Star Mountain

My travels and other interests

கலைகளும் பொழுதுபோக்கும்தமிழ்நாடு நேற்று இன்று நாளை

தமிழகத்தில் வானொலியும் தொலைக்காட்சியும் (1997)

தமிழகத்தில் வானொலியும் தொலைக்காட்சியும்
வெ. நல்லதம்பி.
திருவான்மியூர்,
சென்னை – 600 041.

விடுதலை பெற்ற இந்தியாவின், தென்கோடி மாநிலமான தமிழ்நாடு வானொலித் துறையில் சிறந்த பணியாற்றும் வாய்ப்புப் பெற்றமைக்குக் காரணம், அதன் அன்றைய எண்ணிக்கை பலமே. நாடு முழுக்க இருந்த 6 வானொலி நிலையங்களில், தமிழ்நாட்டில் மட்டும் 2 நிலையங்கள் இயங்கின. நாட்டின் பிற பகுதி அனைத்திலும் நான்கே இருந்தன. தமிழர்கள் பலர் வேலை வாய்ப்புப் பெற்றனர். ஆனால் குறிப்பிட்ட சாதியினர் அதில் நிறைய புகுந்து, சங்கீதத்தை வளர்த்ததுபோல் தமிழ்நாட்டின் பிறகலை, மொழி வளர்ச்சிக்குப் பெரிதாக எதுவும் செய்ய வில்லை.

சென்னைத் தொலைக்காட்சி 1995இல் தோன்றியது. அதன் நிகழ்ச்சிகளை அஞ்சல் செய்ய முப்பதுக்கும் அதிகமான அஞ்சல் நிலையங்கள் தோன்றின. மதுரையில் சேலத்தில் நிகழ்ச்சி நிலையங்கள் தொடங்குவதாக அறிவிப்பை மட்டுமே வெளியிட்ட அரசு, பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. தமிழகத்தில் 90 சதவீதப் பரப்பையும், மக்களையும் சென்று சேரும் தொலைக்காட்சி தமிழகக் கலை, மொழி வளர்ச்சிக்கு ஓரளவு மட்டுமே உதவியுள்ளது.

தற்போதைய நிலையிலும்கூட வானொலியிலும் தொலைக்காட்சியிலும் குறிப்பிட்ட அளவு மாறுதல் ஏற்பட வாய்ப்பில்லாமைக்குக் காரணம், அவை இரண்டும் தொலைவில் உள்ள டில்லிக் கட்டுப்பாட்டில் இருப்பதே ஆகும். நிகழ்ச்சிகளின் அமைப்பும் போக்கும் மேலிடத்தின் நெறிகாட்டுதலுக்கும், விளம்பரதாரர்களின் வணிக எண்ணங்களுக்குமே ஈடுகொடுக்கின்றன.

தனியார் தொலைக்காட்சிகள் தமிழகத்தில் நான்கு தோன்றின. அவற்றுள் ஒன்று நின்று போனது. ஒன்று, இரண்டு மூன்று கைமாறி தற்போது கர்நாடகத் தொழில் அதிபரின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு நிலையம் திரைப்படங்களின் உரிமையைப் பல்லாண்டுகளாகச் சேர்த்து வைத்து, அவற்றையே நம்பி நடத்துபவரின் கையில் உள்ளது. மற்றொரு நிலையம் தமிழகத்தின் தற்போதைய ஆட்சியாளரின் உறவினரால் நடத்தப்படுகிறது. அந்நிலையங்கள் பெரும்பாலும் வணிக நோக்கில் நடத்தப்படுவதால் அவற்றிடமிருந்து தமிழ்நாட்டின் கலை வளர்ச்சிக்கு நிறைய எதிர்பார்க்க முடியாது என்று சொல்லப்படுகிறது.

தகவல், கல்வி, பொழுதுபோக்கு ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தகவல்சாதனத் துறைகளான வானொலியும் தொலைக்காட்சியும், எதிர்காலத்தில் நன்கு இயங்கும் நிலையினைப் பெற வேண்டுமானால் மக்களின் விழிப்புணர்வும், அரசின் நெகிழ்வான நெறிப்படுத்தும் முறையும் உறுதியாகத் தேவை.

மொழியால் தமிழகத்தோடு ஒன்றாகவும் ஆட்சிநிலையால் ‘யூனியன் பிரதேசம்’ என்று வேறாகவும் உள்ள புதுச்சேரியில் வானொலி நிலையமும், தொலைக்காட்சி நிலையமும் இயங்குகின்றன. அவற்றுக்கும் மேற்கூறியன பொருந்தும்.

விடுதலை பெற்ற இந்தியப் பெரு நாட்டில் அகில இந்திய வானொலி என்ற அமைப்பில், மொத்தம் ஆறு நிலையங்களே இருந்தன. அதில், இரு பெரும் நிலையங்கள் சென்னையில் (1938, ஜðன் 16) ஒன்றும், திருச்சியில் (1939, மே 16) ஒன்றும் அமைந்திருந்தன. இதை ஒரு பெரும் பேறாகவே கொள்ளலாம். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. 1920இல் பிட்ஸ்பர்க்கில் (அமெரிக்கா) உலகத்தின் முதல் ஒலிபரப்பு நிலையம் தொடங்கப்பட்ட நிலையிலும், மார்க்கோனி கம்பெனியினர் இங்கிலாந்தில் செம்µபோர்டிலிருந்து அதே ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி முதல், வானொலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பிய நிலையிலும் தமிழ்நாட்டின் சென்னையில் ஒரு முயற்சி நடந்தது. “மெட்ராஸ் மாகாண ரேடியோ கிளப்” ஒன்றினை “1924, மே 16இல் சி.வி. கிருஷ்ணசாமி செட்டி என்பவர் கொடுத்த ஒத்துழைப்பாலும், உற்சாகத்தாலும் தொடங்கி வானொலி ஒலிபரப்பைப் தமிழ் நாட்டினர் நடத்தி வந்தனர்.

பண நெருக்கடி காரணமாக 1927இல் கிளப், வானொலியை நிறுத்தி சென்னை மாநகராட்சியிடம் தன் டிரான்ஸ்மீட்டரை ஒப்படைத்தது. மாநகராட்சி 1930 ஏப்ரல் 1 முதல் முறையான ஒலிபரப்பைத் தொடங்கியது. மெரீனா, ராபின்சன் பார்க், உயர்நீதிமன்றக் கடற்கரை, பீப்பிள்ஸ் பார்க் முதலான இடங்களில் ஆறு ஒலிபெருக்கிகளை அமைத்திருந்ததோடு, 14 மாநகராட்சிப் பள்ளிகளில் குழந்தைகளுக்காகவும் வானொலிப் பெட்டியை வைத்திருந்தனர். இந்த நிலை “அகில இநதிய வானொலி” என்ற பெயரில் சென்னை வானொலி புதிய நிலையத்தை 1938, ஜூன் 16இல் தொடங்கி சிற்றலை, நடுத்தர அலை வரிசைகளில் ஒலிபரப்பைத் தொடங்கும் வரை நீடித்தது. “அந்நாளில் வானொலியில் முக்கியத்துவத்தை அறிந்திருந்த மிகச் சில மாநிலங்களில் சென்னையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது” என்கிறார் எச். ஆர். லுத்ரா.

விடுதலைக்குப் பின்னர்த் தமிழகத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் திருநெல்வேலி (1963, டிசம்பர் 1), கோயம்புத்தூர் (1966, டிசம்பர் 18), நாகர்கோயில் (1984 அக்டோபர் 30), மதுரை (1987 ஜூன், 6), ஊட்டி (1994 மே 7), தூத்துக்குடி (1994 மே 31) என மேலும் ஆறு புதிய நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இதே போன்று தமிழகத்தின் இடைப்பட்ட, பாண்டிச்சேரி யூனியன் பிரதேசப்பகுதியில் 1967 செப்டம்பர் 23இல் ஒரு வானொலி நிலையமும், காரைக்காலில் 1995 மார்ச் 6இல் ஒரு வானொலி நிலையமும் தொடங்கப்பட்டுள்ளன.

வானொலி நிகழ்ச்சிகளை வெளியிடுவதற்காக 1938, ஜூன் 16இல் ‘வானொலி’’ என்ற பத்திரிகை வெளிவரத் தொடங்கியது. அண்மையில் அது நிறுத்தப்பட்டு விட்டது.

ஒலிபரப்பின் மூன்று முக்கிய நோக்கங்களாகச் சொல்லப்படுபவை நேயர்களுக்குப் பொழுதுபோக்கு, தகவல், கல்வி என்ற வகையிலான நிகழ்ச்சிகளைத் தருவது என்பனவாகும். உலகப் புகழ் பெற்ற அப்போதய பி.பி.சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜான் ரீத், வானொலி கேட்கும் நேயர்களை அவ்வாறு வகைப்படுத்த முடியாது என்றும், பலரும் பலவகையான நிகழ்ச்சிகளை மாறி மாறிக் கேட்கும் வாய்ப்பு உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் அந்த நாட்டுத் தேவைகளுக்கு ஏற்பவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் திறமையின் அடிப்படையிலும், கேட்கும் நேயர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும் அமையும் என்பது யாவரும் அறிந்த உண்மை. அப்படிப்பட்ட நிலையில், சென்னை வானொலியில் 1939 நவம்பர் 2இல் கல்லூரிக் கல்விக்கென ஒலிபரப்புத் தொடங்கிய மதிநுட்பத்தைப் போற்றியே ஆகவேண்டும்.

ஒரு நாட்டின் தகுதியை அதன் பொருளாதார அடிப்படையில் மதிப்பிடும் நிலையில், பொருளாதாரத்துக்கு அடிப்படையாக விளங்கும் நம்நாட்டு வேளாண்மைக்கும், நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் கிராமங்களின் வளர்ச்சிக்கும் வானொலி அந்நாளிலேயே கவனம் செலுத்தி ஒலிபரப்பைத் தொடங்கி இன்றும் நடத்தி வருகிறது.

டில்லி வானொலி நிலையம் 1938 அக்டோபர் 16இல் கிராம நிகழ்ச்சியினை ஒலிபரப்பவே திருச்சி வானொலியிலும் விவசாய நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. எனினும் 1959 டிசம்பர் 17 முதல் முறையான வானொலி வேளாண்மை ஒலிபரப்புத் திட்டமிட்ட வகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதுபோன்றே தற்போது சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி நிலையங்களிலும் வேளான்மை ஒலிபரப்புப் பிரிவுகள் இயங்கி வருகின்றன.

வானொலியின் நிகழ்ச்சிக் கொள்கைகள் குறித்து டில்லி அரசியல் நிர்ணயச் சபையில் விவாதம் நடைபெற்றபோது நேரு அவர்கள் (1948 மார்ச் 15) “எனக்கு யாரேனும் உபதேசம் செய்தால் நான் விரும்பிக் கேட்க மாட்டேன். இதுவே பொதுமக்களின் மனோநிலையுமாகும். ஒரு பிரச்சினையை எடுத்துக் கொண்டு வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் நிகழ்ச்சிகளை அமைக்கவேண்டும். ஒரு குழந்தையிடத்தில் நாம் எல்லா நேரமும் கனமான பொருட்களைப் போதிப்பதில்லை அல்லவா” என்று குறிப்பிட்டார்.

வானொலி நிலையங்களில் அக்காலத்தில் இந்தியச் சாஸ்திரிய சங்கீதத்திற்கென மிகப்பெரும் அளவில் 60 சதவீதம் ஒலிபரப்பு நேரம் ஒதுக்கப்பட்டது. படிப்படியாக வளர்ச்சி குறித்த நிகழ்ச்சிகளுக்கென அதிக நேரம் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக இப்போது நியாயமான அளவுக்குக் குறைந்து வந்துள்ளது.

ஒரு நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் என்ற கருத்துக்கு ஏற்ப வானொலியில் தனியாக இளைஞர்கள் நிகழ்ச்சிக்கான அலைவரிசை 1969இல் டில்லியில் தொடங்கப்பட்டதை அடுத்து சென்னை வானொலியிலும் உடனே “இளைய பாரதம்” என்ற ஒலிபரப்பைத் தொடங்கினார்கள். இளைஞர்கள் என்றாலே விளையாட்டும் கூடவே தோன்றுமல்லவா! எனவே சென்னை வானொலி நிலையம் உட்பட நாட்டின் இதர மூன்று பகுதிகளிலும் 1972 நவம்பர் 19 முதல் தினமும் விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பி வருகின்றன.

வானொலி மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதால் எதுவும் டில்லியின் போக்குப்படியே நடைபெற வேண்டிய நிலையில் உள்ளது. வானொலி வரலாற்றில் தமிழகத்திற்கெனச் சில சிறப்புக்கள் உண்டு.

(அ)   முதல் முதலாகப் பண்பலை ஒளிபரப்பு (Frequency Modulation) 1977 ஜூலையில் சென்னையில் தொடங்கியது.

(ஆ)   “உள்ளுர் வானொலி நிலையங்கள்”  (Local Radio Stations) என்ற புதிய கொள்கை உருவானபோது நாடு முழுக்கவும் ஆறு நிலையங்கள் அமைக்கத் திட்டமிட்டதில் நாகர்கோயிலில் முதல் முதலாக 1984 அக்டோபர் 30இல் ஒரு நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

(இ)   கல்வி ஒலிபரப்புக்கெனப் பள்ளிகளில் வானொலிப்பெட்டிகள் அமைத்ததில் மற்ற எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்குத் தமிழ்நாட்டில் எல்லாப் பள்ளிகளிலும் வானொலிப் பெட்டிகள் அமைந்திருப்பது.

“வானொலி” பெயர்ப் போராட்டத்திலும் தமிழ்நாட்டிற்குத் தனி இடம் உண்டு. மத்திய அரசின் ஆட்சிமொழிக் குழு தந்த ஆலோசனையின் பேரில் வானொலி நிலையங்களின் பெயரை AIR என்பதற்குப் பதிலாக AKASHWANI என்று மாற்றியபோது மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டதால் அம்முயற்சி கைவிடப்பட்டது. “பிராந்தியச் செய்திகள்” “மாநிலச் செய்திகள்” என மாறியதற்கும் அந்தப் பின்னணி பொருந்தும்.

“செவிச்செல்வம் சிறந்த செல்வம்” என்ற வள்ளுவர் வாக்கிற்கேற்ப வானொலி தமிழ்நாட்டு மக்களுக்குப் பல வகையிலும் தொண்டு செய்து வருவதை அதன் செய்தி அறிக்கைகள் (டெல்லியில் இருந்து 1939 அக்டோபர் 1 முதலும், சென்னையிலிருந்து 1954 மே 1 முதலும், திருச்சியிலிருந்து பிற்பகலில் அண்மைக்காலம் முதலும் இடம் பெறுபவை) நிகழ்ச்சிகளும், இசை, இலக்கிய, கல்வி நிகழ்ச்சிகளும் உறுதிப்படுத்துகின்றன.

தமிழ்நாட்டு வானொலி நிலையங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் அமைப்பு, பெரும்பாலும் இசை (40%) செய்தி (20%) பேச்சு நிகழ்ச்சிகள் (20%) குறிப்பிட்ட நேயர்களுக்கான (விவசாயிகள், மாதர், சிறுவர், தொழிலாளர்கள் முதலானவை) நிகழ்ச்சிகள் (15%) மற்றவை (5%) என்ற அளவில் வழங்கப்படுகின்றன. இந்தச் சதவிகிதங்களில் மிகச்சிறு வேறுபாடு தமிழக வானொலி நிலையங்களுக்கிடையே நிலவுகின்றது.

அண்மைக்காலமாக, வளர்ச்சித் திட்டங்களுக்கான நிகழ்ச்சிகளுக்கு வானொலி முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. பொதுவில், நவீன வேளாண்மை உற்பத்திகளை எடுத்துரைப்பது, கல்விப்பணிக்கு உறுதுணையாகக் கல்வி நிகழ்ச்சிகளை வழங்குவது, சுகாதாரம், குடும்பநலம் உட்பட்ட சமுதாய நிகழ்ச்சிகளை வழங்குவது, அறிவியல் தொழில்நுட்ப நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது ஆகியன அவற்றுள் முக்கியமானவை.

கனமான இந்த நிகழ்ச்சி அமைப்புக்களை விரும்பாத, பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் நாட்டம் செலுத்துகிறவர்களுக்கான நிகழ்ச்சிகளுக்கென ஒரு தனி அமைப்பாக “விவித் பாரதி” என்ற அலைவரிசையை இந்தியப் பேரரசு 1957 அக்டோபர் 3ஆம் தேதி நாடெங்கிலும் தொடங்கியபோது சென்னை, திருச்சி நிலையங்களும் அந்நிகழ்ச்சி அமைப்பைக் கூடுதலாகப் பெற்றன. பின்னர் அவை விளம்பரங்களை ஒலிபரப்பும் நிலையை 1967 நவம்பர் 1இல் எய்தின.

செய்திகளின் முக்கியத்துவம் அதிகம் அறியப்பட்ட நிலையில் மணிக்கொரு அறிக்கை 1985 ஆகஸ்ட் 15 முதல் அனைத்து நிலையங்களிலும் ஆங்கிலத்திலும், இந்தியிலும் வழங்கப்பட்டு வருகின்றன.

தனியார் நடத்தும் நிலையங்களுக்கோ, நிகழ்ச்சிகளுக்கோ இன்னும் பெரிதாக வாய்ப்புக் கிட்டவில்லை. ஆயினும், சென்னை வானொலியில், (டில்லி, பாம்பாய்க்குப் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில்) தனியார் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கெனப் பண்பலை ஒலிபரப்பில் 1993 ஆகஸ்ட் 15 முதல் நேரம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நிகழ்ச்சிகளின் தரத்திற்கும், வகைக்கும் மிகச்சிறு அளவில் சுதந்திரம் கிடைத்துள்ளது எனலாம். ஆயினும் வானொலியும், தொலைக்காட்சியும் சுய ஆட்சி பெற வேண்டிய நிலைக்காகப் பல்வேறு குழுக்களும், ஆலோசனைகளும் பல்லாண்டுகளாக நாடெங்கும் நிகழ்த்தப்பட்டு, இப்போது இறுதியாகப் “பிரச்சார் பாரதி” சட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

மாறுபட்ட கருத்துக்களுக்கு இடமளிக்காமை, ஆளுங்கட்சிக்கே அனுசரனையாக வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் இயங்குவது ஆகிய குற்றச்சாட்டுக்கள், அவ்விரு துறைகளும் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது என்பதற்குக் கூர்தீட்டப்பட்ட ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றுக்கிடையே பல மாநில அரசுகள் தங்கள் திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறவும், மத்திய மாநில உறவில் ஏற்படும் விரிசல்களின் போது தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூறவும், தனியாக ஒர் அலைவரிசை வேண்டும் என்ற கோரிக்கையும் நெடுங்காலமாக நிறைவேறாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், கல்வி ஒலிபரப்புக்கெனத் தனி நிலையம் அல்லது அலைவரிசை போன்றவை எந்த அளவிற்கு ஈடுபடும் என்பது தெரியவில்லை. ஒருவேளை அப்படிப்பட்ட அமைப்பு வந்தால் 15 பல்கலைக்கழகங்கள் நிரம்பிய தமிழ்நாடு பலன்பெறும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாதுதான்.

வேலை வாய்ப்பைப் பொருத்தவரை, தமிழ்நாட்டு வானொலி நிலையங்களில் மொத்தம் சுமார் 950 (ஊட்டி நீங்கலாக) பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்களில் நிகழ்ச்சி தயாரிப்போர் மட்டுமே மாநில மொழி அறிவு பெற்றுப் பணிக்கு அமர்த்தப்படுவது அவசியமாகிறது. ஏனைய பொறியியல், நிர்வாகத்துறையைச் சேர்ந்தவருக்கு அது அவ்வளவாகத் தேவையில்லாத நிலை உள்ளது. ஆட்களைப் பணிக்கு அமர்த்தும் பொறுப்பு மத்தியத் தேர்வாணைக்குழு (மேல்மட்ட அலுவலருக்கு), மத்தியப் பணியாளர் தேர்வுக்குழு (இடைப்பட்ட அலுவலருக்கு), சம்மந்தப்பட்ட வானொலி நிலையங்கள் (குறைந்த வருமானப் பணியாளர்கள்) ஆகியவற்றிடம் விடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அனைத்து வானொலி நிலையங்களுக்கும் கடந்த ஆண்டு (1995) சுமார் ரூபாய் 68 கோடியே 63 லட்சம் (ஊட்டி, தூத்துக்குடி நீங்கலாக) நிதி ஒதுக்கி செலவிடப்பட்டுள்ளது. இத்தொகை, அலுவலர்களுக்குச் சம்பளமாகவும், நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களுக்குச் சன்மானத் தொகையாகவும் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் கலை வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும் இத்தொகை பயன்பட்டுள்ளது எனில் மிகையாகாது.

தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு, தமிழ்நாட்டு நிலவரம் ஆகியவற்றை வெளிநாட்டில் வாழும் தமிழ்ர்களுக்கு எடுத்துச் சொல்லவும் இணைப்புப் பாலமாக வானொலி நெடுங்காலமாகவே பயன்பட்டு வந்துள்ளது. தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் வெளிநாட்டுத் தமிழர்களுக்கென டில்லியில் இருந்து 1944 மே 1ஆம் தேதி முதல். நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி வருகின்றன. இதன்மூலம் (பர்மா) மியான்மர், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் முதலான நாடுகளில் வாழும் தமிழர்கள் பயன்பெறுகிறார்கள்.

இதேபோல் சென்னையில் இருந்து ஒவ்வொரு நாளும் மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரையிலும், காலையில் 6.45 மணி முதல் 9.00 மணி வரையிலும் தூத்துக்குடி நிலையத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் மாலை 5.45 மணி முதல் 6.30 மணி வரையிலும் இரவு 8.30 மணி முதல் 9.00 மணி வரையிலும் தமிழில் இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியத் தமிழர்களுக்கு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி வருகின்றன.

வானொலி நிகழ்ச்சிகளை மதிப்பீடு செய்ய நேயர் கருத்தாய்வுப் பிரிவு சென்னை வானொலியில் மட்டும் இயங்கி வருகிறது. ஏனைய நிலையங்களில் இந்த வசதி இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.

வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கான பெட்டிகள் எண்ணிக்கையைத் தற்போது அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஏனெனில் வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கான லைசென்ஸ் கட்டண முறை 1985 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டதே காரணம். ஆயினும் இந்தியப் பெருநாடு முழுமைக்குமாக 1995 நிலவரப்படி 11 கோடி வானொலிப்பெட்டிகள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே வானொலிப்பெட்டிகளின் எண்ணிக்கை சுமார் 1 கோடி எனலாம்.

வானொலி துறையில் பொறியியல் பிரிவு குறிப்பிடத்தகுந்தது. அவ்வகையில் சென்னையில் 2 X 100 கிலோவாட் (மத்திய அலை) சென்னை முதல் அலைவரிசைக்கும், 10 கிலோவாட் (மத்திய அலைவரிசை) சென்னை 2ஆவது அலைவரிசைக்கும், 2 X 10 கிலோவாட் மத்திய அலை வர்த்தக ஒலிபரப்பிற்கும், 50 கிலோவாட் சிற்றலை வரிசைக்கும், இன்னொரு 100 கிலோவாட் சிற்றலை தென்கிழக்கு ஆசிய ஒலிபரப்புக்கும் மேலும் 2 X 5 கிலோவாட் பண்பலை ஒளிபரப்புக்கும் ஒலிபரப்பிகள் (டிரான்ஸ்மீட்டர்கள்) நிறுவப்பட்டுள்ளன.

திருச்சிக்கு 100 கிலோவாட் மத்திய அலை ஒலிபரப்பியும், 1 கிலோவாட் மத்திய அலை ஒலிபரப்பியும் நிறுவப்பட்டுள்ளன. இதேபோல் திருநெல்வேலி, கோவை, மதுரை ஆகிய இடங்களில் 10 கிலோ வாட் மத்திய அலைவரிசை ஒலிபரப்பியும், ஊட்டி, நாகர்கோயில் நிலையங்களுக்கு 1 கிலோவாட் மத்திய அலைவரிசை ஒலிபரப்பியும் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஒலிபரப்பை நோக்கமாகக் கொண்ட தூத்துக்குடி வானொலி நிலையத்திற்கு 2 X 100 கிலோவாட் ஒலிபரப்பி பொருத்தப்பட்டுள்ளது.

தற்போது நிறைவேற்றப்பட்டுவரும் பொறியியல் பணிகளால் மதுரையும் கோவையும் 2 X 10 கிலோவாட் மத்திய அலை ஒலிபரப்பியைப் பெற உள்ளன. கோவைக்கு வர்த்தக ஒலிபரப்புக்கென நிகழ்ச்சி அரங்குகளும், 2 X 5 கிலோவாட் பண்பலை ஒலிபரப்பியும் உடனே கிடைக்க உள்ளன. அதே மாதிரியான பண்பலை ஒலிபரப்பு வசதி சென்னையில் தேசிய ஒலிபரப்புக்கெனக் கிடைக்க உள்ளது. நாகர்கோவில் வானொலிக்குத் தற்போதுள்ள 1 கிலோவாட் மத்திய அலைவரிசை (மீடியம் வேவ்) வசதிக்குப் பதிலாக 2 X 5 கிலோவாட் பண்பலை ஒலி பரப்பு வசதி கிடைக்க உள்ளது. கொடைக்கானலிலும் அதே மாதிரியான பண்பலை ஒலிபரப்பி வசதியுடன் பன்னோக்கு நிகழ்ச்சி அரங்குகள் அமைய உள்ளன.

தமிழக வானொலித்துறை எதிர்காலத்தில் எப்படி இருக்கலாம்?

இந்தியப் பெருநாட்டில் தமிழ்நாடு 1991 கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை அடிப்படையில் 7ஆவது இடத்திலும் நிலப்பரப்பின் அடிப்படையில் 11ஆவது இடத்திலும் உள்ளது. மொழி அடிப்படையில் பார்த்தால் இந்திய மக்களில் இந்தி பேசுவோர் 40 சதவிகிதமாகவும், தெலுங்கு மொழியாளர் 8.20 சதவிகிதமாகவும், வங்காளத்தினர் 7.79 சதவிகிதமாகவும், மாராத்தி மொழி பேசுவோர் 7.50 சதவிகிதமாகவும் உள்ள நிலையில் தமிழ் மொழியாளர் எண்ணிக்கை 6.76 சதவிகிதமாக உள்ளது. ஏனைய உருது, குஜராத்தி, கன்னடம், மலையாளம், ஒரியா, பஞ்சாபி, அஸ்ஸாமி, காஷ்மீரம், சிந்தி மொழியாளர்களின் எண்ணிக்கை 5 சதவிகிதத்திற்கும் குறைவே ஆகும்.

அகில இந்திய வானொலி மொத்தம் 24 மொழிகளிலும் 146 குறுமொழிகளிலும் நாடனைத்துக்குமாக ஒலிபரப்புகிறது.தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் தமிழ்நாட்டில் 85.4 சதவிகிதத்தினர் உள்ளனர். ஏனைய தென்மாநிலங்களில் அந்த மாநில மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் கர்நாடகத்தில் 3.70 சதவிகிதத்தினரும், கேரளாவில் 2.40 சதவிகிதத்தினரும், ஆந்திராவில் 1.20 சதவிகிதத்தினரும், தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் உள்ளனர். பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் 89.2 சதவிகிதத்தினரும், அந்தமான் தீவில் 14.9 சதவிகிதத்தினரும் தமிழர்கள். இவர்களுக்குத் தற்போது வானொலி ஆற்றிவரும் தொண்டு போதுமானதுதானா? இல்லை எனலாம்.

பொதுவில் தமிழ் வானொலி நிகழ்ச்சி நேரத்தின் அளவும், நிகழ்ச்சியின் தரமும் மேலும் உயர்வதற்குப் பெருமளவு வாய்ப்பு உள்ளதென்றே சொல்லலாம். 24 மணி நேரப் பண்பலை ஒலிபரப்பு சென்னை வானொலியில் இருக்கிறது என்பது ஒர் இனிப்பான செய்தி என்றாலும், அதன் தரமும் ஏனைய வானொலி நிலையங்களுடைய நிகழ்ச்சிகளின் தரமும் உயர வேண்டுமென்று ஆசைப்படுவோர் பலர். அதேசமயம் நிகழ்ச்சிகளின் தரம் பற்றி ஒரேயடியாகக் குறைகூறவும் முடியாது. ஏனெனில் தமிழக வானொலி நிலையங்களில் தயாரித்த பல படைப்புகள் அகில இந்திய அளவில் போட்டியிட்டு பல ஆகாஷ்வானி விருதுகளை வென்றுள்ளன. அந்தப் ’பல’ விருதுகள் ’மிகப்பல’ விருதுகளாக மாற வேண்டும்.

அரங்கிலேயே தயாரிக்கப்படக்கூடிய நிகழ்ச்சிகள் ஒருபுறமும், மக்களை அவர்களது களங்களிலேயே சென்று காணும் பதிவு நிகழ்ச்சிகள் மறுபுறமாகச் சரிசம அளவு இருக்க வேண்டும். உள்நாட்டு நிதி இலங்கை வானொலி போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் செல்கிறதே என்னும் நோக்கில் மட்டும் நிகழ்ச்சிக் கொள்கைகளில் கருத்துச் செலுத்தாமல் எப்பொழுதும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். ஆர்மோனியம் போன்ற இசைக் கருவிகளை ஒரு காலத்தில் தடுப்பதும், மறுகாலத்தில் விடுப்பதுமான தடுமாற்றத்திற்கு இடமளிக்கக் கூடாது.

அடுத்த நூற்றாண்டை எதிர்நோக்கியுள்ள இக்காலகட்டத்தில், நாட்டின் உச்சநீதிமன்றம் “காற்றலைவரிசை அரசுக்கு மட்டுமே சொந்தமான தனிச் சொத்து அல்ல” என்ற தீர்ப்பை அளித்துள்ள நிலையில் – வானொலி புதிய புதிய இலக்குகளை எட்ட முயலவேண்டும். கட்டுப்பாடுகளும், இக்கட்டான சூழ்நிலைகளும் நிரம்பிய காலத்தலேயே பெரியாரை வானொலிக்கு அழைத்துப் பேச வைத்தது. கலைஞர் கருணாநிதியைக் கவிஞராக்கியது. 30 ஆண்டுகளுக்கு முன்பே 21ஆம் நூற்றாண்டைப் பற்றி வானொலியைப் பேச வைத்தது. எம்.எஸ். கோபால், வானொலி செய்திச் சித்திரத்துறையில் முத்திரை பதித்த கோ. செல்வம், குடும்ப நலத்துறைப் பிரச்சார ஒலிப்பரப்பில் கொடிகட்டிப் பறந்த ஆர். மகாதேவன் போன்றோரின் எண்ணிக்கை வருங்காலத்தில் அதிகம் பெருக வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் சட்டசபையில் எவ்வாறு பணியாற்றுகிறார்கள் என்பதை நேரடி நிகழ்ச்சியாக இனிமேலாவது வானொலியில் ஒலிபரப்பினால் தான் மக்களாட்சித் தழைத்தோங்கும். வானொலி தன் வாடிக்கையாளர் யார் என்பதை இனங்கண்டு அறிவது, தொலைக்காட்சி தோன்றியுள்ள இத்தருணத்தில் முக்கியமான கடமையாகும்.

தமிழகத் தலைநகர் சென்னை வானொலியில் பிற மொழியினருக்கு நிகழ்ச்சியைப் பெருந்தன்மையாகப் பெருமளவில் வழங்குவது போலவே, பிற மாநிலங்களில் வாழும் தமிழருக்கென அப்பகுதி வானொலி நிலையங்கள் குறிப்பாகத் திருவனந்தபுரம், பெங்களூர், ஐதராபாத், போர்ட் ப்ளேயர், டில்லி போன்ற இடங்களில் தமிழ் நிகழ்ச்சிகளுக்கு நேரத்தைக் கொடுத்து அதிகப்படுத்த வேண்டும்.

லண்டன் பி.பி.சி. தமிழோசை, (பல வருடங்களுக்கு முன் வாஷிங்டன்னிலிருந்து வந்த) “வாய்ஸ் ஆப் அமெரிக்கா” வின் தமிழ் நிகழ்ச்சி), மாஸ்கோ வானொலியின் தமிழ்ச்சேவை, சீனத்தமிழ் ஒலிபரப்பு, பிலிப்பைன்ஸ் நாட்டுத் தமிழ் ஒலிபரப்பு ஆகியவை தமிழ் மக்களுக்கு ஆற்றும் சேவையை இங்குக் குறிப்பிடுவது மிகவும் அவசியம்.

மேல், கீழ், வட புலங்களுக்கென நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு கட்டுப்பாட்டுக்கென அலுவலகங்களை அமைத்த இந்தியப் பேரரசு, தென்புலத்துக்கென இதுவரையிலும் அலுவலகத்தை அமைக்காத அநீதியைப் போக்க (Deputy Director General’s Office) உடனடி முயற்சியில் இறங்க வேண்டும். பிற புலங்களைவிடத் தென்புலம் டெல்லியிலிருந்து வெகு தொலைவில் அமைந்திருப்பது அக்கோரிக்கையின் நியாயத்தை நிச்சயம் வலுப்படுத்துகிறது. அதிகாரத்தைப் பரவலாக்கும் நியதிக்கும் அது நீதி செய்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக வானொலி தன் நிதிநிலை வளங்களைத் திட்டமிட்டுப்பெருக்க வேண்டியுள்ளது.

தொலைக்காட்சி

றிமுகம்

வானொலியோடு ஒப்பிடுமிடத்து, இந்தியாவிற்குத் தொலைக்காட்சியின் வருகை மிகவும் தாமதமானது. பி.பி.சி. 1936இல் தொலைக்காட்சியை நடத்திய நிலையில், புதுடில்லியில் 1959 செப்டம்பர் 15ஆம் நாள் தொலைக் காட்சி ஒளிபரப்பைத் தொடங்கியது.

தமிழகத் தலைநகர் சென்னையில் 1975ஆம் ஆண்டு சுதந்திரத் திருநாளாம் ஆகஸ்டு 15ஆம் தேதி தொலைக்காட்சி தொடங்கிவைக்கப்பட்டது. தொடக்கத்தில் சுமார் 20 கி.மீ. தூரம் வரையிலுமே நிகழ்ச்சிகள் தெரிந்தன. அந்த ஒளிபரப்புச் சக்தி 1976 ஆம் ஆண்டு ஜðலை 1ஆம் தேதியிலிருந்து 80 கி.மீ. தூரம் வரை தெரியுமளவிற்கு விரிவுபடுத்தப்பட்டது.

1978ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே தொலைக்காட்சியில் இந்திய அரசியலார், வர்த்தக ஒளிபரப்பை அறிமுகப்படுத்தினார்கள். அத்துடன் அந்த ஆண்டு ஏப்பிரல் முதல் தேதியிலிருந்து வானொலியின் ஒர் அங்கமாக இருந்த தொலைக்காட்சியைத், தனித்துறையாகப் பிரித்து ‘தூர்தர்ஷன்’ என்னும் புதுப்பெயரையும் சூட்டினார்கள். தனிப்பட்ட நிலையங்களுக்குக் “கேந்திரங்கள்” என்ற பெயரையும் சூட்டி அரசு ஆணை பிறப்பித்தது. இந்தியத் தொலைகாட்சியின் தலைமை இயக்குனராகப் பி.வி. கிருஷ்ணமூர்த்தி என்ற தமிழர் நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் ஏற்கெனவே வானொலி பெயர்மாற்றப் பிரச்சினையை நன்கு உணர்ந்திருந்த இந்தியப் பேரரசு, ‘சென்னைத் தொலைக்காட்சி நிலையம்’ என்ற தமிழ்ப் பெயரை அப்படியே ஒளிபரப்பு அறிவிப்பில் வைத்துக் கொள்ள அனுமதித்தது.

சென்னைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக 1987 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் (ஜனவரி 14) கொடைக்கானலில் ஒர் அஞ்சல் நிலையத்தை அமைத்தார்கள். அடுத்து 1988 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் முதல்நாள் இரண்டாவது அலைவரிசையும் சென்னைத் தொலைக்காட்சிக்குக் கிடைத்தது.

இதற்கிடையே 1982 ஆம் ஆண்டு டில்லியில் ஆசிய விளையாட்டுக்கள் நடைபெற்றதை ஒட்டி இந்தியத் தொலைகாட்சியில் பெரிய முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. அதன் காரணமாகச் சென்னைத் தொலைக்காட்சி இருபெரும் பயன்களைப் பெற்றது. ஒன்று கருப்பு, வெள்ளை, ஒளிபரப்பு, வண்ண ஒளிபரப்பானது. முறையான செயற்கைகோள் இணைப்பு பெற்று டில்லி, பம்பாய், கல்கத்தா போன்ற பிற நிலையங்களுடன் நேரடி நிகழ்ச்சி பெறும் வாய்ப்பையும் பெற்றது.

மாநிலம் முழுமையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தெரியவேண்டும் என்பதில் அரசினரும் பொதுமக்களும் ஆர்வம் காட்டி வந்ததைத் தொடர்ந்து, இன்றைய நிலையில் அஞ்சல் நிலையங்கள் தமிழ் நாட்டில் பல்கிப் பெருகியுள்ளன. அதிக சக்தி அஞ்சல் நிலையங்கள் (HPT சென்னையில் மூன்று அலைவரிசைகளுக்கும் (DD1, DD2, DD3) தனித் தனியாகவும், கொடைக்கானலிலும், ராமேசுவரத்திலும் என ஐந்து உள்ளன. குறைந்த சக்தி ஒளிபரப்பிகள் (LPT) ஆரணி, ஆற்காடு, கோயமுத்தூர், குற்றாலம், கடலூர், தர்மபுரி, குடியாத்தம், கும்பகோணம், மார்த்தாண்டம், மாயூரம், நாகப்பட்டினம், நாகர்கோயில், நெய்வேலி, புதுக்கோட்டை, ராஜபாளையம், சேலம், தஞ்சாவூர், திண்டிவனம், திருச்செந்தூர், திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, உதகமண்டலம். வாணியம்பாடி, வேலூர், விழுப்புரம் என 29 இடங்களில் அமைத்துள்ளனர். மிகக்குறைந்த சக்தி அஞ்சல் நிலையம் (VLPT) ஒன்று வள்ளியூரில் அமைந்துள்ளது. இவையல்லாமல் ஒளிபரப்பு அஞ்சல் நிலையங்களிலிருந்து நிகழ்ச்சியைப் பெற்று பிரதிபலிக்கும் அஞ்சல் நிலையங்கள் (டிரான்ஸ்போசர்கள்) இரண்டு திண்டுக்கல்லிலும், காஞ்சிபுரத்திலும் அமைந்துள்ளன.

இந்த அஞ்சல் நிலையங்களில் சில 1978இல், சென்னைத் தொலைக்காட்சியுடன் இணைந்து, தனி இணைப்பாகச் (நெட்வொர்க்) செயல்பட்டன. எல்லா அஞ்சல் நிலையங்களும் 1990 ஆம் ஆண்டு அந்த இணைப்பில் இணைந்துள்ளன.

பிராந்திய மொழிகளுக்கான செயற்கைக்கோள் ஒளிபரப்புத் திட்டம் 1993இல் தொடங்கப்பட்டபோது, தமிழ் நிகழ்ச்சிகள் நாடெங்கும் தெரியத் தொடங்கின. அவ்வகை ஏற்பாட்டிற்கு 1994 முதல் டி.டி.5 (DD.5) எனப் பெயர் கொடுத்துள்ளார்கள்.

மொழியால் ஒன்றுபட்டு, நிலப்பரப்பால் யூனியன் பிரதேசம் என அறிவிக்கப்பட்ட பாண்டிச்சேரியில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு வசதி 1992 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 அன்று தொடங்கப்பட்டது. பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த காரைக்காலில் ஒரு குறைந்த சக்தி அஞ்சல் நிலையம் (மாஹி, ஏனாம் ஆகிய இடங்களில் மிகக்குறைந்த சக்தி அஞ்சல் நிலையங்களும்) உள்ளது. இவற்றில் பாண்டிச்சேரி நிலையம் தற்போது தினமும் ஆறு முதல் ஆறரை வரை அரை மணி நேரத் தமிழ் நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒளிபரப்பி வருகிறது. ஏனைய நேரங்களில் அது சென்னை நிலையத்தின் அஞ்சல் நிலையமாகச் செயல்படுகிறது. காரைக்கால், பாண்டிச்சேரி நிகழ்ச்சிகளைக் கூட அஞ்சல் செய்ய முடியாத நிலையில் சென்னை நிலைய நிகழ்ச்சித் திட்டத்தையே அஞ்சல் செய்கிறது. மாஹியும், ஏனாமும் அவ்வாறே பாண்டிச்சேரி நிகழ்ச்சியை அஞ்சல் செய்ய முடியாமல் டில்லி மற்றும் அவற்றுக்கு அண்மையில் உள்ள பெரிய நிலையங்களின் நிகழ்ச்சிகளை அஞ்சல் செய்து வருகின்றன. தமிழர்கள் குறிப்பிட்ட அளவு வாழும் அந்தமான் தீவில் 1996 பிப்பிரவரியில் தொலைக்காட்சி நிலையம் ஒன்று தொடங்கப்பட்டது.

சென்னைத் தொலைக்காட்சி அமைந்த நாள் முதல், அதில் செய்தி, கல்வி, வேளாண்மை, உடல்நலம், இசை, நாட்டியம், திரைப்படம், இலக்கியம் முதலான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அவற்றுடன் குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்கு, பெண்களுக்கு, தொழிலாளர்களுக்கு எனத் தனித்தனியே நிகழ்ச்சிகளும் வழங்கப்படுகின்றன.

அனைந்திந்திய அளவில் சென்னை நிலையம் தொடக்கக் காலம் முதல் நாடகத் தயாரிப்பில் சிறப்பிடம் பெற்றுள்ளது. அண்மையில் ஒர் ஈர் ஆண்டுகளாக வர்த்தக ஒளிபரப்பின் மூலம் அதிக வருமானம் ஈட்டிய தனிநிலையமாகவும் பெயரெடுத்துள்ளது. சென்னை முதல் அலைவரிசையில் தமிழ் நிகழ்ச்சிகளுக்கு முழுவாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்னையில் வாழும் ஏனைய மொழியினருக்குக் குறிப்பாகத் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உருது ஆகிய மொழியினருக்கும் அவ்வப்போது நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன. இரண்டாவது அலைவரிசை தொடங்கிய பின்னர் அந்தப் பிறமொழி நிகழ்ச்சிகள் அதில் ஒளிபரப்பாகத் தொடங்கின. காரணம் அந்த அலைவரிசை மாநகர (Metro) மக்களுக்காக என வகுக்கப்பட்டுள்ளமையேயாகும். இன்றைய நிலையில், அவை டி.டி.1 எனவும் டி.டி.2 எனவும் அழைக்கப்படுகின்றன. தகவலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் அடங்கிய அலைவரிசை ஒன்று தற்போது டி.டி.3 என்ற பெயரால் சென்னை உட்பட நான்கு முக்கிய மாநகரங்களில் ஒளிபரப்பாகிறது. அதில் பண்பாடு, செய்தி விமர்சனம் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. அவை அனைத்திந்திய ஒளிபரப்பானதால் ஆங்கிலம் ஹிந்தி மொழிகளிலேயே பெருமளவு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

வானொலிக்கென்று உள்ள நடத்தைக் கோட்பாடுகள் அனைத்தும் தொலைக்காட்சிக்கும் பொருந்தும் 1) நட்பு நாடுகளைக் குறை கூறல், 2) சமயங்களையும், சமுகங்களையும் தாக்குதல், 3) ஆபாசம் அல்லது அருவெறுப்பு, 4) வன்முறையை ஊக்குவித்தல் அல்லது சட்டம் ஒழுங்கைக் கெடுத்தல், 5) குடியரசுத் தலைவர், நீதித்துறையினரின் நேர்மையை விமர்சித்தல், 6) நாட்டொருமைப் பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல், 7) எந்தத் தனிநபரையும் தனிப்பட்ட முறையில் குறைகூறுதல் ஆகிய இவை அனைத்தையும் நிகழ்ச்சிகளில் தவிர்க்க வேண்டும்.

வானொலியும், தொலைக்காட்சியும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள துறைகள். ஆதலால் சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டிய பொறுப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 1) சமுதாய மாற்றத்தை ஊக்குவித்தல், 2) தேசிய ஒருமைப்பாட்டை வளர்த்தல், 3) மக்கள் மனத்தில் அறிவியல் மனப்பான்மையைத் தூண்டுதல், 4) குடும்ப நலம், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக்கெனக் குடும்ப நலத்திட்டக் கருத்துக்களைப் பரப்புதல், 5) வேளாண்மை உற்பத்திப் பெருக்கத்திற்கு முக்கியத் தகவலையும், தொழில் நுட்பத்தையும் வழங்குதல் 6) சுற்றுச்சூழல் உயிரினச் சமநிலை ஆகியவற்றைப் பாதுகாத்து வளர்த்தல், 7) மகளிர், குழந்தைகள் மற்றும் வசதிகுறைந்தோர் முதலானோரின் சமுதாய நலத்திட்டங்களை எடுத்துக்காட்டுதல், 8) விளையாட்டுத் துறையில் ஆர்வத்தை ஏற்படுத்துதல், 9) கலை, பண்பாட்டுப் பாரம்பரியத்தை ஆராய்ந்து மதிப்பீட்டுப் போற்றுதல் ஆகியன சிலவாகும்.

சென்னைத் தொலைக்காட்சியில் என்பதுகளின் பிற்பகுதியிலிருந்தே, தனியார் தயாரித்த விளம்பரதாரர் தொடர் நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அனைந்திந்திய அளவில் இந்த விளம்பரதாரர் தொடர் நிகழ்ச்சிகள் இடம்பெற்ற 90-களின் தொடக்கத்தில், ஒரு புதிய நிலை உருவாயிற்று. நாடு முழுக்க இடம்பெற்ற இந்தித் தொடர் நிகழ்ச்சிகள் தமிழக மக்களால் பார்க்கப்படாமல் போகவே (மேற்குவங்கத்திலும் அதுபோன்ற நிலை) தனியார் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் தங்களது இந்தி மொழித் தயாரிப்புக்கு மொழிமாற்ற வசதியைச் (டப்பிங்) செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே தற்போது இந்தித் தொடர்கள் தமிழ்நாட்டில் தமிழிலும், மேற்குவங்கத்தில் வங்காளத்திலும் இடம் பெற்று வருகின்றன. இந்த மொழிமாற்றத் தயாரிப்பு மும்பையில் நடைபெறுவதால் அங்குள்ள தமிழர்களின் அந்நாளைய தமிழறிவைப் பயன்படுத்துவதில் தமிழகத் தமிழ்மக்களுக்கு மனக்குறை இருந்துவருகிறது. அத்துடன் உதட்டசைவுக்கு (Lip sync) ஏற்ற செயற்கைத் தமிழைப் பயன்படுத்துவதாலும் இத்தொடர்களில் தமிழ்க்கொலை நடப்பதாகத் தமிழர்களுக்குப் படுகிறது.

சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் உள்ள பெரியதோர் நிகழ்ச்சிக்கான அரங்கு, இந்தியாவிலேயே (அந்தக் காலகட்டத்தில்) பெரியதாகக் கட்டப்பட்டது என்ற பெருமை பெற்றது. அதுவன்றி ஏனைய ஈர் அரங்குகளும் செயல்பட்டு வருகின்றன. ஈர் ஆண்டுகளுக்கு முன் (1994) வண்ணத் தொலைக்காட்சித் தயாரிப்புக்கெனத் தனியே ஒர் அரங்கைக் கட்டியுள்ளார்கள். சென்னைத் தொலைக்காட்சி நிலையம் ஒரு வாரத்திற்கு மொத்தம் 109 மணி நேரம் ஒளிபரப்பை நடத்தி வருகிறது. இந்த அளவுக்குப்பிற எந்த டி.வி. நிலையமும் இந்தியாவில் அரசுத்துறையில் நடத்தவில்லை என்ற பெயர் சென்னைக்கு உண்டு. தேசிய நிகழ்ச்சி இக்கணக்கில் கொள்ளப்படவில்லை. (Network/ National Programme Channel).

தொலைக்காட்சிப் பெட்டிகளின் எண்ணிக்கை நாடு முழுமைக்கும் உரிமம் வழங்கியதன் அடிப்படையில் கடைசியாகக் கணக்கிட்டபோது சுமார் 36 லட்சம் எனவும், கடந்த ஆண்டு (1995) உத்தேசமாக ஐந்தேகால் கோடி எனவும் கணக்கிட்டுள்ளார்கள். உரிம முறை ரத்தானதால் குறிப்பிட்ட நாட்டிற்கோ, தமிழகத்திற்கோ எண்ணிக்கையைச் சரியாகச் சொல்ல முடியவில்லை.

இந்தியா முழுமைக்கும் தொலைக்காட்சிக்கென 1975ஆம் ஆண்டு இரண்டு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அத்தொகை கடந்த 95-96இல், 108 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நாடு முழுக்கவும், இத்துறையில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை 1996இல் 18,917 பேர் உள்ளனர். தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிக்கெனச் செலவுத் தொகை ரூபாய் சுமார் 12 கோடியே 40 லட்சம் எனவும் தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் சுமார் 1000 பேர் வேலைபெற்றுள்ளனர் எனவும் தகவல் தனியே திரட்டப்பட்டு உள்ளது.

தமிழர்களுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தனியார் துறையில் தோன்றத் தொடங்கியது 90களின் தொடக்க காலச்சிறப்புக்களில் ஒன்றாகும். சன் டி.வி., விஜய் டி.வி., ராஜ் டி.வி., ஜெ.ஜெ. டி.வி., என்ற தனியார் நிறுவனங்கள் செயற்கைக்கோள் வழி ஒளிபரப்பைத் தொடங்கின.

அவற்றுள் சன் டி.வி, இந்நாள் தமிழக முதலமைச்சரான மு. கருணாநிதியின் உறவினர் கலாநிதிமாறனுக்குச் சொந்தமானது.. ‘தமிழ்மாலை’ என்ற பெயர் கொண்ட அந்த ஒளிபரப்பு தொடக்கத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த “கோரியான்” செயற்கைக்கோள் மூலமாக உள்நாட்டு, வெளிநாட்டுத் தமிழர்களுக்காக ஒளிபரப்பானது. பின்னர்ப் பிலிப்பைன்ஸ் மூலமும், தொடர்ந்து சிங்கப்பூர் மூலமும் புதிய செயற்கைக்கோள் ஒப்பந்தம் செய்து கொண்டு நிகழ்ச்சிகளைக் கொடுத்து வரலாயினர். இவர்கள் கடந்த ஆண்டு (1995) அறிமுகப்படுத்திய செய்திகளின் நிகழ்ச்சி தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. அண்மையில் ஸ்டார் டி.வி.யின் இந்தியப் பிரதிநிதி சன் டி.வி. நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டு இருதரப்பு நிகழ்ச்சிப் பரிமாற்றத்திற்கு வழிவகை கண்டுள்ளனர். சன் டி.வி.யின் அடுத்த முயற்சி ‘உதயா டி.வி.’ அப்பெயரால் கன்னட மொழியிலும் நிகழ்ச்சியினை ஒளிபரப்புகிறார்கள். அதுவன்றிச் சன் மியூசிக், சன் மூவி என்ற பெயரால் திரைப்படம் மற்றும் அவற்றில் இடம்பெறும் பாடல்களைக் கொண்டு தனியாக டி.வி. நடத்தி வருகிறார்கள். சன் டி.வி. நிறுவனம் அரசுத் துறை டி.வி. நிறுவனமான சென்னை நிலையத்திற்கு ஒரு சவாலாகவே வளர்ந்து உள்ளது எனலாம். காரணம் நேயர்களின் கருத்தறிந்து நிகழ்ச்சியைச் சுவையாகவும், மாறுபட்ட வடிவங்களில் வழங்கியும் வருகின்றன.

நம் டி.வி: இது தமிழ்த் திரைப்பட இசை அமைப்பாளர்களில் ஒருவரான கங்கை அமரனும், ஜெர்மனி வாழ் இலங்கைத் தமிழர் ஒருவரும் சேர்ந்து தொடங்கப் படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்தத் தொலைக்காட்சி உண்மையில் தலைக் காட்டமலேயே போயிற்று. அதன் ஆரம்பக்கட்ட வேலைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டுச் செல்வந்தர்களில் ஒருவரான இராமசாமி உடையார் ‘கோல்டன் ஈகில் டி.வி’ என்ற பெயரில் அத்தொலைக்காட்சியை நடத்தி வந்தார். பின்னர் அது கைமாறி கர்நாடகச் செல்வந்தர்களில் ஒருவரான விஜய்மல்லய்யா என்பவரிடம் ‘விஜய் டி.வி.’ என்ற பெயரால் தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த இரு டி.வி நிறுவத்தினருமே விளம்பரதாரர்கள் வழங்கும் நிகழ்ச்சியையும் திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு இயக்கி வருகின்றனர்.

ராஜ் டி.வி.: அக்டோபர் 14, 1994இல் தோன்றிய ராஜ் டி.வியை ராஜ் வீடியோவிஷன் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராஜேந்திரன் சகோதரர்கள் நடத்தி வருகிறார்கள். இவர்கள் சுமார் 10-20 ஆண்டுகளாகவே தமிழ் திரைப்படங்களின் உரிமையைக் கேட்டு வாங்கிப் பாதுகாத்து வந்ததால், அவற்றையே பெருமளவிற்கு ஒளிபரப்பலாம் என நம்பி தங்கள் முயற்சியில் ஈடுபட்டார்கள். தங்கள் தொடக்க விழா நிகழ்ச்சியில், தமிழில் செய்திகள் வழங்கப் போவதாக வெளியிட்ட அறிவிப்பு இதுகாறும் செயல்வடிவம் பெறவில்லை.

ஜெ.ஜெ.டி.வி: முந்தைய ஆட்சியாளர்கள் (அ.இ.அ.தி.மு.க) தங்கள் கட்சிக்கருத்துக் களையும், கொள்கைகளையும் தமிழர்களுக்கு எடுத்துச் சொல்ல ஒரு தொலைக்காட்சி தேவை என்பதை உணர்ந்து தொடங்கியதுதான் ஜெ.ஜெ. டி.வி. அந்நாளைய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு வேண்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக பாஸ்கரன் என்பார் நிர்வாக இயக்குனராக இருந்து நடத்திய அந்தத் தொலைக்காட்சி இப்போது செயல்படவில்லை. வெளிப்புற நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கு அவர்களே பணம் கொடுத்து நிகழ்ச்சிகளைத் தயாரிக்கச் செய்து அவற்றைப் பெற்று ஒளிபரப்பி வந்தார்கள். செயற்கைகோளை ஒப்பந்தம் செய்ததற்கான பணப்பட்டுவாடா குறித்தும் மற்றும் பல காரணங்களாலும் வழக்குகள் சிலவற்றில் சிக்கி இந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பு நின்று போயிற்று.

இந்தத் தனியார் தொலைக்காட்சிகள் அனைத்தும் கோடிக்கணக்கான ரூபாய்களை இதுவரை வெளிநாட்டுச் செயற்கைக் கோளுக்கு, இணைப்புக்கான வாடகையாகக் (Uplinking Facility) கொடுத்துள்ளன. இத்தொகையில் கணிசமான பகுதியை விளம்பரதாரர்களிடமிருந்து பெற்றிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஆயிரக்கணக்கான கலைஞர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் இந்தத் தொலைக் காட்சிகளால் வாய்ப்பும் பலனும் பெற்றுள்ளார்கள். ஆனால் தமிழ் மக்களுக்கு இவர்கள் சாதித்திருப்பது என்ன என்பதை எதிர்காலத்தில் அலசிப் பார்த்தே முடிவு செய்ய முடியும்.

கேபிள் தொலைக்காட்சி

கம்பி வழித் தொலைக்காட்சி (கேபிள் டி.வி.) இந்தியாவில் முதலில் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் தொடங்கப்பட்டது. திரைப்படங்களைப் பதிவு செய்த வீடியோ நாடாக்களை நடுத்தர, நடுக்கீழ்த்தர மக்கள் குறைந்த செலவில் பார்ப்பதற்கு அது வசதி செய்தது. அத்துடன், செயற்கைக்கோல் டி.வி. நிகழ்ச்சிகளையும் கேபிள் டி.விக்காரார்கள் காட்டத் தொடங்கினார்கள். இந்தச் சூழ்நிலையில் 80களின் பிற்பகுதியில் தொடங்கியது. இதன் தாக்கம் தமிழ் நாட்டிலும் தற்போது பெருமளவு உள்ளது. தென்தமிழ் நாட்டின் சில நகரங்களில் 40 முதல் 50 சதவீதம் வரையான வீடுகளில் கேபிள் டி.வி. இணைப்புள்ளது. கிராமப் பகுதிகளில் 10 சதவீதத்திற்கும் குறைவாகக் கேபிள் டி.வி உள்ளது.

வருங்காலத் தொலைக்காட்சி

வருங்காலத்தில் தொலைக்காட்சித் துறையில் தமிழர்கள் பெருங்கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. அரசு டி.வி.யில் தமிழ் நிகழ்ச்சிகளைத் திட்டமிடும் பொறுப்பு தற்போது டில்லியிலும், சென்னையிலும் உள்ளது. அந்நிலை மாறி முழுக்க முழுக்கச் சென்னையில் மட்டுமே அவ்வுரிமை இருக்கும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வெளிநாட்டு மக்களுக்காக நடத்தப்படும் “டி.டி. இந்தியா” சேனலில் தமிழ் நிகழ்ச்சிகள் இடம்பெற வழி கிடைத்தால்தான் வெளிநாட்டுத் தமிழர்கள் தமிழ் நிகழ்ச்சிகளைச் செயற்கைக்கோள் வழியாகப் பார்க்க முடியும். அதற்கான முயற்சியும் உடனே நடைபெறவேண்டும்.

நிகழ்ச்சித் தயாரிப்பு வசதி தமிழ்நாட்டுக்கு மேலும் பல இடங்களில் கிடைக்க வேண்டும். மதுரை, சேலம் போன்ற இடங்களில் அவ்வகையான நிலையங்கள் அமைக்கும் அறிவிப்பை அரசு அறிவித்ததோடு நின்றுவிட்டது. திருச்சி, கோவை போன்ற நகரங்களையும் சேர்த்து அவ்வாறான நிலையங்கள் உடனே ஏற்பட்டாக வேண்டும். அப்போதுதான் சென்னை நகர மக்களுக்கு டி.வி.யில் பங்குகொள்ளும் வாய்ப்பு கிடைப்பது போலவே, தமிழ்நாட்டில் பிறபகுதிகளைச் சேர்ந்தவர்களுக்குப் பெருமளவு வாய்ப்புக் கிட்டும்.

தமிழகமெங்கும் 30க்கு மேற்பட்ட அ¨சல் நிலையங்கள் இருப்பதால் அந்த இடங்களில் கூட (கேமிரா, எடிட்டிங் என்னும்) ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவற்றுக்கான வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம், தமிழ்நாடு முழுக்க ஆங்காங்கே நடைபெறும் நிகழ்ச்சிகளை மாநிலம் முழுமையும் பகிர்ந்து கொள்ளவும், பார்த்துக் களிக்கவும் முடியும்.

வானொலியில் போலவே, அண்டை மாநிலங்களில் உள்ள தொலைக்காட்சி நிலையங்களில் தமிழ் நிகழ்ச்சிகளை அமைப்பதன் மூலம் அந்தந்தப் பகுதி வாழ் தமிழர்கள், அவற்றில் வாய்ப்புப் பெறவும், தங்களது கலைப் பண்பாட்டு நிகழ்ச்சிகளைப் பரிமாறிக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.

தனியார் தொலைக்காட்சி நிலையங்களில் பங்குபெறுவோரின் தமிழ் உச்சரிப்பை நிலைப்படுத்தவும், வெளிப்படுத்தவும் வழிவகை உடனடியாகக் காணப்படாவிட்டால் தமிழ் மொழி நாளடைவில் சீர்குலையும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. பிறநாட்டுச் செயற்கைக்கோள் டி.வி. நிகழ்ச்சிகள் மூலமாக, ஏவிவிடப்பட்டுள்ள கலாச்சாரப் படையெடுப்பில் தமிழ்நாட்டு இளைஞர்கள் நிலை தடுமாறா வண்ணம் இருப்பதற்கு ஒரு “விழிப்புணர்வு இயக்கமே” நடத்த வேண்டும்.

உலகப் புகழ்பெற்ற பி.பி.சி. டி.வி. நிறுவனம் இந்தியாவுக்கென ஒர் ஒளிபரப்பைத் தொடங்குவதாக அண்மையில் அறிவித்துள்ள இன்றைய நிலையில் தமிழிலும் அதில் ஒளிபரப்புகள் இருக்கும் என்ற செய்தியைத் தமிழர்கள் முழுமனத்துடன் வரவேற்பதோடு நின்றுவிடாமல், அவ்வாறான ஒளிபரப்புகளுக்கும் ஆக்கமும் ஊக்கமும் கொடுக்க வேண்டும். அதன்மூலம் உலகத்தின் அறிவுவளம் என்ற தென்றல் காற்று தமிழர்கள் இல்லங்களில் வீச வாய்ப்பு உள்ளது.

வானொலியும், தொலைக்காட்சியும், பொதுவாக மக்களுக்கு, சிறப்பாகத் தமிழர்களுக்கும் அறிவூட்டக் கிடைத்த ஒரு வசதியே தவிர, அவர்களை ஆள வந்தவை அல்ல. எனவே அவற்றுக்கு அடிமையாகி (addiction)  விடும் நிலைக்குத் தமிழர்கள் எப்போதும் வந்துவிடக்கூடாது என்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், தமிழக மக்களைத் திரைப்படங்கள் சீரழித்து விட்டதாக ஏற்கெனவே ஒரு பேச்சு பரவலாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தொலைக்காட்சி அமைப்புகளும் திரைப்படங்களைப் பெருமளவுக்குப் பயன்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டும் பெருமளவில் ஏற்கெனவே இருந்து வருகிறது.

எனவே, தொலைக்காட்சியும், வானொலியும் தமிழர்களுக்கு வளத்தையும் நலத்தையும் தரவல்லதாகத் தான் இருக்கவேண்டும். அவர்களின் வாழ்வைப் பறித்துவிடுவதாக அமைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

BIBLIOGRAPHY

  1. Indian Broadcasting. H.R. Luthra
  2. All India Radio 1995. A.R. Unit, Directorate General, All India Radio, New Delhi.
  3. All India Radio. South zone Profile – AIR, South Zone Unit, AIR, Madras 1995.
  4. Tamilnadu State Profile. A.R. Unit, AIR, Madras – 1996.
  5. Doordarshan 1994. A.R. Unit, Directorate, General – Doordarshan
  6. Doordarshan 1996. A.R.Unit, Directorate, General Doordarshan.
  7. Tholaikkatchi Kalai – V. Nallathambi.

வெ. நல்லத்தம்பி :

சென்னை, திரைப்படத் தொலைக்காட்சிக் கலைக் கழகத்தின் இயக்குநர். முன்பு, சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். சென்னை வானொலி நிலையத்திலும், வாஷிங்டனில் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா தமிழ்ப் பிரிவிலும் பணி செய்துள்ளார். வானொலி வர்ணனையாளர், நாடக ஆசிரியர், கட்டுரையாளர், கதையாசிரியர், இதுவரை வெளியான பத்து நூல்களின் ஆசிரியர் இவர். “தொலைக்காட்சிக் கலை” என்ற இவரது நூலும் “ஆனந்தனின் ஆசை” என்ற சிறுவர் இலக்கியமும் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றவை. “ஒரு சுகமான அனுபவம்” மத்திய அரசின் பரிசு பெற்றது. இவரது நூற்களும் கட்டுரைகளும், கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் பாடநூற்களாக வைக்கப்பட்டுள்ளன.

1 COMMENTS

  1. Very nice article. I am reading this today on 16-Nov-2019. Nostalgic about those days. I still remember Chennai’s FM station which I heard from Karaikal, Porayar during 1995 night time in stereo mode.

    I witnessed Karaikal FM launch. Good old days those were.

Comments are closed.

You Might Also Like