Star Mountain

My travels and other interests

சமூகம்தமிழ்நாடு நேற்று இன்று நாளை

தமிழகச் சுற்றுச் சூழல் (1997)

தமிழகச் சுற்றுச் சூழல்
ஜே. பால் பாஸ்கர்
தலைவர்,
நீதிபதி பகவதி சுற்றுச் சூழல் வளர்ச்சி நிறுவனம்,
திருச்சி சாலை, திண்டுக்கல்-624 005

சூழல் என்பது பண்டைத் தமிழர்கட்கு அரணாகவும் உரணாகவும் இருந்தது. பழந்தமிழர்களின் வாழ்வு முறை இயற்கையின் உறவாடலாகவே அமைந்தது. நிலங்களின் பகுப்பும், ஒழுக்கத்தின் பகுப்பும் பண்டு தமிழர்க்குச் சூழலின் தன்மையிலேயே அமைக்கப்பட்டிருந்தது. ஐவகை நிலத்திற்குத் திணையியல் ஒழுக்கத்திற்கும் மரஞ்செடி கொடிகளையே குறியீடாகப் பெயர் சூட்டியுள்ள பெற்றியை நாம் வியந்து நோக்கலாம். இது தொல்காப்பியருக்கு முன்பிருந்த காலத்தில் இருந்து, தொடரியாக நடைக்கழகக் காலம் வரைத் தென்படுகிறது. அதன்பின் மெல்ல மெல்ல பண்பாடு எச்சங்களாக மாறிவிட்டன. முல்லைக் கொடிக்குத் தேரைக் கொடுத்தது, மயிற் பேடுக்குப் போர்வை தந்தது இப்போது நமக்கு நகைப்பாகத் தோன்றினாலும் அதன் பின்னே இருந்த உயிர்ம நேயத்தை நாம் உற்று நோக்க வேண்டும். பழந்தமிழரின் இயற்கை நேய உணர்வுக்குப் பல்வேறு சான்றுகளைக் காட்ட முடியும்.

மெல்ல மெல்ல மாறி வந்த அரசியல் பொருளியல், பண்பாட்டு மாற்றங்கள் தமிழர்களின் இந்தச் சூழல் நேய உணர்வை மங்கி மறக்கடிக்கச் செய்துவிட்டன. தமிழ்நாடு மெல்ல மெல்ல ஒரு குப்பைக் கோட்டமாக மாறத் தொடங்கி விட்டது.

தெள்ளிய நீரோடையாக வற்றிக்காய்ந்து விட்டது. மலைகளிலே மரங்கள் இல்லை. குன்றுகள் கூடக் கற்பாளங்களாக விற்பனையாகத் தொடங்கிவிட்டன. வயல்பெறிகளில் நஞ்சை விதைத்து நஞ்சை அறுக்கிறோம். தென்பொதிகை மலையாளக் குற்றாலம் தென்றலை மறந்து விட்டது. கண்ணகி படகில் வந்த வைகை இன்று சாக்கடை ஒடையாகி விட்டது. கோடைக்கானலும், ஊட்டியும் மர ஆடைகளைக் களைந்து அம்மணமாகி நிற்கின்றன. காவிரியின் கரைகளில் தஞ்சை மக்கள் வடித்த கண்ணீர்தான் பாய்கின்றது. கூடங்குளத்தில் அணு ஆலையின் உறுமல் கேட்கத் தொடங்கி விட்டது. தூத்துக்குடியிலோ தாமிர உருக்காலை, தற்கொலைக்கு மக்களைத் தூண்டுகிறது. பவளப்பாறைகளும், கிழக்குக் கடலோரச் சதுப்புக் காடுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. நெற்கழனிகள் மேலை நாட்டினருக்கு இறால் களஞ்சியமாகின்றன. திண்டுக்கல்லும், வேலூரும் தோலாலைக் கழிவால் தூக்குமேடையில் நிற்கின்றன.

கடலூரில் வேதி ஆலைகளால் மக்கள் ஒவ்வொரு நாளும் செத்து மடிகின்றனர். ஆற்று மணலைக்கூட இப்போது களவாடத் தொடங்கிவிட்டனர். ஆறுகள் எல்லாம் ஆலைக்கழிவுச் சாக்கடைகளாகி விட்டன. நொய்யலும் பவானியும் நோய்களைப் பரப்புகின்றன. நீலமலையில் நடப்பதெல்லாம் சந்தன வெட்டும் யானை வேட்டையுந்தான். தனலாகச் சென்னையில் தாபர் டூபாண்டின் புதிய மிரட்டல் பொருளியல் வளர்ச்சியில் தமிழகம் மூச்சுத் திணறுகிறது. நீரும், நிலமும், காற்றும் களங்கப்பட்டுவிட்டன. உலகமெங்கும் நடக்கும் உண்மை இதுவென்றாலும் தமிழகம் என்ற தங்கத் திருமேனி எல்லா வளமும் பெற்றிருந்தும் ஒவ்வொன்றையும் இழக்கின்ற அவலத்தை என்னவென்பது?

ஆலையும் வேலையும் மக்களுக்காகத்தான். ஆனால் மக்களின் வாழ்வை மடிவதை நோக்கிக் கொண்டு சென்றால் ஆலையும் வேலையும் யாருக்குப் பயன் தரும்? தமிழ்நாடு வளமிகு மலைகளையும், கொழுவியக் கடலையும், விளைமிகு வயல்களையும் கொண்டது. எண்ணற்ற கைத் தொழில்கள் இங்கு உள்ளன. இதனால் ஏராளமான மக்களுக்கு வேலை கொடுக்க முடியும். சூழலை மாசுபடுத்தாத தொழில், மலை வளத்தைக் காப்பாற்றல், கடல் வளத்தைப் பாதுகாத்தல் மரபு மரபாக வந்த தொழில் நுட்பங்களைக் கண்டறிந்து பயன்படுத்தல், தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை மீண்டும் அறிமுகம் செய்தல். மண்ணின் மீது பற்றும் பாசத்தையும் உண்டாக்கல். அந்நிய நாட்டில் மாசற்றச் சூழலை அனுபசித்து ரசித்து வாழ்ந்து வரும் கடல் கடந்த தமிழர்கள் சொந்த நாட்டில் முதலீடு செய்யும்போது அத்தொழில் மாசுபடுத்தாத தொழில்தானா என்பதை உறுதிசெய்தல் வேண்டாமோ? இதுவே சீரழிவற்ற புதிய தமிழகத்தை உருவாக்கும் செயல்பாடுகளாகும்.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிருதல் காடும் உடையது அரண்என்ற தமிழ்மறைக்கேற்ப நன்னீரும் நற்கடலும் நஞ்சற்ற மண்ணும் அருவிகொட்டும் மலையும் பெரும் மரங்கள் அடங்கிய காடும் கொண்டதாகத் தமிழ்நாடு திகழ வேண்டும். அதுவே நம் அவா.

தமிழகச் சுற்றுச் சூழல்

சுற்றுச்சூழல் என்பது பண்டைத் தமிழர்கட்கு அரணாகவும் உரனாகவும் இருந்தது. பழந்தமிழர்களின் வாழ்வு முறை இயற்கையின் உறவாடலாகவே அமைந்தது. நிலங்களின் பகுப்பும், ஒழுக்கத்தின் பகுப்பும், பண்டு தமிழர்களால் சூழலின் தன்மைக்கேற்ப அமைக்கப்பட்டிருந்தது. ஐவகை நிலத்திற்கும் திணையியல் ஒழுக்கத்திற்கும் மரஞ்செடி கொடிகளையே குறியீடாகப் பெயர் சூட்டியுள்ள பெற்றியை நாம் வியந்து நோக்கலாம். இது தொல்காப்பியருக்கு முந்தைய காலத்தில் இருந்தே தொடரியாகக் கடைக்கழகக் காலம்வரைத் தென்படுகிறது. அதன்பின், அவை மெல்ல மெல்ல பண்பாட்டு எச்சங்களாக மாறிவிட்டன. முல்லைக் கொடிக்குத் தேரைக் கொடுத்ததும் மயிற் பேடுக்குப் போர்வை தந்ததும் இப்போது சிலருக்கு நகைப்பாகத் தோன்றினாலும் அதன் பின்னே இருந்த உயிர்ம நேயத்தை நாம் உற்று நோக்க வேண்டும்.

பழந்தமிழரின் இயற்கை நேய உணர்வுக்குப் பல்வேறு சான்றுகளைக் காட்ட முடியும்.

“தெய்வம் உணாவே மாமரம் புட் பறை
செய்தி யாழின் பகுதியொடு
அவ்வகை பிறவும் கருவென மொழிப”
(தொல்-பொருள் 20)

என்ற தொல்காப்பிய வரிகளில் உள்ள மாமரம், புள் என்ற சொற்கள் தமிழர்கள் கருப்பொருளாக விலங்குகளையும், செடி கொடிகளையும் கொண்டிருந்த செய்தியைக் கூறுகின்றது. இலக்கண நூலான தொல்காப்பி யம் தரும் சான்று நமக்கெல்லாம் தமிழர்களின் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நெறியைத் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது. இதே போன்று பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்களும் இயற்கையோடு இசைந்த வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

“பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல்
கைமான் வேட்டுவன் கனைதுயில் மடிதெனப்”
(புற - 320)

என்ற பாட்டு பந்தல் தேவைப்படாத நிழல் தரும் கொடிகள் படர்ந்துள்ள முற்றத்தில் துயிலும் யானை வேட்டு வனைக் காட்டுகிறது. வாழ்க்கைக்கும் செடி கொடிகளுக்கும் உள்ள உறவை இதைவிட நெருக்கமாக யார் காட்டுவர்?

“கருவிசைக் கவணையில் கல் கை விடுதலின்
இறுவரை வேங்கையின் ஒள் வீசிதறி
ஆசினி மென்பழம் அளிந்தவை உதிராத்
தேன்செய் இறால் துளைபடப் போகி
நறுவடி மாவின் பைந்துணர் உழக்கிக்
குலையுடை வாழைக் கொழுமடல் கிழியாப்
பலவின் பழத்துள் தங்கும்”
(கலித். குறி.5-10)

என்ற பாடல் வரிகள் அந்நாளில் தமிழகத்தில் இருந்த சோலைக் காடுகளின் செழிப்பைக் காட்டும். அதாவது “கவணிலே கல்லை வைத்து வேகமாக எரியும் போது வேங்கை மலர்கள் சிதறும், ஆசினிப் பழம் உதிரும், தேன்கூடுகள் துளைக்கப்படும், மாமர மலர்க் கொத்துக்கள் சிதறடிக்கப்படும், குலை வாழையின் மடல் கிழியும். அதன்பின் பலாவின் பழத்துள் அந்தக் கல் சென்று தங்கும்” என்பது இதன் பொருள். இப்படிப்பட்ட செழிந்த காடுகள் இருந்த பகுதியாக இருந்தது தமிழ்நாடு.

மெல்ல மெல்ல மாறிவந்த அரசியல், பொருளியல், பண்பாட்டு மாற்றங்கள் தமிழர்களின் இந்தச் சூழல் நேய உணர்வை மங்கி மறக்கடிக்கச் செய்து விட்டன. தமிழ்நாடு மெல்ல மெல்ல ஒரு குப்பைக் கோட்டமாக மாறத் தொடங்கி விட்டது.

இன்று, தெள்ளிய நீரோடைகள் வற்றிக்காய்ந்து விட்டன. மலைகளிலே மரங்கள் இல்லை. குன்றுகள் கூடக் கற்பாளங்களாக விற்பனையாகத் தொடங்கிவிட்டன. வயல்வெளிகளில் நஞ்சை விதைத்து நஞ்சை அறுக்கிறோம். தென்பொதிகை மலையான குற்றாலம் தென்றலை மறந்து விட்டது. கண்ணகி படகில் வந்த வைகை இன்று சாய்க்கடை ஓடையாகி விட்டது. கோடைக்கானலும், ஊட்டியும் மர ஆடைகளைக் களைந்து அம்மணமாகி நிற்கின்றன. காவிரியின் கரைகளில் தஞ்சை மக்கள் வடித்த கண்ணீர்தான் பாய்கின்றது. கூடங்குளத்தின் அணு ஆலையின் உறுமல் கேட்கத் தொடங்கிவிட்டது. தூத்துக்குடியிலோ செம்பு உருக்காலை தற்கொலைக்கு மக்களைத் தூண்டுகிறது. பவளப்பாறைகளும், கிழக்குக் கடலோரச் சதுப்புக் காடுகளும் அழிக்கப் பட்டு வருகின்றன. நெற்கழனிகள் மேலை நாட்டினருக்கு இறால் களஞ்சியமாகின்றன. திண்டுக்கல்லும் வாணிம்பாடியும் தோலாலைக் கழிவால் தூக்கு மேடையில் நிற்கின்றன.

தொல்லைக்குள்ளாக்கும் தோல் தொழிற்சாலைகள் :

திண்டுக்கல், ஆம்பூர், வாணியம் பாடியிலும், அதன் சுற்றுப்புறக் கிராமங்களிலும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரைத் தூய்மையாக்காமல் அப்படியே நிலத்தில் கொட்டி விடுவதால் கடுமையான சுற்றுப்புறச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

முன்பு தோல் பதனிடப்படுவதற்குப் பயன்பட்டு வந்த “வேட்டில்” என்ற மரங்களின் இலைகளும், சில செடிகளும் இப்போது தோல் பதனிடலுக்குப் பயன்படுத்தப்ப டுவதில்லை. ஏனெனில் இயற்கையான இந்தச் செடிகள் மூலம் தோலைப் பதனிடுதலுக்கு 45 நாட்கள் வரை பிடிக்கும். பழமையான முறையால் தோல் பதனிடப்படும் போது வெளியேறும் கழிவுநீரால் சுற்றுச் சூழலுக்கு எந்தவிதமான தீங்குமே ஏற்பட்டிருக்கவில்லை.

இப்போது எல்லாத் தோல் பதனிடும் தொழிற்சாலைகளுமே குரும (Chrome) பதப்படுத்தும் முறையை மட்டுமே கையாளுகின்றன. இந்த வகை தோல் பதனிடும் முறையில் தொழிற்சாலைக்கு வரும் உப்புத் தடவப்பட்ட தோல்கள், முதலில் தண்ணீரால் பலமுறை நன்றாகக் கழுவப்பட்ட பிறகு வேதியல் குளியல் நடக்கிறது. இந்த வகைப் பதப்படுத்தலுக்கு சுண்ணாம்பு, கார்பனேட், உப்பு, சோடியம் சல்பைடு, கந்தக அமிலம், அம்மோனியம் சல்பேட், குரோமியம் சல்பேட், எரிசாராயம், எண்ணெய், சாயங்கள் போன்றவை பயன்படுத்தப் படுகின்றன. இப்போது மூன்றே நாட்களில் தோல் பதனிடப்பட்டு விடுகிறது.

இந்த முறையில் தோல் பதனிடப்ப டுவதற்குத் தேவைப்படும் தண்ணீரின் தேவை மிக அதிகம். 100 கிலோ தோலைப் பதப்படுத்துவதற்குக் குறைந்தபட்சம் 3,200 லிட்டர் நல்ல தண்ணீர் தேவை. நிலத்தடி நீரையே தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மிக அதிக அளவில் பயன்படுத்துகின்றன. திண்டுக்கல், வாணியம்பாடி பகுதிகள் ஏற்கனவே குடிநீர்த் தட்டுப்பாடுள்ள வறட்சியான பகுதி. அண்மைக்காலங்களில் தோல் ஆலைகள் பல நூறு அடி ஆழம் உள்ள குழாய்க் கிணறுகள் அமைத்து நீரை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளம் சென்றுவிட்டது.

நாள் ஒன்றுக்குத் திண்டுக்கல்லில் மட்டும் மொத்த தோல் பதனிடும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் வேதிக் கழிவு நீரின் அளவு சுமார் 500 லட்சம் லிட்டர். இங்குள்ளவை 100க்கும் குறைவான ஆலைகளே. ஆனால் வாணியம்பாடிப் பகுதிளில் 700க்கும் மேலான தோலாலைகள் உள்ளன. எனவே அங்கு எவ்வளவு நீர் வீணாகும் என்று கணிக்கலாம்!

எவ்வித நச்சுக் கலவைகளையும் பிரித்து எடுக்காமல் நேரடியாகத் தொழிற்சாலை அருகிலுள்ள நிலத்திலேயே இந்தக் கழிவுநீர் கொட்டப்படுகிறது. ஒவ்வொரு நூறு டன் எடையுள்ள தோல் பதனம் செய்யப்படும் போதும் நான்கு டன் உப்புடன் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது.

இந்த உப்பு நீருடன் நச்சுத்தன்மை வாய்ந்த சல்பைடு, குருமத்தாதுக் கலவைகளும் கெட்ட நாற்றம் வீசும் தோல் கழிவுப் பொருட்களும் நிலத்தில் கொட்டப்படுகின்றன. இதன் விளைவாக ஒவ்வொரு தோல் பதனம் செய்யும் தொழிற்சாலையின் சுமார் ஆறு கிலோ மீட்டர் சுற்றளவு நிலப்பகுதி மாசுபடுத்தப்பட்டு, நிலத்தடி நீரும் நச்சுக் கழிவுகளால் கெட்டுள்ளது. மூன்று போகம் விளைந்த விளைநிலங்கள் தற்போது எந்தச் சாகுபடிக்குமே உபயோகப்பட முடியாமல் பாலைவனமாகக் காட்சி அளிக்கின்றன. கிணறுகள் தோண்டினாலோ, ஆழ்குழாய்கள் அமைத்தாலோ உப்புச்சுவையுடன், நச்சுத்தன்மை கொண்ட நீரே வருகிறது. இந்த நீரை உபயோகப்படுத்தும் மனிதர்கள், கால்நடைகளுக்குக் கண்டுபிடிக்க முடியாத நோய்கள் ஏற்படுகின்றன. உழவர்களோ, விளைநிலங்களைத் தோல் பதனம் செய்யும் தொழிலதிபர்களிடம் விற்றுவிட்டு, வயிற்றுக்காக அந்தத் தொழிற்சாலையிலேயே கூலியாளாகப் பணியாற்றும் அவலம்.

திண்டுக்கல்லில் உள்ள சுமார் 90 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் வருடத்துக்கு 200 கோடி ரூபாய் அன்னியச் செலாவணியைத் தருவதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. சுமார் இரண்டு லட்சம் மக்கள் வசிக்கும் திண்டுக்கல் நகரில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 6000 பேர் இந்தத் தொழிலை நம்பி வாழ்க்கை நடத்துகின்றார்கள். இது மொத்த மக்கள் தொகையில் சுமார் மூன்றே சதவீதம்.

திண்டுக்கல்லில் மட்டும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களையும், சுமார் 12,000 விவசாயிகளின் வாழ்க்கையையும், பாதித் திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தோல் ஆலைக் கழிவுகளால் திண்டுக்கல்லின் தென்மேற்குப் பாகத்தில் அமைந்திருக்கும் பூதமரத்துப்பட்டி, பேசும்சாகிபா நகர், நல்லேந்திரபுரம், குட்டியபட்டி, ராயர்பட்டி, சின்னபொன்மான் துறை, பெரிய பொன்மான்துறை, கணேசபுரம், மீனாட்சி நாய்க்கன்பட்டி, குரும்பட்டி, பெரியார் நகர் போன்ற கிராமங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள கிராம மக்கள் குடிநீருக்காகக் குறைந்தபட்சம் ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்றே தமக்குத் தேவையான குடிநீரைச் சுமந்து வர வேண்டிய சூழல் உள்ளது. இந்தப் பகுதிகளில் இருக்கும் தென்னை மரங்களின் இளநீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் இளநீரில் வேதிநச்சுகள் கலந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் முன்னேறிய நாடுகளிலெல்லாம் தோல் பதனிடுதல் சுற்றுப்புறச் சூழலை மிகுதியாக மாசு படுத்துவதால் அவற்றுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. அவை தமது தோல் பொருட்கள் தேவைக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்காளம், பிரேசில் போன்ற நாடுகளைத் தான் நம்பியிருக்கின்றன.

இந்திய அரசும் ஆண்டு தோறும் தோல் ஏற்றுமதிக்கான குறியீட்டளவை உயர்த்தி, தொழிலதிபர்களைத் தங்களது உற்பத்தியை அதிகரிக்க ஊக்குவிக்கிறது. அதையொட்டி மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். அமைதி அறக்கட்டளை போன்ற தொண்டு நிறுவனங்களும் போராடின. நீண்ட நாள் போராட்டத்துக்குப் பிறகு தோல் தொழிற் சாலை கழிவுகளைச் தூய்மையாக்கும் ஆலை அமைக்க அரசு முடிவு செய்தது. வேலையும் துவக்கப்பட்டது. ஓர் ஆண்டுக்குப் பிறகு வேலைகள் திடுமென்று நின்றுவிட்டன. நின்றது நின்றதுதான். உடனடியாகப் பணிகளைத் தொடங்க வேண்டும். பணிகள் முடிந்தால் 36 தொழிற்சாலைகளின் கழிவுநீரை மட்டும் தூய்மையாக்கலாம். இன்னும் சில தூய்மையாக்க ஆலைகள் தேவை. கடந்த 26-2-97 ஆம் நாள் தூய்மையாக்க நிலையப் பணிகள் முடிந்து திறக்கப்பட்டுள்ளது. ஆனால் இழந்த நிலத்தையும், நிலத்தடி நீரையும் எப்படி மீட்பது?

பாவப்பட்டுக் கிடக்கும் பவானி!

“கேட்டார் வினை தீர்க்கும் திருநாணாவே” என்று பாடுகிறார் திருஞான சம்மந்தர் (திருநாணா பவானி), அதாவது பவானியும், காவேரியும் கலக்கும் கூடு துறையில் குளித்தால் ஒரு தீங்கும் அணுகாமல் எல்லாப் பிணிகளும் நீங்குமாம். ஆனால் அதே திருஞான சம்மந்தர் இன்று பவானியை வந்து பார்த்தால் “கேட்காதவர்க்கும் பிணி கொடுக்கும் பவானியே” என்று தான் பாட வேண்டியிருக்கும். அந்த அளவு தொழிற் சாலைக் கழிவுகளும், நகரங்களின் கழிவுகளும் இந்த அழகிய நதியை நச்சாக்கி வைத்திருக்கின்றன. பவானி பாவப்பட்டுக் கிடக்கிறது.

பவானியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் மிக அதிகம். நீரில் வாழும் உயிரினங்களும், அதைச் சார்ந்து வாழும் மக்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளால் மீன்களும் பெருமளவில் பிற நுண்ணுயிர்களும் அழிக்கப்பட்டுள்ளன. பவானியில் இவையெல்லாம் சாதாரண நிகழ்ச்சியாகிவிட்டது. மீனினங்கள் அழிந்து போவதால் சத்துள்ள ஓர் உணவுப்பொருள் இழக்கப்படுகிறது. அதைவிட மோசம் நூற்றுக்கணக்கானவர்களின் வயிற்றுப் பிழைப்பு, உடல் நலமும் பாதிக்கப்பட்டுப் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி மக்கள் வேதனையில் வாழ்ந்து வருகிறார்கள்.

பவானி என்பது ஏதோ கோவை, பெரியார் மாவட்டப் பாவப்பட்ட மக்களின் தொல்லை மட்டுமல்ல. பவானி காவிரியுடன் கலந்து பாயும் பகுதிக்கெல்லாம் நஞ்சைத் தருகிறது. இந்தக் காவிரிதான் தஞ்சை நெற்களஞ்சியத்தை வளப்படுத்துகிறது. வள்ளலார் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிக்குத் தண்ணீர் தருவதும் காவிரிதான்.

பவானியை நஞ்சாக்குவதில் முன்னிலை வகிப்பது ஆற்றின் கரைகளில் அமைந்திருக்கும் தொழிற்சாலைகளே. இவற்றால் நிகழும் கொடுமைகளில் கண்ணுக்குத் தெரியும் பாதிப்பு நீரின் நிறமாற்றமே. கலக்கப்படும் வேதிக் கழிவிற்கேற்ப நீர் வண்ண மயமாகவும், கருமையாகவும் மாறுகிறது. இதை நாம் பவானி சாகரில் பார்க்க முடியும். தொழிற்சாலைகளின் கழிவுகள் நீரில் கொட்டப்படும் போது முதலில் உயிர்வளி (Oxygen) மறைந்து போகிறது. இதனால் நீரில் மீன், செடிகள், நுண்ணுயிர் எதுவுமே வாழ முடியாமல் அழிந்து போகிறது.

இறுதியில் எஞ்சி நிற்பது அடர்த்தியான, இருட்டு நிறத்தில் அமைந்த கொடிய நச்சுத் திரவம்தான். இந்தத் திரவம் ஆற்றின் போக்கில் நகர்ந்து செல்லும். எதிர்படும் உயிரினங்களை, தாவரங்களை, நுண்ணுயிர்களை அழித்துக் கொண்டே செல்லும். அந்த நச்சுத் திரவத்தைப் பொறுத்துவரை எல்லாம் சமம்தான். எல்லாவற்றையுமே கொல்லும், அதைக் குடிக்கும் மனிதன், விலங்குகள் உட்பட இதுதான் நிகழ்கிறது இன்று பவானியில்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேட்டுப்பாளையம், சிறுமுகை, சத்தியமங்கலம் வழியாக வழிந்தோடி ஈரோட்டிற்கு அருகே பவானியில் காவிரியுடன் சங்கமமாகிறது பவானி நதி. இடையே கேரளாவில் உற்பத்தியாகும் மேயாறு பவானி சாகரில் பவானியுடன் கலக்கிறது. பவானி சாகர் வரை சுமார் 5000 ஏக்கர் நிலம் பவானி மூலம் பாசனம் பெறுகிறது.

மேட்டுப்பாளையத்திற்கும், சத்திய மங்கலத்திற்கும் இடையே பவானி சாகரில் கீழ்பவானி பாசன நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினால் சுமார் 2,07,000 ஏக்கர் நிலம் நன்செய் மற்றும் புன்செய் பாசனம் பெறுகிறது. சத்திய மங்கலத்திற்கு அடுத்துள்ள கொடியவேரி அணையின் கீழ் தடப்பள்ளி வாய்க்கால் மூலம் 17,634 ஏக்கர் நிலமும், அரக்கன் கோட்டை வாய்க்கால் மூலம் 6,850 ஏக்கரும் பல நூற்றாண்டுகளாகப் பாசனம் பெற்று வருகிறது.

வீரபாண்டியன் காலத்தில் காலிங்கராயன் என்பவரால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது காலிங்கராயன் அணை. இந்த அணை அக்காலத்தில் கொங்கு நாடெங்கும் “காலிங்ககராயன் விநியோகம்” என்ற வரியின் மூலம் கட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 15,750 ஏக்கர்கள் பாசனம் பெற்று வருகின்றன. பெரியார் மாவட்டத்தின் பெரும்பாலான மக்களின் மிக முக்கிய வாழ்க்கை ஆதாரமாகத் திகழ்வது பவானி ஆறுதான் என்றால் அது மிகையல்ல.

பாற்கடலைக் கடைந்து கிடைத்த அமுதத்தில் தேவர்களுக்குத் தந்தது போக மீதமுள்ள அமுதத்தை, அசுரர்களுக்கு அது கிடைத்து விடக்கூடாது என்ற நோக்கில் திருமால் பவானியில்தான் பதுக்கி வைத்தாராம். இப்படிச் சொல்கிறது ஒரு புராணக்கதை. இன்றைய நிலையில் இதைக் கேட்பதற்கு வேடிக்கையாக மட்டுமல்ல வேதனையாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட அமுத ஊற்றான பவானி ஆற்றின் சீரழிவு அது உருவாகும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலேயே தொடங்கி விடுகிறது. பவானியின் மழைநீர் பிடிப்புப் பகுதியில் இயற்கை வனம் அழிக்கப்பட்டுத் தேயிலை, காபி, யூகலிப்டஸ் போன்ற ஓரினப் பயிர்கள் பயிரிடப்படுவதால் மழையின் அளவு குறைவதுடன் மண் அரிப்பும் ஏற்பட்டு பவானியின் ஆழம் குறைந்து மண்மேடாகி வருகிறது.

தொழிற்சாலைப் பயன்பாடு பவானி சாகர் வரை நாளொன்றிற்கு 64,260 கன மீட்டர் (வருடத்திற்கு 0.835 டி.எம்.சி) என்றும், பவானி சாகருக்குப் பிறகு நாளொன்றிற்கு 88.651 கனமீட்டர் (வருடத்திற்கு 1.20 டி.எம்.சி.) என்றும் உள்ளது. வீட்டுப் பயன்பாட்டிற்குப் பவானி சாகர் வரை நாளொன்றிற்கு 18 மில்லியன் லிட்டர் (வருடத்திற்கு 0.23 டி.எம்.சி) ஆகவும் பவானி சாகருக்குப்பிறகு நாளொன்றிற்கு 242.3 மில்லியன் லிட்டர் (வருடத்திற்கு 3.15 டி.எம்.சி) ஆகவும் உள்ளது.

தேயிலை காப்பி போன்ற மலைத் தோட்ட பணப்பயிர்களின் மேல் கொட்டப் படுகின்ற பூச்சிக் கொல்லி மற்றும் வேதி உரங்களின் எச்சங்கள் பவானி நதியை வந்தடைகின்றன. இவற்றால் உண்டாகும் மாசு வெளிப் படையாகத் தெரியாவிட்டாலும் அந்த நஞ்சானது தொடர்ச் சங்கிலியாக ஆறு செல்லும் வழியெல்லாம் ஆபத்தைச் சுமந்து சென்று அதை மீனிற்கும் அதன் மூலம் மனிதன், பறவை அனைத்திற்கும் கொடுக்கின்றது. சுமார் மூன்று லட்சம் ஏக்கரில் கரும்பு, வாழை, நெல், கடலை எனப் பல பயிர்களைச் சாகுபடிச் செய்து வளமாக வாழ்ந்து வந்த மக்கள் இன்று விளைச்சல் குறைவதால் துன்பத்தில் மூழ்கியுள்ளனர். பல நோய்கள் தாக்குகின்றன. ஆனால், எதனால் என்று கூட ஏழை மக்களுக்குத் தெரிவதில்லை. கால்நடைகள் கூடக் கீழ்பவானி நீரைக் குடிக்க மறுக்கின்றன. அவை சினை பிடிப்பதில்லை. அவற்றிற்கும் பல நோய்கள், ஆற்றிற்குப் பக்கத்தில் பறவைகளும் கூடு கட்டுவதில்லை. இன்று சுமார் 70 நிறுவனங்கள் பவானியின் கரையிலமார்ந்து பாழ்படுத்தி வருகின்றன. இன்னும் பல நிறுவனங்கள் இங்கு அமைக்கப்பட போட்டியிட்டு வருகின்றன.

இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம், ஊட்டி மைசூர் சாலையில் ஊட்டியிலிருந்து 6 வது கி. மீட்டரில் அமைந்துள்ளது. இதனுடைய கழிவுகள் சந்தியா ஓடை வழியாகக் காமராஜசாகர் அணைக் கட்டிற்கு அருகே பைக்காராவில் கலக்கின்றது. இதன் கழிவில் அதிகப்படியான காரத்தன்மை மற்றும் வேதியியல் உயிர்வளி (COD) பற்றாக் குறையுடன் வெளியேறுகிறது. இக்கழிவு ஆற்றுடன் கலக்குமிடத்தில் விவசாயம் பெருமளவு பாதிக்கப்படுகிறது. நீரில் கரையும் திடப்பொருட்கள் அளவும் 110 PPM முதல் 150 PPM வரை இருக்கிறது.

உயிரியல் வேதி உயிர்வளித் தேவை (BOD) 30 மில்லி கிராம் தான் இருக்க வேண்டும். ஆனால் லிட்டரில் 102 மி.கிராம் முதல் 250 மி.கிராம் வரை அதிகமாகக் காணப்பட்டது. COD அளவு 250 மில்லி கிராமிற்குப் பதில் 450 மி.கிராம் முதல் 600 மி.கிராம் அளவு வரை இருந்தது. இதற்குக் காரணம் கழிவு நீரில் சல்பைடு, மெர்லிப்டன், அமைன்கள் கலந்துள்ளதுதான் என்று டாக்டர். ஓப்லிசாமி தலைமையிலான குழு கண்டறிந்துள்ளது.

புரோட்டின் புராடக்ட்ஸ் ஆப் இந்தியா என்ற நிறுவனம், விலங்கினங்களின் எலும்புகளிலிருந்து அமில வடிப்பான் முறை மூலம் ஜெலடின், ஓசின் மற்றும் டை கால்சியம் பாஸ்பேட் போன்ற பொருட்களை உற்பத்திச் செய்கிறது. இது சந்தியா ஓடை அருகிலேயே அமைந்துள்ளதால் தனது செந்நிற ஆலைக்கழிவை பைக்காராவில் கலந்து விடுகிறது.

இதன் கழிவு நீரின் Ph அளவு 2.5 முதல் 7.8 வரை வேறுபடுவதால் சிறிய மற்றும் பெரிய நீர்வாழ் உயிரினங்கள் மடிய நேரிடும். கரையாத துகள்களின் அளவு தாங்கும் அளவைவிட அதிகமாக (140 mg – 190 mg) உள்ளது. இதனால் ஒளி நீரினுள் ஊடுருவ இயலாமல் போவதால் உயிரினங்களின் சமச்சீர் தன்மை பாதிக்கப்பட்டு அழியும் நிலை உள்ளது. அதிகப்படியான BOD, COD தேவையால் நீரில் கரைந்துள்ள உயிர்வளியின் அளவு மிகக்குறைவாக உள்ளது. மேலும் அதிகப்படியான குளோரைட், சல்பேட், பாஸ்பேட், நச்சுத்தன்மையான நைட்ரேட் மற்றும் அம்மோனியா போன்றவை இருப்பதால் மீன்கள் பெருமளவு பாதிக்கப்படும் நிலையும், பயிர் வளர்ச்சி பாதிக்கும் நிலையும் உள்ளது. இந்நிறுவனக் கழிவு நீரால் பைக்காரா புனல் மின் நிலையத்திலுள்ள சுழற்றிகள் மற்றும் இரும்புக் குழாய்கள் துருப்பிடிப்பதாக அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

யுனைடெட் பிளீச்சர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் மேட்டுப்பாளையம் அருகே பவானி நதிக்கரையோரமாக அமைந்துள்ளது. நூல்கண்டிற்குச் சலவை மற்றும் சாய மேற்றும் தொழிலைச் செய்து வருகிறது. இதிலிருந்து வெளியேறும் வண்ணமயமான சாயத் தண்ணீரும் பவானியில் கலக்கிறது.

சக்தி சுகர்ஸ் டிஸ்டில்லரிஸ் லிமிடெட் பவானி நதிக்கரையில் ஆப்பக்கூடலில் அமைந்துள்ள இந்த ஆலைக் கழிவைக் கருமை நிறத்தில் வெளியேற்றுகிறது. இதில் கரையும் திடப்பொருள் அளவு லிட்டரில் 4800 mg எனும் அளவிலும் COD 1,10,400 mg என்ற அளவிலும் இருந்ததாகக் கணக்கிடப் பட்டுள்ளது. இதன் அமிலத்தன்மை 5.0 அளவாகி இருந்ததையும் உயிர்வளி சுத்தமாக இல்லாததையும் கண்டுள்ளனர். குளோரைடு அளவு மிக உயர்ந்த அளவாக லிட்டரில் 7500 வரை இருந்ததும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சல்பேட் அளவு 350 ஆகவும் மேலும் புரோயோனிக் மற்றும் பியூட்ரிக் அமிலங்களும் இக்கழிவில் இருப்பதால் மீன்கள் வாழத் தகுதியற்றதாக நீர் மாற்றப் பட்டு உள்ளது. மேலும் சுற்று வட்டாரத்தில் இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் இதன் கெடுநாற்றம் வீசுகிறது.

டேன் இந்தியா வாட்டில் எக்ஸ்டிராக்டிங் இண்டஸ்ட்ரி என்ற நிறுவனம் வாட்டில் மரத்துண்டிகளிலிருந்து தோல் தொழிற் சாலைகளுக்குத் தேவையான டேனின் பவுடர் தயாரிக்கிறது இந்நிறுவனம். இதன் கழிவு நிலத்தில் விடப்பட்டு இறுதியில் பவானியை அடைகிறது. இக்கழிவு கருஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதுடன் அழுகிய முட்டை நாற்றம் வீசும். இது அமிலத்தன்மையுடன் அதிகளவு கரையும் திடப்பொருட்கள் கொண்டதாகவும் இருக்கிறது. BOD, COD அளவும் அதிகம். மேலும் சல்பேட், குளோரைடும் இதில் இருக்கிறது. இதனால் பயிர்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றன. விதை முளைப்புத் திறன் 30-50 சதவீத அளவு குறைந்துள்ளது. நீர்வாழ் உயிரினங்களையும் இது பாதிக்கிறது.

சவுத் இந்தியா விஸ்கோஸ் லிமிடெட் நிறுவனம், கோவை மாவட்டம் சிறுமுகையில் அமைந்துள்ளது. செயற்கை நூல் இழை தயாரிப்பின் மூலம் பலகோடி ரூபாய்கள் லாபம் சம்பாதித்து வருகிறது. தனது கொடுமையான வேதிக் கழிவுகளைப் பவானியில் கலந்தும் வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான மீன்களும், நீர்வாழ் உயிரினங்களும் உயிரிழந்து வருகின்றன. குறிப்பாக நீர் குறைவான காலங்களில் அழிவு அதிகம் நிகழ்கிறது. 1962இல் தொடங்கப்பபட்ட அந்த ஆலை தொடக்கத்தில் 10 டன் ரேயான் இழைகளை உற்பத்திச் செய்தது. 1963இல் இதன் உற்பததி 180 டன் ஆக உயர்ந்துள்ளது. 1982இல் கழிவுநீர் தூய்மையாக்கச் சாதனங்கள் அமைக்கப்பட்ட போது உற்பத்தி 120 டன் மரக்கூழ்தான். இன்று உற்பத்தி அளவு உயர்ந்த பிறகும் கழிவுநீர் தூய்மையாக்கத்திறன் அதிகரிக்கப் படவில்லை. நாளொன்றிற்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீரைப் பவானியிலிருந்து எடுத்து மீண்டும் கந்தகம் கலந்த நீராகப் பவானிக்குள் விடப்படுகிறது. தற்பொழுது நீதிமன்றத் தடையாணையால் இத்தொழிற் சாலை பணியை நிறுத்தியுள்ளது.

இன்னல் தரும் இறால் பண்ணைகள் :

தஞ்சை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் நன்னீரில் இறால் வளர்ப்பு அங்குமிங்குமாக இருந்தாலும் நாகை காயிதேமில்லத் மாவட்டம் தீவிர இறால் பண்ணைச் சாகுபடிக்குப் பொருத்தமாக அமைந்துவிட்டது. டி.சி.எம். ஸ்ரீராம் குரூப், ஸ்பென்சர்ஸ், டாட்டாஸ், ஐ.டி.சி. என்று பல பெரும் வணிக நிறுவனங்கள் முற்றுகையிடும் இடமாக மாறியது இம்மாவட்டம். ஆந்திரா, ஒரிசா, குஜராத், கேரளா, மேற்கு வங்காளத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும் இறால் வளர்ப்பு அதிகமானது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், இறால் பண்ணைகளாக மாறின. ஆரம்பத்தில் 800 ஏக்கரில் மட்டும் இருந்த இறால் வளர்ப்பு ஒரு ஹெக்டேரில் லட்சக்கணக்கில் லாபம் என்று தெரிந்ததும் கூடிக்கொண்டு போனது. கோயிலுக்கென்று அரசர்கள் எழுதி வைத்த மானிய நிலங்கள் கூட இறால் பண்ணைகளாக விலை போயின.

இறால் பண்ணை அமைத்ததும் முதலில் பாதிப்புப் புலப்படவில்லை. பிறகு தான் பாதிப்பின் வீச்சு தெரிய ஆரம்பித்தது. கடல் நீரை உள்ளே செலுத்துவதால், இறால் பண்ணைகள் அமைந்த நிலத்தைச் சுற்றியுள்ள நிலங்களிலும் உப்பின் சதவீதம் கூடியது. பக்கத்திலுள்ள விளைச்சல் நிலங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டது. தென்னை, பனைமரங்கள் வெளுத்துக் காணப்பட்டன. கடற்கரைக் கிராமமான புதுக்குப்பத்தில் இதை நேரடியாக உணர முடிந்தது. புளியந்துரை, செம்மங்காடு என்று இது மாதிரி பல பகுதிகள்.

புதுக்குப்பத்தை ஒட்டி இறால் பண்ணையிலிந்து வரும் வாய்க்காலில் முழுக்க வேதிக் கழிவுகள் கெடுநாற்றத்துடன் ஓடுகின்றன. வீடுகள், கோவிலின் சுவர்கள் கூட வேதிகளும் உப்பும் கலந்த நீர்ப்பரவலால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே காவிரி நதிநீர்ப் பங்கீட்டினால் நீர்வரத்து குறைந்த நிலையில் இறால் பண்ணைகளால் விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பதை இப்பகுதி விவசாயிகள் வருத்தத்துடன் சொல்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு 20 ஆயிரம் ரூபாயிக்கு விற்ற ஒரு ஹெக்டர் நிலத்தின் மதிப்பு இப்போது 2 லட்ச ரூபாய்.

பகவதி சுற்றுச் சூழல் வளர்ச்சி நிறுவனம், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எம்.சி. மேத்தா தலைமையில் நாகை காயிதே மில்லத் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் நேராகச் சென்றபோது விவசாய நிலங்களே இறால் பண்ணைகளுக்கு விற்கப்பட்டிருப்பதைத் துல்லியமான ஆவணங்கள் மூலம் உணர முடிந்தது. ஒரு ஹெக்டேர் நிலத்தில் 120 நாட்களில் 1.5 டன்கள் வரை முடிகிற சாத்தியமிருக்கிற போது, இதில் குறைந்த நாட்களில் கிடைக்கின்ற கூடுதலான ஆதாயமே நிலங்களைக் கூடுதல் விலை கொடுத்தாவது வாங்கும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது.

கடற்கரையிலிருந்து இறல் பண்ணைகள் அமைந்திருக்கிற இடம் வரை உப்பு நீரைக் கொண்டு வந்து தேக்கி வைப்பதால் கடும் விளைவுகள் ஏற்படுகின்றன. ஏறத்தாழ மூன்றரை லட்சம் எக்டேர் நிலங்களில் விவசாயம் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டது. இறால் பண்ணை அமைக்குமிடங்களில் வயற்புறங்களுக்கு நீர் வரும் வாய்க்கால், குறைந்தது ஆறடிக்கும் அதிகமான மண் திட்டுக்களால் தடுக்கப்படுகிறது. இறால் பண்ணைகள் அமைந்துள்ள 25 கிராமங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான ஹெக்டேர் நிலங்கள் இறால் பண்ணைகளால் மாறியுள்ளதால், விவசாயத் தொழிற்சாலையை நம்பியிருந்த விவசாயக் கூலிகள் வேலையிழந்தனர். இவர்களது எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் அதிகம்.

தென்னம்பட்டினத்தில் இறால் பண்ணை அமைப்பதைத் தடுக்கும் போராட்டத்தில் 94 ஆகஸ்ட் 10ஆம் நாள் துப்பாக்கிச் சூடு நடந்தது. 35 விவசாயிகளின் வீடுகள் கொளுத்தப் பட்டன. இறால் பண்ணையை எதிர்த்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்படி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களின் சர்வோதயத் தலைவர் ஜெகநாதனும் ஒருவர். கிராம சுயராச்சியம் இயக்கத்தைச் சேர்ந்த ஜெகநாதன் இறால் பண்ணைப் பிரச்சினையைச் சீர்காழி வட்டத்தின் பல கிராமங்களுக்கும் எடுத்துச் சென்று காந்திய வழியில் பிரச்சாரம் செய்தார்.

பெரும்பாலும் கடற்கரையையொட்டிய பல இறால் பண்ணைகள் அமைக்கப் பட்டுள்ளதால் கடலோரத்தில் மீனவர்களுக்கு இருந்த சுதந்திரம் பறிபோயுள்ளது. இறால் பண்ணைகளுக்கு உப்பு நீரைக் கடலிலிருந்து கொண்டு செல்லும் குழாய்களினால் மீனவர்கள் பயன்படுத்தும் வலைகள் கிழிந்து போகின்றன. இயற்கையாகக் கடலில் கிடைக்கும் இறால் குஞ்சுகள் பொரிக்க ஆதாரமாக இருப்பது கடலையொட்டின வாய்க்கால் அல்லது சதுப்பு நிலம். தீவிர இறால் பண்னைகள் பயன்படுத்தும் வேதிக்கழிவு நீரை அருகிலுள்ள வாய்க்கால் மூலம் கடலுக்குள் விட்டு விடுவதால் இறால், குஞ்சு பொரிப்பதற்கான சூழ்நிலை கெடுகிறது. கடலிலுள்ள மீன்களும் இறந்து விடுகின்றன. மீனவர்களுக்கு இதனால் வாழ்நிலையே கேள்விக்குறியாகி விட்டது. சுமார் 110 கி.மீ. இருக்கின்ற நாகை காயிதே மில்லத் மாவட்டம் மற்றும் காரைக்கால் மாவட்டக் கடற்கரைகளும் தூத்துக்குடி ராமநாதபுரம் மாவட்டம் என்று பல பகுதிகளும் இறால் வளர்ப்புக்குத் தகுதியான இடங்களாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.

உள்ளூரைச் சேர்ந்த நிறுவனங்களை விட டெல்லி, கல்கத்தா மற்றும் சென்னையைச் சேர்ந்த நிறுவனங்கள் இறால் ஏற்றுமதிப் போட்டியில் இறங்கியுள்ளன. கொழுப்புச் சத்துக் குறைவான புரோட்டின் அதிகமான உணவு என்பது இதன் ஏற்றுமதிக்குப் பக்கபலம். இறால் ஒரு டன்னின் விலை 91 ஆம் ஆண்டில் தொன்னூற்று ஏழாயிரம் ரூபாய். அதுவே 94இல் இரண்டு லட்சத்து நான்காயிரம் ரூபாய். இதனாலேயே ஒரு ஹெக்டேரை வைத்துக் கொண்டு இறால் ஏற்றுமதி மூலம் பத்திலிருந்து பதினைந்து லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியும் என்று நினைக்கின்றனர்.

இதையொட்டித்தான் ஆந்திராவில் 1,50,000 ஹெக்டர் நிலங்களும், கேரளாவில் 65 ஆயிரம் ஹெக்டேரும், தமிழ்நாட்டில் 56 ஆயிரம் ஹெக்டேரும், கர்நாடகத்தில் 8 ஆயிரம் ஹெக்டேரும் பாண்டிச்சேரியில் எண்ணூறு ஏக்கரும் இறால் பண்ணைகளாகி இருக்கின்றன. உலகளாவிய அளவில் சைனா, தைவான், தாய்லாந்து போன்ற நாடுகளுடன் போட்டியிட்டு அந்நியச் செலவாணி ஈட்டுவதே இப்போதைக்கு இந்தியாவிலுள்ள முதலாளிகளின் நோக்கம். இப்போதைய இறால் உற்பத்தி உலகளவில் 85 மில்லியன் டன்கள். கி.பி. 2000 ஆம் ஆண்டில் இதன் தேவை 120 மில்லியன் டன்கள்.

நாகை காயிதே மில்லத் மாவட்டத்தில் உள்ள ஏழு கிராமங்களில் பதினேழு இடங்களில் கழிவுநீர், குடிநீர் மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்ததில் கடினத்தன்மை குடிநீரில், மகேந்திர பள்ளியில் 60,000மி.கி/லி. என்றும், நெய்தல் வாசலில் 1000 மி.கி/லி. என்றும் புதுக்குப்பம் கிணற்று நீரில் 1650 மி.கி.லி. என்றும், கிழையூர் வடக்குத் தெருவில் 8200 மி.கி/லி. என்றும் உயர்ந்திருந்தது கண்டறியப்பட்டது. லிட்டருக்கு அதிகபட்சமாக 300 மி.கிராம் இருக்க வேண்டிய குளோரைடு இருஞ்சி மேடு குடிநீரில் 1,171.5 மி.கி.லி. ஆகவும் இருந்தது. இதைவிடச் சில இறால் கம்பெனிக் கழிவுகளில் குளோரைடு கடினத்தன்மையும் பல மடங்கு உயர்ந்திருந்ததும் தெளிவானது. உதாரணமாக மகேந்திர பள்ளி, சூர்ய குமார் நிறுவனத்தின் கழிவு நீரில் குளோரைடு 24,495 மி.கி/லி. ஆகவும், நெய்தல் வாசம் ஸ்ரீராம் நிறுவனக் கழிவு நீரில் 21,442.0 மி.கி./லி. ஆகவும் இருந்தது.

உச்சநீதி மன்றத்தில் இவ்விதமான கொடிய விளைவுகளைச் சுட்டிக்காட்டி வழக்கு ஒன்று திரு. செகன்னாதன் அவர்களால் தொடரப்பட்டது. வழக்கை எம்.சி.மேத்தா அவர்கள் நடத்தினார். இதன் விளைவாகக் கடந்த 1996, டிசம்பர் மாதம் உலகப் புகழ் பெற்றத் தீர்ப்பாக இறால் பண்ணைகளைத் தடை செய்யும் ஆணை பெறப்பட்டது.

பலியாகும் பறவைகள் சரணாலயம் :

நாகை காயிதே மில்லத் மாவட்டத்தில் உள்ள இயற்கையான சொத்தான சதுப்பு நிலங்களின் பெருமை நம்மில் பலருக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் பறவை களுக்குக் கூட இதன் அருமை தெரிந்திருக்கிறது. நாகை காயிதே மில்லத் மாவட்டத்திலுள்ள கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தின் மொத்தப் பரப்பு 333.3 ச.கி.மீ. இதில் 65 கி.மீ. முழுவதும் சதுப்பு நிலக்காடுகள். ஈரான், ஆஸ்திரிரேலியா, இங்கிலாந்து இன்னும் வட இந்தியாவிலிருந்து அக்டோபர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை நூற்றுக்கணக்கான பறவை இனங்கள் இந்தச் சரணாலயத்தைத் தேடி வருகின்றன. கூழைக்கடா, பூநாரை, கடற்காகம், கொக்கு உள்ளான், அன்றில், கரண்டி மூக்கன், கௌதாரி என்று விதவிதமான பறவையினங்கள். எழுபத்தாறு வகையான பாலூட்டிகள், நட்சத்திர ஆமை, வாலக்கடியான், கடல் பாம்பு என்று கடல் வாழ் உயிரினங்களும் இதில் அடக்கம். இங்குள்ள சதுப்புநிலங்களில் 265 க்கும் அதிகமான சதுப்பு நிலத் தாவர வகைகள் இருப்பது இன்னொரு சிறப்பு. எண்பதுகளில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பறவைகள் வந்து போய்க் கொண்டிருந்த சரணாலயத்தில், இன்று ஐயாயிரத்திற்கும் குறைவான பறவைகளே வருகின்றன. வந்ததும் உடனடியாக இலங்கைக்குச் சென்று விடுகின்றன. இந்த மாற்றம் எதனால்?

சரணாலயத்தை ஒட்டி உருவான பல்வேறு தொழிற்சாலைகளினால் தான் இந்தச் சிக்கல். 1945க்கு முன்பிருந்தே உப்பளங்கள் இருந்தாலும் இவற்றின் எண்ணிக்கை இப்போது பல்கிப் பெருகியதால் இப்பகுதி நீரில் உப்பின் அளவு சராசரி விகிதமான 0.5 சதவீதத்தை விட 10 முதல் 600 PPM. அளவு வரை உயர்ந்திருக்கிறது. சரணாலயத்திற்கு அருகிலேயே உள்ள கெம்பிளாஸ்ட் போன்ற வேதித் தொழிற்சாலைகளின் கழிவுகளும் வெளியே விடப்படுவதால் இவற்றாலும் சுற்றுப்புறம் பாதிக்கப்பட்டுள்ளது. பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகம் போன்ற புகழ் பெற்ற ஆய்வு நிறுவனங்கள் தமது ஆராய்ச்சியை மேற்கொண்ட இந்த அபூர்வமான சரணாலயம் இன்று உருமாறிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் 1976இல் ஸ்பிக் நிறுவனம் காஸ்டிக் சோடா தயாரிப்புத் தொழிற் சாலைக்காக 5 ஆயிரம் ஏக்கர் நிலங்களைத் தமிழக அரசிடம் கேட்க பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்திடம் இது குறித்துக் கருத்துக் கேட்கப்பட்டது. அக்கழகம் உடனே இப்பகுதிகளில் ஆய்வு நடத்தி, தொழிற் சாலைகள் உருவானால் இப்பகுதியின் இயற்கையான சுற்றுப்புறச் சூழலுக்கே இடையூறு உண்டாக்குமென்று கொள்வதின் பேரில் ஸ்பிக்கிற்கு அனுமதி வழங்கப்படவில்லை. திரும்பவும் 1991 இல் மறுபடியும் அனுமதி மறுக்கப்பட்டது. 94இல் திரும்பவும் முயற்றியெடுத்ததும் பல சுற்றுப்புறச் சூழல் வளர்ச்சி நிறுவனங்கள் தலையிட்டு எதிர்ப்புக்குரல் எழுப்பிய போதும் 95இல் திரும்பவும் நாகப்பட்டினம் காயிதே மில்லத் மாவட்டத்தில் 80 கோடி ரூபாய் மதிப்பிலான காஸ்டிக் சோடா தொழிற்சாலை உருவாகும்மென்று அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 1990இல் நிறைவேற்றப்பட்ட சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் படி சரணாலயத்தைச் சுற்றிலும் 25 கி.மீ. சுற்றளவுக்கு அடர் காடுகளைச் சுற்றி 10 கி.மீ. தூரத்திற்கும் கடற்கரைப் பகுதியிலிருந்து ஒரு கி.மீ. வரையிலான தூரத்திற்குமிடையில் எந்திவிதமான இடஞ்சல்களும் இருக்கக்கூடாது. பறவையினங்கள், அரிய கடல் வாழ் உயிரினங்கள் கடந்த முப்பது ஆண்டுகள் மாற்றத்தில் பெருமளவு குறைந்து விட்ட நிலையில் புதிய வேதித் தொழிற்சாலைகள் சரணாலயத்தையே உருக்குலைத்துவிடும். உலக அளவில் இரண்டாம் நிலைச் சிறப்பு வாய்ந்த பகுதி வேதாரண்யம், கோடிக்கரை, முத்துப்பேட்டை, பிச்சாவரம் வரையுள்ள சதுப்பு நிலங்கள். ஏறத்தாழ 25 ஆயிரம் எக்டேர் பரப்பளவிலுள்ள இச்சதுப்பு நிலமானது தாழ்நிலச்சகதிப் பகுதியாக, நீர் தேங்கக்கூடிய நீர் நிலையாக இருக்கும். கடற்கரைப் பகுதியில் தாழ்வு அலையின் போது ஆறுமீட்டருக்கும் குறைவான நீரின் ஆழம் உள்ள பகுதியாகவும் இருக்கலாம். இதனால் வெள்ளத்தைத் தடுக்கவும், நிலத்தடி நீரை நன்கு சேமிக்கவும் இயற்கையான முறையில் நீரைத் தூய்மையாக்கவும் முடிகிறது.

கடற்கரை அருகில் சுரப்புன்னை (ரைசோபோரா) வகைத் தாவரங்கள் அடர்ந்திருந்தால் அலையாத்திக் (மாங்குரோவ்) காடுகள் என்கிறார்கள். (கடல் அலையை ஆற்றிவிடுவதால் அப்பெயர்). முத்துப் பேட்டைப் பகுதியில் மட்டும் நல்ல வளமையான அலையாத்திக் காடுகள் 16 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவிலிருக்கின்றன. இறால், நண்டு இன்னும் சில வகை கடல் மீன்கள் சதுப்பு நிலக்காடுகளிடையே உள்ள வாய்க்கால் பகுதிக்கு வந்து முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. சதுப்பு நிலங்களில் வளரும் மரங்களிலிருந்து வீழ்ந்து மக்கிப்போன இலைகளே இவற்றிக்கு உணவு. சதுப்பு நிலங்கள் இந்த உயிரினங்களின் இனப் பெருக்கத்திற்குப் பெருமளவு உதவுகின்றன.

அதோடு சதுப்பு நிலங்களில் காடுகள் வளர்வதால் கடலோர மண் அரிப்பு தடுக்கப்பட்டு புயலின் விளைவுகள் கட்டுப் படுத்தப்படுகின்றன. சில அலையாத்திக் காடுகளில் புலி போன்ற விலங்குகள் கூட வசிக்கின்றன. தொழுநோய் போன்றவற்றின் மருந்தாகக்கூட அலையாத்திக் காடுகளில் வளரும் சில தாவர இனங்கள் பயன்படுகின்றன.

பல கோடி ஆண்டுகளாக இருந்து வரும் இந்த அலையாத்திக் காடுகள் கடந்த ஐம்பது வருடங்களில் படிப்படியாக அழிந்து கொண்டிருக்கின்றன. முத்துப்பேட்டை, பிச்சாவரம் பகுதியில் விறகுக்காக வெட்டுவது, மாடுகளை மேய்க்க விடுவது, சுற்றுலாவின் பெயரால் நாசப்படுத்துவது என்று பல அதிர்வுகள் மூலம் இயற்கையின் ஒரு மூலாதாரமானப் பகுதி நலிவடைந்து கொண்டிருக்கிறது. அதோடு இப்பகுதிகளில் கடலோரத்தில் உருவாகி வருகிற இறால் பண்ணைகளும் அலையாத்திக் காடுகளுக்குப் பெரும் சிக்கலாக உருவாகிக் கொண்டிருக் கின்றன.

இந்தியாவின் இரண்டாவது சதுப்பு நிலப்பகுதியான புலிக்காட்டு ஏரி, ஆந்திரா, தமிழ்நாடு இரு மாநிலங்களையும் உள்ளடக்கியது. இதில் ஆறாயிரம் எக்டேர் பரப்பு தமிழ்நாட்டில் உள்ளது. 1976இல் சரணாலயமாக ஆந்திர அரசால் அறிவிக்கப்பட்ட இப்பகுதியில் மீன் பிடிப்பதாலும் உப்புத் தயாரிக்கும் தொழிற்சாலைகளாகவும் தன்னியல்பை இழந்து வருகிறபோது தமிழ்நாட்டிற்குள்ளி ருக்கும் சதுப்பு நிலப்பகுதியிலும் உப்புத் தொழிற்சாலை நிறுவப்பட இருக்கின்றன.

தமிழ்நாடு அரசு சதுப்பு நிலக்காடுகளைப் பாதுகாப்பதாக அறிவித்தபடி சுற்றுச்சூழல் நிர்வாகக் குழுவை ஏற்படுத்துகிறது. கோடியக்கரையில் 2400 எக்டேரை 1968இல் சரணாலயமாக அறிவிக்கிறது. இன்னொரு பக்கத்தில் சதுப்பு நிலக்காடுகளுக்குப் பெரிதும் பங்கம் விளைவிக்கக் கூடிய வேதித் தொழிற்சாலைகளுக்கு, உப்பளங்களுக்கு, இறால் பண்ணைகளுக்கு அனுமதி கிடைத்துக் கொண்டிருக்கிறது. 1994ஆம் ஆண்டு டிசம்பரில் கடலோரத்தில் 500 மீட்டருக்குட்பட்ட பகுதியில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் விதத்தில் எந்தத் தொழிற் சாலைகளையும் அமைக்கக் கூடாது என்று ஒன்பது மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஆணை விதித்திருக்கின்றது.

கேடு தரும் கிழக்குக் கடற்கரைச் சாலை

சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையில் கிழக்குக் கடற்கரையையொட்டி 737 கி.மீ. தூரத்திற்குக் கிழக்குக் கடற்கரையை ஒட்டிச் சாலை அமைத்துப் போக்குவரத்தைச் சீர்செய்ய ஆசிய மேம்பாட்டு வங்கிக் கடனால் உருவாக்கப்பட்டதே இத்திட்டம்.

சுமார் 600 கோடி ரூபாய் செலவிலான இத்திட்டத்திற்கு 60 சதவீத நிதியுதவியை ஆசிய மேம்பாட்டு வங்கி அளிக்கிறது. மீதிப்பணத்தை மத்திய, மாநில அரசுகள் ஏற்கின்றன. இதில் சென்னையிலிருந்து கடலூர் வரையிலான 170 கி.மீ. தூரமுள்ள சாலைப்பணிக்கு ஏறத்தாழ 140 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, முதற் கட்டப்பணிகளும் துவங்கியிருக்கின்றன. வெளிநாட்டு நிறுவனமான ஆப்கான் பாலிங்ஸ் என்கிற நிறுவனத்திடம் இந்தப் பணி ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

1987இல் நெடுஞ்சாலை மற்றும் ஊரகப்பணித்துறை ஏற்கனவே உள்ள கிழக்குக் கடற்கரைச் சாலையை மறுசீரமைக்கத் திட்டமிட்டது. அதற்கான செலவுகளை நியாயப்படுத்த ஒரு தொழில்நுட்ப, பொருளாதார இயலுமை அறிக்கையும் (Techno-Economic Feasibility Report) தயார் செய்தது. ஏற்கனவே இருக்கும் சாலையை மறுசீர் அமைக்கும் பணிக்காகச் செலவுத் தொகை ரூ.370 கோடிகள் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் 1000 கிலோ மீட்டர் நீளமுள்ள தமிழகக் கடற்கரையில் அமைகின்ற இப்புதிய சாலை நீளம் 737 கிலோமீட்டராகும். ஏறக்குறைய ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க 47,00,000 ரூபாய் செலவிட முடிவு செய்யப்பட்டது. இச்சாலையின் வருடாந்திரச் சீரமைப்புப்பணிச் செலவு ரூ. 47,000 அதாவது 1 சதவீதம் ஆகும்.

737 கிலோ மீட்டர் நீளமுள்ள இச்சாலை அமைப்புப்பணி இரண்டு பகுதிகளாகப் பிரித்துச் செயல்படுத்தப்படுகின்றது. 160 கிலோ மீட்டர் நீளமுள்ள சென்னை முதல் கடலூர் வரையிலான பணி முதற்பகுதியாகவும் கடலூர் முதல் கன்னியாக்குமரி வரையிலான பணி இரண்டாம் பகுதியாகவும் நடைபெற உள்ளன. சாலையின் முதற்பகுதிக்கான கட்டுமானச் செலவு நெடுஞ்சாலைத்துறையின் தொழில் நுட்ப, பொருளாதார இயலுமை அறிக்கையின்படி 56 கோடியாகக் கணக்கிடப்பட்டு, சாலை அமைப்புப் பணிகள் துவங்கும் போது 75 கோடியாக மாற்றியமைக்கப்பட்டது. இதன் அடிப் படையில் கணக்கிட்டால் ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க ரூபாய் 47 லட்சங்கள் செலவிடப்படுகிறது.

கடற்கரை சார்ந்த பகுதியின் சூழல் எளிதில் சிதைவுக்குள்ளாகக் கூடிய மென்மையான அமைப்புடையது. எந்தவித வளர்ச்சிப் பணிகளும் இப்பகுதியை எளிதில் பாதிக்கும். எனவே எந்த ஒரு வளர்ச்சிப்பணியும் இப்பகுதியின் சூழலைப் பாதிக்காமலிருக்க மத்தியச் சுற்றுச் சூழல் மற்றும் காடுகள் அமைச்சகம் அலையேற்றம் உள்ள இடத்திலிருந்து நிலப்பகுதியில் 500 மீட்டரைக் கடற்கரை முறைப்பாட்டுப் பகுதியாக (Coastal Regulation Zone) அறிவித்துள்ளது.

ஆனால் கிழக்குக் கடற்கரைச் சாலை (முதற்பகுதியில்) பல இடங்களில் 200 மீட்டருக்கும் குறைவான இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை அமைக்கப் படுவதால் ஏற்படும் நீரோட்டத் தடை ஒரு புறமிருக்க இச்சாலையின் ஓரங்களில் அமையவிருக்கும் தொழிற்சாலைகள், சுற்றுலா விடுதிகள் அதனால் ஏற்படப்போகும் பாதிப்பு நீண்ட காலத்தில் இச்சூழலை மீட்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். மேலும் 10 ஆண்டுகள் பராமரிப்புச் செலவுகள் இன்றி இருக்கும் அளவிற்கு அமைக்கப்படும் இச்சாலை, புயல் மற்றும் வெள்ள அபாயங் களால் பாதிக்கப்பட்டு, போக்குவரத்திற்கு அருகதை அற்றதாகிவிடும். மரக்காணம்-புதுச்சேரிக்கு இடையில் பணி முடிந்துவிட்ட சாலை சென்ற ஆண்டு பெய்த மழையில் பல இடங்களில் ஏற்கனவே சேதமடைந்து விட்டது. மேலும் புயல் வெள்ள அபாயக் காலங்களில் இச்சாலையின் போக்குவரத்து முழுமையாகத் தடைப்படும் அளவுக்கு இச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

புயல், வெள்ள நேரங்களில் உதவிப்பணியை விரைந்து செய்யவும், அபாயக் கட்டங்களில் மக்களை அங்கிருந்து வெளியேற்றவும் இச்சாலை வசதியளிக்கும் என்னும் நெடுஞ்சாலைத் துறையின் வாதம் நடைமுறையில் சாத்தியப்படுவதாக இருக்காது. சாலையின் ஒரு பகுதி கடலாக இருப்பதால் இருபுறமும் நிலப்பகுதி கொண்ட சாலை பயன்படுமளவிற்குக் கிழக்குக் கடற்கரைச் சாலை பயன்படாது. இருக்கின்ற சாலையைச் சீரமைக்க ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 47,00,000 செலவு செய்யப்படுவதும், அது நியாயப்படுத்தப்படுவதும் ஒருபுறமிருக்க, போக்குவரத்துச் செலவு என்பது கட்டுமானச் செலவு, சீரமைப்புச் செலவு, சாலைப் பயன்பாட்டாளர் செலவு இவற்றை உள்ளடக்கியது. சாலைப் பயன்பாட்டாளரின் செலவு என்பதை வாகனத்தைக் கையாளும் செலவு, நேரச் செலவு, விபத்துச்செலவு இவற்றை உள்ளடக்கும். ஆனால் நேரச் செலவும், விபத்துச் செலவும் வளரும் நாடுகளின் நிலையிலிருந்து துல்லியமாகக் கணக்கிட வில்லை. நெடுஞ்சாலைத் துறையின் வாதம், சாதகமாகப் பல செலவுக் கணக்குகளைத் தட்டிக் கழித்து ஒதுக்கியிருக்கின்றன. கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விடப்பட்ட பாதிப்புகளும் அதற்கான செலவுகளும் ஒருபுறமிருக்க ஆய்வில் எடுத்துக் கொண்டதாகக் கூறப்படும் பாதிப்புகளிலும் மேம்போக்கான கணிப்புகளே உள்ளன, ஏறக்குறைய 15 கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்திருக்கும் இரண்டு கிராமங்களுக்கு இடையில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் செல்லும் வாகனங்கள் ஏற்படுத்தப் போகும் விளைவுகள் கணக்கிலடங்காதவை. மேலும் கட்டுமானப் பணிக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

கிழக்குக் கடற்கரையை ஒட்டிய நிலங்கள் சுற்றுலா சார்ந்த விடுதி மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக அதிக விலை கொடுத்து வாங்கப்படுகின்றன. இப்பகுதியில் நிலத்தின் விலை கடந்த இரண்டாண்டுகளில் பத்து மடங்கு அதிகரித்துள்ளது. படித்த வேலையில்லா இளைஞர்கள் பலர் தரகர்களாக மாறிவிட்டனர்.

இதுவரை முதல் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள உண்மைகளையும் பிரச்சினைகளையும் கணக்கில் கொண்டு கடலூர் முதல் கன்னியாக்குமரி வரையிலான இரண்டாம் பகுதியைக் கணித்தால் பாதிப் புகளின் அளவு இருமடங்காக இருக்கும். முதற்பகுதியில் இருந்ததை விடப் பல மடங்கு விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்.

1992 செப்டம்பர் மாதத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலைப் பணிக்காக மரங்கள் வெட்டப்படக் கூடாது என்றும் சுற்றுச் சூழல் பாதிப்பு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு மத்தியச் சுற்றுச்சூழல் காடுகள் அமைச்சக அனுமதி பெற்ற பிறகுதான் சாலை அமைக்கப் படவேண்டும் என்ற தடை ஆணை உயர்நீதி மன்றத்தில் பெறப்பட்டது. சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை ஏப்ரல் 1993இல் தமிழ்நாடு நெடுஞ்சாலை மற்றும் கிரமப்புறப் பணித் துறையால் தயாரிக்கப்பட்டு, சுற்றுச் சூழல் மற்றும் காடுகள் அமைச்சகத்திடம் அனுமதி கோரி சமர்ப்பித்துள்ளது.

1993 ஏப்ரல் 23,24 தேதிகளில் மத்தியச் சுற்றுச் சூழல் அமைச்சகத்தால் நிறுவப்பட்ட சுற்றுச் சூழல் மதிப்பீட்டுக்குழு, திட்டத்தின் பாதிப்புகளை நேர்க்காண அனுப்பப்பட்டது. சூழல் பாதுகாப்பு அமைப்பினர் ஒரு அறிக்கை தயார் செய்து அக்குழுவிடம் சமர்ப்பித்தார்கள். 1993 டிசம்பர் 19ஆம் தேதி சாலைத் திட்டத்தின் பாதிப்புகளை நேரில் காண மத்தியச் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் மதிப்பீட்டுக்குழு அனுப்பப்பட்டது . அப்போது மக்கள் முழக்கங்கள் எழுப்பியும், துண்டு அட்டைகள் காண்பித்தும், நேரில் இத்திட்டத்திற்கான எதிர்ப்பைக் காட்டினர்.

1994 பிப்ரவரி மாதம் ஆசிய வளர்ச்சி வங்கி இத்திட்டத்தை நேரில் பார்வையிடவும் சுற்றுச் சூழல் பாதிப்பைக் கண்டறியவும் இரண்டு பிரதிநிதிகளை அனுப்பியது. அவர்களுடன் தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலைத்துறை, காட்டு இலாகா, பொதுப்பணித்துறை அலுவலர் உடனிருக்க நடைபெற்ற கூட்டாய்வின் போதும் அப்பிரதிநிதியை நேரில் அழைத்துச் சென்று பாதிப்புகளைக் காண்பித்த போதும், இத்திட்டத்தினால் சுற்றுச் சூழல் கண்ணோட்டம் கணக்கில் எடுக்கப்படாதது விளக்கப்பட்டது.

மத்தியச் சுற்றுச் சூழல் மற்றும் காடுகள் அமைச்சகம் ஒன்பது அம்சங்கள் அடங்கிய பரிந்துரையைத் தயார் செய்து தமிழக அரசுக்கு அனுப்பியது. ஒரு சில மாற்றங்களைக் கேட்டுப் பல கேள்விகளை எழுப்பிய பின்னும் எந்தவித பலனும் இல்லாததால் 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தமிழக அரசு, மத்தியச் சுற்றச் சூழல் அமைச்சகத்தின் அனைத்து பரிந்துரைகளையும் ஒப்புக் கொள்வதாகச் செய்தி வெளியிட்டது.

அந்த நிபந்தனைகளின் படி இதுவரை நிர்மாணிக்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர புதிதாக அமைக்கப்படும் சாலையின் தார்பரப்பு 7.5 மீட்டரும், இருபுறமும் மண்பரப்பு 1.5 மீட்டரும் ஆக 10.5 மீட்டர் அகலமே இருக்க வேண்டும். மரங்கள் வெட்டப்படக் கூடாது. சாலையின் போக்கை நேர்படுத்துவதற்காக மக்கள் இடமாற்றம் செய்யப்படக்கூடாது. சாலை மறு ஒழுங்கிற்காக வீடு சூழ் பண்ணைகள் கையகப்படுத்தக் கூடாது. மண்ணை வளப்படுத்தும் வகையில் மரங்கள் திட்டக் காலம் முழுவதும் நடப்பட வேண்டும். இம்மாதிரிப் பலக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆனால் குத்தகைக்காரர்கள் இதற்கு உட்படாமல் தொடர்ந்து விதியை மீறியதால் மீண்டும் வழக்கு மன்றத்தைச் சூழல் காப்பாளர்கள் அணுகினார்கள். இதனால் வெறுப்படைந்த குத்தகைக்காரர்கள் சூழல் பாப்பாளர்களைக் கடுமையாகத் தாக்கினார்கள். தொடர்ந்து அச்சுசுறுத்தல் ஏற்படுத்தப்படுகின்றது.

இத்திட்டத்திற்கு மாற்றாகக் கடற்கரையை ஒட்டியில்லாமல் “தேசிய நெடுஞ்சாலை 45”க்கும் கடற்கரைக்கும் இடைப்பட்ட நிலப்பகுகுதியில் இச்சாலை அமைக்கப்பட்டால் அதன் இருபுறங்களிலும் உள்ளவர்கள் பயன்படுத்த முடியும் என்று பரிந்துரைக் கப்பட்டது. மென்மையாகக் கையாளப்பட வேண்டிய கடற்கரைப்பகுதி பாதுகாக்கப் படும். இந்த மாற்றுத்தடம் ஏற்கனவே உள்ள சாலைகளை மறுசீரமைத்து அமைக்கப் படுவதால் புதிதாகப் பாலம் காட்டுதல், மரம் வெட்டுதல், மக்களை இடம் மாற்றம் செய்தல் போன்ற செலவினங்களும், பாதிப்புகளும் இன்றி அமைக்கப்பட முடியும்.

நிலைகுலைக்கும் நிலச்சரிவுகள் :

தமிழகம் அடுத்தடுத்துச் சந்திக்கின்ற ஒரு சூழலியல் நெருக்கடி நிலச்சரிவு ஆகும். நீலகிரி, பன்றிமலை, மேகமலை, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகள் அதிகரித்திருப்பதற்கு அடிப்படையான சில காரணங்கள் உள்ளன. முதலில் நீலகிரி எனப்படும் நீலமலை, மேற்குத் தொடர்ச்சி மலையின் உயர்ந்த கொடுமுடியாக இருக்கும் இம்மலையின் இயற்கை வளத்தைப் பார்த்து ஆங்கிலேயர் நுழைந்ததும் சிக்கல் தொடங்கியது. இயற்கையாக இருந்த காடுகள் சிறிது சிறிதாக அழிக்கப்பட்டுப் பணப்பயிர்களான காபி, தேயிலைத் தோட்டங்கள் உருவாகின. கடந்த 50 வருடங்களில் இப்படிப் பெருகின பெருந்தோட்டங்கள் (Estates) அதிகம். இதன் மூலம் மண் தன் பிடிமானத்தை இழக்க நேரிட்டது. விளைவாக 1978இல் நீலகிரி அருகிலுள்ள மாந்தாடா என்கிற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 234 பேர் இறந்தனர். 1990ல் கெத்தே என்கிற இடத்தில் பாறை சரிந்து இறந்தவர்கள் 47 பேர். 1993 நவம்பர் மாதம் திரும்பவும் நீலகிரியின் பல இடங்களில் நிலச்சரிவுகள். இருபது பேருக்கும் அதிகமானோர் இறந்தனர்.

இந்த அளவுக்கு ஒரு சூழ்நிலை உருவான பிறகு, நீலகிரியில் பெருகியுள்ள நூற்றுக்கணக்கான உணவு விடுதிகளின் எண்ணிக்கையையும், அங்கு வந்து போகிற வாகனங்களினால் உண்டாகிற அதிர்வையும் கணக்கிலெடுத்துக் கொண்டு நீலகிரியில் புதிய விடுதிகள் கட்டுவது தடை செய்யப்பட்டது. 1978இல் நீலகிரியில் உண்டான நிலச்சரிவுக்குப் பின்னர் மலைச்சரிவுகளில் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டுக் கொண்டிருந்த பல ஆயிரக்கணக்கான நிலங்கள் தேயிலை உற்பத்திக்கென மாற்றப்பட்டன. இலங்கையிலிருந்து தாயகம் திரும்பும் தமிழர்களுக்கு மறுவாழ்வு தரும் நோக்கத்தில் கூடலூரில் ஆறாயிரம் ஏக்கர் நிலத்திலும், குன்னூரில் நான்காயிரம் ஏக்கர் நிலத்திலும் ஏற்படுத்தப்பட்ட தமிழ்நாடு தேயிலை நிறுவனத்தின் வருகை நிலச்சரிவிற்கு இன்னொரு காரணம்.

நீலகிரியில் 1978இல் நடந்த நிலச்சரிவு குறித்து ஆராய்ந்த இந்தியப் புவியியல் ஆய்வக இயக்குநரான சேஷகிரி தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கை மலைச்சரிவுகளில் அழுத்தத்தை உண்டாக்குகிற வகையில் கட்டிடங்கள் கட்டுவதும், தேயிலைத் தோட்டங்களின் விரிவாக்கமும் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. இதை மீறிக் கட்டுமானப்பணிகளுக்கு அனுமதி வழங்கியதன் விளைவாக நீலகிரியிலும், குன்னூரிலும் நிலச்சரிவுகள் தொடர்கிறது.

திண்டுக்கல் அண்ணா மாவட்டம் பாச்சலூர் மலைப்பகுதியில் உள்ள பன்றி மலையிலும் 93ஆம் ஆண்டு நவம்பரில் நிலச்சரிவு. இதில் மண்ணோடு புதைந்து போனவர்களின் எண்ணிக்கை பத்திற்கும் மேல். அங்குள்ள சின்னப் பாறைப்பகுதியில் நிலச் சரிவினால் ஏழு கிலோமீட்டர் வரை மண் அடித்துச் செல்லப்பட்டிருந்தது. இங்கும் கூட இயற்கையாக இருந்த காடுகள் அழிக்கப்பட்டு, வாழை, காபி போன்ற பணப்பயிர்கள் விளைவிக்கப்படுவதால் மண் பிடிமானத்தை இழந்து நிலச்சரிவு உண்டாகியிருக்கிறது.

கொடைக்கானல் மலையும் நில வெடிப்பை 93 நவம்பர் மாதத்தில் சந்திக்க நேரிட்டது. பழனி மலையிலிருந்து கொடைக்கானல் போகின்ற வழியிலும், பெருமாள் மலையிலும் ஆங்காங்கே நிலவெடிப்புகள். சில வெடிப்புகள் மூன்று கி.மீ. தூரத்திற்குச் சுமார் நூறு அடி ஆழம் அளவிற்கு ஏற்பட்டன. மலைப்பகுதியிலிருந்து உருவாகிற பரந்தலாறு, பாலாறு வழியாகப் பழனிக்குக் குடிநீர் தருகின்ற கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆற்றின் பாதையே நில வெடிப்புக்குப் பின் மாறிப்போனது. பெரும் எடையுள்ள பல பாறைகள் உருண்டிருக் கின்றன. மலைப்பகுதியில் காடுகள் இருந்த பகுதி தரைமட்டமானது. திண்டுக்கல் அண்ணா மாவட்டத்தில் முன்பு சந்தன மரங்களும், மூலிகைகளும் நிரம்பியிருந்ததாகக் கூறப்படுகிறது. இவை யாவும் மெல்ல அழிக்கப்பட்டன. அதோடு சுவையான சிறு வாழைப்பழத்திற்குப் பெயர் பெற்ற சிறு மலையில் இன்று காபி வளர்ப்பு நடக்கிறது. இந்த வகையான இயற்கைச் சீரழிப்பும், நகர் மயமாக்கலுமே முதன்மையான நிலச்சரிவின் காரணங்களாகும்.

அணுசக்தி அபாயங்கள் :

சென்னையிலிருந்து அறுபது கி.மீ. தூரத்தில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையம் உற்பத்தி பண்ணுவது 235 மெகாவாட் மின்சாரத்தை. இதில் இரண்டு மறிவினைப்பான்கள் (Reactors). இவை பழுதுபட்டு இயங்காமலிருக்கும் நிலையை அடிக்கடிப் பார்க்க முடிகிறது. 1984இல் இங்குள்ள மேப்-1 என்கிற மறிவினைப் பானில் ஒரு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததும் அது பரவலான கவனத்திற்கு வரவில்லை. அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப் படும் கனநீர் வெளியே கசிவதும், இடையிடையே நடக்கிறது. இவை பத்திரிக்கைச் செய்திகளாகவும் வந்திருக் கின்றன. இன்னொரு மறிவினைப்பானிலும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் கதிரியக்கப் பாதிப்புக் குறித்த சோதனையும் நடந்திருக்கிறது.

அணுசக்தி நிலையத்தை இயக்குவதில் இவ்வளவு சிக்கல்களும், தடுமாற்றமும் நிலவும் வேளையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதான பணிக்கு மும்முரமான வேலைகள் தொடர்கின்றன. சுமார் ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தைப் பண்ணுவதற்காக உருசிய நாட்டு உதவியுடன் அமைக்க விருப்பதாகச் சொல்லப்பட்டு 87 இறுதியிலிருந்தே பல வேலைகள் துவங்கி, மண் பரிசோதனை நடந்து உருசிய விஞ்ஞானிகள் வந்து பார்த்துவிட்டுப் போன நிலையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள், மீனவர்கள், சமூகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள், மத நிறுவனங்கள் சம்மந்தப்பட்டவர்கள் உட்பட பலர் எதிர்ப்புத் தெரிவித்து உண்ணா விரதத்திலிருந்து போரட்டம் வரை நடத்தினர்.

அணுமின் நிலையம் அமைந்தால் அணு உலையின் கழிவு கடலில் கலக்கும் வாய்ப்புள்ளதால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டு, மீனவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படும். அணுமின் நிலையத்தில் சிறு சிக்கல் என்றாலும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்கிற ரீதியில் பலருக்கும் அச்சம் கலந்த பார்வை இருந்ததாலேயே கூடங்குளத்தில் அணுமின்நிலையம் அமையவிருப்பதற்கு எதிர்ப்பு அதிகமானது. பல்வேறு தரப்பிலிருந்து வந்த எதிர்ப்பால் அணுமின் நிலையம் அமைக்கும் பணி ஒத்திப் போடப்பட்டாலும், தற்போது மறுபடியும் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கும் முயற்சி நடக்கிறது. கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையமே இந்திய அணுசக்தித் துறைத் தலைவராக இருந்த டாக்டர். ராஜா ராமண்ணா சொல்கிறபடி புதுவிதமான சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த 1993இல் சென்னையில் ஒரு கதிர்வீச்சுக் கருவி கூவம் ஆற்றில் விழுந்து அதை மும்முரமாகத் தேடின செய்தி நமது கவனமின்மைக்கு ஒரு சான்று. கதிரியக் கத்தின் விளைவுகள் லேசானதல்ல. இதன் பாதிப்பால் மூளை செயலிழந்து மனநோய் உண்டாகலாம். தொண்டை, நுரையீரல், மார்பகம், சிறு நீரகங்களில் புற்று நோய் ஏற்படலாம். இது மட்டுமல்லாமல், பாலுறுப்புகள் பாதிக்கப் பட்டு வருங்காலச் சந்ததியும் பாதிப்படைய நேரிடலாம். அதோடு அணுமின் நிலையக் கழிவை 700 ஆண்டுகளுக்கும் அதிகமாகப் பத்திரப் படுத்திப் புதைத்து வைக்க வேண்டும். அது வரையிலும் கதிர்வீச்சு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்தியாவில் மட்டும் கடந்த இருபது ஆண்டுகளில் சிறியதும், பெரியதுமாக ஏறத்தாழ 300 விபத்துக்கள் நடந்திருப்பதாகக் கணக்கிடப்பட்டிருந்தாலும் இவை குறித்த விளக்கங்களை அரசு முழுமையாக வெளியிடுவதில்லை.

பம்பாயிலுள்ள தாராப்பூர் அணுமின் நிலையத்தின் கதிரியக்கத்தால் பம்பாய் கடற்கரைப் பகுதியே பாதிக்கப்பட்டிருக்கிறது. முந்நூறு தடவைக்கு மேல் இந்த மின் நிலையம் மூடப்பட்டிருக்கிறது. இங்கு மூன்று பொறிஞர்கள் கதிர்வீச்சால் இறந்துள்ளனர். கோட்டாவிலுள்ள அணுமின் நிலையத்தின் கதிரியக்கப் பாதிப்பு அதிகரித்ததால் அதன் ஒரு பிரிவு மூடப்பட்டது. அடிக்கடி மூடப்பட்டு வரும் கல்பாக்கத்தைச் சுற்றி மூளை வளர்ச்சியற்ற குழந்தைகள் பிறப்பது அதிகரித்திருப்பதாகச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலக அளவிலும் எத்தனை அணுமின் விபத்துக்கள்? நமக்கு அணுமின் தொழில் நுட்பத்தைக் கொடுக்க முன் வந்த உருசியாவிலேயே 1986 ஏப்ரல் 26இல் செர்னோஃபில் எனும் இடத்தில் அணு உலை வெடித்தது. அங்குக் கதிரியக்க வீச்சு பரவி மனிதர்கள், விலங்குகள் என்று ஏராளமான பாதிப்பு. இதற்கு முன்பு 1974இல் இங்குள்ள செவ்செங்கோ பகுதியில் அணு உலை வெடித்துள்ளது.

அமெரிக்காவில் 1961, 64, 66, 75, 79 வரை என்ரிகோ, இடாஃகோ அருவிப்பகுதி, வாசிங்டன், லூசன்ஸ், ப்ரௌன்ஸ் பெர்ரி மூன்று மைல்தீவு என்று பல இடங்களில் தொடர்ந்து அணுமின் உலை விபத்துக்கள் நடந்தன் விளைவாக 1974க்குப் பிறகு அமெரிக்காவில் புதிதாக அணுமின் நிலையங்கள் அமைக்கப்படவில்லை. சீனா, ஸ்பெயின், மேற்கு ஜெர்மனி உட்பட பல நாடுகள் இனி அணுமின் நிலையங்களை அமைக்கப் போவதில்லை என்று அறிவித்திருக்கின்றன. சுவீடனில் 12 அணு உலைகள் மூடப்பட்டிருக்கின்றன.

இதையெல்லாம் மீறியும் அணு உலைகளை நாடுவதற்கு மறைமுகமான காரணம் அணு உலையில் கிடைக்கும் ப்ளுட்டோனியம் என்கிற மூலப்பொருளாகும். அணு குண்டு தாயாரிப்புக்கான மூலப் பொருட்களில் இதுவும் ஒன்று. இருந்தும் பல நாடுகள் தற்போது அணுமின் நிலையங்கள் துவங்குவதை மக்களது எதிர்ப்பால் கைவிட்டிருக்கின்றன.

குறிப்பாக இந்தியாவில் அணுமின் நிலையங்கள் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? இங்கு மின்சாரம் தயாரிக்கத் தேவையான மூலாதாரங்களான நீர் இருக்கின்றது. வடக்கில் உள்ள கங்கை, பிரம்மபுத்திரா, நர்மதையிலிருந்து தெற்கிலுள்ள கிருஷ்ணா, காவிரி வரையிலான ஆறுகள் சரியாகப் பயன்ப டுத்தப்படாத நிலையிலேயே கடலில் கலக்கின்றன. இந்த நீர்வளத்திலிருந்து சுற்றுப்புறத்திற்குப் பாதிப்பு இல்லாத நிலையில் மின்சார உற்பத்தியில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது.

பாழாகும் பவளப்பாறைகள் :

பல்வேறு வண்ணங்களில் வெவ்வேறு வடிவங்களில் கடல் மட்டத்திற்குச் சற்றுக் கீழே இருக்கும் பவளப்பாறைகளை இயற்கையான புதையல் என்றே சொல்லாம். இந்தியாவில் மன்னார் வளைகுடா, அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள் என்று பல இடங்களில் பவளப்பாறைகள் இருக்கின்றன. தென்னிந் தியாவில் ராமேசுவரத்திலிருந்து தூத்துக்குடி வரையிலான 140 கி.மீ. கடற்பரப்பில் இருக்கின்ற தீவையொட்டிப் பவளப்பாறைகள் உள்ளன. திட்டுத்திட்டாக கடல் மட்டத்திற்கு ஏறத்தாழப் பத்தடிக்குக் கீழிருந்து பவளப்பாறைகள் அமைந்துள்ளன. பவளப்பாறைகளின் மேற்புறம் விரல்கள் மாதிரியான அமைப்புடன் பல வண்ணங்களில் இருக்கும் விரல் செல்கள் சுண்ணகத்தை (Calsium) உள்ளடக்கியவை. விரல் செல்களிலேயே பல வகைகள் இருக்கின்றன. சில மூளை மாதிரியான அமைப்புடனிருக் கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை நீலம், சாம்பல், வெள்ளை, மென்சிவப்பு நிறங்களில் பவளங்கள் உள்ளன. இது ஒருவகையான உயிரினம், என்றாலும் இதை வைத்துப் பல கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.

பவளப்பாறைகள் உருவாகத் தனியான, இளஞ்சூடு கலந்த தட்பவெப்பம், ஏறத்தாழ 200செ. வெப்பம் தேவைப்படுகிறது. இதனாலேயே சில அரிய கடல்வாழ் உயிரினங்கள் பவளப்பாறை இருக்கும் பகுதியில் வந்து முட்டையிடுகின்றன. பாறைகள் மீது படந்திருக்கும் பாசி, விரல் செல்லிகளை உணவாகக் கொண்டு சில குறிப்பிட்ட மீன்கள், நண்டுகள், புழுக்கள் வாழ்கின்றன. பவளப்பாறைகளில் வளர்ச்சி ஆண்டிற்கு இரண்டிலிருந்து ஐந்து செ.மீ. வரை இருக்கும்.

இயற்கையான சுற்றுச் சூழலுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிற பவளப் பாறைகளின் முக்கியத்துவம் எண்பது களுக்குப் பிறகு பல உலக நாடுகளில் தெரிய வந்திருக்கிறது. 1980இல் சர்வதேச இயற்கை வனப் பாதுகாப்புச் சங்கம் பவளப்பாறைகளை இயற்கை வளத்திற்கும் உயிர் வாழ்வதற்கும் ஆதாரமான ஒன்றாகக் கூறியிருக்கிறது. இதற்காகச் சர்வதேச அளவில் மாநாடுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

பவளப்பாறைகளை வணிக ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டிருந்த இலங்கை, மாலத்தீவு, இந்தோனேசியா, இந்தியா, பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகளுக்கு அதன் அருந்தன்மை உணர்த்தப்பட்டிருக்கிறது. அதன் பிறகு பிலிப்பைன்ஸ் நாட்டில் பவளப் பாறைகளைச் சேகரிப்பதும், அதை ஏற்றுமதிச் செய்வதும் தடை செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவும் பவளப்பாறைகளுக்கென சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

தூத்துக்குடி அருகே பவளப்பாறைகள் அடர்ந்திருந்தாலும் இவை கவனத்துக்கு வந்தது 1976க்குப் பிறகுதான். தூத்துக்குடியிலுள்ள மீன்வளக் கல்லூரி 1979 ஏப்ரலிலிருந்து 1980 மார்ச் மாதம் வரை ஆய்வு நடத்தியது. இதன் பிறகே இதனுடைய முக்கியத்துவம் தெரிய வந்தது.

ஆனால் அதற்கு முன்பே தூத்துக்குடி கடற்கரையிலிருந்தே ஆறிலிருந்து 150 கி.மீ. வரை தூரமுள்ள வான் தீவு, கார்வார் தீவு, விலங்கு சல்லித் தீவு, காரைச் சல்லித் தீவு பகுதியிலுள்ள பவளப்பாறைகளை உடைத்து விற்று வந்திருக்கிறார்கள். இங்கு 400 பேருக்கு மேல் வாழ்க்கை நடத்துமளவுக்குப் பாறைகள் வெட்டியெடுப்பது நடந்திருக்கிறது. வெட்டி யெடுக்கப்பட்ட சல்லிகள் படகுகள் மூலம் கரைக்குக் கொண்டு வரப்பட்டு நேரே காளவாசலுக்கு எடுத்துச் செல்லப்படும். அங்குக் கரியுடன் சேர்ந்து இதை எரித்தால் சல்லிகள் பொடியாகிவிடும். சிமின்ட், தாள் மற்றும் சர்க்கரை ஆலைகளின் உபயோகத்திற்கு அனுப்பட்டுக் கொண்டிருந்தது இந்தத் தூள். இவ்வாறு ஓராண்டில் பவளப்பாறையிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட சல்லிகள் மட்டுமே 15 ஆயிரம் டன்களாகும்.

1980க்குப் பிறகு அரசு இத்தகைய இழப்பைக் கருத்தில் கொண்டு மீன்வளத் துறையில் பவளப்பாறைப் பாதுகாப்புக் காகவே ராமேசுவரத்திலிருந்து தூத்துக்குடி வரை பதினெட்டு பேர் அடங்கின ஒரு குழு அமைக்கப்பட்டது. இவர்களுக்குப் படகு வசதி செய்து தரப்பட்டது. அதற்குப்பிறகு பவளப்பாறைகளை வெட்டிக் கொண்டு வருகிறவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. தூத்துக்குடி கடலோரத்திலுள்ள கிராமமான வெள்ளப்பட்டியில் முக்கியத் தொழிலே பவளப்பாறைகளை உடைப்பதாக இருந்த நிலை இப்போது மாறியிருக்கிறது. இருந்தும் சிலாவத்துறை, தருவைக் குளம் பகுதிகளில் இன்னும் பவளப்பாறை உடைப்புத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

இதனால் பவளப்பாறைகள் நிரம்பின தூத்துக்குடியிலிருந்து 15 கி.மீ. தூரத்திலுள்ள 16 எக்டேர் பரப்பளவிலான காரைசல்லித் தீவில் ஒரு பகுதியே அழிக்கப்பட்டு விட்டது. 1991க்குப் பிறகு பவளப்பாறைகள் காட்டு இலாகா கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு, பவளப்பாறைகள் அதிகமுள்ள தீவுகளில் வேம்பு, பூவரசு போன்ற மரங்கள் நடப்பட்டிருக்கின்றன. தூத்துக்குடியில் பவளப்பாறை சல்லிகளை எரிக்க உதவிக் கொண்டிருந்த 28 காளவாசல்கள் தகர்க்கப்பட்டன. முன்பு வெடிமருந்துகள் உபயோகப்படுத்தப்பட்டு அதை வைத்து பவளப்பாறைகள் தகர்க்கப்பட்ட தெல்லாம் இப்போது நிறுத்தப்பட்டிருந்தாலும் முழுக்கக் குறைந்துவிடவில்லை. ஆஸ்திரேலியாவில் பவளப் பாறைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. சில நாடுகளில் மட்டுமே கடல் பகுதியில் உள்ள அரிய இனம் பவளப்பாறைகள். இவை பல ஆயிரக் கணக்கான உறுப்புகளால் இணைந்தவை. இந்தியாவில் அரேபியக் கடற்பரப்பில் சில பவளப்பாறைகள் இருந்தாலும் கிழக்குக் கடற்கரைப் பரப்பில் உள்ளவை மட்டும்தான் சிறப்பானவை. இவை உருவாக ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகின்றன. இவற்றை அழித்தால் திரும்பவும் உருவாக்க முடியாது.

எண்பதுக்குப் பிறகு இந்தப் பகுதியிலுள்ள பவளப்பாறைகளை வைத்து தேசியக் கடற்பூங்காவை அமைக்கும் திட்டமிருந்தது. பிறகு ஏனோ இந்தத் திட்டம் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. இதன் முக்கியத்து வத்தை உணர்ந்து பாறைகள் தகர்க்கப்படுவது முழுக்க நிறுத்தப்பட்டு இப்பகுதியில் தேசியக் கடற் பூங்காவை அமைக்க வேண்டும். இதன் மூலம் இயற்கையான சுற்றலாத்தளமும் உருவாகும். அபூர்வ பவளப்பாறைகளும் பாதுகாக்கப்படும்.

இப்படிப்பட்டச் சூழலில் சிக்கல்கள் தமிழகத்தில் பெருகி வருகின்றன. இங்கே சொல்லப்பட்டவை ஒரு சிலவே. இன்னும் பல உள்ளன.

கடலூரில் வேதி ஆலைகளால் மக்கள் ஒவ்வொரு நாளும் செத்து மடிகின்றனர். ஆற்று மணலைக்கூட இப்போது களவாடத் தொடங்கிவிட்டனர். ஆறுகள் எல்லாம் ஆலைக்கழிவுக் கால்வாய்களாகி விட்டன. நீலமலையில் நடப்பதெல்லாம் சந்தன வெட்டும், யானை வேட்டையுந்தான். தனலாகச் சென்னையில் தாபர் டூ பாண்ட் ஆலையின் புதிய மிரட்டல், “பொருளியல் வளர்ச்சியில்” தமிழகம் மூச்சுத் திணறுகிறது. தூத்துக்குடியில் உயிரைக் குடிக்கக் காத்திருக்கும் செம்பு உருக்காலை. இப்படி நீரும், நிலமும், காற்றும் களங்கப்பட்டுவிட்டன. உலகமெங்கும் நடக்கும் உண்மை இதுவென்றாலும் தமிழகம் என்ற தங்கத் திருமேனி எல்லா வளமும் பெற்றிருந்தும் ஒவ்வொன்றையும் இழக்கின்ற அவலத்தை என்னவென்பது?

தமிழ்நாட்டின் வளமிக்க கானகப் பரப்பு மிகவும் குறைந்துள்ளது. தற்போது 17,726 ச.கி.மீ. அளவே காடு உள்ளது. இதிலும் அடர்ந்த காடுகளின் அளவு வெறும் 8283 ச.கி.மீ. அளவே. ஒரு நாட்டின் மொத்தப் பரப்பில் 33 விழுக்காட்டிற்கு மேல் காடுகள் இருக்க வேண்டும் என்பது கானகச் கொள்கையின் அடிப்படைக் கருத்து. தமிழ்நாட்டின் பரப்பு 1,30,100 ச.கி.மீ. ஆகும். முன்பு நாற்பெரும் பரப்பில் இரண்டாக இருந்த குறிஞ்சி முல்லை நிலப்பரப்பு இப்போது 12 விழுக்காட்டிற்கும் குறைவாக! மிகமிகக் குறைந்த காடுகள் கொண்ட தமிழகம் பல்வேறு சூழலியல் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.

நீர் வளத்தைப் பொருத்த அளவில் தமிழகம் முந்நீர் வளங்கொண்டது. ஆற்று வளமும், கடல் வளமும், மழை வளமும் கொண்ட தமிழகம் இப்போது ஆற்று வளத்தை முற்றிலும் இழந்து, மழை வளத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் திகழ்கின்றது. கடல் வளமானது இப்போது பெருகி வரும் வணிகப் போக்கினால் சூறையாடப்படுகிறது. காவிரி, பெண் ணையாறுகள், பாலாறு, பொருநை, பவானி போன்ற ஆறுகளில் நீர் வரத்துக் குறைந்ததோடு அவற்றின் கழிவின் பெருக்கமும் உயர்ந்துள்ளது. பெருந்தொழிற் பேட்டைகளில் இருந்து வெளிவரும் தூய்மையாக்கப்படாத கழிவுநீர், ஆறுகளைக் கழிவுநீர்க் கால்வாய்களாக மாற்றியதால் எண்ணற்ற நோய்கள் தோன்றி வருகின்றன.

சேனைகட்டிப் போரடித்த சிறப்பான நிலவளம் மிக்கத் தமிழகத்தின் நெற் களஞ்சியமாம் தஞ்சைத் தரணி, இப்போது நீர் பற்றாக்குறையால் காய்வதோடு மட்டுமின்றி, பசுமைப்புரட்சி வேளாண்மையில் ஈடுபட்ட தால் வயல்கள் விளைவிப்புத் திறனை இழந்து விட்டன. உயரின விதைகளையே பயன்படுத்தி வேளாண்மையில் ஈடுபட்ட தால் ஏராளமான வேதி உரங்களும், பூச்சிக் கொல்லிகளும் தேவைப்படுகின்றன. எனவே மண் மீண்டும் வளத்தை இழக்கிறது. இவ்வாறு வேளாண்மையின் சரிவால் பிற மாநிலங்களில் இருந்தும், நாடுகளில் இருந்தும் உணவுப் பொருட்களை இறக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

தொழிற்சாலைகளின் தவறான அணுகுமுறைகளால் ஏற்படும் சூழல் கேடும் தமிழகத்தை விட்டுவைக்கவில்லை. தூத்துக்குடியில் தொடங்கி, தழையூத்து, ஆலங்குளம், துலுக்கப்பட்டி பயின்சுதை (சிமெண்ட்) ஆலைகளில் இருந்து கடலூர் வேதித் தொழிற்ச் சாலைகள், திண்டுக்கல், வாணியம்பாடி தோலாலைகள், பவானி, காவிரி ஆற்றங்கரையோரத்தின் ஏராளமான வேதி ஆலைகள், அனல் மின் நிலையப் புகைகள் யாவும் காற்றைக் கொடுமையான முறையில் சீர்கெடுத்து வருகின்றன.

நகர்மயமாக்கல் தமிழகத்தில் விரைந் தேறி வருகிறது. சிற்றூர்களின் வாழ்நிலை சீர்குலைவதாலும், அரசின் உதவிகள் பெரிதும் நகரை நோக்கி இருப்பதாலும் மக்கள் நகரத்தை நோக்கிப் பாய்கின்றார்கள். சான்றாக ஒரு திட்டத்தைக் கூறலாம். சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்க மட்டும் 1638 கோடி ரூபாய்களுக்கு ஒரு திட்டம் வரையப்பட்டது. அந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துச் சிற்றூர்களுக்கும் 400 கோடியளவிலேயே திட்டம் உருவாக்கப் பட்டது. எனவே அரசின் பொதுவான கொள்கை யாக்கம் நகர் நோக்கியே உள்ளது. இந்த நகர்மயமாதலால் ஏராளமான மக்கள், பெருநகரச் சேரிகளில் உழல்கின்றார்கள் இவர்களது உடல்நல நிலைமையும் வாழ் நிலைமையும் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் குடிநீர்த் தட்டுப்பாடு, இருப்பிடப் பற்றாக்குறை போன்றவையும், விலையேற்றம் போன்ற சிக்கல்களும் பெருகிவருகின்றன.

ஆலையும் வேலையும் மக்களுக் காகத்தான். ஆனால் மக்களின் வாழ்வை முடிவு நோக்கிக் கொண்டு சென்றால் ஆலையும் வேலையும் யாருக்குப் பயன் தரும்? தமிழ்நாடு வளமிகு வயல்களையும், எண்ணற்ற கைத் தொழில்களையும் கொண்ட பகுதி. கைத்தறி நெசவு, திண்டுக்கல் பூட்டு, காஞ்சிபுரம் பட்டு இப்படிப்பட்ட மரபான தொழில்கள் பல தமிழகமெங்கும் பரவிக் கிடக்கின்றன. இவை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நசிந்தும் வருகின்றன. தூத்தக்குடியில் மிகப் புகழ் பெற்ற முத்துக் குளித்தல் தொழில் இன்று காணாமல் போய்விட்டது. ஏனெனில் தூத்துக்குடியின் தொழிற்சாலைக் கழிவும், பவளப் பாறைகளின் அழிவும் முத்துச் சிப்பிகளை வாழ வொட்டாமல் செய்து விட்டன. பெரும்பாலும் ஏற்றுமதிக்கான தொழில்களே மாசுபடுத்தும் தொழில்களாக உள்ளன. தோல் தொழிற் சாலைகளும் சரி, இறால் பண்ணைகளும் சரி, செம்பு உருக்காலையும் சரி ஏற்றுமதியை நோக்கியிருப்பவை. இவற்றால் தான் பெரிய சூழல் நெருக்கடிகள் தோன்றுகின்றன. ஆனால் மரபு வழித் தொழில்களில் மாசுபாடு என்பது பெரிதும் இல்லை. ஒன்றிரண்டில் இருந்தாலும் அவை சீர் செய்யக் கூடியவையே.

எனவே எதிர்காலத்தில் மரபுவழித் தொழில்களைக் கண்டறிந்து அத்தகைய தொழில்களை ஊக்குவித்து அதற்கான தொழிற்கொள்கையை உருவாக்க வேண்டும். காடுருவாக்கம் போன்ற பணிகளில் மேலும் வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். வணிகமயமாக்கப்படும் இயற்கை வள ஏற்றுமதிகள் நிறுத்தப்பட்டு இயற்கை வளங்களைப் பாதுகாத்து அதிலிருந்து கிடைக்கும் விளைவுகளைப் பயன்படுத்தும் போக்கு உருவாக்கப்பட வேண்டும். மலை வளத்தைக் காப்பாற்றல், கடல் வளத்தைப் பாதுகாத்தல், மரபு மரபாக வந்த தொழில் நுட்பங்களைத் கண்டறிந்து பயன்படுத்துதல், தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை மீண்டும் அறிமுகம் செய்தல், மண்ணின் மீது பற்றும் பாசத்தையும் உண்டாக்கல், இதுவே சீரழிவற்ற புதிய தமிழகத்தை உருவாக்கும் செயல்ப் பாடுகளாகும்.

இயற்கை வளங்கள் எப்போதும் வைப்புநிதிபோல் கருதப்பட்டு, அதில் வரும் விளைவுகள் வட்டியைப் போன்று எடுத்துப் பயன்படுத்தப்பட வேண்டும். வைப்புநிதி தலைமுறை தலைமுறையாக பாதுகாப்புடன் பின்வரும் எதிர்காலச் சந்ததிகளுக்கு அளிக்கப்பட வேண்டும்.

“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்”

என்ற தமிழ் மறைக்கேற்ப நன்னீரும், நற்கடலும், நஞ்சற்ற மண்ணும், அருவி கொட்டும் மலையும், பெரும் மரங்கள் அடங்கிய காடும் கொண்டதாகத் தமிழ்நாடு திகழ வேண்டும்.

நேற்று என்பது இன்பக் கனவாக இருந்தது. இன்று என்பது துயர நனவாக உள்ளது. நாளை என்பது புதிய விடியலாக இருக்க வேண்டும். இதுவே நம் அவா.

J. Paul Baskar :

அமைதிக்கான முழுமித்த திட்டமிடல், செயலாக்கம், ஆராய்தல் சார்ந்த பொறுப்பு வகிப்பவர். சமூக கருத்துக்கள் தொடர்பான செய்திகளையும் பார்வைகளையும், தொகுப்பதிலும் வெளியிடுவதிலும் ஆர்வம் கொண்டவர். புதிய கல்வி, தமிழகச் சுற்றுச் சூழல் (மாத இதழ்)ஆகியவ்ற்றின் பதிப்பாசிரியர். “புகழ் மிக்க விசாரணைகள்” எனும் புகழ்மிக்க நூலின் ஆசிரியர். இவரது சுற்றுச் சூழல் ஈடுபாட்டிற்காக 1994 ஆம் ஆண்டு FIAN இயக்கம் இவருக்குத் தங்கப் பதக்கம் அளித்துள்ளது.

In charge of the overall planning, implementation and evaluation of the peace Trust activities. He developed interest in documentation and publication of News/Views on social issues. Editor of Puthia Kalvi, Tamil Environment Monthly. Author of Book Pugalmikka Visaranaigal (Tamil) on great political trails. FIAN has awarded Gold Medal in 1994 for Environment activities.

 

You Might Also Like