Star Mountain

My travels and other interests

Jayakanthan- Tennessee Tamils Uraiyadal (July 2000)

நிகழ்ச்சி: நானும் சினிமாவும் பேச்சைத் தொடர்ந்து உரையாடல்
இடம்: ஓக்ரிட்ஜ், டென்னசி
தேதி: ஜூலை 9, 2000
நிகழ்ச்சி ஏற்பாடு: டாக்டர் கோம்ஷ் கணபதி
எழுத்தாக்கம்: திண்ணை கோ. ராஜாராம்

ஜெயகாந்தன்: நீங்கள் கேட்கிற  கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் –  நான் பேசிப் பேசி எழுதி எழுதி திருப்தி கண்டவன்.  ரொம்பப் பேருக்கு பேச ஆசையாய் இருக்கிறது. மைக் கிடைத்தால் விட மாட்டார்கள் . (அவை சிரிப்பு) எனக்கு அதில் சலிப்பு என்று   சொல்ல முடியாது, அதில் நிறைவு  கண்டுவிட்டவன் நான். எனவே நீங்கள் கேள்வி கேட்டு என்னைப் பேச வைத்தீர்கள் என்றால் உங்களுக்கு நான் நன்றி உடையவனாய் இருப்பேன். 

(கைதட்டல் )

கேள்வி : சமுதாய முன்னேற்றத்திற்கு ஏதும் வழி இருக்கிறதா? 

ஜெயகாந்தன் : சமுதாய முன்னேற்றத்தை யாரும் தடுக்க முடியாது. சமுதாயத்தைப் பின்னோக்கி யாரும் தள்ள முடியாது. சமுதாயத்தின் பண்பு, மானிட குலத்தின் பண்பு, முன்னேறிச்  செல்வது தான். எனவே அது எபபடியெல்லாம் முன்னேறுகிறது, அந்த முன்னேற்றத்திற்கு எவ்விதமெல்லாம் தடை வருகிறது, அந்தத் தடையை மனிதர்கள், அறிவாளிகள், அறிஞர்கள், சிந்தனாவாதிகள், கலைஞர்கள்,  எழுத்தாளர்கள் இவர்களெல்லாம் எப்படி  எதிர்த்துப் போராடுகிறார்கள் என்று கண்டு, அவற்றைப் பதிவு செய்வது தான்  என்னுடைய  வேலை. அதை நான் செய்து கொண்டிருக்கிறேன். அதுவே சமுதாய முன்னேற்றத்திற்கு நான் செய்கிற  பணி என்று  கருதுகிறேன். இதை, ஒருவன் செய்து விட முடியாது. நம் அனைவருக்கும் அந்தக் கடமையும் பொறுப்பும் உண்டு.  அந்த சமுதாய முன்னேற்றத்தின் ஒரு பகுதி தான், ஒரு நிலை தான்   இன்றைக்கு  நாம் இங்கே சந்திப்பதும், உரையாடுவதும் கூட. 

கேள்வி : தமிழ் நாட்டில், ஏன் இந்தியாவில்,  கரப்ஷன் என்பதை அன்றாட வாழ்க்கையில் பொது மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். பல விஷயங்களை, இங்கு நாங்கள் கரப்ஷன் என்று நினைக்கிறோம்.,  நாங்கள் இருபது முப்பது வருஷத்திற்கு முன்பு வந்தவர்கள்.  இப்போது இந்தியா போனால்  சாதாரணமாக, அட  அவனுக்கு அஞ்சு ரூபாய் கொடுத்துட்டுப் போங்க. அது அப்படித்தான் இருக்கும்.  பத்து ரூபாயைக் கொடுங்க. ஆபீசுக்குப் போனா ஒரு நூறு ரூபாய் கொடுத்துட்டுப் போங்க. இது என்ன?  அதை ஏன் அப்படி  பண்ணனும்னா, அது அபபடித்தான்.  எதுக்காக  அவருக்கு சம்பளம் கொடுத்து வச்சிருக்காங்க? வாழ்க்கை நடைமுறையில் கரப்ஷன் வந்திருக்குது . இந்த எண்ணம்  தமிழ்நாட்டில் மாறுமா? இல்லை, அதோட நாமும் சேர்ந்து கூட்டத்தோடு கோவிந்தா போட்டு,  நம்ம காரியத்தை நாம நடத்திக் கொண்டு போனால் போகலாம். எதற்கு இவனோடு பேசிக்கொண்டு வம்பு, என்று இருக்கலாம்.  இது மாறும் என்று நினைக்கிறீர்களா? 

ஜெயகாந்தன் : உலகத்திலே மாறாத விஷயம் மாற்றம் ஒன்று தான்.  மாற்றம் நடந்து கொண்டே இருக்கும். இதெல்லாம் relative..  இங்கே ஒரு மாதிரி கரப்ஷன் இருக்கும்,  எங்க ஊர்லே ஒரு மாதிரி கரப்ஷன் இருக்கும். வேறே இன்னொரு சமூகத்திலே இன்னொரு மாதிரி கரப்ஷன் இருக்கும்.  உடம்புன்னா   அழுக்கு இருக்கும் பாருங்க  அது மாதிரி. நம்முடைய நோக்கம் அதைப் போக்கிக் கொண்டே இருக்க வேண்டும். குளிக்க குளிக்க அழுக்கு வரும். அதற்காக குளிப்பதை விடலாமா?   எனவே சமூக இயக்கத்தில் சில சிதைவுகள், சில கழிவுகள் ஏற்படும். எதை நாம் எடுத்துக் கொள்வது? அது… அப்படியே இருக்காது… மாறுகிறது. மிகக் கொடுமையான  அரசனாக இருந்தவர்  தான் பிறகு புத்த மதத்தை உலகெங்கும் பரப்பிய  அசோகர். எனவே மனிதர்கள் மாறுவார்கள். A corrupted man need not be corrupted forever.. மாற்றங்கள் வருகிறது. தவறு  செய்பவர்கள் மாறுகிறார்கள். அதையே focus பண்ணி  அதையே பார்த்துக்  கொண்டிருக்கிற மனம் தான் கெட்டுப் போகும். எனவே நல்ல விஷயங்களைப் பாருங்கள். எப்படி மாற்றங்கள் நேர்ந்து  கொண்டிருக்கின்றன என்று பாருங்கள். – ஏனென்றால்  ஒரு மனிதனைச் சீர்திருத்த  ஒரு மனிதனால் முடியும்.  – உலகத்தை, எல்லா மனிதர்களையும் — வளர்ச்சி இல்லாவிட்டால்  கரப்ஷன் என்ற வார்த்தையே இருக்காது.    சுதந்திரத்திற்கு முன்னால் ஏது நம் ஊரில் ஊழல்? சாப்பாட்டுக்கே வழியில்லாத போது ஊழல் எங்கே பண்ணுவான் ? இன்றைக்கு வளர்ச்சி  இருக்கிறது. பணம் பெருகி இருக்கிறது.ரொம்ப நாளா இந்திய மக்கள் என்பவர்கள்  ஒரு வேளை    சாப்பிடாத மனிதர்கள்.  இன்றைக்கு கொஞ்சம்  செல்வம் வந்திருக்கிறது.  இன்று வசதி படைத்தவர்கள்  கொஞ்சம்  செல்வம் வந்திருப்பதால் முன் வரிசையில் இருப்பவர்கள் அள்ளிக்கொள்கிறார்கள். எவ்வளவுதான்  அள்ளிக் கொள்வார்கள்  என்று பார்ப்போமே. அதற்கு ஒரு மாற்றம் வரும் என்று நம்புவோம்.அந்த மாற்றத்திற்கு உறுதுணையாக நாம்  இருப்போம் ..  நீ உருப்படவே மாட்டாய்  என்று சொல்வதற்கு எந்த உபதேசியும் அவசியம் இல்லை. மாறிக்கொண்டிருக்க, மாறணும். மாற்றத்திற்கு நாம் உதவிகரமாக  இருப்போம். 

கேள்வி : போன ஆட்சியில் கரப்ஷன் இருக்கிறது. அடுத்த ஆட்சியில் கேஸ் போடுவதா இல்லை waste of time  என்று நினைக்கிறீர்களா?

ஜெயகாந்தன் : கேஸ் போடாம நடந்துகிட்டா நல்லது. ஒவ்வொருவரும் இன்னொருவரின் கரப்ஷனைத் தான் சொல்கிறார்களே ஒழிய தன்னுடைய கரப்ஷனை யாரும் பார்ப்பதில்லை. தான் எந்த அளவு uncorrupted என்றும், தான் எந்த அளவு against corruption  என்பதையும், நிரூபிக்க வேண்டும். Corrupt people are accusing other people as corrupt. .. இதுலே  நமக்கு இடமே இல்லை. மக்களோடு சம்பந்தமே இல்லை.  அப்புறம் இங்கு தான் ஒரு  நம்பிக்கை இருக்கிறது.. வரிசையாக நிற்கிறார்கள். . கடைசி ஆளுக்குக் கூட கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை யிருக்கிறது. அங்கே பெரிய வரிசை. ஏதோ ஒரு நம்பர் வரைக்கும் தான் கிடைக்கும். அதுக்கப்புறம்  எல்லாரும் வெறும் கையோடு தான் திரும்ப வேண்டும். எனவே போட்டி போடுகிறார்கள். இல்லாவிட்டால் முன்னால்  இருப்பவனை தள்ளிவிட்டு நுழையப் பார்க்கிறார்கள். இல்லாவிட்டால்  காசு கொடுத்து முன்னால்  கொண்டு போய் நிறுத்துகிறார்கள். இது தானே கரப்ஷன். எல்லார்க்கும் எல்லாம் வந்த பிறகு இந்த ஊழல்  முற்றாக  அழிந்து போகும். பலருக்கு இல்லாமல் சிலர் மட்டும் வாழ்கிற ஊழல்  நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. 

கேள்வி : The value of human being is not being recognized – what can we do  in Tamil Nadu to make it happen?

ஜெயகாந்தன் : .. It will be recognized if it has value and values are changing. மதிப்பீடுகள் மாறுமே ஒழிய மதிப்பீடுகள்  இல்லாமல் போய் விடாது. ஒவ்வொரு காலத்திலும் மதிப்பீடுகளின் நிலைமை கால மாற்றத்தால் மாறும். எனவே values will be changing. மனிதனை மதிக்கிற யுகம் இது. அதில்  ஒன்றும் சந்தேகமே இல்லை. 

கேள்வி : (சவுண்ட் சரியில்லை எனவே கேள்வி யூகிக்கப்படுகிறது- ”அடிப்படை ஒழுக்கம் பற்றிக்கேட்கிறேன். உதாரணத்திற்கு, வரிசையில் நின்று தன்முறை வரும் வரை காத்திருக்கும் ஒழுக்கம் ஏன் மக்களிடம் இல்லை?”)

ஜெயகாந்தன் :  நிறைய ஜனப் பெருக்கம் வருவதால் சில  பிரச்சினைகள் வருகின்றன, இல்லையா? அதைக் குறைக்கப் பாடுபடுகிறோம். அதிலே நாம் வெற்றி பெற வில்லை.  இன்னும் சொல்லப்  போனால்   that becomes our plus! அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்த அமெரிக்க ஜனாதிபதி சொன்னார்- இந்த நூற்றாண்டில் இந்தியா உலகத்தின் தலைமைப்  பொறுப்பை வகிக்கும்.. ஒரே காரணம் என்ன என்றால் அவர்களுடைய ஜனப் பெருக்கமே அவர்கள் பலம் என்று சொன்னார். எனவே பலம் என்றால் ஒரு பக்கம் பலவீனம் இருக்கும். (அவை சிரிப்பு).

கேள்வி :  தமிழ் நாட்டிலே தமிழ் நாட்டு மக்கள்  western culture-ஐ,  நடை உடை பாவனைகளை copy பண்றாங்க இல்லையா?  Is it good for Tamil culture?

ஜெயகாந்தன் :   Good or bad -it can not be stopped. அதே மாதிரி நம்முடைய பண்புகளையும் மேற்கு உலகத்தினர் வரவேற்கிறார்கள். ஏற்றுக் கொள்கிறார்கள். யோகா இன்று இங்கே எல்லாருக்கும் மதிப்புக்குரிய விஷயமாக இருக்கிறது. நாம் பைபிள் படிக்கிற மாதிரி அவர்கள் நம்முடைய ஆன்மிக நூல்களைப் படிக்கிறார்கள். , நாம் இங்கே வந்து அமெரிக்கர்களாக ஆகி விடவில்லை. நாம் இங்கே வந்து பிள்ளையார் கோவில் , முருகன் கோவில், வெங்கடாசலபதி கோவில், எல்லாம் கட்டிக் கொண்டிருக்கிறோம். எனவே East  goes to West, West comes to  East. கிழக்கும் மேற்கும் சந்திப்பது ஒரு  நாகரிக  சங்கமத்திற்கு ஒரு வளர்ச்சி என்றே நான் கருதுகிறேன். நல்லதை எடுத்துக் கொள்வோம். 

கேள்வி : நான் சின்ன பிள்ளையா இருந்தப்ப ஜாதி பாகுபாடு இருக்கக்கூடாதுன்னு அப்பா சொல்லியிருக்கார். School- லே form fill up பண்ணும்போது ஜாதி கேட்டாங்க. ஆண்  பெண் ரெண்டுதான் ஜாதி என்று எழுது.  அதைத்தவிர வேறே ஒன்னும் இல்லை அப்படின்னு அப்பா சொன்னாங்க. ஆனா இப்ப வர வர ஜாதிக்கெல்லாம் ஒவ்வொரு சங்கம் வைத்திருக்கிறார்கள். இது நம்ம நாட்டுக்கு தேவையா? இது எதிலே போய் முடியும்?  இதனாலே எவ்வளவோ கலவரம் வருது.  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஜெயகாந்தன் : அது வருந்தத்தக்க சூழ்நிலை தான். ஆனால் வருத்தப் படுவதால் மட்டும் பிரச்சினை தீர்ந்து விடாது. ஜாதிகளுக்கு சலுகை என்று கொடுப்பது இருக்கற   வரைக்கும்  அது இருக்கும்.   எனக்கு ஜாதி நம்பிக்கையே இல்லை. ஆனால் என் பையன் ‘அப்பா நாம் என்ன ஜாதி” என்று கேட்டான். (உண்மையான ஜாதியைக்) குறிப்பிட்டால் நாம் பார்வேர்ட் ஜாதி என்று சில சலுகைகள் கிடைக்காது.   நம்ம ஜாதிக்கார்களெல்லாம் சங்கம் வைத்து எங்களை பேக்வேர்ட் கம்யூனிடியாக ஆக்குங்கள் என்று கேட்டுக் கொள்கிறார்கள்.. அந்த மாதிரி நாம் ஆகியிருக்கிறோம். ஜாதியை  சோழிய வேளாளர்னு நீங்க போட்டுக் கொடுத்தால்  நமக்கு  அந்த backward கம்யூனிட்டிக்கு கிடைக்கும் சலுகைகள் கிடைக்கும் என்று என்னிடம் சொல்கிறான். Does  it mean he believes in Jathi? சலுகைகள் இருக்கிறது என்பதனால் அதைப் பெறுவதற்கு  ஜாதியைப் பயன் படுத்துகிறார்கள். யாரும் ஜாதியை நம்ப வில்லை. கல்யாணம் பண்ணிக்க ஜாதியைப் பார்க்கமாட்டேன் என்கிறார்கள்.காதல்  பண்ணுகிறவர்கள் ஜாதி பார்ப்பதில்லை. சமூக வாழ்க்கையில் ஜாதி இல்லை. ஆனால் சமூகத்தில் இடம் பெறுவதற்கு அப்படி ஒரு  சலுகை வைத்திருப்பதால் (ஜாதி இருக்கிறது). அதைத் தப்பு என்று  சொன்னால் நீ மேல் ஜாதிக்காரன், அதனால் நீ தப்பு என்று சொல்கிறாய் என்று சொல்வார்களே தவிர,  அதில் இருக்கிற நியாயத்தை உணர மாட்டார்கள். அதைத்தான் சொன்னேன், எல்லோருக்கும் எல்லாம் என்று வந்த பிறகு ஜாதி ஒழிந்து விடும். இன்றைக்கு ஜாதி இல்லை. அது வசதிக்காக இருக்கிறது. 

கேள்வி : லஞ்சம், வாங்கறவங்க மேலே தப்பா? கொடுக்கிறவங்க மேல தப்பா?

ஜெயகாந்தன் : வாங்கறவன் கொடுக்கிறான். கொடுக்கிறவன் வாங்கறான். இதை எதிர்த்துக் கூச்சல் போடறதே ஒரு complex.  எல்லோரும் அதில் சம்பந்தப்பட்டிருப்பதால் தான்அதை எதிர்த்து  சண்டை போடுகிறார்கள். அவரவர்கள் விலகினாலே போதும். ரெண்டு பெரும் corrupted னு ஒத்துக்கலாமே? அதைப் பற்றி ஏன் பேசுகிறார்கள் என்றால் கொடுத்துட்டு வந்து லப லபன்னு கத்தறான். வாங்குறவன் கொடுக்கிறான், கொடுக்கிறவன் வாங்கறான். அதிகார வர்க்கம்னா கீழே இருக்கிற பியூனிலிருந்து -கடைசியில் அடிபடுகிறவன் அவனாகத்  தான் இருப்பான். அவன் மேலே இருக்கிறவன், அவன் மேலே இருக்கிறவன் கிட்ட அடிபடுவான். இப்படி அது அடிமைகளின் வரிசையாய்த் தான் இருக்கிறது.  சமத்துவம் என்று வந்தால் இது போகும். சமத்துவம் இல்லாத ஒரு சமூகத்தில் கரப்ஷன் இருக்கும்.

கேள்வி :  இந்தியாவில் சமத்துவம் வருமா? நம்முடைய generation-இல்  வருமா?

ஜெயகாந்தன் : நாம் அதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். லட்சியங்கள்  என்பது அவ்வளவு விரைவாக அடையத் தகுந்ததல்ல. அதற்காக அங்குரார்ப்பணம் செய்தவர்கள், அதை எழுதியவர்கள் தங்கள் வாழ்க்கை முடிந்து இன்னும்  பல  நூறாண்டுகளுக்குப் பிறகு அது நிறைவேறும் என்ற நம்பிக்கையில் தான் மனிதர்கள் வாழ்கிறார்களே  தவிர,  it is not achieved so easily. 

கேள்வி : நம் நாட்டில் இப்ப  பல வித தனியார் தொலைக்காட்சி நிலையங்கள் வந்திருக்கு. அதனால் மக்களுக்கு நிறைய விழிப்புணர்ச்சி  வந்திருக்குன்னு நினைக்கிறேன் அது பற்றி உங்கள் கருத்து என்ன? 

ஜெயகாந்தன் : ஆரம்பத்தில் நான் சொன்ன மாதிரி நீங்கள் நல்லதைத் தேர்ந்தெடுங்கள். எல்லாவற்றிலும் நல்லதைக் காண முடியும். நம்முடைய தேட்டம்  என்ன என்பது முக்கியம். Who are we? சும்மா கமெண்ட் பண்ணிக் கொண்டிருந்தா போதாது. அதை எல்லோரும் பண்றிங்க. கமெண்ட் பண்ணிட்டு “கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்”  சினிமா பார்க்கப் போயிருந்தீர்கள் இல்லையா? (சிரிப்பு) அப்புறம் சினிமாவே கெட்டுப் போயிடுத்துன்னு பேசறோம்.. நாம் தான் வளர்க்கிறோம், நாம் தான் அதற்குப் பொறுப்பு. அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பும், அதைத் தவிர்க்க வேண்டிய பொறுப்பும் நம் கையில் மட்டும் தான் இருக்கிறது. உட்கார்ந்து அழுது கொண்டு, பிறரைக்  குறை சொல்வதற்கென்றே சிலர் இருக்கிறார்கள்.   நான் அவர்களைச்  சேர்ந்தவன் அல்ல. 

(கைதட்டல்)

கேள்வி : மகாத்மா காந்திபோல எல்லோருக்குமான தன்னலமில்லாத அர்ப்பணிப்பு  கொண்ட தலைவர்கள் உருவாவார்களா?

ஜெயகாந்தன் : அவசியமாகும் போது அவர்கள் அவதாரம் செய்வார்கள்.  இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் காந்தியாகக் கூடிய  அவசியம் இருக்கிறது. அதனால் தான், for Gandhi you can not look at the sky, look at yourself.

கேள்வி : 50களின் இறுதியிலோ அல்லது 60களிலோ  எனக்கு ஞாபகம்  இல்லை. யுகசந்தி கதையிலே  பாட்டி (விதவை பாட்டி என்கிறார் ஜெயகாந்தன்)  ரொம்ப  conservative பாட்டி தன்னுடைய பேத்தி காதலை ஆதரித்து கூடவே போவாள்.  அந்த period-லே அது ஒரு பெரிய revelation.  நான் கிண்டி  இன்ஜினீரிங் படிக்கும் போது 50  பெண்கள்படித்தால் ஆச்சரியம்– 3000 பேரில். இப்ப கிட்டத்தட்ட 50 சதவீதம் பெண்கள் படிக்கிறார்கள்.  நல்ல முறையில் பெண்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது என் அபிப்பிராயம். 

ஜெயகாந்தன் : ரெண்டு விஷயம்ங்க -ஆண்களுடன் போட்டி போடுவதால் பெண்கள் சமத்துவம் அடைய முடியாது. ஆண்களுக்கு இருக்கிற பலவீனங்கள் தங்களை அணுகாமல் தவிர்த்துக் கொண்டு ஆண்களுக்கு வழி காட்டுவதன் மூலமே பெண்கள்  சமத்துவமாக முடியும். 

(கைதட்டல்)

கேள்வி : இதே காரணத்துக்காகத் தான் அடுத்த வருடம் மிச்சிகனில் பேரவை நடத்தும் விழாவில் வைத்திருக்கும் விழாவில் ஒரு முழு நாள் விழா for the women, by the women, of the women. 

ஜெயகாந்தன்: Good

கேள்வி :  தமிழ் நாட்டிலே பெண்கள் முன்னேற்றம் நன்றாக இருக்கிறது. அதே சமயம் பெண் சிசு வதை அதிகமாகி இருக்கிறதா? இல்லை அதிகமாக அது பற்றி படிக்கிறோமா?  

ஜெயகாந்தன் : sensation-க்காக பண்றாங்க அதெல்லாம். நான் எங்கேயும் பார்க்கலிங்க. நான் தமிழ் மக்களை பூரா அறிந்தவன்.

கேள்வி :  பாரதிராஜா படம் போன்றவற்றில் செய்திகள் வருகின்றனவே? 

ஜெயகாந்தன் : அது இல்லாம போகணும் என்பதற்காக அதை பெரிசு படுத்திக் காண்பிக்கிறார்களே ஒழிய I dont think it is happening everywhere in Tamil Nadu. சில விஷயங்களை பூதாகாரமாக ஆக்கிக் காண்பிப்பது பத்திரிகை. போலீஸ் ஸ்டேஷன்எங்க ஊர்லே இருப்பதே  கற்பழிப்பதற்குத்தான் என்பது போல.  It is not true. அங்கே இங்கே சில விஷயங்களை நாம் பெரிதுபடுத்தாமல் விட்டுடனும். அதைப்  பற்றிப் பேசியே பிரச்சாரம் பண்ணி அதை வளர்க்கிறதே சிலர் நோக்கமாக இருக்கிறது. அது குறித்து நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

 கேள்வி : பெண்கள் இவ்வளவு படிச்சு  வந்து, வேலை பார்த்து, சம்பாரிச்சும்  கல்யாணம்னு போனா, உடனே அதற்கு வரதட்சனை என்று கேட்கிறார்கள். 

ஜெயகாந்தன் : ஜாதியை விட்டுக்  கல்யாணம் பண்ணுங்க.  வரதட்சனை இருக்காது. (சிரிப்பு)  நானும் பெண்களைப் பெத்தவன் தான். நான் வரதட்சனை எல்லாம் கொடுக்கலை. என் ஜாதிக்காரங்க கேட்டாங்களாம், என்ன கொடுப்பார்னு? உதை  கொடுப்பார்னு சொல்லுங்க. வரதட்சனை வாங்காத ஜாதி என்று தங்கள் ஜாதியை அடையாளம் செய்து கொள்ளவேண்டும். 

கேள்வி : நீங்கள் எழுதினதிலேயே  most controversial எது? என்ன?

 ஜெயகாந்தன் : நண்பர் அறிமுகத்தில் சொன்ன மாதிரி இந்த அக்கினிப்  பிரவேசம் என்ற கதை ரொம்ப விமர்சனத்திற்கு ஆ ளா ச்சு. படைப்பாளி விமர்சனத்திற்கு, படைப்பு மூலமே பதில் சொல்வான் என்பதை இரண்டு நாவல்களில்  பதில் சொல்லி நான் நிரூபித்திருக்கிறேன். That controversy is over. 

 கேள்வி : சில நேரங்களில் சில மனிதர்கள் கதை  படிக்கும் போது வரும் உணர்வும்,  படம் பார்க்கும்போது வரும் உணர்வும் ஒரே மாதிரி இருக்காது. வரவில்லை. உங்கள் கருத்து, படத்தில் முழுதும் வெளிப் பட்டது  என்று நினைக்கிறீர்களா?

ஜெயகாந்தன் : one thing. இது different மீடியம். ஒருத்தி அழகின்னு சொல்லிட்டா  உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அந்த அழகியை நீங்கள் கற்பனை பண்ணிக்கலாம். (படத்தில் ) அழகி என்றால் மூக்கு கோணலாயிருக்கு என்பீர்கள். சினிமா என்பது ஒரு வரம்புக்கு உட்பட்டது . எழுத்து மாதிரி எல்லை அற்றது  அல்ல. அந்த மீடியாவிற்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்வதற்கு நாம் அனுமதிக்க வேண்டும். ஆனால் அதன் அடிப்படையைத் தகர்த்து விடக்  கூடாது. சிலநேரங்களில் சில மனிதர்கள் ஸ்க்ரிப்டும் நான் தான் எழுதினேன். நாவலும் நான் தான் எழுதினேன்.  அதிலே ஒன்னும் பெரிய முரண்பாடுகள் வரவில்லை.  

கேள்வி : தமிழ் நாட்டில் இப்போது வன்முறை ரொம்ப ஜாஸ்தியாகியிருக்கிறது கடந்த ஒரு அஞ்சு  ஆறு வருஷங்களில் பார்த்தீர்கள் என்றால் எங்கு பார்த்தாலும் வன்முறை. ஒரு வேளை அவ்வளவு ஜாஸ்தி இல்லை என்று நினைக்கிறீர்களோ என்னவோ? இங்கிருந்து நியூஸ் படிக்கும்போது, இந்த வன்முறை முன்னாலே இருந்த மாதிரி இல்லை.  வன்முறை  அதிகமாகி இருக்கிறது, ஜாதி பெயரிலோ அல்லது கட்சியினாலோ. இது நம்  சமூகத்தில் ஒரு நோய் மாதிரி. இது குறைவதற்கு என்ன செய்யலாம். 

ஜெயகாந்தன் : வன்முறை தூண்டிவிடப் படுகிறது – அரசியல் நோக்கங்களுக்காக. அதனுடைய பலனை அனுபவித்து அதிலிருந்து அதிலே ஆதாயம்  பெற்று, அதை தவிர்க்க வேண்டிய பொறுப்பை அவர்களே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு அந்த வன்முறை குறைந்திருக்கிறது. வன்முறைக்கு இடம் கொடுக்காமல்  இருக்க வேண்டும் என்பது தான் நம் ஆசை. மிகவும் அது  ஏழை மக்களிடம் தான் உருவாக்கப்படுகிறது. அப்புறம் சில தலைவர்கள் அதற்கு  நியாயம் கற்பிக்கிறார்கள். இதெல்லாம் அங்கிருக்கிற குழப்பமான, உங்களோடு சேர்ந்து நானும் பகிர்ந்து கொள்ளக் கூடிய வருந்தத் தக்க நிகழ்ச்சிகள் தான். ஆனால் வன்முறை இல்லாத வாழ்க்கை தான் நம்முடைய லட்சியம். அதற்கு நாம் நிறைய பாடுபட வேண்டும். 

கேள்வி : வன்முறையினால் public property-ஐ destroy பண்றங்க. அதைத் தவிர்க்க முடியுமா? 

ஜெயகாந்தன் : இதற்கெல்லாம் நான் மட்டும் எப்படி  பதில் சொல்ல முடியும் என்று தெரியவில்லை. உங்களை மாதிரி தான்  நானும். உங்களைப் போல நானும் கவலைப்  படுகிறேன். 

கேள்வி : பொது மக்கள் அதைப் பற்றி நினைக்கிறார்களா? இதுமாதிரி நடக்கக்கூடாது என்று நினத்துவிட்டு, அவர்களும் நாளை இதில் ஈடுபடுகிறார்களே?

 ஜெயகாந்தன் : எல்லோருமென்று சொல்ல முடியாது. தீ பிடிக்கிற மாதிரியும்,  விபத்துக்கள் நடக்கிற மாதிரியும், நோய்கள் பெருகுகிற மாதிரியும்   அது சமூகத்தில் இடம் பெறுகிறது.   அதை போக்குவதற்கு சமூக சக்திகள் பாடுபடவேண்டும். அந்த முயற்சியை அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்.   அதிலே அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று நாம் வாழ்த்த வேண்டும். 

கேள்வி : சாகித்ய அகாதமி விருது தமிழுக்கு..உங்களுக்குப் பிறகு யாருக்கு? 

ஜெயகாந்தன் : வருஷா வருஷம் யாருக்காவது கொடுத்தே ஆக வேண்டும். அது கொடுக்காமல்  இருக்க முடியாது. பத்திரிகைகளில் செய்தி வருமே. எல்லா மொழிகளிலும், வந்த பிடாரிகளில் நல்ல பிடாரி எது என்று தரம் பிரித்துக் கொடுத்தே ஆக வேண்டும். அதனாலே தான் அதை வைத்து இலக்கியத்தை தீர்மானிக்காதீர்கள். சாகித்ய அகாதமி விருதோ அல்லது வேறு எந்த விருதோ அல்ல இலக்கியத்தைத் தீர்மானிப்பது. உங்களை மாதிரி வாசகர்கள் தான். அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டியவர்கள். They are the ultimate judges. 

கேள்வி : தமிழ் நாட்டில் தமிழ் பேசுவது நாகரிகம் அல்ல. ஆங்கிலத்தில் பேசணும்னு நினைக்கிறாங்க. சினிமாவிலும் பார்க்கிறோம். பசங்களை இங்கிலிஷ்லே படிக்க வைக்கணும் அது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் மாதிரி. அதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க? 

 ஜெயகாந்தன் : குழந்தைகள் எல்லாம் மழலை பேசுதே அதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க? அது மாதிரி தான் இது எனக்கு. மக்கள் இப்படித் தான் பேச வேண்டும் என்று சட்டம் போட நான் என்ன சர்வாதிகாரியா? மக்கள் எப்படி பேசுகிறார்களோ அதிலே நல்ல விஷயங்கள் என்ன? என்ன பேசினால் என்ன? என்ன பாஷையில் பேசினால் என்ன? இதைக் கலந்து பேசினால் என்ன? என்ன பேசுகிறார்கள் என்பது தான் முக்கியம். அதைத் தான் நான் கூர்ந்து கவனிக்கிறேன். மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் என்று கலைமகளைப் பற்றி மகாகவி பாரதியார் சொல்லி இருக்கிறார். மக்கள் என்றால் உங்கள் குழந்தைகள் மட்டும் அல்ல. எல்லா மக்களும் மக்கள் தான். எனக்கு அது குறித்து விமர்சனம் இல்லை. அதன் மீது ஒரு ரசனையே உண்டு. அதற்கு இலக்கிய அந்தஸ்து கொடுத்த பொறுப்பு அல்லது பொறுப்பின்மை என்னையே சாரும். 

கேள்வி : மொழி  வளர்ச்சிக்கு இது தீமை  இல்லையா? 

ஜெயகாந்தன் : மொழி வளச்சியை யார் தீர்மானிப்பது? மொழி தான். அந்த மொழி பேசுகிற வரைக்கும், அந்த மொழியில்  படைப்புக்கள் இருக்கிற வரைக்கும் அதன் வளர்ச்சி  தடைப்பட்டு போனதாய் அர்த்தமாகாது. அப்படி பார்த்தால் தமிழ் நன்றாக தழைத்து வளர்ந்திருக்கிறது. எத்தனை விதம். திருநெல்வேலியில் ஒரு மாதிரி பேசுகிறார்கள். மதுரையில் ஒரு மாதிரி பேசுகிறார்கள். கோவையில் ஒரு மாதிரி பேசுகிறார்கள். சென்னையில் ஒரு மாதிரி பேசுகிறார்கள். சென்னைத்  தமிழ் சென்னை ஒரு cosmopolitan city என்பதனால் பல மொழிகளும் கலந்து வரும். எல்லா காலத்திலும் இருக்கிறது அது. அதிலே நான் அழகு காண்கிறேன். 

கேள்வி : உங்களுக்கு மறு பிறவி இருந்தால் அல்லது if you have to live your life all over again, what would you do?

ஜெயகாந்தன் : ஒரு முறை மார்க்சிடம் இது கேட்கப்பட்டது. அவர் சொன்னார். நான் இதே மார்க்ஸாகத்தான் இருப்பேன். ஆனால் கல்யாணம் மட்டும் செய்து கொண்டிருக்க மாட்டேன். எனக்கு அது கூட உடன்பாடில்லை. நான் மறுபடியும் பிறந்தால் இதே வாழ்க்கையை, இதே பெற்றோர்களுக்குப் பிறந்து, இதே மனைவிகளோடு வாழ்ந்து, இதே மக்களைப் பெற வேண்டும் என்பதுதான் ஆசை. இந்த வாழ்க்கையின் மீது இருக்கும் காதலினால் தான் நான் மறு  பிறவியை வேண்டுகிறேன்.

(கைதட்டல்)

ஜெயகாந்தன்: வணக்கம். நன்றி.

 

 

2 COMMENTS

  1. Very interesting and illuminating. His “All for everybody” concept and looking and encouraging the good in everything is what his short stories and novels also bring out. Thanks for sharing. I was in Huntrsville, Alabama in 2000. Had I known I would have definitely driven to Oakridge to listen to Jayakanthan!

Comments are closed.

You Might Also Like