Star Mountain

My travels and other interests

கல்விதமிழ்நாடு நேற்று இன்று நாளை

செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிக்கைகள் (1997)

செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிக்கைகள்
பா.கிருஷ்ணன்
முதுநிலை நிருபர்
இந்தியன் எக்ஸ்பிரஸ் சென்னை.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு எத்தகைய அளவு இருந்ததோ, அதைப் போல் விடுதலைக்குப் பிறகும் தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகள் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்துள்ளன.

அரசியலிலும் சமூகத்திலும் சில அம்சங்களில் இந்தியாவுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது தமிழகம். ஆனால், தொழில் பொருளாதார விஷயத்தில் தமிழகம் பின்னடைவு கண்டுள்ளது.

நேற்றைய தமிழ்நாட்டில் மதப் பழைமை வாதம் சற்று மேலோங்கியிருந்தது.  சாதிய உணர்வுகள் மக்களைப் பிரித்து வைத்திருந்தன. பெண்ணடிமை இருத்தது. மதம் சார்ந்த மூடநம்பிக்கை மிகுந்திருந்தது. மக்கள் நலம், குடும்ப நலம் ஆகிய விஷயங்களில் போதிய விழிப்பு இல்லை. ஆனால், பொருளாதார முன்னேற்றம் பற்றி ஓரளவு ஆர்வம் இருந்தது. தொழில்கள் இருந்தன. உழைப்பும் இருந்தது.

இன்றைய தமிழ்நாட்டில் மதப்பழமைவாதம் பெருமளவுக்கு ஒடுக்கப்பட்டுள்ளது. சாதிய உணர்வுகள், சமூகத்தைப் பெரிதும் பாதிக்கும் நிலை மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் சாதி உணர்வுகளை அரசியல் வாதிகளைப் பற்றிக் கொண்டுள்ளனர். எனினும் சிந்தித்துப் பார்த்து அரசியல் நிலைகளை மேற்கொள்ளும் தெளிவை நோக்கி மக்கள் நகரத் தொடங்கியுள்ளனர்.

பெண்ணடிமை சற்றுக் குறைந்து, பெண் கல்வி அதிகரித்து வருகிறது. மதம் சார்ந்த மூடநம்பிக்கை தகர்த்துப் போய்க் கொண்டிருக்கிறது. மாறாக, அரசியல், பொருளாதாரம் சார்ந்த மூடநம்பிக்கை அதிகரித்து வருகிறது. சுகாதார விழிப்புணர்வு, அதிகரித்து வருகிறது.

பொருளாதார விஷயத்தில் மட்டும் தமிழன் எமாளியாக வருவது சோகமான உண்மை. நேற்றைய தமிழகத்திலிருந்து இன்றைய தமிழகம் உருவாகப் பத்திரிகைகள், செய்திதாள்கள் உள்ளிட்ட தகவல் சாதனங்கள் பெருமளவு பயன்பட்டுள்ளன. இந்நிலையில், இன்றைய தமிழகத்தில் வேண்டத்தகாத அம்சங்களை நீக்கி, நல்ல அம்சங்கள் வலுப்பெற செய்தித்தாள்கள், பத்திரிகைகள், தகவல் சாதனங்கள் பெரும்பங்கு வகிக்க வேண்டியுள்ளது.

செய்தி ஏடுகள், பத்திரிகைகள் உள்ளிட்ட தகவல் சாதனங்கள் மக்களிடையே பொதுவான கருத்தை உருவாக்கும் போக்கு விடுதலைப் போராட்ட காலத்தில் அதிகம் இருந்தன. பிறகு, மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையிலும் மக்களுக்குத் தகவல்களைத் தெரிவிப்பது என்ற நிலையில் புதிய வடிவத்தை, பரிமாணத்தைப் (Dimension) பெற்றுள்ளது.

அதே சமயம் ஒவ்வொரு தகவல் சானமும் ஏதாவது ஓர் அரசியல், சமூக நிலையை மேற்கொள்கின்றது. அந்த நிலைக்கு முரணாகத் தகவல்கள் வெளிவருவது கிடையாது என்பது சற்று உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய அம்சமாகும்.

இவற்றின் அடிப்படையில் தமிழகத்தையும் அதன் ஏற்றத் தாழ்வில் பத்திரிகைகளின் பங்கையும் அலசலாம்.

தமிழ்நாடு நேற்று

சுதந்திரத்துக்குப் பிறகு தமிழகம் எடுத்துக் கொண்ட மிகப்பெரிய பொறுப்புக்களில் இரண்டு, சமுகச் சீர்திருத்தம், மொழி ஆதிக்க எதிர்ப்பும், சமூகச் சீர்திருத்தமும். ஓர் இனத்தை அடையாளம் காட்டுவது அதன் மொழி, மனத்தின் முகமாக இருப்பது மொழி. அந்த மொழியின் அடிப்படையில் பண்பாடு அமைகிறது. இவை இரண்டையும் சிதைத்து விட்டால் ஓர் இனத்தில் தன்மை சிதையும். அதே போல், மொழியையும் அதன் வழிப்பட்ட பண்பாட்டையும் உரமூட்டி வளர்த்தால், அதன் இனம் தலை நிமிரும்.

விடுதலைப் போருக்குப் பின் தமிழ்நாட்டின் நேரடி ஆதிக்கம் செலுத்தப்பட்டது, மொழி மீதும் பண்பாட்டின் மீதும்தான். ஹிந்தி மொழியைப் புகுத்துவதன் மூலம் தமிழ் இனத்தின் முகத்தைச் சிதைத்து விட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு விஷயங்களில் குழம்பிப் போகும் தமிழன் இந்த விஷயத்தில் தெளிவாக இருந்திருக்கிறான் என்பது புருவத்தை உயரச் செய்யும் உண்மை.

ஆனால் சமுகச் சீர்திருத்தம் என்ற விஷயத்தில் தமிழகம் பாதிக் கிணற்றைத்தான் தாண்டியிருக்கிறது. ஒரு புறம் பெண்ணை முதலமைச்சராக ஏற்றுக் கொண்ட தமிழகம், மறுபுறம் பெண் சிசுக் கொலையையும் விட்டு வைத்திருக்கிறது.

சாதி ஆதிக்கத்தைப் பெருமளவுக்கு ஒழித்து வந்தாலும், தீண்டாமை என்ற நச்சுப்பாம்பு இன்னும் தலைதூக்கி வருகிறது. இதற்கு, கடந்த ஆண்டு சேலம் பள்ளிச் சிறுமி தாக்கப்பட்டது ஓர் உதாரணம்.

“தமிழ்நாட்டில் தீண்டாமை நிலவுகிறது. ஆதி திராவிடர்களுக்கெனத் தனிப்பள்ளி, விடுதிகள் மருந்தாலும் – அதுவும் ஒருவிதத் தீண்டாமையாகவே உள்ளது” என்கிறது ஹனுமந்தாப்பா தலைமையில் அமைந்த தாழ்த்தப்பட்டோர் – பழங்குடியினருக்கான கமிஷன்.

அரசியல் அமைப்புகள்

தமிழகத்தின் அரசியல் இயக்கங்கள் அடிப்படைக் கொள்கைகளின் வழியே மூன்று வகையாக உள்ளன. விடுதலைக்குப் பிறகு மக்களால் பெரிதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசிய இயக்கமான காங்கிரஸ், வர்க்கப் போராட்டம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைதல் என்ற அடிப்படையில் அமைந்த கம்யூனிஸ்ட் கட்சி, பிராமணர் அல்லாதோருக்கு எதிரான அதாவது சமூகக் காரணத்தை முன்னெடுத்துக் கொண்ட – ஜஸ்டிஸ் கட்சி. அதாவது தேசியம், பொருளாதாரம், சமுகம் என்ற மூவகைப் பாகுபாட்டின் அடிப்படையில் அவை அமைந்திருந்தன.

எந்த ஓர் இயக்கமும் மேல்தட்டு மக்கள் வசம் இருந்தால் நிலை பெறுவதில்லை. வெகுஜன இயக்கமாகும்போதுதான் அவை அரசியல் ரீதியான வெற்றியைப் பெறுகின்றன. அந்த அரசியல் வெற்றி மூலம் அந்த இயக்கத்தின் கொள்கைகள் வேரூன்றுகின்றன. காங்கிரஸ் – இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் போது லோகமான்ய திலகர், விபின் சந்திரபால், ராஜாராம் மோகன்ராய், வல்லபாய் பட்டேல், தாதாபாய் நவுரோஜி ஆகியோரின் வசம் இருந்தபோது தேசிய இயக்கமாக மட்டுமே இருந்தது; ஆனால் அதை மக்கள் இயக்கமாக மாற்றியது மகாத்மா காந்திதான்!

மக்களுடன் நேரடியாக உறவாடுகிற தலைவனால்தான் இயக்கத்தை வலுவுள்ளதாக மாற்ற முடியும் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

தமிழகத்திலும் மூதறிஞர் ராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், சத்தியமூர்த்தி ஆகிய மேல்தட்டு மக்களின் வசம் இருந்த காங்கிரஸ் மக்கள் இயக்கமாக வேரூன்றியது பெருந்தலைவர் காமராஜர் தலைமை ஏற்ற பிறகுதான்.

இதே அளவுகோள் ஜஸ்டிஸ் சர். பிட்டி தியாகராயர், வரதராஜுலு நாயுடு, பி.டி.ராஜன் உள்ளிட்ட மேல் வர்க்கத்தினர் வசம் இருந்ததால் நிலைபெறாமல் போனது.

ஆனால், அதன் பிரதானக் கொள்கையினைப் படியெடுத்து, ஈ.வெ.ரா. அந்த இயக்கத்தை மக்கள் மயக்கமாக மாற்றினார். அதுவே திராவிடர்க் கழகம் ஆனது. சமுகத்தில் வெற்றி பெற்றது. 1944ஆம் ஆண்டு சேலத்தில் திராவிடர்க் கழகத்தை அவர் நிறுவினார்.

மூன்றாவதான பொதுவுடமை இயக்கம் மக்கள் தலைவர்களின் கைகளிலிருந்து மேல்தட்டு அணுகுமுறை உடையவர்களின் கைக்குப் போனதால், தமிழ்நாட்டில் வெற்றி பெறாமல் போனது. ப. ஜீவானந்தம் போன்ற மக்களை வசீகரிக்கக் கூடிய, மக்களுடன் நெருங்கிப்  பழகும்  தலைவர்களிடமிருந்து பி. ராமமூர்த்தி, எம். கல்யாணசுந்தரம் போன்றவர்களின் கைக்குப் போன பிறகு வெற்றிப் பாதையில் விலகிச் சென்றது.

இதற்காக, அந்தத் தலைவர்களின் நேர்மையைத் சந்தேகிக்க முடியாது. அணுகுமுறை பயன் தரவில்லை என்ற யதார்த்தத்தை வெளிப்படுத்துவதே இக்கருத்தின் நோக்கம்.

சுருக்கமாகச் சொன்னால் any movement will be successful, provided it is brought down to the mass level, rather than with elite. காங்கிரஸ் Elite களின் கைகளிலிருந்து Mass கைக்கு மாறியது; நீதிக்கட்சி Elite களின் கைகளில் தங்கியதால் மறைந்து போனது; அதன் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட திராவிடர்க் கழகம் Mass கைக்குச் சென்றது; வென்றது.

இதற்கு நேர்மாறாக Elite கைகளில் இருந்து பொதுவுடமை இயக்கம் கைகளுக்குப் Mass போனதால் முடங்கிப் போயிற்று.

சாதி, மத ஆதிக்கமும் – வர்க்கப் போராட்டமும்:

கீழ்வெண்மணிச் சம்பவத்தில் ஹரிஜனங்கள் உயிருடன் கொளுத்தப்பட்டதும், கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் மதக்கலவரம் நடந்ததும், மீனாட்சிப்புரத்தில் மதமாற்றம் நடந்ததும், வர்க்கப்போராட்டத்தின் வேறு பரிமாணம்தான்.

வெண்மணியில் நில உடமையாளர்களுக்கும் விவசாயக் கூலிகளுக்கும் இடையிலான பிரச்சினையே அது.

மண்டைக்காடு கலவரம், மீன்பிடிக்கும் தொழில் போட்டியின் மாற்று வடிவம்.

மீனாட்சிபுரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் இஸ்லாத்தைப் பகிரங்கமாகத் தழுவினர். ஆனால், அதைப்போல் பிற பகுதிகளில் ‘சமூகப் பாதுகாப்பு’ என்ற அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர் மதம் மாறவில்லை.

விவசாயம், மீன் பிடித்தொழில் ஆகிய தொழில் வர்க்கப்போராட்டங்கள் தான் மத, சாதிக் கலவரங்களாக உருவாகியுள்ளன. இந்நிலையில் மொழிப்பிரச்சினை தமிழகத்தில் எந்த வடிவம் பெற்றிருந்தது என்பது மிகத் தெளிவு.

ஒரு சாதி இன்னொரு சாதியை வழி நடத்தும்போது தமிழன் ஏற்கிறான்; ஆதிக்கம் செலுத்தும்போது எதிர்க்கிறான்.

ஒரு மதம் இன்னொரு மதத்தை வழி நடத்தும்போது ஏற்கிறான்; ஆதிக்கம் செலுத்தும்போது எதிர்க்கிறான்.

ஒரு மொழி இன்னொரு மொழியை வழி நடத்தும்போது ஏற்கிறான்; ஆதிக்கம் செலுத்த முன்வந்தால் எதிர்க்கிறான்.

வேளாண்மை நிலங்கள் மிகுந்த தென்னார்காடு, தஞ்சைப் பகுதிகளிலும்; மீன்வளம் மிக்க தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளிலும் ஏற்படும் மத, சாதி மோதல்கள் வடஆர்காட்டுப் பகுதிகளிலும் கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் ஏன் ஏற்படுவதில்லை?

சேலம், தர்மபுரி, பெரியார் மாவட்டங்களில் நக்சலைட்டுகள் பிரச்சனை, சந்தனக் கடத்தல் ஆகியவை நடப்பதற்கு அரசு இயந்திரமான போலீசின் ‘அடக்குமுறை’ என்ற காரணம் பிரதானமாக இருக்கிறது. இங்கெல்லாம் வகுப்புக் கலவரங்களை விடச் சுரண்டுவோர்க்கு எதிரான மோதலே அதிகம்.

இத்தனைக்கும் பிறகுத் தமிழன் முகத்தை நிலைநாட்டுவது அவனைப் பின்னிப் பிணைக்கும் மொழிதான்.

அதனால்தான், தேசிய வாதத்தின் அடிப்படையில் இயங்கும் காங்கிரஸ் நிலைபெற முடியாமல் போனது. வர்க்கப் போராட்டத்தை மட்டுமே மையமாக வைத்து மொழியை மறந்த பொதுவுடமை இயக்கமும் வெற்றிபெறாமல் போயிற்று.

சாதி அடிப்படையில் இயக்கம் நடத்த முனைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் இயக்கமும், தற்போது நடத்தப்படும் டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியும் வெற்றி பெற இயலவில்லை. பிராமணர்களைக் கவர நினைத்த சுதந்திரக் கட்சியும் ஆட்சி பிடிக்க முடியவில்லை. தாழ்த்தப்பட்டவர்களின் குடியரசுக் கட்சியாலும் முடியாது.

சாதி, மத ரீதியிலான அமைப்புகளின் நிலை எடுபடாது என்பது அசைக்க முடியாத உண்மை.

தாழ்த்தப்பட்டவர்கள் ஓட்டு மொத்தமாக முஸ்லிம் மதம் தழுவுகிறார்களே, என்பதால் இஸ்லாமிய மயக்கமான முஸ்லிம் லீக் தனிச் சக்தியைப் பெற முடிவதில்லை.

ஆலயம் நிறைந்த ஆன்மீகப்பூமி என்பதால் இந்து மத அமைப்பான பா.ஜ. கட்சியும் இங்கே வேரூன்ற இயலவில்லை.

தேர்தல் அமைப்புகளில் பிரதானக் கட்சிகள் அந்த அந்தத் தொகுதிகளில் சாதி, மத அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்தினாலும், ஆட்சியின் போக்கை வைத்துத்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள்.

ஒரு தொகுதியில் இஸ்லாமியர் அதிகம் வசிக்கின்றனர் என்ற நிலையில் தி.மு.கழகம் முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தும்; அதை எதிர்த்து அ.தி.மு.கழகமும் முஸ்லீம் வேட்பாளரையே நிறுத்தும்.

ஆனால் மக்கள் தி.மு.க.வா? அ.தி.மு.க.வா? என்றுதான் பார்த்து முடிவு செய்கிறார்கள், மதத்தைப் பார்த்து அல்ல.

இதுதான் 50 ஆண்டுகாலத் தமிழக வரலாறு. வன்னியர் ஓட்டு அன்னியருக்கு மல்லை  என்று எஸ்.எஸ். ராமசாமி படையாச்சி கூறிவிட்டாரே என்று வன்னியர்கள் மற்ற கட்சிகளைப் புறக்கணித்ததாகத் தெரியவில்லை.

‘பூணுலைப் பிடித்துக் கொண்டு தி.மு.கழகத்துக்கு ஓட்டு போடுங்கள்’ என்ற காரணத்துக்காகப் பிராமணர்கள் அனைவரும் தி.மு.க. வுக்கே வாக்களித்தார்கள் என்று கூறமுடியாது.

எப்படி சாதி, மதத் தீவிர ஆதரவு எடுபடாதோ அதைப்போலவே சாதி, மத இன எதிர்ப்புப் போராட்டமும் இங்கே செல்லுபடியாகாது என்பதற்குப் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் பார்ப்பன எதிர்ப்பு ஓர் உதாரணம்.

பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து அவர் நடத்திய இயக்கத்தைப் பல காரணங்களுக்காகத் தமிழகம் ஏற்றது. அவர் நடத்திய வைக்கம் போராட்டம் வென்றது; சாதி ஆதிக்க ஒழிப்பும் வென்றது. பகுத்தறிவு வென்றது; தீண்டாமை ஒழிப்பு ஜெயித்தது; சமூக நீதி மலர்ந்தது; சமுகம் சார்ந்த மூடநம்பிக்கை பெருமளவு தகர்ந்துவிட்டது.

தமிழ்நாட்டில் அவப்போது மத அமைப்பினர் கொல்லப்படுவது கூட 1. தனிப்பகையின் காரணமாகவே 2. அரசியல் தூண்டுதல் (Provocation) காரணமாகவோ தாம் அமைகின்றன. ஆனால் அவற்றை மக்கள் பெரிதுபடுத்தவில்லை என்பது தெம்பூட்டும் உண்மை.

பெரியாரை மக்கள் தலைவராக ஏற்றத் தமிழகம், ‘பாம்பையும் கண்டு, பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி’ என்ற பெரியாரின் கோட்பாட்டைத் தாட்சணியமின்றி நிராகரித்துவிட்டது.

அதன் அடையாளம் தான் அண்ணா – ராஜாஜி கூட்டினைத் தமிழன் 1967இல் ஏற்றுக் கொண்டது. அதன் ஓர் அம்சம்தான் 1980இல் எம்.ஜி.ஆர் தலைமையிலான அண்ணா. தி.மு.க. அரசில் ஹண்டேவிற்கு அமைச்சர் பதவி வந்தது; அதன் விரிவுபெற்ற நிலைதான் பார்ப்பனக் குலத்தைச் சேர்ந்த ஜெயலலிதாவே திராவிட இயக்கங்களில் ஒன்றான அ.இ.அ.தி.மு.கழகத்தின் தலைமையை ஏற்றது. ஜெயலலிதாவை மக்கள் தோற்கடித்தற்குச் சாதி காரணமல்ல;  ஊழல் புகாரே காரணம்.

மத, சாதி விஷயத்தில் தமிழகம் மிகுந்த நிதானத்துடன், எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதற்கு இவையே ஆதாரங்கள்.

விடுதலை பெற்ற காலம் தொட்டு இருந்து வந்த காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டின் ஆட்சி பீடத்திலிருந்து தூக்கி எறியப்பட்டது. 1967ஆம் ஆண்டில்தான் இதன் அடியொற்றியே பிற மாநிலங்களும் மாநில உணர்வுகளை முதன்மைபடுத்தி வருகின்றன.

அதன்பின் இந்த நிலைப்பாட்டை எல்லாத் தேர்தல்களிலும் கையாண்டான் தமிழன். 1971ஆம் ஆண்டு தேர்தலில் பெரிய பாதிப்பு இல்லை. 1976இல் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது. 77இல் நடந்த தேர்தலில் தி.மு.கவை மக்கள் நிராகரித்தனர். காரணம் ஊழல் புகார்தான்.

1967ஆம் ஆண்டு ஏற்பட்ட மாற்றத்துக்கு இரண்டு காரணங்கள், மத்தியில் இருந்த காங்கிரஸ் பிரதிநிதியான தமிழக அரசு மீது தமிழன் கோபத்தைக் காட்டினான். மாநில உணர்வான இந்தி எதிர்ப்பு என்ற அம்சமும் அரிசித்தட்டுப்பாடும் கைகோர்த்தன.

1977ஆம் ஆண்டு தி.மு.க. வை நிராகரித்து அ.தி.மு.க. வை அங்கீகரித்ததற்கு ஊழல் மீது தமிழனுக்கு இருந்த கோபம்.

1989இல் அ.தி.மு.க. வை ஒதுக்கி வைத்தது உட்பூசல் சண்டை போடும் இருவரையும் தள்ளி வைப்பது என்ற நிலைப்பாடு காரணம்.

1991ஆம் ஆண்டிலும் 1984ஆம் ஆண்டிலும் தமிழனின் உணர்வு பச்சாதாபத்தின் அடிப்படையில் அமைந்தது.

இந்தியை எதிர்த்து 1966இல் இரு மாணவர்கள் தீக்குளித்தனர்.  இந்திரா காந்தி மரணம். எம்.ஜி.ஆர் உடல் நலம் குன்றியமை ஆகியவற்றால் மனம் நொந்து தீக்குளித்தான். 1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி தமிழ் மண்ணில் உயிர்துறந்ததற்குப் பரிகாரமாகத் தி.மு.கழகத்தை மக்கள் முற்றாக நிராகரித்தார்கள்.

தமிழனின் மொழி உணர்வுக்கு வரலாற்றுச் சான்று ஹிந்தித் திணிப்பை எதிர்த்த இயக்கம். அதற்குப் பின்னணியில் தி.மு.க. மாநிலம் முழுவதும் மாணவர்களைக் கிளர்ச்சியில் ஈடுபடுத்தியது. இந்தி ஆட்சி எரிப்பு செய்து சென்ற ஊர்வலம், மாணவர்கள் மீது சிதம்பரத்தில் துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது. தமிழ்நாடே அல்லோலப்பட்டது.

சிவலிங்கம் (24), தி.மு.க. ரங்கநாதன் (32) என்ற இரு தமிழ் இளைஞர்கள் தீக்குளித்து இறந்தனர். சிவலிங்கம் ’உடல் தமிழுக்கு, உயிர் தீயிக்கு’’ என எழுதியது 27-1-65 ’தினத்தந்தி’ எட்டு பத்திச் செ­தியாக வெளியிட்டது.

’இந்தியை எதிர்த்துத் தீக்குளிப்பு
இரண்டு தமிழர்கள் தீக்குளித்தனர்!
இந்தியை எதிர்த்து’

கிளர்ச்சி கொந்தளித்தது. சாகும் வரை இந்தி எதிர்ப்பு எனக் கிளர்ந்தனர். கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.

மொழி ஓர் இனத்தின் தனித்தன்மை அடையாளம் என்பதற்கு உலகளாவிய உதாரணங்கள் இதோ :

கொள்கையால் பிளவுபட்ட கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் இணைந்தன; சோவியத் யூனியன் தேசிய இன விடுதலைக்குக் குரலின் அடிப்படையில் சிதறுண்டது.

25 ஆண்டுகளுக்கு முன் ஒரே இஸ்லாம் மதத்தையே சார்ந்தவராயினும் மொழியால் வேறுபட்டவர்கள் என்று மேற்குப் பாகிஸ்தானிலிருந்து விடுதலைப் பெற்ற வங்கதேசம் உருவானது.

அதனால்தான் மொழி விஷயத்தில் தமிழரும் சற்று விழிப்புடன் இருந்து வந்துள்ளார்கள்.

விடுதலைக்குப்பிறகு ஹிந்தியைத் திணிப்புச் செ­ய பலமுறை முயன்று வந்த மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு “1165 ஜனவரி 26ஆம் தேதி முதல் ஹிந்தி தேசிய அளவில் ஆட்சி மொழியாக்கப்படும்” என அறிவித்தது.

மத்திய அரசின் அறிவிப்பைக் கண்டித்துத் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ’துக்கநாளாக’ அறிவித்தது.

அப்போது சுதந்திரக் கட்சித் தலைவர் ராஜாஜி ’”தி.மு.க. வை விட எனக்கு 2 மடங்கு துக்கநாள்”’ என்று அறிவித்தார். (தினத்தந்தி பொன்விழா மலர்)

திருச்சியில் ராஜாஜி, ’நாம் தமிழர்’ இயக்கத் தலைவர் சி.பா. ஆதித்தனார், நெடுஞ்செழியன், முஸ்லீம் லீக் தலைவர் இஸ்மாயில் சாகிப் ஆகியோர் கலந்து கொண்டு இந்தித் திணிப்பு எதிர்த்துத் தீர்மாணம் கொண்டு வந்தனர்.

கலாச்சாரம்மதம் அரசியல்:

அரசியல் நிகழ்ச்சிகளால் மதம் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் கலாச்சார நிகழ்வுகளால் மதம் பாதிக்கப்படுவது என்பது தமிழகம் கண்ட உண்மை.

ஆசாரப் பிராமணக் குடும்பக் குழந்தைகள் கூட உடல் நலம் குன்றினால் பள்ளிவாசலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, மௌல்வி மந்திரித்துத் தரும் கறுப்புக் கயிறு கட்டப்படுகிறது.

வேளாங்கண்ணி ஆலயத்தில் ஹிந்து மதத்தினர் வேண்டுதல் செய்­து, காணிக்கை செலுத்துவது தமிழகத்தில் நிலவும் நடைமுறை.

நெல்லை மாவட்டம் பொட்டல் புதூரில் உள்ள மசூதியில் நடைபெறும் 11 நாள் கந்தூரி விழாவின் நிகழ்ச்சிகளில் திருநீறு விநியோகிக்கப்படும். (சொமலே எழுதிய தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் ப.144)

நாகூர் தர்காவிலும் இதுபோல் இந்துக்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே, பண்பாட்டுடன் கலந்த எந்த அம்சத்தையும் எந்தச் சக்தியாலும் அசைப்பது கடினம். மண்டைக்காடு, மீனாட்சிபுரம், விநாயகர் ஊர்வலம் – இவை எதுவும் இங்கே மதக் கலவரத்தைத் தூண்டமுடியாது.

பெரியாரை ஏற்றுக் கொண்ட தமிழினம் பிள்ளையார் கோவில்களைத் தெருக்குத் தெரு கட்டி வைத்து வழிபடுகிறது. எத்தனை சமூகச் சீர்திருத்தம் வந்தாலும் தமிழ்ப்பெண் தாலி இல்லாமல் திருமணம் செய்­து கொள்ளமாட்டாள். அதி நவீனக் கம்ப்யூட்டர் சாதனங்களை நிறுவினாலும் கற்பூரம் ஏற்றிப் பூஜை நடத்தி விட்டுதான் தமிழன் காரியம் பார்ப்பான். இது மூடநம்பிக்கை என எள்ளி நகையாட முடியாது என்பதை மறக்கவும் கூடாது.

வெளிநாட்டுத் தொழில் நுட்பம் குறித்த கருத்தரங்கைப் பிரதமர் தொடங்கி வைத்தாலும் குத்துவிளக்கை ஏற்றுகிறார். கொரிய நாட்டுக்கார நிறுவன உயர் அதிகாரிகள் ‘பூமி பூஜை’ செய்கின்றனர். இவையெல்லாம் பண்பாட்டின் சின்னங்கள்.

இந்தப் பண்பாட்டின் வேர், மொழி. பொதுவாக மொழி என்ற விஷயத்தில் தமிழர்கள் திறந்த மனத்துடன்தான் இருந்து வந்துள்ளனர்.

பல நூற்றாண்டுகளாகத் தமிழ் மொழியுடன் சமஸ்கிருத மொழியையும் இணையாக ஏற்றுக்கொண்டு வந்த தமிழன் ’ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்’ என்றான். சிவபெருமானின் உடுக்கையின் ஒரு புறத்திலிருந்து தமிழ் வந்தது என்றும், மறுபுறத்தில் இருந்து சமஸ்கிருதம் வந்தது என்றும் சமமாகக் கருதிவந்தான்.

ஆனால் அதே வடமொழி திணிக்கப்படும்போது சரியான கோடு போட்டுக்கொண்டு, ’ஆரியம் போல் உலக வழக்கொழிந்து’ அழியாத தமிழ் என்கிறான்.

தெலுங்குக் கீர்த்தனைகள் பாடிய தியாகராயரைப் போற்றிய அதே தமிழன் – தமிழ் இசையை ஓர் இயக்கமாக ஏற்றான்.

மொழி விஷயத்தில் விடுதலைப் போருக்குப் பிறகு இன்றுவரை கண்ட மிகப்பெரிய தாக்குதல் ’ஹிந்தி’ எதிர்ப்பு. இந்தி பேசாத மாநிலங்களில் தமிழன் காட்டிய வேகமும் பாராட்டத்தக்கதாகவே உள்ளது.

மொழி சார்ந்து அரசியல் வெற்றி :

விடுதலைக்குப் பிறகு, அகில இந்திய அளவில் மூன்று விஷயங்கள் பின்னிப் பிணைந்து பிரச்சாரம் செ­ய்யப்பட்டு வந்தன. காங்கிரஸ் – தேசியம் – ஹிந்தி மூன்றும் தமிழனை நேரடியாகப் பாதிக்காத வகையில் அவற்றை ஏற்றுக் கொண்டது தமிழகம்.

தமிழ் மண்ணில் மொழி வளர்ச்சியுடன் மணைந்த தேசியவாதிகள் புகழ் உச்சியில் இருந்தபோது தேசியத்தைத் தமிழன் ஏற்றுக் கொண்டுவந்திருக்கிறான்.

கல்கி, ராஜாஜி, நாமக்கல் கவிஞர், மா.பொ.சி., ஜீவா, பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம், கே.டி.கே. தங்கமணி – இவர்கள் புகழ் உச்சியில் அதாவது மக்களிடையில் பிரபலமாக இருந்தவரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் தேசியம் தழைத்து வந்தது.

ஆனால், தமிழ்ப்பற்று தமிழனின் மானம் காங்கிரஸ் தேசியத்திலிருந்து சற்று விலகத் தொடங்கியபோது ராஜாஜி ஆகியோர் காங்கிரஸுக்கு எதிரான நிலையை எடுக்கத் தொடங்கினர். ஈ.வெ.கி. சம்பத், கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் தேசிய வாதத்திலிருந்து விலகத் தொடங்கியபோது தமிழன் தேசியப் பார்வையிலிருந்து விலகத் தொடங்கினான்.

பொதுவுடமை இயக்கமும் தமிழ்ப் பார்வையிலிருந்து விலகி, உலகப் பொருளாதாரப் பார்வையை மேற்கொண்டதால் மக்களும் அதிலிருந்து விலகியே நின்றனர். தேசிய தலைவர்களும் ‘தமிழ்’ மொழியிலிருந்து விலகத் தொடங்கினர். தமிழ்ப் பார்வையிலிருந்து பொதுவுடமை இயக்கமும் விலகத் தொடங்கியது. எனவே ஈர் இயக்கங்களின் அணுகு முறையையும் தமிழன் ஏற்க மறுத்தான். அதன் விளைவே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் எழுச்சி, அந்த எழுச்சிக்கு முத்தாய்ப்பாய்த் திகழ்ந்ததுதான் இந்தி எதிர்ப்பு என்ற போராட்டநிலை.

அதுவரை, தேசியத்தைக் காங்கிரஸ் கொண்டுவந்த போது ஏற்ற தமிழன், ஒரு கையில் இந்தியையும் ஏற்றுக் கொண்டுவந்த போது தேசியத்தையும் நிராகரித்ததால் காங்கிரசையும் ஒதுக்கினான்.

தேசியவாதத் தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதலை அடுத்துப் பழுத்த தேசிய வாதிகளான ராஜாஜி, ம.பொ.சி. ஆகியோர் தமிழனின் சுயமரியாதையைக் கவனத்தில் ஏற்றனர்.

எழுச்சிப் பாதையில் செல்லத் தொடங்கிய தி.மு.கழகத்துக்கு இது பெரிதும் உதவிற்று. மொழி இளைஞர்களிடையில் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தத் தொடங்கியது. (இராம. அரங்கண்ணலின் நினைவுகள் ப.110).

மொழி என்ற நுட்பமான (Sensitive) விஷயம் தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றியுள்ளது. கடைசியில் தமிழும் தமிழையும் தமிழினத்தையும் முன்னெடுத்து அரசியல் ரீதியில் வெற்றி ஈட்டியது தி.மு.க.

இதே நிலை 1996 பொதுத் தேர்தல் – ’தமிழனின் தன்மானம்’ – கேள்விக்குறி ஆக்கப்பட்டபோது தேசிய-காங்கிரஸ்வாதியான ஜி.கே. மூப்பனார் ‘மாநிலக் கட்சியைத்’ தொடங்கினார். அவரது ’தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி’ குறுகிய காலத்தில் வெற்றி கண்டது.

சமூக நலம் :

முப்பது ஆண்டுகளுக்கு முன் அம்மை குத்துவதற்கு நலப்பணியாளர்கள் வீடுகளுக்கு வந்தால் ‘நாங்கள் ஏற்கெனவே அம்மை ஊசி போட்டாகி விட்டது’ என்று கூறிக் கதவுகளை மூடினர். இது கிராமப்புற நிலை மட்டுமல்ல. நகர்புற நிலைமையும் தாம். இந்நிலை எழுபதுகள் வரை நீடித்தது.

ஆனால் சமீபத்தில் ’போலியோ’ என்ற தடுப்பு மருந்து போடுவதற்குப் படித்தவர், படிக்காதவர், கிராமத்தினர், நகரத்தினர் என்று பாரபட்சமின்றி அனைத்துத் தரப்பினரும் அந்த மருந்தினைத் தங்கள் குழந்தைகளுக்குப் போட்டனர். இந்த அறிவியல் விழிப்புணர்வில் அரசின் விளம்பரச் சாதனத்துடன் பத்திரிகைகளுக்கும் மிகப்பெரிய பங்குண்டு.

மக்கள் தொகைக் கட்டுப்பாடு விஷயத்தில் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது. பெரியம்மை, பிளேக் போன்ற நோய்களை அறவே ஒழித்துள்ளது. தொழுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி, முன்னேற்றப்பாதையில் செல்வது, எய்ட்ஸ் பற்றி மக்களைச் சிந்திக்கத் தூண்டியுள்ளது. இவை தமிழ்நாடு பெருமிதம் அடையச் செய்யும் விஷயம்.

குடும்ப நலத் திட்டத்தைப் பொருத்த வரையில், தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது.

இது விஷயத்தில் சில ஆண்டுகளுக்கு முன் தமிழகம் படைத்த சாதனைகளை இதழ்கள் புகழ்கின்றன.

குடும்ப நலத்திட்டத்தில் எண்பதுகளில் சாதாரண நிலையில் இருந்த தமிழகம் தற்போது மகத்தான முன்னேற்றம் அடைந்துள்ளது என்கிறது ’இந்தியா டுடே’ இதழ் (30-9-94).

1984ஆம் ஆண்டில் 2.8 சதவிகிதம் ஆக இருந்த பிறப்பு விகிதம் 2.07 சதவிகிதமாகக் குறைந்தது என்கிறது புள்ளிவிவரம்.

“வாழ்க்கைத்தரமோ, தனி நபர் வருவாயோ உயராத நிலையில் கூட இந்த முன்னேற்றம் வியப்பளிக்கிறது” என்கிறது அந்த இதழின் ஆய்வுக் கட்டுரை.

எல்லாவற்றையும் விடக் காலஞ்சென்ற முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் கொண்டுவந்த ‘சத்துணவுத் திட்டம்’ தமிழ்நாட்டின் மகுடத்தில் ஒரு மாணிக்கக் கல். ஆரம்பத்தில் விமர்சனத்துக்கு ஆளான இத்திட்டத்தை, விமர்சித்தவர்களே ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவானது.

காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டத்தை விட எம்.ஜி.ஆர் கொண்டுவந்த சத்துணவுத் திட்டம் மகத்தான வெற்றியைக் கண்டுள்ளமைக்கு ஒரு காரணம் உண்டு. “காமராஜரின் ஆட்சியின் போது மதிய உணவுத் திட்டம் ’தன்னார்வ’ இயக்கமாகக் (Voluntary Movement) கடைபிடிக்கப்பட்டதால், மக்கள் தங்களை ஈடுபடுத்த முனையவில்லை. அதனால் வெற்றி பெறவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அது அரசின் நலத்திட்டமாக மாற்றப்பட்டது. எனவே, நிரந்தரமாகிவிட்டது” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ‘ASIDE’ ஆசிரியர் சத்தியமூர்த்தி.

அதைப்போல்தான் தொழுநோய் ஒழிப்பு, அம்மை ஒழிப்பு, எ­ட்ஸ் ஒழிப்பு திட்டங்களை அரசின் அமைப்புகள் ஏற்றுக் கொண்டுள்ளன. குடும்ப நலத்திட்டத்தின் வெற்றிக்கும் அதுவே காரணம். இத்திட்டம் பள்ளி செல்லும் சிறுவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியது. சிசு மரணத்தையும் கனிசமாகக் குறைத்துள்ளது. இத்திட்டத்தின் வெற்றிக்கு அரசியல் ஆதரவு பெரிய காரணம்” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ராஜ் செங்கப்பா (இந்தியா டுடே 30-9-94).

கலைகலாசாரம் :

கலையும் கலாச்சாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது திரைப்படத்தினால் என்பது நிதர்சன உண்மை. திரைப்படம் விஞ்ஞானத்தின் விளைவால் நாடகத்துக்குப் பிறந்த குழந்தை. ஆனால், திரைப்படம் மக்கள் சாதனமாக மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டதால் அதன் வழியே சாஸ்திரீய கலையும் ஏற்கப்பட்டது; சாமானியனின் கலையும் ஏற்கப்பட்டது.

அரசியல் அமைப்புகளின் வெற்றி தோல்விபோல் கலையிலும் அமைந்துள்ளது என்றாலும் அதில் திரைப்படத்தின் பங்கு கணிசமாக உள்ளது.

சாஸ்தீரிய இசை விற்பன்னர்களில் எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.கே. பட்டம்மாள், எம்.எல். வசந்தகுமாரி, சீர்காழி கோவிந்தராஜன் முதல் கே.ஜே. யேசுதாஸ், உன்னி கிருஷ்ணன் வரையிலானோர் பிரபலம் ஆனதற்குத் திரைபடமே பிரதான காரணம்.

எனினும் திரைப் பின்னணி சிறிதும் இன்றி மக்கள் செல்வாக்கைப் பெற்றவர்களில் செம்மங்குடி ஸ்ரீநிவாசஐயர், புல்லாங்குழல் டி.ஆர். மகாலிங்கம் (மாலி). செம்பை வைத்தியநாத பாகவதர், ராஜரத்தினம் பிள்ளை, மதுரை மணி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களது வெற்றிக்குக் காரணம் பத்திரிகைகள்.

திரைப்படப் பின்னணி உள்ளவர்களே ‘மக்கள் கலைஞர்களாக’ அங்கீகரிக்கப்பட்டு வருகின்றனர். திரைப்படம் கலைகளுக்கு அங்கீகாரத் தளமாக இருக்கிறது, ஆனால் கலாச்சாரத்தின் சிதைவுக்கும் அந்தச் சாதனமே காரணமாக உள்ளது.

“அறுபதுகளுக்குப் பிறகு, சினிமாவின் தாக்கம் கிராமப்புறங்களில் வந்த பிறகு, பாரம்பரியமான கரகம் போற்றத்தக்கதாக இருக்கவில்லை. ஜனங்களுக்குக் கரகம் இதனாலேயே மறந்துபோயிற்று” என்கிறார்கள் ’அகிலா நியூஸ்’ லட்சுமணன். (தமிழர்கள் மறந்ததும், மறக்காததும் ப.7).

திரைப்படம் நமது கலாச்சாரத்தை முழுவதுமாக அழித்து விட்டதாகவும் சொல்ல முடியாது. முழுவதும் பாதித்ததாகவும் கூறமுடியாது. சுருக்கமாகச் சொன்னால் 50 ஆண்டு காலச் சினிமா விலாச மில்லாதவர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பண்பாட்டைப் பாதித்தும் உள்ளது. கலாச்சாரத்தைப் புதுப்பித்தும் இருக்கிறது.

மேடை நாடகங்களில் திறமைகளைக் காட்டிக் கொண்டிருந்த நடிகர்கள் (சிவாஜி, முதல் சிவக்குமார் வரை) பாடகர்கள் (எம்.எஸ். முதல் உன்னி கிருஷ்ணன் வரை) நாட்டியக் கலைஞர்கள் (கமலா முதல் ஷோபனா வரை) ஆகியோரின் பிரபலத்துக்குச் சினிமாவே அடித்தளம்.

டிஸ்கோ நடனம், பிளஸ் டூ வகுப்பில் காதலித்தல், ரத்தம் பொங்கும் வன்முறை இவையெல்லாம் சினிமாவால் கலாச்சாரம் சீரழிவதன் அடையாளம்.

அதே சமயம் மதுரையிலிருந்து படையெடுத்துச் சினிமாவில் நுழைந்த பாரதிராஜா, இளையராஜா ஆகியோர் நாட்டுப்புறக் கலைகளைப் புதுப்பித்தனர். கிராமியக் கலைகளாலும் புகழ் அடைய முடியும் என்பதற்கு விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், புஷ்பவனம் குப்புசாமி உதாரணம் (தமிழர்கள் மறந்ததும், மறக்காததும் ப.98)

கலாச்சாரத்தைத் திசை திருப்பிய பணியையும் சினிமா செ­துள்ளது. அறுபதுகள் வரை சிலம்பக் கழிகளைச் சுழற்றிய இளைஞர்கள் எண்பதுகளில் புரூஸ்லீ படங்களைப் பார்த்து காராத்தே, குங்ஃபூ என்று திசை மாறினர். எனினும், அவை கவலை தரும் பாதை அல்ல என்பது ஆறுதல்.

நிறைவுரை:

தமிழ்நாட்டின் வளர்ச்சியுடன் செய்தித்தாள், பத்திரிக்கைகளின் வளர்ச்சியும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க அம்சம்.

தகவல் சாதனங்களைப் பொறுத்த வரையில் உள்ளடக்கத்தில் ஓரளவு வெளிநாடுகளையே பின்பற்றி வந்தாலும், அதன் பரிமாணத்தில் (Evolution) ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சற்றுக் கூர்மையாகக் கவனிக்க வேண்டியிருக்கிறது.

இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் அவை சுதந்திரத் தீயை மூட்டுவனவாக இருந்தன. பல தடை செய்யப்பட்டன. ஏராளமானவை அரசின் நெருக்கடியால் நின்று போயின.

ஆயினும், அவை மூட்டிய தீ மக்களிடம் போய்ச் சேர்ந்து பெருந்தீயாக விஸ்வரூபம் எடுத்தது.

ஒரு சாதனம், ஒரு தேவைக்குப் பயன்படுகிறது என்கிறபோது, அந்தத் தேவை முடிந்த பிறகு வேறு ஒரு வடிவத்தை, செயலை மேற்கொள்வது வாடிக்கையானதாகி விடுகிறது.

அதைப் போலவே தகவல் சாதனங்களும், மக்களிடம் போ­ச் சேர வேண்டிய கருத்துக்கள், செய்திகள், தகவல்களைத் தெரிவித்தது போக மற்ற சமயங்களில் பொழுது போக்கு அம்சங்களையே வெளிப்படுத்துகின்றன. அதனால்தான் சுதந்திரப் போராட்டக் காலத்தில் அரசியல் கட்டுரைகளை அதிகம் எழுதி வந்த இதழ்கள் அதன் பின்னர் பொழுது போக்கு அம்சங்களைப் பெரிதும் மேற்கொண்டன.

நாளேடுகளுக்குச் செய்திகள் அன்றாடத் தீனியாக வந்து குவிகின்றன. எனவே பத்திரிக்கைகளின் பணி செய்திகளை – அன்றாட நிகழ்வுகளை வெளியிடுவதுடன் நின்றிருந்தது. பிறகு, பல புதிய நாளேடுகள், இதழ்கள் தோன்றியதால், அவற்றிடையில் வணிகப் போட்டிகள் தலை தூக்கத் தொடங்கின. அதுவரை செய்திகளைத் தருவதுடன்  நின்றிருந்த நாளேடுகள், செய்திகள் உள்ளேயே போய், தோண்டித் துருவி, சிறப்புக் கட்டுரைகள் (Special Features), புலனா­வுச் செ­திகள் (Investigative Stories), சிறப்புப் பேட்டிகள் (Exclusive Interviews) என்ற வடிவில் தகவல்களை வெளியிட்டு, கூடுதல் தனித்த அம்சங்களை வெளிக் கொணர்கின்றன.

பத்திரிகைகள், சமுகத்திற்குத் தேவையான கருவியாக இருக்கும் வரை ‘Media’ தகவல் சாதனம் என்ற வடிவில் இருந்து வந்தன. அதன் பிறகு, தொழில், வியாபாரப் போட்டிகள் என்ற இன்னொரு நிலை உருவானபோது அவை Product ஆகி விடுகின்றன.

இன்றுள்ள பத்திரிகைகள் பல அந்த நிலையை அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இன்னொரு மாற்றம் தேவைப்படுகிற போது செய்தித் தாள்கள், பத்திரிகைகள் தாங்கள் அதற்கேற்ற வடிவத்தைத் தாங்களே அமைத்துக் கொள்கின்றன என்பது சந்தேகத்துக்கு இடம் தராத உண்மை.

இனி, அரசு அமைப்புகள் எந்த வகையான மாற்றங்களைத் தன்னகத்தே உருவாக்கினால் பயன்களை அடைய இயலும் என்பதையும் அப்பயன்களை அடைவதற்கான செயல்பாடுகளில் தகவல் சாதனங்களின் பங்குகள் பற்றியும் சில எளிய யோசனைகள்:-

அரசியல் :

மாநிலத்தின் பிரதான, அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கொள்கைகள் குறித்த நிலையை மேற்கொள்ள, அனைத்துக் கட்சிகளைக் கொண்ட ஒரு நிலைக் குழு (All Parties Standing Committee) அமைக்கலாம். இந்தக் குழுவில் யாரும் சிறிய கட்சி, யாரும் பெரிய கட்சி என்ற பேதம் தேவையில்லை. மேலும் தன்னார்வ அமைப்பாக (NGOs) இடம் பெறச் செய்து, அனைவருக்கும் சமமான பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். மக்கள் மன்றங்களில் (சட்டப்பேரவை, மாநகராட்சி ஆகியவை) தன்னார்வ அமைப்புகளுக்கு இடமளிக்க வேண்டும்.

காவிரிப் பிரச்சினை, இட ஒதுக்கீடு, ஹிந்திப் பிரச்சினை, மாநிலங்களிடையிலுள்ள பிரச்சினைகள், மதுவிலக்கு ஆகிய விஷயங்களில் பொதுவான நிலை மேற்கொண்டுள்ள கட்சிகள் இடையே எந்த அம்சத்தில் வேறுபாடு உருவாகியதோ அவற்றைக் களையவே அனைத்துக் கட்சி நிலைக்குழு செயல்பட வேண்டும்.

உதாரணத்துக்கு, கர்நாடக மாநிலக் கட்சிகள் தங்களுக்குள் கொள்கை அடிப்படையில் எதிரும் புதிருமான நிலைகளை மேற்கொண்டிருந்தாலும் காவிரிப் பிரச்சினை விஷயத்தில் ஒரே குரலில் நிற்கின்றன. ஒன்றுபட்டுச் செயல்படுகின்றன. இப்பிரச்சினையில் தமிழ்நாட்டில் ஒரே நிலை, ஒரே விருப்பம் என்பதில் யாரும் வேறு படுவதில்லை. ஆனால், தப்பித்தவறி புகழ் வேறு ஒருவருக்குப் போய் விடக்கூடாதே என்ற தவறான, குறுகிய நோக்கம் முட்டுக்கட்டையை நீடிக்க வைக்கிறது. எனவே, இத்தகைய பிரச்சினைகளில் அரசு ஒரு தலைவனைப் போல் செயல்படக் கூடாது. தமிழ் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பாளர் என்று செயல்பட வேண்டும்.

சமூகநல நிதி:

தமிழ்நாட்டை அச்சுறுத்தும் சமூகக்கேடு குழந்தைத் தொழிளார் முறை (Child Labour), கொத்தடிமை முறை (Bonde Labour),, பெண் சிசுக்கொலை (Female Infanticide), போதைப்பொருட்கள் பழக்கம் (Dug) இவை அபாயகர நிலையை எட்டவில்லை என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது. அசட்டையாக இருந்தால் தமிழகம் மூழ்கிவிடும் என்பது நிச்சயம். இது குறித்து விழிப்பை மக்களிடையே பரப்ப போதிய நிதி தேவைப்படும் என்ற நிலையில் ’முதலமைச்சரின் சமூக நலநிதி’ உருவாக்கலாம்.

குழந்தைத் தொழிலாளர் முறை பிரச்சினைக்கு இரண்டு அம்சங்கள் உள்ளன. குறைந்த கூலியில் தொழிலாளி கிடைக்கிறான் என்பதால் முதலாளி அவற்றைக் கைவிடுவதில்லை. வறுமை காரணமாகத் தொழிலாளிக்கு நிர்பந்தம் ஏற்படுவது இன்னொரு காரணம்.

முதலாளியைப் பொருத்தவரை குழந்தைத் தொழிலாளியானாலும் ஊதியம் அளிப்பதுடன் நிற்காமல் பணி நேரத்தில் குறிப்பிட்ட காலம் அவனது கல்வி புகட்டும் பொறுப்பை ஏற்க வேண்டும், அல்லது குழந்தைத் தொழிலாளியின் குடும்பத்தைச் சேர்ந்த மூத்த ஒருவருக்கு வேலை வாய்ப்புத் தரவேண்டும் என்ற கட்டாய நிலையை உருவாக்க வேண்டும். அந்தக் குழந்தைகளுக்கென அரசே தனியாகத் தேர்வுகள் நடத்தலாம். ஓரளவு தேர்ச்சி பெறத்தக்க மாணவர்களைத் தொழில் நிறுவனங்கள் உருவாக்கினால் அவற்றுக்குச் சில தொழில் சலுகைகளை அளிக்கலாம்.

இதனால், அடுத்த தலைமுறைக்குக் குழந்தைத் தொழிலாளர் முறை தொடர்ந்து உருவாகுமேயொழிய முற்றிலும் ஒழிந்து விடாது என்பது ஒரு வாதமாக இருக்கக் கூடும்.

ஆனால் குழந்தைத் தொழிலாளர் முறை ஏன் உருவானது? குழந்தையைப் படிக்க வைக்க முடியாமல் குடுப்பத்தில் பொருளாதாரச் சுமையை ஏற்க வேண்டியுள்ளதே என்ற நிர்பந்தம்தான்.

அதனால் விளையும் சமூகக் கேடு என்ன? ஒரு குழந்தையின் அருமையான பருவம் பொருளாதாரக் கொடுமையால் களவாடப் படுகிறதே என்பதுதான், அவனது கல்விப்பருவம் கடத்தப்படுகிறதே என்பதுதான்.

இந்த இரண்டையும் ஓரளவேனும் தீர்க்கவே, அந்தப் பொறுப்பைக் குழந்தை தொழிலாளர்களை வைத்திருக்கும் தொழிலதிபர்களிடம் கட்டாயப்படுத்த அரசு இயந்திரம் முனைய வேண்டும்.

உணவகங்கள், பெட்ரோல் நிலையங்கள், மோட்டார் வாகனப் பழுதுபார்ப்பு நிலையங்கள் என்ற சிறிய தொழில் – வணிக மையங்களிலும், தீப்பெட்டித் தொழிற்சாலை பட்டாசு ஆலை, கல்லுடைக்கும் ‘லாரிகள்’ ஆகியவற்றிலும் அரசு நிர்பந்தத்தைச் செலுத்தலாம்.

பெண் சிசுக் கொலையைத் தடுக்க – தீவிரப் பிரச்சாரம் பெரும் பயன் அளிக்கும்.

குடும்பநல, சமுக நல, உடல் நலத் திட்டங்களைப் பொறுத்த வரையில் தீவிரப் பிரச்சாரம் மட்டுமே பயன் தந்து வந்துள்ளது என்பது தமிழ்நாட்டின் வரலாற்று உண்மை.

தமிழகத்தின் முன்னேற்றத்துக்கான வழிமுறைகளைத் தகவல் சாதனங்களின் வாயிலாகவே மக்களிடம் பரப்ப இயலும் என்பது வரலாற்று உண்மை. பொழுது போக்குச் சாதனமாக இருந்தவை பயனுள்ள சாதனமாக விளங்க அதுவே வழி. அப்படி அமைந்திருந்தால் தமிழகம் வளரும்; தகவல் சாதனங்களும் வளரும்.

பா. கிருஷ்ணன் :

பச்சையப்பன் கல்லூரியில் (சென்னை) பி.ஏ., எம்.ஏ., தமிழ் இலக்கியம் பயின்றார். “அமுத சுரபி’ மாத இதழில் 6 மாத கால இதழியல் பயிற்சிக்குப் பிறகு, 1979 ஜுலை முதல் 1984 செப்டம்பர் வரை ‘ஆனந்த விகடன்’ வார இதழ் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தார். பிறகு ‘தினமணி’ நாளேட்டின் செய்தியாளராக, முதுநிலை செய்தியாளராகப் (1984 – 1993) பணிபுரிந்தார். 1993 முதல் 1996 அக்டோபர் வரை ‘தினமணி’ முதுநிலை உதவி ஆசிரியராக இருந்தார். பின்னர் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளேட்டின் முதுநிலைச் செய்தியாளராகப் பணிபுரிந்து வருகிறார். ஏராளமான கவிதை, கதை, கட்டுரைகள் எழுதியுள்ளார். செய்திக் கட்டுரைகள், செய்தி விமர்சனங்கள் படைத்துள்ளார். இதழியல் வகுப்புகள் நடத்தியுள்ளார்.

You Might Also Like