி ஜெயஸ்ரீ இல்லத்தில் தங்கினர். ஜூலை 15 அன்று அங்குள்ள தமிழ் சங்கத்தாரைச் சந்தித்து முடித்த பின்னர் ஹூஸ்டன் நகரிற்குச் சென்றனர். பாரதி கலை மன்றம் தனது இணையத் தளத்தை ஜெயகாந்தன் மூலம் தொடங்கியது. “நானும் எனது படைப்புக்களும்” என்ற தலைப்பில் அன்றைய பேச்சிருந்தது. பின்னர் நண்பர்கள் ஹூஸ்டனின் பிரபல NASA எனும் விண்வெளி ஆய்வு மையத்தை சுற்றிக்காட்டினர்.

அடுத்த மூன்று நாட்களை (ஜூலை 18, 19, 20) திருமதி கௌசல்யா அவர்களின் உறவினர் இல்லத்தில் கழித்தனர். அவர்களது ஊரான டெட்ராய்ட், மிச்சிகன் மாநிலத்தில் உள்ளது. கார் தொழிற்சாலைகளுக்குப் பேர் போன நகரம். அங்குள்ள பிரபல ஃபோர்ட் மியூசியத்தையும் கார் தொழில் நுட்பச் சரித்திரத்தையும் அறியும் வாய்ப்பு கிட்டியது.

ஜூலை 21 ம் நாள் நியூ ஜெர்சி வந்து சேர்ந்தனர். ஜூலை 22 அன்று நியூ ஜெர்சி தமிழ் சங்கம் “ஜெயகாந்தன் மாலை” எனும் நிகழ்ச்சியை எற்பாடு செய்திருந்தது. எனது விருப்பத்திற்கிணங்கி ஜெயகாந்தன் எழுதிய இரு கட்டுரைகளை நண்பர் இராஜாராம் நாடகமாக்கித் தந்திருந்தார். ஒன்று- நடை பாதை ஞானோபதேசம். மூர் மார்கட்டில் லேகியம் விற்றுக்கொண்டே கிராமத்தார்களுக்கு உபதேசம் செய்யும் பாவாவிற்கும், ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் தத்துவரீதியில் வித்தியாசம் எதுவும் இல்லை. அவர்களது அவையோர் தான் வேறு என்பது இந்தக் கட்டுரை. இரண்டு- பக்தர். அளவுக்கு மிஞ்சினால் பக்தியும் பைத்தியமாகும் விபரீதத்தை விளக்குவது இந்தக் கட்டுரை. ராமாவதாரம் என்று தன்னை முற்றிலும் நம்பிய வருமான வரி ஆபீசரும், அதை மனப்பூர்வமாய் ஊக்குவித்த மனைவியும் , தம்பியும் எப்படி மன நல ஆஸ்பத்திரியை அடைந்தனர் என்பதை விவரிப்பது இது. இவ்விரண்டும் “அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்” என்ற தொகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. இவ்விரண்டு நாடகங்களையும், நியூ ஜெர்சியில் உள்ள தமிழ்க் கலைஞர்கள் எளிமையாக, மேக் அப் அதிகம் இல்லாமல், யதார்த்த முறையில் நடத்திக்காட்டினர். ஜெயகாந்தன் இக்கலைஞர்களின் இலக்கிய ஆர்வத்தைப் பாராட்டி, அது மேன் மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்தினார்.

ஜெயகாந்தன் அவர்களுக்கு நியூஜெர்சி சங்கத்தின் சார்பில் மாட்சிமைப்பரிசை (Excellence Award) தலைவி ஆனந்தி வெங்கட், உப தலைவர் சிவராமன் அவர்கள் வழங்கினர். பின்னர் ஜெயகாந்தன் “வாழ்வின் மகத்துவம்” பற்றிப் பேசினார். தனது வாழ்வின் மகத்துவத்தை அமெரிக்கா வந்து அறியும் வாய்ப்பு கிட்டியுள்ளது மகிழ்ச்சிதான். வாழ்வின் மகத்துவம் அறிய இலக்கியம் உதவும். நல்ல இலக்கியங்களைத் தேடிப்பிடித்து படிக்கவேண்டும். சிறு வயதில் ஏழை படும் பாடு படிக்கும்போது, அதில் வரும் திருடன் ஜான் வால் ஜீனைத் திருத்தும் பாதிரியின் கருணை உள்ளம் தன்னை நெகிழ வைத்த செய்தியை கூறினார். வாழ்வின் மகத்துவம் தெரிய ஆடம்பர வாழ்க்கை அவசியமில்லை. அகல் விளக்கு மட்டுமே உள்ள குடிசையிலும், கூழ் குடிக்கும் வாழ்க்கையிலும் கூட அது வெளிப்படும் என்றார்.

விழாவின் இறுதிப்பகுதியில் சில நேரங்களில் சில மனிதர்கள் திரையிடப்பட்டது.

அன்று இரவு, இராஜாராம் அவர்கள் தனது இணையப் பத்திரிகை திண்ணைக்காக ஜெயகாந்தனைப் பேட்டி கண்டார். இலக்கியம், சமூகம் பற்றிய பல கேள்விகளுக்கு ஒளிவு மறைவின்றி நேர்ப்படையான பதில்களைக் கூறினார்.

ஜூலை 22 அன்று ஜெயகாந்தன், கௌசல்யா அவர்களை அருகாமையில் உள்ள ப்ரின்ஸ்டன் நகரத்திற்கு மறுபடியும் அழைத்துச்சென்று பௌதிக விஞ்ஞானிகளின் புனித வீடான 112, மெர்சர் வீதி வீட்டைக் காட்டினேன். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது கடைசி 25 ஆண்டுகள் இருந்த வீடு இந்த வீடு. ஐன்ஸ்டைனின் விருப்பத்திற்கேற்ப, இந்த வீட்டை மியூசியமாக்காமல் தனியார் வீடாகவே வைத்துள்ளனர் இதன் உரிமையாளரான Institute for Advanced Studies. இந்த இன்ஸ்டிட்யூட்டில் தான் ஐன்ஸ்டைன் பணியாற்றினார். இதையும் ஜெயகாந்தன் பார்வையிட்டார்.

ஜூலை 24 அன்று ஜெயகாந்தன் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ பகுதி தமிழ் சங்க அழைப்பின் பேரில் அங்கு சென்று உரையாற்றினார். சில நாட்கள் அனந்தரங்கன் சுந்தரேசன் அவர்களோடு Bay Area பகுதியில் இருந்தார். சுந்தரேசன் அவரை பெர்க்கலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகம் மற்றும் லாரன்ஸ் பெர்க்கலி ஆய்வுக்கூடம் முதலிய இடங்களை சுற்றிக்காட்டினார்.

ஜூலை 28 ம் நாள் சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து, நுவார்க் நியூ ஜெர்சிக்கு திரும்பி வர விமானத்தில் ஏறினார். ஆனால் விமானம் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரத்திற்கு வந்து, எதிர்பாராத விதமாய் நுவார்க் செல்லமுடியாமல் ரத்து செய்யப்பட்டது. அன்றிரவை பிட்ஸ்பர்க் நகர விமான நிலையத்தில் தான் கழிக்கவேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியது. அப்போது சமயோசிதமாய், நான் தயாரித்த பயண விவர அட்டவணையைப் பார்த்து தான் பின்னர் பிட்ஸ்பர்க் வரும்போது சந்திக்க வேண்டிய எனது நண்பர் டாக்டர் வெங்கட்ராமனை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் ஜெயகாந்தன். அதிர்ஷ்டவசமாய் அப்பொழுது வெங்கட்ராமன் அந்த விமான நிலையித்திலேயே வேறொரு உறவினரை வரவேற்க வந்திருந்தார். வெங்கட்ராமன் ஜெயகாந்தனின் சிறந்த வாசகர்களில் ஒருவர். அன்றிரவு அவர் வீட்டில் ஜெயகாந்தன் தங்குவதை அதிர்ஷ்டமாய்க் கருதினார்.

ஜூலை 29 அன்று டெலவேர் பெருநிலத் தமிழ் சங்கத்தின் சார்பில் வில்லனோவா பல்கலைக்கழக அரங்கில் “எது கல்வி?” என்ற தலைப்பில் பேசினார். கல்லூரி சென்று பட்டம் வாங்காத தான் கல்வி பற்றி பேசுவது விநோதமானது. ஆயின் பட்டம் வாங்கியபின் பலருக்கு கல்வி நின்று விடுகிறது. மனிதர்களையும், சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் பயில்கிற தனக்கு கல்வி என்றும் தொடர் கதை என்று பேசினார்.

ஜூலை 30 ம் நாள் பிட்ஸ்பர்க் தமிழ் சங்கம் அங்குள்ள பிரசித்தி பெற்ற வெங்கடேசுவரர் கோவில் அரங்கத்தில் ஜெயகாந்தனை பேச அழைத்திருந்தது. எதிர்பாராதவிதமாய் அவருக்கு கோவில் மரியாதையை வழங்கினார் அந்த கோவில் குருக்கள். அவர் ஒரு ஜெயகாந்தன் வாசகர்.

ஆகஸ்ட் 5 ம் தேதியன்று, வாஷிங்டன்-பால்டிமோர் தமிழ் சங்கத்தில் மறக்கமுடியாத மனிதர்கள் என்ற தலைப்பில் பேசினார். கவிஞர் தமிழ் ஒளி, திரு R.K.கண்ணன் மற்றும் பலர் பற்றிய செய்திகளடங்கியது இந்தப்பேச்சு. கேள்வி நேரத்தில் ஒருவர் ஜெயகாந்தன் இலக்கியம் செத்துவிட்டது என்று யாரோ எழுதி இருப்பதாகச் சொன்னார். ஜெயகாந்தன் எவ்வித சலனமும் இன்றி உயிரோடிருப்பதை செத்துவிட்டது என்று கூறுவது சரியல்ல. சொன்னவர் அ. மார்க்ஸ்; காரல் மார்க்ஸ் அல்ல என்றார்.

அடுத்த நாள் காஞ்சனா தாமோதரன் ஜெயகாந்தன் அவர்களைப் பேட்டி கண்டார். பல துறைகளையும் அலசி ஆராயும் இந்த பேட்டி கணையாழி பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது. வழக்கம்போல் நேர்ப்படையான பதில்கள் கொண்டது இந்த நேர்காணல். இதன் பின்னர், உள்ளூர் ரேடியோ நிலையம் ஒன்றிற்காக ஒரு பேட்டி பதிவு செய்யப்பட்டது. ஸ்ரீகாந்த் மீனாட்சி என்ற நண்பர் வாஷிங்டனை சுற்றிக் காட்டினார். பிரபலமான தேசியக் கலை அரங்கம் (National Art Gallery) என்ற மியூசியத்தையும், அதில் உள்ள லியனார்டோ டாவின்சி ஓவியத்தையும், பிக்காசோ கலைப்படைப்புக்களையும் கண்டு மகிழ்ந்தார்.

ஆகஸ்ட் 9, 10 தேதிகளில் நண்பர் சிவக்குமார் ஜெயகாந்தன், திருமதி கௌசல்யா அவர்களை நியூ யார்க் மெட்ரோபாலிடன் மியூசியம், சுதந்திரச்சிலை முதலிய இடங்களுக்குக் கூட்டிச்சென்று காட்டினார். சிவக்குமார் ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர் திரு. குப்புசாமியின் புதல்வர். ஜெயகாந்தனுக்கு ஒரு இணையத்தளம் உருவாக்கியவர். ஆகஸ்ட் 10 ம் நாள் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத் தலைவர் சிவராமன் இல்லத்தில் விருந்து. இவ்விருந்துக்கு வெனிசூலா (Venezeula) நாட்டு இந்தியத் தூதர் விஸ்வநாதன் அவர்களும் வந்திருந்தார். ஜெயகாந்தனின் தீவிர வாசகரான விஸ்வநாதனுக்கு ஜெயகாந்தன் கதைகளும், பாத்திரங்களும் மனப்பாடம்.

ஆகஸ்ட் 11 தனிப்பட்ட முறையில் எனக்குப்பிடித்த நாள். ஜெயகாந்தன் அவர்கள் உடுமலைப்பேட்டையில் உள்ள எனது தாயார் திருமதி ஞானாம்பாளுடன் தொலைபேசியில் பேசினார். எனது தாயாரும் தனக்கு அவர் எழுத்துக்களைப் பிடிக்கும் என்று கூறினார்.

ஆகஸ்ட் 13 ம் நாள் சிந்தனை வட்டத்தின் சார்பில் ஜெயகாந்தனின் அமெரிக்கப் பயண நிறைவு விழாவை நண்பர்களும், நானும் ஹில்ஸ்பரோ, நியூ ஜெர்சியில் ஏற்பாடு செய்திருந்தோம். விழாவின் பெரும்பகுதி “வாழ்க்கை பற்றிய விமர்சனம்” (Commentaries on Living) என்ற கருத்தரங்காகும். காளிதாசன் பற்றி திரு. நடராஜன் அவர்களும், பாரதி பற்றி நண்பர் ராஜாராமும், J கிருஷ்ணமூர்த்தி பற்றி டாக்டர். ரவி சுப்ரமணியன் அவர்களும், ஜெயகாந்தன் பற்றி நானும் கருத்தரங்கம் நடத்தினோம். ஓவர்ஹெட் ஸ்லைடுகளுடன் வகுப்பறை செமினார் போல் இது நடத்தப்பட்டது. என் பகுதியில் நான் ஜெயகாந்தன் எழுத்துக்களிலிருந்து சில உதாரணங்களைக் காட்டினேன். குருக்கள் ஆத்துப் பையன் சிறுகதையில், “நாகபூஷணம் அந்தச்சமயத்தில் சிரித்தது அனாவசியம்” என்று நினைக்கும் குருக்கள் ஆத்துப்பையனின் உணர்ச்சிகள் மலரினும் மெல்லியது; சக்கரம் நிற்பதில்லை கதையில் ரயில்வே லைனில் ஒரு கிழவி அரிவாள் சுத்தி சின்னத்தின் மீது சாணியெறிந்து, நல்ல விஷயங்களை கண்ட இடத்தில் சொன்னால் அதற்கு கிடைக்கும் மரியாதை இது தான் என்று மறைமுகமாய் காட்டுவது; ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் எனும் நாவலில் துரைக்கண்ணு, பத்திரம் எழுதுகிற தேவராஜனிடம் சபாபதிப்பிள்ளையின் ஸ்வீகாரப் புத்திரனான ஹென்றியை மொட்டையாக ஹென்றி என்று போடாதே; ஹென்றிப்பிள்ளை என்றே எழுது என்று கூறுவது மானுடம் வெல்லும் என்பதை மறைமுகமாய்ச் சொல்வது போன்ற ஒரு சில எடுத்துக்காட்டுக்களைக் காட்டி ஜெயகாந்தன் வாழ்க்கை பற்றி எவ்வாறு விமர்சித்துள்ளார் என்று விளக்கினேன். ஜெயகாந்தன் இந்த ஸ்லைடு ஃபார்மேட்டை வெகுவாக ரசித்தார். அவையோருடன் நீண்ட நேரம் நல்லதொரு கருத்துப்பரிமாற்றம் நடைபெற்றது. ஜெயகாந்தன் அவர்களின் அமெரிக்கப்பயணத்திற்கு உதவிய சிவக்குமார், அய்யநாதன், ராதா கிருஷ்ணன், வெங்கடாசலம், சண்முகம், கருத்தரங்கப் பேச்சாளர்கள், Trial by Fire ஆசிரியர் அனந்த சுந்தரேசன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். ஜெயகாந்தன், திருமதி கௌசல்யா அவர்களின் அமெரிக்க விஜயத்தை நினைவு கூறும் வண்ணம், அமெரிக்கா வாழ் தமிழ் சமூகத்தின் சார்பில் அவர்களுக்கு அன்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜெயகாந்தன் இதற்கும் சேர்த்து உங்களனைவருக்கும் நன்றி என்றார். எனது மனைவி சாரதாம்பாளின் நன்றி நவில்தலுக்குப்பின், ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன் படம் திரையிடப்பட்டது. விழா இனிதே முடிந்தது.

ஆகஸ்ட் 14 ம் நாள் ஜெயகாந்தன் அவர்களை நான் வசிக்கும் ஹில்ஸ்பரோ முனிசிபாலிட்டி எப்படி கிராமராஜ்யம் போல் இயங்குகிறது என்பதை காட்டுவதற்காக, நூலகம், பள்ளிக்கூடம், முனிசிபல் கோர்ட் முதலிய இடங்களுக்குக் கூட்டிச்சென்றேன். அமெரிக்கா வெளிப்பார்வைக்கு பெரிய நகர நிர்வாகம் போல் தோன்றினாலும், அடிப்படையில் கிராம ராஜ்யமே என்ற எனது அபிப்ராயத்தை ஜெயகாந்தன் ஆவலுடன் செவிமடுத்தார்.

ஆகஸ்ட் 15 ம் தேதியன்று ஜெயகாந்தன், திருமதி கௌசல்யா அவர்களை தாமஸ் ஆல்வா எடிசன் நினைவு மியூசியத்திற்கு அழைத்துச்சென்றேன். சரியான கம்பியிருந்தால் நீண்ட நேரம் விளக்கெரியும் என்ற உண்மை எடிசனுக்குப் புலனாகிய இடம் மென்லோ பார்க், எடிசன் நகராகும். இதை நினைவு கூறி எடிசன் டவர் எனும் நூறடி உயர நினைவுச் சின்னத்தை எடிசன் நகரம் உருவாக்கியுள்ளது. இது உள்ள தெரு கிருஷ்டீ ஸ்டிரீட் (Christie Street). இது தான் உலகிலேயே முதன் முதலாய் மின்சார விளக்கு பெற்ற தெருவாகும். சரித்திரப்புகழ் பெற்ற இவ்விடத்தை ஜெயகாந்தன் பார்த்து ரசித்தார்.

ஆகஸ்ட் 16 ம் நாள் ஜெயகாந்தன், திருமதி கௌசல்யா இந்தியா திரும்பும் நாள். நான், எனது மனைவி சாரதா, மகள் லலிதா, மகன் மோகன் முதலியோர் நியூயார்க்கில் உள்ள ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்திற்கு அவர்களை வழியனுப்பச்சென்றோம். விமான நிலையத்திற்கு நண்பர்கள் சிவக்குமார், சிவராமன் ஆகியோரும் வந்திருந்தனர். ஏர் இந்தியா 112 -இல் இரவு 9:15 ற்கு ஜெயகாந்தன், திருமதி கௌசல்யா அவர்கள் எங்களனைவரிடமும் விடை பெற்றுச் சென்றனர்.

ஆகஸ்ட் 18 ம் தேதியன்று ஜெயகாந்தன், திருமதி கௌசல்யா அவர்கள் சௌக்கியமாய்ச் சென்னை சேர்ந்த செய்தி வந்தது.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன். இவரது எழுத்துக்கள் தான் எத்தனை விதம். தாய் பீடத்திலிருந்து எழுதிய எழுத்துக்கள். தந்தை பீடத்திலிருந்து எழுதிய எழுத்துக்கள். குரு பீடத்திலிருந்து எழுதிய எழுத்துக்கள். ஞான பீடத்திலிருந்து எழுதிய எழுத்துக்கள் என்று ஜெயகாந்தனின் எழுத்து தமிழ் மொழியின் ஆழத்தை, அகலத்தை, நீளத்தை, நிகிலத்தை வியாபித்திருக்கிருக்கின்றது. இவ்வரிய எழுத்தாளரோடு, நானும், எனது நண்பர்களும் சுமார் ஏழு வாரங்கள் பழகினோம். சுய சிந்தனை, சுதந்திரச் சிந்தனை, தேசிய சிந்தனை, உலக சிந்தனை, சக மனிதரோடு நேசம், அவையோர்க்கு அஞ்சாமை, சூது வாதில்லாமை, தனிப்பட்ட முறையில் எவரையும் வெறுக்காமை, இயல்பான அன்பு, உற்சாகம் மிகுந்த உரையாடல், எளிமை, தெளிவு, உண்மை அடங்கிய அழகுணர்ச்சி அனைத்தும் அவரிடம் இருப்பதை அறிந்தோம். ஜெயகாந்தன் எழுத்தைப்போலவே இந்த ஏழு வாரமும் ஓர் இனிய அனுபவம். எனக்கு மட்டுமல்ல. என் நண்பர்களுக்கும் கூட.

(எனி இந்தியன் பதிப்பகம் என்னைத் தொகுப்பாசிரியராய்க் கொண்டு வெளியிட்ட ”அமெரிக்காவில் ஜெயகாந்தன்” என்ற புத்தகத்தில் வெளியான கட்டுரை, மார்ச் 2008)

1 COMMENTS

  1. ஆனந்த், இந்தக் கட்டுரை இப்பொழுதுதான் பார்த்தேன். மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. திரு. ஜெயகாந்தனுடன் 7 வாரங்கள் நெருங்கிப் பழகும் பேறு தங்கள் பெற்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

Comments are closed.

You Might Also Like