நீதியும் ஒழுங்கும் (1997)
நீதியும் ஒழுங்கும்
க.ப. அறவாணன்
தமிழியல் துறைத் தலைவர்
புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி
மனிதன் தான் தோன்றிய தொடக்க காலத்தில் இயற்கைப் பற்றாக்குறை ஏற்பட்டபோதும்; இயல்பான தேவைப் பசி காரணமாகவும் தவறுகள் செய்ய ஆரம்பித்தான். இதனால் அவனை நெறிப்படுத்த சட்டங்கள் மேலானவர்களால் உருவாக்கப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட சட்டங்கள் கடவுளைச் சார்ந்து எழுந்து தோற்றுப்போன பின்பு, அரசனைச் சார்ந்து எழுந்தன.
தமிழ்ச் சமுதாயத்தைப் பொறுத்த அளவில் தீர்ப்பு வழங்கும் பஞ்சாயத்து முறை, தவறு செய்தவனின் பின்புலத்தைக் கொண்டு தீர்ப்பு வழங்கியதால் தவறு செய்ய மனிதன் மிகவும் அஞ்சினான். இச்சிறந்த முறை பின்பு வேற்று நாட்டவர்களின் ஆட்சி அமைப்பில் கடைபிடிக்காமல் போனதால் குற்றங்கள் பெருகத் தொடங்கின.
ஐரோப்பியர் வந்த பின்பு அவர்கள் தமிழர் நீதி ஒழுங்கை மாற்றி, சாட்சிகள் மூலம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முற்பட்டனர்.
விடுதலைபெற்ற பின்பு, அனைவருக்கும் வாக்குரிமை ஏற்பட்டு நீதி ஒழுங்கைப் போற்றாத அரசியல் சாதி ஒன்று தோன்றியது. இவ்வரசியல் சாதியே ஊழலாக இருப்பதால் மக்களும் ஊழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதனை இன்றைய தமிழகம் (இந்தியாவும்) எடுத்துக்காட்டும். இந்த் நிலை மாறுவதற்கான கூறுகள் தென்படுகின்றனவா என்றால் கேள்விக்குறிதான். என்றாலும், இக்குறைகள் போக்க முடியாதன அல்ல; போக்க முடியும். அதற்கான நடவடிக்கைகள் தமிழகத்திற்கு ஏற்ப எடுக்கப்பட வேண்டும்.
விலங்கே மாந்தன்
மனிதன், மனிதன் ஆவதற்கு முன்பு விலங்காகவே இருந்திருத்தல் வேண்டும். அவன் அடிப்படையில் விலங்கே என்பதை இன்றைய அவனுடைய நடப்புகளும் நாளும் உறுதி செய்த வண்ணமாகவே இருக்கின்றன. அவனுடைய பால் உணர்வும், பசி உணர்வும் மேலிடும்போது, அவன் மனித எல்லையைத் தாண்டி விலங்காட்டம் ஆடுகின்றான். விலங்குகள் கூடத் தன் காமப் பசியும், வயிற்றுப் பசியும் தீர்ந்த பிறகு, அடங்கி விடும்; அடுத்துப் பசி எடுக்கும் வரை அடங்கியே இருக்கும். ஆனால், மனிதம் பசி அடங்கிய பின்னும், அழகான பெண்ணையோ, ஆணையோ காணும்போதும், சுவையான உணவைப் பார்க்கும்போதும், பசி தீர்ப்பு முயற்சியில் இறங்கும். இவ்விரண்டுடன், பிற்காலத்துச் சேர்ந்தது உடைமைப் பசி; அண்மைக் காலமாகச் சேர்ந்திருப்பது வசதிப் பசி (Consuming hungry). அவன் விலங்கினின்று பிறந்தவனே என்பதை டார்வினும் (1809-1882), அவன் விலங்குணர்ச்சி (ஈத்) உடையவனே என்பதைச் சிக்மண் பிராய்டும் (1856-1939), அவன் உடைமை/வசதி உணர்ச்சி உடையவனே என்பதைக் கார்ல் மார்க்சும் (1818-1883) தம் அரிய கண்டறிவுகளால் நிறுவியுள்ளனர். இப்பசிகட்கு மேற்பால், ஒரு பசியை உண்டாக்க உருவாக்கப்பட்டதே அறப்பசித் தத்துவம். இதனைப் பெயர் தெரியா முன்னோர்களும், சமய நிறுவுநர்களும், அறிஞர்களும் சமுதாய நல்லிணக்கத்திற்காக, அவ்வப்போது கண்டறிந்து கூறியுள்ளனர். காலந்தோறும் வற்புறுத்தியுள்ளனர். மனிதவிலங்கை, விலங்கு நிலையினின்று, மானுடநிலைக்கு உயர்த்திச் செல்ல அவர்கள் நேற்று எடுத்த முயற்சியையும், இன்றெடுத்து வரும் முயற்சியையும், நாளை எடுக்க வேண்டிய முயற்சியையும் பறவைப் பார்வையில் பார்ப்பதே இவ்வுரையின் நோக்கம்.
விலங்கு மனிதனாயினமை
நான்கு கால் விலங்கு நிலையில் இருந்த மனிதனைப் பசியும் பட்டினியும் தேவையும், இரண்டு கையும், இரண்டு காலும் உடைய நிமிருந்த மனிதனாக்கின. அவன் அன்று முதல் அச்சத்தின் இருப்பிடம். எனவே அவன் தனியாக வாழவில்லை; கூட்டமாக வாழ்ந்தான். கூட்டம் அளித்த அன்பளிப்பே மொழி; மொழி அவனை மேலும் உயர்த்திற்று. இந்நிலையிலேயே சவாலைச் சமாளிக்க வேண்டிய கட்டங்கள் தோன்றிய போதெல்லாம் அவனை எண்ணவைத்தது; கூடிச் சிந்திக்க வைத்தது; இதன் விளைவாக அவனது உருவநிலை மூளை அருவநிலை ‘மனத்தை’த் தோற்றுவித்தது; சிந்தனையைத் தோற்றுவித்தது. கூட்டத்தில் ஒருவனாகவும், கூட்டமாகவும் வாழ்ந்த அவன், கூட்டத்தில் இயைந்தும், இணங்கியும் வாழ்வதற்காகக் கூட்ட (சமுதாய) விதி முறைகளைத் தோற்றுவித்தான். மனிதனின் இயற்கை உந்துதல்களான காம்ம், பசி, தாகம், சிறுநீர், மல நீக்கம் ஆகியன கூட்ட வாழ்வின் ஒத்திசைவிற்காக ஒழுங்குபடுத்தப்பட்டன. இவ்வொழுக்க விதிகளே பின்னாளில் நடைமுறைகள் ஆயின; அறங்கள் ஆயின; நீதிகள் ஆயின; சாத்திரங்கள் ஆயின; சமய நெறிகள் ஆயின; பிற்காலத்துச் சட்டங்கள் ஆயின. ஆக, ஒரு சமுதாயத்தில் நீதியொழுங்கு பின்காணும் முதன்மைக் காரணங்களால் தோற்றுவிக்கப் பெறும்.
- மானுடம், ஒரு சமுதாயமாக வாழ
- மானுடத்தின் விலங்கியல்பை நெறிப்படுத்த
- மானுடம் மகிழ்வோடு வாழ
நீதி ஒழுங்குகளைத் தோற்றுவித்தவராகவும், நடைமுறைப்படுத்த முயன்றவராகவும் பின்வருவோரைச் சுட்டலாம்.
- மூத்த மக்கள்
- சான்றோர்
- மத நிறுவுநர்
- மத சாத்திர வல்லார்
- அரசன்
- அரசின் சட்ட வல்லார்.
ஆண்டவர் அரசர் சட்டம்
நல்லவர் சிலர், வல்லாரையும், தீயரையும் நெறிப்படுத்தவே, ஆண்டவரையும் சட்டத்தையும் அறிமுகப்படுத்தினர். இதனைச் சாக்ரடீசு, தன் மாணாக்கர் பிளேட்டோவுடனும், அவர் நண்பர்களுடனும் உரையாடும்போது அழகாக வாதித்து வெளிப்படுத்துகிறார். ‘பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்’ என்ற திருவள்ளுவத்திலும் இச் சமுதாயவியற் கருத்தே புதைந்து கிடக்கிறது. நல்லவை வாழ நல்லவர் கண்ட நெறியே நீதி ஒழுங்கு. எனினும், இது மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதையும், அழியா விதி அல்ல என்பதையும் அறிந்த வலிய கயவர் நீதியொழுங்கை மீறும் முயற்சி தொடக்கம் முதல் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்திருத்தல் வேண்டும். இக்கட்டத்திலேயே குழுத்தலைமையும், பின்னாளில் அரசரும், மதநிறுவுநரும் கண்டு கொண்டு, நீதி ஒழுங்கை அரசநெறியாகவும், மதசாத்திர விதியாகவும் ஆக்கியிருத்தல் வேண்டும். விலங்கும், விலங்குநிலை மனிதனும், அன்பிற்குக் கட்டுப்படுதலைவிட அச்சமூட்டும் ஆணைக்கும் அதிகாரத்திற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் கட்டுப்படுதலே பெரும்பான்மை. கடவுள் நம்பிக்கை வழியும், அரசாணை வழியும் நிலை நெறித்தப்பட்ட நீதி ஒழுங்கு, அரச அமைப்பம், குடியரசு அமைப்பும் உருவான பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு சட்டமாக்கப் பெற்றது.
சமூக நோயியல் (Social Pathology) வரையறை
தனி மனிதனின் விருப்பங்களுக்கும், சமூக மதிப்புகளுக்கும் இடையே உள்ள இசைவே சமூக அமைப்பு எனப்பெறும். தனிமனித விருப்பத்திற்கும், சமூக மதிப்பிற்கும் இடையே இடைவெளி தோன்றும் போதும், இசைவு இன்மை தோன்றும் போதும், பெருகும் போதும், சமூக ஒழுங்கு குலைகிறது. இதனை மெமோரியா (Memoria) என்பர். சமூக ஒழுங்குக்குலைவு மக்களிடையேயும், குழுக்களிடையேயும் காணப்படும் உடன்பாட்டு இன்மையை ஒத்துப்போகாமையைக் (Mal-Adjustment) காட்டுகிறது. தலைமுறை தலைமுறையாகச் சமூகத்தால் பின்பற்றப்பெறும் நெறிமுறைகள் வளர்ந்து தனி மனிதனும், தனித்தனிக் குழுக்களும் தன் விருப்பம் போல் வாழ முயலும் போது, வாழும் போது இச்சீர் குலைவு ஏற்படுகிறது. பிரஞ்சு சமூகவியல் மேதை எமில் துர்க்கேம் ‘சமூகத்தின் பல பகுதியிடையே ஏற்படும் சமன் பாட்டுக் குலைவும், சமூக மக்களிடையே காணப்படும் ஒற்றுமை உணர்வுக் குலைவும் சமூக ஒழுங்குக் குலைவிற்குக் காரணங்கள் ஆகும் என்கிறார். சமூக ஒழுங்குக் குலைவும், அதற்குரிய காரணங்களும் சமூக நோய்கள் எனப்பெறுகின்றன. சமூக நோயியல் பின்வரும் மூன்று அடிப்படைகளை ஆராய்கிறது.
- சமூகத்தில் நோய்களை உண்டாக்கும் அடிப்படைகளை ஆராய்வது.
- அதற்குரியவன் யார் அல்லது உரிய குழு எது? பரப்பும் ஆள்/குழு யார், எது என்று ஆராய்வது.
- மேற்கண்ட நோய்களை எவ்வாறு களைவது என்று ஆராய்வது.
மானுடர் இன்றிச் சமுதாயம் இல்லை. அதனைப் போலவே சமுதாயம் இன்றி மானுடர் இல்லை. எனவேதான், மானுடன் சமூக விலங்கு எனக் குறிக்கப் பெறுகிறான். ஒவ்வொருவரும் பின்பற்றத் தகும் பழக்க வழக்கங்களையும், பண்பாடுகளையும், அடிப்படை நம்பிக்கைகளையும் சமூகம், முன் அனுபவங்களை அடியொற்றி வரையறுக்கின்றது. ஒருசிலர் இந்த வரையறைகளை, வரம்புகளை மீறத் துடிக்கின்றனர், மீறுகின்றனர். மீறுதலே சரி என்று வாதிடுகின்றனர். மீறினாலே வாழ முடியும் என்று நம்புகின்றனர்.
- கடவுள் தண்டிப்பார்
- அரசர் தண்டிப்பார்
- சட்டம் தண்டிக்கும்
என்ற மூன்றும் கால வரிசையில், சமுதாயத்தின் நீதி ஒழுங்கை நிலைநாட்டுவதில் செயல்பட்டிருக்கின்றன. கடவுள், அரசர், சட்டம் என்ற மூன்று காலகட்டங்களிலும், கடவுள் நம்பிக்கையும் மக்களிடையே நீதி ஒழுங்கை நிலைநாட்டுவதில் பெரிய அளவு செயல்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் கோம்த் சுட்டும் சமுதாயப் படி நிலைகள் இங்கே எண்ணத் தக்கன. அவை வருமாறு:
- இறைமையியல் நிலை (Theological Stage)
(அ) கடவுளே எல்லாம்
(ஆ) இராணுவப் படையே மேலாதிக்கம் செய்யும்
(இ) அதீத நம்பிக்கை
- நுண்பொருள் கோட்பாட்டியல் நிலை (Metaphysical Stage)
(அ) நுணுக்கமான சக்திகளே எல்லாம்
(ஆ) சட்டங்களே மேலாதிக்கம் செய்யும்
(இ) அரசே அனைத்தும்
- புறமெய்ம்மை நிலை (Positive Stage)
(அ) காரண-காரியம்
(ஆ) தொழிலே மேலாதிக்கம் செய்யும்
(இ) மக்களுக்கே முதன்மை
இன்றைய தமிழ்நாடு
தமிழரைப் பொறுத்தவரை, கோம்த் சொல்வது போன்ற பின்னிரு நிலைகள் முழுமையாக உருப்பெறவில்லை. ஐரோப்பியர் கால இறுதியிலும், இந்திய விடுதலைக்காலத் தொடக்க நிலை வரையிலும் இறைமை நிலை பேரளவு தொடர்ந்த்து. எனவே அறஅச்சமும் தொடர்ந்த்து. 1960களில் மேற்கண்ட அறஅச்சநிலை கீழ்முகம் நோக்கி இறங்கத் தொடங்கி விட்டது.
குற்றங்களின் பெருக்கத்திற்கு மக்கள் தொகை, அரசியல் மாற்றங்கள், பொருளாதாரக் காரணங்கள் முதலாயின அடிப்படைக் காரணங்களே. எனினும், தனி மனிதன் அளவிலும், சமுதாய அளவிலும் விழுமியங்கள் தம் உரிய மதிப்பை இழந்து வந்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கு இல்லை. முற்காலத்துக் கண் மூடி, கடவுளையும் ‘அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார், தண்டிப்பார் முதலான நம்பிக்கைகளையும்’ மக்கள் கொண்டிருந்தனர். அறிவியல் வளர்ச்சியாலும் பருப்பொருள் நாகரிகப் பெருக்கத்தாலும் நாத்திக மதக் கோட்பாடுகளாலும் கடவுளைப் பற்றிய நம்பிக்கை, காலந்தோறும் தேய்ந்து வந்திருக்கிறது. குறிப்பாக, 19, 20ஆம் நூற்றாண்டுகளில் நாத்திகக் கோட்பாடுகளின் பிரச்சாரம் கடவுள் மேல் இருந்த நம்பிக்கையைப் பேரளவு தகர்த்து இருக்கிறது என்று சொல்லவேண்டும். சைன மதத்தாலும், சைன மதக் கோட்பாட்டைப் பின்பற்றிய வைதிகச் சமயத்தாலும் “தன்வினை தன்னைக் கொல்லும்”, “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்”, “செய்த கர்மத்தில் இருந்து தப்பிக்க முடியாது” முதலான கர்மக் கோட்பாடுகளும் 19, 20ஆம் நூற்றாண்டு வாழ்க்கையில் தவிடு பொடி ஆயின. நல்லது செய்வோர் அல்லல்படுவதையும், அல்லது செய்வோர் நல்லது அனுபவிப்பதையும் நேர்முகமாகப் பார்த்து வரும் இந்திய மானுடக் குலத்திற்கு முன் போல வினைக் கொள்கையை நம்ப முடியவில்லை. கடவுள் பிடியில் இருந்தும், கடவுளின் இடத்தில் இருந்தும், கர்மத்தின் பிடியில் இருந்தும் மனிதர் விடுபடவே, தவறுகளையும், குற்றங்களையும் செய்வதில் தயக்கம் காட்டவில்லை. இந்நிலையில் குற்றங்களின் எண்ணிக்கையும், குற்றவாளிகளின் எண்ணிக்கையும் பெருகுவது தவிர்க்க முடியாதது ஆயிற்று. கடவுள், கர்மம் ஆகிய இரண்டின் இடத்தை அரசச் சட்டங்கள் ஓரளவு ற்றி இருந்தன. குறிப்பாக, தொல்காலத்தில் உள்ளூர் நாட்டாண்மை ஆட்சியின் தண்டனை முறைகளும், ஊர் விலக்குக் கட்டுப்பாட்டு முறைகளும், தனி மனிதனை அஞ்சச் செய்தன. இவை இரண்டையும் ஐரோப்பிய நீதிமன்ற முறை அள்ளிக்கொண்டு போய்விட்டது. ஐரோப்பிய நீதிமன்ற முறையும், அதற்குரிய சட்டங்களும் திட்டமிட்டுத் தீமை செய்ய விரும்பும் கொடியவனைக் கட்டுப்படுத்த இயலாதவை என்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. இந்நிலையில், தீயவர்கள் தீமை செய்யப் பேராற்றல் பெற்றவர் ஆயினர். இந்தியாவின் போக்கு பற்றி ஆழ்ந்த கவனம் செலுத்தும் அறிஞர் நானி பல்கிவாலா கருத்து இங்கே பொறிக்கத்தக்கது.
“தார்மீக நசிவு நிலையில் உள்ள ஒரு தேசியச் சமுதாயம் என்பதே இன்றைய இந்தியாவின் சித்திரம். இந்த நிலையில் பல இலட்சணங்களுள் இரண்டு: இலஞ்ச ஊழலும், கட்டுப்பாடு இன்மையும் ஆகும். மகாத்மா காந்தியின் நாட்டில் இன்று வன்முறை அரியணையில் அமர்ந்து இருக்கிறது. சமூகவியலுக்குப் ‘பந்த்’ என்ற கருத்தை நவீன இந்தியா வழங்கி இருக்கிறது.”
தமிழ்நாட்டில்: காலந்தோறும் நீதியொழுங்கு
தமிழ்ச் சமுதாயத்தில் நீதியொழுங்கு கடைப்பிடிக்கப் பெற்ற நிலையைப் பின்வரும் மூன்று பிரிவாக்கிக் கொள்ளலாம்.
- ஐரோப்பியர் வருகைக்கு முன்பு (15 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு)
- ஐரோப்பியர் வருகைக்குப் பின்பும் விடுதலைக்கு முன்பும் (பதினைந்தாம் நூற்றாண்டு முதல் 1947க்கு முன்பு வரை)
- விடுதலை பெற்றதிலிருந்து இன்றுவரை (1947-1997)
ஐரோப்பியர் வருகைக்கு முன்பு
தமிழரால் நீதியும் ஒழுங்கும் பலவற்றில் அறியப்பட்டிருந்தன. சிலவற்றில் அறியப்படாதும் இருந்தன. அறியப்பட்டவற்றை நடைமுறைப்படுத்துவதில் கண்டிப்பும் கவலையும் இருந்தன. அநீதி, ஒழுங்கின்மைக்குத் தண்டனை, கடுமையாக இருந்தது. அநீதியை அநீதியாக அறியாத நிலையும் இருந்த்து.
சான்று: மேல் சாதி, கீழ்ச்சாதிப் பிரிவு; ஆண் பெண் வேற்றுமை; பலதார மணம் முதலியன.
உலக மொழிகளில் மிகுதியாக அற இலக்கியங்களைப் பெற்றள்ள மொழி தமிழ் என்று கருதப் பெறுகிறது. திருக்குறள், நாலடியார், பழமொழி, ஏலாதி, சிறுபஞ்சமூலம், திரிகடுகம், முதுமொழிக் காஞ்சி, ஆசாரக் கோவை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது முதலாய பதினெண் கீழ்க்கணக்கு நீதி இலக்கியங்களும், பிற்காலத்தில் ஔவையார், குமரகுருபர்ர் முதலாயோர் எழுதிய நீதி இலக்கியங்களும் தமிழ் மொழி நீதி இலக்கியங்களால் நிரம்பிய மொழி என்பதைக் காட்டுகின்றன. அது மட்டுமல்லாமல் தமிழர்களிடையே நீதி இலக்கியங்களின் தேவைகள் நிறைந்து இருந்தன என்பதையும் மேற்கண்ட நீதி நூல் வரிசை எடுத்துரைக்கின்றது.
தமிழர் வரலாற்றில் காலந்தோறும் நிகழ்ந்த உட்பூசல்கள், போர்கள், அயல்நாட்டு ஆதிக்கம் ஆகியன மேற்கண்ட செய்திகளை உறுதி செய்கின்றன. சங்கம் மருவிய காலத்தில் தமிழ் இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றாமைக்குக் காரணத்தை ஆராயும் அறிஞர் டி.வி. சதாசிவப் பண்டாரத்தார் எடுத்துரைக்கும் செய்தி கவனத்திற்கு உரியது. அயல் நாட்டார் வரவால் தமிழர் வாழ்வில் ஏற்பட்ட சீர்குலைவே தமிழ் அறிஞர் பலரை நீதி இலக்கியங்கள் எழுதத் தூண்டிற்று.
பண்டாரத்தார் கூற்று முழுமையாக ஒப்புக் கொள்ள இயலாவிடினும் சீர்குலைவு, அற இலக்கிய எழுச்சிக்கு அடிப்படையாயிற்று என்ற உண்மையை ஒப்புக் கொள்ள போதுமானது ஆகும்.
சமூகத்திற்கும், தனி மனிதனுக்கும் இடையே ஏற்படும் இடைவெளிக்குரிய காரணங்களுள் ஒன்று, அயல்நாட்டார் வரவு. ஈதன்றிச் சமூக நோய்க்குரிய குற்றங்கள் தோன்றப் பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றை ஆழமாக ஆராய்ந்த இ.எச். சுத்தர்லேண்டு (E.H. Sutherland) ஆறு காரணிகளை நிரல்படுத்துகிறார்.
- சமயத்தையும், சாதிக் கட்டுப்பாட்டையும் சார்ந்து எழுவது.
- தற்காலிகமான குற்றங்கள், இவை ஒரு நாளில்/ ஒரு வாரத்தில்/ ஓர் ஆண்டில் தோன்றுவது.
- சமுதாயம், சமூகத்தில் ஒருவன் சார்ந்துள்ள குடும்பநிலை, படிப்பு, செய்கின்ற தொழில், வருமானம் முதலானவற்றைச் சார்ந்து எழுவது.
- நிறுவனங்களைச் சார்ந்து எழுவது.
- உடல் சார்ந்து எழுவது.
- உள்ளம் சார்ந்து எழுவது.
இவற்றை மேலும் ஆராய்ந்த அறிஞர் தோப் (Doop) என்பவர், மனித்த் துன்பம் (Human Misery) பெரிதுபடுத்தி மதிப்பிடுதலும் தண்டனைகளைக் குறைவாக மதிப்பிடுதலும், குற்ற விசாரணையும் குற்றப் பகுப்பு பற்றிய அறிவும் என வகைப்படுத்துவார்.
- மனிதத் துன்பம் (Human Misery)
தவறு செய்யத் தூண்டுகின்ற் துன்பங்கள், போதிய கல்வி அறிவு இல்லாமை, குடும்பத்தின் ஏழ்மை நிலை, உள்ளம் பிறழ்ந்த நிலை, கட்டுப்பட இயலாத உணர்ச்சி.
- பெரிதுபடுத்தி மதிப்பிடுதலும், தண்டனைகளைக் குறைவாக மதிப்பிடுதலும் (Over estimation of rewards and under estimation of punishments)
இந்தியா போன்ற நாடுகள் முதலாளித்துவத்தின் ஒரு கூறாகிய போட்டிப் பொருளாதாரத்தைப் பின்பற்றுகின்றன.
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் போட்டி திணிக்கப்படுகிறது. அதில் ஒருவர் பெறும் வெற்றி பெரிய அளவில் விளம்பரப்படுத்தப் பெறுகிறது. இலாட்டரிச் சீட்டில் சிலரே பரிசு பெற, விளம்பரத்தால் பல்லோர் மனத்திலும் இலாட்டரிச் சீட்டு வாங்கும் ஆர்வம் பெருக்கப்படுகிறது. அதனைப் போலவே வணிகத்திலும், தொழிலிலும் ஈடுபடும் மனிதர் குறுக்கு வழியில் சம்பாதிக்க எண்ணுகின்றனர். குறுக்கு வழியில் வெற்றி பெற்றால் பெரும் இலாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவரைத் தவறு செய்யத் தூண்டுகிறது. எனவே, வெகுவாகத் தவறு செய்கிறார். சான்றாக, இரயில்வே துறை உயர் சோதனை அதிகாரி எனச் சொல்லிக் கொண்டு நாள்தோறும் முதல் வகுப்புக் குளிர்பதனப் பெட்டியில் டிப்டாப்பாகப் பயணம் செய்த ஒருவன் கண்டுபிடிக்கப்பட்டான் (11.2.91, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு).
- குற்ற விசாரணை, குற்றப் பகுப்பு பற்றிய அறிவு ஐரோப்பியர் வரவால் இந்தியச் சிற்றூர்களில் இருந்த கிராமத் தன்னாட்சி முறை முற்றுமாகச் சீர்குலைந்து விட்டது. அந்த அந்தத் தெருவில் அல்லது ஊரில் நிகழும் குற்றங்கள் பாதிக்கப் பட்டோரால் ஊர்ப் பஞ்சாயத்துக்குக் கொண்டு வரப் பெற்றுக் குற்றவாளிகள் விசாரிக்கப் பெற்றனர். குற்றவாளியின் இயல்பு, அவன் குடும்பப் பின்னணி, அவனது பழைய வாழ்க்கை ஆகிய அனைத்தையும் நேர்முகமாக அறிந்திருந்த பஞ்சாயத்தாரும், ஊராருங் கூடியவரை சரியான நீதியை வழங்க முடிந்தது. ஐரோப்பியர் வரவால் நீதிமுறை உள்ளூரில் இருந்து வெட்டப் பெற்று, மாவட்ட நீதிமன்றங்களுக்குக் கடத்தப்பட்டது. உண்மையில் நீதியும் கடத்தப்பட்டது. மாவட்ட நீதிபதியோ அரசு வழக்குரைஞரோ, பிற வழக்குரைஞர்களோ வாதி பிரதிவாதி ஆகியோரின் மெய் வாழ்க்கையைப் பெரும்பாலும் அறிந்து இருப்பதில்லை. அவர்தம் கை (பணம்) வாழ்க்கையை மட்டுமே அறிந்து இருப்பர். எனவே, நீதி எளிதாக விலை பேசப் பெற்றது. சட்டம் பெருகப் பெருகக் குற்றம் பெருகும். அவற்றின் வழிச் சமூக நோய்கள் பெருக வசதியாயிற்று. தற்போது சமூக நோயைப் பரப்பும் குற்றவாளி தன்னுடைய குற்றத்தின் அளவு, அதற்குரிய தண்டனை அனைத்தையும் தெளிவாக அறிந்து இருக்கிறான். என்ன என்ன வகையில் செய்தால் சட்டங்களைக் கையில் போட்டுக் கொள்ளலாம், தப்பிக்கலாம் என்பதையும் அறிந்து வைத்திருக்கிறான். சான்றாக, கொலை செய்யும் ஒருவன் கையில் ரப்பர் உறையை மாட்டிக் கொலை செய்கிறான். தடயம் கிடைத்தால்தானே காவலர் வழக்காட முடியும். எனவே, தடயத்தை மறைப்பதில் வெற்றி பெறுகிறான். இந்திய நீதிமுறை நிரபராதிகளைத் தண்டிப்பதிலும், குற்றவாளிகளை விடுவிப்பதிலும் முன்னிடம் பெற்றுள்ளது. அனைத்துப் பாவங்களையும் செய்த ஆட்டோ சங்கர் ரூர்கேலாவில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்பெற்று இரண்டு ஆண்டுகள் விசாரிக்கப் பெறுகிறான். ஈழத் தமிழர் விடுதலைக்காக உண்மைக் குரல் கொடுத்த நகைமுகன் விசாரணையே இல்லாமல் கைது செய்யப்படுகிறான். எனவே, சமூகக் குற்றங்களைப் புரிவோர் நல்ல அறிவாற்றல் உடையவராகவும், குற்றங்களைப் பற்றியும் அவற்றின் தண்டனைகளைப் பற்றியும் போதிய அறிவு பெற்றவர்களாகவும் அவ்வறிவினைச் சாதகம் ஆக்கிக்கொண்டு ஒருசில நுணுக்கமான இடங்களில் தன்னுடைய திறமையால் குற்றத்தை இழைத்து விட்டுத் தப்பித்துக் கொள்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.
பழைய தமிழகத்தில் சமுதாயத்தை ஆள்வதற்கு என்று சட்டப்புத்தகம் எதுவும் தனியே இருக்கவில்லை. அந்தந்த ஊரிலும், அரசிலும் பின்பற்றப்பட்டு வந்த நீதிமுறைகளே சட்டமுறைகளாகப் போற்றப் பெற்றன. மக்களிடையே வழங்கும் பழமொழிகளும் நீதிக்கதைகளும் மறைமுகமாகப் பழங்காலச் சட்டங்களாக இருந்தன. பெரும்பாலும் குற்றவாளிகளுக்குத் தண்டனை கடுமையாக இருந்தது. சான்றாக, திருட்டுக்கு மரணதண்டனை விதிக்கப்பெற்றது. இச்செய்தி,
’கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று’
என வரும் சிலப்பதிகாரப் பாண்டிய மன்னன் கூற்றால் தெளிவாகிறது. சிலம்பைத் திருடியவன் என்பதால் கோவலன் கள்வன் ஆகிறான். எனவே, அவன் மரண தண்டனைக்கு உள்ளாகிறான். கொடியவர்க்குக் கடுந் தண்டனை பொதுவாக விதிக்கப்பட்டதைப் பின்வரும் திருக்குறள் உணர்த்துகிறது.
’கொலையில் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்
களைகட்டத னோடு நேர் (550)
சிற்றூர்களில் மழை இல்லாக் காலங்களில் கொடும்பாவி கட்டி இழுக்கும் பழக்கமும் இங்கே இணைத்து நினைக்கத் தக்கது. நல்லோரால் மழைபொழியும் எனும் நம்பிக்கை இருந்ததை ‘நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை’ எனும் ஔவை மொழி உறுதி செய்யும். நல்ல பண்பு உடையவர்கள் இருப்பதனாலும் உலகம் நிலை பெற்றுள்ளது. இதனைப் ’பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அது இன்றேல் மாண்புக்கு மாய்வது மன்’ (996) எனும் குறள் கூறும். நல்லவர் இருப்பு உலகத்திற்கு நல்ல மழையை நல்கும் என்ற நம்பிக்கையின் மறுபக்கம், கொடியவர் இருப்பு உலகத்திற்கு நல்லது அன்று, அவர் உயிருடன் இருப்பின் மழை பொழியாது. எனவே, ஊரில் தீர்மானிக்கப் பெற்ற கொடியோர் ‘கொடும்பாவி’ எனக் கருதப் பெற்றுக் கொல்லப்பெற்றார். அவர் சடலம் தெருத் தெருவாக மண்ணில் கிடத்தி இழுத்துச் செல்லப்பட்டது என்ற உண்மையைக் ’கொடும்பாவி கட்டி இழுக்கும் பழக்கம்’ நினைவுபடுத்துகிறது. பழமொழிகள், மரபுகள், நம்பிக்கைகள் தவிர, அவ்வக்காலங்களில் எழுதப்பட்ட அற இலக்கியங்களும் ஒருவகைச் சட்டப் புத்தகங்களாகப் பயன்பட்டு வந்தன.
தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாக இருந்தமை கொண்டு தமிழர் நீதியிலும் ஒழுங்கிலும் மேல் நிலையில் வாழ்ந்தனர் என்று முடிவு கட்டுதல் இயலாது. தமிழர் அற அறிவினர்; உணர்வினராக இருந்தனர் என்று வேண்டுமானால் கொள்ளலாம். காரணம், தமிழரால் அறியப்பட்டிருந்த அளவிற்கு அறங்கள் கடைப்பிடிக்கப் பெறவில்லை. அதற்குப் பல காரணங்கள். ஆண்ட அரசுகள், நீதி ஒழுங்குகளை முன்னிலைப் படுத்திப் பரப்பவில்லை என்று தோன்றுகிறது.
கல்வெட்டில் கன்பூசியசு; சொல்வெட்டில் திருவள்ளுவம்:
சீன அறிஞர் கன்பூசியசு (ஒலிப்பு: குவங்கு-பூ-ட்சூ = Kung Fu Tze) கி.மு. 551 முதல் 478 வரை வாழ்ந்த சீனத்துத் திருவள்ளுவ ராவார். சீன மக்களின் பண்பாடு சீனத்தையே ஒரு குடும்ப்ப் பாசத்துடன் பிணைத்துச் செல்வது. அதனை அற நோக்கில் வற்புறுத்தும் கன்பூசியசின் கருத்துகளைச் சீன அரசர்கள் போட்டி போட்டுக் கொண்டு கற்பலகைகளில் பொறித்து வைத்திருந்தனர். ஹான் அரச மரபின் காலத்தில் (கி.பி. 175-183) கல்லூரி ஒன்றின் வாயில் சுவரில், ‘சிறப்பு மிக்க கல்வி’ என்னும் கன்பூசியசின் நூல் நாற்பத்தாறு கற்பலகைகளில் பொறித்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது அதனுடைய சிதைந்த முந்நூறு துண்டுகள் கிடைத்துள்ளன. அவற்றிலிருந்தே கன்பூசியசின் நூல் பதிப்பிக்கப்பெற்றது. நாம் இங்கே கருத வேண்டியது: ஓர் அறிஞரின் அறவுரை, அவ்வின அரசர்களால் எவ்வாறு போற்றப்பட்டது என்பதையே ஆகும். திருக்குறள் முதலிய அறநூல்களுக்கு இத்தகு அரச அங்கீகரிப்பு அளிக்கப் பெறவில்லை என்பதும், அதே சமயத்தில் வருணாசிரமம் பேசும் மனுஸ்மிருதிக்கு, பல்லவர், சோழர், பாண்டியர், சேரர், நாயக்கர், மகாராட்டிரர் எனத் தமிழ் நாட்டை ஆண்ட அனைவருமே அங்கீகாரம் கொடுத்துவந்தனர். தம் கல்வெட்டுகளிலும் மெய்க்கீர்த்திகளிலும் மனுஸ்மிருதியைப் பெரிதும் போற்றினர் என்பதும் எண்ணத் தக்கவையாகும். புத்த தருமத்தைப் பரப்ப அசோகமன்னன் மேற்கொண்ட பன்முனை முயற்சியைப் போலத் திருவள்ளுவத்திற்கு எந்த மன்ன்னும் செயல்புரியவில்லை.
தமிழ்நாட்டை அவ்வக் காலத்து ஆண்டுவந்த அயல் மொழி இன அரசர்க்குத் தகவும், நீதி ஒழுங்கு பற்றிய நினைப்பு மாறி வந்திருக்கிறது. ஒரு காலத்து நீதி எனக் கருதப் பெற்றது இன்னொரு காலத்தில அநீதியாகவும், அதற்கு மறுதலையாகவும் கருதப்பட்டு வந்திருக்கிறது. கைக்கிளை என்ற ஒரு தலைக்காமம், பெருந்திணை என்ற பொருந்தாக் காம்ம், தாழ்ந்தோர்தம் ஒழுக்கமாக ஒப்புக் கொள்ளப்பட்டது; பாலை நிலத்தில் ஆறலைக் கள்வர் வழிப்பறி செய்வது இயல்பாகக் கருதப் பெற்றது. பொது இட ஊறு, பொது நல ஊறு முதலாயின பெரிதாகக் கண்டிக்கப் பெறவில்லை. போர்ச் செயல், கடமையாகக் கருதப்பெற்றது. இது அக்கால நிலை. ஒழுக்கங்கள் எவை என்று தீர்மானிப்பதில், மதம் பெரிய இடத்தைப் பெற்றிருந்த்து. இது அக்கால நிலை எனினும், பின்பற்றப் பெறாவிடினும், அநீதி எது, ஒழுங்கின்மை எது என்பதை முன்னோர் பெரிதும் அறிந்தே வைத்திருந்தனர். ஊரளவில் அறிந்து வைத்திருந்த அறங்கள் பெரிதும் கடைப்பிடிக்கப் பெற்றே வந்தன.
- ஐரோப்பயர் வருகைக்குப் பின்பு – விடுதலைக்கு முன்பு வரை
ஐரோப்பியர் வருகை, ஓர் அரசியல் வருகை என்பதோடு மட்டுமின்றி, மொழி, மத, நாகரிக, பண்பாட்டு வருகையாகவுமே தமிழரிடையே அமைந்தது. தமிழர் பின்பற்றியும் பேசியும்வந்த நீதி ஒழுங்குகள், ஐரோப்பியரால் பெரிய அளவு மாற்றப் பெற்றன என்று கருத வேண்டும். தமிழரின் நீதியொழுங்கு, சங்க காலத்திற்குப் பின்பு, களப்பிரர், பல்லவர், நாயக்கர், மகாராட்டிரர் வரவால், இந்தியர்தம் நீதி ஒழுங்காயிற்று. இந்துமத வழியாயிற்று; இசுலாமியர் வரவால், இசுலாமியர் வழியாயிற்று. ஐரோப்பியர் வரவால் உலகளாவிய/ கிறித்தவ மயமாயிற்று. இம்மாற்றங்களில், அயன்மை இடமும், இனமும், மதமும், பண்பாடும் பேரிடம் பெற்றன.
சான்றாக, விதவை மணம், மறு மணம், தீண்டாமைக்கு எதிர்ப்பு பொது இடப் பொறுப்பு முதலிய ஒரு காலத்து அநீதி எனக் கருதப் பெற்றவை, இப்போது சமநீதிகளாயின; அவை அரசால் சட்டமாக்கப் பெற்றன. ஒழுங்கை நிலை நிறுத்துவதில் ஐரோப்பிய அரசு, மிகக் கடுமை காட்டிற்று.
- விடுதலை பெற்ற பின்பு
ஐரோப்பியர் நிலைநிறுத்திச் சென்ற நிலை பெரிய அளவு, சீர் குலையத் தொடங்கியது. அனைவருக்கும் வாக்குரிமை, நீதி ஒழுங்கைப் போற்றாத; போற்ற மறுக்கிற அரசியல் சாதி ஒன்றை உருவாக்கிற்று; இவ்வரசியல் சாதியே ஆதிக்கச் சாதியாகி, நீதிமன்றம், நிருவாகம் ஆகியவற்றையும் ஆட்டி உருட்டித் தன் கையில் போட்டுக் கொண்டது.
இன்னொரு முனையில், அறிவியல் தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளின் வருகை, மனிதனை முன் நிறுத்திற்று. நிறுத்தியதால் ‘தெய்வம்’ பின் நிலைக்குச் சென்றது; மக்கள் மனத்தில் கடவுள் பயம் குறைந்த்து. சமய வாதிகள் ஏற்படுத்தி நிலை நிறுத்தி இருந்த கர்மபயமும் கட்டுக் குலைந்த்து. புதிய அரசியல் சூழலில், தீவினைகள் அனைத்தும் செய்வார், உயர் நிலை எய்துவதும், நல்வினைகள் செய்வார், இழிநிலை எய்துவதும் கண்கூடான காட்சிகளாகவும் சாட்சிகளாகவும் ஆன பின்பு, கர்மத்தின் மேல் உள்ள அச்சமும் அகன்றுவிட்டது. சட்டத்தின் செயல்முறையும், நம்பிக்கைக்கு அப்பாற் சென்று விட்டது ஓர் அண்மைச் சான்று.
5 பேரைக் கொலை செய்தவருக்குத் தூக்கு
“ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரைக் கொலை செய்த கோவிந்தசாமிக்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு தூக்குத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, தகுந்த சாட்சியங்கள் இல்லை என்று ஈரோடு நீதிமன்றத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். நிலத் தகராறு காரணமாகத் தனது சித்தப்பா, சித்தி, அவர்களது இரண்டு மகன்கள், மகளை வெட்டிக் கொன்றதாகக் கோவிந்தசாமிக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது 37 வயதான கோவிந்தசாமிக்கு 10 வயதில் ஒரு மகளும், இரண்டு வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
வழக்கு விவரம்:
ஈரோடு கொண்டயபாளையத்தைச் சேர்ந்த நாகமலைக் கவுண்டர், அவரது மனைவி பொன்னாத்தாள், அவர்களது மகன்கள் பாலசுப்பிரமணியம், மூர்த்தி மற்றும் மகள் செல்வி ஆகியோர் 1984 மே 30ஆம் தேதி இரவு கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருந்தனர்.
நடு இரவில் அவர்கள் ஐந்து பேரும் தூங்கிக் கொண்டிருந்தபோது கோவிந்தசாமி வீச்சரிவாள் மூலம் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.
கொலை செய்ததைப் பார்த்த நேரடிச் சாட்சிகள் இல்லை என்று ஈரோடு நீதிமன்றத்தால் கோவிந்தசாமி விடுதலை செய்யப்பட்டார்.
அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு முறையீடு செய்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒய். வெங்கடாச்சலம், வி. பக்தவச்சலம் ஆகியோர் இவ்வழக்கை விசாரித்து அளித்த தீர்ப்பு விவரம்:
5 பேரை ஒருவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முடியாது என்று கீழ்மன்றம் கூறியுள்ளது. சம்பவத்தை நேரடியாகப் பார்த்த சாட்சிகள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இது தவறாகும். வழக்கு சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களைக் கீழ்மன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.
இந்தச் சம்பவம் இரவு 11 மணிக்கு நடைபெற்றுள்ளது. மேலும் சம்பவம் நடைபெற்ற வீட்டைச் சுற்றி வேறு வீடுகள் இல்லாததால் அவர்கள் சத்தம் போட்டிருந்தாலும் வெளியே கேட்கும் வாய்ப்பு இல்லை.
இது ஒரு திட்டமிட்ட கொலையாகும். கோபத்திலோ, திடீரெனவோ இந்தக் கொலை செய்யப்படவில்லை. மிகக் கொடூரமான முறையில் இக்கொலைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொலை செய்தவரை உயிருடன் விட்டால் அது சமூகத்துக்குப் பாதகமாகிவிடும். அவருடன் உள்ள மற்றவர்களுக்கும் பாதுகாப்பில்லாமல் போய்விடும். அதனால் குற்றம் சாட்டப்பட்டுள்ள கோவிந்தசாமியைத் தூக்கில் இடவேண்டும். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவருக்கு 30 நாட்கள் அவகாசம் தரப்படுகிறது.
தூங்கிக் கொண்டிருந்த தனது உறவினர்களைக் காய்கறிகளை நறுக்குவதுபோல் மிக்க கொடூரமாகக் கொலை செய்துள்ளார். அவர்களது கழுத்தை இரக்கமில்லாமல் பொறுமையாக வெட்டிக் கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் தூக்குத் தண்டனையைத் தவிர வேறு தீர்ப்பு வழங்க வாய்ப்பே இல்லை என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.”
– தினமணிச் செய்தி: (செப். 10-1997)
எஞ்சி நிற்பது மனச்சான்று ஒன்றுதான். தலைமுறை தலைமுறையாக வற்புறுத்தப்பட்டுவந்த அற எண்ணங்கள் முதிய தலைமுறையினரிடமும், பெண்டிரிடமும், சிற்றூர் வாசிகளிடமும், அவர்களின் செல்வாக்குடையவரிடத்திலும் இழந்து வந்தாலும், நீதி ஒழுங்கு நிலைப்பாடு பற்றிய நம்பிக்கை முற்றுமாகத் தளர்ந்து விடவில்லை என்பதற்கு இக்காலத் தெரிவு செய்யப் பெற்ற தமிழ் ஏடுகளும் இதற்குக் காரணம்.
நீதியொழுங்குகள் தோற்பதற்கான காரணங்கள்
நீதி ஒழுங்கு பற்றிய அற எண்ணங்கள் ஏன் தோற்கின்றன. இதற்கு மூன்றை முதன்மைக் காரணங்களாகச் சுட்டலாம்.
- மக்கள் அறியாத போது
- மக்கள் நம்பாத போது
- மக்கள் அனைவரிடமும் நடைமுறையாகாத போது.
எனவே குறிப்பிட்ட அறம், அது பற்றிய அறிவு, அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மக்களை நம்பவைத்தல் என்ற மூன்றும் ஒருங்கு நிகழ்தல் வேண்டும். குடும்பக் கட்டுப்பாடு பரப்பப்பட்டது போல நேர்மையாக இருத்தல் வேண்டும் என்பதும், நேர்மையானவரை முன்னிறுத்துதல் என்பதும் செயலாக நிகழ்தல் வேண்டும். இதில் சாதி, மத, மொழி குறுக்கீடு இருத்தல் கூடவே கூடாது. திருடுபவன் குற்றவாளி எனக் கருதப்படுவதைவிட, அவன் என் சாதி, மதம், மொழி என்பன முன்னின்று நடுவுநிலைத் தீர்ப்பைத் தடுக்கும் நிலை போயாக வேண்டும். இதற்குத் தக நம் அரசியல், சமுதாயப் பொருளாதாரப் போக்குகள் மாற்றம் பெற்றாக வேண்டும்.
நாளை: நீதியும் ஒழுங்கும்
நாளைய அறநோக்கு வாழ்க்கைக்கு வழிமுறை யாது?
- சமுதாயச் சமத்துவம்
- பொருளாதாரச் சமத்துவம்
என்ற இரண்டையும் நிலைநாட்டுதல் மூலமே சமுதாய அறம் சாத்தியமாகும். இதனைக் கொண்டு வருதல் செல்வாக்கு இல்லாத அறிஞர் கையிலும் இல்லை; மதவாதி கையிலும் இல்லை; அரசியல்வாதி கையில்தான். அரசியல்வாதியைத் தன்னல வெறிக்கு உள்ளாக்கியது. நாம் தற்போது கடைப்பிடிக்கும் அரசியல் சாசனமே. வளர்ந்த ஐரோப்பிய நாட்டைக் குறிப்பாக இங்கிலாந்து நாட்டு அரசியல் சாசனத்தைப் படியெடுத்து எடுத்துக் கொண்டமையால், இந்தியச் சிக்கல்களுக்கு, அதில் தீர்வு இல்லாமற் போய் விட்டது.
- மேலிருந்து கீழ்வரும் அமைப்பை மாற்றிக் கிராமத்திலிருந்து மேல் நோக்கிச் செல்லும் அதிகார அமைப்பை – ஆளும் அமைப்பை அமைத்தல் வேண்டும்.
- சாதி, மத, மொழிச் சார்பை எந்த வடிவிலும் ஊக்குவிக்கக் கூடாது.
- தண்டனை முறைகள் இந்தியச் சூழலுக்கேற்பவும் பரம்பரைக்கு ஏற்பவும் கடுமையானதாக ஆக்கப் பெற வேண்டும். அப்பாவி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுடன், குற்றவாளி ஒருகாலும் தப்பிவிடக் கூடாது என்பது முன்னிறுத்தப்பட வேண்டும்.
ETHICS:
- (Construed as sing. Or p1) a system of moral principles: the ethics of a culture
- The rules of conduct recognized in respect to a particular class of human actions or a particular group, culture, etc: medical ethics: Christian ethics.
- Moral principles, as of an individual: His ethics forbade betrayal of a confidence.
- (Usually construed as sing) that branch of philosophy dealing with values relating to human conduct, with respect to the rightness and wrongness of certain actions and to the goodness and badness of ethics, deontological ethics.
MORAL:
Integrity, standards, morality, MORALS: ETHICS refer to rules and standards or conduct and practice. MORALS refers to generally accepted customs of conduct and right living in a society, and to the individual’s practice in relation to these: the morals of our civilization. ETHICS now implies high standards or honest and honorable dealing, and of methods used, esp, in the professions or in business: ethics of the medical profession.
VALUES:
Social, the ideals, customs, institutions, etc., of a society toward which the people of the group have an affective regard, These values may be positive as cleanliness, freedom, education, etc. or negative, as cruelty, crime or blasphemy.
Ethics: any object or quality desirable as a means or as an end in itself.
THE RANDOM HOUSE DICTIONARY OF THE ENGLISH LANGUAGE, The Unabridged Edition, P.489.
இன்றியமையாத் துணை நூல்கள்
- க.ப. அறவாணன்; தமிழ்ச் சமுதாயம்: நோயும் மருந்தும், தமிழ்க் கோட்டம், மோகன் நகர், புதுச்சேரி 605 005, 1994.
- க.த. திருநாவுக்கரசு: திருக்குறள் நீதி இலக்கியம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. 1971.
- W. D. Hudson: Modern Moral Philosophy Macmillan and Co., Ltd., U.K. 1970.
க.ப. அறவாணன்:
ஐம்பது நூல்களின் ஆசிரியர். தமிழரின் தாயகம், தமிழ்ச் சமுதாய வரலாறு, தமிழர்தம் மறுபக்கம், படைப்பாளி + சமுதாயம் = இலக்கியம், சமணம் வளர்த்த தமிழ், கவிதையின் உயிர் உள்ளம் உடல் ஆகியன, பரிசு பெற்றவை. முன்னாள் தக்கார் (செனகால்) பல்கலைக்கழக ஆய்வாளர், சென்னை இலயோலா கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத்தலைவர், அனைத்து இந்தியக் கிறித்துவ நிறுவனங்களுள் சிறந்த பேராசிரியர் விருது பெற்றவர்; இவர் பெற்ற அண்மைச் சிறப்பு: Man of the year 1997 – by American Biographical Institute. U.S.A. இந்நூலின் இந்திய ஒருங்கிணைப்பாளர்.