Star Mountain

My travels and other interests

தமிழ்நாடு நேற்று இன்று நாளை

தமிழ்நாடு: நேற்று – இன்று – நாளை திட்டமும் தலைப்புகளும் (1997)

தமிழ்நாடு: நேற்று – இன்று – நாளை
திட்டமும் தலைப்புகளும்
ந. முருகானந்தம்
கோ. இராஜாராம்

நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் 1999ஆம் ஆண்டு அமெரிக்க மாநிலமான நியூ ஜெர்சியில் தோற்றுவிக்கப்பட்டது. நியூ ஜெர்சி, நியூ யார்க், கனெக்டிகட் வாழ் தமிழர்களுக்காக்க் கலை, இலக்கிய, சமூக நிகழ்ச்சிகளை நடத்துவது இச்சங்கத்தின் முக்கியக் குறிக்கோள். இது தவிர, சங்க உறுப்பினர் பலரின் வேர் தமிழகத்தில் இருப்பதால், தமிழக முன்னேற்ற முயற்சிகளிலும் இச்சங்கம் ஈடுபடுகிறது.

1992ஆம் ஆண்டு தமிழகம் பற்றிய ஆய்வக்குத் திட்டம் வகுக்கப்பட்டது. தமிழ் நாடு, புதுச்சேரி கல்லூரி மாணவர்களை, இவ்வாய்வு முயற்சியில் ஈடுபடுத்தும் வண்ணம் தமிழ் நாடு: நேற்று- இன்று- நாளை என்ற பொதுத் தலைப்பில், ஒரு கட்டுரைப் போட்டியை நடத்தியது. பரிசு பெற்ற கட்டுரைகள் 1993ஆம் ஆண்டு புத்தாண்டு மலரில் வெளிவந்தன.

இவ்வாண்டு இதே பொதுத் தலைப்பில் அனுபவமுள்ள அறிஞர் பார்வைய் வெளியிடவேண்டும் என்று திட்டமிட்டோம். அவ்வண்ணமே பல சிறப்புத் தலைப்புகளில், அறிஞரின் ஆய்வுப் பார்வையைக் கொண்டு இந்நூல் வெளிவருகிறது.

இத்திட்டத்தின் நோக்கங்களையும், இத்தலைப்புகளைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களையும் விவரிக்கிறது இவ்வறிமுகக் கட்டுரை.

ஆண்டு 1947. இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டு. பெரும் இன்னல்களடைந்து தியாகங்கள் புரிந்து சுதந்திரம் பெற்றோம். வரும் தலைமுறைகள் அடிமை வழ்வு வாழலாகாது, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டும் என்ற உயர்ந்த இலட்சித்திற்காகத் தம் உயிரையும் பொருட்படுத்தாமல் விடுதலைப் போரில் முன்னோர் ஈடுபட்டனர். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு கிராம்மும் தன்னாட்சி பெற்று விளங்க, ஜனநாயகமே கோடிக்கணக்கான மக்களுக்குச் சுதந்திரம், சமவாய்ப்பு மற்றும் மகிழ்ச்சி பயக்குமென, தம் இன்னுயிரை ஈந்தனர். தன்னாட்சியும் தன் கலாச்சாரமும் கொண்ட தேசத்தில்தான் வளமை பெருகுமெனக் கனவு கண்டனர். எதிர்காலச் சந்ததிகளின் அரசியல் போக்குகள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கும் என்று முன்னோர்கள் நம்பிக்கை வைத்தனர். தொடர்ந்து உண்மை உரைகல்லில் சோதிக்கப்படும். நேர்மை கணிக்கப்படும், நாட்டின் நிலை ஆய்வுக்குள்ளாக்கப்படும் என்ற உயர்நம்பிக்கை கொண்டிருந்தனர்.

ஆண்டு 1997. நம் தேசம் தன்னாட்சியும் தன் கலாச்சாரமும் கொண்டு விளங்குகிறது. தமிழ்நாடு தமிழர்களால் ஐம்பதாண்டுகள் ஆளப்பட்டு வந்திருக்கிறது. இன்றைய நிலையைக் கணிக்கவேண்டிய வேளை இவ்வேளை. நம் முன்னோர்களின் எதிர்பார்ப்புகளை நாம் நிறைவு செய்தோமா? எதைச் செய்தோம்? எதைச் செய்யத் தவறினோம்? ஒவ்வொருவரும் சுதந்திரமாக இருக்கிறார்களா? விடுதலையின் பலன்கள் எல்லோருக்கும் கிட்டியதா? மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள எல்லோருக்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றனவா? சாதாரணக் குடிமகனின் பொருளாதார நிலை எப்படி உள்ளது? கேள்வி கேட்கும் நேரம் இது. உண்மைகளை வெளிக்கொணரவும், நம் அக்கறைகளை எதிரொலிக்கவும் இதுவே நேரம். குடிமக்களின் விழிப்புணர்வை அடித்தளமாக்க் கொண்டுதான் ஜனநாயகத்தின் தூண்கள் எழுப்பப்படும் என்கிற உண்மையை மறந்துவிட முடியாது. நாட்டின் முன்னேற்றத்தை அளவிட வேண்டியது அவசியம். நாட்டின் முன்னேற்றம் மாநிலங்களின் முன்னேற்றத்தைச் சார்ந்து உள்ளது. தமிழ்நாட்டின் முன்னேற்றம் நமக்கு முக்கியம். அதனால் நம்முடைய கேள்விகள் தமிழ்நாட்டைப் பொறுத்தவை. ஆனால், இந்த முயற்சியின் பலன்கள் மற்ற மாநிலங்களுக்கும் பொருத்தமானவையாகும்.

இப்போது, நாம் நமது அன்றாட வாழ்வின் சில முக்கியமான பிரச்சினைகளுக்குச் செல்வோம்.

ஒரு சாதாரணக் குடியானவனின் வாழ்க்கைத் தரம் என்ன? சுதந்திரத்திற்குப் பின்பு வாழ்க்கைத் தரம் உண்மையில் மாறியுள்ளதா? பொருளாதாரக் காரணங்களினால் கிராமத்தை விட்டுச் சென்று விடுகிற நிலைமை உள்ளதா? விவசாய முறைகள் மற்ற நாடிகளின் முன்னேற்றத்துக்குத் தக மாறியுள்ளனவா?

கிராம நிர்வாகம் எப்படி நடைபெறுகின்றது? காந்தியின் கனவான கிராம ராஜ்யம் நனவாயிற்றா? கிராமத்தின் பிரச்சினைகளை அரசாங்கத்தின் முன் கொண்டு செல்ல, தொடர்பு வழிகள் வரையறுக்கப்பட்டு, பின்பற்றப்படுகின்றனவா?

நீர்ப் பாசன வசதிகள் ஐம்பது வருடங்களில் முன்னேற்றம் கண்டுள்ளனவா? பாசனத்திற்கான நீர்த் தேவைகள் முழுமை பெறும் வண்ணம் நீர்வசதி நிர்வகிக்கப் படுகின்றதா?

பஞ்சம் ஒரு புறம், வெள்ளம் ஒரு புறமாக நாசம் விளைவித்த நிலை மாறியுள்ளதா? ஆறுகள் தேசிய ஒற்றுமையின் அடையாளச் சின்னங்களாகப் பாடப்பட்டு வருகின்றன. அரசியல்வாதிகளும் இதையே சொல்லி வருகிறார்கள். ஆனால், ஆறுகளின் இணைப்பும், அதன் வழியே தேசிய ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதும் மெதுவாகவே நடக்கின்றன. தொழில்நுட்பம் மிக முன்னேறியுள்ள இந்த ஐம்பதாண்டுகளில் ஏன் இந்த்த் திட்டங்களை அமல் செய்ய முடியவில்லை?

தொழில்மயமாக்கல் மூலம் நாம் சாதித்தது என்ன? அது பொருளாதாரத்தை மேம்படுத்தியதா? தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்ததா? தொழில்மயமாக்கல் சீராக நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பரவியுள்ளதா?

தற்போதைய தொழில்துறை மக்களையும் சுற்றுப்புறச்சூழலையும் எவ்வாறு பாதித்துள்ளது? நீர், நிலம், உணவு இவை எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளன? சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பானதாக உள்ளதா? நிலம், நீர், காற்று, மக்கள், உணவு இவற்றை, தொழில் துறையின் பேராசைப் போக்குகளிலிருந்து காப்பாற்றக் கடுமையான சட்டங்கள் இருக்கின்றனவா? இருப்பின் அச்சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றனவா?

தொழில்துறையின் வளர்ச்சி அதற்குக் கிடைக்கும் மின் சக்தியைக் கொண்டு அமைகிறது. பல்வேறு வகையான மின்சக்திகள் – நீர் மின்சக்தி, வெப்ப மின் சக்தி, அணுமின்சக்தி, சூரிய சக்தி, தொழில் துறைக்கும், பொதுமக்களுக்கும் பயன்படுமாறு கிடைக்கின்றனவா?

பெரும் தொழில் துறைகள், ஆறுகள் இணைப்பு போன்ற தேசியத் திட்டங்கள் நீர் மேலாண்மை போன்றவை மத்திய மாநில உறவுகளைப் பொறுத்தன. மத்திய மாநில உறவு எப்படி உள்ளது?

சுதந்திரத்தின் போது எந்த மாநிலத்தின் பொருளாதாரமும் சிறப்பானதாக இல்லை. ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டின் பொருளாதார நிலையும் தேசியப் பொருளாதார நிலையும் எந்த அளவு மாறியுள்ளன? இந்திய சராசரி தனிமனித வருடாந்திர வருமானம் அதிகரித்த அளவிலேயே தமிழ்நாட்டின் தனிமனித வருடாந்திர வருமானமும் அதிகரித்துள்ளதா? தனிமனித வருடாந்திர வருமானம் காட்டும் பொருளாதார வளர்ச்சியை உண்மையிலேய சாதாரண விவசாயக் கூலிக்கும் தொழிற்சாலைப் பணியாளருக்குமான பொருளாதார வளர்ச்சியாகக் கொள்ள முடியுமா? செல்வமும் சரியாக விநியோகிக்கப்பட்டுள்ளதா?

வங்கிகளும், காப்பீடும் பொருளாதாரத்துக்கு இன்றியமையாதன. இத்துறைகளில் என்ன முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன?

விவசாயம், தொழில்துறை, பொருளாதாரம் இவை வளரப் பயிற்சியும் கல்வியும் பெற்ற தொழிலாளர்கள் அவசியம். கல்வி எல்லோருக்கும் கிடைக்கின்றதா? அடிப்படைக் கல்வியாவது அனைவரையும் சென்றடையும் வாய்ப்புள்ளதா?

கல்வி கற்கும் உரிமை பெண்களுக்கும் உண்மையான தொழில் வர்க்கத்தினருக்கும் முன்பு முழுமையாகக் கிடைத்ததில்லை. கல்வி கற்ற, விஷயஞானமுள்ள தாய், சிறுகுழந்தை மரணவிகிதாசாரத்தைக் குறைப்பதில் மற்றக் காரணிகளை விட அதிகம் பங்கு வகிப்பதாய் அறிகிறோம். நம் கிராமத்துப் பெண்கள் இந்நோக்கத்தை நிறைவேற்றும் அளவுக்குக் கல்வி பெற்றிருக்கிறார்களா?

கல்வி நம் சமூகத்தை அறிவியல் நோக்குள்ளதாக ஆக்கியுள்ளதா? மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் போட்டிப் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்ள விஞ்ஞான வளர்ச்சியைப் புரிந்து அதனைச் சரியாகப் பயன்படுத்துதல் நவீன வாழ்வின் முக்கிய அங்கமாக உள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது. இந்த ஐம்பதாண்டுகளில் இத்துறைகளில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன?

வேகமாக முன்னேறி வரும் உலகில் கல்வி, அறிவியல், தொழில் நுட்பம் என எல்லாத் துறைகளிலும் கணிப்பொறிகள் பயன்படுகின்றன. நாம் நவீனமயமாக்கலுக்கு உலகின் மற்ற நாடுகளுக்கீடாகக் கணிப்பொறியைப் பயன்படுத்துகிறோமா?

அறிவியல் மற்றும் மருத்துவத் துறை முன்னேற்றத்தால் பல தொத்து நோய்கள் ஒழிக்கப்பட்டுவிட்டன. ஆனாலும் மருத்துவ உதவி பிற்பட்ட பகுதிகளைச் சென்றடைந்துள்ளதா? நம் நாட்டின் அடிப்படை மருத்துவத் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமல் மேற்கத்திய மருத்துவத் துறையின் கண்டுபிடிப்புகள் இறக்குமதி செய்யப்படுகின்றனவா?

இப்பொழுதுங்கூட எளிதில் தவிர்க்கக் கூடிய, குணப்படுத்தக் கூடிய நோய்கள் – வயிற்றுப் போக்கு, அயொடின் பற்றாக்குறை, கர்ப்பகால மருத்துவ உதவியின்மை, குழந்தை மருத்துவப் பற்றாக்குறை – காரணமாய்ப் பலர் அவதியுறுகின்றனர். சிலர் மரணமுறுகின்றனர். இன்றைய மருத்துவ நடைமுறை கிராமப்புற மக்களுக்கு நன்மை பயக்கின்றதா?

இவற்றுடன் தொடர்பு கொண்ட இன்னொரு பிரச்சினை மனநலம் குன்றியவர்களுக்கும், உடல் ஊனமுற்றோர்களுக்கும் தரப்படும் மருத்துவ வசதி, சிறப்புத் தேவைகளைப் பெற்ற இந்தப் பிரிவினருக்கு நாம் செய்ய வேண்டிய கவனத்தை அளித்திருக்கிறோமா?

பழமையில் வேர் கொண்ட நம் சமுதாயத்தின் சமநிலை குடும்ப அமைப்பின் வலிமையைச் சார்ந்திருக்கிறது. அரசியல், பொருளாதார, கலாச்சார மாற்றங்கள் இந்த ஐம்பதாண்டுகளில் குடும்ப அமைப்பை எப்படிப் பாதித்துள்ளன? நகர்ப்புறக் குடும்ப அமைப்பும், கிராமியக் குடும்ப அமைப்பும் என்ன மாறுதல்களைப் பெற்றுள்ளன?

பெண்களும் குழந்தைகளும் குடும்ப அமைப்பின் அடித்தளமேயெனினும் அவர்களின் நிலை பெருமைப்படத் தக்கதாய் இருந்ததில்லை. பெண்களின் இன்றைய நிலை என்ன? வரதட்சிணை இன்றும் பெண்களின் மணவாழ்க்கைச் சிதைவிற்குக் காரணமாய் உள்ளதா? குழந்தைகளின் தனித்துவம் மலர்ச்சி பெறும் வாய்ப்புகள் உள்ளனவா? குழந்தைகள் கல்வி பெறும் வயதில் வேலை செய்ய நிர்ப்பந்தம் உள்ளதா?

சாதீயத்தின் இறுக்கத்தில் ஊறிக் கிடந்த நம் சமுதாயத்தில் வறியவன், பணக்காரன், படித்தவன், படிக்காதவன், ஆண், பெண் என்று ஒரு சாரார் மிகுதியான சலுகைகள் பெற்றதும் இன்னொரு சாரார் நசிவுற்றதும் நிகழ்ந்தன. நீதித்துறையும் சட்டரீதியான அணுகுமுறையும் வலியுறுத்தும் சட்ட அமைப்பை நாம் பெற்றோம். நீதித்துறை எல்லோருக்குமாகச் செயல்படுகின்றதா?

சமூக நீதி வேண்டி ஒரு சாராருக்குச் சலுகைகள் அளிக்கச் சட்ட அமைப்பில் வழி செய்யப்பட்டது. இதன் பலன் உரியோரைச் சென்றடைந்ததா? நம் முன்னுரிமைக் கொள்கைகள் தகுதியுடையோருக்கு நியாயமாய்ச் சென்றடைய வேண்டிய பலன்களை மறுக்கிறதா? இந்தக் கொள்கை வெறும் அரசியல் சந்தர்ப்பவாதம் தானா?

அரசியலும் அரசாங்கமும் ஜனநாயகத்தைக் காப்பாற்றுகிற கடமையுள்ளவை. நம் நாட்டின் – நல்ல, கெட்ட மாறுதல்களுக்கெல்லாம் அரசியலே காரணமா? தூய்மையான, ஊழலற்ற, திறமையான நிலைத்த அரசாங்கம் உருவாகும் சூழ்நிலை இங்கு உள்ளதா?

நேர்மையான அரசியல்வாதிகளும் அரசாங்க அலுவலர்களும் இன்றும் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் ஊழல் செய்பவர்களும் உள்ளனர். அரசியல்வாதிகளின், அரசாங்க அலுவலர்களின் தரம் வீழ்ச்சியுற்றதன் காரணம் என்ன? சம்பந்தப்பட்டவர்களின் பேராசை, வாக்காளர்களின் பொறுப்பின்மை, சட்ட ஒழுங்கின் சீர்குலைவு – எதுதான் காரணம்? ஊழலை ஒழித்து நாடு முன்னேற வழியுள்ளதா?

அரசியல்வாதிகளும், அரசாங்க அலுவலர்களும் ஊழலில் ஈடுபட்டால் அதன் காரணம் மக்களே. திருக்குறள் தந்த் நாட்டில் ஒழுக்க நெறிமுறைகள் என்னவாயின? நீதிக்கும் நெறிமுறைக்கும் வாக்களிக்கிற பக்குவம் நமக்கு உள்ளதா? தனிமனித ஒழுக்கமும் சமூக ஒழுக்கமும் என்னாயின?

ஒவ்வொரு குடிமகனும் அரசாங்கத்திடமிருந்து நலம் காக்கப்பட வேண்டும் என்று கோரிப் பெற உரிமையுள்ளவன். அதே சமயம் அவன் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டுகிற கடமைகளும் உண்டு. அப்படிப்பட்ட பொறுப்பை உணர்ந்து செயல்படும் போக்கில் நம் குடிமக்கள் குடிமை உணர்வுடன் செயல்படுகிறார்களா?

பொதுநலனைக் கருத்தில் கொண்ட கல்வியும். நெறிமுறைகளையும் சமுதாய உணர்வுகளையும் உருவாக்கவல்ல கல்வியும் சென்றடைய முடியாத பகுதிகளைச் சமயமும் சமயப் பிரசாரகர்களும் சென்றடைய முடியும். மதம் வெறும் மரமான நடைமுறைகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கின்றதா? அன்றாட வாழ்வில் ஒழுக்க நெறியை வலியுறுத்தும் சீர்திருத்தம் தேவையா? ஒழுக்க நெறியை வலியுறுத்தும் நூல்கள் மீண்டும் தமிழ் மொழியில் வெளியிட்டுப் பரப்ப வேண்டுமா?

தமிழ் மொழியின் இன்றைய நிலை என்ன? தமிழ் மொழிக் கல்வியிலிருந்து பொதுவாகவே மக்கள் விலகிச் சென்று கொண்டிருக்கிறார்களா? அல்லது இந்தப் போக்கு வெறும் நகரத்தில் மட்டும் உள்ளதுவா? இன்னொரு புறம் தமிழிலே மருத்துவம், பொறியியல் போன்றவற்றைக் கற்பிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுகின்றது. இது நல்ல போக்கா? நம தமிழ் மாணவர்களின் எதிர்கால வேலை வாய்ப்பு இதனால் பாதிக்கக் கூடுமா?

தமிழ் சிறந்த இலக்கிய மரபு கொண்ட மொழி, சுதந்திரத்திற்குப் பின்பு தரமான படைப்புகள் தமிழில் படைக்கப்பட்டனவா? மொழி புதுமையான போக்குகளைப் பெற்று வளர்ந்துள்ளதா? அறிவியல் வளர்ச்சியையும், தொழில் நுட்ப மேம்பாட்டையும் வெளிப்படுத்தவல்ல மொழியாகத் தமிழ் இன்று விளங்குகிறதா?

மொழி வளர்ச்சியிலும் சரி, சமூக விமர்சனத்திலும் சரி, செய்தித்தாள்களும், பத்திரிகைகளும் முக்கியப் பங்காற்ற வேண்டும். தமிழ் ஏடுகள் உயர்ந்த இலட்சியத்தைக் கொண்டுள்ளனவா? அல்லது வெறும் பரபரப்பையே நோக்கமாய்க் கொண்டு செயல்படுகின்றனவா? உண்மையை வெளிக் கொணர்ந்து மக்களுக்கு உணர்வு ஏற்படுத்தும் செயலில் இவை ஈடுபட்டு வெற்றி பெற்றிருக்கின்றனவா? கிராமப் புறங்களை இந்த ஏடுகள் எட்ட முடிந்துள்ளனவா? தரமான சில சிறு பத்திரிகைகள் வெளிவருகின்றன. இவை ஏன் சிறிதாகவே இருக்க வேண்டும்? பெரும் பத்திரிகைகள் ஏன் தரத்திற் கென்று சிறு இடம் கூட ஒதுக்க முடியாமல் போயிற்று?

சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை ஆழமாகப் புத்தகங்களில் ஆய்வு செய்ய இயலும். எப்படிப்பட்ட புத்தகங்கள இங்குப் பிரசுரிக்கப்படுகின்றன. எப்படிப்பட்ட புத்தகங்கள் பரவலாய் வாசிக்கப்படுகின்றன? தரமான புத்தகங்களை வெளியிடும் சூழ்நிலை இங்கு உள்ளதா? புத்தகத் திறனாய்வுகளும், அறிமுகங்களும் வாசகர்களைச் சென்றடைகின்றனவா? நல்ல புத்தகங்களை வாங்கிப் படிக்கும் பழக்கம் மக்களிடையே உருவாக என்ன வழி?

நம் ஓய்வு நேரம் எப்படிக் கழிகிறது? ஜனரஞ்சகக் கலைகள், வெளிப்பாடுகள் பொதுமக்களின் ஈடுபாடுகளையும், சாதாரண மக்களின் மதிப்பீடுகளையும் மாறுதலுக்கான வேட்கையையும் வெளிப்படுத்த வல்லன. வேண்டாத சமூகப் பழக்க வழக்கங்களுக்கு எதிரான உணர்வுகளை மக்களிடையே உருவாக்கவும் பொழுதுபோக்குச் சாதனங்களைப் பயன்படுத்தலாம். பல்வேறு கலைகளும் ஒரு சமூகத்தின் திசையைச் சுட்டுவதாய் அமையும். இசை, நடனம், திரைப்படம், நாடகம் போன்ற கலைப்பிரிவுகளும் நம் சமூகம் செல்லும் பாதையென்று எதைக்காட்டி நிற்கின்றன?

வானொலியும் தொலைக்காட்சியும் பொழுதுபோக்கிற்கும் தகவல் தொடர்பிற்கும் மிக முக்கியச் சாதனங்களாகி விட்டன. இவை எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன? கிராமங்களையும் சென்றடைகிற வாய்ப்புப் பெற்ற இந்தச் சாதனங்கள் அறிவு வளர்க்கும் வகையில் பயன்படுத்தப் படுகின்றனவா அல்லது ஆளுங்கட்சியின் பிரச்சாரக் கருவிகளாகவும், மக்களின் பிரச்சினைகளை மறக்கடிக்கிற கற்பனை விநியோகக் கருவிகளாகவும் பயன் படுகின்றனவா?

இறுதியாக, விற்பனையாகும் பொருள்கள் தரம் பற்றிய புதிய உணர்வு உண்டாக்கப் படவேண்டும். உபயோகிப்பாளர்களின் நலன்கள் காப்பாற்றப் படவேண்டும். இதற்கு நுகர்வோரின் இயக்கங்கள் அங்கீகாரம் பெறுவது அவசியம். நுகர்வோர் இயக்கத்தின் இன்றைய நிலை தமிழ்நாட்டில் என்னவாக இருக்கிறது? இது எந்தத் திசையில், எவ்வாறு முன்னேறுகிறது?

ஒரு சாதாரணக் குடிமகனின் தினசரி வாழ்வைத் தொடும் மேற்கண்ட கேள்விகள் எங்கள் மனத்தில் எழுந்தன. ஒரு பரந்த அறிவு செறிந்த மனமோ, இன்னும் பல முக்கியமான கேள்விகளை ஒவ்வொரு துறையிலும் கேட்க இயலும்.

அடிப்படையில், ஆயிரக்கணக்கான மக்கள் சுதந்திரத்துக்குப் பிந்திய தமிழ்நாட்டில் வளமை பெற்றிருக்கிறார்கள். இன்னும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் முறைக்காகக் காத்திருக்கிறார்கள்.

நாம் பல துறைகளில் முன்னேறியிருக்கிறோம். இத்துறைகளில் மேலும் முன்னேறுவதற்குத் தற்மயம் நமது முன்னேற்றம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைக் கணக்கெடுக்க வேண்டும். சில கலாச்சாரக் கூறுகளை நாம் கட்டிக் காப்பாற்ற வேண்டியவர்களாக இருக்கிறோம். மற்றும் சில கலாச்சாரக் கூறுகளையே, உடைத் தெறிந்துவிட்டு நம் கலாச்சாரத்திற்குப் புதிய உயிர் ஊட்ட வேண்டும். 21ஆம் நூற்றாண்டோ வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது.

அந்த நூற்றாண்டுக்கான புதிய பார்வையை, புதிய இலக்கை, புதிய கோட்பாட்டை உருவாக்குவதற்காகத் தமிழ் மாநிலத்தின் இன்றைய நிலையை ஆராய்ச்சி செய்யக் கடமைப் பட்டிருக்கிறோம். தங்களுடைய வாழ்வு மலர்ச்சிக்காக வெகுகாலமாகக் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் அடிப்படைத் தேவைகள் முழுமை பெறவேண்டும்.

நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கம் மேற்கண்ட கேள்விகளை மறு ஆய்வு செய்ய முனைந்தது. இந்த மறு ஆய்வுகள் இத்துறைகளில் பண்பட்ட ஆய்வாளர்களால் செய்து முடிக்கப்பட்டிருக்கின்றன. நமது அனைத்துக் கேள்விகளுக்கும் பதில்கள் இந்த ஆய்வுகளில் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், இவ்வாய்வுகளில் அந்தக் கேள்விகள் தொடர்பான வரலாற்று ரீதியான பார்வையும், உண்மையான பிரச்சினைகளில் சிலவும் வெளிச்சத்துக்கு வரும் என்பதே எமது நம்பிக்கை.

அச்சமயம், இந்தக் கருத்துக்களை மேலும் விவாதிப்பதும், பிரச்சினைகளை மக்கள் அறியப் பரவலாக்குவதும், இந்தக் கட்டுரைகளைப் படிப்பவர்களுக்கும், மக்கள் தொடர்புத் துறையில் உள்ளவர்களுக்கும், மற்றும் பொறுப்பு வாய்ந்த தமிழ்க் குடிமக்களுக்கும் உரித்தான கடமை.

இந்த உரையாடல்களும், விவாதங்களும், மேலும் முக்கியமான பிரச்சினைகளை அடையாளம் கண்டுகொள்ள இட்டுச் செல்லும் என்பதே எமது நம்பிக்கை. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும், அரசாங்க அதிகாரிகளும், தெள்ளத்தெளியத் தெரியும் பிரச்சினைகளைக் கண்டு, அவற்றைத் தீர்க்க முழுமுயற்சி எடுப்பின், நமது முன்னோர்களின் தியாகங்கள் வீண்போகவில்லை எனக் கொள்ளலாம். இதுவே நம் ஜனநாயகம் முதிர்ச்சியடைய வழியாகும்.

முருகானந்தம்:
இயைபுப் பொறியியல் துறையில் ஆய்வாளராய்ப் பணி புரிந்து வருகிறார். நியூ ஜெர்சி தமிழ்ச் சங்க ஆயுள் உறுப்பினர். இத்திட்ட அமைப்பாளர்.
இராஜாராம்:
கனெக்டிகட்டில் கணிப்பொறித் துறையில் பணி புரிகிறார். எழுத்தாளர். கவிஞர். இலக்கியத்தையும்,த தமிழ்ச் சமூகத்தையும் நவீனமாக்கும் முயற்சிகளில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ளவர்.

You Might Also Like