Star Mountain

My travels and other interests

அரசுதமிழ்நாடு நேற்று இன்று நாளை

அரசியலும் அரசும் (1997)

அரசியலும் அரசும்
ச. முத்துக்குமரன்
முன்னாள் துணவேந்தர்
செயலர், தமிழ்நாடு, மாநில உயர்கல்வி மன்றம்

1947 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றாலும் இன்று வரை நம் மக்கள் மக்களாட்சியின் முழுப்பலனைப் பெறவில்லை. அரசியல் சுதந்திரம், பொருளாதாரச் சுதந்திரம், சமுதாயச சுதந்திரம், மொழிச்சுதந்திரம், கல்விச்சுதந்திரம் போன்ற எல்லாச் சுதந்திமும் எல்லா மக்களும் பெற்றால் தான் நம் நாடு முழுமையாக மக்களாட்சி நிலவும் ஒரு சுதந்திர நாடாக மலரும். இன்றும் நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் மக்களாட்சி பற்றிய விவரங்களை அறிந்த நிலையில் இல்லை. ஆகவே மக்களாட்சி தமது பங்கை அவர்கள் செய்ய இயலவில்லை. கணிசமான மக்களுக்கு இலவசங்கள் வழங்கப்படும் நிலை தொடருவதால் பொருளாதாரச் சுதந்திம் பெறாதவர் பலர் என்பது தெளிவு.  கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு தொடருவதுடன் ஒதுக்கீட்டின் அளவு வளருவதைக் காணும் போதும் கல்வியில் சுதந்திரம் கிடைக்காததோடு சமுதாயச் சுதந்திரமும் பலருக்குக் கிடைக்கவில்லை என்றாகிறது. கல்வி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் என்பதால் கல்வி, சமுதாய மற்றும் பொருளாதாரச் சுதந்திரம் ஒரு கணிசமான எண்ணிக்கையில் ஆன மக்களுக்கு மறுக்கப்படுகிறது எனத் தெரிகிறது. எனினும், பல பொதுத்தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி மத்தியிலும் மாநிலங்களிலும் பலமுறை ஆட்சியை மாற்றி இருக்கிறோம். இது நமது மக்களின் அரசியல் ஞானத்தை வெளிப்படுத்துவதால், நமது நாட்டின் எதிர்காலத்தில் நமக்கு நம்பிக்கை உருவாகிறது.

வருங்காலத்தில் பஞ்சாயத்து ஆட்சி செவ்வனே செயல்படுத்தப்பட்டால் மக்கள் யாவரும் அரசியல் சுதந்திரம் பெறுவர். எல்லோரும் கல்வி கற்க வசதி செய்வதன் மூலம் இட ஒதுக்கீட்டிற்கு அவசியம் இல்லாமல் போகச் செய்ய வேண்டும். எல்லோரும் கல்வி கற்கவும் அதுவும் நமது மொழி வழி கற்கவும் வசதி செய்யப்படுமாயின் கம்பன் பாடிய அயோத்தி போன்று நம் மக்கள் யாவரும் கல்வி கற்பர்; அதன் மூலம் செல்வம் பெற்று நல் வாழ்வு வாழ்வர். பொருளாதாரச் சுதந்திரம், கல்விச் சுதந்திரம், மொழிச் சுதந்திரம் இவற்றின் வழி மக்கள் யாவரும் சமுதாயச் சுதந்திரம் பெறுவர். இவ்வாறு சுதந்திரத்தின் முழுப் பலனையும் பெறுவதற்கு அவசியமான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த தலைமைப்பண்புகள் நிறைந்த தலைவர்கள் நாட்டில் உருவாக வேண்டும். அவர்கள் முயற்சியால் எல்லாச் சுதந்திரமும் பெற்ற ஒரு சான்றோர் நிறைந்த நன்னாடாக நம் நாடு மலரும்.

அரசியல் என்பது அரசின் செயல்பாட்டைக் குறித்த ஓர் ஆராய்ச்சிக்குரிய அறிவியல் துறை. குறிப்பாக அரசு நிர்வாகம், நிர்வாகம் மேற்கொள்ளுவதற்காக அமைக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசு அங்கங்கள் ஆகியவற்றைப் பற்றிய அறிவியல் பார்வை. நாம் பொதுவாக அரசியல் என்ற சொல்லுக்கு அரசியல் கட்சிகளின் செயல்பாட்டையே குறிக்கின்றோம்.

அடுத்து அரசு என்ற சொல்லுக்கு அரசாட்சி என்ற பொருளும் அரசாள்பவர் என்ற பொருளும் உண்டு. அரசாட்சி என்ற பொதுப்பொருள் அரசாள்பவரையும் தன்னுள் அடக்கி இருப்பதால் அரசாட்சி என்றே பொதுவாகப் பொருள் கொள்கிறோம். வள்ளுவர் சொல்லுவார்:

படைகுடிகூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.            (குறள் 331)

நாட்டை வெளிப்பகையினின்று காப்பதற்குப் படை, நாட்டில் வாழும் நன் மக்கள், அரசை நடத்திச் செல்ல அவசியமான பொருள், அரசை நடத்திச் செல்லும் மற்றும் தேவையான அறிவுரை கூறும் அமைச்சு, துன்பம் வந்தபோது உதவவும், தவறு செய்யும்போது தடுத்து நிறுத்தவும் தேவையான நட்பு மற்றும் பகைவரின் தாக்குதலில் இருந்து காப்பாற்றக் கூடிய அரண் ஆகிய ஆறு அங்கங்களை உடையது, அரசு என்கிறது இக்குறள்.

இக்கட்டுரையைப் பொறுத்த வரையில் அரசு என்பது அரசு அமைப்பையும், அரசாட்சி செய்பவரையும் குறிப்பதாகும். அரசியல் என்பது அரசாளும் நிலையில் அமர்ந்தவர், அமரக் கூடியவர் ஆகியோரின் குறைநலன்களைக் குறிப்பதாகும்.

இன்றைய நிலை

நாம் சுதந்திரப் போராட்டக் காலத்தில் அரசியல் சுதந்திரம் வேண்டும் என்று போராடினோம். அரசியல் சுதந்திரம் பெற்றபின் பொருளாதாரச் சுதந்திரம், சமுதாயச் சுதந்திரம், மொழிச் சுதந்திரம் இவ்வாறான எல்லாச் சுதந்திரத்தையும் நாமே நமக்கு அளித்துக்கொள்ள முடியும் என்று எண்ணினோம்.

ஆனால் அரசியல் சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் ஆகியும் இன்றும் நம் மக்களில் பெரும்பாலானவர்க்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைக்கவில்லை. இன்றும் மூன்று பேரில் ஒருவர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிறார். அதாவது அவர்களுக்கு உயிருடன் இருக்கத் தேவையான உணவு அவசியமான அளவுக்குக் கிடைக்கவில்லை. அவர்கள் இந்நாட்டில் ஏழைகள். அவர்கள் நல்வாழ்வு வாழவில்லை. ஏதோ உயிருடன் இருக்கின்றனர். அவர்களுக்கு உண்ண அவசியமான உணவு கிடைக்கவில்லை என்பதால் அவர்களுக்கு உடுக்க உடையும், இருக்க வீடும் இல்லை என்பது வெளிப்படை. மேலும் ஒவ்வோர் ஆண்டும் பல இலட்சம் மக்களுக்கு வேட்டியும், புடவையும் இலவசமாக அரசு அளிக்கிறது. இலவச வேட்டி, சேலையைப் பெறும் மக்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பெருகுகிறது. இவர்கள் யாவரும் தங்களுக்கென்று ஆண்டுக்கு ஒரு வேட்டியோ, சேலையோ வாங்க இயலாதவர் என்பதுதானே பொருள். ஆகவே, நாட்டில் கணிசமான எண்ணிக்கையில் மக்கள் பொருளாதாரச் சுதந்திரத்தை இன்னும் பெறவில்லை.

சுதந்திரம் பெற்றபோது தாழ்த்தப்பட்டவர்க்கும், மலை சாதியினருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு அதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழிவகுக்கப்பட்டது. அதன்பின் ஒரு சில ஆண்டுகளிலேயே பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு அதற்கு வழி வகுக்கத் தக்கவாறு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. நமது அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட முதல் திருத்தம் இதுவே. அந்த நாளில் இருந்து வரையறை அற்று இட ஒதுக்கீட்டின் அளவு உயர்ந்து கொண்டே போகிறது. இட ஒதுக்கீட்டிற்கு உச்சவரம்பு வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு இது உயர்ந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் இருக்கலாகாது என்று அறுதியிட்டுக் கூறியது. ஆனால் தொட்ர்ந்து இட ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும் என்றும் பல சாதியினர் தங்களைப் பிற்படுத்தப்பட்டவராக அறிவிக்க வேண்டும் என்றும், பிற்படுத்தப்பட்டவர் தம்மை மிகவும் பிற்படுத்தப்பட்டவராக அறிவிக்கக் கோரியும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர் தம்மைத் தாழ்த்தப்பட்டவராக அறிவிக்கக் கோரியும் வருகின்றனர். மொத்தத்தில் நாம் சுதந்திரம் பெற்றபின் தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் முன்னுக்கு வராததோடு இன்னும் பல சாதியினர் தாழ்த்தப்படுகின்றனர், பிற்படுத்தப்படுகின்றனர் என்ற முடிவுக்கே நாம் வரவேண்டி உள்ளது. அதாவது கடந்த ஐம்பது ஆண்டுகளில் நமது நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் சமுதாயச் சுதந்திரம் பெறவில்லை. சமுதாயச் சுதந்திரம் இன்னும் பெறாத மக்கள் எண்ணிக்கையிலும், விழுக்காட்டிலும் மிக்க் கணிசமா உள்ளனர்.

மொழிச் சுதந்திரத்தைப் பொறுத்தவரை மக்கள் அதை மறந்து விட்டனர் என்றே தோன்றுகிறது. நாம் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தைவிட இன்று ஆங்கில மோகம் அதிகமாக ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கற்போரின் எண்ணிக்கை 1980 இல் பத்து விழுக்காட்டிற்குக் கீழ் இருந்தது. அது இன்று இருபது விழுக்காட்டைத் தாண்டி விட்டது*. 1947இல் பெரு நகரங்களில் மட்டுமே ஆங்கில வழிப்பள்ளிகள் இருந்தன. பட்டி தொட்டிகளில் எல்லாம் ஆங்கில வழி மழலையர் பள்ளிகளை இன்று காண்கிறோம். நாளுக்குநாள் நம் தமிழ் மக்கள் தமிழ்ச் சொற்கள் பலவற்றை இழந்து அவற்றுக்குப் பதிலாக ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர். 1930களில் பள்ளிகளில் தமிழ் மொழி பயிற்சி மொழியாயிற்று. 1960களில் கல்லூரிகளில் தமிழ் பயிற்சி மொழி ஆகியது. அன்று தமிழ் வழிப் பள்ளிகள், கல்லூரிகள் வேண்டும் என்றும், ஆங்கிலவழிக் கல்வி நிலையங்களில் தமிழ் வழிப் பிரிவு தொடங்க வேண்டும் என்றும் கேட்டனர். இன்று தமிழ்க் கல்வி நிறுவனங்களில் ஆங்கிலப் பிரிவுகள் தொடங்குவதை முன்னேற்றமாகக் கருதுகின்றனர். ஆக மொத்தம் மொழிச் சுதந்திரம் பெறாத்து மட்டுமல்ல; அது வேண்டாம் என்று மக்கள் புறக்கணிக்கிறார்கள் என்ற நிலைமை.

கல்விக்கான வசதிகள் என்னாயின? 1956-57இல் பள்ளிகளில் படித்த மாணவர் எண்ணிக்கை 3,29,184. ஆசிரியர் எண்ணிக்கை சற்றேறக்குறைய 104,000. 1994-95இல் மாணவர் எண்ணிக்கை 13,738,369, ஆசிரியர் எண்ணிக்கை 295,710. அதாவது முன்பு 32 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இன்று 46 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர். கடந்த நாற்பது ஆண்டுகளில் மாணவர்க்குக் கிடைக்கும் வசதிகள் குறைந்துள்ளன (கொள்கை விளக்கக் குறிப்பு – கல்வி மானியக் கோரிக்கை, 1995-96).

சட்டமன்றத்தில் விவாதங்கள் தமிழில் நடைபெறுகின்றன. தமிழில் சட்டமுன்வடிவுகள் ஏற்கப்படுகின்றன. ஆனால் நமது அரசமைப்புச் சட்டப்படி, ஏற்கப்பட்ட சட்டங்களின் ஆங்கில வடிவமே செல்லுபடியாகும். ஆகவே இன்றும் சட்டம் தமிழில் இல்லை.

அண்மையில் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு ஆவணங்களைத் தமிழில் தரவேண்டும் என்று கேட்டபோது “குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆங்கிலம் தெரியும். ஆகவே அவருக்குத் தமிழில் ஆவணங்களைத் தர வேண்டியதில்லை” என்று தீர்ப்புச் சொல்லப்பட்டது. இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவெனில் இன்றும் ஆவணங்கள் (அது அரசு ஆவணங்கள் ஆனாலும் தனியார் ஆவணங்கள் ஆனாலும்) பொதுவாக ஆங்கிலத்திலேதான் பராமரிக்கப்படுகின்றன. அதாவது நமக்கு மொழிச் சுதந்திரம் தேவை என்று நாம் நினைக்கவில்லை.

கல்வியைப் பொறுத்தவரை 1951இல் தமிழ்நாட்டில் எழுத்தறிவு பெற்றவர்கள் 20.85 விழுக்காடு. 1991இல் இது 63.72 விழுக்காடாக வளர்ந்திருக்கிறது. (Literacy – Tamilnadu, Experience, National Literacy Mission 1994). ஆனால் இன்று தமிழ் நாட்டில் சற்றேறக்குறைய இண்டு கோடி பேர் எழுத்தறிவு இல்லாதவர். இது நாம் சுதந்திரம் பெற்ற போது இருந்த மொத்த மக்கட் தொகையை விட அதிகம். இந்நிலையை வளர்ச்சி என்று ஒப்புக் கொள்ள இயலுமா? ஆக நமது நாட்டில் பெரும்பாலானவர் கலவியில் சுதந்திரம் பெறவில்லை என்றாகிறது.

நமது சுதந்திரப் போராட்டக் காலத்தில் அரசியலுக்கு வந்தவர்கள் யாவரும் தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்தவர்கள். அவர்கள் துன்புறுத்தப்பட்டனர். அவர்கள் உயிரையே தியாகம் செய்ய முன்வந்தனர். ஆனால் சுதந்திரம் பெற்றுச் சில ஆண்டுகள் கழித்து அரசியலுக்கு வந்தவர்கள் ஆதாயம் தேடவே வந்தனர். கடந்த ஆட்சியில் தமிழ் நாட்டில் அமைச்சர் பதவி வகித்த பெரும்பாலானவர் முதலமைச்சர் உட்பட, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளனர். நாட்டின் பிரதம மந்திரி மீதும் பல குற்றவியல் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இவர்கள் தங்களுடன் பணியாற்றிய மூத்த இந்திய ஆட்சிப் பணி மற்றும் காவல்துறைப் பணி அலுவலர்களையும் தவறான பாதைக்கு இழுத்துள்ளனர். அவர்களிலும் பலர் இன்று சிறையில் உள்ளனர். இவ்வாறு ஆட்சியில் பெரும்பதவி வகித்தவரில் பலர் இன்று குற்றவாளிக் கூண்டில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாகத் தினத்தாள்களில் தினமும் இச்செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆராயுமிடத்து, நமது நாட்டு அரசியலில் ஒரு தீயசக்தி நுழைந்துள்ளதை நாம் உணர்கிறோம்.

சுதந்திரம் பெற்றபின் நாம் சாதித்த சிலவற்றைப் பார்ப்போம். இன்று நமது நாடு வேண்டிய அளவு உணவு தானியங்களைப் பயிர் செய்வதால் நாம் உணவில் தன்னிறைவுடன் விளங்குகிறோம். நம்முடைய நாட்டின் மொத்த உற்பத்தித்திறன் மட்டுமல்ல சராசரி மனிதனின் ஆண்டு வருமானமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 1982-83 ஆம் ஆண்டில் நமது நாட்டு மக்களின் மொத்த வருவாய் 119,704 கோடி ரூபாயாக இருந்தது. சராசரி ஒவ்வொருவரின் ஆண்டு வருமானம் ரூ.1691 ஆக இருந்தது. இவை 1991-92இல் முறையே 186,135 கோடி ரூபாயாகவும், ரூ.2175 ஆகவும் வளர்ந்து உள்ளன. (இந்த விவரங்கள் யாவும் 1980-81 ஆம் ஆண்டு விலைவாசி அடிப்படையில் கொடுக்கப்படுகின்றன. India 1993, A Reference Manual, GOI Publication).

அடுத்துப் பல பொதுத்தேர்தல்களை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளோம். பலமுறை மாநிலங்களிலும், மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஆட்சி மாறும் போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாது அயல்பாக இம்மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மக்களும், அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் நடந்து கொண்டுள்ளனர் என்பது தெரிகிறது. மக்கள் தங்களது எதிர்ப்பைப் பலவிதமான முறைகளில் தெரியப்படுத்தவும் அறிந்திருக்கின்றனர். அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டுத் தனிமனிதர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் அலுவலகங்களில் சொல்லியுள்ளனர். சாலைகளில் அமர்ந்து ஆட்சிக்கு அறிவித்துள்ளனர். நாட்டின் சான்றோர்களை அறிக்கைகள் வெளியிடச் செய்துள்ளனர். நீதிமன்றத்திற்குச் சென்று பொதுநல வழக்குகள் தொடர்ந்துள்ளனர். நீதிபதிகளும் ஆட்சியின் தவறுகளைத் தமது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளனர். இவ்வாறு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தும் தம்மை மாற்றிக் கொள்ளாத அரசை மக்கள் மாற்றியுள்ளனர். (ஆதாரங்களுக்கு “மக்கள் சொன்னார்கள் மன்னன் கேட்கவில்லை” என்ற எனது தினமலர் (24.5.96) கட்டுரையைப் பார்க்கவும்). மகாத்மா காந்தி அடிகள் சொன்னார் “உண்மையான சுயாட்சி என்பது ஒரு சிலர் பதவியில் அமருவது அல்ல; அதிகாரத்தில் இருப்போர் தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் அதை எதிர்க்கும் திறனை எல்லா மக்களும் பெறுவதே” (யங் இந்தியா, 29.1925). மக்களாட்சி நடைபெறும் சுதந்திர நாட்டில் தமது கடமையை ஓரளவாவது நம் மக்கள் அறிந்திருந்திருக்கிறார்கள் என்பது தெளிவு.

நமது அரசியல் தலைவர்கள் நமது நாட்டில் மக்களாட்சி மறையாகச் செயல்பட மைய அரசு தவிர, தேர்ந்து எடுக்கப்பட்ட பஞ்சாயத்து ஆட்சியும் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதை உணர்ந்தனர். அரசியலமைப்புச் சட்டத்தின் 73 ஆவது 74 ஆவது திருத்தங்களைச் செய்து மூன்றாவது நிலை ஆட்சி தொடர்ந்து செயல்பட வழி வகுத்தனர். 1996 ஆம் ஆண்டு நாட்டின் எல்லா மாநிலங்களிலும் பஞ்சாயத்து ஆட்சி செயலுக்கு வந்து விட்டது. இதுவும் சுயாட்சியில் நமது முன்னேற்றத்தைக் காட்டுகிறது.

நாளை

நாம் சுதந்திரம் பெறப் போராடிய காலத்திலேயே சுதந்திரம் பெற்ற பின் ஆட்சியை நடத்த நம் மக்கள் தகுதி பெற வேண்டும் என்பதை முழுமையாக உணர்ந்த மகாத்மா காந்தியடிகள் அத்திறமைகளை நாம் வளர்த்துக் கொள்ளத் துணை நின்றார்.

கிராமங்கள் முன்னேறவில்லை என்றால் நாடு முன்னேற முடியாது. கிராமக்களுக்குச் சுயாட்சி வேண்டும். தனது முக்கியமான தேவைகளுக்கு ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவுடன் விளங்க வேண்டும் என்று மகாத்மா வற்புறுத்திச் சொன்னார். “ஒவ்வொரு பஞ்சாயத்தும் தன் கிராமச் சட்டமன்றமாகவும், நீதிமன்றமாகவும், அரசாகவும் செயல்படும்” (அரிசன், 26.7.1942). இக் குறிக்கோளை நோக்கி ஓரளவுக்காவது முன்னேறும் வகையில் நமது அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. வருகிற ஆண்டுகளில் பஞ்சாயத்துகள் சிறப்பாகச் செயல்பட்டு மகாத்மா காந்தி நினைத்தது போல ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவுடன் செயல்படச் செய்வோம். மக்கள் யாவரும் அரசியல் சுதந்திரத்தின் முழுப்பலனைப் பெறச் செய்வோம்.

மக்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெற மகாத்மாவின் திட்டங்கள் இரண்டு. ஒன்று கதர், மற்றது மதுவிலக்கு. கதர் வழிப் பொருள் ஈட்ட வகை செய்தார். ஈட்டிய பொருளைப் பயன்படும்படி செலவு செய்ய மதுவிலக்குத் தேவை என்றார்.

நமது அரசமைப்புச் சட்டத்தில் அரசு பின்பற்ற வேண்டிய கொள்கைகள் என்ற பகுதியில் நாடு முழுவதும் மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்டக் காலத்தில் மது விலக்குப் பிரச்சாரத்தை விடுதலை முழக்கத்துடன் இணைத்து நம் தலைவர்கள் செய்தார்கள். மதுபானம் அருந்துவதில்லை என்று பொதுமக்களைச் சபதம் செய்ய வைத்தனர். சட்டம் இல்லாமலேயே கட்டுப்பாடாய்க் குடியை நிறுத்தத் தலைவர்கள் முயன்றனர். தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் தலைவர்கள் சென்று “இன்றிலிருந்து கள் குடிப்பதில்லை” என்று சபதம் செய்து கொள்ளுங்கள். உங்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்வதற்குக் காரணம் இந்தப் பாழும் குடிதான்” என்று சொன்னார்கள். இவை அன்று பத்திரிகைகளில் செய்திகளாக வந்தன.

அண்மைக்காலத்தில் மதுவுக்கு எதிராகப் பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்வதாகப் பல இடங்களில் இருந்து செய்திகள் வருகின்றன. சென்னையை அடுத்துச் சோழவரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களைப் பெண்களே பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர் (21.2.97 செய்தி). அதே தேதியில் மதுரை இந்திரா நகர்ப் பகுதியில் மதுக்கடை அமைப்பதைத் தடுக்க்க் கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதும் செய்தியாக வந்த்து. திருவள்ளுவர் அருகே வெள்ளியூரில் கள்ளச் சாராயத்தை ஒழிக்கப் பெண்கள் படையை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரே அமைத்ததாகச் செய்தியும் வந்துள்ளது (12.4.97).

பல இடங்களில் இருந்து வரும் செய்திகள் கள்ளச்சாராயம் பற்றியதாகும். ஒரு சில இடங்களில்தான் மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு வந்துள்ளது. கள்ளச்சாராயம் ஒழிந்தால் மது அருந்துவது குறையப் போவதில்லை. அனுமதி பெற்ற, சாராயக் கடைகளில் விற்பனை பெருகினாலும் வியப்பதற்கில்லை.

சாராயம் இருக்கும் வரை அது கள்ளச்சாராயம் ஆனாலும், அனுமதி பெற்ற சாராயம் ஆனாலும் குடிப்பவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை.

நாம் நம் நாட்டில் இன்று பார்க்கிறோம். எங்கெல்லாம் தொழிலாளிகள் கூடுகிறார்களோ அங்கெல்லாம் மதுக்கடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பேருந்துகளுக்கான பணிமனைகளைப் பாருங்கள். அங்குதான் கடைசியாகப் பேருந்தை விட்டு விட்டு நடத்துனரும் ஓட்டுநரும் அன்றைய ஊக்கத்தொகை, படி போன்ற பணம் பெற்றுச் செல்வார்கள். அங்கே வாசலுக்கு அருகில் அல்லது எதிரில் சாராயக்கடை இருக்கும். ஓட்டுநரும் நடத்துநரும் தாம் கஷ்டப்பட்டு உழைத்து ஈட்டிய பொருளைத் தன் குடும்பத்தாருக்கு அளிக்க விடாது அப்பணத்தை இக்கடைகள் பிடுங்கிக் கொண்டு அவர்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் கேடு விளைவிக்கும் மதுவை அவர்கள் மேல் ஏற்றி அனுப்புகிறது. இது அரசு அனுமதியுடன் நடப்பதுதான் மிகவும் வருந்த்ததக்கது. இதன் விளைவாக சுதந்திரம் பெற்று மக்களாட்சி அமைத்ததின் முழுப் பலனை நாம் அடைய இயலவில்லை என்பதை உணர வேண்டும்.

ஒரு சுதந்திர நாட்டில் மக்களாட்சி முழுமையாக வெற்றி பெற வேண்டுமாயின், அந்நாட்டு மக்கள் யாவரும் பொருளாதாரச் சுதந்திரம் பெற்று வாழ வேண்டும். பொருளாதாரச் சுதந்திரம் இல்லையேல் மக்களாட்சி பொருளற்றதாகும். ஏனெனில், ஏழைகளின் வாக்குகளைப் பணம் படைத்தவர்கள் விலைக்கு வாங்க முடியும். எல்லா ஏழைகளும் பணம் வேண்டாம் என்று சொல்லித் தம் கொள்கைப்படி வாக்களிப்பார்கள் என்று சொல்ல இயலாது. வறுமை வந்தால் அத்துடன் எல்லாத் துன்பங்களும் வரும் என்பார் வள்ளுவர் (குறள் 105). வறியவனின் பண்பும் புகழும் கெடும் (குறள் 1043). ஆகவே வறியவர் தற்சமயம் கிடைக்கும் பொருளுக்காகத் தமது வாக்கை அளிக்க வேண்டி வரும். மேலும், தகுதியில்லாதவரும், “நான் வெற்றி பெற்றால் இன்னின்ன சலுகைகளை உங்களுக்கு அளிப்பேன்” என்று ஆசைகாட்டி வெற்றி பெற முடியும். ஆகவே, வறியவர் வாழும் நாட்டில் உண்மையான மக்களாட்சி நிலவ இயலாது. இவ்வுண்மைகளை நோக்குமிடத்து, வரும் காலத்தில் மகாத்மா காந்தி சொல்லியபடி நாம் மது விலக்குத் திட்டத்தைச் செயல்படுத்தி மக்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் அளிப்போமாக.

கம்பன் அயோத்தி மாநகரைத் தன்னிறைவு பெற்ற ஓர் ஒப்பற்ற நாடாகச் சித்திரிக்கிறான். அந்நகரத்தில் கல்லாதவர் யாரும் இலர். எனவே, இவரைவிட அவர் கல்வியில் சிறந்தவர் என்று கூறும் நிலை அங்கு இல்லை. எல்லோரும் செல்வமுடையவராக வாழ்ந்தனர். வறியவர், செல்வந்தர் என எவரையும் பாகுபடுத்த முடியவில்லை.

கல்லாது நிற்பார் பிற்ர் இன்மையின், கல்வி முற்ற
வல்லாரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இல்லை;
எல்லாரும் எல்லாப் பெரும் செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ
(பாலகாண்டம், நகரப்படலம், பாடல் 74)

கல்வியிலும் பொருளாதாரத்திலும் ஏற்றத் தாழ்வு இல்லை என்பதால் சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வு இல்லை என்பது பெறப்படும். சமுதாயச் சுதந்திரம் பெற எல்லோருக்கும் கல்வி வாய்ப்பை அளிப்போம். கல்விக்காகப் பொருள் செலவு செய்யக் கூடியவர் செய்யட்டும். செய்ய இயலாதவருக்கு அரசு பொருளுதவி செய்யட்டும். இல்லையேல் கடனாவது வழங்கட்டும். இட ஒதுக்கீடு கொள்கையை உடும்புபோல் பிடித்துக் கொண்டிராது எல்லோருக்கும் கல்வி வாய்ப்பு அளிக்கும் வகையில் கல்வி நிறுவனங்களை வளர்ப்போம். வறியவர்க்குப் பொருள் உதவியாவது, கடனாவது வழங்கி ஊக்குவித்துக் கல்வி அறிவை ஈந்து எல்லா மக்களையும் மேம்படுத்துவோம். கல்வியில் சுதந்திரம் அளிப்போம். கல்விச் சுதந்திரம் வழியாகச் சமுதாய ஏற்றத் தாழ்வை ஒழித்து எல்லோருக்கும் சமுதாயச் சுதந்திரம் அளிப்போம்.

யங் இந்தியாவில் 5.7.1928இல் மகாத்மா காந்தி எழுதினார். “அயல்நாட்டாரின் ஆட்சியால் வந்த தீவினைகளில், அயல்நாட்டு மொழியைப் பயிற்சி மொழியாக நம் இளைஞர்கள் மேல் திணித்திருப்பது நம்மையே அழிக்கவல்லது என்பதும், அதுவே மிகப்பெரிய கொடுமை ஆகும் என்றும், வருங்காலத்தில் வரலாறு சொல்லும். அயல்நாட்டுப் பயிற்சி மொழி நமது நாட்டு ஆற்றலைப் பலவீனப்படுத்தி விட்டது; நம் மாணவர்களின் ஆயுளைக் குறைத்து விட்டது; இது நம் மாணவர்களைப் பொதுமக்களிடம் இருந்து பிரித்து விட்டது; கல்விக்கான செலவை அவசியமின்றி அதிகமாக்கி விட்டது. இந்த முறையைத் தொடர்ந்து, நாம் பிடிவாதமாகக் கடைபிடித்து வந்தால் நமது நாட்டின் உயிர் நாடியையே அது அழித்துவிடும்.” அவர் மேலும் சொன்னார்: “பல்கலைக்கழகங்கள் தற்சார்புடன் செயல்பட வேண்டும். தனது பணிக்கு அவசியமானவர்களை மட்டுமே அரசு கல்வி கற்கச் செய்ய வேண்டும். மற்ற துறைக்கெல்லாம், தனியாரை ஊக்கப்படுத்தி அவர்களது முயற்சியால் கல்வி நிறுவனங்கள் செயல்படச் செய்ய வேண்டும். என்ன நேர்ந்தாலும் பயிற்சி மொழி உடனடியாக மாற்றப்பட வேண்டும். மாநில மொழிகளுக்கு அவற்றின் உரிய இடம் அளிக்கப்பட வேண்டும். இன்று தினம் தினம் குவிந்து வரும் பழிக்கத்தக்க விரயத்தைவிட, உயர் கல்வியில் தற்காலிகமான குழப்பத்தை நான் விரும்புவேன். மாநில மொழிகளின் மதிப்பு நிலையும், பொது மதிப்பும், உயர்வதற்காக நீதிமன்றங்களின் மொழி மாநில மொழியாக இருக்க வேண்டும்” (அரிசன் 9.7.1938).

சுதந்திரம் எனது பிறப்புரிமை என்றோம் சுதந்திரப் போராட்டக் காலத்தில். அரசியல் சுதந்திரம் பெற்று, மொழிவழி மாநிலங்களைப் பிரித்தபின், மாநிலத்தில் பெருவாரியானவர் பேசும் மொழியே ஆட்சி மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும், பயிற்சி மொழியாகவும் இருப்பது எனது பிறப்புரிமை என்று முழங்குவோம்.

மக்களாட்சியில், மக்களால் தேர்ந்து எடுக்கப்படுபவர்கள் ஆட்சியில் அமருகிறார்கள். அன்று வள்ளுவர் அரசனுக்கு என்ன தகுதிகள், பண்புகள் சொன்னாரோ, அவை இன்று ஆட்சி செய்பவருக்கும் பொருந்தும். அத்தகுதிகளும், பண்புகளும் பின்வருவன: முதன்மையாக இருத்தல், அறிவு பொருந்தி இருத்தல், துணிவுடன் கூடிய வெறுப்பற்றதன்மை, அவாவின்மையின் வழி அமைந்த ஈகைக் குணம், அறவழி நிற்கும் இயல்பு, எளியவர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் காக்கும் திறன் (குறட்பாக்கள் 381-390). மகாத்மா காந்தி மக்களாட்சியில் நம்பிக்கை உடையவரைப் பற்றி எழுதியவை இங்கு நோக்கத்தக்கவை. “இயல்பாகவே மக்களாட்சியில் நம்பிக்கையுடைவர் ஒழுங்கை நிலைநாட்டுபவராகவும் வாழ்வார். அரசு மற்றும் ஆண்டவன் விதிகளைக் கடைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்க்கு மக்களாட்சியில் நம்பிக்கையும் இயல்பாகவே வரும். மக்களாட்சி நல்ல முறையில் செயல்பட உழைக்க நினைப்பவர்கள் முதலில் தங்களுக்கு இயற்கையாகவே மக்களாட்சியில் நம்பிக்கை இருக்கிறதா என்று தங்களைத் தாங்களே சோதித்துக் கொள்ள வேண்டும். மேலும் மக்களாட்சியை நம்புகிறவர் தன்னலம் கருதாதவராக இருக்கவேண்டும். தன்னைப் பற்றியோ தன் கட்சியைப் பற்றியோ சிந்திக்காது நாட்டின் மக்களாட்சி வெற்றி பெறுவதைப் பற்றி மட்டுமே சிந்திப்பவராக அவர் இருக்க வேண்டும் (அரிசன், 27.5.1939).

ஆனால் இன்று நடப்பது என்ன? பிரபலமாக இருப்பவரைத் தலைமைப் பண்பு உடையவர் என்று மக்கள் தவறாகக் கருதுகிறார்கள்.

மிகுந்த பொருளைச் சேர்த்தவன் ஆடம்பரமாக வாழலாம்; நடிப்பு, இசை, பேச்சு ஆற்றல் இவ்வாறான திறமைகள் பெற்றபின் அவ்வகையான போட்டிகளில் சிறந்து விளங்கலாம். மந்திரம், சுதந்திரம், வேகமாக வண்டியைச் செலுத்துவது, திருட்டு, கொள்ளை, கொலை போன்ற சாகசங்கள் புரிபவன் இவற்றில் மற்றவர்களை மிஞ்சலாம். இவற்றுள் எதுவும் ஒருவனை மக்கள் தலைவன் ஆக்காது. தலைமைப் பதவியை ஏற்கத் தக்கவன் நல்லனவற்றைத் துணிவுடன் முன்னின்று செயல்படுத்துவான்.

மக்களுக்குப் புரியாத மொழியிலோ, அல்லது மக்களுக்கு விளங்காத சொற்களைச் சேர்த்து மடை திறந்தாற்போல் பேசுபவன் அறிவாளி என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அறிவு என்பது நன்றின்பால் உய்ப்பது (குறள் 422). மெய்ப்பொருள் காண்பது (குறள் 423), பிறர் சொல்லில் நுண் பொருள் காண்பது (குறள் 424), உயர்ந்தோருடன் சேருவது (குறள் 425), இனி வருவதை அறிவது (குறட்பாக்கள் 427, 429), அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவது, அதாவது பாவம் செய்ய, தவறுகள் செய்ய, குற்றம் புரிய அஞ்சுவது இவையே அறிவு ஆகும்.

யாருக்கும் எதையும் கொடுக்காது, விருப்பு, வெறுப்பின்றி இருப்பவரைத் தலைவன் என்று கொள்ள முடியாது. விருப்பு வெறுப்பின்றி எல்லோருக்கும் நியாயம் வழங்க வேண்டும். அவா இல்லாதவனாகவும், ஈகைக் குணம் உடையவனாகவும் இருப்பவனே தலைவன். விருப்பு, வெறுப்பின்றி எல்லா இடத்திலும், கொள்ளை அடிப்பவன் கொள்ளைக்காரர்களுக்குத் தலைவன் ஆகலாம். மக்கள் தலைவன் ஆகமாட்டான்.

சட்டப்படியும், விதிப்படியும் தலைவன் நடக்க வேண்டும். சென்னையில் 50 கி.மீ. வேகத்திற்கு மேல் வண்டிகள் செல்லக்கூடாது என்றால், தலைவனும் அந்த வேகத்திற்கு மேல் செல்லக் கூடாது. ஓர் இடத்திற்குச் செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்றறிந்து அவ்வளவு நேரம் முன்னால் அவன் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். செயலிலே வேகம் வேண்டும். வண்டியில் செல்லும் நேரத்தைக் குறைக்க நினையாது, அதிக நேரம் உழைப்பதன் மூலம் அதிகப்படியான காரியங்கள் ஆற்ற வேண்டும். அதாவது மக்களை அறவழி நிறுத்துவதுடன், தானும் அறவழி நிற்க வேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்களையும், தாழ்ந்தவர்களையும் காப்பாற்றுவது, அதாவது குடியோம்பல் என்பது அவர்களுக்குச் சில சலுகைகள் அளிப்பது மட்டும்; அவர்களுக்குக் கொஞ்சம் பொருள் தருவதும் அல்ல; கொஞ்சம் சோற்றைத் தருவதும் அல்ல; அவர்களை வாழ்க்கையில் முன்னேற உதவுதல்.

மக்கள் ஏதோ சில காரணங்களால் பிரபலமானவர்களையோ, சட்டங்களை மீறிச் சாகசம் புரிபவர்களையோ, பகட்டாக வாழ்பவர்களையோ நம்பித் தலைவர்களாக ஏற்கலாகாது. உண்மையான தலைமைப் பண்புகள் பொருந்திய முதன்மையானவர், அறிவுடையவர், துணிவுடையவர், விருப்பு, வெறுப்பு அற்றவர். அவாவில்லாதவர், ஈகைக் குணத்தவர், அறவழி நிற்பவர், தாழ்ந்த குடிகளை ஓம்புபவர் எவரோ அவரை மக்கள் தேர்ந்து எடுக்கவேண்டும். இவ்வாறான தலைவர்களைத் தேர்ந்து எடுக்கும் அறிவைப் புகட்டுவது அரசின் கடமை. இது ஒரு சுழலாகத் தோன்றினாலும், நாட்டில் உள்ள சான்றோர் அரசு மக்களுக்கு நல்லறிவைப் புகட்டச் சொல்வார்களாக.

இன்று நமது அரசமைப்புச் சட்டப்படி தனிமனிதனுக்குத் தீங்கு நேர்ந்தால் அவன் நீதிமன்றத்திற்குச் சென்று அத்தீங்குக்குப் பரிகாரம் தேடலாம். அந்த உரிமை அவனுக்கு உண்டு. நம் பண்டைய நூல்களைப் பார்த்தால் தீங்கு நேராது காப்பது அரசின் கடமை என்று சொல்லப்படுகிறது.

மாநிலம் காவலன் ஆவான் மன்னுயிர் காக்கும் காலைத்
தான் அதனுக்கு இடையூறு தன்னால் தன்பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர் தம்மால்
ஆனபயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லனோ?
(பெரியபுராணம், திருநகரச் சிறப்பு, பாடல் 36)

அதாவது அரசு அறங்கள் யாவை என்றால், உலகத்தில் வாழும் உயிர்களைக் காத்தலும், அக்காவலுக்கு இடையூறாய்த் தன்னாலும், தன் பரிவாரத்தாலும், கள்வராலும், மற்ற உயிர்களாலும் வரும் அச்சங்களையும் போக்கி அறத்தைப் பிறழாமல் காப்பவனே காவலன் என்னும் பெயருக்குத் தக்கவன். இன்று மக்களின் உரிமையாக உள்ள இப்பொருளை அரசின் கடமையாக மாற்றி மக்கள் முழுச்சுதந்திரத்துடன் வாழ வழி செய்வோம்.

உண்மையான சுயாட்சி என்பது என்ன? மகாத்மா காந்தி, யங் இந்தியாவில் 29.1.1925இல் பின்வருமாறு எழுதினார்: “உண்மையான சுயாட்சி என்பது ஒரு சிலர் பதவியில் அமருவது அல்ல. அதிகாரத்தில் இருப்போர் தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் அதை எதிர்க்கும் திறனை எல்லா மக்களும் பெறுவதே. அதாவது சுயாட்சி என்பது அதிகாரவர்க்கத்தைக் கட்டுப்படுத்தவும், நெறிப்படுத்தவும் தேவையான அறிவைப் பொது மக்களுக்குக் கற்பிப்பதாகும்”. (யங் இந்தியா, 29.1.1925). மக்களாட்சி செம்மையாகச் செயல்பட எல்லா குழந்தைகளுக்கும் கல்வி கற்பிக்கும்போது மேலே சொல்ல அறிவையும் அவர்கள் பெற வழிவகை செய்ய வேண்டும். கட்சிகளும் தொண்டு நிறுவனங்களும், மக்களுக்கு அரசியல் அறிவை வளர ஆவன செய்ய வேண்டும்.

பிறிதொரு சமயம் மகாத்மா காந்தி பின்வருமாறு சொன்னார்: “சுயாட்சி என்பது அயல்நாட்டு அரசு அல்லது நம் நாட்டு அரசு என்று எந்த அரசாக இருந்தாலும் அதன் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலைப் பெறத் தொடர்ந்து பாடுபடுவது ஆகும். வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அரசின் கட்டுப்பாட்டை எதிர்நோக்கி மக்கள் வாழும் நிலை சுதந்திர நாட்டில் இருக்குமாயின் அது வருந்தத்தக்கது” (யங் இந்தியா, 6.8.1925). சுதந்திர நாட்டில் அரசின் அதிகாரம் குறைவாக இருக்க வேண்டும் என்பதை மகாத்மா வற்புறுத்தியுள்ளார். ஆனால் இன்று நம் மக்கள் எந்தப் பிரச்சினை ஆனாலும் அரசு தீர்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வழக்கமாகி விட்டது. நமது அரசியல் தலைவர்களும் அதை விரும்புவதாகத் தோன்றுகிறது. ஆனால் அரசின் தலையீடு என்பது அரசு அலுவலர் தலையீடாகவே முடியும். அதுவும் ஒரு சில அதிகாரிகளின் சபலங்களுக்கும் மயக்கத்திற்கும் பொதுமக்கள் ஆளாக வேண்டிவரும். ஆகவே தொழிலைச் செய்பவர்களும் அவர்களுக்குள்ளாகவே கட்டுப்பாடுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். தங்கள் தங்கள் தொழில் அறத்தைத் தாங்களாகவே வகுத்து நிலைநிறுத்த அரசு ஊக்குவிக்க வேண்டும். இக்கருத்தின்  உயர்வை மக்கள் அறியும்படி அரசியல் கட்சிகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை நடத்துபவர்களும் செய்வார்களாக.

முடிவுரை

அரசியலும் அரசும் நேற்று எவ்வாறு இருந்தன, இன்று எவ்வாறு உள்ளன நாளை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்த்து இக்கட்டுரை. நம்முடைய அரசியலிலும் அரசிலும் உள்ள குறைகளும் நிறைகளும் சொல்லப்பட்டன. அரசியல் சுதந்திரம் கிடைத்தாலும் அது முழுமையாக யாவர்க்கும் சென்று அடையவில்லை. பஞ்சாயத்து ஆட்சி செவ்வனே செயல்பட வேண்டும். செயல்பட்டால், மக்கள் யாவரும் அரசியல் சுதந்திரம் பெறுவர். அடுத்து யாவர்க்கும் கல்வி கற்க வசதி வேண்டும்.  நாட்டின் முன்னேற்றத்திற்குக் கல்வி வசதியின்மையும் அதனுடன் இணைந்த கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீட்டு முறையும் எதிரானவை. இந்நிலை மாறி எல்லோருக்கும் கல்வி கற்க வசதி வேண்டும். மக்கள் தம் மொழிவழிக் கல்வி கற்பது அவர்தம் பிறப்புரிமை. இவ்வுரிமை வழங்கப்பட்டால் கம்பன் பாடிய அயோத்தி போன்று யாவரும் கல்வி கற்று எல்லாச் செல்வமும் பெற்று வாழ்வர். பொருளாதாரச் சுதந்திரம், கல்விச் சுதந்திரம், மொழிச் சுதந்திரம் இவற்றின் வழிச் சமுதாயச் சுதந்திரத்தை யாவரும் பெறுவர். இவ்வாறு சுதந்திரத்தின் முழுப்பலனையும் பெறுவதற்கு அவசியமான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த தலைமைப் பண்புகள் நிறைந்த தலைவர்கள் நாட்டில் உருவாக வேண்டும். அவர்கள் முயற்சியால் எல்லாச் சுதந்திரமும் பெற்ற ஒரு சான்றாண்மை நிறைந்த நல்லநாடாக நம் நாடு மலர வேண்டும்.

  • பள்ளிகளில் எத்துணைப் பேர் ஆங்கிலவழிக் கற்கின்றனர் என்ற விபரம் கிடைக்கவில்லை. ஆனால் 1996-97 (கொள்கை விளக்கக் குறிப்பு) கல்வி மானியக் கோரிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் இருந்து உத்தேசமாகக் கணக்கிடப்பட்டது).

ச. முத்துக்குமரன்:

இருமுறை திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்து சிறப்பித்தவர். தமிழ் மீதும், தமிழர் மீதும் மிகுந்த பற்றுதல் உடையவர். இவர் எழுதிய நூல்கள் இவர்தம் தமிழ்ப் பற்றுதலுக்குச் சான்றாக விளங்குகின்றன. ‘நெஞ்சில் நிறுத்துங்கள்’’ என்ற இவருடைய நூல் தமிழ்நாடு அரசின் பரிசைப் பெற்றதாகும். ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் புகழ் பெற்ற நாளேடுகளில் தொடர்ந்து கட்டுரை எழுதி வருகிறார். தற்போது தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் செயலாளராகத் தொண்டாற்றி வருகிறார்.

You Might Also Like