Star Mountain

My travels and other interests

தமிழ்நாடு நேற்று இன்று நாளைபொருளாதாரம்

தமிழகப் பொருளாதாரம் (1997)

தமிழகப் பொருளாதாரம்
மும்தாஜ் பாலகிருஷ்ணன்
முன்னாள் முதல்வர்,
செல்லம்மாள் மகளிர் கல்லூரி,
சென்னை – 600 032.

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியினை நேற்று, இன்று, நாளை என்ற கோணங்களில் ஆய்வு செய்ய 1951 முதல் 1980 வரை நேற்றையை நிலை என்றும், 1981 முதல் 1996 வரை இன்றைய நிலை என்றும், 1997 முதல் 21ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நாளைய நிலை என்றும் வரையறை செய்வது பொருந்தும்.

இந்தியா விடுதலை அடைந்த பின் முதல் 30 ஆண்டுகளில், ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் இந்தியப் பொருளாதார வளர்ச்சி நல்ல அடித்தளத்தோடு அமைக்கப்பட்டதால் தமிழகப் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்து வந்தது. முதலாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் (1951-56) வேளாண்மைக்கு முதலிடமும் இரண்டாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் தொழில் துறைக்கு முதலிடமும் கொடுக்கப்பட்டன. 3வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் (1961-66) நாட்டின் பொருளாதார வளர்ச்சி வறட்சியாலும் வெளிநாட்டுப் படை எடுப்பாலும் பெரிதும் பாதிக்கப்பட்டது. எனினும் வேளாண்மைத் துறையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, பசுமைப் புரட்சி ஏற்பட்டது. இந்நிலை 4வது திட்டக் காலத்திலும் தொடர்ந்தது. 5வது திட்டக் காலத்தில் (1974-79) தமிழகத்தில் கிராம மக்களுக்காகப் பல மேல்நோக்குத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

பொதுவாக மக்கள் தொகைப் பெருக்கமும் விலைவாசி உயர்வும், வேலையில்லாத் திண்டாட்டமும் தமிழக அரசுக்குப் பெரும் சவாலாக இருந்தாலும் தமிழகப் பொருளாதாரம் தொய்வின்றி வளர்ந்த்து குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்றைய நிலை (1981-1996)

6வது திட்டக் காலத்தில் (1980-85) தமிழகத்தின் சமுதாயப் பணிகட்கு முதலிடம் அளிக்கப்பட்டது. தொழில் துறையை வளப்படுத்தும் வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியினை உயர்த்தவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

7வது திட்டக் காலத்தில் (1985-90) மின் சக்தி உற்பத்திக்கு முதலிடம் கொடுக்கப்பட்டது.

8வது திட்டத்தில் வேலை வாய்ப்பைப் பெருக்குதல், மக்கள் தொகைக் கட்டுப்பாடு, சுகாதார மேம்பாடு, சமூகத்தில் சுற்றுச் சூழல், பாதுகாப்பு, மகளிருக்குச் சமூகத்தில் உயர் பங்களிப்பு ஆகியவை முக்கிய நோக்கங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இன்றைய தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள்

இன்றைய நிலையில் தமிழக அரசின் முழுக் கவனமும் வேலை வாய்ப்பினை உருவாக்குவதிலும் வறுமை ஒழிக்கும் நடவடிக்கைகளிலும் திரும்பி உள்ளது. வேலை வாய்ப்பினைப் பெருக்க தேசிய, மாநில அளவிலான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. நகர்ப்புற மக்கள் மேம்பாட்டுக்கெனச் சுயவேலைவாய்ப்புத் திட்டமும், நேரு வேலை வாய்ப்புத் திட்டமும், மகளிர் மேம்பாட்டிற்குத் தனிப்பட்ட திட்டங்களும் உள்ளன.

கி.பி. 2000-க்குள் எல்லோருக்கும் சுகாதார வசதி செய்தல் என்ற மேல் நோக்குக் கொள்கையை அரசு மேற்கொண்டு, கொடிய நோய்களைக் குறைக்கவும், புற்றுநோய், எய்ட்ஸ், பெரியம்மை பற்றி மக்களிடையே நல்ல விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

மனிதன் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற்றுச் சிறப்புடன் வாழவும் உயர்வடையவும் பொருட் செல்வம் இன்றியமையாதது. ஆகவே தான் பொருளாதாரம் ஒரு முக்கிய அறிவியல் கூறாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு மனிதனின் வாழ்விற்கும், வளத்திற்கும் பொருள் இன்றியமையாதது போல் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் பொருள் மிக மிக அவசியமான ஒன்றாகும்.

இந்தியத் துணைக் கண்டத்தில் ஒரு முக்கிய அங்கமாக விளங்கும் தமிழ்நாடு இயற்கை அன்னை எழிலுடன் கொலு வீற்றிருக்கும் பீடம். தமிழ்நாடு திருத்தணியை வட எல்லையாகவும், கன்னியாகுமரியைத் தென் எல்லையாகவும் கொண்டது. கிழக்குப் பகுதி முழுவதும் வங்காளவிரிகுடாவினால் அலங்கரிக்கப்படுகிறது. மேற்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலை அரணாக உள்ளது. இந்தியாவைச் சுற்றியுள்ள மூன்று கடல்களும் தமிழன்னையை முத்தமிடும் ஒரே மாநிலம் தமிழகம் தான். தமிழகத்தின் நிலப்பரப்பு 1,30,058 சதுர கிலோமீட்டர் ஆகும். பரந்து விரிந்து கிடக்கும் கடற்கரையின் நீளம் 912 கிலோ மீட்டர் ஆகும். இது தனித்து இயங்கும் கிரேக்க நாட்டையும், செக்கோஸ்ல வோக்கியவையும் ஒத்தநிலப் பரப்பு உடையதாகும். இது நிலவளமும், நீர்வளமும், கனிவளமும், மலைவளமும் ஏராளமாகப் பெற்று பல நூற்றாண்டுகட்கு முன்பே சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்டு உலக அளவில் வணிகத்தில் சிறந்த நாடாக விளங்கியது.

20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாடு அந்நியர் ஆட்சியில், சிதையுண்ட சிற்பமாக, எழில் சிதைக்கப்பட்டு, தொழில் வளம் புறக்கணிக்கப்பட்டு, வெள்ளையர்களின் கொள்ளையிடமாக இருந்தது. உலகப் பெரும் போர்கள் இரண்டும் தமிழகத்தைப் பசிப் பிணிக்கு இரையாக்கின. தமிழ் மக்கள் தங்கள் வீரம் செறிந்த வரலாற்றின் தொடர்ச்சியாக அண்ணல் காந்தி அடிகள், பண்டித ஜவஹர்லால் நேரு போன்றவர்களுடன் இணைந்து இந்தியச் சுதந்திரப் போரில் பங்கு பெற்றனர். எத்தனையோ அரும் செல்வங்களை இழந்து, கத்தியின்றி இரத்தமின்றி அஹிம்சா முறையில் வெள்ளையர் பிடியிலிருந்து 1947ஆம் ஆண்டு விடியலைக் கண்டது பாரதம்! வீறுகொண்டு எழுந்தது தமிழகம்!

இந்திய விடுதலைக்குப் பின்னர் ஆங்கிலேயே நாட்டு அரசியல் சட்டத்திலும், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியல் சட்டத்திலும் உள்ள முக்கிய அம்சங்களை எடுத்து, நல்லதோர் அரசியல் சட்ட அமைப்பை இந்தியா உருவாக்கியது. மாநிலங்கள் வளரவும், நாடு அனைத்துத் துறைகளிலும் உயரவும் 5 ஆண்டுத் திட்டங்கள் நம் நாட்டில் தீட்டப்பட்டன. பாதுகாப்பு, வெளி நாட்டுத் தொடர்பு, நாணயச் செலாவணி போன்ற முக்கியத் துறைகளை நாட்டின் மைய அரசும், மக்கள் சமூக நல நல்வாழ்வு போன்ற பிற பணிகளை மாநில அரசுகளும், மேற்கொண்டு செயல்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச் சியினை, “நேற்று – இன்று – நாளை” என்ற கோணங்களில் ஆய்வு செய்ய முதலாவது ஐந்தாண்டு திட்டம் தொடங்கிய 1951ஆம் ஆண்டு முதல் தொடங்குவதே பொருத்த முடையதாக இருக்கும். எனவே 1951 முதல் 1980 வரை நேற்றைய நிலை என்றும், 1981 முதல் 1996 வரை இன்றைய நிலை என்றும், 1997 முதல் 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நாளைய நிலை என்றும் வரையறை செய்து கொண்டு, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை ஆய்வு செய்தல் பொறுத்த முடையதாக இருக்கும்.

நிலவளம், நீர்வளம், உழைக்கும் ஆர்வமுள்ள மக்கள், அறிவுக் கூர்மையுள்ள தொழில் முயல்வோர்கள் என்று நாட்டில் உற்பத்தியைப் பெருக்க எல்லா வகைக் காரணிகளும் வாய்ப்பும் இருந்தன. முதல் 30 ஆண்டுகளில் பாரதப் பொருளாதார வளர்ச்சி நல்ல அடித்தளத்தோடு அமைக்கப்பட்டுத் தொடர்ந்து வளர்ந்து வந்தது. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் விவசாய வளர்ச்சிக்கு முதலிடம் அளிக்கப்பட்டது.

“தனியொருவனுக்கு உணவில்லை யெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்” என்று பாரதி எழுப்பிய குரல் நாடு முழுவதும் எதிரொலித்தது. பசித்தவனுக்குச் சோறு படைக்கும் வகையில் முதலாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் (1951-56) வேளாண்மைக்கு முதலிடம் அளிக்கப்பட்டுத் தமிழகத்தில் சுமார் ரூ.80.49 கோடி செலவிடப்பட்டது. அதன் விளைவாக மாநில வருவாய் ஓர் ஆண்டிற்கு 4.2 விழுக்காடு அதிகரித்தது. ஆனால் இந்தக் கால கட்டத்தில் தேசிய வருவாயின் வளர்ச்சி விகிதம் 3.7 விழுக்காடாகவே இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் (1956-61) தொழில் துறை வளர்ச்சிக்கு முதலிடமும், வேளாண்மைக்கு 2-வது இடமும் வழங்கப்பட்டது. தமிழகத்தில் இத்திட்டக் காலத்தில் ரூ.187 கோடி செலவிடப்பட்டது. வேளாண்மையில் புதுமைகள் பல புகுத்தப்பட்டன. ஐப்பானிய நெல் சாகுபடி முறை, இயந்திரங்கள் பயன்படுத்துதல், உயர்ரக விதைகள் பயன்படுத்தல், பாசனத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தல், பயிற்சுழற்சி முறை போன்றவை ஊக்குவிக்கப்பட்டன. இத்திட்டக் காலத்தில் தமிழ்நாட்டின் வருமானம் ரூ.1129.6 கோடியாக உயர்ந்தது. மாநில தலைவீத வருமானம் ரூ.257லிருந்து ரூ.355ஆக உயர்ந்தது.

3ஆவது ஐந்தாண்டுத் திட்ட (1961-66)த்தில் தேசியத் திட்ட ஒதுக்கீடு ரூ.10,400 கோடியாகும். தமிழகத்தில் இந்தத் திட்டக் காலத்தில் மொத்த செலவினம் ரூ.348/- கோடியாகும். ஆனால் இத்திட்டக் காலத்தில் வேளாண்மை வளர்ச்சி பெறவில்லை. மாநில வருமானம் ஓர் ஆண்டிற்கு 2.7 விழுக்காடு மட்டுமே அதிகரித்தது. இதற்குப் பல காரணங்கள் கூறலாம். முக்கியமாக வறட்சியும், வெளிநாட்டுப் படை எடுப்பும் குறிப் பிடத்தக்கது.

3-வது ஐந்தாண்டுத் திட்ட முடிவில் 4-வது ஐந்தாண்டுத் திட்டம் உடனடியாகச் செயல்படுத்தப்படாமல் “திட்ட விதிமுறை” வழங்கப்பட்டு 1966-67, 1967-68, 1968-69ஆம் ஆண்டுகளுக்கென 3 ஓராண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டு ரூ.266 கோடி செலவிடப்பட்டது. இந்த மூன்றாண்டுகளில் தமிழகத்தில் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள், உயர் ரக விதைகள், இரசாயன உரம், போன்றன பெருமளவில் பயன்படுத்தப் பட்டதன் விளைவாக உணவுப் பொருட்கள் உற்பத்தி 95 மில்லியன் டன்னாக உயர்ந்தது.

உணவுப் பொருட்கள் உற்பத்தி ஆண்டு தோறும் 5 விழுக்காடு உயர்த்தப்பட வேண்டுமென்ற குறிக்கோளுடன் 4-வது ஐந்தாண்டுத் திட்டம் (1969-74) தொடங்கப்பட்டது. நாட்டின் மொத்த திட்ட ஒதுக்கீடான ரூ.24.398 கோடியில், தமிழகத்திற்கு ரூ.559 கோடி செலவிடப் பட்டாலும், எதிர்பார்த்த அளவிற்குத் தேசிய வருவாயும், தலைவீத வருவாயும் உயரவில்லை.

5-வது ஐந்தாண்டுத் திட்டம் (1974-79) நம் நாட்டை தன் நிறைவு பெற்ற நாடாக மாற்றும் நோக்கத்துடன் வரையப்பட்டது. மக்களிடம் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்கவும், தேசிய மொத்த வருமானம் நியாயமான முறையில் மக்களுக்குப் பங்கீடு செய்யப்பட வேண்டுமென்றும் எதிர்பார்க்கப் பட்டது. திட்டக் குழுவும் மைய அரசும் கலப்புப் பொருளாதாரத்தை வலியுறுத்தி வந்தமையால் இந்த 5-வது திட்டம் பொதுத் துறை மூலம் ரூ.37,250/- கோடியும், தனியார் துறை மூலம் ரூ.16,161 கோடியும், ஆக மொத்தமாக ரூ.53,411 கோடி செலவிடத் திட்டமிடப் பட்டது. இத்திட்டம் 4 ஆண்டுகள் செயல் படுத்தப்பட்டவுடன் மைய அரசில் ஏற்பட்ட மாற்றத்தால் முடிவு பெறாமலேயே நிறுத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி வலுவிழந்து தேர்தலில் தோல்வியைத் தழுவியவுடன் ஜனதா கட்சியின் ஆட்சியமைந்தது. முந்தைய அரசின் திட்டங்களைத் தொடர மனமின்றி, நடைமுறை யிலிருந்த ஐந்தாண்டுத் திட்டத்தை, “காங்கிரஸ் கட்சியின் திட்டம்” என்று ஒதுக்கி வைத்து. இத்திட்டம் இடையில் கைவிடப்பட்டுக் “குறைமாதப் பிரசவமாக முடிந்தாலும், குழந்தை பிழைத்துக் கொண்டது” தமிழகம் அதிகமாகப் பாதிக்கப்படவில்லை.

எனவே தமிழகப் பொருளாதாரத்தின் நேற்றைய நிலை 1950 முதல் 1980 வரை மிகவும் மோசமாக இல்லை என்பதை நாம் ஒப்புக் கொண்டு தான் ஆகவேண்டும். ஜவஹர்லால் நேரு அவர்களால் உயிரூட்டப்பட்ட திட்டங்கள் நல்ல முறையில் நடந்தேறி வந்தன. அவரைத் தொடர்ந்து இந்திரா காந்தி அம்மையார் காலத்திலும் தமிழகம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வந்தது.

நாட்டின் வளர்ச்சிப் பணிகளின் பயன் பாமர மக்களுக்குப் போய்ச் சேருமாறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. கிராம மக்களுக்காகப் பாசன வசதி, மின் வசதி, மருத்துவ வசதி, கால்நடைப் பராமரிப்பு, சிறுதொழில், குடிசைத் தொழில், சிறந்த கைவினைப் பொருள்கள் உற்பத்தி போன்றவை ஊக்குவிக்கப் பட்டன. இந்தக் காலத் திட்டத்தில் தமிழக அரசு பல மேல் நோக்குத் திட்டங்களைத் தீட்டி அவற்றைப் பொறுப்புடன் செயல்படுத்தியது. அவற்றில் சிலவற்றை இங்கு ஆய்வு செய்தல் சிறப்புடையதாகும்.

 1. நிலச் சீர்திருத்தம்

நாடு விடுதலை பெற்ற பின்னர் ஜமீன்தார்முறை ஒழிக்கப்பட்டு, ரயத்துவாரி முறை அமுல் படுத்தப்பட்டது. ரயத்துவாரி முறையில் விவசாயி நேரடியாக அரசுடன் தொடர்பு கொள்ள முடிந்தது. தொடர்ந்து நிலவுடைமைக்கு உச்ச வரம்பு கொண்டு வந்தது நிலச்சீர்திருத்தத்தின் முக்கிய அம்சமாகக் கருதப்பட்டது.

 1. கூட்டுறவுமுறை செயல்படுத்தல்

“ஒவ்வொருவருக்கும் எல்லோரும், எல்லோருக்கும் ஒவ்வொருவர்” என்ற அடிப்படையில் “கூட்டுறவு நாட்டுயர்வு” என்பதனை நன்கு புரிந்து கொண்டு கூட்டுறவுப் பண்ணைமுறை செயல் படுத்தப்பட்டது. இதன்படி சிறு விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக மாறி, தங்கள் நிலங்களைச் சங்கத்துடன் இணைத்துவிட்டு, பலரும் சேர்ந்து பெரிய நிலப்பரப்பை நவீன விஞ்ஞான முறையில் இயந்திரங்களைப் பயன்படுத்தி உழுது பயிர் செய்து, ஈட்டிய லாபத்தை அவரவர் உழைப்பிற்கும், கொடுத்த நிலத்தின் அளவுக்கும் ஏற்ப பகிர்ந்து கொண்டனர்.

 1. நீர்ப்பாசனம் -மின்சக்தி

தமிழகத்தில் பருவமழை ஒருசில நேரங்களில் பெய்தும் கெடுக்கும், காய்ந்தும் கெடுக்கும். மழையே இல்லாதநிலை அல்லது அதிக மழை வெள்ளத்தால் பயிர் பாழடைதல் சர்வ சாதாரணமாக நடைபெறும் நிகழ்ச்சி. எனவே தான் முறையான நீர்ப்பாசனத்திற்கு அரசு பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. முதல் இரண்டுத் திட்டங்களில் பெரிய, நடுத்தரப் பாசனத் திட்டங்களுக்கும், அடுத்த இரண்டுத் திட்டங்களில் சிறிய பாசனத் திட்டங்களுக்கும் ஊக்கமளிக்கப் பட்டன. தமிழகத்தில் அணைக் கட்டுகள் பல கட்டப்பட்டன. தமிழகம் நீர்ப்பாசன இயல் சக்தியை 97 விழுக்காடு பயன்படுத்திப் பயன்பெற்றது.

இவ்வணைக் கட்டுகளில் நீரைத் தேக்கிப் பாசனத்திற்குப் பயன்படுத்துவதுடன் நீர் மின்சக்தி உற்பத்தியும் ஊக்குவிக்கப் பட்டன.

 1. வேலை வாய்ப்பு

மத்திய அரசும், மாநில அரசும், தொழில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருவதால் படித்தவர்களுக்கும், தொழில் பயிற்சி பெற்றோருக்கும் வேலைவாய்ப்பு ஓரளவு கிடைத்து வந்தன. படித்தவர்களிடையிலும் படிக்காது கைத்தொழிலை மட்டும் நம்பி இருந்தவர்களிடையேயும் 5 ஆண்டுத் திட்டக் காலத்தில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்தது. இதற்கு முக்கிய காரணம் மக்கள் தொகைப் பெருக்கமேயாகும். 1978-79ஆம் ஆண்டில் வேலையில் இருந்தவர்களில் 65 விழுக்காடு அரசுத் துறையில் பணியாற்றினர். மீதமுள்ளவர்கள் தனியார் துறையில் பணியாற்றினர். இவ்வாண்டு கூடுதலாக 95,000 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர். அதில் 51,000 பேர் அரசுத் துறையிலும், எஞ்சியவர்கள் தனியார் துறையிலும் பணியில் அமர்ந்தார்கள். இது மாநில வேலைவாய்ப்பு வளர்ச்சியினை 5.9 விழுக்காடு ஆக உயர்த்தியது. முந்திய ஆண்டிலிருந்து இது 3.42 விழுக்காடு விஞ்சி நின்றது குறிப்பிடத்தக்கது.

இந்தக் காலக் கட்டத்தில் வங்கித் தொழில் வளர்ந்தது, பணப்புழக்கம் மிகுந்தது. விலைவாசியும் உயர்ந்தது. வாருவாய்த் துறையில் வரவுகளும், செலவுகளும் பெருகியே வந்துள்ளன. 1970-71 இல் ரூ.313.89 கோடியாக இருந்த வரவு 1979-80இல் ரூ.849.83 கோடியாக உயர்ந்தது. இவ்வரவு, வருவாய்த் துறையில் வரிகளும், வரியில்லாத வருமானமும், மைய அரசின் மானியமும், உள்ளடக்கியதாகும்.

இவ்வாறு தமிழகப் பொருளாதாரம் இந்திய விடுதலைக்குப் பின் 5 ஆண்டுத் திட்டங்களின் உதவியாலும் இங்குக் கோலோச்சிய தன்னலமற்ற தலைவர்களின் கடுமையான உழைப்பாலும், மனிதாபிமான நடவடிக்கைகளாலும் வளர்ந்து வந்துள்ளன. குறிப்பாகக் காமராஜர் காலத்தில் பல பெரிய கனரகத் தொழில்கள் தொடங்கப்பட்டன. பேரறிஞர் அண்ணா டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி போன்றவர்களின் ஆட்சியில் “வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது” என்று முழங்கி தமிழக மக்களுக்கு மைய அரசிடமிருந்து பெருந் தொகையினை ஒதுக்கீடாகப் பெற்றுத் தந்தனர். ஆகவே, தமிழகப் பொருளாதாரத்தின் நேற்றைய வரலாறு இம்மாநிலத்தின் திட்டமிட்ட வளர்ச்சியையும், நிகழ்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் உயர்வடைய நல்லதோர் அடித்தளத்தினையும் அமைத்துக் கொடுத்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய நிலை (1981-1996)

இந்தியத் திட்டக்குழு 1980-85ஆம் ஆண்டுகளின் ஆறாவது ஐந்தாண்டுத் திட்டத்தினை வெளியிட்டது. தமிழகத்தில் இத்திட்டக் காலத்தில் ரூ.3,150 கோடி செலவிட்டது. சமுதாய வளர்ச்சிப் பணிகட்கு முதலிடம் அளிக்கப்பட்ட இத்திட்டத்தில், தொழில் துறையை வளப்படுத்தவும், வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியினை உயர்த்தவும், முக்கியத்துவம் அளிக்கப் பட்டன. மக்கள் தொகைப் பெருக்கம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்ததால் தமிழகம் தலைநிமிர முடியாமல் ஆங்காங்கே வறுமை மக்களை வாட்டியது. இக்காலகட்டத்தில் வறுமைக் கோட்டிற்கும் கீழ் 47.29ரூ பேர் வாழ்ந்தனர்.

தொடர்ந்து 7-வது திட்டக் காலத்தில் (1985-90) தமிழகத்தின் திட்டச் செலவு ரூ.5,750 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. இதில் 63% சமுதாய நலப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டது. மின்சக்தி உற்பத்திக்கு மட்டும் 35% ஒதுக்கப்பட்டது. இதன் நோக்கம் தொழில் துறையின் வளர்ச்சியைத் துரிதப் படுத்துவதும், வேளாண்மைத் துறைப் பொருட்களின் உற்பத்தியைப் பன்மடங்கு உயர்த்துவதும் ஆகும். எனவே தான், பல புதிய அனல் மின், நீர்மின், திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்தப்பட்டன. ஆனால் திட்டமிட்ட படி வளர்ச்சியில்லை. நாட்டின் தேசிய வருவாயும் மாநிலத்தில் தலைவித வருவாயும், குறைந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் மக்களை வாட்டியது.

இதனைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரச் சீர்குலைவைத் தடுக்க 8வது ஐந்தாண்டுத் திட்டம் (1992-97) துவங்கப்பட்டது. தமிழகத்திற்கு ரூ.10,200 கோடி ஒதுக்கப்பட்டது. இது ஏழாவது திட்ட ஒதுக்கீட்டோடு ஒப்பிடுகையில் இரு மடங்கு தொகை ஆகும். இத்திட்டத்தின் நோக்கங்கள் குறிப்பிடத் தக்கவையாகும். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் 1. வேலைவாய்ப்பைப் பெருக்குதல், 2. மக்கள் தொகையைக் கட்டுப் படுத்துதல், 3. அனை வருக்கும் ஆரம்பக் கல்வி வழங்குதல், 4. குடி நீர்ப் பிரச்சனையைத் தீர்த்தல், 5. கிராமப் புறங்களில் ஆரம்ப சுகாதார வசதி அளித்தல், 6. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுதல், 7. சுற்றுசூழலைப் பாதுகாத்தல், 8. மகளிருக்கு அனைத்துத் துறைகளிலும் உயர் பங்களித்தல், 9. திட்ட செயல்முறையை மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் நடை முறைப்படுத்துதல் போன்றவை ஆகும்.

திட்ட ஆரம்பக் கட்டத்திலேயே அன்றைய பாரதப் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அவர்கள் கொலையுண்டதால் தமிழக அரசியல் நிலவரம் தலைகீழாக மாறியது. தமிழக மக்களின் தலைவிதியும் மாறியது. புதிய அரசு திருமதி ஜெயலலிதா தலைமையில் பதவி ஏற்றது. பொது மக்களின் நலனைப் பலியிட்டுத் தனி மனிதர்கள் செல்வம் திரட்டினர். இதனைத் தட்டிக் கேட்க சட்டமன்றத்தில் வலுவான எதிர்கட்சியில்லை. விளம்பரங்கள் பெரிய அளவில் செய்யப்பட்டாலும், செயல்பாடு பூஜ்ஜிய மாகவே இருந்தது. இந்த நிலையை மாற்றி தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் தலைவர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் 1996இல் முதல்வர் பொறுப் பேற்றுப் பாழ்பட்ட தமிழகத்தை பண்படுத்த சபதமேற்றுள்ளார். தொழில் அதிபர்கள் ஊக்கிவிக்கப் பட்டுள்ளனர். விவசாயிகள் பல நன்மைகளை அனுபவித்து வருகிறார்கள். இதே நிலை நீடித்தால், நாடு நலம்பெறும், மக்கள் வளம் பெறுவார்கள். “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்றார் பேரறிஞர் அண்ணா. “வறுமையை ஒழித்து, ஏழ்மையைத் துரத்தி, ஏழையின் சிரிப்பில் அறிஞர் அண்ணாவைக்க காண்போம்” என முழங்குகிறார் தமிழக முதல்வர் மு. கருணாநிதி.

இன்றைய தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள்

“வேலையின்மையும் வறுமையும் இரட்டைக் குழந்தைகள்” என்றே கூறவேண்டும். ஏனெனில் இரண்டும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு உடையவைகளாகும். எனவே, இன்றைய நிலையில் தமிழக அரசின் முழுக் கவனமும் வேலை வாய்ப்பினை உருவாக்குவதிலும், வறுமையை ஒழிக்கும் நடவடிக்-கைகளிலும் திரும்பி உள்ளது. சமுதாயப் பணிகள் யாவும் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்பவரைக் கருத்தில் கொண்டுதான் மேற்கொள்ளப்படுகின்றன.

கிராமப்புற வேலை வாய்ப்பினைப் பெருக்க 1980 முதல் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகின்றது. நிலமற்றோர் குடும்பத்தின் அங்கத்தினர்கட்கு வேலை வாய்ப்பு அளிக்கும்வகையில் ஊரக நிலமற்றோர் வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் 1983ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது மற்றும் கிராம இளைஞர் சுயவேலை வாய்ப்புப் பயிற்சித் திட்டம், நகர்புற மக்கள் மேம்பாட்டுக் கென சுய வேலைவாய்ப்புத் திட்டம், செயல்படுத்தப்படுவதுடன், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் பயிற்சி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

தொடர்ந்து 5 ஆண்டுக் காலமாக வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்தும் வேலை கிடைக்காமல் வாழும் பட்டதாரிகளுக்குக் குறிப்பிட்ட தகுதி இருப்பின் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.

பிரதமரின் சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் படி சமுதாயத்தின் கீழ்த் தட்டில் உள்ளோர்க்குச் சிறுதொழில் துவங்க வங்கிக் கடன் அளிக்கப் படுகிறது.

கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 1989ஆம் ஆண்டு ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டச் செலவில் 80 விழுக்காடு அரசும், 20 விழுக்காடு மாநில அரசும் ஏற்கின்றன.

நேரு வேலை வாய்ப்புத் திட்டம் 1989ஆம் ஆண்டு துவங்கப்பட்டு நகர்புற ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகிறது.

சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் படி சுயமாக சிறு தொழில் துவங்க, கருவிகள், உதிரி பாகங்கள் வாங்க, பொறியாளர்கள், மருத்துவர்கள், தொழில் வல்லுநர்கள், கட்டிடக் கலைஞர்கள் போன்றோ-ருக்குக் குறைந்த வட்டிக்குக் கடன் வசதியும், ஊக்கத் தொகையும், மானியத் தொகையும் அளிக்கப் படுகின்றன. மகளிருக்காக இந்திரா மகளிர் திட்டமும் நடைமுறையில் உள்ளது. இத்திட்டங்கள் மூலம் எதிர்வரும் 5 ஆண்டுகளில் 10 லட்சம் மகளிர் தமிழகத்தில் வேலை வாய்ப்பினைப் பெறுவர்.

கி.பி. 2000க்குள் “எல்லோருக்கும் சுகாதார வசதி” செய்தல் என்ற மேல்நோக்குக் கொள்கையை அரசு மேற்கொண்டுள்ளது. பலவிதமான தீவிர மருத்துவ நடவடிக்கையால் மலேரியா, யானைக்கால் நோய், பெரியம்மை போன்ற கொடிய நோய்கள் பேரளவில் குறைந்துள்ளன. உயிர்க்கொல்லி நோய்களான புற்றுநோய், எயிட்ஸ் போன்ற நோய்களைப்பற்றி மக்கள் அறிந்து கொள்ள “விழிப்புணர்ச்சி முகாம்கள்” நடத்தலும், தொலைக்காட்சி மூலம் விளம்பரங்கள் செய்தலும் நல்ல பலனைக் கொடுத்துள்ளன.

சத்துணவுத் திட்டமும் கல்வி வளர்ச்சியும்

1982ஆம் ஆண்டு முதல் சத்துணவுத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1985-86ஆம் ஆண்டிலிருந்து ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக முட்டையுடன், மதிய உணவும், 1 முதல் 8ஆம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்கு இலவச பாட புத்தகங்களும், சீருடையும் வழங்கப்பட்டு வருகின்றன. 14 வயதுக்குட் பட்ட அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி, மதிய உணவு போன்ற திட்டங்களினால் தமிழகத்தில் அனைவரும் கல்வி பெரும் நல்லதொரு சூழ்நிலை உருவாகியுள்ளது. 1991ஆம் ஆண்டு கணக்குப்படி தமிழகத்தில் கல்வி அறிவு பெற்றவர்களின் விகிதம் 63.7 விழுக்காடு ஆகும். படிப்பை இடையில் விட்டவர்கட்குப் பல்கலைக் கழகங்கள் நடத்தும் தொலை தூரக் கல்விப்பணி போற்றுதற் குரியது. உயர்நிலைக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி கடந்த 10 ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

வீட்டு வசதி

பறவை இனமும், மிருகங்களும் இருப்பிடம் அமைத்துக் கொள்ளும் போது மனிதன் மட்டும் இன்னமும் நடைபாதை வாசியாக வாழ்வது வருந்தத் தக்கதாகும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வீடுகள் கட்டிக் கொள்ள முடியாத சூழ்நிலையில் இருப்பதால், குடியிருப்பு வீடுகள், அடுக்கு மாடிக் கட்டிடங்கள் அமைத்துத் தருவதில் தனிக்கவனம் செலுத்துகிறது தமிழக அரசு. இதற்காக வீட்டு வசதி வாரியம், ஆசிரியர் வீட்டு வசதிவாரியம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம், காவலர் வீட்டுவசதிக் கழகம், குடிசை மாற்று வாரியம் போன்ற அமைப்புகளைத் தொடங்கித் தமிழக மக்களின் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது.

இவ்வாறு சமுதாயப் பணிகளுக்குத் தமிழக அரசு அதிக பட்ச முக்கியத்துவம் வழங்கிப் பெரும் தொகையைச் செலவிட்டு வருவது பெரிய பொருளாதார முன்னேற்றம் என்று கூற முடியாது. இருப்பினும் அரசின் இந்தச் செயல்பாடுகள் தமிழகத்திற்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதைத் தெளிவு படுத்துகிறது.

தமிழக அரசின் தொழிற் கொள்கை (சிறு தொழில்கள்)

தொழிற் துறையின் வளர்ச்சிதான் பலகோடி மக்களைக் கொண்ட நம் நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க முடியும். நம் நாட்டுத் தொழில்கள் பல வேளாண் உற்பத்தியை மூலப் பொருளாகக் கொண்டு செயல்படுபவையாக உள்ளன. ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் தமிழகத்தில் தொழில்கள் வளரத் தொடங்கின. 1980க்குப் பின்னர் கூட்டுறவுத் துறையும் தொழில் வளர்ச்சியைப் பெருக்கின.

பெரிய தொழில்கள்

பருத்தித் துணித் தொழில்

இது தமிழகத்தின் மிகப் பழமையான தொழிலாகும். நெசவுத் தொழில் கிட்டத்தட்ட 1.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. பருத்தித் துணி உற்பத்தி, விசைத்தறி, கைத்தறி மூலமாக நடை பெறுகின்றது. தமிழகத்தில் 1991-92இல் 449 பருத்தி ஆலைகள் செயல்பட்டன. தென் இந்தியாவின் மான்செஸ்டராக விளங்கும் கோவை மாவட்டம் துணி உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. பருத்தித் துணியைப் பொருத்த வரையில் பெருமைப் படக்கூடிய செய்தி யாதெனில் இந்தியாவின் மொத்த துணி ஆலைகளில் 40 விழுக்காடு தமிழகத்தில் உள்ளது என்பது தான்!

கைத்தறி

கைத்தறித்துறை கிட்டத்தட்ட 10 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் துறையாக விளங்குகிறது. இந்தியாவின் கைத்தறி உற்பத்தியில் 25 விழுக்காடு தமிழகத்தில் உற்பத்தி யாகின்றது. நம்முடைய கைத்தறித்துணிகள் சிங்கப்பூர், மலேசியா, கிழக்கு ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, அன்னியச் செலாவணியை ஈட்டுகிறது.

பட்டுத்  துறை

இந்திய அளவில் நோக்கும் போது பட்டுத் துணிகள், கைத்தறியில் மட்டுமே அதிகமாக நெய்யப் படுகின்றன. தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு உலகப் பிரசித்தப் பெற்றது. தமிழகத்தில் காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், மதுரை, தஞ்சை போன்ற பெரும் நகரங்களில் பட்டு உற்பத்தியாகின்றது. தனியார் பட்டு உற்பத்தி மட்டுமின்றித் தமிழகத்தில் மொத்தம் 104 கூட்டுறவுப் பட்டு உற்பத்தி சங்கங்களும் உள்ளன.

காஞ்சிபுரத்தில் மட்டும் ஒரு மாதத்தில் ரூ.30.13 கோடி மதிப்புள்ள 72,000 மீட்டர் பட்டுத் துணி உற்பத்தியாகிறது. இதில் 80 விழுக்காடு அழகிய வேலைப்பாடு மிக்க கோர்வை முந்தியுடைய புடவை ரகங்கள். மீதமுள்ள 20 விழுக்காடு சால்வைகள் போன்ற மற்ற ரகங்களாகும். இந்த உயர்ரகப் பட்டுகளுக்கு அமெரிக்கா, வளைகுடா நாடுகள், ஜெர்மனி, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளில் நல்ல வரவேற்புள்ளது. மொத்த ஏற்றுமதியில் 25 விழுக்காடு அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நெசவுத் தொழிலைத் தவிர சர்க்கரைத் தொழிலும் நன்கு வளர்ந்து வருகிறது. அரசுத் துறையில் 3 ஆலைகளும், கூட்டுறவுத் துறையில் 17 ஆலைகளும், தனியார் துறையில் 13 ஆலைகளும் சர்க்கரை உற்பத்தி செய்கின்றன. சிமெண்ட் தொழிலும், உரத் தொழிலும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவைகளின் உற்பத்திப் பெருக்கம் தமிழகத் தேவையை ஓரளவு பூர்த்தி செய்வதுடன், அந்நியச் செலாவணியையும் ஈட்டிக் கொடுக்கின்றன.

இந்தத் தொழில்களைச் சார்ந்த உபதொழில்களும் வளர்கின்றன. பெருவாரியான வேலையற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெருகின்றனர். தமிழகம் “முழுமையாகத் தொழில் மயமாக” அரசு முயற்சி எடுத்து வருகிறது.

நாளைய தமிழகப் பொருளாதாரம்

தமிழகப் பொருளாதாரத்தின் நேற்றைய நிலையையும், இன்றைய நிலையையும் ஆராய்ந்த பின்னர், அதன் நாளைய நிலை எவ்வாறு இருக்க வேண்டுமென ஆராய்ந்து கூறுவது நன்மை பயக்குமெனக் கருதுகின்றேன். அதற்கு மைய, மாநில அரசின் நிலையையும் அவற்றின் செயல்பாட்டையும் முதலில் ஆய்வு செய்ய வேண்டும். “அரசியலின்றி பொருளாதார மில்லை – பொருளாதாரமின்றி அரசியலில்லை” என்பது வல்லுநர் கருத்து. இரண்டும் ஒன்றோ டொன்று இணைந்து செயல்பட வேண்டிய துறைகளாகும்.

தற்போது அமைந்துள்ள மைய அரசு பல கட்சிகள் பங்கேற்கும் ஒரு கூட்டணி அரசாக அமைந்துள்ளது. இதில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, தமிழகத்தின் தேவைகள் நிறைவேற்றப்படுமென நம்பலாம்.

உலக நாடுகளுடன் இந்தியாவின் உறவு

பாரத நாட்டின் வெளியுறவுக் கொள்கையும், நடவடிக்கையும், அண்டை நாடுகளுடன் கொண்டிருக்கும் உறவும் தான் இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் முக்கியக் காரணிகளாகத் தற்போதுள்ளன. அண்டை நாடுகளுடன் நல்ல உறவு இருப்பின் பாதுகாப்புக் கிடைப்பதுடன் வாணிபமும் தழைத்து வளர ஏதுவாக இருக்கும். தற்போது சைனா, ஈரான், பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகள் நேசக்கரம் நீட்டி வாணிபத் தொடர்பை வலுப்படுத்த நினைப்பது தமிழகத்திற்கு நல்ல வாணிப வளர்ச்சியைக் கொடுக்கும்.

நாடு முன்னேற மக்கள் வளமோடு வாழ மேற்கொள்ளப்பட வேண்டிய சில நடவடிக்கைகள்

 1. மக்கள் தொகை

மால்தூசியின் கோட்பாடு நம் நாட்டில் முழு அளவில் செயல்படவில்லை. எட்வின் கோனனின் உத்தம அளவு கோட்பாடுபடி நம்நாடு தாங்கும் சக்தியை நாம் கணக்கில் எடுக்கவேண்டும். வறுமைக்கு, மக்கள் தொகைப் பெருக்கம் மட்டுமே முக்கியக் காரணமில்லை. தொழில் வளர்ச்சி போதிய அளவு இல்லாததே முக்கியக் காரணமாகும். மேலும், அரசும் மக்களும் சிறிய குடும்பத்தைப் பற்றி நினைக்கத் துவங்கிவிட்டனர். நாடு குடும்பக்கட்டுப்பாடு திட்டங்களைத் தீட்டி, மக்கள் தொகையைக் குறைக்கத் தீவிர முயற்சியும் எடுத்து வருகிறது. ஒரு குழந்தை பிறந்தால் அதற்கு உண்பதற்கு ஒரு வாயும் – உழைப்பதற்கு இரண்டு கைகளும் உள்ளன; ஆகவே, மக்கள் தொகை வளர்ச்சியைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. நமக்குக் கிடைக்கும் இயற்கை வளங்களைச் சிக்கனமாக அறிவியல் முறையில் பயன்படுத்தினாலே போதுமானது. சிறப்பான கல்வியும், முறையான பயிற்சியும் கொடுத்தால் தமிழகம் முன்னேறும்.

 1. வேளாண்மை

தமிழகத்தில் வேளாண்மையில் வளர்ச்சிக்குப் பிரதான முக்கியத்துவம் கொடுத்து, மாவட்டம் தோறும் ஆராய்ச்சிப் பண்ணைகள் வைத்து வீரிய வித்துக்கள், செயற்கை உரங்கள், நவீன சாகுபடி முறைகள், புதிய தொழில் கருவிகள் வழங்கினால் நாட்டில் மீண்டும் பசுமைப் புரட்சியைக் கொண்டு வர முடியும். தற்போது வல்லுநர்கள் கணிப்பில் நம் தமிழகத்தில் 2-வது முறையாகப் பசுமைப் புரட்சி துவங்கியுள்ளது.

 1.  நீர்ப்பாசனம்

விவசாயிகளுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகளை உடனடியாக வழங்க வேண்டும். வட மாநிலங்களில் ஓடும் நதிகள் கடலில் பாய்ந்து யாருக்குமே பயன்படாமல் போவதைத் தடுத்து கங்கை – காவிரி இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த மைய அரசும், மாநில அரசுகளும் செயல்பட வேண்டும். காவிரி நீரை தமிழகத்திற்குப் போதுமான அளவு வழங்குவதில் உள்ள சிக்கலைப் போக்க அரசியல்வாதிகள் உண்மையாகவும், தேசிய உயர்வோடும் அணுக வேண்டும். மேற்கு நோக்கிப் பாயும் நதிகளைத் தமிழகத்திற்குத் திருப்பி விட்டால் நமது நீர்த் தட்டுப்பாடு முற்றிலும் குறையும்.

 1. தொழில் துறை

தொழில் துறையைப் பொருத்தவரை தமிழகம் “வந்தேறிகளின் வேட்டைக் காடாக” மாறிவிட்டது வருந்ததக்கது. பெருந்தொழில் களையும், நடுத்தர அளவிலான தொழில்களையும் துவங்கப் போதுமான மூலதனம் இல்லாமையால், பாலைவனத்தில் பிறந்த வடவர், சோலை வனமாகிய நம் தமிழகத்திற்குக் குடிபெயர்ந்து முக்கியமான தொழில்கள் அனைத்தையும் நாளடைவில் கைப்பற்றி விட்டனர். ராஜஸ்தானியர், குஜராத்தியர், மார்வாடிகள் நம் தொழிலை ஆக்கிரமித்துக் கொண்டு தமிழர்களை கூலியாட்களாகப் பயன்படுத்துகிறார்கள். “வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்” தமிழனின் நிலையை உயர்த்தவில்லை. மண்ணின் மைந்தர்களுக்கு எதிலும் முன்னுரிமையில்லை; முக்கியமான தொழில்கள் அனைத்தும் அவர்கள் வசம் உள்ளன.

இவற்றைத் தமிழர்கள் செய்ய முடியாமைக்கு மூலதனமின்மையும், கற்ற அறிவாளிகள் நல்ல வருவாயும் உயர்ந்த எதிர்காலமும் நாடி வெளிநாடுகளுக்கு சென்று குடியேறி வருவதும் ஆகும். தொழில் தொடங்க உரிமம் அளிக்கும் போது, தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அல்லது தமிழர்களுக்கு மட்டுமே உரிமை வழங்க வேண்டும். தேவையான மூலதனமும் வழங்கி அரசு ஆதரிக்க வேண்டும்.

 1. தனியார் மயமாக்கம்

நாட்டில் ஒரு கால கட்டத்தில் “தேசியமயமாக்கல்” கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. தற்போது தனியார் மயமாக்கல் கொள்கைக்கு முக்கியத்துவமும் ஆதரவும் கூடிவருகிறது. இதனைப் பயன்படுத்தி தமிழகத் தொழில் முயல்வோர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கடன் உதவியோடு புதிய தொழிற்சாலைகளைத் திறக்கவேண்டும். தற்போது தமிழ்நாட்டின் போக்குவரத்துக் கழகங்களின் எண்ணிக்கை 19 ஆக உள்ளன. இவை அனைத்திலும், மொத்தமாக 15,000 பேருந்துகள் இயங்குகின்றன. இவை ஆரம்பத்தில் ஓரளவு இலாபம் ஈட்டித்தந்தாலும் 1981-92 முதல் பெரும் நஷ்டத்தில் செயல்படுகின்றன. எனவே, போக்குவரத்துத் துறையை முழுமையாகத் தனியார் மயமாக்கலாம்.

 1. கப்பல் போக்குவரத்து

இந்தியாவிலேயே தமிழகக் கடற்கரைதான் மிக அழகானதாகவும், நீளமானதாகவும் அமைந்துள்ளது. இம் மாநிலத்தில் 10 துறைமுகங்கள் உள்ளன. இவற்றில் மிகப் பெரியவை சென்னையும், தூத்துக்குடியுமாகும். மும்பை துறைமுகத்திற்கு அடுத்தபடியாகச் சென்னைத் துறை முகந்தான் அதிக அளவு சரக்குகளை ஏற்றியிறக்கி வருகிறது. சென்னைத் துறைமுகத்தில்தான் முதல் முறையாகச் சரக்குப் பெட்டகமுறை அறிமுகம் செய்யப்பட்டன. இங்கு ஆண்டு ஒன்றிற்கு 1,75,000 சரக்குப் பெட்டகங்கள் கையாளப்படுகின்றன. நாகப்பட்டினம், கடலூர் துறைமுகங்களை விரிவுபடுத்தினால் வருங்காலத்தில் கடல் வாணிபம் சிறக்க வழிபிறக்கும். தமிழக அரசு பூம்புகார்க் கப்பல் கழகத்தின் மூன்று கப்பல்களின் மூலம் 26,000 டன் சரக்கு எடுத்துச் செல்லப் படுகிறது. எனவே, வரும் ஆண்டுகளில் தரைவழி, நீர்வழி போக்குவரத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்தால் தொடங்க இருக்கும் 9ஆம் ஐந்தாண்டுத்திட்ட காலத்தில் நாடும் நல்ல வளர்ச்சி பெறும், நாட்டின் நிதி நிலையும் உயரும்.

       7. கடல்வளம்காட்டு வளம்

மேலும் நம் நாட்டில் கிடைக்கும் மலை பொருட்கள் அந்நியச் செலாவணியை ஈட்டவல்லது. குறிப்பாகத் தமிழகத்தில் கிடைக்கும் கருங்கற்பாறைகள், பளிங்குக் கற்கள், வெளிநாட்டவரை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதனை அரசு கண்டுபிடித்து, வெட்டி யெடுத்து, மெருகூட்டி ஏற்றுமதி செய்யலாம். காட்டு வளத்தைப் பயன்படுத்திச் சந்தன மரங்களையும், தேக்கு மரங்களையும் பாதுகாத்து ஏற்றுமதி செய்து பெரும் பொருள் ஈட்டலாம்.

தமிழகத்தில் கடற்கரைப் பகுதியில் இதுநாள்வரை உப்பு எடுத்தலும், மீன் உலர்த்துதலும் தான் நிகழ்ந்து வந்தன. ஆனால் தற்போது கடல் நீரைக் கரை ஓரங்களில் தேக்கி இறால் பண்ணைகள் ஆங்காங்கே அமைத்துத் தனியார் நிறுவனங்களும், தனி நபர்களும் பெரும் பொருள் ஈட்டுகின்றனர். தமிழகத்து இறாள் மீனில் அதிகச் சத்தும், சுவையும் இருப்பதால் வெளி நாட்டவர் விரும்பி இறக்குமதி செய்கின்றனர். இது ஒரு நல்ல வாணிபப் பொருளாக மாறிவிட்டது. இதனையும் தமிழக அரசு பெரிய அளவில் திட்டமிட்டுச் செயல்படுத்தினால் அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும். மேலும் பண்டைக் காலம் தொட்டுச் சிறப்பாகப் பேசப்படும் தமிழகத்து முத்து, தூத்துக்குடிப் பகுதியில் ஆழ்கடலில் இருந்து எடுக்கப் படுபவை, அதன் விளைவையும் முத்துக் குளிக்கும் தொழிலையும் அரசு விரிவுபடுத்தி உபரி வருவாய் பெறலாம்.

சுற்றுலா

வெளிநாட்டுப் பயணிகளின் சொர்க்க பூமியாகத் தமிழகம் இருக்கின்றது. இங்குள்ள மலைகளும், நீர்வீழ்ச்சியும், மகாபலிபுரமும், பூம்புகாரும், ஆயிரக்கணக்கான புகழ் பெற்று இந்து, முஸ்லீம், கிருத்துவ ஆலையங்களும், சிற்பங்களும், வானைத் தொடும் கோபுரங்களும், வெளிநாட்டவரை வெகுவாகக் கவர்ந்திழுக்கின்றன. அவர்கள் சுலபமாகத் தமிழகம் வந்துபோக சுற்றுலாத்துறையை விரிவுபடுத்த வேண்டும். சேலம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், காஞ்சிபுரம் போன்ற ஊர்களில் விமானத் தளங்கள் அமைக்க, விரிவுபடுத்த நல்ல இடவசதியும் இருக்கின்றன. இத்துறையில் தனியார் ஈடுபட்டால் குறுகிய காலத்தில் சிறப்பாக வான்வழிப் போக்குவரத்து பெருகி அதிக அந்நிய செலாவணியும் கிடைக்கும்.

இறுதியாகத் தமிழகம், பொருளாதாரத் துறையில் நேற்று வளரத் துவங்கியது. இன்று உயர்ந்து நிற்கிறது. நாளை ஒரு வளமுடைய நாடாக மாறும் என்பது உறுதி. தமிழக மக்களுக்கு ஒளிமிகுந்த எதிர்காலம் காத்திருக்கிறது எனக் கருதலாம்.

BIBLIOGRAPHY

 1. Dandakar V.M. and Rath. N.   “Poverty in India” Indian School of Political Economy, Bombay 1971.
 2. Dhingra. I.C. “Indian Economy” – with special reference to Tamilnadu” Sultan chand & Sons.             New Delhi 1993.
 3. Dholakia R.H. “Regional Disparity in Economic Growth in India”. Himalayan Publishing House, Bombay 1985.
 4. Espteim T.S. “South India – Yesterday Today and Tomorrow” Macmillan – New Delhi 1973.
 5. Mumtaj Beebi H. “An Analysis of the Socio-Economic conditions of silk Weavers in Kanchipuram” Ph.D., Thesis, University of Madras, Chennai 1994.
 6. Tmt. Mumtaj Balakrishnan “Economics of agriculture” Tamilnadu Text Book Society, Chennai 1972.
 7. Pazha. Nedumaran ” Thamizhagam River Water Disputes” Sneha,              Chennai 1996.
 8. Perumalsamy. S. “Economic Development of Tamilnadu” S. Chand & Co. New Delhi 1990.
 9. Rao. V.M. “Rural Development and the Village” Sterling Publishers (P) Ltd., New Delhi 1987.
 1. Sinha S.V. Co-operatives in India, Co-operative Year Book 1965-66, 1967, Ministry of Food and Agriculture, Report for 1968-69.
 2. Sundararajan. S. “Today’s Economic Development of Tamilnadu” Vanathi Padhippaham. Chennai 1985.
 3. Tamizharasu Monthly Journal Published by the Govt. of Tamilnadu 12 issues for the year 1996-97.
 4. Front-line Dec. 27. – 1996 Issue
 5. Indian Express Daily Newspaper.

மும்தாஜ் பாலகிருஷ்ணன்:

கலப்புத் திருமணம் முதன்மை பெறாத காலத்திலேயே கலப்பு மணம் செய்து கொண்ட துணிச்சலானவர். பச்சையப்பன் நிறுவனத்தில் பொருளாதாரத் துறையில் பணியாற்றி, இறுதியாக்க் காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர்.


															

You Might Also Like