Star Mountain

My travels and other interests

கல்விதமிழ்நாடு நேற்று இன்று நாளை

தமிழ்ப் புத்தகங்கள் (1997)

தமிழ்ப் புத்தகங்கள்
ச. மெய்யப்பன்
மணிவாசகர் பதிப்பகம்
சிதம்பரம் – 608 001

இந்திய மொழிகளில் தொன்மைமிக்கது தமிழ்மொழி. மூவாயிரம் ஆண்டுகளாக இலக்கிய இலக்கணச் செழுமை பெற்றுள்ளது. 19-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் புதுமைக் கவிஞர் பாரதியார் தமிழ்மொழிக்குப் புதிய பொலிவும் வலிவும் சேர்த்தார். பாரதிக்குப் பின் தமிழ் வெளியீட்டின் போக்கும் நோக்கும் மாறியது. இந்தக் கட்டுரையில் தமிழ் வெளியீடு பற்றி 5 நிலைகளில் ஆராயப்பெறுகிறது.

  1. பொருள்
  2. வடிவம்
  3. எழுத்தாளர்
  4. பதிப்பகங்கள்
  5. பயன்

தொடக்கத்தில் கிறித்துவ, சைவ, வைணவ நூல்கள் குறைந்த அளவில் அச்சிடப்பெற்று மிகக் குறைந்த விலையில் மிகச் சிலருக்கு விற்பனை செய்யப்பெற்றது. 1900-ல் அல்லையன்ஸ் கதை நாவல் வெளியிடத் தொடங்கியது. 1920-ல் சைவ சிந்தாந்த நூற்பதிப்புக்கழகம் தோன்றி தமிழ் வெளியீட்டில் முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த பதிப்பு நெறிகளை மேற்கொண்டது. பழந்தமிழ் இலக்கியங்கள் இலக்கணங்கள் முதலியவற்றைப் பெருமுயற்சி செய்து பதிப்பித்தது. இதைத் தொடர்ந்து சைவ சித்தாந்த சமாஜம் மூல நூல்களைப் பிழையற்ற செம்பதிப்புகளாக மிக்க குறைந்த விலையில் பதிப்பித்து. 30-களில் வை. கோவிந்தன் அவர்களால் நிறுவப்பெற்ற “சக்தி காரியாலயம்” தமிழ்ப் புத்தக வெளியீட்டில் புரட்சி செய்தது. புத்தகத்தின் உள்ளீடு மாறிற்று. உலக நாடுகள் பற்றிய செய்திகளும் இலக்கியம் அல்லாத பொருள்களும் புதிய புத்தகங்களுக்கு உள்ளீடாயின. நூலின் தாள், அச்சு, அட்டை, ஓவியங்கள், நூல்கட்டு வெளிநாட்டுத் தரத்திற்கு ஒப்ப அமைந்தது குறிப்பிடத்தக்கது. சக்தி வெளியீடுகள் பென்குவின் நூல்கள் போல வடிவங்கள் பெற்றிருந்ததால் மக்களிடம் வரவேற்பைப் பெற்றன. அவர் வழியில் சின்ன அண்ணாமலை தமிழ்ப்பண்ணையைத் தோற்றுவித்து, சுதந்திர வேள்விக்கான இடுபொருள்களாக, தேசிய எழுச்சிக்கு மிகவும் பயன்தரும் மிகச் சிறந்த நூல்களைப் பல்வேறு வண்ணங்களில் வகை வகையாக வெளியிட்டுப் பேரும் புகழும் பெற்றார்கள். 40-களில் பாரிநிலையம் தொடங்கி புதிய நூல்களின் தாயகமாக அளப்பரும் பணிகளைச் செய்யத் தொடங்கிவிட்டது. கழகம் பழந்தமிழ் நூல்களுக்குக் காப்பகமாயிற்று. புதிய நூல்களுக்குப் பாரிநிலையம் மிகுந்த வாய்ப் பினை அளித்தது. இவ்விரு பெரு நிலையங்களே தமிழ் நூல் வெளியீட்டின் அடையாளங்களாகக் கருதப்பெற்றன. 50-களில் வானதி, அருணோதயம் முதலிய பதிப்பகங்கள் தோன்றி சிறுகதை, நாவல், கட்டுரை நூல்கள் பல்வகைகளில் பல்கிப் பெருக வழிவகுத்தன. விடுதலைக்குபின் இந்திய மொழிகள் வீறுகொண்டன. தமிழ் வெளியீட்டுத் துறை புதிய திசைநோக்கித் தன் பயணத்தைத் தொடங்கியது.

தென்னிந்திய புத்தக டிரஸ்டின் சாதனை மிகப் பெரியது. முற்றிலும் புதிதான பொருள்கள் பற்றிய நூல்கள் வெளியிடத் திட்டம் தந்ததோடு நிதியும் தந்தது. உலகத்து அறிவு நலங்களையெல்லாம் மிகக் குறைந்த விலையில் பெற அது வாய்ப்பு அளித்தது. ஐநூறு, ஆயிரம் என எண்ணிக்கையில் அச்சிடப்பெற்ற நூல்கள் 5000 ஆக உயர்ந்தது. தமிழ்ப் பதிப்புலகத்திற்குப் புதியதொரு ஆற்றலையும், வீச்சையும், வலிமையையும் தென்னிந்திய புத்தக டிரஸ்ட் நல்கிற்று.

முன்பு சைவசித்தாந்த சமாஜம் மூலப்பதிப்புகளை வெளியிட்டது போல 50-களில் தோன்றிய மார்ரே ராஜம் தமிழ் இலக்கியம் அனைத்தையும் மிகச் செவ்விய முறையில் வெளியிட்டு, தமிழ் இலக்கியத்தின் பரப்பையும், பண்பையும் தமிழ்கூறும் நல்லுலகு அறியும்படி செய்தது.

கழகம்,
சமாஜம்,
சக்தி
தமிழ்ப்பண்ணை
பாரி
தமிழ்ப் புத்தகாலயம்
வானதி
தென்னிந்திய புத்தக டிரஸ்ட்
மர்ரே

இவை, தமிழ் புத்தக வெளியீட்டின் ஒவ்வொரு காலகட்டத்தையும் அடையாளம் காட்டுவன.
பல்கலைக்கழகங்களும், நிறுவனங்களும் புத்தக வெளியீட்டில் மாபெரும் சாதனங்களை நிகழ்த்தியுள்ளன.
சென்னைப் பல்கலைக்கழகக் வெளியீடுகள் – லெக்சிகன் என்னும் தமிழ்ப் பேரகராதி;
சிதம்பரநாதச் செட்டியார் தொடுத்த ஆங்கிலம் – தமிழ் அகராதி.
அண்ணாமலைப் பல்கலைக்கழக கம்ப- ராமாயணப் பதிப்பு; திருவருட்பா உரை.
மதுரைப் பல்கலைக்கழக திருக்குறள் உரைவளம்; தொல்காப்பிய உரைவளம்.
இவை யாவும் அளவாலும் பயனாலும் மிகப்பெரிய வெளியீடுகள்.

25 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அடிப்படை நூல்களையும், திறனாய்வு நூல்களையும் வெளியிட்டுத் தான் எடுத்துக்கொண்ட பணியினை மிகச் சிறப்பாக நிறைவேற்றி, புத்தக உலகிற்குப் புத்தொளி நல்கியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தமிழ்ப் பல்கலைக்கழகம் 250 நூல்கள் வெளியிட்டு, புத்தக வெளியீட்டில் முத்திரை பதித்துள்ளது. வாழ்வியல் களஞ்சியம் 13 தொகுதிகள், அறிவியல் களஞ்சியம் 10 தொகுதிகள், தமிழ்ப் பேரகராதி 3 தொகுதிகள் வெளியிட்டுச் சாதனை படைத்துள்ளது. உ.வே. சாமிநாத அய்யரின் செம்பதிப்புகளின் உரிமை பெற்று அவற்றை மிகச் சிறந்த முறையில் பதிப்பித்து இந்தத் தலைமுறைக்குத் தன் பங்களிப்பை அளித்து தன்னேரிலாத் தமிழ்ப் பணி செய்து வருகிறது. அங்குப் பணியாற்றிய பேரறிஞர்கள் நூல்களையும் ஆராய்ச்சி நூல்களையும் மிகுந்த பொறுப்புணர்வுடன் வெளியிட்டுப் பெருமை பெறுகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக ஆசியவியல் கழகம் தனக்கெனத் தனிநெறி வகுத்து, தமிழின் பன்முக நலன்களைத் தம் சிறந்த வெளியீடுகள் மூலம் பாரறியப் பரப்பி வருகிறது.

விடுதலைக்குப் பின் ஏற்பட்ட புத்தக வெளியீட்டில் இந்த 3 நிறுவனங்களும் வெவ்வேறு வழிகளில், வகைகளில் புத்தக வெளியீட்டிற்கு ஆக்கம் சேர்த்துள்ளது வரலாற்று உண்மையாகும். இலாப நோக்கின்றி ஆராய்ச்சி நூல்கள் வெளியிடும் இந்த நிறுவனங்கள் புத்தக வெளியீட்டுத் துறைக்கு நலம்பல செய்துள்ளன.

விடுதலைப் போராட்டக் காலத்தில் பதிப்பாளர்கள் தியாக உணர்வுடன் தேசிய உணர்வை ஊட்டக்கூடிய உணர்ச்சியினை எழுப்பக் கூடிய அரிய பல நூல்களை வெளியிட்டுத் தம் பங்களிப்பைச் செய்தனர்.

60-களில் தமிழ்ப் புத்தக வெளியீடு முற்றிலும் புதிய பரிமாணத்தைக் கண்டது. பூம்புகார் பிரசுரம் புத்தகத்தின் புறவடிவத்தை முற்றிலும் மாற்றியது. சிவகங்கையில் கவிஞர் மீராவால் உருவாக்கப் பெற்ற அன்னம் வெளியீடு முற்றிலும் புதிய தன்மையது. நூலின் கருப்பொருள்கள் காலத்திற்கேற்றவை. வெளியீட்டுத் தரத்தில் சிறந்தவை. வித்தியாச மானப் படைப்புகளின் விடியல் மீராவின் வெளியீடுகள். லெட்சுமி அவர்களால் தொடங்கப் பெற்ற வாசகர் வட்டம் தனித்தன்மை வாய்ந்த நல்ல நூல்கள் பலவற்றை வெளியிட்டுப் புது முயற்சிக்கு வழிவகுத்தது.

அடுத்துத் தோன்றிய கிரியா, புத்தகத்தின் உள்ளடக்கத்திலும் வடிவத்திலும் கருத்துச் செலுத்தி அழகுணர்ச்சியுடன் வெளியிட்டதுடன் விலையை நிர்ணயிப் பதிலும் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது.

தொடக்கத்தில் குடிசைத் தொழில் போல் இருந்த பதிப்பகங்கள் விடுதலைக்குப் பின் 50, 60-களில் விற்பனை நிறுவனங்களாக மாறி, ஆயிரக்கணக்கில் புதிய வெளியீடுகளை வெளியிடுகின்றன. 100 பதிப்பகங்கள் வெளியிடும் 1000 நூல்களில் மிகச் சிறந்த நூல்களாக 100 நூல்களைக் கூடத் தேர்ந்து எடுப்பது கடினம் என்பது திறனாய் வாளர்களின் கணிப்பு. இதற்கிடையில் கல்லூரிப் பேராசிரியர்கள், முதுநிலை பயின்றவர்கள் புத்தக வெளியீட்டில் முனைந்தனர். ரா. சீனிவாசன், ச.வெ. சுப்பிரமணியன், மீரா, வர்த்தமானன் பதிப்பகம் ஸ்ரீ சந்திரன், ச. மெய்யப்பன், குழ. கதிரேசன், காவ்யா சண்முகசுந்தரம் முதலியோர் மிகுந்த கவனத்துடன் நல்ல நூல்கள் பலவற்றை வெளியிட்டு இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் 6-களில் நவீன இலக்கியம் பாடமாக ஏற்றுக்கொள்ளப் பெற்றபின் ஆய்வு நூல்களும் திறனாய்வு நூல்களும் பல்கின. கடந்த 50 ஆண்டுகளில் திருக்குறள் மூலம், திருக்குறள் பரிமேலழகர் உரை, திருக்குறள் தெளிவுரை, பாரதியார் கவிதைகள் முதலியன நூற்றுக்கணக்கான பதிப்புகளைப் பெற்று இலட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

புத்தக வெளியீட்டில்
பாரதி
பாரதிதாசன்
கண்ணதாசன்

முதலிய கவிஞர்களின் நூல்களும் திரு.வி.க., மறைமலை அடிகள், பாவாணர் முதலிய அறிஞர்களின் நூல்களும், புதுமைப்பித்தன், அண்ணா, ஜெயகாந்தன் முதலிய படைப்பாளர்களின் நூல்களும் பல பதிப்புகள் பெற்றுப் பலரால் பேசப் பெற்றுள்ளன.

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட மு.வ. திருக்குறள் தெளிவுரை 131 பதிப்புகளைக் கண்டு, பலகோடிப் பிரதிகள் விற்பனையாகி உள்ளன. திருக்குறளின் பெருமையும் மு. வரதராசரின் செல்வாக்கும், கழகத்தின் தொடர்ந்து அச்சிட்டு வழங்கும் முறையும், தமிழ்ப் புத்தக விற்பனை உலகில், வானை முட்டிய தனிப்பெரும் சாதனையை நிகழ்த்தியது.

கண்ணதாசன் எழுதிய வானதி வெளியிட்ட ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ 53 பதிப்புகள் பெற்றுப் புத்தக விற்பனையில் ஒப்பரிய சாதனை படைத்துள்ளது. சிந்தனையாளர் எம். எஸ். உதயமூர்த்தி எழுதிய ‘எண்ணங்கள்’ என்னும் நூல் நோக்காலும் போக்காலும், கருத்தாலும் கூறும் முறையாலும் நல்ல நூல் விற்பனையில் குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்றுள்ளது.

கல்கி, அகிலன், நா. பார்த்தசாரதி, சாண்டில்யன், லெட்சுமி, மு.வ. ரமணி சந்திரன், பாலகுமாரன், பிரபஞ்சன் முதலியோருடைய படைப்புகள், பல்லாயிரம் படிகள் விற்பனையாக, பல லட்சக்கணக்கான வாசகர்களால் பெரிதும் விரும்பிப் படிக்கப் பெறுபவை.

இடையில் சமையல், சோதிடம், மருத்துவம் என்ற பெயரில் இரண்டாம் தர நூல்கள் அதிகம் வெளியாயின.

  1. படைப்பாளர்களும், எழுத்தாளர்களும் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் நூல் எழுதாமை,
  2. பதிப்பகங்களுக்கென்றுப் பதிப்பாசிரியர் (Editor) இல்லாதது,
  3. விற்பனை வாயில்கள் இல்லாதது,
  4. புதிய நூல்களுக்குப் போதிய விளம்பரமின்மை,
  5. நிறையப் பணம் செலவிட்டு இலட்சக் கணக்கில் பத்திரிக்கை வாங்கும் வாசகர்கள் புத்தகம் வாங்காமை ஆகிய 5 பெருங்குறைகள் தமிழ்ப்புத்தக வெளியீட்டிற்குள்ள தடைக் கூறுகள் ஆகும்.

விடுதலைக்கு முன் தேசிய எழுச்சி பாடுபொருளாக அமைந்தது. விடுதலைக்குப் பின், தமிழ் இயக்க உணர்வும் இனமான உணர்வும் பாடுபொருளாயின.

இந்த நூற்றாண்டில் மூன்று வகையான மொழி நடைகளைத் தமிழ் உரைநடை கண்டுள்ளது. முதலில் அளவுக்கு மீறிய வடசொல் கலந்த நடை – வ.வே.சு. ஐயர் காலம்.

தனித்தமிழ் வீறுபெற்ற காலம் – மறைமலையடிகள், பாவாணர், பெருஞ் சித்திரனார் காலம்.

அளவுக்கு மீறிய ஆங்கிலச் சொற்கள் கலந்த பேச்சுவழக்குப் பெருகிற நடை – சுஜாதா, சிவசங்கரி, வாசந்தி, ஆங்கிலச் சொற்களே அன்றி ஆங்கிலத் தொடர்களையும் ஆங்கில உரையாடல்களையும் கலந்த அலிநடை. இந்த மூன்று நடைகளின் இயல்பினையும் திறனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

இலக்கிய வடிவங்கள் என்று எடுத்துக் கொண்டால்,
மரபுக் கவிதை
சிறுகதை
நாவல்
கட்டுரை
புதுக்கவிதை

என்ற வடிவங்கள் பெருவாழ்வு பெற்றுள்ளன. அச்சுமுறை வளர்ச்சியில் பிற நாட்டுப் புத்தக வெளியீடுகள் உச்சநிலையை அடைந்து பகல்பொழுதை எட்டிவிட்டன. தமிழ்ப் புத்தக உலகம் இப்பொழுதுதான் விடியலைக் காண முயல்கிறது. தெளிவான கொள்கையுடன் தமிழ்ப் பதிப்பகங்கள் இலக்கினை அடைய பெருந்தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது. தெளிவான இலக்குடன் குறிக்கோள்களை எட்டமுயலும் பதிப் பாளர்கள் மிகச் சிலராவது இருப்பது ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதியளிக்கிறது.

ச. மெய்யப்பன்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர். ‘பதிப்புச் செம்மல்’. மணிவாசகர் பதிப்பகம் எனும் பதிப்பகத்தின் வழி பல அரிய நூல்களை வெளியிட்டு வருகின்ற அன்பர். அறிஞர் வ.சுபா. மாணிக்கம் அவர்களின் எழுத்தின் மேலும், அவரின் மேலும் மிகுந்த அன்புடையவர். தென்னிந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பல அறக்கட்டளைகளை நிறுவியுள்ளார்.

You Might Also Like