Star Mountain

My travels and other interests

தமிழ்நாடு நேற்று இன்று நாளைபொருளாதாரம்

பொருளாதாரம் (1997)

பொருளாதாரம்
மு. நாகநாதன்
பொருளாதாரத் துறை
சென்னைப் பல்கலைக் கழகம்
சென்னை – 600 005

தமிழகப் பொருளாதாரத்தை ஆய்வு செய்யும் முன்பு தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து, செழித்த, தொன்மையுள்ள பண்பாட்டிற்கு உரியவர்கள் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும். தற்காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாறுதல்களை அளவுகோலாக வைத்துக்கொண்டு, தொன்மையான சமுதாயத்தின் பல்வேறு  கூறுகளை எடை போட்டு விடமுடியாது. பொருளாதாரம் என்ற இயல் தனித்தன்மையைப் பெற்று வளர்ந்ததே கடந்த இரு நூற்றாண்டுகளில்தாம். உலகிலுள்ள மற்ற தொன்மையான நாகரிகத்தில் இல்லாத சிறப்புகளைத் தொன்மைக்கால தமிழர் வரலாற்றில் காணமுடியும். ஆரியர்களுக்கு முற்பட்ட தமிழர் பண்பாடு என்ற நூலில் வரலாற்று ஆசிரியர் பி.டி.சீனிவாச அய்யங்கார் எதிரொலித்த சில கருத்துக்கள் இன்னும் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை, சிறப்பை பறைசாற்றுவதாக உள்ளது. தமிழர்கள் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே தத்துவத்தையும், வாழ்க்கை முறையையும் பற்றி அறிதலில் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருந்தனர். அதுமட்டுமல்லாமல் அக்கால கட்டத்தில் அவர்கள் பின்பற்றிய வாழ்க்கை முறையில் பல உயரிய பொருளியல் நெறிகள் தென்பட்டன. தமிழர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு ஏற்ற நிலப்பகுதியை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று அய்ந்து வகைகளாகப் பிரித்தனர். இந்நிலப் பகுப்பு முறை வெறும் புவியியல் வகைப்பாடாக மட்டுமின்றி நிலத்திற்கேற்ப பொருளியல் உற்பத்தி முறையை மேற்கொண்டனர் என்பதும் புலனாகிறது.

இவ்வாறு இக்கட்டுரை தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தின் மிக முக்கியக் கூறுகளை வரலாறு, அரசியல், சமூக்க் கோணம் போன்ற நோக்கில் காண்கின்றது. தமிழரின் சமூகப் பொருளியல் பார்வை எப்படி அமையவேண்டும் என்பதையும் இக்கட்டுரை வலியுறுத்துகின்றது.

குறிஞ்சி-மலையும் மலையைச் சார்ந்த பகுதியாகவும், முல்லை-காடும் காடு சார்ந்த பகுதியாகவும், மருதம்-வளமிக்க வேளாண்மைப் பகுதியாகவும், நெய்தல்-ஆறு கடலோடு கலக்கும் பகுதியாகவும், பாலை-வறண்டு கிடக்கும் நிலப்பகுதியாகவும் பிரிக்கப்பட்டன. இந்நிலப் பாகுபாடு அந்தந்த நிலப்பகுதியில் உற்பத்திச் செய்யப்பட்ட விளைப் பொருட்களின் தன்மையை எதிரொலிக்கிறது. மேலும் இயற்கையைச் சார்ந்து, சுற்றுச் சூழலைப் பாதுகாத்து மனித நேயத்தோடு மகிழ்வு தரக்கூடிய வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் தமிழர்கள் என்பதற்கு இதைவிட சான்று பகரும் கூறுகள் இருக்கமுடியாது. இந்நில அமைப்பு முறை பல்வேறு கால கட்டங்களில் மாற்றமடைந்தாலும் தமிழர்களுடைய பொருளியல் சிந்தனைகளை உலகத்திற்கு பறைசாற்றக்கூடிய தனித்தன்மை பொருந்தியவை.

சேர, சோழ, பாண்டியர் ஆட்சிக் காலத்தில் தமிழர் பொருளாதாரம் பல்வேறு வளர்ச்சி நிலைகளை அடைந்தது சோழர்களின் காலத்திலும், பல்லவர் காலத்திலும் கட்டப்பட்ட அணைகளும், பாசன ஏரிகளும் வேளாண்மையின் சிறப்பை அறிந்து, சுற்றுச் சூழலைப் பாதுகாத்து உருவாக்கப்பட்ட பொருளாதார சின்னங்களாகும். தற்கால பொருளாதார ஆய்வில் நிலம், உழைப்பு, மூலதனம், அமைப்பு (Land, Labour, Capital and Organisation) ஆகியவைதாம் காரணிகளாக்க் கருதப்படுகின்றன. தமிழர்கள் வாழ்ந்த பகுதி வெப்பப் பகுதிகள் என்பதை அறிந்து நீரை முதன்மையான காரணியாக வைத்துள்ளனர். எனவே தான் வள்ளுவர் “வான்சிறப்பு” என்ற அதிகாரத்தில் இச்சிந்தனையைப் பறைசாற்றியுள்ளார். தமிழர்கள் உருவாக்கிய பொருளாதார அமைப்பு பல அன்னிய தாக்குதல்களால் உருமாற்றம் பெற்றது. இடைக்காலத்தில் வலுப்பெற்ற சாதியக் கொடுமை தமிழர் வாழ்வில், சமூகத்தில் பெரும் அளவில் பின்னடைவை ஏற்படுத்தியது. பதினெட்டாம் நூற்றாண்டில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி ஏற்பட்ட பின் தமிழகப் பகுதிகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இருப்பினும் மேற்கத்தியப் பொருளாதாரக் கொள்கையின் தாக்கங்கள் கிராமங்களைச் சென்று அடையவில்லை. வெள்ளை ஏகாதிபத்திய பொருளாதாரச் சுரண்டல் முறை தமிழர் வாழ்விலும், அமைப்பிலும் சில மாறுதல்களை உருவாக்கின. சமுதாயம் சார்ந்த பொருளாதார அமைப்புகள் அரசு சார்ந்த பொருளாதார அமைப்புகளாக மாறத் தொடங்கின. நிலப் பண்ணை அமைப்பு முறை மன்னர் காலத்தில் தொடங்கி, வெள்ளையர் ஆட்சியில் முழு அளவில் வலுப்பெற்றது. தமிழ் மாநிலத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இருந்த ஏகாதிபத்தியச் சுரண்டல் 1947 வரை நீடித்தது. பிரிட்டன் இந்தியாவை ஆண்ட காலத்தில் இந்தியாவில் பல சீர்திருத்த இயக்கங்களும், சீர்திருத்தச் சிந்தனையாளர்களும் தோன்றினர். பிரிட்டிஷ் அரசின் சார்பாக ஆட்சி செய்த ஆளுநர்கள், உயர் அலுவலர்கள் சிலர் இந்தியக் குடிமக்கள் முன்னேற்றம் அடைய பல நடவடிக்கைகளை எடுத்தனர். சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை, சட்டமன்றத் துறை போன்ற துறைகளில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பல கல்விச் சாலைகள் உருவாக்கப்பட்டன. சாலைப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, வான் ஊர்திப் போக்குவரத்து, இரயில் போக்குவரத்து ஆகிய துறைகள் ஏற்படுத்தப்பட்டன. பின்னால் விரிவாக்கம் செய்யப்பட்டன. இதன் பயனாக இந்தியப் பொருளாதாரம் ஒருங்கிணைக்கப்பட்டது. காங்கிரஸ் பேரியக்கத்தின் சுயச்சார்புக் கொள்கை, காந்தியின் தலைமை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்குப் பெரும் அறை கூவலாக இருந்தன. தேசிய முதலாளிகள், விவசாயிகள், உயர் குடிமக்கள், ஆங்கிலக் கல்வி மூலம் பட்டம் பெற்ற நடுத்தர வகுப்பினர் ஆகியோர் காங்கிரசின் கொள்கைகளை ஆதரித்தனர். எனவே பிரிட்டானிய அரசு தனது சுயநலத்திற்காகவும், வளர்ந்துவருகின்ற காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கினைக் கட்டுப்படுத்துவதற்காகவும் இந்தியப் பொருளாதாரத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சென்னை, கல்கத்தா, பம்பாய் போன்ற பெரும் நகரங்கள் தொழில் துறையில் வளர்ச்சி அடையத் தொடங்கின. இந்தப் பிண்ணனியில்தான் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியையும் ஆய்வு செய்ய வேண்டும்.

மக்கள் தொகை பெருக்கம் 1941க்கு பிறகு அதிகரிக்கத் தொடங்கியது. 1941 ஆம் ஆண்டிற்கும் 1951 ஆம் ஆண்டிற்கும் இடையே நான்கு விழுக்காடுகளும், 1961 க்கும் 1971 க்கும் இடையே பத்து விழுக்காடுகளும் அதிகரித்தது. 1991 ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி தமிழகத்தின் மக்கள் தொகை 55.54 மில்லியன். தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 21.6 ஆகவும், இறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 8.5 ஆகவும் உள்ளன. குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 59 ஆக உள்ளது. தமிழக மக்கள் தொகையில் ஆதி திராவிடர்கள் 19 விழுக்காடும், ஆதிவாசிகள் 1 விழுக்காடும் உள்ளனர். வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் மக்கள் பெரும்பாலும் இந்தப் பிரிவைச் சேர்ந்தவரே. தமிழகத்தில் மக்களின் சராசரி ஆயுள் காலம் 61 வயது ஆகும். தென் மாநிலங்களில் கேரள மாநிலம் தமிழகத்தைவிட முன்னனியில் உள்ளது. தமிழகத்தில் ஆயுள் காலம் 1950 ஆம் ஆண்டிற்கு பிறகு 40 வயதிலிருந்து 61 ஆக உயர்ந்திருப்பினும் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. குறிப்பாகப் பெண் குழந்தை இறப்பு விகிதம் மிக அதிகம். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில பகுதிகளில் பெண் சிசுக்கொலைகள் அதிகமாக இருப்பது கவலை அளிக்கக் கூடிய செய்தியாகும். மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னனி மாநிலமாக்க் திகழ்கிறது.

வேளாண்மைத் துறை

1991 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, 5.6 மில்லியன் விவசாயிகளும், 7.8 மில்லியன் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களும் தமிழகத்தில் உள்ளனர். விவசாயம் சார்ந்த மற்ற தொழிலாளர்கள் 46 ஆயிரம் பேர்களும், சுரங்கத் தொழிலாளர்கள் 44 ஆயிரம் பேர்களும் உள்ளனர். மற்ற இதர தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் 5 இலட்சம் ஆகும், தமிழ்நாட்டில் விவசாயம் பெரும்பாலான மாவட்டங்களில் பருவமழையை நம்பி இருப்பதால் விவசாய மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சினை தமிழகப் பொருளாதாரத்திற்கு அறை கூவலாக உள்ளது. காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடக மாநில அரசுடன் நீர் பகிர்ந்து கொள்வதில் ஒரு சமூகமான உடன்பாடு ஏற்படாத நிலையில் தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களிலும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்தியா ஏழை மக்கள் அதிகமாக உள்ள நாடு என்று கருதப்பட்டாலும் தமிழ்நாடு அதிக ஏழைமக்கள் கொண்ட மாநிலமாகக் கருதப்படவேண்டிய நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ்வாழும் மக்கள் தொகை 1991 ஆம் ஆண்டு அறிக்கைப்படி 36 சதவிகிதம் ஆகும். வறுமை தொடர்பான புள்ளி விவரங்கள் பற்றி இந்தியப் பொருளாதார அறிஞர்கள் மத்தியில் கடுமையான கருத்து வேறுபாடு உள்ளது. பொருளாதாரச் சீர்திருத்தம் என்று சொல்லப்படுகின்ற தாராளமயமாக்கல் (Liberalization) என்ற கொள்கை 1991 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இக்கொள்கையால் வறுமைக் கோட்டிற்கு கீழ்வாழும் மக்களுக்கு எந்தவிதப் பயனும் ஏற்படவில்லை என்ற கருத்து பல பொருளியல் அறிஞர்களால் கூறப்பட்டு வருகிறது. இந்தியாவின் தேசியத் திட்டக்குழு (National Planning Commission) 1997 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள் 39 சதவிகிதமாக்க் கடந்த அய்ந்தாண்டுகளில் அதிகரித்துள்ளனர் என்று கூறியுள்ளது. அரிசி, சோளம், கம்பு, கேழ்வரகு, தானியவகைககள், பருப்பு வகைகள், சர்க்கரை, பஞ்சு மற்றும் நிலக்கடலை போன்ற பயிர்கள் தமிழகத்தில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. 1950 ஆம் ஆண்டிற்குப் பிறகு அய்ந்தாண்டுத் திட்டக் காலங்களில் பாசன வசதிகள் பெருகியதால் விவசாய உற்பத்தியும், உற்பத்தித் திறனும் அதிகரித்துள்ளன. வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்களால் உற்பத்தியில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன.

தொழில்துறை

இந்தியாவில் தொழில்மயமாக்கப்பட்ட முன்னனி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது. 1950 ஆம் ஆண்டிற்குப் பிறகு குறிப்பாக முதல் இரண்டு அய்ந்தாண்டுத் திட்டக் காலங்களில் மத்திய அரசின் முதலீடுகள் அதிகரித்ததாலும், பொதுத்துறை நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டதாலும், இத்துறையைச் சார்ந்து  தனியார் துறையும் வளர்ச்சி அடைந்தாலும் தமிழகம் தொழில் துறையில் உறுதியான மாநிலமாக உருவாயிற்று. மூன்றாவது ஜந்தாண்டுத் திட்டத்திற்குப் பிறகு மத்திய அரசின் முதலீடுகள் குறைந்த காரணத்தினால் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிப் பின்னடைவு ஏற்பட்டது. இந்த அடிப்படை உண்மைக் காரணத்தை ஆராயாமல் மாநிலக் கட்சிகள் ஆட்சி செய்த காரணத்தால் தமிழகம் தொழில்துறையில் பின்தங்கி விட்டது என்ற குற்றச்சாட்டும் எழுப்பப்பட்டது.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கு எரிசக்தி முக்கியமாக உள்ளது. நீர்மின் உற்பத்தி, அனல்மின் உற்பத்தி, அணுமின் உற்பத்தி போன்ற துறைகளில் தமிழகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. அண்மையில் தான் இத்துறைகளில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. 1996 ஆம் ஆண்டில் கலைஞர் ஆட்சி ஏற்பட்டவுடன் அய்ந்து தனியார் நிறுவனங்களுடன் 2880 மெகாவாட் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்ய தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் 17 இடங்களில் மின்சக்தி உற்பத்தி செய்யும் ஒப்பந்தங்கள் பரிசீலனையில் உள்ளன.

பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் மக்களுக்குச் சீராக அமைய வேண்டுமானால் சமூகத் துறையும் வளர்ச்சி அடைய வேண்டும். கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி ஆகிய துறைகள் முக்கியமாகக் கருதப்படுகின்றன. தமிழ்நாட்டின் எழுதப் படிக்கத் தெரிந்தோர் விழுக்காடு 62 ஆகும். இவற்றில் ஆண்கள் 73 விழுக்காடும், பெண்கள் 51 விழுக்காடும் உள்ளனர். 1994-95 ஆம் ஆண்டில் ஆரம்பக் கல்வியில் 5.7 மில்லியன் மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 16.5 விழுக்காடு மாணவர்கள் படிப்பை தொடர முடியாமல் இடையில் விட்டு விட்டனர். உயர்க் கல்வியிலும் தமிழகம் இந்தியாவில் ஒரு முன்னேறிய மாநிலமாகத் திகழ்கிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 260ம், பொறியியல் கல்லூரிகளில் 50ம், மருத்துவக் கல்லூரிகள் 29ம் தமிழகத்தில் இயங்கி வருகின்றன.

இந்தியாவில் மருத்துவ வசதிகளை மக்களுக்குப் பெற்றுத் தருவதில் தமிழகம் முன்னனியில் உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவமனைகள், படுக்கை வசதிகள், மருத்துவர்களின் எண்ணிக்கை, மருத்துவத் துறைக்கு அரசு செய்யும் செலவு ஆகிய தன்மைகளில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. கடந்த பத்தாண்டுகளாகத்  தமிழகத்தில் தனியார் துறையில் பல நுட்பமிக்க மருத்துவக் கருவிகள் அடங்கிய மருத்துவமனைகள் தோன்றியுள்ளன. வசதியானவர்களும், பெரும் பணக்காரர்களும் மட்டுமே அணுகக் கூடிய மருத்துவமனைகளும் உள்ளன.

மக்களுக்கு வீட்டு வசதி அளிப்பதிலும், தமிழ்நாடு முன்னனியில் திகழ்கிறது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி நகர்ப்புறங்களில் உள்ளது. ஏறக்குறைய 8 மில்லியன் மக்கள் முதல்நிலை நகரங்களிலும், 2 மில்லியன் மக்கள் இரண்டாம் நிலை நகரங்களிலும், 3 மில்லியன் மக்கள் மூன்றாம் நிலை நகரங்களிலும் வசிக்கின்றனர். கிராமப்புறங்களில் பெரும்பாலோர் கல்வீடுகளிலும்,, குடிசைகளிலும் வாழ்ந்து வருகின்றனர். ஏறக்குறைய 58 விழுக்காடு குடும்பத்தினர் (Households) ஓர் அறை கொண்ட வீடுகளிலும், 25.6 விழுக்காடு மக்கள் இரு அறைகள் கொண்ட வீடுகளிலும், 9 விழுக்காடு மக்கள் மூன்று அறைகள் கொண்ட வீடுகளிலும், 3 விழுக்காடு மக்கள் நான்கு அறைகள் கொண்ட வீடுகளிலும், 1 விழுக்காடு மக்கள் அய்ந்து அறைகள் கொண்ட வீடுகளிலும் வாழ்கின்றனர். தமிழ்நாட்டில் வீட்டு வசதியைப் பெருக்குவதற்கு வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி கூட்டுறவு மையங்கள், தாழ்த்தப்பட்டோருக்கும், ஏழை எளிய மக்களுக்கும் நிதி உதவி செய்யும் மையங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. தமிழகம் கிராமப்புற மக்களுக்கு மின்சார வசதி செய்து தருவதில் நூறு சதவிகிதம் வெற்றியைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்திருப்பினும் ஏழ்மையும் ஏற்றத் தாழ்வும் பெரும் சவாலாக உள்ளது. தமிழ் நாட்டில் காங்கிரஸ், தி.மு.க, அ.இ.அ.தி.மு.க போன்ற கட்சிகளின் ஆட்சி அமைந்த போது பொருளாதாரத்தில் மாற்றங்கள், ஏற்றங்கள், இறக்கங்கள் ஏற்பட்டுள்ளன. பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஆட்சி செய்த காலங்களில் கிராமப்புற ஏழை மக்கள் வாழ்வு பெறவும், ஒதுக்கப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் கல்வி மற்றும் அடிப்படை வசதி அடைய பல நல்வாழ்வுத் திட்டங்கள் அமைக்கப்பட்டன. 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆண்டு வரை ஜெயலலிதா ஆட்சி செய்த காலத்தில் ஊழல், ஆடம்பரச் செலவு அதிகரித்து தமிழகப் பொருளதார வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டது என அரசியல் அறிஞர்களும், பொருளியல் அறிஞர்களும், இதர நோக்கர்களும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் மற்ற மாநிலங்களைப் போலவே மத்திய அரசினுடைய நிதிப்பகிர்வையும், மாநிலங்களுக்குக் கிடைக்கும் வரிகள் மூலமும் பொருளாதார நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிலையில் உள்ளது. 1996-97 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின்படி வருவாய்க் கணக்கில் வரவுகள் ரூபாய் 11,068 கோடியும், வருவாய் கணக்கில் செலவுகள் ரூபாய் 12,106 கோடியும் இருந்தன. இதனால் வருவாய்ப் பற்றாக்குறை ரூபாய் 1038 கோடியாக இருந்தது. தமிழகம் அதிக வரி விகிதங்களை விதிக்கும் மாநிலமாக்க் கருதப்படுகிறது. அண்மையில் கொண்டு வரப்பட்ட தாராளமய மாக்குதல் கொள்கை அடிப்படையில் பல தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும் எண்ணத்தோடு வரிச்சலுகைகளும், வரிவிலக்குகளும், வரி குறைப்புகளும் அளிக்கப்பட்டுள்ளன. 1996 ஆம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட பெரும் அரசியல் மாறறத்தினால் கலைஞர் மு.கருணாநிதி முதலமைச்சராகப் பதவியேற்றார். 1996-97 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தைச் சட்டமன்றப் பேரவையின் முன் 1996 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 17 ஆம் நாள் சமர்ப்பித்தார். கூட்டாட்சித் தத்துவம் இந்தியாவில் செயல்படும் விகிதத்தைச் சுட்டிக்காட்டி மத்திய-மாநில உறவுகளில் மாற்றம் தேவை என வலியுறுத்தினார். இதன் விளைவாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அளித்த மத்திய 1996-97 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு மாநில அரசுகளுக்குக் கொடுக்கும் நிதி அளவு அதிகரிக்கப்படும் என  உறுதி வழங்கப்பட்டுள்ளது. பத்தாவது நிதிக்குழுவின் பரிந்துரையின்படியும், மாநிலக் கட்சிகளின் வேண்டுகோளின் படியும், மத்திய அரசு விதிக்கும் எல்லா வரிகளின் வருவாயிலிருந்து 29 விழுக்காட்டினை மாநில அரசுகளுக்குப் பிரித்துக் கொடுப்பதற்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் வலியுறுத்தலின் அடிப்படையில்தான் இந்த அதிக நிதி ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கலைஞர் ஆட்சி அமைத்து அளித்த இரண்டு நிதி நிலை அறிக்கைகளில் தமிழகம் முன்னேறுவதற்கு ஆக்கபூர்வமான பொருளாதாரச் சமூக  நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பல ஆண்டுகளாக நடத்தப்படாமலிருந்த உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. உள்ளாட்சி முறையில் மக்களாட்சி மலர்ந்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்குப் போதிய நிதி ஒதுக்கீடு 1997-98ஆம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் அளிக்கப் பட்டுளளது. வறுமை ஒழிப்புத் திட்டம், கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம், கல்வி, அடிப்படைச் சுகாதாரம், கதர், கிராமத் தொழில்கள் போன்ற பல்வேறு அதிகாரங்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்பு முறைகளில் புரட்சிகரமான மாற்றங்கள் இந்த நிதி ஆண்டில் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஊழல் பெருகி விட்டதன் காரணமாகப் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளைத் தமிழகம்  சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையை மாற்றுவதற்குப் பல நிர்வாகச் சீர்திருத்த ஆலோசனைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்ள்ளன. நிர்வாகம் பற்றிய தகவல்களைத் தெரிந்து  கொள்ளும் உரிமையை வழங்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் (Right to information) தமிழகத்தில் நிறைவேற்றப்படும் என்று சட்டசபையில் முதல்வர் அறிவித்துள்ளார். ஊழலை ஒழிப்பதற்குப் புதிய சட்டங்களை இயற்றுவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி இராமானுஜம் தலைமையில் ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டிலிருந்து தொழில் தொடங்குபவர்களுக்குப் பல்வேறு வசதிகளும், சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளன. தகவல் தொழில் நுட்பம் விரைவான வளர்ச்சிக்குத் திறவுகோல் எனக் கருதப்படுவதால் இந்தியாவிலேயே முதன் முறையாகச் சென்னை நகரில் தகவல் தொழில் நுட்ப மையம் ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது.

தமிழை முழுமையான அளவில் ஆட்சி மொழியாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அய்ந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குத் தமிழ் கட்டாயப் பாடமாக ஆக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கல்வி பயில்பவர்கள் அனைவரும் தமிழைக் கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை போன்ற துறைகளுக்கு உதவி செய்ய பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல்வரின் நேரடிப் பார்வையில் வளர்ச்சிப் பணி கண்காணிப்புக் குழு (Cell for Monitoring development Programme) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி ஒவ்வோர் அமைச்சரும் மாதந்தோறும் தம் துறையின் திட்டங்களையும், அவற்றின் செயல்பாடுகளையும் துணை அதிகாரிகளுடன் விவாதித்து அதன் விவரங்களை இந்தக் குழுவிற்கு அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறாகத் தமிழகப் பொருளாதாரம் மீண்டும் நல்ல நிலையில் நடைபோட ஆக்கபூர்வமான செயல்திட்டங்களை நடைமுறைபடுத்த முதல்வர் கலைஞர் திட்டமிட்டிருக்கிறார். எனவே தமிழக பொருளாதாரம் நம்பிக்கையுடன் 21 ஆம் நூற்றாண்டை நோக்கிச் செல்லும் என்ற எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் தமிழக மக்களிடம் வளர்ந்துள்ளது.

இக்கட்டுரையில் தமிழகப் பொருளாதாரத்தின் மிக முக்கியக் கூறுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்தை அமெரிக்கா போன்ற நாடுகளோடு ஒப்பிடவும் கூடாது; ஒப்பிடவும் முடியாது. அமெரிக்கா போன்ற நாடுகளில் பொருளாதாரம் மனிதனை இயந்திர மாக்கி, மனித நேயத்தையும், உணர்வுகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது. சமூக ஒழுக்கக் கேடுகளும், பேராசைகளும், தொழில் நுட்பம் சார்ந்த முதலாளித்துவ நாடுகளின் வெளிப்பாடுகள். இது போன்ற பொருளாதார அமைப்பையும், அதனால் ஏற்படுகிற சீரழிவுகளையும் இந்தியா போன்ற நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி பல சிந்தனையாளர்களின் மனத்தில் தோன்றியுள்ளது. பொருளியல் வளர்ச்சி என்பது அச்சமூகத்தின் மொழி, பண்பாடு, வரலாற்றுப் பின்னணி ஆகிய அமைப்புகளின் நல்ல தன்மைகளைக் கெடுக்கா வண்ணம் அமைதல் வேண்டும்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான கிராமங்களில் இந்த அயல்நாட்டுச் சீரழிந்த பண்பாடும், மோகமும் இன்னும் முழுமையாக ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையில் உள்ளன. எனவேதான் தமிழ்ச் சமுதாயத்தில் பல நூற்றாண்டுகளாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்ட நல்ல இயல்புகளும், பொதுமை உணர்வுகளும், பொருளாதாரத்தை நவீன மயமாக்கல் என்ற போர்வையில் அழிந்துவிடக் கூடாது என்ற உயரிய கருத்தினையும் நினைவில் கூறுவது உலகத்தில் பரந்து விரிந்து கிடக்கும் தமிழினத்தின் தலையாயக் கடமையாகும்.

TAMIL NADU ECONOMY – TRENDS AT A GLANCE

 

Select Indicators 1990-91 1991-92 1992-93 1993-94 1994-95
1    Economic Indicators

1    State Income

i    At current Prices (Rs. Crores)

ii   At constant (1980-81) Prices

(Rs. Crores)

Iii  Per caapita income (Rs.)

a   At Constant Prices

 

b   At Current Prices*

 

 

28189

12636

 

 

2275

 

5076

 

 

33030

12976

 

 

2309

 

5878

 

 

 

37822

13370

(RE)

 

2355

(RE)

6663

(RE)

 

 

 

42147

13816

(QE)

 

2410

(QE)

7352

(QE)

 

 

 

47937

14493

(AE)

 

2505

(AE)

8283

(AE)

2 Foodgrains production* 7.50 8.27 8.36 8.26  

9.75

(AA)

3    Index Numbers of industrial

Production (Base: 1981-82)

183.1 190.6 182.6 179.4 195.0
4    Power

i  Installed capacity

(MW at the command of the board)

Ii  Per Capita consumption

(Kilo watt hour)

 

5744

 

332

 

6019

 

360

 

6089.855

 

370

 

6158.105

 

380

 

6578.105

 

390(P)

5    Organised sector Employment (‘000’) 2289.4 2274.3 2313.2 2378.3 2398.8#
6     Index Number of wholesale

Prices (Base: 1970-71)

555.0 631.6 705.6 728.2 800.5
7     State Finance

i   Plan Investment-State schemes

(Rs. Crores)

ii  Per capita Plan Investment (Rs)

 

1591

 

284

 

1726

 

307

 

1935

 

341

 

2235

 

390

 

2771 (RE)

 

479 (RE)

8    Population served per Bank office* 12936 13025 13133 13108
II    Social Indicators

1    Population (Million)

 

55.54

 

56.20

 

56.77

 

57.33

 

57.88

2    VitalRates

i.              Birth Rate (per Thouseand)

ii.             DeathRate (per Thousand)

iii.            Infant Mortality Rate

(per Thousand live births’)

 

21.6

8.5

59

 

20.8

8.8

57

 

20.7

8.4

58

 

19.2

8.0

56

 

3     Primary Education

i. Enrolment (Lakh numbers)

ii. Drop-out Rate (percentage)

 

55.50

20.32

 

56,25

19,31

 

56.72

18.27

 

57.20

17.30

 

57.34

16.34

4     Public Housing

i.          Total Number of Houses constructed

 

19372

 

23170

 

20703

 

20273

 

20801

(RE) – Revised Estimate; # – upto December 1994; (AE) – Advanced Estimate; (QE) – Quick Estimate; (P) – Provisional

(AA) – Anticipated Achievement; * – July-June; Ref : TAMIL NADU AN ECONOMIC APPRAISAL – 1994-95. Govt. of Tamilnadu.

 

மு. நாகநாதன் :

தஞ்சை – திருவாரூரில் பிறந்தவர். பத்து ஆண்டுகளாகத் துறைத்தலைவர் பணி. ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியவர், எழுதிக் கொண்டிருப்பவர். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அங்கேரி, செர்மனி, சீனா ஆகிய நாடுகளுக்குக் கல்விப்பயணம் செய்தவர்.

You Might Also Like