Star Mountain

My travels and other interests

சமூகம்தமிழ்நாடு நேற்று இன்று நாளை

நலம் பேணல் (1997)

நலம் பேணல்
சு. நரேந்திரன்
பொதுஅறுவை மருத்துவத் துறை,
தஞ்சை மருத்துவக் கல்லூரி,
தஞ்சாவூர்.

சுதந்திர இந்தியாவின் சுகாதாரக் கொள்கை ஆங்கில மருத்துவ அடிப்படையில் 1943இல் அமைக்கப்பட்ட போர்க் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் பல தேசிய நலத்திட்டங்களை வகுக்கப்பட்டபோது அமைக்கப்பட்டது. இது தொற்று நோய் ஒழிப்பு, ஊட்டச்சத்து மேம்பாடு, சுற்றுச்சூழல் சுகாதார பாதுகாப்பு, மருத்துவப்பணி, மக்கள் தொகைக் குறைப்பு ஆகிய பிரிவுகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் தொடர்பாக மலேரியா ஒழிப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டு இந்நோயினால் 1965இல் இறப்பு இல்லை என்கின்ற நிலையை அடைந்தது, எனினும் தற்பொழுது தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் இது ஒரு நலப் பிரச்சினையாக உள்ளது. இதே போல் தேசியக் காச நோய்த் திட்டத்தில் இறப்பு குறைவாக இருப்பினும், ஏழ்மை நீண்டகால மருத்துவம் ஆகியவைகளால் புதிய நோயாளிகளின் தொகை மிகவும் குறைந்தபாடில்லை. தொழுநோய் ஒழிப்பு 1955இல் துவங்கி சல்போன் மருந்து கொடுக்கப்பட்டுத் தோல்வியைக் கண்டபின், கூட்டு மருந்து மூலம் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதேபோல் யானைக்கால் நோய் ஒழிப்பு 1955லிருந்து தொடர்ந்து நடைபெற்றாலும் சுற்றுப்புறச்சூழல் மாசினால் நோய்க் கட்டுப்பாடு பிரச்சனையாகவே உள்ளது. மூளைக்காய்ச்சல் அவ்வப்பொழுது தலைத்தூக்குகிறது. 1975இல் பெரியம்மையும், 1987 இல் நரம்புச் சிலந்தியும் ஒழிக்கப்பட்டுள்ளன. பால்வினை நோய்களுடன், எயிட்ஸ் நோயும் பல மாநிலங்களை விடத் தமிழகத்தில் அதிகமாக உள்ளது.

ஊட்டச்சத்துத் திட்டத்தின் மூலமும், முதியவர்களுக்குக் கண்ணொளி வழங்கும் திட்டத்தின் மூலமும் பார்வையிழப்புச் சதவீதம் குறைந்து வருகிறது.

குழந்தைகள் வளர்ச்சி மேம்பட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்புத் திட்டம், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்துத் திட்டம், டோனிடா திட்டம், சத்துணவுத் திட்டம் ஆகியவைகளின் மூலம் தாய், சேய் இறப்பு விகிதமும் குறைந்துள்ளன. தடுப்பு ஊசி மூலம் தொற்று நோய்களும் குறைந்துள்ளன. தேசிய குடும்ப நலத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் கேரளாவிற்கு அடுத்த படியாகத் தமிழகம் பிறப்பு விகிதத்தில் குறைந்து விளங்குகிறது. பாதுகாக்கப்பட்ட குடிநீர்த் திட்டம் மற்றும் சுகாதாரம் மேன்மையடைந்திருந்த போதிலும் நகர், கிராமப்புற வேறுபாடு நிறைந்தே காணப்படுகிறது.

சில மாநிலங்களைவிடக் குறைவாகவே மருத்துவர், செவிலியர் விகிதம் உள்ளது. புற்றுநோய் மருத்துவமனைகளுடன் பெரிய முதலீட்டுத் தனியார் மருத்துவமனைகளும் இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகமாக உள்ளன.

ஆரம்பச் சுகாதார நிலையம் தடுப்பு மருத்துவத்திற்காக  ஏற்படுத்தப்பட்ட போதிலும் மருத்துவச் சேவையை அதிகமாக மேற்கொள்வதால் தடுப்புமுறைத் திட்டங்கள் தீவிரமாக நடைபெறவில்லை.

மேற்கூறிய பிரச்சினைகளுக்குத் தீர்வாக மக்களின் வாழ்க்கைத்தரம், கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டின் மூலம் தரமான சூழலை ஏற்படுத்த முடியும். மேலும் சுகாதார  பாதுகாப்புத்  திட்டத்தில்  கவனம் செலுத்தி, குறுகிய அரசியல் பார்வைகளை நீக்கி, ஆங்கில மருத்துவத்துடன் தமிழ் மருத்துவத்தையும் இணைத்துச் செயல் வடிவம் கொடுக்க நலம் பேணல் சிறப்பாக அமையும்.

நலம் பேணுதல் என்பது கருவிலிருந்தே ஆரம்பமாகும் ஒரு செயலாகும். பண்டைத் தமிழகத்தில் அனுபவ அடிப்படையில் நோய்களுக்கு மருத்துவம் செய்து வந்தனர். ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் ஆங்கில மருத்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் மனிதனை அச்சுறுத்தும் பல நோய்களுக்குத் தீர்வு கிடைத்தது. இவற்றின் விளைவாக நலம் பேணுதல் அதிக முக்கியத்துவம் பெற்றது. இந்தியாவில் நலம் பேணுதலைப் பரவலாக்குவதற்காக ஆங்கிலேயரால் 1943 இல் “போர்க் குழு” அமைக்கப்பட்டது.

இந்தியா விடுதலை அடைந்த பின் ‘போர்க் குழு’’ அறிக்கையின் படிச் செயல்படத் தொடங்கியது. இதன் கீழ்க் “கருவிலிருந்து கல்லறை வரை” என நலவாழ்வுத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதன் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த மருத்துவச் சிகிச்சை என்பது “நோய்த் தடுப்புச் சிகிச்சை”, “நலம் பேணல்”, என்று பிரிக்கப்பட்டது. மருத்துவத்தைத் தேடிச் சென்ற நோயாளிகளுக்கு மட்டும் மருத்துவம் என்ற நிலை மாறி நோயாளிகளுக்கு அருகிலேயே மருத்துவ வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது.  மக்கள், மருந்து, மருத்துவச் சேவை என்ற பிரிந்த நிலை மாறி இவையாவும் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கின.  வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே என்றிருந்த மருத்துவம் அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கும் நிலை ஏற்பட்டது.

பிறப்பு விகிதம், இறப்பு விகிதம், சிசுமரணம் ஆகியவை 1970 முதல் தமிழ்நாட்டின் கிராமங்களிலும், நகரங்களிலும் எந்த அளவு உள்ளன என்பது அட்டவணை 1 இல் தரப்பட்டுள்ளது. இந்தப் புள்ளி விவரங்கள் இந்தியாவின் விழுக்காடுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளன. பிறப்பு விகிதம் 1970இல், 30 ஆக இருந்தது. இவ் விகிதம் 1980 இல் 27.9 ஆகவும், 1990 இல் 21.6 ஆகவும், 1992 இல் 20 ஆகவும் குறைந்து கொண்டே வந்துள்ளது. இந்தியாவின் பிறப்பு விகிதம் இதே காலத்தில் குறைந்த போதிலும் தமிழ்நாட்டின் விகிதத்தைவிட அதிகமாகவே உள்ளது. 1970இல் 36.8 ஆக இருந்த இந்த விகிதம் 1992இல் 29.2 ஆகவும் பிறகு 1994 இல் 28.6 ஆகவும் குறைந்துள்ளது.

அட்டவணை 1 – மக்கள் தொகையியல் இயல்புகள்

ஆண்டு தமிழ்நாடு பிறப்பு விகிதம் 1000 இந்தியா

பிறப்பு

விகிதம்

இறப்பு

விகிதம் தமிழ்நாடு – 1000

இந்தியா

பிறப்பு

விகிதம்

சிசுமரண

விகிதம் தமிழ்நாடு-1000 பிறப்பு

இந்தியா

சிசு

மரண

விகிதம்

கிராமம் நகரம் மொத் தம் கிராமம் நகரம் மொத்தம் கிராமம் நகரம் மொத்தம் மொத்தம்
1970 32.6 23.8 30.0 36.8 18.1 9.4 15.6 15.7 134 90 125 129
1975 32.7 25.9 30.7 35.2 17.5 9.0 15.0 15.9 129 65 112 140
1980 29.4 24.4 27.9 33.3 12.4 8.3 11.2 12.4 103 64 93 114
1985 25.2 23.8 24.7 32.9 10.9 6.9 9.5 11.8 95 53 81 97
1990 21.8 21.1 21.6 30.7 9.6 6.5 8.5 9.7 70 37 59 80
1991 20.8 20.8 20.8 29.5 9.5 7.6 8.8 9.8 65 42 57 80
1992 21.1 20.0 20.0 29.2 9.2 6.7 8.4 10.1 66 42 58 79
1994 19.6 18.0 19.0 28.6 9.0 5.9 7.9 9.2 64 48 59 73

பிறப்பு விகிதம் போல் இறப்பு விகிதமும் இந்தக் காலத்தில் குறைந்துள்ளது. ஆனால் இந்தியாவின் விகிதத்துடன் ஒப்பிடும் போது வேறுபாடு  காணப்படுகிறது. 1970 இல்  ஒரே அளவிலிருந்த இவ்விகிதம் (15.6 – 15.7) 1980இல் வேறுபட்டது. தமிழ் நாட்டின் இறப்பு விகிதம் 11.2 ஆகவும் இந்தியாவின் இறப்பு விகிதம் 12.4 ஆகவும் குறைந்துள்ளது. இவ்விழுக்காடு 1994 இல் தமிழ்நாட்டில் 7.9 ஆகவும் இந்தியாவில் 9.2 ஆகவும் குறைந்து காணப்படுகிறது. அதன் பின்னர் இந்தியாவின் விகிதம் அதிகரித்த போதும் தமிழ்நாட்டின் விகிதம் குறைந்து கொண்டே வந்துள்ளது.

சிசு மரணவிகிதமும் 1970 முதல் 91 வரை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்துள்ளது. ஆனால் 1994 இல் தமிழ்நாட்டில் சிசு மரணம் 1000க்கு 59 விகிதத்தில் அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்திய விகிதம் குறைந்துள்ள அளவைக் காட்டிலும் தமிழ் நாட்டில் மிக அதிக அளவில் குறைந்துள்ளது. (அட்டவணை 1) இந்த விகிதம்  வளர்ச்சி பெற்ற நாடுகள் 14 ஆகும். சிசு மரண விகிதம் குறைவாக உள்ள இந்திய மாநிலங்களில் கேரளா முதல் இடத்திலும், பஞ்சாப் இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு 3 வது இடத்திலும் உள்ளன. இதே போல் மக்களின் சராசரி வாழ்நாள் அளவு வளர்ச்சி பெற்ற நாடுகளில் 74.5 ஆண்டுகளாக உள்ளது. இது தமிழ்நாட்டில் 61 ஆண்டாகவும் கேரளாவில் 70 ஆண்டாகவும் உள்ளது.

ஆண் பெண் விகிதம்

ஆண்களை விடப் பெண்கள் குறைவாக இருக்கும் மிகச் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். தமிழ் நாட்டில் 1951 லிருந்து 1991 வரை பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாகவே இருந்தது. அதற்குப் பின்னர் தான் இந்த எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது. 1991 இல் 972/1000 ஆகும்.

தமிழ்நாட்டில் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் இந்தியாவின் அளவோடு ஒப்பிடும் போது அதிகமாக உள்ளது. எனினும், காலம் செல்லச் செல்லக் குறைந்துள்ளது. இதைத் தடுக்கும் விதமாகப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கையாக 1990இல் “தொட்டில் குழந்தைத்” திட்டம் உருவானது. மேலும், 1992இல் 15 அம்ச குழந்தை நலத்திட்டத்தில் பெண் குழந்தை பாதுகாப்பு அம்சத் திட்டமும் அறிவிக்கப்பட்டது.

ஆண், பெண் விழுக்காடு வேறுபாடு மட்டுமன்றிப், பெண் கல்வியறிவுக் குறைவு போன்ற சில வேறுபாடுகளும், ஆண், பெண்களிடையே காணப்படுகிறது. ஆண்களில் 74.28 சதவிகிதமும் பெண்களில் 52.29 சதவிகிதமும் கல்வியறிவு பெற்றவர்கள் ஆவர்.  அதே போல் ஆண்களில் 17.1 சதவிகிதமும் பெண்களில் 19.6 சதவிகிதமும் ஆரம்பக் கல்வியைப் பாதியில் விட்டு விட்டவர்கள், மேல்நிலைப்பள்ளியில் படிப்பைப் பாதியில் விட்டவர்களில் ஆண்கள் 34.7 சதவிகிதமும் பெண்கள் 43.5 சதவிகிதமும் உள்ளனர்.

நலம் பேணலுக்கான மனித சக்தியும், சேவையும்

பொதுவாக நலவாழ்வின் மேம்பாட்டை மருத்துவமனை, மருத்துவர், மருத்துவப் பணியாளர் மற்றும் மருத்துவமனைப் படுக்கைகளைப் பொருத்தும் அளவிடலாம். மருத்துவர், செவிலியர், மருத்துவமனைப் படுக்கை, ஆரம்பச் சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் ஆகியவற்றிற்கும், மக்கள் தொகைக்கும் உள்ள விகிதமே மருத்துவத் தடுப்பு முறைகள் எவ்வளவு தூரம் மக்களைச் சென்றடைந்து துணை நலம் அளிக்கிறது என்பதை வெளிப்படுத்தும்.

நலம் பேணல் – மருத்துவமனையும் – மருத்துவப் படுக்கையும் : மருத்துவப் படுக்கை விகிதம் தமிழகத்தில் 1984-85 இல் 1:788 ஆக இருந்தது. (1993இல் 408 மருத்துவமனைகளில் 48,780 படுக்கைகள் இருந்தன).

இந்தியா – 1993

1993 மருத்துவமனை படுக்கை
மொத்த எண்ணிக்கை 14192 596201

 இவைகள் 1985 அகில இந்தியாவின் விகிதத்தை விட அதிகமாக உள்ளன. 1:1330 (1987) இப்படுக்கை மக்கள் விகிதம் பெரு நகரங்கள் மற்றும் மாவட்டத் தலை நகரங்களில் அதிகமாகவும், கிராமப் புறங்களில் குறைவாகவும் உள்ளது. இது கிராம மற்றும் நகர் புறத்தில் வாழும் மக்களுக்குக் கிடைக்கும். வேறுபாடுடைய ஏற்றத்தாழ்வான மருத்துவக் குணமளிக்கும் செயற்பாட்டை அறிவிப்பதாகவே உள்ளது.

தமிழ்நாடு கிராம, நகரங்களில் – மக்கள் படுக்கை விகிதம்

1993 கிராமம் நகரம்
  படுக்கை மக்கள் படுக்கை மக்கள்
தமிழ்நாடு 89 4235 319 44545
இந்தியா 4310 122109 9382 474094

 1984-1990 வரை மிகக்குறைந்த அளவு முன்னேற்றம் மருத்துவர், மக்கள் தொகை விகிதத்தில் ஏற்பட்டுள்ளது. இது 1986 இல் 1:6604 ஆகவும் 1990 இல் 1:5862 ஆகவும் உள்ளது. இது முதலியார் கமிட்டி (1962) பரிந்துரையை விட அதிகமாகவே உள்ளது.

ஆண்டுக்காண்டு மருத்துவர்கள் படித்து வெளிவருவது குறைந்த வீதத்திலேயே அதிகரித்துள்ளது. இது மக்கள் தொகைப் பெருக்கத்திற்குப் போதுமானதாக அமைய வில்லை.

 தமிழ்நாடு

ஆண்டு மருத்துவர் மொத்த எண்ணிக்கை
1986 38673
1987 40023
1988 41465
1989 43074
1990 44769
1991 44588

 செவிலியர் – மக்கள் தொகை

செவிலியர் மக்கள் தொகை விகிதம் தமிழகத்தில் 1986 இல் 1:7603.  இதுவே 1990இல் 1:3329ஆக உள்ளது. இது கண்களுக்குப் பளிச்செனப்படும் முன்னேற்றம் ஆகும்.

ஆரம்பச் சுகாதார நிலைய எண்ணிக்கை

தீவிர நடவடிக்கை  காரணமாக ஆரம்பச் சுகாதார நிலையம்  தமிழகத்தில் 1984 இல் பல மடங்கு உயர்ந்து காணப்படுகிறது. இது 1984இல் 234 ஆகவும் 1990இல் 1085 ஆகவும் உயர்ந்து காணப்படுகிறது.

ஆரம்பச் சுகாதார நிலையம், துணைச் சுகாதார மையம் – மக்கள் விகிதம்

இச்சுகாதார நிலையங்கள் 1984இல் 1:216141 மக்கள் விகிதத்திலும் 1987இல் 1:76777 எனவும் இருந்தன. இது போர் கமிட்டியின் (1946) மற்றும்  முதலியார் கமிட்டியின் (1962) பரிந்துரைகளுக்கு ஏற்ப 40,000 மக்கள் சேவை என்று இருத்தல் வேண்டும். இது 1990இல் சற்று முன்னேற்றமடைந்து 1:32590 ஆக, இது தேசிய நலத் திட்டத்தின் கொள்கையின் படி 1:30000 ஆகும். மலைப்பிரதேசம் 1:20000 என்பதற்கிணங்க 1992இல் 1:25620 விகிதத்தை அடைந்துள்ளது. இது போலவே 1990இல் துணைச் சுகாதார மையம் 1:6325 ஆக உள்ளது. இதுவே 1985இல் 1:8754 பிறகு, இது சிறிது முன்னேற்றம் அடைந்து 1992இல் 1:4217 ஆகவும் சற்றுக் குறைந்துள்ளது. இது ஏறத்தாழ போர் கமிட்டிப் பரிந்துரைக்குச் சற்றுக் குறைவாக உள்ளது. இவ்விகிதம் நலம்பேணல் கிராமத்தைச் சென்றடையும் எனும் நம்பிக்கையை அளிப்பதாகவே உள்ளது. இதைச் சரிவர அடைய சராசரியாக ஆரம்பச் சுகாதார நிலையம் சராசரியாகப் 10 கி.மீ. சுற்றளவிற்கும், அதன் துணைச் சுகாதார மையம் 3.5 கி.மீ. சுற்றளவிற்கும் சேவை ஊடுறுவ வேண்டும்.  இந்தியாவின் கணக்குப் படி ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு 60 விழுக்காடு நோயாளிகளின் 1.5 கி.மீ.க்கு உள்ளிருந்தே  வருகின்றனர்.  இந்த நோயாளிகள் கூடுதலாக ஒரு கிலோ மீட்டர் சென்றால் நோயாளிகளின் எண்ணிக்கை 50 சதவிகிதமாகக் குறைகிறது என உலக வங்கி 1990இல் கணக்கெடுத்துள்ளது. தற்பொழுது தமிழகத்தில் சராசரியாக ஆரம்பச் சுகாதார நிலையம் 2.13 கி.மீ. தூரத்திற்கு ஒன்று என்று உள்ளது. (1992). இதுவே 1995 வரை நீடித்து வருகிறது.

மருத்துவச் சேவை குறைபாடுகள்:

இந்தச் சுகாதார நிலையங்கள் தங்கள் நோயாளிகளை – மேல்மட்ட மருத்துவ மனைக்குப் பரிந்துரை செய்து அனுப்பத் தகுந்த அவசரகால ஊர்திகளோ அல்லது தொலைபேசித் தொடர்புகளோ அற்று உள்ளன.

ஆகவே, நோய் ஆரம்பக் கட்டத்தில் கிராம மக்கள் கைவைத்தியம், நாட்டுப்புற வைத்தியம் அல்லது தமிழ்  மருத்துவத்தை நாடிய பிறகு அதில் சுகமடையாத நிலையில் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குக் கூடச் செல்லாது நேரடியாக நகர்புற மருத்துவ மனைக்குச் சென்று விடுகின்றனர்.

தனியார் முழு வசதி படைத்த மருத்துவமனை

நம் நாட்டில் பெருமளவில் மிகுந்த வசதியுடன் ஒரு முழு நிறுவனமாய் ’மருத்துவம் ஒரு கூரையின் கீழ் நடைபெறும்’ என நடைபெறும் மருத்துவ மனைகளும் உள்ளன. இத்தகைய மருத்துவ மனைகள் இந்தியாவிலேயே மிக அதிகமாகத் தமிழ்  நாட்டில் தான் உள்ளன. இது தவிர, சென்னையில் சிறப்புத் தனியார் மருத்துவமனை இரண்டு இதய நோய்களுக்கும், சென்னையிலும், மதுரையிலும் கண் சிறப்பு மருத்துவமனை ஒவ்வொன்றும் உள்ளன.

தனியாகத் தொழில் புரியும் மருத்துவர்கள்

தனியாகத்  தொழில் புரியும் மருத்துவர்கள் இந்தியாவில் சுதந்திரத்தின் பொழுது 50,000. ஆனால் 1991 இல் 394 லட்சம் ஆகும். இதில் பொதுநல மருத்துவர் 70 விழுக்காடும், நகர்புறங்களிலேயே குவிந்து பணிபுரிகின்றனர்.

நல வாழ்விற்கான செலவு

உலகச் சுகாதாரக் கழகம் நல வாழ்வு மேம்பாடு பெற ஒவ்வொரு நாடும் 5 விழுக்காடு அதன் மொத்த தேவை செலவைச் செலவிட வேண்டியுள்ளது  என்கிறது. தற்பொழுது நம்நாடு ஒரு விழுக்காடு செலவிடுகிறது.

நலம் பேணுதலுக்கான தமிழக அரசு செலவினத்தைக் கூர்மையாகப் பார்த்தால் எந்த நிலையில் நல வாழ்வு உள்ளது என்பது தெரிய வரும். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் திட்டத்திற்கும் சேர்த்து 1988-89 மற்றும் 1993-94 வரை ஏற்றத்தாழ்வு நிதி ஒதுக்கீடு சதவீத முறைப்படி ஒரே அளவாக உள்ளது.

அட்டவணை 2 : நலம் பேணலுக்கும் குடும்ப நலனுக்குமான செலவீடு

(இலட்சக் கணக்கில்)

ஆண்டு மருத்துவம் மற்றும்

பொதுச் சுகாதாரம்

குடும்ப நலம்
1988-89 2174        (5.7%) 4355      1.2%
1989-90 26129       (5.5%) 5665      1.2%
1990-91 31593       (5.6%) 6308      1.2%
1991-92 34960       (5.4%) 7334      1.1%
1992-93 40228       (4.7%) 8714      1.0%
1993-94 45469       (5.4%) 10357     1.2%
1994-95 49234       (5.4%) 10590     1.2%

 எல்லோருக்கும் நலவாழ்வு என்பதை அடைய நலம் பேணுதலுக்காக அரசு செலவிட வேண்டியது அவசியமாகும். உலகச் சுகாதார அமைப்பு, ஒரு நாடு அதன் மொத்த தேசிய உற்பத்தியில் 5 சதவிகிதம் நலவாழ்விற்குச் செலவிட வேண்டுமென்று பரிந்துரை செய்துள்ளது. நலம் பேணுதலுக்கு இந்த விழுக்காடு 6 முதல் 12 வரை தேவைப்பட்டாலும், வளரும் நாடுகள் ஒரு விழுக்காடு அல்லது அதற்குக் குறைவாகவே செலவிடுகின்றன. இந்தியாவில் 3 சதவிகிதம் ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் அது சுகாதாரத்திற்கும், குடும்ப  நலத்திற்கும் சேர்த்துச் செலவிடப்படுகிறது. மேலும் நல்வாழ்விற்காகச் செலவிடும் தொகையில் தொற்றுநோய் ஒழிப்புக்கு அதிகம் செலவிடப்படுகிறது. இந்தச் செலவீடுகள் வளர்ந்த நாடுகளுக்கு ஏறத்தாழ தேவையற்றதாகவே உள்ளன.

நலவாழ்வுத் திட்டங்கள் 1948 லிருந்து செயல்பட்டு வந்தாலும் கொள்கையளவில் நலன் பேணல் என்பது 1983இல் தான்  தேசியத் திட்டமாக அறிவிக்கப்பட்டது. விடுதலைக்குப் பின்னர் நலவாழ்விற்காகப் பல தொற்றுநோய் ஒழிப்புத் திட்டங்கள் தீட்டப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தொற்று நோய் ஒழிப்பு

மலேரியா

இந்தியா 1947 ஆம் ஆண்டு விடுதலை அடைந்தபோது எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படிச் சுமார் 750 லட்சம் மக்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டு இதில் 8 லட்சம் மக்கள் இந்நோயினால் மரணமடைந்தனர். இதனால் இந்நோயைத் தடுக்க வேண்டியது அரசின் முக்கிய நோக்கமாக அமைந்தது. மலேரியாவைத் தடுக்க 1953 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் தேசிய மலேரியாக் கட்டுப்பாட்டுத் திட்டம் (NMCP) உருவாக்கப்பட்டுச் செயல்படுத்தப் பட்டது. இத்திட்டத்தின் வெற்றிநடை காரணமாக 1958 முதல் தேசிய மலேரியா ஒழிப்புத் திட்டம் (NMCP) எனப்  பெயர் மாற்றம் பெற்றது. இது மிகவும் வெற்றிகரமாகச் செயல்பட்டதால் 1965இல் மலேரியாவினால் பாதிக்கப்பட்டவர்கள் 1 இலட்சமாகவும், இறந்தவர்கள் எவருமில்லை என்ற நிலையும் ஏற்பட்டது. ஆனால் 1965 முதல் பல நிர்வாக மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் இத்திட்டத்தின் செயல்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டது.  பிறகு 1976 இல் மலேரியா நோய்க்  கண்டவர்களின் எண்ணிக்கை 6.40 இலட்சமாக இருந்தது.  இதில் 5.9 விழுக்காட்டினர் இறந்து விட்டனர்.

அட்டவணை 3 : தமிழகத்தில் மலேரியா நோய் கண்டவர்கள்

ஆண்டு நோயாளிகளின் எண்ணிக்கை மொத்த நோயாளிகளில்
தமிழகம்  % இந்தியா  % தமிழ்நாட்டின்  %
1980 73,381 28,98,140 2.53
1981 71,517 27,01,141 2.65
1982 65,797 21,82,302 3.01
1988 75,953 18,54,830 4.09
1989 90,478 20,17,823 4.48
1990 1,20,029 20,18,783 5.95

 இந்தியாவின் மொத்த எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள நோயாளிகளின் விழுக்காடு அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. இது 1980இல் 2.5 விழுக்காடாக இருந்து 1988இல் 4.09 விழுக்காடாகவும் 1992இல் 7.22 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது. பிறகு 1993 (1,48,057) 1994 (1,04,964), 1995 (92,506) ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் மலேரியா நோய்க் கண்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் ஒழிக்க முடியும் என்ற நிலையில் இல்லை.

யானைக்கால் நோய்

உலகெங்கிலும் உள்ள மக்களில் சுமார் 905 மில்லியன் மக்கள் நோய் தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ளவர்களாக இருப்பினும் 90.2 மில்லியன் மக்களே இந்நோய் உள்ளவர்களாகக் காணப்படுகின்றனர்.

இந்தியாவில் 1953இல் 25 மில்லியன் நபர்களும், 1958இல் 64 மில்லியனும்,  1968இல் 136 மில்லியன்  நபர்களும்  1981இல் 304 மில்லியன்  நபர்களும், 1991இல் 389 மில்லியன்  நபர்களும்  இந்நோய் தொற்றுவதற்கான வாய்ப்புள்ளவர்களாக இருந்தனர். இவர்கள் இந்தியாவில் காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மற்றும் சில வடமேற்குப் பிரதேசங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் தமிழ்நாடு உட்பட மிக அதிகமாகக் காணப்படுகின்றனர்.

இந்நோயுண்டாகக் காரணமான பூச்சிவகை பி. மாலாய் மற்றும் ஃபான்கிராப்டி ஆகியவையாகும். இதில் பி. மாலாய் வகை தமிழகத்தில் இல்லை. ஃபான்கிராப்டி வகை இங்குக் காணப்படுவதால் அவை இந்நோய்ப் பரப்பி வருகின்றன. 1953லிருந்து தொடர்ந்து நோய்த் தொற்றிக் கொள்ளவாய்ப்புள்ளவர் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. 1953இல் 2 மில்லியனாக இருந்து படிப்படியாக உயர்ந்து 1962இல் 4 மில்லியனாகவும் 1976இல் 27.17 மில்லியனாகவும் 1991இல் 35.72 ஆகவும் உயர்ந்துள்ளது. நோய்க் கட்டுப்பாட்டிற்கு நாட்டின் நகரங்கள் மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றன.

அட்டவணை 4 : யானைக்கால் நோய் (மில்லியன் அளவில்)

ஆண்டு நோய் தொற்றிக் கொள்ள

வாய்ப்பானவர்கள்

பூச்சியைத்

தன்னுள்

கொண்

டவர்கள்

நோயுடன்

இருப்

பவர்கள்

நோய் தொற்றிக் கொள்ள

வாய்ப்பானவர்கள்

பூச்சியைத்

தன்னுள்

கொண்

டவர்கள்

நோயாளி
  மொத்தம் கிராமம் நகரம் மொத்தம் கிராமம் நகரம்
1988 33.71 22.60 11.11 2.24 1.19 366.97 270 96.97 25.00 19.0
1989 34.38 23.05 11.33 2.24 1.19 374.30 275.36 98.94 25.00 19.0
1991 35.72 23.95 11.77 2.24 1.19 389.47 286.47 103.00 25.00 19.0

 காசநோய்

காசநோய் இந்தியாவில் பெரிய பொது நலப் பிரச்சினையாக உள்ளது. 1955-58 இல் மொத்த மக்கள் தொகையில் 5 வயதிற்கு மேற்பட்டவர்களில் 1.5 விழுக்காடு காசநோயினால் பாதிக்கப்பட்டவர்கள். இதில் 4 விழுக்காடு நோய்ப் பரப்பும் வாய்ப்பு உள்ளவர்கள் மார்புக் காச நோயாளிகள் 1981இல் 100 இலட்சமும் நோய்ப் பரப்பக்கூடியவர்கள் 25 இலட்சமும் இருந்தனர். தமிழகத்தில் 1962இல் 16 மாவட்டங்களில் காச நோய்க் கழகங்களும் 40 இடங்களில் மருத்துவக் கூடங்களும் ஏற்படுத்தப் பட்டுள்ளன. எனினும் நோய்க் குறையவில்லை.

காச நோயாளிகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதை மேற்காணும் அட்டவணை தெளிவாகக் காட்டுகிறது. இது 1982இல் 1.6 விழுக்காட்டிலிருந்து 1987இல் 3.78 விழுக்காடாகவும் 1992இல் 6.25 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது.

இறந்தவர்களின் விழுக்காடு இதே காலத்தில் 4.2 விழுக்காட்டிலிருந்து 4.87 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது நோயாளிகளின் எண்ணிக்கையைப் போல் அல்லாமல் மிகக் குறைந்த விகிதத்திலேயே அதிகரித்துள்ளது.

அட்டவணை 5 : காசநோயால் தாக்கப்பட்டவர், இறந்தவர்

எண்ணிக்கை – இந்தியா, தமிழ்நாடு ஒப்பீடு

ஆண்டு நோயாளிகள் எண்ணிக்கை இறந்தவர் எண்ணிக்கை
   

 

தமிழ்நாடு

 

 

இந்தியா

மொ.நோயாளி

களில் தமிழ்

நாட்டின்

%

 

 

தமிழ்நாடு

 

 

இந்தியா

மொ.

இறந்தவர்

களில் தமிழ்

நாட்டின்

%

1982 12143 826277 1.6 377 8923 4.2
1987 33695 889525 3.78 476 9375 5.07
1992 58922 944454 6.25 411 8501 4.83

தொழுநோய் :

தொழுநோய் என்பது ஒரு மிகப்பழமையான நோய் ஆகும். இந்தியாவில் 1981 இல் 1000 பேருக்கு 5.7 நபர்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் தொழுநோய் ஒரு மிகப்பெரிய பொது நலப்பிரச்சினை என்பது தெளிவாகிறது. உலகிலுள்ள தொழுநோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளனர் (40 இலட்சம்). மேலும் விடுதலைக்குப் பின்னர்த் தொடர்ந்து தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது என்பதைப் புள்ளி விவரங்கள் மூலம் அறிய முடிகிறது. தமிழகத்தில் 1981இல் தொழுநோயாளிகள் எண்ணிக்கை 1000 க்கு 19.01 நபர் என இருந்தனர்.

இந்தியாவில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை 1981 முதல் 1988 வரை மாறாமல் உள்ளது. ஆனால் தமிழகத்தில் இந்நோயாளிகளின் எண்ணிக்கை இதே காலத்தில் குறைந்துள்ளது. இந்தியாவில் தொழுநோயாளிகள் 1000 பேருக்கு 5.72 பேர் ஆவார். ஆனால் தமிழ்நாட்டில் இந்த வீதம் 1981 இல் 19.01 ஆக இருந்து 1988இல் 13.16 ஆகக் குறைந்துள்ளது. இந்தியாவின் வீதத்தையும் தமிழ்நாட்டின் வீதத்தையும் ஒப்பிடும்போது தமிழகத்தில் தொழு நோயாளிகளின் விகிதம் அதிகமாகவே உள்ளது.

தொழுநோயைக் கட்டுப்படுத்த 1995 முதல் தேசியத் தொழுநோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் செயல்படத் தொடங்கியது. இத்திட்டம் ஆரம்ப காலத்தில் சரிவரச் செயல்படவில்லை. அதற்குக் காரணம் தெளிவான கொள்கைகள் குறிப்பிடப்படாதது ஆகும். ஆனால் 4ஆம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் நன்கு செயல்படத் தொடங்கியது. அரசு 1980இல் ஒரு செயல்பாட்டுக் குழுவை அமைத்தது. இக்குழு 1982 இல் பல மருந்து கொடுக்கும் திட்டத்தினைப் பரிந்துரை செய்தது. பின்னர் இத்திட்டம் 1983இல் “தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம்” (NLEP) எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இத்திட்டம் தமிழகத்தின் சில மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுப் பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட ஆரம்பித்தது. அதன் பின்னர்த் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது. எனினும் இந்தியாவில் மிக அதிகமான தொழுநோயாளிகள் உள்ள மாநிலங்களில் ஒன்றாகவே தமிழகம் உள்ளது.

அட்டவணை 6 : தொழுநோயாளிகளின் வீதம் – இந்தியா, தமிழ்நாடு

ஆண்டு இந்தியா

(1000 பேருக்கு)

தமிழ்நாடு

(1000 பேருக்கு)

இந்தியா-தமிழ்நாடு

வேறுபாடு

1981 5.72 19.01 + 13.29
1982 5.93 15.14 + 9.21
1988 5.72 13.16 + 7.44

 காலா அசார்

காலா அசார் என்ற காய்ச்சல் நோய் இந்தியாவில் பல மாநிலங்களில் இல்லையெனினும் பீஹாரிலும், மேற்கு வங்கத்திலும்தாம் மிக அதிகமாக உள்ளது. இக்காய்ச்சலைப் பரப்பும் தெள்ளுப்பூச்சி மலேரியாக் கொசு ஒழிப்பின் பொழுது ஒழிந்து விட்டது என்ற நிலை மாறி ஆண்டுக்குச் சில நோயாளிகள் காணப்படுகின்றனர். 1989இல் இருந்து 1992 வரை தமிழகத்தில் இந்த நோயாளிகளின் எண்ணிக்கை 15. அனைவரும் பீஹாரிலிருந்து வந்தவர்கள் எனக் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.

மூளைக் காய்ச்சல்

மூளைக்காய்ச்சல் ஜப்பான் நச்சுயிரியினால் ஏற்படுவது. இந்தியாவில் மிக அதிகமாக உத்திரபிரதேசத்தில், மேற்கு வங்கத்திலும்தாம் காணப்படுகிறது. இதில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தை வகிக்கிறது. இதுவும் பல சமயங்களில் திடீர் திடீரென்று கொள்ளை நோய் போல் தோன்றி மறைகிறது.

தமிழ்நாட்டில் மூளைக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை 1990 வரை குறைந்து 1991 இல் அதிகரித்துள்ளது. பின்னர் மீண்டும் குறைந்துள்ளது. ஆனால் இந் நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கையில் இதே காலத்தில் அதே நிலை காணப்பட்ட போதிலும், இறந்தவர்களின் எண்ணிக்கையில் ஏற்ற இறக்கம் காணப்படுகின்றது.

அட்டவணை 7 : மூளைக்காய்ச்சல் – நோயாளிகளும் இறந்தவர்களும்

ஆண்டு தமிழ்நாடு இந்தியா
நோயாளிகள் இறப்பு நோயாளிகள் இறப்பு
1988 247 122 6867 2404
1989 321 194 6489 2422
1990 243 170 2916 1291
1991 276 164 3930 1482
1992 177 107 1420 481

 பால்வினை நோய்

பால்வினை நோய் என்பது உடலுறவு மூலமாகப் பரவும் நோய். இதில் எய்ட்ஸ் என்பது அண்மைக் காலத்தில் கண்டறியப் பட்ட ஒரு நோய். உலக அளவில் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டவர் 1 முதல் 14 விழுக்காடு உள்ளனர். இந்தியாவில் மஹாராஷ்டிரத்தில் 2.4 விழுக்காடும், கேரளாவில் 1.4 விழுக்காடும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இந்நோய் பெரும்பாலும் 20 முதல் 24 வயது வரை உள்ளவர்களிடமே மிக அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் பெண்களை விட ஆண்களே இந்நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பால்வினை நோயாளிகளின் எண்ணிக்கை 1977 முதல் 1990 வரையிலான 13 ஆண்டுக் காலத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது. இது இந்தியாவில் அதிகரித்துள்ள விகிதத்தைக் காட்டிலும் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள வீதம் அதிகமாக உள்ளது. இந்த விழுக்காடு 1977இல் 2.45 லிருந்து 1985இல் 19.53 ஆகவும், 1990இல் 21.35 ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பால்வினை நோயுடன் எய்ட்ஸ் நோயும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 1989இல் 33 ஆகவும், 1993இல் 447 ஆகவும் இருந்தது. இந்த எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந் நோயாளிகளில் ஆண்களே அதிகமாக உள்ளனர். இந்தியாவில் ஹெச்.ஐ.வி. நச்சுயிரித் தாக்குதலுக்கு ஆளானவர்கள் 40 இலட்சம் மக்கள். அதில் தமிழ்நாட்டில் 2 லட்சம் போர் உள்ளனர். இந்தியாவில் 1994 செப்டம்பர் வரை கண்டுபிடிக்கப்பட்ட இந்திய நோயாளிகள் 849 இதில் 237 நபர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இது இந்தியாவில் எயிட்ஸ் நோய்களின் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் மஹாராஷ்டிரத்தை விட 9 நோயாளிகளே குறைவு (246).

தடுப்பு ஊசி மூலம் ஒழிக்கப்படும் நோய்கள்

பெரியம்மை தடுப்பு ஊசி மூலம் அறவே ஒழிந்தது என்ற மகிழ்ச்சியுடன் நோயொழிப்புக்குக் குறைந்த செலவில், தீவிர நடவடிக்கை மேற்கொள்ள உலகச் சுகாதாரக் கழகம் 1974இல் விரிவுபடுத்தப்பட்டுத் தடுப்பு ஊசித் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் (ஆறு நோய்களை) தொண்டை அடைப்பான், கக்குவான், வில்வாதநோய், இளம் பிள்ளைவாதம், காசநோய் மற்றும் தட்டம்மை ஆகியவைகளை ஒழிக்கத் திட்டமிடப்பட்டது. இதன் மூலம் ஏற்றத்தாழ்வு இன்றி எல்லோருக்கும் பயன் என்ற நிலை ஏற்பட்டது.

இத்திட்டம் 1985இல் இந்தியாவில் கருவுற்ற தாய்க்கு வில்வாதநோய்க்குத் தடுப்பு ஊசியும் குழந்தைகளுக்கு மேற்கூறப்பட்ட ஆறுநோய்களுக்கும் தடுப்புஊசி கொடுத்தது. 1990க்குள் 100 விழுக்காடு கொடுக்கவேண்டும் என்ற திட்டம் இருப்பினும் இதை அடைவது கடினம் என்ற எண்ணத்துடனும் செயல்பட்டது. ஆனால் 80 விழுக்காட்டை அடைந்தபோதிலும் இதன் மூலம் நோய்த் தடுப்பு அதிகரித்துள்ளது. மற்றும் மற்றவர்களுக்கும் இந்நோய்த் தொற்றாது பாதுகாப்புக் கொடுக்கும் விதமாகவும் அமைந்து வருகிறது.

இத் திட்டம் 1989-90இல் அமுல் படுத்தப்பட்டதன் விளைவாக இளம் பிள்ளைவாதம் ஆண்டுக்காண்டுத் தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. இதனால் நாட்டின் சிசுமரணமும் ஆண்டுக்காண்டுக் குறிப்பிடத்தக்க அளவு குறைந்து வருகிறது. சிசு மரண விகிதம் 1981இல் 120 ஆக இருந்து, 1994இல் 59 என்ற அளவிற்குக் குறைந்திருப்பது, இத்திட்டத்தின் சாதனையைக் காட்டும் குறியீடாக உள்ளது.

இளம்பிள்ளைவாதம்

இளம்பிள்ளைவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1987 வரை அதிகரித்த போதிலும் அதன் பின்னர்த் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்துள்ளது. அதேபோல் இந்நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கையும், தேசிய அளவிலும், மாநில அளவிலும் குறைந்து வந்துள்ளது என்பதையும் கீழ்க்காணும் அட்டவணையில் உள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கூடுதல் போலியோ திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் 8 கோடி குழந்தைகள் பயன் பெற்றனர். தமிழ்நாட்டில் 5 வயதிற்குற்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ கூடுதல் தரப்பட்டது. 1996 ஆம் ஆண்டு டிசம்பர் 7 மற்றும்  ஜனவரி 18, 1997இல் இந்தப் போலியோ ஒழிப்புப் போர் நடந்தது. இது தொடர்ந்து நடந்தால் மூன்று ஆண்டுகளில் தமிழகத்திலும் அகில இந்திய அளவிலும் இளம்பிள்ளைவாதம் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த முடியும்.

அட்டவணை 8 : இளம்பிள்ளைவாதம் -.நோயாளிகளும் இறந்தவர்களும்

ஆண்டு தமிழ்நாடு இந்தியா
நோயாளிகள் இறப்பு நோயாளிகள் இறப்பு
1982 396 20 16961 325
1987 1913 59 13021 708
1988 1336 15 21408 482
1989 793 15 11483 253
1992 529 13 9390 230

தொண்டை அடைப்பான்

தொண்டை அடைப்பான் வளர்ந்த நாடுகளில் மிக அரிது. இந்தியா போன்ற நாடுகளில் முத்தடுப்பு ஊசி போடுவது தேசியத் திட்டமாக நடைமுறைக்கு வந்த பிறகு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. 1982 இல் 560 ஆக இருந்த நோயாளி எண்ணிக்கை 1992இல் 12 ஆகக் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்து 1992இல் பூசியம் என்ற நிலையை எட்டியுள்ளது.

வில்வாதநோய்

வில்வாதநோய் உலகம் முழுவதும் காணப்படும் ஒரு நோயாகும். இந்தியாவில் இது ஒரு கொள்ளை நோயாகவே உள்ளது.

தமிழ்நாட்டில் வில்வாத நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1987இல் 1150லிருந்து 1992இல் 277ஆகக் குறைந்துள்ளது.  அதேபோல் இந்நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் இதே காலத்தில் 56லிருந்து 48ஆகக் குறைந்துள்ளது. இந்தியாவின் மொத்த நோயாளிகளிலும், இறந்தவர்களிலும் தமிழ்நாட்டின் விழுக்காடு மிகக் குறைவாகவே உள்ளது.

கக்குவான்

கக்குவான் உலகெங்கிலும் கொள்ளை நோயாகத் தோன்றும் ஒன்று.  இந்தியா உட்பட வெப்பநாடுகளில் இந்நோய்க் குழந்தைகளைத் தாக்குகிறது. சுமார் 10% சாவு பிறந்து 1 ஆண்டுக்குள் ஏற்படுகிறது.

இந்தியாவைக் காட்டிலும் தமிழ்நாட்டில் கக்குவான் நோய்க்கான சிகிச்சை அதிக வெற்றிபெற்றுள்ளது என்பதை இந் நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1992இல் எவரும் இறக்கவில்லை.

தமிழ்நாட்டில் கக்குவான் நோயாளிகளின் எண்ணிக்கை 1982 முதல் தொடர்ந்து  குறைந்து வந்தபோதிலும் 1989இல் அதிகரித்துள்ளது. ஆனால் 1992 இல் அது 20 என்ற அளவிற்குக் குறைந்ததோடு, கக்குவான் காரணமாக இறந்தவர்கள் யாரும் இல்லை என்ற நிலையும் உருவாக்கப் பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இந் நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 47ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக முத்தடுப்பு ஊசியினால் தொண்டை அடைப்பான், வில்வாத நோய், கக்குவான் நோய் ஆகியவைகள் ஒழியும் நிலைக்குப் போய்க்கொண்டிருக்கின்றன.

தட்டம்மை

உலகெங்கிலும் தட்டம்மை ஒரு கொள்ளை நோயாக இருந்து வருகிறது. வளரும் நாடுகளில் 10,000 நோயுற்ற  நபர்களில் 2 முதல் 15 நபர்கள் இறப்புக்குக் காரணமாகின்றனர்.  ஆனால் இதற்கு மாறாக வளர்ந்த நாடுகளில் 0.2 என்ற வீதத்திலே ஏற்படுகிறது. இதற்கு காரணமாகச் சொல்லப்படுவன மற்ற தொற்றுகளும் ஊட்டச்சத்துக் குறைபாடும் ஆகும். உலகச் சுகாதாரக் கழகத்தின் தடுப்பு ஊசித் திட்டத்தின் கீழ் இத்தட்டம்மைக்கு ஊசி போட ஆரம்பித்த பிறகு இந்தியாவிலும் இவ்வம்மைத் தொற்றின் போக்கு அவ்வப்பொழுது குறைந்து காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் 1982இல் 1064லிருந்து 1992இல் 4873 என்ற நிலையை எட்டி யுள்ளது. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் இதே காலத்தில் 6லிருந்து 35ஆக அதிகரித்துள்ளது. எனவே இந்நோய் ஒழிப்பதற்கான திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

சுற்றுப்புறச் சுகாதாரம்

சுற்றுச்சூழல் சுகாதாரம் என்பது சுற்றுச்சூழல் நலம் எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே நலத்தை மேம்படுத்த சுற்றுச் சூழல் சுகாதார மேம்பாடு அவசியம்.

மக்கள் பெருக்கம், கிராம மக்கள் நகர்ப்புறங்களில் குடியேறுதல், தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றால் நீர், காற்று ஆகியவை மாசுபடுதல், நாளுக்கு நாள் அதிகமாகின்றன. தமிழ்நாட்டில் சுகாதாரத்துக்கென்று எடுக்கப்படும் நடவடிக்கைகள் நகர்ப்புற மக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றன. இதனைக் கீழ்வரும் அட்டவணை மூலம் நிருபிக்கலாம்.

அட்டவணை 9 : குடிநீர் வசதி பெறும் மக்கள் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் (சதவிகிதத்தில்)

ஆண்டு தமிழ்நாடு இந்தியா
நகரம் கிராமம் நகரம் கிராமம்
1981 72.25 30.8 80.86
1985 72.08 56.02 83.74
1986

 இந்தியாவின் நகரங்களில் குடிநீர் வசதி பெறும் மக்களின் எண்ணிக்கை 1981இல் 72.25 விழுக்காடு இருந்தது. இது 1985இல் 73 விழுக்காடாகவும் 1990இல் 82.4 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளது. தமிழ் நாட்டின் நகரங்களில் இந்த எண்ணிக்கை 1981இல் 81 விழுக்காட்டிலிருந்து 1985ல் 84 விழுக்காடாகவும், 1987இல் 88 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது. ஆனால் இந்தியக் கிராமப்புறங்களில் குடிநீர் வசதிப்பெற்றவர்கள் மொத்த மக்கள் தொகையில் 1985க்கான புள்ளி விவரத்தின்படி 56 சதவிகிதத்தினரே ஆவார். தமிழ்நாட்டின் கிராமங்களில் இத்தகைய குடிநீர் வசதிக்கெனக் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தால் மக்கள் கிணறுகள், குளங்கள், ஆறுகள் இவற்றிலிருந்து பாதுகாக்கப்படாத நீரையே பயன்படுத்துகின்றனர். இதே போல் சுகாதாரத்திலும் கிராம நகர வேறுபாடு காணப்படுகிறது.

அட்டவணை 10 : சுகாதார வசதி பெறும் மக்கள் இந்தியாவிலும்

தமிழ்நாட்டிலும் (சதவிகிதத்தில்)

ஆண்டு தமிழ்நாடு இந்தியா
நகரம் கிராமம் நகரம் கிராமம்
1981 25.4 0.5 46.38
1985 28.39 4.03 47.49

 சுகாதார வசதி பெறும் நகர மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அட்டவணை மூலம் தெளிவாகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை எவ்வித மாற்றமும் இல்லாமல் காணப்படுகிறது. 1987லிருந்து இந்த எண்ணிக்கை 47.39 விழுக்காடாகவே உள்ளது. இதற்கு மாறாகக் கிராமப்புறங்களில் சுகாதார வசதி பெறும் மக்களின் எண்ணிக்கை 5 விழுக்காட்டுக்கும் குறைவாகவும் இதுவே, சுற்றுச்சூழல் மாசுபடுதலுக்கும் காரணமாகிறது.

பாதுகாக்கப்படாத குடிநீர் சுகாதார வசதியின்மை ஆகியவை பல நோய்கள் தோன்றுவதற்கும் பரவுவதற்கும் காரண மாகின்றன. குடிநீரினால் பரவக்கூடிய, டைஃபாய்டு, காலரா, வயிற்றுப்போக்கு, தொற்று மஞ்சள் காமாலை போன்ற நோய்களும், கொசுவினால் பரவக்கூடிய யானைக்கால், மலேரியா, மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களும் தோன்றுவதற்கும், பரவுவதற்கும் குடிநீர் மற்றும் சுகாதார வசதியின்மையே காரணமாகும்.

வயிற்றுப்போக்கு

இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் வயிற்றுப்போக்கு  நோய்க்கு ஆளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் இந்நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அட்டவணை 11 : வயிற்றுப்போக்கு – நோயாளிகளும், இறந்தவர்களும்

 

ஆண்டு

நோயாளிகள் இறந்தவர்கள்
தமிழ்நாடு இந்தியா இ.எ.த.

நாட்டின் %

தமிழ்நாடு இந்தியா இ.எ.த.

நாட்டின் %

1982 100270 1711187 5.85 938 3552 26.4
1988 101575 8260946 1.22 158 7290 2.17
1992 245456 4228037 5,8 391 6499 6.01

எண்ணிக்கையில் முறையே 5.85%, 5.8% ஆகும்.  இந்த  எண்ணிக்கையில் 1988இல்  மாற்றம் எதுவும் இல்லை என்றாலும் மொத்தத்தில் தமிழ்நாட்டின் விழுக்காடு மிகக்குறைவாக உள்ளது. இந் நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1982இல் 938 ஆக இருந்து 1988இல் 158 ஆகக் குறைந்தது. மீண்டும் 1992இல் 391 ஆக அதிகரித்த போதிலும் 1982இல் இருந்த அளவை விட மிகவும் குறைவாகவே இருந்தது. இதிலிருந்து இந் நோயினால் இறந்தவர்களின்  எண்ணிக்கை குறைந்துள்ளது தெளிவாகிறது.

வயிற்றுப்போக்கிற்கு உப்புடன் சர்க்கரை கலந்த திரவம் கொடுக்கும் சிகிச்சைக்குப்பின் 1991இன் கணக்கீட்டின் படி 5 வயதிற்குக் குறைவில் பாதிக்கப் பட்டவர்கள் 1.7 விழுக்காடு.

இந்தியாவில் காலரா நோயாளிகளின் எண்ணிக்கை மாநிலங்களிடையே வேறுபடுகிறது. இந்தியாவில் 1950 ஆம் ஆண்டு முதல் கிடைத்த புள்ளி விவரங்களின்படி காலரா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதனால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வந்துள்ளது தெரிகிறது. தமிழ்நாட்டில் 1992இல் காலராவினால்  இறந்தவர்களின்  எண்ணிக்கை ஒன்று என்ற அளவிற்குக் குறைக்கப்பட்டுள்ளது.

அட்டவணை 12 : காலரா நோயாளிகளும் இறந்தவர்களும்

 

ஆண்டு

நோயாளிகள் இறந்தவர்கள்
தமிழ்நாடு இந்தியா இ.எ.த.

நாட்டின் %

தமிழ்நாடு இந்தியா இ.எ.த.

நாட்டின் %

1982 2639 4679 56.4 30 217 13.82
1988 1856 8957 20.72 22 215 10.23
1992 1047 6911 15.15 1 55 1.01

தொற்று மஞ்சள் காமாலை

கல்லீரல் தொற்று மஞ்சள் காமாலை இந்தியாவில் பரவலாக எல்லா மாநிலங்களிலும் காணப்படுகிறது.

இவ்வகை  மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1982இல் இருந்த அளவைவிட 1987இல் அதிகரித்துள்ளது. இது மக்கள் தொகைப் பெருக்கத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவே. தமிழ்நாட்டில் 1992இல் இந்த எண்ணிக்கை பல மடங்கு குறைந்து காணப்படுகிறது. இதே காலத்தில் மஞ்சள் காமாலை நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. 1992இல் இறந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக உள்ளது.

டைபாய்டு

டைஃபாய்டு நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்திய அளவில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்றாலும் எல்லா மாநிலங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது. தமிழ் நாட்டில் இந்த எண்ணிக்கை 1982 முதலான 10 ஆண்டுக் காலத்தில் அதிகரித்துள்ளது. அதே சமயம் டைஃபாய்டு நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படுகிறது.

ஒழிக்கப்பட்ட நோய்கள்

இந்தியாவில் (1983-84) ஆறாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் நரம்புச்சிலந்தியை ஒழிக்கத் திட்டக்கூறுகள் வகுக்கப்பட்டாலும் 1981க்கு முன்னரே தமிழகம் முனைந்து செயல்பட்டதால் இந்நோய் ஒழிக்கப்பட்டு விட்டது.

தமிழகத்தில் ஒழிக்கப்பட்ட தொற்று நோய்களுள் முதன்மையானது பெரியம்மை யாகும். தமிழகம் உட்பட இந்தியா முழுவதிலும் 1975 ஜூலை 5க்குப் பிறகு பெரியம்மை இல்லையென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பிளேக்கும் இந்தியாவில் 1996லேயே ஒழிக்கப்பட்டுவிட்டது என்றாலும், 1996இல் குஜராத்தில் (சூரத்) இந்நோய் தலை தூக்கியது. ஆனால் தமிழகத்தில் 1963க்குப் பிறகு ஒரு பிளேக் நோயாளி கூட இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது.

அட்டவணை 13 : மஞ்சள் காமாலை நோயாளிகளும் இறந்தவர்களும்

ஆண்டு நோயாளிகள் இறந்தவர்கள்
தமிழ்நாடு இந்தியா தமிழ்நாடு இந்தியா
1982 3333 147768 93 1741
1987 4110 179862 30 1923
1992 1026 98047 2 1268

 அட்டவணை 14 : டைபாய்டு நோயாளிகளும் இறந்தவர்களும்

ஆண்டு நோயாளிகள் இறந்தவர்கள்
தமிழ்நாடு இந்தியா தமிழ்நாடு இந்தியா
1982 5840 332016 57 673
1987 6941 332281 20 533
1992 8389 352980 21 735

 ஊட்டச்சத்துக் குறைபாடு

புரதம்

ஊட்டச்சத்துக் குறைவின் அளவு 1992இன் கணக்கீட்டின்படி 4-8% விழுக்காட்டினர் உள்ளனர். நடுத்தர ஊட்டச்சத்துக் குறைவு 25-30% விழுக்காடு உள்ளனர்.

இரும்புச் சத்து

இதேபோல் இரும்புச் சத்து குறைவு காரணமாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 40% கர்ப்பிணிப் பெண்களில் 50% பாதிக்கப் பட்டுள்ளனர். (1992).  இது தொடரும் தீராத பிரச்சினை. இதே இந்தியாவில் கருத்தரிக்காத பெண்களும் சிறு குழந்தைகளும் 50 விழுக்காடும், கருவுற்றவர்களில் 60-80 விழுக்காடும் சோகைக்கு ஆளாகி உள்ளனர். இவர்களுக்கு (20-40%) சாவு பிரசவிக்கும் பொழுது ஏற்படுகிறது.

வைட்டமின் ‘ஏ’ குறைபாடு

வைட்டமின் ‘ஏ’ குறைபாட்டினால் 3% குருடு இந்தியாவில் ஏற்படுகிறது. அதுவும் 1-3 வயது  குழந்தைகளுக்கு தோன்றும் குருட்டிற்கு முதன்மைக்காரணம்.

தமிழகத்தில் 1981இல் பள்ளிக்குப் போகும் வயதுக்குமுன் உள்ள குழந்தைகளிடையே வைட்டமின் ‘ஏ’ பற்றாக்குறை 1.9 விழுக்காடு. ஆனால் இது 1991இல் 1 விழுக்காட்டிற்குக் குறைந்து விட்டது. இதேபோல் ஐந்து வயதிலிருந்து பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே பற்றாக்குறை 1981இல் 5 விழுக்காடாக இருந்தது. ஆனால் 1991இல் 2.7 விழுக்காடாகக் குறைந்து விட்டது. நகரத்திலும் கிராமத்திலும் குழந்தைகள் இந்த விழுக்காட்டில் சமமாகப் பாதிக்கப் பட்டுள்ளனர்.

அயோடின் குறைபாடு

இந்தியாவில் அயோடின் குறைபாடு உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் இமாலயப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. இருப்பினும் இதைத் தவிர இந்தியாவில் மற்ற மாநில நகரங்களிலும் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகிறது. தமிழகத்தில் திருச்சி, புதுக்கோட்டை, நீலகிரி மாவட்டங்களில் கழுத்திலுள்ள தைராய்டு சுரப்பி வீக்க நோய் இருப்பது தெரிகிறது.

குழந்தையின் எடை

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெரும்பாலான குழந்தைகள் 2.05 கிலோவிற்குக் குறைவான எடையுடன் பிறக்கின்றனர். இதுவே வளரும் நாடுகளில் 4% குறைவாக உள்ளது. தமிழகத்தில் முப்பது விழுக்காடு குழந்தைகள் குறைந்த எடையுடனே பிறக்கின்றன. பிறக்கும் குழந்தைகள் சராசரி எடை 2.8 கிலோவிற்குள் தான் தமிழகத்தில் பிறக்கின்றனர்.

மேற்கூறப்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் களையும் விதமாகத் தமிழகத்தில் “ஊட்டச்சத்து உணவுத்திட்டம்” 1982இல் கிராமப்புறங்களில் அறிமுகப் படுத்தப்பட்டது. இவை மத்திய அரசு, உலக வங்கி மற்றும் ஸ்வீடன் நிதிஉதவி ஆதரவுடன் நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தின்படி ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்குவதற்கு 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு  வழங்கப்படுகிறது.  திட்டத்தின் 1982-83இன் ஆரம்பத்தில் 4140 மையங்கள் நர்சரி பள்ளியாக மாறி 1983-85க்குப் பிறகு 10,000 ஆகக் கூடுதலாயின. இதில் வேலை செய்யும் பால சேவகிகளுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் 92-93இல் 28,877 குழந்தை நல மையங்கள் மூலம் நகரத்திலும் கிராமத்திலும் செயல்படுத்தப்பட்டன. இதன்மூலம் 13,1900 பிள்ளைகள் பலன் அடைந்தனர்.

மேலும் இத்தருணத்தில் ஆரம்ப, நடு, மேல் நிலைப்பள்ளிகள் இத்திட்டத்தில் கொண்டுவரப்பட்டு 5 முதல் 15 வயது வரையுள்ள 55,12688 பள்ளிக்குழந்தைகள் பலனடைந்தனர். இத்திட்டத்தில் 1989க்குப் பிறகு உணவுடன் முட்டையும் வழங்கப்படுகிறது.

புற்றுநோய்

உலக மக்களில் 9% மரணத்திற்குப் புற்றுநோய் காரணமாகிறது. வளர்ந்த நாடுகளில் மரணத்திற்கான இரண்டாவது முக்கியக் காரணமாகப் புற்றுநோய் உள்ளது. வளர்ந்துவரும் நாடுகளில் இந்நோய் நான்காவது இடத்தை வகிக்கிறது. உலக சுகாதாரக் கழக மதிப்பீட்டின்படிக் கி.பி.2000 ஆண்டில் புற்று நோயினால் ஏற்படும் மரணத்தின் எண்ணிக்கை ஆண்டுக்கு 8 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 1,00,000 மக்கள் தொகைக்கு 70 பேர் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் வளர்ச்சி பெற்ற நாடுகளில் 1,00,000 பேருக்கு 289 என்ற எண்ணிக்கையை விடக் குறைவாக உள்ளது. இந்நோய் ஆண்களை விடப் பெண்களுக்கே மிக அதிக அளவில் காணப்படுகிறது.

இந்தியாவில் புற்றுநோய் சிறப்புச் சிகிச்சைக்காக  1980இல் 26 மருத்துவமனைகள் இருந்தன. அவை 1992இல் 42ஆக அதிகரித்துள்ளன.  அதே  காலத்தில் தமிழகத்தில் இம்மருத்துவமனைகளின் எண்ணிக்கை ஐந்திலிருந்து நான்காகக் குறைந்துள்ளது. அதன் பின் 1995-96இல் ஏழாக உயர்ந்துள்ளது. இம்மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுவதற்காக வந்த உள்நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் 1980ல் 19,738லிருந்து 1986இல் 42,923ஆக அதிகரித்துள்ளது. ஆனால் 1992ல் இது 35,748ஆக குறைந்துள்ளது. இதே காலத்தில் தமிழக மருத்துவமனைகளில் உள் நோயாளிகளின் எண்ணிக்கை 4,919 லிருந்து 13,098 ஆகவும் பின்னர் 13,912 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள உள்நோயாளிகளின் எண்ணிக்கையில் தமிழகத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1982ஆம் ஆண்டு தவிர மற்ற ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.

புற்றுநோயில் இறந்தவர்கள் எண்ணிக்கையைப் பார்க்கும்பொழுது இந்தியாவில் 1980இல் 1353ல் இருந்து 1986இல் 2211 ஆக அதிகரித்துள்ளது. பின்னர் 1992இல் இது 1230 ஆகக் குறைந்துள்ளது. இதே காலத்தில் தமிழகத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 172இல் இருந்து 378ஆக அதிகரித்துப் பின்னர் 305 ஆகக் குறைந்துள்ளது. இந்தியாவில் இந்நோயினால் இறந்தவர்களில் எண்ணிக்கையில் தமிழ் நாட்டில் இறந்தவர்களின் விழுக்காட்டை நோக்கும் போது ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும் 1992இல் இந்நோயினால் இறந்தவர்களின் 25%  தமிழ்நாட்டில் மரணத்துக்குள்ளாகியிருக்கிறார்கள்.

அட்டவணை 15 : புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்,

இறந்தவர்கள் பற்றிய விவரம் தமிழகம், இந்தியா

ஆண்டு மருத்துவமனை உள்நோயாளி வெளி நோயாளி
தமிழகம் இந்தியா தமிழகம் இந்தியா விழுக்காடு தமிழகம் இந்தியா விழுக்காடு
1980 5 26 4919 19738 24.92 172 1353 12.72
1981 5 26 6739 26929 25.02 122 1414 8.6
1982 5 26 5086 33878 15.01 511 1837 27.81
1986 5 26 13098 42923 30.52 378 2211 17.09
1987 4 24 13647 47524 28.71 363 2159 16.81
1988 4 24 13381 47559 28.14 338 2172 15.56
1991 4 25 11843 36825 32.16 338 1442 23.43
1992 4 25 13912 35748 38.92 305 1230 24.79

 மேற்கூறியவை மூலம் அறிந்தவை

 1. தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம், இறப்பு விகிதம், சிசு மரண விகிதம் ஆகியவை குறைந்துள்ளன. இவை இந்திய விகிதத்தை விடக் குறைவு.
 2. கல்வியறிவு உள்ள நிலையில் ஆண், பெண் வேறுபாடு காணப்படுகிறது.
 3. மலேரியா நோய்க் கண்டவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டு காலத்தில் குறையும் போக்கில் உள்ளது.
 4. காச நோயாளிகளும் அதனால் இறந்தவர்களும் அதிகரித்துள்ளனர்.
 5. தொழு நோயாளிகளின் விகிதம் குறைந்துள்ளது.
 6. யானைக்கால் நோய் தொற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
 7. மூளைக்காய்ச்சல் நோயாளிகள் குறைந்துள்ளனர்.
 8. பால்வினை நோய்க் குணப்படுத்தப் பட்டவர்கள் அதிகரித்துள்ளனர்.
 9. எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை யில் தமிழகம் இந்தியாவில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது.
 10. இளம்பிள்ளைவாத நோய், தொண்டை அடைப்பான், வில்வாத நோய், கக்குவான் ஆகிய நோயாளிகள் ஒழிக்க முடியும் என்ற எண்ணிக்கையில் நிலைமையுள்ளது.
 11. தட்டம்மையை ஒழிக்க கவனம் தேவை.
 12. வயிற்றுப்போக்கு நோயாளிகள் அதிகரித்துள்ளனர்.
 13. காலரா நோயாளிகள், தொற்று மஞ்சள் காமாலை நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
 14. டைபாய்டு நோயாளிகள் அதிகரித்துள்ளனர்.
 15. காலா அசார், பெரியம்மை, பிளேக், நரம்புச் சிலந்தி ஆகிய நோய்கள் ஒழிக்கப்பட்டு விட்டன.
 16. குடிநீர், சுகாதார வசதி ஓரளவே அதிகரித்துள்ளன. கிராமப்புற மேம்பாடு அதிகம் தேவை எனப்படுகிறது.
 17. ஊட்டச்சத்துக் குறைவால் ஏற்படும் நோய்களைத் தடுக்க ஊட்டச் சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 18. நலம் பேணல், நோய்த் தடுப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

பரிந்துரைகள்

சிகிச்சையை மையமாகக் கொண்டு மையப்படுத்தப்பட்ட இன்றைய மருத்துவ நல அமைப்பை மாற்றியமைத்துக் கிராமப் புறங்களை மையமாகக் கொண்ட மக்கள் பங்கேற்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள சமூக நலப் பணியாளர்களை ஆதாரமாகக் கொண்ட மருத்துவ நல அமைப்பை உருவாக்கும் பணிகளை முடுக்கிவிடவேண்டும்.

அடிப்படைச் சூழ்நிலை வசதி, கழிப்பறை வசதி, காற்றோட்ட மிக்க குடியிருப்பு வசதி, சுகாதார வசதி முதலியவை அனைத்துக் கிராமப்புற, நகர்புறப் பகுதிகளிலும் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

நமது நாட்டின் புவியியல் சூழல், நோய்ப்பாங்கு ஆகியவற்றினடிப்படையில் முன்னுரிமை அளிக்கும் சிகிச்சை முறை உருவாக்கப்படவேண்டும்.

சத்துணவுக் குறைவு, ஏழ்மை ஆகியவை பெரும்பான்மையான நோய்கட்கு அடிப்படை என்ற வகையில் ஏழ்மையை ஒழிக்கும் நடவடிக்கைகள் தேவை,  விவசாயத்  தொழிலை மேற்கொண்டுள்ள நமது நாட்டில் நிலச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். கிராமப்புற வறுமை ஒழிப்புத் திட்டமும் மிகவும் அவசியம். மேற்கத்திய மருத்துவ முறையை முற்றாகப் புறக்கணிக்காது, நமது பாரம்பரிய நாட்டு மருத்துவ முறையுடன் இணைந்து ஓர் எளிய மருத்துவ முறை உருவாக்கப்படவேண்டும்.

தேசிய நிதி ஒதுக்கீடுகளில் மருத்துவ நலத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் பல மடங்கு அதிகரிக்கப்படவேண்டும். மருத்துவர்கள், நோயாளிகள் மருத்துவப் பணியாளர்கள், மக்கள் மருத்துவமனைப் படுக்கைகள், மக்கள் ஆகிய விகிதங்கள் சர்வதேச அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விகிதங்களில் அமைக்கப்படவேண்டும்.

மருத்துவச் சேவையில் மக்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்குமிடையே இடைவெளி இருக்கக்கூடாது. காசில்லை என்பதற்காக எந்த ஒரு நபரும் தேவையான மருத்துவக் கவனிப்பைப் பெறாமலிருக்கும் நிலை ஒழிக்கப்படவேண்டும்.

மக்களின் மருத்துவ நலத்தை மக்களின் கரங்களிலேயே அளிப்பது என்ற தேசிய சுகாதாரக் குழு பரிந்துரையை (1940) முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு முழு வீச்சுடன் செயல்படவேண்டும்.

மருத்துவர்களுக்கென ஒதுக்கப்படும் மக்கள் தொகையின் முழு உடல்நலக் கண்காணிப்பு அந்த மருத்துவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

சிகிச்சைக்கான மருந்துகளும் அதன் கூறும் மருத்துவர் மாத்திரமே வழங்க சட்ட பூர்வமாகத் தகுதி உண்டாக்குதல் வேண்டும்.

மருத்துவ தொழிற்சாலை மூலமாக உற்பத்தி செய்யும் மருந்துகள் பொது விநியோகத்திற்குள் வழங்குதல் தடுக்கப்பட வேண்டும். இல்லையேல் மருந்தின் இனப்பெயர்களிலேயே மருந்துகள் பயன்பட வேண்டும்.

பள்ளிப் பாடத்திட்டத்தில் சுகாதாரப் பாடங்கள் கட்டாயப் பாடமாக்கப்பட்டுத் தேர்வுக்குரிய பாடமாகக் கருதப்படவேண்டும்.

மக்கள் பெருக்கம் பல நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாக இருப்பதால் குடும்பநலத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்படவேண்டும்.

பெண் கல்வியை உயர்த்துவதன் மூலம் ஆண், பெண் வேறுபாட்டினைப் போக்க முடியும். இது நோய்த் தடுப்புத் திட்டங்களின் வெற்றிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.

அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சை மீது, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அதன் சிறப்பியல்பு பற்றிய விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

எயிட்ஸ் நோய்த் தடுப்புக்குத் தேசிய உலக அளவில் ஒரேவித நடவடிக்கை வேண்டும்.

மேற்கோள் புத்தகப் பட்டியல்

புத்தகங்கள்

 1. மாத்யூ, மனோரமா இயர்புக் 1995, மலையாள மனோரமா- திருவனந்தபுரம்
 2. அ. மார்க்ஸ், நமது மருத்துவ நலப்பிரச்சினைகள், சிலிக்குயில், கும்பகோணம், 1987.
 3. 3. An analysis of the situation of children in India – UNICEF – Regional Office for South Center Asia, New Delhi. 1984
 4. 4. ALMA – ATA Primary health Care – WHO – UNICEF Geneva. 1978.
 5. 5. Government Tamil Nadu 1987, 1988, 1989, 1990, 1991, 1992, 1993, 1994, 1995 Director of Statistics Madras.
 6. 6. Health Information India 1981, 1983, 1988, 1989, 1990, 1993 Central Bureau of Health Intelligence Directorate General of Health Services Ministry of Health & Family Welfare Government of India, New Delhi.
 7. 7. Debabar Banergi, Health Service Development in India Centre of Social Medicine and Community Health School of Social Sciences, Jawaharlal Nehru University – New Delhi 1984.
 8. 8. Part & Park Park’s Text book of Prevention & social Medicine 13th Edition – 15th Edition. M/S. Banarsides Bhanot Jabalpur 1993, 1995.

இதழ்கள்

 1. Health for the Millions Vo.2, No.1 Oct 1993
 2. Health for the Millions Vol.2, No.1 Feb.1994
 3. Health for the Millions Vol.2, No.3 June 1994
 4. Health for the Millions Vol.20, No.6 Dec 1994
 5. Health for the Millions Vol.21, No.1 Jan 1995
 6. Health for the Millions Vo.21, No.1 March 1995
 7. Government of Tamil Nadu, Tami Nadu-An Economic Appraisal 1992-1993, Evaluation and applied Research Department, Madras.
 8. ICDS Decade celebration 1975-1985 SOUVENIR Department of Social Welfare Government of Tamil Nadu-1985
 9. Second National Conference of Environment health and sustainable Development – SOUVENIRE – 1996 Institute of Vector control & Zoonoses – Hosur – Tamil nadu.
 10. Workshop on family welfare in the organised sector SOUVENIR Madras 1989.

NATIONAL HEALTH PROGRAMME

 1. National malaria Eradication Programme Series 4.

National Institute of Health and Family Welfare, New Delhi 1988.

 1. National Goitre Control programme Series 5

National Institute of Health and Family Welfare New Delhi 1988.

 1. National Leprosy Eradication Programme Series 6

National Institute of Health and Family Welfare, New Delhi 1988.

 1. National Programme on Integrated Child Development Services Series 7

National Institute of Health and Family Welfare, New Delhi 1988.

 1. National Water Supply and Sanitation Programme Series 8

National Institute of Health and Family Welfare, New Delhi 1988.

 1. National Programme for Control of diarrhoeal Diseases Series 9

National Institute of Health and Family Welfare, New Delhi 1988.

 1. National Programme for Control Tuberculosis Series 10

National Institute of Health and Family Welfare, New Delhi 1988.

பதிவேடுகள்

 1. டாக்டர் ஜெ. ஜெயல்லிதா 15 அம்ச குழந்தை நலத் திட்டம், தமிழ்நாடு அரசு 1993.
 2. Health Monitor. March 1993 Vo.1 No.1

Foundation for Research in Health System, Ahamadabad.

 1. Health Monitor – 1994 Vol.2 No.1

Foundation for Research in Health System, Ahamadabad.

சு. நரேந்திரன்:

முதல் பரிசை இருமுறை “பொது அறுவை மருத்துவம்”(1989), “வயிற்று நோய்களும் அவற்றின் மருத்துவமும்” (1991) என்ற புத்தகங்களுக்காக வென்றவர். இதுதவிர வி.ஜி.பி. சந்தனம்மாள் அறக்கட்டளை, சிறந்த இலக்கியப் பரிசையும், தமழகம இந்திய மருத்துவக் கழகத்தில் (1991) சிறந்த ஆய்வு, சமூகப் பணிக்காகக் கேடயத்தையும் பெற்றவர் (1992), இதுவரை மருத்துவ நூல்கள் 16 எழுதியுள்ளார். ஆய்வுக் கட்டுரைகள் 16 தேசிய அளவில் படித்தளிக்கப்பட்டு 6 கட்டுரைகள் வெளிவந்துள்ளன. நாள், வார, மாத இதழ்களில் 240 மருத்துவக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. 5வது, 8வது உலகத் தமிழ் மாநாடுகளில் மொழி சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் வாசித்தளிக்கப்பட்டன. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டக்குழு உறுப்பினர்

You Might Also Like