ஆட்சி மொழி – தமிழ் (1997)
ஆட்சி மொழி – தமிழ்
வை.பழனிச்சாமி
தமிழ் வளர்ச்சி-பண்பாட்டுத் துறை
தலைமைச் செயலகம்
சென்னை – 600009.
தமிழர்கள் உழைத்தனர்; ஆனால் உயரவில்லை.
தமிழர்கள் சிந்தித்தனர்; ஆனால் அறிஞராகவில்லை.
காரணம் மொழி முரண்பாடுதான். சங்கம் மருவிய காலத்தும், முகலாயர், நாயக்கர், ஐரோப்பியர் ஆகியோர் காலத்தும் மொழி முரண்பாட்டில் தமிழன் சிக்குண்டு மீளமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டான்.
ஆனால் விடுதலைப் போராட்டக் காலத்தில் அவ்வவ் வட்டார மொழிகளிலே விடுதலை எழுச்சிகள் ஊட்டப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் எழுச்சிபெற வாய்ப்பு ஏற்பட்டது. சுதந்திரம் பெற்றபின்பு மாநில மொழியைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு, ஆட்சிமொழிச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதனால் தமிழ் வளர்ச்சி எய்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.
1968இல் ஆட்சிப்பொறுப்பேற்ற அண்ணா, 5 ஆண்டுகளில் தமிழ் அனைத்து நிலைகளிலும் ஆட்சிமொழியாகவும் பயிற்று மொழியாகவும் ஆகிட வேண்டும் எனப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் அதிகாரிகளின் போதிய ஒத்துழைப்பு இன்மையால் எதிர்பார்த்த அளவு நிறைவேறவில்லை. தற்போது ஆட்சியில் உள்ள கலைஞர் அரசு தமிழ் வளர்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றது. இதனால் நாளை, தமிழ் அனைத்து அளவிலும் ஆட்சிமொழியாகவும், பயிற்று மொழியாகவும் ஆகும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது; அதற்கான போக்குகள் முளைத்துவிட்டன.
“ஆட்சி’ என்பது மொழியால், மொழி சார்ந்த மக்களுக்காகச் செயல்படுவது. மக்கள் ஒரு மொழியினராகவும், அவர்களுக்குரிய ஆட்சியின் மொழி வேறுஒன்றாகவும் அமையுமாயின் அம்மக்களின் மொழியும், பண்பாடும், கலையும், நாகரிகமும், பொருளியலும், உலக அரங்கில் அவர்களைப் பற்றிய சமுதாய மதிப்பீடுகளும் தாழ்ந்து போகும். இதற்குக் காரணம் மக்கள் மொழிக்கும், ஆட்சி மொழிக்கும் தொடர்பின்றிப் போவதேயாகும். இவ்வாறு தொடர்பற்ற நிலை உருவாகாதிருக்க வேண்டுமெனில் ஆட்சி என்பது எம் மக்களுக்கு உரியதோ, அம்மக்களின் மொழியில் செயல்படுவதாக இருக்க வேண்டும். ஆட்சிமொழியாக ஒரு மொழி அமைவதற்கு எனத் தனியே எந்த ஒரு மொழிக்கும் இலக்கணம் எதுவும் வரையறுக்கப் படவில்லை. “ஒரு மொழி ஆட்சிமொழி ஆவதற்கு, அது தாய்மொழி என்னும் தகுதிக்கீடாக வேறு எந்தத் தகுதியும் பெற்றிருக்கத் தேவையில்லை” என்னும் பேரறிஞர் அண்ணா அவர்களின் கருத்து இதனைத் தெளிவாக்குகிறது.
திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள், மன்னர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போற்றப்பெற்றன. மக்களால் பேசப்படும் மொழிகள் என அவற்றுக்கு உயர்வு அளிக்கப்பட்டது.
மாநிலங்களின் ஆட்சியானது மக்களின் வசதிக்கேற்ப அந்தந்த மாநிலங்களின் வட்டார மொழிகளிலேயே நடத்தப்பட்டு வந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்ட பின்னர்தான் அவர்கள் வசதிக்காக, மொழி, இலக்கியம், பண்பாடு பிற மரபுகள் ஒடுக்கப்பெற்று, புதிய மாநிலங்களாக இந்தியா கூறுபடுத்தப்பட்டது. அந்நியர் ஆட்சிக்குட்பட்ட மக்கள் தங்களுடைய மொழியையும், பெருமைமிக்க மரபையும் மறந்தனர். பயிற்று மொழியாகவும், ஆட்சிமொழியாகவும், நிலவிய வட்டார மொழிகள் அகற்றப்பெற்று அவற்றினிடத்தில் ஆங்கிலம் அமர்ந்தது. இதற்கான நடவடிக்கைகளெல்லாம் மெக்காலே என்பவரால் புகுத்தப்பட்டன்.
தமிழ் ஆட்சிமொழியின் தொன்மை
ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ் ஆட்சிமொழியாகத் திகழ்ந்தது. ‘இயற்சொல், திரிசொல், திசைச் சொல், வடசொல்’ எனப் பல்வேறு சொற்றொகுதிகளால் வளர்ச்சியும், மொழிக் கலப்பும் நேர்ந்தபோதிலும், ’ஆட்சி’ செலுத்தும் மொழியாகத் தமிழ் விளங்கிற்று. இன்றைக்கு ஆங்கிலத்தில் கூறப்படும் ஆட்சிச் சொற்கள் பலவற்றைத் தொல்காப்பியம் அக்காலத்திலேயே தமிழில் வழங்கியிருப்பதைப் பார்க்கலாம். தொல்காப்பியர் தந்த பல சொற்களை இன்றும் நாம் பயன்படுத்தி வருகிறோம். மக்களின் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் காலந்தோறும் ஏற்பட்ட கருத்து மாற்றங்களால் தொல்காப்பியர் காலத்துச் சொற்கள் பலவற்றை இன்றைய மொழிவழக்கில் இழந்தும் இருக்கிறோம்.
சங்க காலம்
தமிழரின் தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் எனக் கருதப்படுவது சங்க காலம். இக்காலத்தில் தமிழகத்தை ஆண்ட முடியுடை மூவேந்தர்களின் ஆட்சிமொழியாகத் தமிழே சிறந்தோங்கியது. கலை, நாகரிக, பண்பாட்டு, வணிக உறவுகளைப் பன்னாட்டளவில் தமிழர் விரிவாக்கிக் கொண்ட இக்காலத்தில் பிறமொழித் தாக்குரவும், ஊடுருவலும் நிகழப் பெருவாய்ப்புகள் இருந்தபோதிலும், தமிழ், ஆட்சிமொழி எனும் தகுதியை இழக்காமல், புதுப்புதுச் சொற்றொகுதிகளால் செழித்து வளர்ந்துள்ளது. இன்றளவும் ஆட்சிச் சொற்களாக நாம் பயன்படுத்தி வரும் சொற்களும், இனியும் பயன்படுத்தக்கூடிய சொற்களும் சங்க இலக்கியங்களில் மங்கிக் கிடக்கின்றன. இக்காலத்தை அடுத்த சங்க மருவிய காலத்தும் தமிழில் நிலவிய ஆட்சிச் சொற்கள் பலவாகும். அகவை, அடுக்களை, அணிகலன், அணு, அமைச்சர், ஆய்வு, இலக்கம், இடுகாடு, ஊதியம், கணக்கர், கணக்காயர், சாரணர், சீர்மை, தூது, நடுகல், நாகரிகம், பேணல், மாளிகை, வாங்குநர், விதிமுறை – ஆகிய சொற்களைச் சான்றுகளாகக் கொள்ளலாம். செந்தமிழ் நிலத்து இவ்வாறு வளர்ச்சியுற்று மிக்கோங்கியிருந்த தமிழர் ஆட்சியும், ஆட்சித் தமிழ்ச் சொற்களும் பல்லவர் காலத்தில் பிறமொழி கலப்பிற்குள்ளாயின.
பல்லவர் காலம்
பல்லவர் காலத்தில் மன்னர்கள் வடமொழிப் புலவர்களைத் தங்களது அவையில் அரசவைப் புலவர்களாக்க் கொண்டு போற்றினர். இதன் விளைவாக வடமொழி தமிழகத்தில் ஏற்றம் பெற்றது. காஞ்சிபுரத்தில் ‘கடிகா’ எனும் வடமொழிக் கல்லூரியை உருவாக்கி, வடமொழி நாடு முழுவதும் பரவிடவம், புகழ் பெறவும் வழி காணப்பட்டது. தமிழ் மொழிப் பண்பாட்டையோ, வளர்ச்சியையோ, மேம்படுத்தும் திட்டங்களோ, அமைப்புகளோ பல்லவர் காலத்தில் உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாகப் புலவர்களும் வடநூற் கருத்துகளையும், இதிகாசப் புராணக் கருத்துகளையும் பெரிதெனப் போற்றி மதித்து அவற்றைக் கருப்பொருள்களாக்க் கொண்டு இலக்கியங்களைப் படைத்தனர். இது மட்டுமின்றித் தமிழையும் வடமொழியையும் சரிபாதியாகக் கலந்து எழுதி “மணிப்பிரவாள நடை” எனும் புதிய நடையை உருவாக்கினர். தனித்தியங்க வல்ல தமிழ்மொழி வடமொழிக் கலப்பால் தன்னிலை தாழ்ந்து கலப்புற்று உயர் தகுதியை இழந்து நின்றது.
இவ்வாறு பல்வேறு காலங்களிலும் ஆட்சிமொழியாக விளங்கிய தமிழ் ஆட்சியாளர்களின் ஆதரவுக்கேற்ப உயர்ந்தும், தாழ்ந்தும் நிலவியதை நாம் அறிய முடிகிறது.
பிறமொழித் (மொழியினர்) தாக்குரவுகள்
சங்க காலம் தொடங்கிப் பிற்காலப் பாண்டியர் காலம் வரையில் நடைபெற்ற ஆட்சிகள் பெரும்பான்மையும் தமிழகப் பண்பாட்டையும் மொழிச் சூழலையும் அடிப்படையாக்க் கொண்டே அமைந்தன. அவ்வப்போது வடமொழி ஏற்றம் பெற்ற போதிலும் ஆட்சிமொழியாகத் தமிழே விளங்கியது. இவர்கள் காலத்திற்குப் பின்னர்க் கி.பி. 1526இல் படையெடுப்பால் தமிழகத்தில் கால் கொண்ட முகலாயர், டில்லி சுல்தான்கள் அட்சி, தமிழ் மொழி- பண்பாட்டில் ஏற்படுத்திய இழப்புகள், பாதிப்புகள், தாக்கங்கள் அளவிடற்கரியனவாக உள்ளன. இக்காலங்களில் அரபு, பாரசீக, இந்துஸ்தானி மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்த ஆட்சிச் சொற்களாவன.
இனாம், இருசால், கஜானா, பசலி, மராமத்து, ஜப்தி, ஜமாபந்தி, ஜாமீன், அமீனா, முனிசீப்பு, பிர்க்கா, மசோதா, குமாஸ்தா, பந்தோபஸ்து, பிராது, பஜார், செலான், நமூனா, ரஸ்தா, ராஜிநாமா, முஸாபரி பங்களா, சிரஸ்தார், டபேதார், தாசில்தார், மஸ்தூர், கிஸ்தி, டேவணி போன்ற பல ஆடசிச் சொற்கள். இவை, தமிழில் ஊடுருவி தமிழ்ப் பண்பாட்டைக் குறைத்தன. இவற்றுள் சில சொற்கள் இன்றும் மக்கள் வழக்கில் நிலவி வருகின்றன. இச்சொற்களில் பல இந்தியில் நிலைபெற்றுள்ளமையாலும், மக்கள் தொடர்பில் அன்றாடம் வழங்கப்படுவதாலும் இந்நிலை உள்ளது.
எந்த ஓர் இனமும் கற்றுக்கொள்ளும் மொழியால் அவ்வினத்தின் மொழியில் கலப்பு உண்டாவதில்லை. ஆனால், ஒரு மொழி தன் செல்வாக்கை, தாக்குரவைப் பிற மொழிகளின் மீது ஏற்படுத்தும்போது அம்மொழியில் கலப்பு நேர்கிறது என்பதை, முகலாயர் ஆட்சியின் ஆட்சிச் சொற்களால் அறியலாம்.
நாயக்கர் காலம்
விசய நகரப் பேரரசுகள் இந்தியப் பண்பாட்டையும், நாகரிகத்தையும் இசுலாமியத் தாக்குரவிலிருந்து 300 ஆண்டுக்காலம் காப்பாற்றின எனக் கூறலாம். இருப்பினும், இவர்கள் காலத்தில் தமிழ்மொழி, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மராத்தியம் ஆகிய மொழிகளின் கலப்புக்குள்ளானது.
ஐரோப்பியர் காலம்
கி.பி. 1498 முதல் கி.பி. 1947 போர்ச்சுக்கீசியரும், டச்சுக்காரரும், ஆங்கிலேயர்களும், டேனிஷ்காரர்களும், பிரெஞ்சுக்காரர்களும் வாணிகச் சங்கங்களை ஆரம்பித்து, காலப்போக்கில் நாடாளும் ஆசைக்கு அடிமையாகி இம்மண்ணின் பேரரசர்களானார்கள். இவர்களுள் ஏறத்தாழ 350 ஆண்டுக்காலம் இந்த நாட்டை ஆட்சி புரிந்தவர்கள் ஆங்கிலேயர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பியர்களான கான்ஸ்டன்டின் ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்), ஜி.யு. போப், கால்டுவெல், பெர்சிவல் போன்றவர்கள் மதம் பரப்பும் நோக்கில் வந்த போதிலும் என்றென்றும் நிலைத்து நிற்கும் தமிழ்த் தொண்டாற்றி, தமிழை உலக அரங்கில் உயர்த்திப் பெருமை சேர்த்தவர்கள் என்பதில் ஐயமில்லை. இருப்பினும் ஆட்சியிலும், பிற துறைகளிலும் மொழிக் கலப்புக்குட்படாமல், தமிழ் நிலை தாழாமல் இருந்தது எனக் கருத முடியாது.
ஆங்கிலத்தின் தாக்குரவு
ஏறத்தாழ 350 ஆண்டுகளாக நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் ஆங்கிலத்தைத் தமிழக மக்களின் அன்றாட வாழ்விலும், ஆட்சிமுறைச் செயல்பாடுகளிலும் இரண்டறக் கலந்து விட்டனர். ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலம் ஆட்சிமொழியாக்கப்பட்டதும், ஆங்கிலம் கற்றவர்க்கே அரசுப் பணியில் இடமுண்டு என்ற நிலை உருவாக்கப்பட்டதுமே இதற்குரிய காரணங்கள். வேலைவாய்ப்புக் கிட்டும் என்ற வேட்கையாலும், வணிகத் தொடர்பாலும் தமிழர்களால் கற்கப்பட்ட, பயன்படுத்தப்பட்ட மொழி ஆங்கிலம். ஆனால் இந்த எல்லைகளைக் கடந்து கல்லாதவர் நாவிலும் ஆங்கிலம் இடம் பிடித்து விட்டது. காலை முதல் உறங்குவது வரையில் ஆங்கிலக் கலப்பின்றிப் பேசும் தமிழனைக் காண்பதே அரிதாகிவிட்டது. ஆங்கில மோகம் தமிழர்களிடம் உள்ளதைப் போல் பிற மாநிலத்தவரிடம் இல்லை. ஆங்கிலத்தைத் தமிழ் எனக் கருதிப் பயன்படுத்தும் அறியாமையும் மிகுந்துள்ளது. விடுதலைக்கு முன்னர் ஆங்கிலத்தின் தாக்குரவு- தமிழைத் தாழ்த்தி, அதன் பயன்பாட்டையும் பல்வேறு நிலைகளில் குறைத்து விட்டது. இந்நிலையில் சற்று மாறுபாட்டையும், முன்னேற்றத்தையும் அளித்தது விடுதலை இயக்கமும், விடுதலைப் போரட்டக் காலமும் எனலாம்.
விடுதலைப் போராட்டக் காலம்
இந்திய விடுதலைப் போராட்டக் காலம் வட்டாரமொழிகளுக்கு ஏற்றமளித்த காலம் என்றே கூறலாம். விடுதலை இயக்கத்தின் செயல்பாடுகளும், அறிவிப்புகளும், வெள்ளையரை எதிர்த்த போராட்ட முறைகளும் இந்தியாவின் மாநிலங்களுக்கு அந்தந்த மாநில மொழியிலேயே அளிக்கப்பட்டன. இல்லையெனில், விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு மாநில மொழி மக்களும் பெரும் பங்கு கொள்ள வாய்ப்பின்றிப் போயிருக்கும். இதன் விளைவாகத் தமிழ்ப் பயன்பாடு எழுத்து வடிவிலும், பேச்சு வடிவிலும் மிகுதியானது. கவிதை, நாடகம், திரைப்படம், நாளேடுகள், சொற்பொழிவுகள் எனப் பன்முகப்பாங்கில் விடுதலைக் கருத்துகளைத் தாங்கி தமிழ் எழுந்து வீறுநடை போட்டது. விடுதலை பெற்ற பின்பு, தமிழ் ஆட்சிமொழி, பயிற்றுமொழி, தமிழ் வளர்ச்சி ஆகியவற்றின் நிலை என்ன?
இன்று
இந்திய ஆட்சிமொழிச் சட்டம்
இந்தியா விடுதலை பெற்ற பின்பு 1950ஆம் ஆண்டில், இந்திய அரசமைப்புப் பேரவை, இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியது. இதன் 17ஆம பகுதி ஆட்சிமொழி என்னும் தலைப்பில் அமைந்த்து.
தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம்
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக் கூறு 345இல் வகை செய்யப்பட்டவாறு தமிழ்நாட்டில் தமிழை ஆட்சிமொழியாக்கும் தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டத்தை (சட்டம் 39) 1956ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றியது. 1957 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 19ஆம் நாளன்று ஆளுநரின் இசைவினை இச்சட்டம் பெற்றது. இதன்படி, தமிழ்நாட்டில் தமிழ் மட்டுமே ஆட்சிமொழியாகும். வெளித் தொடர்பிற்கு ஆங்கிலம் இணைப்பு மொழியாகச் செயல்படுகிறது.
தமிழ் ஆட்சிமொழித் திட்டச் செயல்பாடுகள்
1967ஆம் ஆண்டு ஆட்சிமொழிகள் (திருத்த) மையச் சட்டத்தையும், இதைச் சார்ந்த தீர்மானத்தையும் இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியதன் விளைவாக, தமிழ்நாடும் மொழிச் சிக்கல் பற்றித் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது. இத்தீர்மானத்தில் அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப் பெற்றுள்ள அனைத்து மொழிகளையும் மைய அரசு ஆட்சிமொழியாகச் செயல்படுத்த திருத்தங்கள் மேற்கொள்ளவும், அதுவரை ஆங்கிலம் மட்டுமே மைய ஆட்சிமொழியாக இருப்பதற்கும் மைய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் எல்லாப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றி விட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தைச் செயல்படுத்துவதில் அரசுக்கு அறிவுரை வழங்குவதற்கென “ஆட்சிமொழித் திட்ட நிறைவேற்றக் குழு” ஒன்று 1957ஆம் ஆண்டு அரசால் அமைக்கப்பட்டது. தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஏற்படும் இடர்ப்பாடுகளை நீக்குவதற்கு ஆவன செய்யவம், ஆட்சிமொழி அகராதியை வளப்படுத்தவும், சட்ட விதித் தொகுப்புகளை மொழிபெயர்க்கும் பணியை மேற்பார்வையிடவும், தனி அலுவலர் ஒருவர் அமர்த்தப் பெற்றார்.
14-1-1958 பொங்கல் திருநாளன்று தமிழில் கடிதப் போக்குவரத்து மேற்கொள்ளப்பட வேண்டுமென்று ஆட்சி மொழித் திட்டத்தின் பிரிவு 4இன் கீழ் அறிக்கை ஒன்று வெளியிடப் பெற்றது.
அதன்படி முதலில் தட்டச்சுப் பொறிகள் இல்லாத அரசு அலுவலகங்களில் அதாவது கையினால் கடிதங்கள் எழுதி அனுப்பும் வேளாண்துறை முதலாக வருவாய்த் துறை ஈறாகப் பத்தொன்பது துறை அலுவலகங்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்த ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. 1961-63ஆம் ஆண்டுக் காலத்தில் இத்திட்டமானது மாவட்ட அளவலான அரசு அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. துறைத் தலைமை அலுவலகங்களைப் பொறுத்தவரையில் ஆட்சிமொழிச் சட்டம் 4 நிலைகளில் செயல்படுத்த்த் திட்டம் வகுக்கப்பட்டது.
முதல் நிலை: பொதுமக்களுக்கு எழுதப்படும் அனைத்துக் கடிதங்களும் தமிழ் பயன்படுத்தப் பெற வேண்டும்.
இரண்டாம் நிலை: சார்நிலை, மாவட்ட அலுவலகங்களுக்கு எழுதப்படும் அனைத்துக் கடிதங்களுக்கும் தமிழ் பயன்படுத்தப்பெற வேண்டும்.
மூன்றாம் நிலை: பிற துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்களுக்குத் தமிழ் பயன்படுத்தப்பெற வேண்டும்.
நான்காம் நிலை: அரசுச் செயலகத் துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்களுக்குத் தமிழ் பயன்படுத்தப்பெற வேண்டும்.
இதன்படி முதல்நிலை 1963ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பெற்றது. இரண்டாம், மூன்றாம் நிலைகள் முறையே 1965, 1968 ஆகிய ஆண்டுகளில் செயல்பாட்டு வந்தன. நான்காம் நிலை 1971ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
ஆட்சிமொழித் திட்டத்திலிருந்து அதுவரை சில அலுவலகங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த விதிவிலக்குகள் திரும்பப் பெறப்பட்டு, அரசு அலுவலகங்கள் அனைத்திலும் முழுமையாக இத்திட்டத்தை நிறைவேற்ற வழி வகுக்கப்பட்டது.
1968ஆம் ஆண்டில் ஆட்சிமொழிக் குழு என்ற அமைப்பு மாற்றப்பட்டு, தமிழ் வளர்ச்சித் துறை என உருவாக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சி இயக்குநர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களையும், துறைத் தலைமை அலுவலகங்களையும் தமிழ் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் தொடர்பாக ஆய்வு செய்யும் நிலை ஏற்பட்டது.
ஆட்சிச் சொல் அகராதி
திருநெலவேலியைத் தலைமையிடமாகக் கொண்டு விளங்கிய சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. இ.மு. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் பல்துறை அரசு அலுவலர்களை ஒன்று கூட்டி, தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அகராதி ஒன்றினைத் தொகுத்து தமிழ்நாடு அரசிடம் வழங்கினார். இதுவே, இன்றைய ஆட்சிச் சொல்லதிகராதிக்கு அடிப்படையாக அமைந்தது. 1957இல் திரு. வெங்கடேசுவரன், அவர்கள் தலைமையில் அமையப் பெற்ற ஆட்சிமொழிக் குழு பல்வேறு துறைகளில் வழக்கிலுள்ள பொதுவான சொற்களுக்குரிய தமிழாக்கங்களைத் தொகுத்து ஆட்சிச் சொல் அகராதியின் முதல் பதிப்பை 1957ஆம் ஆண்டு வெளியிட்டது. அரசு அலுவலகங்களில் பயன்படுத்தும் நிர்வாக ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை இவ்வகராதி தருகிறது. 1957ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இவ்வகராதி இதுவரை நான்கு பதிப்புகளாக வெளி வந்துள்ளது. நான்காம் பதிப்பின் மறு பதிப்பும் வெளிவந்துள்ளது. அரசுப் பணியாளர்கள் தமிழில் வரைவுகள், குறிப்புகளை எழுத இவ்வகராதி பெருந்துணை புரிகிறது. ஏறத்தாழ 9000 ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை இவ்வகராதி தருகிறது. ஆட்சிச் சொல்லகராதி உருவாக்கத்திற்கு முன்பும், பின்பும் பாவேந்தர் பாரதிதாசன், மறைமலையடிகளார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார், ஆட்சிமொழிக் காவலர் கீ.இராமலிங்கனார், கோ. முத்துப்பிள்ளை போன்றோர் தமிழில் செம்மையான மொழிபெயர்ப்புகளும், புதுச் சொல்லாக்கங்களும் உருவாகப் பல சொற்களைப் படைத்தளித்து ஊக்கமூட்டினார்.
சிறப்புச் சொல் துணையகராதி
பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பெறும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைத் தரும் முறையில் பல சிறப்புச் சொல் துணையகராதிகள் வெளியிடப்பட்டுள்றன. ஆட்சிச் சொல்லகராதியுடன் இவ்வகராதிகளும் ஆட்சிமொழிச் செயலாக்கத்திற்குப் பெருந்துணை புரிகின்றன.
தட்டச்சு மாற்றம்
தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் நிறைவேறத் தமிழ்த் தட்டச்சுப் பொறிகளை வழங்குவது முதன்மைப் பணியாகக் கருதப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்துறைகளில் 65 விழுக்காடும், துறைத் தலைமை, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் 75 விழுக்காடும் சார்நிலை அலுவலகங்களில் 100 விழுக்காடும் தமிழ்ச் தட்டச்சுக்ள இருக்க வேண்டுமென அரசு ஆணையிட்டுள்ளது. இதன்படி அனைத்து அலுவலகங்களும் கண்காணிக்கப்படுகின்றன. புதிதாக ஆங்கிலத் தட்டச்சு பெற விரும்பும் துறைகள் தமிழ் வளர்ச்சித் துறையின் இசைவினை முதலில் பெற வேண்டும் என்ற கட்டுப்பாடும் உருவாக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் ஏற்பட்டிருந்த தொய்வினை நீக்க, “அரசு முனைப்பாகச் செயல்பட்டு வருகிறது.
தலைமைச் செயலகத்தில் ஆட்சிமொழித் திட்டம்
சட்டம், நிதி, சட்டப்பேரவை ஆகிய துறைகள் நீங்கலாக அரசுச் செயலகத்தின் ஏனைய துறைகளில் ஆட்சிமொழித் திட்டத்தின் முதல் நிலையானது 1966ஆம் ஆண்டு மேத் திங்கள் முதல் நாளில் இருந்து நடைமுறைக்கு வந்தது. பின்னர்ப் படிப்படியாக மற்ற நிலைகளும் அத்துறைகளில் இடம் பெற்றன. சட்டத் துறை, நிதித் துறை ஆகியவற்றில் 1970ஆம் ஆண்டு ஏப்பிரல் முதல் நாளிலிருந்து முதல் நிலை நடைமுறைக்கு வந்த்து.
சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்படும் விதிகள், விதிமுறைகள், ஆணைகள் மற்றும் விதிவிலக்கினங்கள் தவிர ஏனைய ஆணைகள் தமிழிலேயே பிறப்பிக்கப்பட வேண்டும்; சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்படும் ஆணைகள், விதிகள், விதிமுறைகள், துணை விதிகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் ஆங்கிலத்தில் தொடர்ந்து ஆணைகள் வெளியிடலாம். எனினும், அவ்வாறான நேர்வுகளில் ஆங்கிலத்துடன் தமிழுக்கும் நிகர் நிலை தந்து அவ்வாணைகளின் தமிழாக்கம் கூடிய விரைவில் வெளியிடப்பெற வேண்டுமெனவும் அரசு ஆணையிட்டது.
ஆட்சிமொழித் திட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்ட இனங்கள்
நிருவாகத் துறையில் சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு, சில துறைகளுக்கு ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதற்கு இசைவு அளிக்கப்பட்டுள்ளது.
- மாவட்டக் கருவூலங்களுக்கும், சம்பள-கணக்கு அலுவலகங்களுக்கும் அனுப்பப்படும் சம்பளப் பட்டிகள், சில்லறைச் செலவினப் பட்டிகள், பயணப்படிப் பட்டிகள், பயிற்சிகால உதவித் தொகைப் பட்டிகள்.
- நீதிமன்றங்களுக்கும், பிற மாநில அரசுகளுக்கும், மைய அரசு அலுவலகங்களுக்கும் எழுதப்படும் அனைத்துக் கடிதங்கள்.
- மேல்முறையீடு அல்லது சீராய்வுக்குட்படக்கூடிய சட்ட முறைப்படியான அனைத்து ஆணைகள்.
- வெளிநாட்டுத் தூதர் அலுவலகங்களுக்கு அனுப்ப்ப்படும் கடிதங்கள்.
அரசுப் பணியாளர்கள் அனைவரும் தமிழிலேயே அனைத்திலும் ஒப்பமிட வேண்டுமென்று அரசு ஆணையிட்டுள்ளது.
இன்றைய நிலை
1968ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்படுவது குறித்துக் குறிப்பிட்டுப் பேசும்போது இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் தமிழ் ஆட்சிமொழியாகவும், பயிற்றுமொழியாகவும் ஆக்கப்படுமென உறுதியளித்தார். அதன்படி 1973ஆம் ஆண்டிலேயே ஆட்சிமொழிச் சட்டம் முழுமையாகவும் அனைத்து நிலைகளிலும், கல்வி நிலையங்களில தமிழ் பயிற்றுமொழியாகவும் வந்திருக்க வேண்டும். அண்ணா, அவர்கள் மறைவுக்குப் பிறகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பயிற்றுமொழித் திட்டத்திற்கெனக் கட்டாய ஆணைகள் பல பிறப்பிக்கப்பட்டாலும் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி எல்லையை எட்டவேயில்லை என்பதுதான் உண்மை நிலை.
ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கமாவது கீழ் நிலையிலுள்ள சார்நிலை அலுவலகங்களில் நல்ல முன்னேற்றத்தினை எய்தியுள்ளது. மேலே செல்லச் செல்லத்தான் முன்னேற்றத்தின் அளவு குறைந்துள்ளது. அரசின் பல்வேறு ஆணைகளின்படி தலைமைச் செயலகத்தில் 65 விழுக்காடும், துறைத் தலைமை மற்றும் மாவட்ட ஆட்சித் தலைமை அலுவலகங்களில் 75 விழுக்காடும், சார்நிலை அலுவலகங்களில் 100 விழுக்காடும் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் அமைய வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் தலைமைச் செயலகத் துறைகளில், 25 விழுக்காடு முதல் 35 விழுக்காடு, துறைத் தலைமை அலுவலகங்களில் 60-70 விழுக்காடு, சார்நிலை அலுவலகங்களில் 70-80 விழுக்காடு என்ற அளவில்தாம் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்க் உள்ளது.
இத்திட்டத்தின் முன்னேற்றம் அரசு ஆணைகள், அறிவுரைகளுடன் மட்டுமே முழுமையாக நிறைவேற்றிட முடியாது. பொறுப்பு வகிக்கும் அரசு அலுவலர்களின் ஈடுபாடு, ஆர்வம், செயல்திறன் ஆகியவற்றைச் சார்ந்து அமைந்துள்ளது. குறிப்பிட்டதோர் அலுவலகத்தில் ஆர்வம்மிக்க அலுவலர் ஒருவரால் மேற்கொள்ளப்படும் பணிகளின் அடிப்படையில் அமையப் பெறும் முன்னேற்றம், அவரை அடுத்துப் பொறுப்புக்கு வரும் அலுவலருடைய ஈடுபாடின்மை, ஆர்வமற்ற நிலை, குறைபாடுடைய செயல்திறன் ஆகியவற்றால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது.
பெயர்ப் பலகைகளைத் தமிழில் எழுதுதல்
தமிழ்நாட்டில் கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிலகங்கள் தங்கள் நிறுவனப் பெயர்களை, பெயர்ப் பலகைகளைத் தமிழில் எழுத வேண்டுமென அரசு வலியுறுத்தியுள்ளது. இதற்கென வணிகச் சொற்பட்டியல் ஒன்று, ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைத் தரும் வகையில் தயாரித்து 5000 படிகள் அச்சிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு வரலாற்று வரைவுத் திட்ட வல்லுநர் குழு திருத்தியமைக்கப்பட்டு தமிழ்நாட்டின் முழுமையான வரலாற்றை விரைவில் எழுதி வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுலதில் திட்ட, அனைத்துத் தொகுதிகளையும் ஐந்து ஆண்டுகளுக்குள் வெளியிட விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- கற்றல், கற்பித்தல் ஆகியன தமிழ் மொழி வாயிலாகவே மிகத் திறம்பட செயலாற்ற முடியும் என்பதை உணர்ந்து, தமிழ் வழியாகப் பொறியியல் பாடக் கல்வியைத் தமிழ்நாட்டில் 1997-98 கல்வி ஆண்டிலிருந்து தொடக்கக் காலத்தில் 3 துறைகளில் அதாவது
- கட்டடப் பொறியியில் (Civil Engineering)
- எந்திரப் பொறியியல் (Mechanical Engineering)
- தானூர்தி உற்பத்திப் பொறியியல் (Automotive Manufacturing Engineering)
ஆகிய ஒவ்வொரு துறையிலும் ஆண்டு ஒன்றுக்கு 30 மாணவர்கள் வீதம் சேர்த்துத் தொடங்கப்படவுள்ளது. இதற்கான பொறியியல் பாட நூல்களைத் தமிழில் வெளியிடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 4 பாட நூல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் முதல் 2 ஆண்டுகளுக்குத் தேவையான பொறியியல் பாட நூல்களைத் தமிழில் வெளியிட்டுள்ளது.
- மொழி வளர்ச்சிக்குத் தேவையான அகராதிகள் (Dictionary), பேரகராதிகள், கலைக் களஞ்சியம் (Encyclopedia) தயாரிக்கும் பணி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுக் களஞ்சியம்-வாழ்வியல்: 15 தொகுதிகளில் 14 தொகுதிகள் வெளியிடப் பட்டுள்ளன. மீதமுள்ள ஒரு தொகுதியும் விரைவில் வெளியிடப்பட்டுள்ளன. மீதி 5 தொகுதிகளும் வெளியிடத் தயார் நிலையில் உள்ளன. கலைச் சொற்கள் தயாரிக்கும் பணியில் தமிழ்ப் பல்கலைக்கழகம் இதுவரை 2 இலட்சம் கலைச் சொற்களைத் தயாரித்துள்ளது. அதில் 80 ஆயிரம் கலைச் சொற்கள் தரப்படுத்தி அச்சுக்குத் தயார் நிலையில் உள்ளன.
தமிழ் மொழி வளர்ச்சிக்கு இன்றைய நிலையில் இருமொழி அகராதிகள் மிக மிக அவசியமாகத் தேவைப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றும் இவ்வகராதிகள்-பெங்குயின் (Penguin) நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள அகராதி போன்று தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுவது அவசியமாகும். எடுத்துக்காட்டாக:
அ. அண்ணா பல்கலைக்கழகம் – பொறியியல் சொல்லகராதி
ஆ. எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் – மருத்துவச் சொல்லகராதி
இ. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் – உயிரியல் சொல்லகராதி
ஈ. அழகப்பர் பல்கலைக்கழகம் – இயற்பியல் சொல்லகராதி
உ. பாரதிதாசன் பல்கலைக்கழகம் – வணிகவியல் சொல்லகராதி
தமிழ் மொழி வளர்ச்சிக்குக் கலைக் களஞ்சியம், பேரகராதிகள், கலைச் சொற்கள் வேண்டப்படுகின்றன. எனவே கலைக் களஞ்சியம், பேரகராதிகள், கலைச் சொல் அகராதிகள் ஆகியன இன்றைய நிலைக்கு வரவேற்கப்பட்டு இத்துறையில் ஆர்வமுடன் செயலாற்றி வரும் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
- தற்பொழுது அறிவியல் வளர்ச்சியின் வேகத்தால் உலகம் சுருங்கி விட்டது. உலகமே ஒரு குடும்பமாக ஆகிவிட்டது. உலகில் உள்ள எப்பகுதியினரும் மற்றொரு பகுதியினருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு அமைந்துள்ளது. அறிவியல் வளர்ச்சியின் துணை கொண்டு இணையம் (Internet) மூலமாகச் சங்க இலக்கியங்களைப் பதிவு செய்து உலகம் முழுவதும் தமிழைப் பரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கணிப் பொறிகள், பன்னாட்டுத் தகவல் தொடர்பு இணையம் (Internet) போன்ற அறிவியல் கருவிகளைத் தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தக்கவாறு பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
- பிற நாட்டு நல்லறிஞரின் சாத்திரங்களைத் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்ற பாரதியாரின் வேண்டுகோளின்படி, பிறநாட்டு நல்லறிஞர்கள் இயற்றிய கலை நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவை போல் தமிழ் இலக்கிய நூல்களை ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.
- பண்டைய தமிழ் இலக்கியப் பண்பாட்டுச் சிறப்பினை எடுத்து விளக்கும் நாடகங்கள், திரைப்படங்கள், கட்டுரைகள் போன்றவற்றைக் காலமுறைதோறும் வெளியிட்டு, மக்கள் செய்தி வாயில்களின் மூலமாகப் பொதுமக்களை எளிதில் சென்று அடையும் வகையில் தமிழ்நாட்டு கலை- பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் போன்ற நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
- தமிழ் இருக்கைகள்: அயல் மாநிலங்களிலும், அயல் நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை (Tamil Chairs) எனத் துறைகள் உருவக்கத் திட்டமிடப்பட்டுச் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் தாய்மொழியையும் அதன் வாயிலாக இலக்கிய, கலை, பண்பாட்டையும் அறியவும் தமிழ் அறியாதவர்கள் தமிழையும் அதன் சிறப்பையும் அறியவும், “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்” நிலை உருவாகவும் வழி ஏற்படும்.
இன்றைய தேவை
தமிழ்நாட்டில் ஏழை, எளிய, படிப்பறிவில்லாத பாமர மக்களுக்காகவும், ஆட்சியின் செயல்பாடுகள் இந்நாட்டின் கடைகோடியிலுள்ள ஒருவனுக்குச் சென்று சேரவும், அதிலும் குறிப்பாக அரசின் ஆட்சி நிருவாகம் ஒளிவுமறைவு இன்றி நடைபெற கட்டாயம் அவனால் புரிந்து கொள்ளக் கூடிய, பேசி மொழிகின்ற இந்நாட்டின் மொழியால் (தமிழால்) மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
எனவே, ஆட்சித் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அலுவலர்கள் திட்டப் பணியைக் கண்காணிப்பதைப் போன்று தங்கள் துறையின் மொழிப் பயன்பாட்டையும் கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் அரசுக்கு உரிய மொழியில் அலுவல்களை நடத்தும் நிலை உருவாகும்.
மேலும், துறை அலுவலர்கள் அரசின் பிற சட்டங்களுக்கும், அரசு ஆணைகளுக்கும் அளிக்கின்ற மதிப்பை- செயல்பாட்டை ஆட்சிமொழிச் சட்டத்திற்கும், அதன் தொடர்பான அரசு ஆணைக்கும் அளிக்க வேண்டும்.
தமிழ் ஆட்சிமொழித் திட்டம் அரசு அலுவலகங்களுடன் மட்டும் அமைந்து விடுவது அன்று. அது தெருக்களிலும், பெயர்ப் பலகைகளிலும் மக்கள் செய்தி வாயில்களிலும், கல்விக்கூடங்களிலும், மக்கள் பேச்சிலும் எழுத்திலும் பலவாறு பரந்து பட்டது. இந்த வகையில் ஆட்சிமொழித் திட்டத்தையும், தமிழ்ப் பயிற்று மொழி, மொழிக் கல்வி, மக்களிடையே மொழிப் பயன்பாடு, மக்கள் செய்தி வாயில்கள், தமிழ்மொழி பயன்பாடு, வேலைவாய்ப்பு, மொழிபெயர்ப்பு, சொல்லாக்கம், அகராதிகள் தயாரிப்பு, அயல் மாநிலங்களில், அயல்நாடுகளில் தமிழ்மொழி இலக்கிய, கல்வி, தமிழ்க் கலை- பண்பாட்டைப் பரப்புதல் போன்றவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த்தொரு திட்டமாக ஆய்ந்து வகுத்துச் செயல்படுத்த வேண்டும்.
ஆந்திரம், கருநாடகம், கேரளம் போன்ற மாநிலங்களிலும், வட மாநிலங்களிலும் ஆங்கிலத்திற்குப் பெரிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்பதையும், மாநில மொழிகளே முக்கியத்துவம் பெற்றுள்ளன என்பதையும் கருத்தில் கொண்டு பார்த்தால் தமிழ்நாட்டில் அந்த நிலை ஏற்படாமைக்குத் தமிழர்களுக்குள்ள ஆங்கில மோகமே ஓர் அடிப்படையான காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.
ஆறு கோடி தமிழர்களின் நாவில் அமர்ந்துள்ள அமுத மொழியாகிய நம் தமிழ்மொழி, ஏட்டு மொழியாகி விடாமல் நாட்டு மொழியாகவும், வீதி மொழியாகவும் கல்விக் கூடங்களிலங் பயிற்று மொழியாகவும் வலம் வரவேண்டும்.
நாளை
ஆட்சிமொழி வளர்ச்சி என்பது நாளைய நோக்கில் பின்வரும் வகையில் வளர்ச்சியுறும் எனக் கணிக்கலாம்.
- தலைமைச் செயலகத் துறைகளிலும், அரசின் பிற துறைகளிலும் தமிழ்ப் பயன்பாடு மிகுதியாகும்.
- வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழில் எழுதப்படும்.
- அரசு மேற்கொண்டுள்ள முயற்சியின் விளைவாக இணையம் (Internet) வழியாக, உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ், தமிழினம் ஆகியவற்றைப் பற்றியும் தமிழறிஞர்கள் பற்றியும் மிகுதியாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.
- இந்திய அரசின் ஆட்சிமொழிகளுள் ஒன்றாகத் தமிழும் இடம்பெற அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் வெற்றிபெறும்.
- தமிழகத்தின் ஊர்ப் பெயர்கள் அனைத்தும் தமிழில் அமைவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் முற்றுப் பெற்று ஊர்ப் பெயர்கள் அனைத்தும் தமிழில் அமையும்.
- போக்குவரத்து ஊர்திகளில் எழுத்துகளைத் தமிழில் எழுதச் சட்டம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப் படுத்தப்படும்.
- மக்கள் தொடர்பு வாயில்களான செய்தித் தாள்கள், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் தூய தமிழ்ப் பயன்பாடு மிகுதியாக்கப்படும்.
- வளர்ந்து வரும் அறிவியலை எதிர்கொள்ளும் வகையில் களஞ்சியங்கள், கலைச் சொல்லாக்கங்கள் உருவாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டு, முடிவடைந்த்தும் பயன்கிட்ட வழிவகை காணப்படும்.
- 1 முதல் 5ஆம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்கியுள்ள நிலையால், எதிர்காலத்தில் தமிழ் கற்காத மாணவர்களே இல்லை என்ற நிலை உருவாகும். தமிழே படிக்காமல் பட்டதாரியாகி விடும் நிலை இருக்காது.
- தமிழின் சிறந்த இலக்கியங்கள் பிற மொழிகளிலும், பிற மொழிகளின் நூல்கள் தமிழிலும் பலவாக மொழி பெயர்க்கப்படும்.
21ஆம் நூற்றாண்டில் தமிழில் இல்லாத துறைகளே இல்லை எனும் அளவிற்குத் தமிழை அணியமாக்கும் செயல்பாடுகள் மிகுதியாக்கப்படும். தமிழில் அறிவியல் நூல்கள் பெருகவும், தொழில்நுட்ப நூல்கள் பெருகவும், மருத்துவம் பொறியியல் போன்ற உயர்கல்விகளை முழுமையாகத் தமிழில் நடத்தும் நிலைக்குத் தமிழை அணியப்படுத்தும் முயற்சிகள் மிகுதியாக்கப்படும்.
வை. பழனிச்சாமி இ.அ.ப.:
தற்பொழுது தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளர். தமிழில் பேரார்வம் உடைய இவர் தன் சொந்த முயற்சியால் கலை பலவும் கற்று இந்திய ஆட்சிப் பணியில் வெற்றி பெற்றவர். ஆத்திரேலியா முதலாய பல நாடுகளுக்கு அறிவுப் பயணம் மேற்கொண்டவர். கல்வி முதலாய தமிழ் உலகைச் சுடும் சிக்கல் பற்றிச் சில நூல்களையும் கட்டுரைகளையும் அறிவுலகிற்கு வழங்கியவர்.