Star Mountain

My travels and other interests

Rural Tamilnadu

பத்துப் பிரச்சனைகள் (2000)

தமிழகத்தின் பத்து முக்கிய பிரச்சனைகள்

தமிழக மாவட்டங்களில் எடுக்கப்பட்ட கள ஆய்வின் வழியாக சில முக்கியப் பிரச்சனைகள் கண்டறியப்பட்டன. இந்தப் பிரச்சனைகள் கடந்த 50 ஆண்டுகளாகத் தீராமல் தொடர்ந்து வருகின்றன. இதன் தீவிரம் மாவட்டத்துக்கு மாவட்டம் மாறக்கூடும். ஆனால் இப்பிரச்சனைகளை மக்கள் தங்கள் ஆதாரமான பிரச்சனைகளாகக் கருதுகிறார்கள்.

  1. குடிநீர்
  2. மருத்துவம்
  3. ரேஷன்
  4. போக்குவரத்து
  5. வேலைவாய்ப்பின்மை
  6. ஜாதி
  7. கழிவுநீர், சுகாதாரம்
  8. அரசாங்க உதவியின்மை
  9. முறையான வணிக ஏற்பாடுகள்
  10. பாதுகாப்பான இருப்பிடம்

இவைகளோடு முறையற்ற பஞ்சாயத்து நிர்வாகம், அரசியல் தலையீடு, மின்சார வெட்டு, சுடுகாடு, கல்வி மேம்பாடு, போன்ற பிரச்சனைகளும் தொடர்வதாக கள ஆய்விலிருந்து தெரிய வருகின்றது.

குடிநீர்

தமிழகம் முழுவதும் சுகாதாரமான குடிதண்ணீர் கிடைப்பது முக்கியப் பிரச்சனையாக இருக்கிறது. பல கிராமங்கள் இன்றும் குடி தண்ணீருக்காக மற்றொரு கிராமத்தை நம்பி இருக்கவேண்டிய சூழல் உள்ளது. அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் தமிழக மாவட்டங்கள் யாவிலும் தண்ணீர் பஞ்சம் மிக அதிகமான அளவில் காணப்படுகிறது. ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் தண்ணீர் தேடி மைல் கணக்கில் பெண் அலைவதையும், நிற்கும் ரயிலில் ஏறி தண்ணீர் பிடிப்பதையும் கோடையில் காண முடிகிறது. குடி தண்ணீருக்கான பெரும்பான்மை கிராமங்கள்  கிணற்றை நம்பியே இருக்கின்றன. கிணற்றில் நிலத்தடி நீர் குறைவதால் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படுகிறது. தண்ணீரை முறையாக விநியோகிக்க திட்டம் இல்லாததாலும், மாற்று ஏற்பாடுகள் கவனிக்கப்படாததாலும் இப்பிரச்சனை ஆண்டு தோறும் ஏற்படுகின்றன. கிராமங்களில் நீர் தொட்டி வழியாக நீர் ஏற்றி வீடு தோறும் விநியோகிக்கப்பட்ட போதும் அது போதுமானதாக இல்லை என்பதோடு சுகாதாரமானதாகவுலில்லை. காவேரி கால்வாய் பாசனம் நடைபெறும் மாவட்டங்கள்  கூட ஆண்டிற்கு மூன்று நான்கு மாதங்கள் குடிநீர் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றன. சில கிராமங்கள் முற்றாக குடிநீர் வசதியற்று உலர்கின்றன. நீர்தொட்டிகள் பராமரிக்கப்படாமலும் முறையாக கிணறுகள் பாதுகாக்கப்படாததாலும்  குடிநீரில் கழிவுகள் கலப்பது காணமுடிகிறது. தமிழகத்தின் முக்கிய பிரச்சனையாக ஆண்டு தோறும் தொடர்கிறது குடிநீர் பிரச்சனை. நீர்வளத்தைக் காப்பதும் நிலத்தடி நீரைக் கண்டறிவதும் முதன்மையான தேவையாக இருக்கிறது.

மருத்துவம்

உணவு குடிநீர் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் மூன்றும் நகரைப் போலவே கிராமத்திலும் பாதிக்கப்பட்டு வருவதால் இங்கு நோய்மையுறுவது அதிகமாகிக்கொண்டே வருகிறது. பெண்கள் பிரசவம் துவங்கி குழந்தைகளுக்கு, வயதானவர்களுக்கு என நோய்கள் பாதிப்பு அதிகமாகிக் கொண்டேயிருக்கின்றது. இப்போதும் பல கிராமங்களில் அடிப்படை மருத்துவ வசதிகள் கூட கிடையாது. சில இடங்களில் மருத்துவமனைகள் இருந்த போதும் அவை முறையாகச் செயல்படுவதில்லை. மருத்துவர்கள் இல்லாமல் இருப்பதை சகஜமாக காணமுடிகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் பல கிராமங்களில் அமைக்கப்பட்ட போதும் அதில் முறையான மருந்துகள் கிடைப்பதில்லை. உரிய நேரத்தில் திறக்கப்படுவதுமில்லை.

சுத்தமான குடிநீர் கிடைப்பது கிராமத்தில் குறைவு. இதனால் நீரில் உண்டாகும் கிருமிகள் பாதித்து வரும் மஞ்சள்காமாலை, காலரா, வயிற்றுப் போக்கு, காய்ச்சல் போன்றவை வருடம் தோறும் பாதிப்பதும் இதனால் பலர் மரணமடைவதும் காண முடிகிறது. ஆரம்ப மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் இதுபோன்ற இடங்களில் முறையான மருத்துவ பயிற்சியற்றவர்கள் தங்களை மருத்துவர்களாக அறிவித்துக் கொண்டு மருத்துவம் செய்வது தமிழகமெங்கும் காண முடிகிறது.

மேலும் ஆரோக்கியமாக உணவு முறை மாறி நகரைப் போலவே விதவிதமான ருசிகரத்தை முதன்மைப்படுத்திய உணவு முறை நடைமுறைக்கு வந்து விட்டதால் நோய் எதிர்ப்பு குறைந்து அதிக உடல் நலக் கேடு உண்டாகிறது.

ரேஷன் மற்றும் உணவுப் பொருட்கள்

அடிப்படையான உணவுப் பொருட்கள் விநியோகத்திற்காக உருவாக்கப்பட்ட ரேஷன் கடைகள் தான் இன்றைய கிராமத்தின் முக்கியப் பிரச்சனை. அரிசி, கோதுமை, சீனி, மண்ணெண்ணெய் போன்ற பொருட்களைக் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கையில் பகிர்ந்து அளிக்கப்படும் முறை நடைமுறையில் பெரிதும் சீரழிந்துள்ளது. இதனை நிர்வகிப்போரும் விநியோகிப்போரும் ரேஷன் பொருட்களின் அளவைக் குறைத்தும், தராமலும் வெளிச்சந்தையில் விற்றும் வருவது தமிழகமெங்கும் காணமுடிகிறது. இந்த ரேஷன் முறை ஒழுங்குபடுத்தப்படாததால் பெரும்பான்மையான மக்கள் பொருட்களை அதிக விலை கொடுத்உத வெளியே வாங்கவேண்டிய கட்டாயம் உள்ளது. பல இடங்களில் இந்த ரேஷன் கடைகள் திறக்கப்படுவதேயில்லை. இதற்கு மாற்றாக சில தொண்டு நிறுவனங்கள் தற்போது இதுபோன்றதொரு நியாயவிலை கடைகளை உருவாக்கி வருகின்றன.

சாலை மற்றும் போக்குவரத்து

மாவட்டத்தின் எல்லா கிராமங்களுக்கும் முறையான சாலை வசதிகள் செய்து தரப்படவில்லை. சாலைகளுக்கான பணம் செலவிடப்பட்டபோதும் முறையான பராமரிப்பு இன்றி அவை விரைவிலேயே சேதமடைந்து விடுகின்றன. பத்து வருடங்களுக்கு முன்பு வரை மாவட்டத்தின் முக்கியக் கிராமங்களுக்கு மட்டுமே பஸ் வசதி இருந்து வந்தது. மற்ற கிராமங்களிக்குப் பேருந்து கிடையாது. இது மெல்ல மாறத்துவங்கியது. தனியார் பேருந்துகளும் புதிய சாலை இணைப்புகளும் உருவாக்கப்பட்டதால் கிராமம் தன்னை மற்ற ஊர்களோடு இணைத்துக் கொண்டு விட்டது. மேலும் இரண்டு சக்கர வாகனங்கள் இன்றைய முக்கிய பயண வழி முறையாகி விட்டது. குறிப்பாக கிராமப்புற வணிகர்கள் மற்றும் அரசு தனியார் துறை பணியாளர்கள் பலரும் இரண்டு சக்கர வாகனங்களை வைத்திருக்கின்றனர்.

கடந்த ஓராண்டிற்குள் அறிமுகமான மினிபஸ் என்ற புதிய பேருந்து திட்டம் க இராமங்கள் யாவையும் இணைந்து செல்லும் பாதையை உருவாக்கி விட்டது. இந்தத் திட்டத்தால் அதிக பயன் அடைந்தவை கிராமங்களே.

வேலை வாய்ப்பு

கிராமப்புறத்தில் விவசாயம் மற்றுமின்றி அது சார்ந்து தொழில்களும் சேர்ந்தே இருந்தன. கொல்லர், தச்சர், கருமான், கொத்தன், வணிகர் என பல வகையான தொழிலில் ஈடுபடுவர்களாமிருந்தனர். விவசாய மாறுபாடு இந்தத் தொழில்களையும் மாற்றிவிட்டது. இதனால் இன்று கிராமப்புறத்தில் வேலையற்றவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி விட்டது. இவர்களில் பாதி பேர் உடல் உழைப்பாளர்கள். முறையான வேலை கிடைக்காமல் நகரை நோக்கிப் போவதும் சில நாட்கள் மட்டுமே வேலை கிடைப்பதுமான நிலை தொடர்கிறது. இதே நேரம் விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைக்காத நிலையும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் தங்களுக்கு உரிய வேலை கிடைக்காததால் வேலையற்றவர்களாக கிராமப்புறத்தில் இருப்பது அதிகமாகிக்கொண்டே வருகிறது. புதிய தொழில்கள் வேலைவாய்ப்புகள் கிராமங்களில் துவங்குவது குறைந்து போனதால் வேலை தேடி நகரங்களுக்கு வருபவர்கள் எண்ணிக்கை தினமும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. கடினமான வேலைகள் செய்வதற்கு இப்போது ஆட்கள் வருவதில்லை. சிறிய தொழிற்சாலைகளில் கிடைக்கும் வேலையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். வீடு கட்டும் வேலையைச் சார்ந்தவர்கள் தங்கள் ஊரை விட நகரம் அதிக சம்பாத்தியம் தரக் கூடியது என ஊரைவிட்டே போய்விடுகிறார்கள். கிராமப்புறத்தில் வேலையின்மை பெருகிக்கொண்டே வருகிறது.

ஜாதி

கிராமத்தின் நூற்றாண்டுகளாகத் தீராதப் பிரச்சனையாக இருந்து வருவது சாதி. இதன் அடிப்படையில் மக்கள் தனித்தனியான தெருக்களில் வசிப்பதும், ஏற்றத்தாழ்வு பாராட்டுவதும் கிராமங்களில் நடைமுறையில் இருந்து வந்தது. கல்வி மற்றும் வேலைமுறை வளர்ச்சியால் இது குறையத் துவங்கியது. ஆனால் கடந்த 5 வருடங்களில் இது மீண்டும் தலைதூக்கி விஸ்வரூபம் எடுத்துள்ளது. சாதியமோதல்கள், சண்டைகள் இதனால் ஏற்படும் வன்முறைகள் பெருகிவருகின்றன. மறுபக்கம் சாதிக்கட்சிகள், அரசியல் அமைப்புகள் பரஸ்பரம் தங்கள் பக்கம் சாதிய மனிதர்களை இழுக்கின்றது. சாதிய அமைப்புகள் தங்களைப் பாதுகாக்கக் கூடியதாக கிராம மனிதன் நம்புகிறான். சாதியைக் காப்பதும் அதனை எதிர்ப்பவர்கள் மீது வன்முறையைச் செலுத்துவதும் தற்போது தமிழகம் முழுவதுமே அதிகரித்துள்ளது. குறிப்பாக இது தென் மாவட்டங்களில் பெருமளவு வளர்ந்து வருகிறது. இதன் காரணமாக பொதுச் சொத்துகள் வாகனங்கள், அன்றாட வாழ்வு யாவும் சிதைக்கப்படுகின்றன. சாதியமைப்பின் காரணமாக ஒடுக்கப்பட்டவர்கள் சம உரிமை கேட்பதும் அதனை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் கோபமடைவதும் தொடர்ந்து வன்முறையை வித்திடுகின்றன.

சுகாதாரம்

கிராமத்தெருக்களில் ஓடும் சாக்கடைகளும், கழிவு நீர் தேங்கி கொசு பெருகிய குட்டைகளும் 50 ஆண்டு காலமாக அப்படியே தொடர்கின்றன. இன்றும் முழுமையான கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்படவில்லை. கொசுக்கள் மற்றும் நோய்க் கிருமிகள் பரவும் நீர் தேங்கிய குட்டைகள் கழிவுகள் முழுமையாக அகற்றப்படுவதில்லை.

இவை யாவையும் விட முறையான கழிப்பறைகள் அமைக்கப்படவில்லை. இதனால் பெண்கள் பாதிப்படைவது மிக அதிகமாகக் காணமுடிகிறது. கட்டி வைக்கப்பட்ட பொதுக்கழிவறைகள் பராமரிப்பின்றி நோய்க்கிடங்காகக் காட்சி தருகிறது.

நகரங்களைப் போலவே கிராமப்புறங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகள் துண்டுப் பொருட்கள் இறைந்து கிடக்கின்றன. இவையன்றி சில மாவட்டங்களில் கிராமப்பகுதிக்கு நெருக்கமான தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் ஓடி கழிவு குவியலாகக் காட்சி தருகின்றன.

அரசாங்க உதவியின்மை

தங்களது முன்னேற்றத்திற்குப் பெரிதும் தடையாக இருப்பது அரசாங்கத்தின் உதவியின்மை ஏனத் தான் கிராம மக்கள் கருதுகிறார்கள். கிராமத் திட்டங்களிக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக மக்களுக்குச் சென்று சேர்வதில்லை. அரசாங்க அதிகாரிகளையோ, அலுவலகங்களையோ தொடர்பு கொள்வதில் உள்ள நடைமுறைப் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் அலட்சிய போக்கு, அரசாங்கப் பணத்தைத் தங்கள் சுயலாபத்திற்குச் செலவிடும் அரசியல்வாதிகள் இவர்கள்  கூட்டால் அரசு உதவிகள் பெயரளவில் தீட்டப்பட்ட போதும் அது மக்களை வந்து சேரும் முன்பாக காணாமல் போய்விடுகின்றன. கிராம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. விவசாயிகள், வேலையற்ற இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள், சிறுவணிகர்கள் என பலரும் தங்கள் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாக அரசாங்க உதவியின்மையைச் சொல்கிறார்கள். இந்தப் புறக்கணிப்பால் தான் வன்முறை உருவாகிறதென்றும் அரசாங்கம் தங்களுக்கு உரிய சேவையைச் செய்ய மறுப்பதால் தேர்தலைப் புறக்கணிப்போம் என பல நேரம கிராம மக்கள் போராடுகிறார்கள். உலக வங்கியின் நிதி உதவியுடன் கிராம மேம்பாட்டிற்காக பல திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்ட போதும் இவை முறையாக இன்றும் நடைமுறையாகவில்லை. இதற்கு அதிகாரிகளே முக்கியக் காரணமாக இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.

முறையான வணிக ஏற்பாடுகள்

மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்கான உணவுப் பொருட்கள், சாமான்கள், காய்கறிகள் போன்றவற்றை நியாயமான விலையில் வாங்கவும் பொருட்களின் விலை உயர்வு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதையும் இடைத்தரகர்கள் இன்றி வணிகம் நடைபெற வேண்டும் என்பதும் மக்களின் முக்கியப் பிரச்சனையாக உள்ளது. இதுபோலவே உற்பத்தி செய்கின்றவர்களும் தங்கள் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் எனவும் இது தரகர்களால் மிகக் குறைவாக விலை வைக்கப்படுவதும் தடுக்கப்பட வேண்டும் என்கிறார்கள். இதற்காக அரசு அமைத்த கூட்டுறவு பால், உணவு, வேளாண்மைப் பொருட்கள் நிறுவனங்களின் செயல்பாடு மிக அதிருப்தி தருவதாகவும் மோசமான நிலையில் இருப்பதாகவுமே மக்கள் கருதுகிறார்கள். கடந்த ஓராண்டின் முன்பு ஆரம்பிக்கப்பட்ட உழவர் சந்தை இது போன்றதொரு மக்கள் குறை தீர்க்க எடுக்கப்பட்ட நல்ல முயற்சியாகும். இது உற்பத்தி செய்பவர்களுக்கும் வாங்குபவர் இருவருக்குமான நேரடி வணிகம் என்பதால் இது சிறப்பாகச் செயல்படுகிறது. இதுபோல ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்கப்பட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.

பாதுகாப்பான வீடு

கிராமப்புறங்களில் இன்னமும் கூரைவீடுகளும் ஓட்டு வீடுகளும் அதிகம் காணப்படுகின்றன. இந்த வீடுகள் ஒற்றை அல்லது இரட்டை அறை கொண்டதாக இருக்கின்றன. இவை போதுமான வெளிச்சமோ காற்றோட்டமோ இல்லாத வீடுகள். இந்தக் குடியிருப்புகள் கூட இல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் இடிந்த காலனி வீடுகளில் வசிப்பவர்களாக இருக்கிறார்கள். கடற்கரை மாவட்டங்களில் மழை, புயல், வெள்ள காலங்களில் பாதுகாப்பற்ற வீட்டுடன் போராடும் முறை இன்னமும் விடுபட முடியவில்லை. வெயில், மழை, காற்று இதற்கு பாதுகாப்பான வீடு பற்றிய கனவு தமிழக கிராம மக்கள் யாவரிடமும் உள்ளது.

 

 

You Might Also Like