இலக்கியம் (1997)
இலக்கியம்
க. பஞ்சாங்கம்,
விரிவுரையாளர்,
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி அரசு, புதுச்சேரி – 605 008.
கட்டுரை தொடும் தலைப்புகள்:
இலக்கியத்திற்கும் காலத்திற்குமுள்ள உறவுநிலை :- இயக்கங்கள், காலம் – கருத்து – இலக்கியம் – விளக்குதல்.
இந்திய விடுதலை இயக்கத்தின் கருத்தாக்கப் பின்னனி – விடுதலை இயக்கம் வெற்றி பெற்ற சூழலில் கொண்டாட்டமும் எதிர் பார்ப்பும் – ஏமாற்றமும் ஏக்கமும் – இலக்கியத்தில் பதிவாதல் – மதிப்பிடல்.
திராவிட இயக்கச் சிந்தனைகள் – தமிழ் மறுமலர்ச்சியின் போக்கு – இலக்கியப் பங்களிப்பு – புதிய மொழி – புதிய வடிவம் – புதிய சிந்தனை – புதிய மக்கள் – புதிய சிக்கல் – தமிழ் இலக்கிய உலகிற்குள் அறிமுகமாதல் – தனித்தமிழ் இயக்கமும் ஆக்க இலக்கியமும் – திராவிட இயக்கச் சிந்தனைகளின் பன்முகத் தன்மை – திராவிட இயக்க இதழ்கள் – சிற்றிதழ்களின் செயல்பாடு – மதிப்பிடல்.
பொதுவுடைமை இயக்கம் – புதிய கருத்தாக்கங்கள் – இலக்கியச் செயல்பாடு – உழைக்கும் மக்கள் முதன்மை பெறுதல் – இருப்பவர் இல்லாதவர் என்கிற வகுப்புப் பார்வை கூர்மை அடைதல் – புதிய இலக்கியக் கோட்பாடுகள் – மொழி பெயர்ப்பு இலக்கியங்களின் செல்வாக்கு – வாய்மொழி மரபின் சொல்லாடல் – இடதுசாரி இதழ்கள்.
திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்த சூழல் – இலக்கியத்தில் அதன் விளைவு – புதிய நக்சல்பாரி இயக்கமும் இலக்கியமும் – தென்மொழி வளர்த்த தனித்தமிழ் இலக்கியம் – வானம்பாடிகளும் தமிழ் இலக்கியமும் – அமைப்பியல் போன்ற புதிய ஐரோப்பிய சிந்தனைகளின் அறிமுகமும் தமிழ் இலக்கியமும் – நேர் கோட்டில்லா இலக்கியம் – ஓரத்து மாந்தர் இலக்கியம் – தலித் இலக்கியம் – பெண்ணியலார் எழுத்துக்கள் – கல்வியாளர் பங்களிப்பு – சுற்றுச் சூழல் விழிப்புணர்வு இலக்கியங்கள்.
எதிர்காலத் தமிழகம் – தமிழ் இலக்கியம் உலகமயமாதல் – புலம்பெயர்ந்த தமிழர் வாழ்நிலை புலனாதல் – இலக்கியமும் இனச் சிக்கலும் – மூன்றாம் உலக மக்களின் சிக்கல்கள் இலக்கியமாதல் – நுகர்வுப் பண்பாட்டை எதிர்கொள்ளும் இலக்கியச் சூழல் – தொலைதூர ஊடகங்களின் வளர்ச்சியினால் இலக்கியத்தின் போக்கிலும் பயன்பாட்டிலும் ஏற்படும் மாற்றங்கள் – தொலைக்காட்சி, கனிணிகளின் வரவினால் இலக்கியத்தில் ஏற்படும் விளைவுகள் – இயற்கைக்கும் மனிதனுக்குமான அணுகுமுறையில் தலைகீழ் மாற்றம்.
“மனிதன் இலக்கியம் செய்வதை நிறுத்த முடியாது”
ஏன் முடியாது?
“ஏனெனில் மனிதனால் அது செய்யப்படவில்லை”
பிறகு யாரால்?
“ மொழியால்…..”
இப்படிச் சொல்வதன் பொருள், ‘மொழி’ என்கிற விலங்குத்தனம் கொண்ட ஒலிக் குறியீடுகளுக்குள் மனிதன் சிக்குண்டு கிடக்கிறான்; எப்பொழுதும் அகத்திலும் புறத்திலும் சுற்றிக்கிடப்பவைகளைப் பற்றிப் புனைந்து கொண்டேயிருக்கும்படியான நிர்பந்தத்தில் மொழி இவனை நிறுத்தியிருக்கிறது. எனவே இலக்கியங்களும் மனிதர்களைப் போலவே புதிது புதிதாய்ப் பிறந்து கொண்டேயிருக்கின்றன. தமிழ் மொழியில் பிறந்துள்ள இந்தப் புதிய பிறவிகளின் தன்மையை ஆராய்வதற்கு இந்தக் கட்டுரையில் முயற்சி மேற்கொள்ளப் படுகிறது; உயிர்ப் பிறவிகளைப் போலவே வடிவிலும் முறையிலும் எண்ணிக்கையிலும் கணக்கிற்குள் அடங்காத ஒரு விதத்தில் இந்நூற்றாண்டுத் தமிழ் வாழ்விலும் தமிழ் இலக்கியம் பிறந்து குவிந்துள்ளது. பக்க எல்லை வரையறுக்கப்பட்ட நிலையில், பல்வேறுபட்ட இவ்விலக்கிய வகைகளுக்கிடையே தூக்கலாகத் தெரியும்பொது நிலைப்பட்ட போக்குகளையும் அவற்றின் தன்மைகளையும் மட்டும் விளக்குவதற்கு முயற்சி எடுக்கப்படுகிறது; எனவே பலருடைய பெயர்களும் விடுபட்டிருக்கலாம்.
- 1947 இல் இந்தியாவிற்கு விடுதலை வந்த போது ஆங்கிலக் கல்வி கற்றதால் ஏற்பட்ட புதிய மேதாவித்தனம், ஆங்கில ஆட்சி முறையால் வடிவமைக்கப்பட்ட நடுத்தர வகுப்பு என்கிற புதிய மக்கள் தொகுப்பு, அதனால் உருவான புதிய வாசகர் தொகைப் பெருக்கம், கூடவே செய்திகளைத் திரட்டி வெளியிட்டுக் காசாக்கக் கற்றுக்கொண்ட பத்திரிக்கைத் தொழில் முறை, அதை ஒட்டிப் புத்தகப் பதிப்புத் தொழில், தொழிற்சாலைகளின் பெருக்கத்தால் சமூக வாழ்வில் உழைப்புப் பெறும் இடம் என்ன என்பதைப் புரிந்து கொண்ட புதிய தொழிலாளர் கூட்டம், சாதி, மதம், பால் ஆகியன கடந்த பொதுக் கல்வி முறை, காந்தியம் என்கிற சிந்தனைப் புனைவு, இடம் பெயரத் தெரிந்து கொண்ட புதிய பொதுமக்கள் கூட்டம், தமிழ்க் காற்றில் கரைத்துவிடப்பட்ட விலிலிய வார்த்தைகள், கலைகள் அனைத்தையும் வாரி அணைத்து அமுக்கிக் கொள்ளும் புதிய திரைப்படக் கலை முதலியன பலவும் கூடவே வந்தன இந்தியா முழுவதும்; ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் இவற்றோடு திராவிடம், தமிழ் மறுமலர்ச்சி, இந்தி எதிர்ப்பு, சைவ மத எழுச்சி, படிவரிசையில் கீழே கிடந்த பல சாதிகளின் விழிப்புணர்வு ஆகியனவும் கூடவே பொங்கிப் பெருக்கெடுத்தன. இதற்கான அடிப்படைத் தளங்களை விடுதலைக்கு முன்பே இங்கே தோன்றியிருந்த நீதிக்கட்சியும் (1916), அதைத் தொடர்ந்து தோன்றிய தந்தை பெரியாரின் தன்மான இயக்கமும் (1925) மிகச் செறிவாகக் கட்டியிருந்தன; இத்தகைய ஒரு சமூகப் பின்னணி தான் விடுதலைக்குப் பிறகு தோன்றிய தமிழ் இலக்கியங்களை வடி வமைத்துள்ளன. எனவே இக்காலகட்டத்து இலக்கியங்களின் பெரும்போக்கான தன்மையைத் காந்தியம், பெரியாரியம், பொதுவுடைமையியம் என்ற தலைப்பின் கீழ் ஒவ்வொன்றாகக் காணலாம்.
விடுதலையை ஒட்டிப் பெரிதும் கொண்டாடப்பட்ட காந்தியத்திற்குள் இந்து – முஸ்லீம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, அகிம்சை, கிராமப் பஞ்சாயத்து, சத்தியம், தியாகம், தனிமனித ஒழுங்கு முதலிய கருத்துக்கள் உள்ளடக்கமாக இருந்தன. ஆனால் விடுதலையைத் தொடர்ந்து இந்து – முஸ்லீம் மதக்கலவரம் வட மாநிலங்களில் நிகழ்ந்தது போலத் தமிழகத்தில் நிகழவில்லை என்பதால், இது பற்றிய இலக்கிய ஆக்கங்களும் வடமாநில இலக்கியங்களில் இடம் பெற்ற அளவிற்குத் தமிழில் இல்லை என்றும் அறிய முடிகிறது. மேலும் காந்தியத்திற்குள்ளேயே மானுடச் சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு உண்டு என நம்பிய காந்திய இலக்கியவாதிகள்1. தங்கள் படைப்பாக்க முயற்சியில் மூச்சை அடக்கி மூழ்குவதில் கவனம் செலுத்துவதை விடத் தங்கள் காலத்தில் வேகமாக வளர்ச்சிப்பெற்ற இந்தி எதிர்ப்பு, பிரிவினை, பொதுவுடைமை, கடவுள் ஒழிப்பு, பிராமண எதிர்ப்பு ஆகிய எதிர்நிலைக் கருத்தாக்களுக்குப் பதில் சொல்லும் மனோபாவம் கொண்ட தங்கள் ‘எடுத்துரைப்புகளை’ நிகழ்த்தியுள்ளனர்2. எனவே, தமிழில் தோன்றிய ‘காந்திய’ இலக்கியங்கள், வெறுமனே விளம்பர எழுத்துக்களாக நிற்கின்றனவே ஒழிய, ‘இலக்கியப் படைப்பு’ எனச் சொல்லத்தக்க அளவிற்கு வார்க்கப்படவில்லை.
காந்திய எழுத்தாளர்களிடம் மற்றொரு போக்கும் பெரிய அளவில் இடம் பெற்றுள்ளது. விடுதலை இந்தியாவில் காந்தியம் கற்பித்து வளர்த்த ‘புனிதக் கருத்தாக்கங்கள்’ பின் தள்ளப்பட்டு, ஊழலும், ஏமாற்றும், பொய்யும் புரட்டும், அரசியல் மோசடியும், அறியாமையும், வறுமையும் பல்கிப் பெருகுவதைக்கண்டு மனம் கொதித்துப் புலம்புகின்ற (அ) சாடுகின்ற எழுத்துக்கள்தான் வெளிப்பட்டுள்ளன. என்ன இருந்தாலும் ‘காந்தியம்’ ஆளும் கட்சியின் அடையாளமாக நிறுவனமாகிவிட்ட சூழலில், நிறுவனங் களுக்கே உரிய பலவீனங்களை – முரண்பாடுகளை – சுமந்துதான் தீரவேண்டும் என்பதை மனித வரலாற்றின் முன் வைத்துப் புரிந்து கொள்ளுகிற நிதானமும் தேடலும் இப்படைப்பாளிகளுக்கு இருந்திருக்குமானால், புலம்பாமல் இவற்றை மனித வாழ்வின் ஒட்டுமொத்தமான சிக்கலாகக் கண்டு உன்னதமாகப் படைப்புக்களை அள்ளித் தந்திருக்க முடியும்; இந்த இயலாமை காரணமாகவே நல்லவன்-கெட்டவன்; ஒரு சாதிவெரியன் – சம்பு சாஸ்திரி (கல்கியின் தியாகபூமி) போன்ற சாதி கடந்த ஒருவர் – என்கிற ஒரு சாதாரண சூத்திரத்திற்குள்ளே தான் தங்கள் எழுத்துக்களை நகர்த்தி உள்ளார்கள். புதிய கருத்தாக்கங்கள், புதிய வாழ்க்கை முறைகள் ஒரு பழம்பெரும் சமூகத்திற்குள் நுழையும்போது, அவற்றிற்கேற்பத் தயாராவதற்குள் ஏற்படுகின்ற தனிமனித அவஸ்தைகளையும், கலகக் குரல்களையும், சமூகத்தில் உறையும் சோகங்களையும் அவற்றிற்கே உரிய கலகக் குரல்களையும், சமூகத்தில் உறையும் சோகங்களையும் அவற்றிற்கே உரிய பரிமாணங்களோடு முடிச்சுக்களோடும் படைத்துவிடுகின்ற படைப்பு மேதைமை நம் எழுத்தாளர்களிடம் வசப்படவில்லை; காரணம் இவர்களில் பெரும்பாலோர் வாழ்க்கையின் கொடூரத்தை அதற்கே உரிய பண்முகத்தோடு பார்க்க முடியாத உயர்சாதி மனப்பான்மைக்குள் புதையுண்டு போனவர்கள்; கூடவே பத்திரிக்கை வாசகர்கள் என்ற கடலை நோக்கி வேகமாக வளைந்து நெளிந்து ஓடியவர்கள். எனவேதான் இந்தியாவில் தோன்றிய காந்திய இலக்கியங்களைப் பற்றி மதிப்பிடும் பிரபாகர் மச்வே இவ்வாறு கூறுகிறார் :
“காந்தியக் கொள்கைகளை முழுமையாக
வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக ஒரு
நாவல்கூட இன்னும் வெளிவரவில்லை3”
இவ்வாறு காந்தியச் சிந்தனைகளை இலக்கியத்தில் ஒரு விளம்பரமாகப் பதிவு செய்த இவர்களின் இத்தகைய எழுத்துக்களால், இலக்கியத்தை வெறும் கருத்துக் குவியலாகக் கண்டு வடிவம் பற்றிய பிரக்ஞை அறவேயின்றி ஒரே கருத்தைத் திரும்பத் திரும்ப எழுதித்தள்ளி விடுகிற அவலம் இன்றுவரைத் தொடர்கிறது எனலாம்.
சமூக விடுதலை இல்லாமல் இந்த அரசியல் விடுதலையால் சாதிய இந்தியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தப் பயனும் பெரிதாகக் கிடைந்துவிடப் போவதில்லை என்ற தீர்க்கமான முடிவோடு விடுதலையையே எதிர்த்த பெரியாரின் திராவிடக் கழகத்தில் இருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் சி.என். அண்ணாதுரை தலைமையில் உருக்கொண்டது (1949). ஏற்கனவே காங்கிரசுக் கட்சியில் இருந்து பிரிந்து ம.பொ. சிவஞானம் “தமிழரசுக் கட்சியைத்” (1946) தொடங்கியிருந்தார்; மேலும் மறை மலையடிகள் தொடங்கி வைத்த தனித்தமிழ் இயக்கமும் வீரியத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்தது; அன்றியும், தினத்தந்தி ஆசிரியர் ஆதித்தனின் “நாம் தமிழர் கட்சியும்” தோன்றியது. இத்தகைய சமூகச் சூழலில் தமிழ், தமிழினம், தமிழ்ப்பண்பாடு ஆகிய குரல்கள் இலக்கிய ஆக்கத்திலும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின; பாரதிதாசனார் “தமிழ் தான்” அனைத்திற்கும் தீர்வாகும் என்ற கருத்தாக்கத்தை ஒரு தொன்மம் போலக் கட்டினார்; ஐம்பதுகளில் மொழிவாரி மாநிலம் பிரிந்தபோது தமிழ்நாட்டின் எல்லைப் போராட்டங்களை முனைப்புடன் ம.பொ. சிவஞானம், நேசமணி முதலியோர் நடத்தியதாலும் தமிழின உணர்வு வேகமாக வடிவம் பெற்றது. விடுதலைக்கு முன்பே நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், தொடர்ந்து நடந்த இந்த எல்லைப் போராட்டம், கோயில்களில் ஓதப்படும் வடமொழிக்கு எதிராக நடந்த போராட்டம் முதலியன வெல்லாம் “இலக்கியங்களாக” ஏன் படைக்கப்படவில்லை; புனைகதைகளில் ஏன் புனையப்படவில்லை என்று எண்ணிப் பார்த்தால், இலக்கிய உலகில் தமிழினத்திற்கு எதிரான ஆதிக்க சக்திகள் எந்த அளவிற்கு நச்சு வளையங்களாகச் செயல்பட்டுள்ளன என்பதை இன்று கணிக்க இயலுகிறது.
பெரியாரியம் என்று சொல்லத்தக்க பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் ஒழிப்பு முதலிய சமூகச் சீர்த்திருத்தக் கருத்துக்கள் கட்சி சார்ந்த இலக்கியமாகப் பதிவாகியுள்ளன. விடுதலை இந்தியாவில் காந்தியம் ஆளும் அதிகார அமைப்புகளுக்கான ஒரு பாதுகாப்பு வளையமாக மாறிவிட்ட சூழலில், இச்சமூகச் சீர்திருத்த கருத்தாக்கங்களைப் புதிய சொல் நயத்தோடு பேசியும் எழுதியும் புதிய இளைஞர்களுக்குள்ளே புதிய மனைவியலை வடிவமைக்க இக்கால கட்டத்து இலக்கியங்கள் பெரிதும் பயன்பட்டுள்ளன. நிறுவன மயமாகிவிட்ட கருத்தாக்கங்களுக்கு எதிரான கருத்தாக்கங்களை மக்கள் நடுவில் விதைக்கிற கடுமையான பணி என்பதால் இச்சமூகச் சீர்திருத்தக் கருத்துக்கள் பெரிதும் கவிஞர்களால் உள்வாங்கப்பட்டுப் பலவாறு எழுதப் பட்டுள்ளன. பாரதிதாசன், சுரதா, வாணிதாசன், முடியரசன், கண்ணதாசன், சாலை இளந்திரையன், வேழவேந்தன், பொன்னி வளவன், புலவர் குழந்தை என்று ஒரு பெரிய பட்டியலே போடவேண்டிய அளவிற்குக் கவிஞர்கள் பெருகியுள்ளனர்4. மேலும் தற்கால ஊடகங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப இக்கால கட்டங்களில் வானொலிக் கவிதை, கவியரங்கக் கவிதை, நாட்டுப்புறக் கவிதை, திரைப்படக் கவிதை, புதுக்கவிதை எனப் பலவாறு விரிந்துள்ள தன்மையையும் பார்க்க முடிகிறது; இக்கால கட்டத்தில்தான் கவிதை உரைநடையின் செல்வாக்கிற்கு உள்ளாகி எளிமையை நோக்கி வேகமாகப் பாய்ந்தது என்பதைக் குறித்துக்கொள்ள வேண்டும். ஆனால் “உயிரற்ற வெறும் செய்யுட் குப்பைகள் இக்காலத்தே பெருகிவிட்டதைச்5” சுட்டத்தான் வேண்டும். மேலும் நடைமுறை வாழ்க்கையை மறந்துவிட்டு; தாங்கள் கொண்ட தமிழின மேம்பாட்டு உணர்வினால் உந்தப்பட்டுப் பழம்பெரும் தமிழ் இலக்கியங்களைத் தங்கள் மொழியில் படி எடுக்கிறவர்களாகத்தான் பெரும்பாலோர் இயங்கியுள்ளனர்: இக் குற்றச்சாட்டில் இருந்து பாரதிதாசனாரும் தப்பிவிட முடியாது என்பது தான் உண்மையான பார்வையாக இருக்கமுடியும். சீர்திருத்தக் கருத்துக்கள் தமிழின உணர்வு ஆகியன சமூகத்திற்குள் நுழையும் போது ஏற்படும் மனிதவாழ்க்கைச் சலனங்கள் அவற்றின் உயிரோட்டத்தோடு எழுத்தில் வடிப்பதற்கான முயற்சி எடுக்காமல், அக்கருத்துக்களை மேடையின் கீழே அமர்ந் திருக்கும் பார்வையாளரை நோக்கி மேடைப் பேச்சுப் பேசுவது6 பேலவே இவர்களின் கவிதையாக்கங்கள் அமைந்துள்ளன; இதன் விளைவு என்ன என்றால், திராவிட இயக்கத்திற்கான இலக்கியக் கொள்கைகளைப் பற்றி எண்ணிப்பார்க்க இடமில்லாத போனதுதான்.
புனைகதை இலக்கியத்திலும் இச்சமூகச் சீர்திருத்தக் கருத்துக்கள் செயல்பட்டுள்ளன; குறிப்பாக அண்ணாதுரை7, மு. வரதராசனார் ஆகியோர் எழுத்துக்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கனவாகும். தி.மு.க. இயக்கம் வேகமாக வளர்ச்சி அடைந்த சூழலில் நாடக இலக்கியங்களும் இக்கால கட்டத்தில் பெருவாரியாக எழுதப்பட்டுள்ளன, என்கிற செய்தி கவனத்தில் கொள்ளத்தக்க ஒன்றாகும். இந்நாடகங்கள் பலவும் பழம்பெரும் இலக்கியச் செய்திகளையும்8 வரலாற்றுச் செய்திகளையும்9 அடிப்படையாகக் கொண்டவையாகும். நிகழ்காலச் சமூக நடகங்களுக்கு எழுத்தில் ஒரு பெருமையைத் தேடிதந்தவர் அண்ணாதுரை10 எனலாம். இவ்வாறு அடிப்படையில் பெரியாரியத்தை மையமாக்கக் கொண்டு பல இலக்கியங்கள் தமிழில் வந்து குவிந்தன என்றாலும், “பிரச்சார இலக்கியங்கள் இவைகள்” என்று சொல்லத் தக்கனவாகவே அமைந்துள்ளன. ஆனால் இவ்வியக்க இலக்கியங்களால் ஏற்பட்ட ஒரு நல்ல மாற்றம் ஒன்றைச் சுட்டலாம். அதாவது ‘இலக்கியம்’ உயர்சாதிக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடத் தொடங்கியது; கலை, இலக்கியம், அழகியல் சுவை ஆகியனவெல்லாம் உயர்சாதிக்காரர்களுக்கும் உடைமையாளர் களுக்குமானவை என்கிற மாயை உடைபட்டது; ஆதிக்க சக்திகளின் போலி வாழ்க்கை, இரட்டை வேடம் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்தன. இவ்வாறு பெரியாரியத்தால் இலக்கியம் பெருவாரி மக்களை நோக்கித் திரும்பியது என்கிற வரலாற்று நிகழ்வு இன்றியமையாத ஒன்றாகும்.
விடுதலை இந்தியாவில் சமூகத்தை இயக்கிய ஒரு பெரும் சக்தியாக இயங்கிய இயக்கம் பொதுவுடைமை இயக்கமாகும், விடுதலை இந்தியாவில் தலைமை ஏற்ற காங்கிரசு ஆட்சியையே அப்புறப் படுத்திவிட்டுப் பொதுவுடமை இயக்கம் பாட்டாளிகளின் ஆட்சியை அமைக்கும் என்று பலர் நினைக்கும் அளவிற்கு மாபெரும் இயக்கமாக வளர்ச்சி அடைந்தது. 1924லேயே இந்தியாவில் முறையான ஓர் அமைப்பாக இவ்வியக்கம் திரண்டது; இங்குள்ள சாதியக் கட்டுமானத்திற்கு ஏற்ப, இவ்வியக்கத்தின் தலைமையும் உயர்சாதிக் காரர்களின் கைக்குத்தான் சென்றது; இவ்வாறு சென்றது ஒரு வகையில் ஒரத்து மக்களுக்கான இத்தத்துவம், அதன் உண்மையான பொருளோடும் வீச்சோடும் இந்தியச் சமூகத்தில் செயல்படத் தடையாக அமைந்தது என்றாலும், மற்றொரு வகையில் மிக வேகமாகச் சமூகத்தில் ஓர் அமைப்பாகத் திரளுவதற்குப் பெரும் வாய்ப்பாக அமைந்தது எனலாம். இல்லாதவர்களுக்கான இத்தத்துவம், எப்பொழுதும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே சார்பு கொள்ளுகிற உளவியல் கூறுடைய இலக்கியவாதிகளைப் பெரிதும் ஈர்த்தது; எனவே இவ்வியத்தைச் சார்ந்த இலக்கியவாதிகள் மட்டுமல்ல பெரியாரியம், காந்தியம் ஆகிய கருத்தாக்கங்களை மையமாகக் கொண்டியங்கிய இலக்கியவாதிகளும் கூடப் பொதுவுடமைக் கருத்துக்களுக்கு இதயத்தைத் தந்தனர். எனவே, விடுதலைக்குப்பிறகு தோன்றிய எல்லா வகையான இலக் கியங்களிலும் இப்பொதுவுடைமைக் கருத்தாக்கங்களைக் காணலாம். மேலும் விடுதலை இந்தியா ‘சோவியத் ரசியா’ வோடு கொண்டிருந்த நட்புறவு காரணமாகவும், இந்திய முதல் தலைமை அமைச்சர் நேரு, தன்னை ஒரு “சோசலிஸ்டாகப்” பேச்சளவிலாவது வெளிப்படுத்திக் கொண்டதாலும், மாஸ்கோ பதிப்பகம் மிகக்குறைந்த விலையில் இரசியாவில் விளைந்த “பொதுவுடைமை” இலக்கியங்களை, தத்துவங்களை, வரலாறுகளை, இலக்கியக் கோட்பாடுகளைத் தமிழில் மொழிபெயர்த்துப் பரப்பியதாலும், தமிழ் இலக்கியம் இதுவரைக் காணாத புதிது புதிதான பல பகுதிகள் வெளிச்சத்திற்கு வந்தன. தமிழ் எழுத்தாளர்களின் புனை கதைகளில் தமிழ் மண்ணின் மணமும் சுவையும் கூடி வந்தன. பெருவாரியான உழைக்கும் மக்களின் சிக்கல்களும் சிரழிவுகளும் துக்கங்களும் போராட்டங்களும் இலக்கியப் பொருளாயின11. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கம்பதாசன், தமிழ் ஒளி, கே.சி.எஸ். அருணாசலம், ஜீவா முதலியோர் கவிதை இலக்கியத்தில் பாட்டாளிகள் படும் துயரைப் படம் பிடித்தனர். ஆனாலும் பொதுவுடைமைக் கட்சியும் பாராளுமன்றப் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட பிறகு, பல கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்து தேர்தலில் நின்று பழகிய பிறகு, நிறுவனமாகி உட்கட்சி ஜனநாயகம் சிதைந்த சூழலில், தமிழ் மண்ணின் முதன்மையான சிக்கலாக விளங்கிய தமிழ், தமிழ்த்தேசியம் ஆகியவற்றைப் பற்றி அக்கறை கொள்ளாமல் வர்க்கப் பார்வை என ஒற்றை வாதத்தையே அனைத்திற்கும் முன்வைத்து இயங்கிய நிலையில் இடதுசாரி இயக்கத்தாலும் இலக்கியத்தில் “பெரிய படைப்புகளைக்” கொடுக்க முடியாது போயிற்று என்பதுதான் வரலாறாக இருக்கிறது. வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளையும் சமூக அறிவியல் ஆய்வு முறைப்படி அலசி ஆராய்ந்து செயல் களத்தில் இறங்கும் குணமுடைய இடது சாரிகளிடமும், கட்சி சார்ந்த எழுத்துக்களையும், இலக்கியத்தையும் தனித்தனியே அடையாளம் கண்டு வளர்த்தெடுக்கும் கலை மேதைமை இல்லாமல் போனது, தமிழ் இலக்கியத்திற்கு ஏற்பட்ட பெரிய இழப்பு என்றே சொல்ல வேண்டும். “யதார்த்த வாதம்” என்ற பேரில் கட்சிக்கும் தேவையான எழுத்துக்களை உற்பத்தி செய்து கொடுத்த எழுத்தாளர்களே இங்கேயும் பெருக்கெடுத்தனர்; இலக்கியம் சமூகத்தோடு பின்னிப் பிணைந்து கிடைக்கிற அதே நேரத்தில் தனக்கான தனி அடையாளத்தையும் இயங்கு சக்தியையும் கொண்டிலங்குவது என்பதை அறவே புறக்கணித்தனர். விளைவு, வெறும் முழக்கங்களே இலக்கியங்கள் ஆயின. ஆனாலும் இன்றுவரை இடதுசாரி எழுத்துக்கள் தான் ஓரளவு சமூக அக்கறையோடு, கலை இலக்கியப் பிரக்ஞையோடு செயல்படுவனவாக இருக் கின்றன; மேலே வளர்த்துச் செல்லத்தான் உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் சூழல் சரியாக அமையவில்லை.
விடுதலைக்குப் பிறகு பெரும்பாலும் அரசியல், சமூக இயக்கங்களின் பின்னணியிலேயே பலவிதமான இலக்கி யங்கள் பலவாறு உருவாகிக் கொண்டிருந்த சூழலில், பெரியாரியத்தின் பார்ப்பனர் களுக்கு எதிரான சாதி அரசியல் முழு வீச்சோடு இயங்கிக் கொண்டிருந்த சூழலில் உயர்சாதி அறிவு “ஜீவி”கள் சிலர், இலக்கிய அழகியலை முதன்மைப்படுத்தித் “தூய இலக்கியம்” என்ற முழக்கத்தை முன் வைத்துத் தங்கள் சமூகச் செயல்பாட்டைத் தேங்கவிடாமல் காப்பாற்றிக் கொண்டனர். இலக்கியத்தை இயக்களின் வாயாகப் பயன்படுத்துவதைக் கண்டு முகம் சுழித்தனர். பேரூணர்ச்சி, உன்னதம், தரிசனம் அழகியல் மேன்மை ஆகிய “புனித”ச் சொற்களால் இலக்கியத்தை அனைத்திலிருந்தும் மேலான ஒன்றாகக் கொண்டனர்; தனி உயிரியாக உயர்த்தினர்; சார்பற்றது என்றனர். “எதையும் எழுதுங்கள், ஆனால் இலக்கியமாக எழுதுங்கள்” என்றனர், 1959 முதல் ஏறத்தாழ பத்தாண்டுகள் வெளிவந்த சி.சு. செல்லாப்பாவின் ‘எழுத்துப்’ பத்திரிக்கை, கா.நா.சு-வின் இலக்கிய வட்டம் முதலிய சிற்றிதற்கள் இத்தகைய போக்கிற்கு ஊக்கம் தந்தன. மரபுக்கவிதைகள், இயக்கம் சார்ந்த எழுத்தாளர்களுக்கு வாய்ப்பாகப் போய் விட்வே, இவர்கள் புதுக்கவிதையைக் தங்களுக்கான வடிவமாகச் சிக்கெனப் பிடித்துக்கொண்டனர். இவ்வெழுத் தாளர்களின் போக்கை இடதுசாரிகளின் பார்வையில் நா. வானமாமலை கீழ்க்கண்டவாறு மதிப்பிடுகிறார்.
“இவர்கள் யாவரும் முதலாளித்துவ வளர்ச்சிக் காலத்தில் தனிமனித சுதந்திரம் என்று முழங்கியவர்கள்…. உலக ஆதிக்கம் பெற்ற ஏகபோகங்களின் அடிமைகளாக வாழ இவர்களது தனி மனித சுதந்ததிர உணர்வுவ இடம் தரவில்லை. அதே சமயம் ஏகபோகங்களை எதிர்த்துப் போராடும் தொழிலாளி வர்க்கத் தையும் அதனோடு சேர்ந்து நிற்கும் மக்களையும் கண்டனர். இம்மனிதக் கடலில் ஒரு துளியாக இருக்க அவர்களது தனிமனித உணர்வு இடந்தரவில்லை. இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்தார்கள். இத்தவிப்பில் ஓலமிட்டார்கள்12”.
இக்காலப் புதுக்கவிதையில் பெரும் பாலும் வெறுமை, மனமுறிவு, விரக்தி, நம்பிக்கை, வறட்சி, சாவு, இணைவிழைச்சு, தனிமனிதம் முதலிய கூறுகளே இடம் பெற்றன எனக்கூறும் வல்லிக்கண்ணன், இவற்றிற்குக் காரணம் விடுதலைக்குப் பின்பு வந்தமைந்த சமூக நிலைதான் என விளக்குகிறார்.
“உண்மையில் சுதந்திரம் பெற்ற பின்னர்தான்…….நாட்டு மக்களிடையே வறுமையும் வெறுமையும் ஏமாற்றமும் ஏக்கமும் வெறுப்பும் விரக்தியும் மனமுறிவும் கையாலாகாக் கோலமும் வளர்ந்து பெருகுவதற்கான சூழ்நிலையும் கனத்துக் கொழுத்துள்ளது. இவற்றிடையே அல்லற்படும் தனிமனிதர்கள் இந்நிலைமைகள் தங்கள் மனதுக்குள் கொண்டு சேர்க்கும் உணர்ச்சிப் பதிவுகளையும் கருத்துச் சுழிப்புகளையும் கவிதை களாக்குவது இயல்பே… இந்த வகையில் எழுத்துக் காலத்தில் புதுக்கவிதை எழுதியவர்கள் சரியாக இலக்கிய உணர்வுடனேயே படைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றே சொல்வேன்”13.
இவ்வாறு வல்லிக்கண்ணன் இந்த உயர்சாதிக்காரர்களின் புதுக்கவிதைப் படைப்பில் சரியான இலக்கிய உணர்வு வெளிப்படுவதாகச் சுட்டிச் செல்லுகிறார். ஆனால் அழகியல், தரம், மேன்மை, தனி மனிதம் ஆகிய முழக்கங்கள் எல்லாம், ஆதிக்க சக்திகளுக்கு எதிரான பாதிக்கப்பட்ட சக்திகள் பலவும் ஒன்று திரண்டு வரும் சூழலில், அதனுடைய தீவிர நடவடிக்கையை விமர்சிக்கவும், தடைசெய்யவும்தான் முன் வைக்கப்படுகின்றன என்பதுதான் வரலாற் றுண்மையாக இருக்கிறது; எனவே சாதி அரசியல் பெருகிய தமிழ்ச்சூழலில் தரம், தூய இலக்கியம் என்பனவெல்லாம் அவற்றின் உண்மையான பொருளில் இயங்க முடியாமல், அவையும் ஓர் ஆதிக்க அரசியலுக்கான தந்திரமாகத்தான் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. ஆகவே “இலக்கியத்தை” முதன்மைப்படுத்திய இவர்களாலும் “படைப்பு” என்கிற தளத்தை எட்ட முடியாமல்தான் போயிருக்கிறது.
விடுதலை பெற்ற இந்தியாவில் பெண்கல்வி பெருகியதால் சமூகத்திற்கு நன்மை விளைந்திருக்கிறதோ என்னவோ, ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறலாம்; உரைநடை இலக்கியம் பெருகுவதற்கு இப்பெண்வாசகர்களின் பெருக்கம் துணையாக இருந்தது என்று இவ்வாறு பெண் வாசகர்கள் பெருகவே, தொடர்ந்து பெண் எழுத்தாளர்களும் பெருகினர். இலட்சுமி, இராஜம் கிருஷ்ணன், அநுத்தமா, கிருஷ்ணா, சரோஜா இராமமூர்த்தி, அமுதா கணேசன், ஆர். சூடாமணி என்று இப் பெண் எழுத்தார்களின் பட்டியல் நீள்கிறது. இப்பெண் எழுத்தாளர்களின் இலக்கியத்தளம் மிகவும் குறுகிய எல்லைக்குள் உட்பட்டதாகவே தொடர்கிறது. இராஜம் கிருஷ்ணன் இவ்வெழுத்தின் போக்கை இவ்வாறு பதிவு செய்கிறார்.
“குறிப்பிட்டதொரு வட்டத்துக்குள்ளேயே சுழன்று வரும் வாழ்வையுடைய பெண் ணொருத்தி நாவல் எழுதப் புகுவதென்பது அவ்வளவு இலகுவான செயல்அன்று. சமுதாயத்தில் பல்வேறு நிலைகளில் பல்வேறு படிகளில் காணும் மக்களைக் கண்டு நெருங்கிப் பழகும் வாய்ப்புகளோ, உலக வாழ்க்கை நாடகங்களைப் பற்றி அறியும் வாய்ப்புகளோ, தான் புழங்கும் வீடும் குடும்பமுமே உலக அனுபவமாகக் கொண்ட பெண்ணுக்கு இல்லை14”.
இப்படிப் பெண்களுக்குச் சமூகத்தில் கொடுக்கப்பட்ட இடம், அவர்கள் படைப்பின் இடத்தையும் நிர்ணயிப்பதாக அமைவது புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றே. மேலும் இப்பெண் எழுத்தாளர்கள் எழுத வரும்போது, மரபார்ந்த ஆதிக்க சக்திகள், தங்களுக்கு வாய்ப்பாக அமையும் பழைய மரபுகளையும் மதச்சடங்களையும், மூட நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் தக்க வைத்துக் கொள்வதற்கும், பத்திரிக்கை வாசகர்கள் தொகையைப் பெருக்குவதற்கும் பயன்படுத்திக் கொண்டன என்பதும் ஓர் உண்மையாக நிற்கிறது.
இவ்வாறு விடுதலைக்குப் பிறகு தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கின்ற வரையிலான (1967) இக்காலக்கட்டத்தில் இலக்கியங்கள் நான்கு விதமான பெரும்போக்கில் இயங்கி வந்துள்ளன என்பதை அடையாளம் காண முடிகிறது.
தி.மு.க இயக்கம் எதிர்க்கட்சியாகச் செயல்பட்ட காலங்களில், அதன் பேச்சும் எழுத்தும் இலக்கியமும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா முதலிய வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் கூடத் தமிழின உணர்வை ஊட்டி வளர்ப்பவைகளாக அமைந்தன; தி.மு.க. தலைவர்கள் தமிழினத் தலைவர் களாகக் கொண்டாடப்பட்டார்கள். ஆனால் 1967இல் ஆட்சி அதிகாரத்தில் உட்கார்ந்தவுடன், அந்தப் ‘பதவி நாற்காலிக்கே’ உரிய குணங்கள் எல்லாம் வந்து கூடிவிட்டன; 20 ஆண்டு இடை வெளிக்குள்ளேயே தமிழர்கள் இரண்டுமுறை கடுமையாக ஏமாந்து விட்டார்கள் (1947, 1967), தமிழ், தமிழினம், சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, பெண்ணுரிமை முதலிய முழக்கங்களை முன்வைத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு இயக்கம், தன் கொள்கைகளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் இயங்கத் தொடங்கிவிட்ட சூழலில் தமிழ்ச் சமூகத்தில் பலவிதமான போக்குகள் உருவாகின.
- தொடர்ந்து தமிழ், தமிழ்த்தேசியம், ஆரிய எதிர்ப்பு ஆகியவற்றைக் கட்டிக்காக்க முயற்சிக்கின்ற இயக்கங்கள் சிறு சிறு குழுக்களாகப் பெருகின. (இலக்குவனார், பெருஞ்சித்தனார், சாலை இளந்திரையன், போன்றோர்).
- 1968இல் கீழ வெண்மணியில் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என நாற்பது பேருக்கு மேல் உயிரோடு கொளுத்தப்பட்ட நிகழ்ச்சியை ஆளும் தி.மு.க. எதிர்கொண்ட முறையினால், தி.மு.க. இயக்கம் ஒடுக்கப்பட்ட பெருவாரி மக்களுக்கான இயக்கம் என்ற நம்பிக்கை பொய்த்துவிட்ட சூழலில், தி.மு.க. வின் பெரிய பலமாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கான அமைப்பைக் கட்டத் தயாராயினர்.
- அதிகாரத்திற்கு வந்த தி.மு.க. வின் செயல்முறையினால் மனங்கலங்கி நின்ற அறிவாளிகள் பலர், 1969 இல் வெடித்த நக்சல்பாரி இயக்கத்தின் வீச்சினால் இடதுசாரிகளாக மாறினர்.
இவ்வாறு தி.மு.க ஆட்சிக்கு வந்ததால் ஏற்பட்ட இப்புதிய சமூகச்சூழலில் புதிய இலக்கியப் போக்குகளும் உருவாயின அவற்றுள் முதலில் குறிக்கத் தக்கது 1970 தொடங்கி 1978 வரை வெளிவந்த ‘கசடதபற’ என்ற இலக்கிய இதழின் போக்காகும். இவ்விலக்கியவாதிகள் சமூக நிறுவனங்கள் அனைத்தும் ஏமாற்றுபவைகளாக மாறிவிடும் சூழலைக்கண்டு அவநம்பிக்கையோடு வெடித்தனர். முதல் இதழில் இதன் இலக்குகள் கீழ்க்கண்டவாறு குறிக்கப்பட்டிருப்பதே இதற்குச் சான்றாகும்.
“அரசியல், சமயம், மரபு – இவை சம்மந்தப்பட்ட ஒழுக்கங்களுக்கு வாரம் தவறாமல் தோப்புக்கரணம் போடுபவர்கள் யாரும் இவர்களில் இல்லை15”.
இவ்விதழின் செயல்பாடு காரணமாக ஞானக்கூத்தன், பாலகுமாரன், பசுவய்யா, சி. மணி, கல்யாண்ஜி முதலிய புதுக்கவிஞர்கள் தமிழுக்குக் கிடைத்தனர். இப்படி ஒரு பக்கம் சமூக இயக்கங்களின் மேல் நம்பிக்கையற்ற சூழலில் இலக்கியம், மனித சோகங்களைச் சித்தரிக்கத் தொடங்கிய போது, நம்பிக்கையோடும் மன உறுதியோடும் புதிய இலக்கியங்களைத் தேனீக்கள் போலச் சுறுசுறுப்பாகப் படைக்கிற மற்றோரு இலக்கியப் போக்கும் இக்காலச் சூழலில் உருவாயிற்று; அப்போக்கைத்தான் இன்று “வானம்பாடி இயக்க இலக்கியம்” என்று இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் சுட்டுகின்றனர். இவ்விலக்கியப் போக்கின் தோற்றம் பற்றி சு. அரங்கராசு16 கூறுவது சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கிறது :
“வர்ணப் போராட்டத்துடன் வர்க்கப் போராட்டத்தை இணைத்தாக வேண்டிய வரலாற்று நிர்ப் பந்தத்தின் விளைவே வானம்பாடி இயக்கமாகும்; தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தின் ‘இலக்கிய விளைச் சலாக’ அறுவடையானதே இவ்வியக்கம். தமிழ்ச் சிந்தனை மார்க்சீயச் சிந்தனையுடன் இரண்டறக் கலந்தபோதே இவ்வியக்கம் தோன்றியது17”.
இவ்வானம்பாடி கவிஞர் மரபில் இருந்து தான் தமிழ்ப் புதுக்கவிதைக்குகுத் தமிழ்ச்சூழலில் ஓர் அங்கீகாரம் கிட்டியது. இவர்களின் மொழியும் நடையும் கற்பனாவாதப் பார்வையும், புதிய உவமை, உருவகங்களும், உலகளாவிய அணுகுமுறையும், பாதிக்கப் பட்டவர்கள் சார்பான குரலும், தமிழ் இலக்கியச் சூழலில் பெரும் வீச்சுகளை ஏற்படுத்தின. நா. காமராசனின் “கறுப்பு மலர்கள்” “சூரியகாந்தி” மீராவின் கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள், ஊசிகள், சிற்பியின் சர்ப்பயாகம், மேத்தாவின் கண்ணீர்ப் பூக்கள், கங்கை கொண்டானின் கூட்டுப் புழுக்கள், அப்துல் ரகுமானின் பால் வீதி, இன்குலாப்பின் வெள்ளை இருட்டு முதலிய கவிதை நூல்கள் பல இளைஞர்களைக் “கவிஞர்களாக்கியது”. 1975இல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட போது, வானம்பாடிக் கவிஞர்களின் நடுத்தர வர்க்கக் குணத்திற்கேற்ப இவ்விலக்கிய போக்கும் சிதைந்தது. இன்குலாப் போன்ற சிலரே தொடர்ந்து தன்னுடைய சிந்தனைக்கு ஏற்ப இயங்கினர்; படைத்தனர். பலரும் தங்கள் தனிமனித வாழ்க்கைப் போராட்டத்தில் காணாமல் போயினர்.
இக்காலகட்டங்களில் கவிதை இலக்கியத்தில், வழக்கம் போல் சமூக விமர்சனங்களும் அரசியல் ஒழுக்கங்களும் மேலோங்கியிருந்த சூழலில் புனைகதை இலக்கியத்தில் பல அரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்ப் புனைகதை வரலாற்றில் ஜெயகாந்தனின் வருகையும் தி. ஜானகிராமனின் வருகையும் கி. ராஜ நாராயணனின் எழுத்தும், சுந்தரராமசாமியின் நடையும் புனைகதை இலக்கியத்தை ஓர் உன்னதத் தளத்திற்கு இட்டுச் சென்றன எனலாம்; இக்காலக் கட்டத்தில்தான் வட்டார இலக்கியங்களுக்கும் புதிய மதிப்பு ஏற்பட்டது – தஞ்சாவூர் பிராமணர் குடும்பங்களில் ஏற்பட்ட மாற்றங்களை, அவற்றிற்கே உரிய சிக்கல்களோடும் நுட்பங்களோடும் தி.ஜா. படைத்துக் காட்டினார்; பதிவு செய்யும் ஒருமுறையில் கரிசல்காட்டைத் தளமாக வைத்துக்கொண்டு கி.ரா. உன்னதமான இலக்கியங்களைத் தமிழுக்கு வழங்கினார். ஜெயகாந்தன், வெங்கட்ராமன், நீல பத்மநாபன் அசோகமித்திரன், பூமணி, சு. சமுத்திரம், பொன்னீலன், பிரபஞ்சன், கு. சின்னப்ப பாரதி என்று அடுக்கிக் கூறத்தக்க அளவிற்குப் புனைகதை எழுத்தாளர்கள் பலர் தோன்றி, தமிழ்ச்சமூகத்தின் பல்வேறு தளங்களை எழுத்தாக வடித்துக்காட்டினர்; இக்காலக் கட்டத்தைக் தமிழ்ப்புனைகதை வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று எனக்கூறலாம்.
இக்காலக்கட்டத்தில் நாடக இலக்கியத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன; மரபான நாடகப் போக்கை உதறிவிட்டு வங்காள எழுத்தாளர் பாதல் சர்க்கரைப் பின்பற்றி “வீதி நாடக இயக்கங்கள்” உருவாயின. மரபார்ந்த கூத்து முறையைப் பின்பற்றி புதிய நாடக உத்திகள் அறிமுகப்படுத்தப்பட்டன; நா. முத்துசாமி, இராமானுஜம், இராமசாமி, ஞாநி முதலியோர் தமிழில் புதிய நாடகப் போக்கினை ஓர் இயக்கமாகவே நடத்தி வருகின்றனர்;
இடதுசாரி இயக்கத்திற்கு நம்பிக்கை யோடு வந்த பல இளைஞர்கள் உட்படப் பலரும், 80களில் இடதுசாரி இயக்கத்தின் மேலும் நம்பிக்கை இழந்து போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. தீவிரவாத இயக்கங்கள் உட்பட அனைத்தும் சிதறிப்போயின. இந்திய மார்க்சீய நிறுவனங்களுக்குள்ளும், உலக மார்க்சீயத்திற் குள்ளேயும் பல வினாக்கள் எழத்தொடங்கி விட்டன. மார்க்சீயத்திற்குள்ளேயே ‘அதிகாரம்’ பற்றிய விமர்சனங்கள் கூர்மையாக வெளிவரத் தொடங்கின; சோவியத் ஒன்றியம் சிதறியது; ஏகாதிபத்தியத்தின் உலகத் தொழில் நிறுவனங்கள், உலக நிதி நிறுவனங்கள், உலகத் தகவல் தொடர்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் உலக ஆக்ரமிப்பு, சிந்திப்பவனை நிலைகுலையச் செய்தன; இத்தகைய சூழலில் எதிலும் தீவிரமான ஈடுபாடு, நம்பிக்கை கொள்வது என்பது தற்கொலைக்குச் சமமானது ஒன்றாகிவிடும் என்கிற சூழல் உருவாயிற்று; இத்தகைய போக்கு இலக்கியத்திலும் எதிரொலித்தது; மதிப்பீடு களைப் பற்றிக் கவலைப்படாத “நேர் கோட்டில்லா இலக்கியங்கள்” தமிழ்ச் சூழலில் உருவாகத் தொடங்கின. மையமற்ற எழுத்துக்கள் பிறக்கத் தொடங்கின; சாருநிவேதிதா, பிரேம், பிரம்மராஜன், நாகார்ச்சுணன், தமிழவன், கோணங்கி முதலியோர் இத்தகைய சோதனை முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இலக்கியம் என்பது மொழியின் விளையாட்டு என்ற நோக்கில் இயங்கு கின்றனர். எல்லாமே “மொழி” எனும் குறிகளின் உறவு நிலையில் அர்த்தம் பெறுகின்றன. “பறையன்” என்ற குறி, ‘பிராமணன்’ என்ற குறியோடு கொள்கிற உறவில் அர்த்தம் பெறுகிறதே ஒழிய உண்மையில் ‘பறையன்’ என்ற எழுவாய் இல்லை. அதுபோலவே “பிராமணன்” என்ற எழுவாய் இல்லை. மொழி பற்றிய இத்தகைய புரிதல்கள், இலக்கியப் படைப்பை ஒரு புதிர் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளன; புதிர்நிலை நடப்பியல் (ஆயபiஉயட சுநயடளைஅ) என்ற இலக்கிய வகை தமிழில் இன்று உருவாகத் தொடங்கிவிட்டது.
82-83 இல் இலங்கையில் பேரின வாதத்திற்கு எதிராக இலங்கைப் போராளிகள் போர் முழுக்கம் அறிவித்த போது, தமிழிலக்கியச் சூழலிலும் ஒரு புத்தெழுச்சி தோன்றியது; ஆனால் போர் முனையில் நிற்கும் இலங்கை எழுத்தாளர்களுக்கு முன்பு, இங்கே உள்ள தமிழுணர்வு கொண்ட எழுத்தாளர்களின் எழுத்து ஈடு கொடுக்க முடியவில்லை; அதற்கான இயக்கம் இங்கே தீவிரப்படாத நிலையில் தோன்றுகிற எழுத்துக்கள் வெறுமென மொண்ணையாகப் பிறக்கின்றன. ஆனால் தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிடத்தக்க ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது; முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, தமிழக இடதுசாரிகளின் நடுவிலும் “தமிழ்த் தேசியவாதம்” முதன்மை பெறுகிறது. இடது சாரிகள் தேசிய உணர்வுகளுக்கு முதன்மை கொடுக்கத் தொடங்கியிருப்பதால் பேரிலக் கியங்கள் எதிர் காலத்தில் உருவாக வாய்ப்பு இருக்கிறது என நம்பலாம்.
எல்லாம் உலகமயமாகும் போக்கு, தொடர்புக் கருவிகள் பெருக்கம், கணிணிகளின் வருகை, மூலதனங்களின் குவிப்பு, தொலைக் காட்சி மூலமாக நடக்கும் பண்பாட்டுப் படையெடுப்பு முதலியன பெருகிவிட்ட 90களில் குறிப்பிடத்தக்க மூன்று இலக்கியப் போக்குத் தமிழில் வேகமாக இயங்கிக் கொண்டு வருகின்றன. 1. தலித்தியம் 2. பெண்ணியம் 3. தமிழ்த் தேசியம்; தமிழ் வரலாற்றில் முதன் முதலில் தலித்துக்களின் உரிமைக்கான குரல்களைத் தலித் மக்களே அமைப்பாகத் திரண்டு இந்திய அளவில் உரக்க ஒலிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது; தங்களின் உணர்வுகளை, சிந்தனைகளைப் படைப்பாகப் பதிவு செய்யக்கூடிய புதிய சூழல் ஏற்பட்டுள்ளது. சிவகாமி, பாமா, இமயம், அபிமாணி, விழி, இதயவேந்தன், பழமலை, கே.ஏ.குணசேகரன் முதலியோர் ஒடுக்கப் பட்டோருக்கான இலக்கியங்களைத் தமிழில் படைத்து வருகின்றனர். அம்பை, காவேரி, மங்கை, பாமா, வாஸந்தி, சிவகாமி முதலியோர் ஒடுக்கப்பட்ட பெண்ணியல் பார்வையில் புனைகதைகளை, நாடகங்களை உருவாக் குகின்றனர்.
பிரிந்துபோன திராவிட இயக்கங்களின் இந்த முப்பது ஆண்டு ஆட்சிக் காலத்தில் கல்வியாளர்கள் பலரும் ஆய்வு உலகத்தில் ஈடுபட்ட அளவிற்குப் படைப்புத் தளத்தில் (அன்றைய மு. வரதராசனார் போல) ஈடுபடமுடியாத சூழலில் இயங்கி உள்ளனர்; கவிதையில் இன்குலாப், பழமலை என்று கவிஞர்கள் சிலரைச் சுட்ட முடிவது போலப் புனைகதை இலக்கியத்தில் கல்வியாளர்கள் சிலரைச் சுட்டிக் கூறமுடியாத நிலையே, தொடர்கிறது; அங்காங்கே தனிப்பட்ட முறையில் (தமிழவன்) வெளிப்பட்டு இருக்கலாமே ஒழிய தமிழகம் முழுவதையும் ஈர்க்கிற புனைகதை இலக்கியத்தைக் கல்வியாளர்களால் வழங்க முடியவில்லை என்பதுதான் உண்மை.
நாளையத் தமிழிலக்கியத்தின் போக்கு என்னவாக இருக்கும் என்பதை ஒருவாறு இக்காலச் சூழலை மையமாக வைத்து நாம் ஊகிக்க இயலும் என்றே தோன்றுகிறது. இலங்கைப் போராளிகளின் நீண்ட நெடும் தொடர் போராட்ட வாழ்வினால், இன்று தமிழினம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. சொந்த மண்ணை இழந்து, பிழைப்புக்காக உலகம் முழுவதும் அனாதை போலத் திரிகிற அவலத்தில் தள்ளப்பட்டிருக்கிறது; எனவே நாளையத் தமிழ் இலக்கியம், இந்த அவல வாழ்வைப் பிரதிபலிக்கும் உலகத் தமிழ் இலக்கியமாக அமையும், அதே நேரத்தில் தமிழ்த்தேசிய அடையாளங்களை அழிக்க முயலும் (தமிழகத்திலும், இலங்கையிலும்) ஆதிக்க சக்திகளுக்கு எதிரான போராட்டக் களத்தைக் கட்டுகின்ற செயலாக்கம் மிக்க போராளி இலக்கியமாகவும் விளங்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது; ஆதிக்க சக்திகளின் எல்லையற்ற வலுவிற்கு முன்பு போராடுகின்ற தமிழினம், அதற்கான மனத் தயாரிப்பிற்காகப் படுகின்ற அவஸ்தைகளை, முக்கல்களை, முணங்கல்களை, ஆத்திரங்களை, அழிவுகளை, ஆக்கங்களை எந்தப் படைப்பாளித் தன் படைப்பில் பதிவு செய்ய ஆயுத்தமாய் இருக்கிறாரோ அவரிடம்தான் எதிர் காலத் தமிழ் இலக்கியம் உன்னதமான வடிவம் பெறும் என நம்பலாம்.
விரும்பினாலும் விரும்பாவிட்டலும் அடிப்படையில் தமிழ்ச்சமூகம் ஒரு சாதியச்சமூகம் – எதிர்காலத் தமிழிலக்கியத்தில் ஒடுக்கப்பட்ட தலித் இலக்கியத்தின் செல்வாக்கு, தமிழுக்கு நல்ல படைப்புகளை வழங்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது; இலக்கிய வரலாற்றில் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. ஓரத்து மக்களின் சிக்கல்கள் திரண்டு இலக்கியமாக வடிவம் எடுக்கும் போதுதான் உன்னத இலக்கியங்கள் பிறந்திருக்கின்றன. இந்த நோக்கில் தேசியம் என்ற அடிப்படையில் தமிழினமும், சாதி என்ற அடிப்படையில் தலித்துகளும், பால் என்ற அடிப்படையில் பெண்ணும் ஓரத்து மக்களாகக் கருததக்கவர்கள் ஆவர். எதிர் காலத் தமிழிலக்கியம் இந்த மூவர் கையில் தான் பேரொளி கொண்டு பெருநெறி பிடித்தொழுகப் போகிறது; அதற்கான சூழல் திரண்டு வருகிறது.
துணைநூற் பட்டியல்
- அரங்கராசு. சு., ‘தமிழ்ப்புதுக்கவிதை ஒரு திறனாய்வு’ கோவை. மூன்றாம் உலகப் பதிப்பகம், 1991.
- அருணாசலம், சபா.‘தமிழ் நாவல்களில் காந்தியத்தாக்கம்’ தேவக்கோட்டை, காளத்தி நூலகம், 1981.
- சஞ்சீவி. ந (பதி),‘இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்’ சென்னை, செ.ப. கழகம், 1974.
- சிவத்தம்பி. கா., ‘நாவலும் வாழ்க்கையும்’, சென்னை, தமிழ்ப் புத்தகாலயம், 1978.
- தான்யா. கோ., ‘இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைகளில்மார்க்சியக்கொள்கைகளின் தாக்கம்’, சென்னை, ஐந்திணைப்பதிப்பகம் (விற்பனையாளர்) , 1988.
- பாக்கியமுத்து. தி. (ப.ஆ) ‘விடுதலைக்கு பின் தமிழ் நாவல்கள்’ ,சென்னை, கிருஸ்துவ இலக்கிய சங்கம், 1974.
- ராசு. த., ‘தமிழ் நாவல்களின் இலக்கியத் தரம்’ சிதம்பரம், மணிவாசர் பதிப்பகம், 1986.
- வானமாமலை. நா., ‘புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்’, சென்னை, மக்கள் வெளியீடு, 1975.
- வானமாமலை. நா. (ப.ஆ.), ‘தமிழ் நாவல்கள் ஒரு மதிப்பீடு’, சென்னை, என்.சி.பி.எச். 1977.
- வேலுத்தம்பி. ஆ., ‘தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்சென்னை, பாரிப்புத்தகப் பண்ணை-3, ஆம் பதிப்பு 1985.
- Prabhakar Machwe “Modernity and Contemporary Indian literature”,New Delhi, Chetna Publications, 1978
அடிக்குறிப்புகள்:
- இக்காலக்கட்டத்துக் காந்திய எழுத்தாளர்களாகப் புனைகதையில் கல்கி (அலை ஓசை (1953)), அகிலன், இன்ப நினைவு (1949)), நெஞ்சின் அலைகள் (1953), வாழ்வு எங்கே (1957), பாவை விளக்கு (1958), புது வெள்ளம் (1964), பொன் மலர் (1965), நா. பார்த்தசாரதி (கோபுர தீபம் (1959), குறிஞ்சி மலர் (1962), நெற்றிக்கண் (1966)), இந்திரா பார்த்தசாரதி, காலவெள்ளம் (1968)), சங்கரராம் (இன்ப உலகம் (1959), மண்ணாசை (1954)), சண்முக சுந்தரம் (நாகம்மாள் (1961)), நாரணதுரைக்கண்ணன் (தியாகத் தழும்பு (1962)), விந்தன் (கண் திறக்குமா (1956)) முதலியோரையும் கவிதைகளில் தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர், சி.சு. செல்லப்பா, யோகி சுத்தானந்த பாரதியார் (பாரத சக்தி மகாகாவியம் (1948)), கொத்தமங்கலம் சுப்பு – முதலியோரையும் குறிக்கலாம்.
- இந்த “மனோபாவம்” உள்ளோட்டமாக இயங்கியுள்ளதால்தான் பிரிவினைக்கு எதிரான இந்தியத் தேச ஒற்றுமை, பொதுவுடமைக்கு எதிரான அகிம்சைக் கோட்பாடு, பெரியாரியத்திற்கு எதிரான கடவுள் வழிபாடு முதலிய கூறுகளை அளவிற்கு அதிகமாகவே காந்திய எழுத்தாளர்கள் எழுத்தில் காண நேர்கிறது.
- Prabhakar, Machwe, “Modernity and Contemporary Indian Literature”, P.52.
- இவ்வாறு கவிஞர்கள் பெருகியதற்குக் காரணம் தமிழின உணர்வைத் தூண்டிவிட்ட தி.மு.க. இயக்கம் தான் எனலாம். அதன் தலைவர்களே தமிழ் இலக்கியம் படித்தவர்களாகவும் கவிஞர்களாகவும் விளங்கினர் என்பது தமிழக வரலாற்றில் ஒரு எளிய உண்மையாகக் கொள்ளத்தக்கது அல்ல.
- ந. சஞ்சீவி (தொ.), “இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்”. ப.133
“குப்பனோ குளிக்கப் போனான்
கூடவே நானும் போனேன்
எப்படா வந்தாய்? என்றான்
இப்பத்தான் வந்தேன் என்றேன்”
இது ஓர் அறு சீர் விருத்தப் பாடல். இப்படிச் செப்பமாக யாப்பில் அமைந்துவிட்ட அனைத்தையும் கவிதை எனக் கொண்டாடும் அவலம் இக்காலத்தில் நிகழ்ந்தது. - மே. நூ. ப. 133
- அண்ணாவின் குமரிக்கோட்டம், கபோதிபுரம் காதல், பிடிசாம்பல், வண்டிக்காரன் மகள், கலிங்கத்துராணி, ரங்கோன் ராதா, மு.வ.வின் கயமை, வாடாமலர் நெஞ்சில் ஓர் முள், கள்ளோ? காவியமோ? முதலிய புதினங்கள்.
- வ.சு.ப. மாணிக்கத்தின் மனைவியின் உரிமை (பேகன், கண்ணகி கதை) பெரியசாமி தூரனின் ஆதி அத்தி (ஆதிமந்தி கதை), புரட்சிக் கவிஞரின் “சேரதாண்டவம்” சு. மகாதேவனின் “ தெள்ளாறெறிந்த நந்திவர்மன்” இரா. வேங்கடாசலத்தின் “இமயத்தில் நாம்” முதலியன.
- ந.மு. கோவிந்த ராய நாட்டாரின் “இராசேந்திரன்”, கண்ணன் எழுதிய “நந்திவர்மன்”, அரு. இராமநாதனின் “இராசராசசோழன்” சக்கரவர்த்தி அசோகன், ஆறு அழகப்பன் திருமலை நாய்க்கர், திருவள்ளுவர், மதுரை திருமாறனின் ‘சாணக்கிய சபதம்’, ‘மாலிக் கபூர்’ முதலியன.
- அண்ணாவின் வேலைக்காரி, ஓர் இரவு, நீதி தேவன் மயக்கம், சந்திர மோகன் முதலிய நாடகங்கள் அன்று பெரிதும் பேசப்பட்டன. இந்த வரிசையில் கருணாநிதியின் போர்வாள், தூக்குமேடை, வெள்ளிக்கிழமை, காகிதப்பூ ஆகிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.
- ரகுநாதனின் “பஞ்சும் பசியும்” பஞ்சாலைத் தொழிலாளர்களின் வாழ்வு, ராஜம் கிருஷ்ணன் ‘உப்பங்கழி’ – உப்புத் தொழிலாளர்களின் வாழ்க்கை கு. சின்னப்பபாரதியின் ‘சங்கம்’ – மலைவாழ் மக்களின் வாழ்க்கை இப்படிப் பல.
- நா. வானமாமலை, ‘புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்’ ப. 35.
- வல்லிக்கண்ணன், ‘புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும்’, ப.171.
- இராஜம் கிருஷ்ணன் ‘மலையருவி’ – நாவல் (முதற்பதிப்பு) முன்னுரையில்.
- எடுத்தாளப்பட்டது, முனைவர் சு. அரங்கராசு, ‘தமிழ்ப் புதுக்கவிதை’ – ஒரு திறனாய்வு. ப.179.
- அன்று அககினிப்புத்திரன் – இன்று கனல்மைந்தன் என்ற புனை பெயருடைய சு. அரங்கராசு வானம்பாடி இலக்கிய இயக்கத்தின் மூலவர்களில் ஒருவர்.
- சு. அரங்கராசன், மே. நூ, ப. 205-206.
க. பஞ்சாங்கம் :
இராசபாளையம் வட்டத்தில் உள்ள புத்தூர் என்ற சிற்றூரில் பிறந்து வளர்ந்து 1973இல் இருந்து புதுச்சேரி அரசுக் கல்லூரிகளில் தமிழ் விரிவிரையாளராகப் பணிபுரிந்து வருகிறார். கவிதை, புதினம், மொழிபெயர்ப்பு, திறனாய்வு, வரலாறு, ஒப்பிலக்கியம், ஆய்வு ஆகிய துறைகளில் தொடர்ந்து தொய்வு இல்லாமல் இயங்கி வருகிறார். ஒடுக்கப்படும் இனம் என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியம் சார்பாகவும், சுரண்டப்படும் நாடுகள் என்ற அடிப்படையில் மூன்றாம் உலகநாடுகளின் சார்பாகவும், அமுக்கப்படும் சாதி என்ற அடிப்படையில் தலித்துகள் சார்பாகவும், ஏமாற்றப்படும் பால் என்ற அடிப்படையில் பெண்ணியம் சார்பாகவும் கருத்தாக்கங்களை உருவாக்கும் முயற்சியில் ஆரவாரமில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். “தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு” என்று நூல் மூலம் பரவலாக அறிமுகமானார்.