Star Mountain

My travels and other interests

அரசுதமிழ்நாடு நேற்று இன்று நாளை

ஊராட்சி (1997)

ஊராட்சி
வீ. செல்வராஜ்

ஆதி மனிதன் உணவைத் தேடி நாடோடியாக அலைந்தான். வேளாண்மை விஞ்ஞானம் தோன்றிற்று. அன்று முதல் அவன் ஓரிடத்தில் தங்கினான். ஊர் தோன்றிற்று, கோவில் தோன்றிற்று, கலைகள் தோன்றின, மனித நாகரிகம் தோன்றிற்று. அதன் விளைவாக ஊராட்சி தோன்றிற்று.

நதிஓர நாகரிகங்களில் முந்தியது சிந்து சமவெளி நாகரிகம். அது திராவிட நாகரிகம். ஆரியர் படையெடுப்புக் காரணமாகத் திராவிட நாகரிகம் தெற்கு நோக்கி நகர்ந்து தமிழகத்தில் குடியேறிற்று. பண்டைத் தமிழர் கண்ட ஊராட்சி உலகத்துக்கு வழிகாட்டியாக அமைந்தது. இது சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சி.

பண்டைத் தமிழர் கண்ட ஊராட்சி குடியரசுப் பாங்குடையது. சுதந்திரமான சுயதேவைப் பூர்த்தியுள்ள குடியரசு. சுதந்திரமும் சுயதேவைப் பூர்த்தியும் அதன் இரு கால்கள். ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஊராட்சி மன்றம் தேர்வு செய்யப்பெற்றது. அதனைப் பஞ்சாயத்து என்று அழைத்தனர். உறுப்பினர்கள் குடவோலை முறையில் தேர்வு செய்யப் பெற்றனர்.

ஊராட்சியின் உரிமை கடமைகளில் மத்திய மன்னராட்சி தலையிடுவதில்லை. நாட்டுப் பாதுகாப்புக்காக ராணுவம் தேவை. அதன் பராமரிப்புக்காக, ஊராட்சி அதன் வருமானத்தில் ஆறில் ஒரு பங்கை வரியாகச் செலுத்திற்று. இது ஒன்றைத் தவிர மத்திய மன்னராட்சிக்கும் ஊராட்சிக்கும் இடையே அன்றாட வாழ்க்கையில் குறுக்கீடு ஏதுமில்லை. இந்நிலை சோழ சாம்ராஜ்ய காலமுதல், அதனைத் தொடர்ந்து இந்திய வரலாற்றில் குறிப்பிடும் பல்வேறு அந்நியர் படையெடுப்புகளுக்குமிடையே வந்த தில்லி சுல்தான் மற்றும் மொகலாய ஆட்சிவரை மத்திய ஆட்சியாளர்கள் எவரும் ஊராட்சி என்ற குடியரசாட்சியில் குறுக்கிடவில்லை.

இறுதியாக வந்த ஆங்கிலேயர் ஆட்சி, ஊராட்சியை நிலைகுலையச் செய்தது. ஆங்கிலேயரின் வியாபாரப் பண்டங்களைப் புகுத்தும் பாங்கில் ஊராட்சியை முடக்கி, கிராமத் தொழில்களைச் செலறச் செய்தது. கிராமங்கள் வறுமைக்கு ஆளாயின. காந்தியடிகளின் தலைமையில் நடந்த சுதந்திரப் போர் துவங்கிற்று. 1947இல் சுதந்திரம் பிரகடனப்படுத்தப் பெற்றது. ஆயினும் குடியரசுச் சாசனத்தில் ஊராட்சி இடம் பெறவில்லை. கிராம வளர்ச்சித் திட்டம் உருவாயிற்றே தவிர சுதந்திரமான ஊராட்சி உதயமாகவில்லை.

ராஜீவ் காந்தி காலத்தில் குடியரசுச் சாசனத்தில் திருத்தம் செய்து ஊராட்சிக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் சென்ற ஆண்டு உள்ளாட்சி, ஊராட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. ஆயினும், குடியரசுச் சாசனத் திருத்த சட்டத்தில் கண்டுள்ள கிராம சபைஉரிய ஆக்கம் பெறவில்லை. ஆட்சியாளர்களின் ஆதிக்கமும் மக்களின் விழிப்புணர்வற்ற நிலையும் இதற்குக் காரணம். இந்த விழிப்புணர்வைத் தூண்டி, மக்களாட்சியின் சின்னமாகக் கிராமசபைமுக்கியத்துவம் பெறச் செய்வது இன்றைய சமுதாயத் தொண்டர்களின் முக்கிய பணியாகும்.

21ஆம் நூற்றாண்டில் நோக்கியுள்ள இப் புது யுகத்தில் நாம் ஊராட்சியுடன் உலக மகா சபைவரை உயர வேண்டியவர்களாக இருக்கிறோம். கால் ஊராட்சியில் ஊன்றியிருக்கட்டும், தலை உலக மகாசபைவரை உயர்ந்து சிந்திக்கட்டும் (Act locally, think Globally) ஊர் ஒரு குடும்பம், அது போல் உலகம் ஒரு குடும்பம் என்ற பார்வை இந்த யுகத்தில் அறைகூவலாகும். வாழ்க ஊராட்சி, உயர்க உலக மகாசபை.

ஊராட்சி
அன்று

ஆதி மனிதன் நாள்தோறும் இடம் பெயர்ந்து கொண்டிருந்தான் என்பது வரலாறு. ஏனெனில் அவன் தன் அடிப்படைத் தேவைக்கு இயற்கை அன்னையிடம் தேடி அலைய வேண்டியிருந்தது. ஆகவே, மனித இனத்தின் வரலாறு இயற்கை வளமிக்க நதி ஓரங்களில் தொடங்கிற்று. இலை, தழை, கிழங்கு, பழம் போன்ற அவனது முக்கிய உணவுப் பண்டங்களைத் தேடி இடம் பெயர்ந்து கொண்டிருந்தான்.

நாடோடி மனிதன் விவசாயத்தைக் கண்டுகொண்ட நாள், உலக வரலாற்றில் மிகப் பெரிய அறிவியல் விஞ்ஞானம் தோன்றிய நாளாகும். அது ஒரு மாபெரும் புரட்சித் தோன்றிய நாளாகும். ஏனெனில் விவசாயம் தோன்றிரா விட்டால் இன்றைக்கும் மனிதன் நாடோடியாகவே வாழ நேரிட் டிருக்கும். விவசாயத்தைக் கண்டு பிடித்த அந்த முதல் மனிதனுக்கு மனித குலம் நன்றி செலுத்த வேண்டும். மனித இனத்துக்கு இதைவிட அதிக நன்மை பயக்கும் ஓர் அறிவியல் கண்டு பிடிப்பை இதனுடன் ஒப்பிடுவதற்கில்லை.

விவசாய விஞ்ஞானம் தோன்றியது முதலே மனிதன் ஓரிடத்தில் தங்கி வாழ முடிந்தது. அதன் நல்லவிளைவாக ஊர் தோன்றிற்று; கோயில் தோன்றிற்று; கலைகள் பல தோன்றின. ஒட்டு மொத்தமாகக் கூறப்புகின் மனித நாகரிகமே தோன்றிற்று எனலாம். உழவுத் தொழிலை மையமாகக் கொண்டு நூற்பு, நெசவு, தச்சு, கொல்லு போன்ற தொழில்கள் உருவாயின. உலக நாகரிக வரலாறு நதி ஓரங்களின் வரலாறுகளானதற்கும் உழவே தலை. இதனை மனதிற்கொண்ட திருவள்ளுவ நாயனார், “உழவு உலகத்துக்கு அச்சாணி” என்றும், “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றவர் தொழுதுண்டு பின் செல்பவர்” என்றும் மேன்மைப் படுத்தினார் என்றால் அது மிகையாகாது.

சீனா, எகிப்து, கிரேக்கம், சுமேரியம், கங்கை போன்ற நதி ஓர நாகரிகங்களுக்கு எல்லாம் முந்தைய சிந்து சமவெளி நாகரிகம் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் ஏகமனதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகத்தின் பிறப்பிடம் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இதனை முன்வைத்தே நமது சங்க இலக்கியம், “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன்தோன்றி மூத்தக் குடி” என்று தமிழனுக்கு அடை மொழிக் கற்பித்துள்ளது போலும். கிராமிய நாகரிகம் நகர நாகரிகப் பரிணமித்த சான்றுகள் பல சிந்து சமவெளி நாகரிக வரலாற்றில் காணப்படுகின்றன.

இந்திய வரலாறு சிந்து சமவெளி நாகரிக வரலாற்றுடன் தொடங்குவதை, நாம் அறிவோம். மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரியர் படையெடுப்பின் காரணமாக அது அழிந்தது என்பதையும் இந்திய வரலாறு கூறுகிறது. அதன் சின்னங்கள் இன்றும் சிந்து நதி ஓரத்தில் உள்ள ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்ற வரலாற்று மையங்களில் இன்றும் காணலாம். வரலாற்று ஆய்வுச் சின்னங்களாக அவை இன்றும் அரசு பழம் பொருளாராய்ச்சித் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இன்று அவை பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் உள்ளன.

ஆரியர் படையெடுப்பின் காரணமாகத் தெற்கு நோக்கி நகர்ந்த திராவிட நாகரிகம் குமரிக் கண்டத்தில் குடியேறிற்று என்பது சரித்திர காலத்துக்கு முந்திய வரலாறு. சரித்திரச் சான்று பூர்வமான பிற்காலத்திய வரலாற்றில் சேர, சோழ, பாண்டியர் என்னும் பண்டைத் தமிழர் வரலாற்றுக்கு வருவோம். குறிப்பாகச் சோழர் காலத்திய ஊராட்சி பற்றிய வரலாற்றுச் சான்றுகள் பல உள்ளன. ஊர் தோன்றும் போது ஊராட்சிக்கும் அடிகோலப்பட்டதில் வியப்பில்லை. ஊர் ஒரு குடும்பம், சமுதாயப் பங்குள்ள குடும்பம். இதுவே சோழர் காலத்திய பண்டைத் தமிழரின் ஊராட்சிக்குரிய இலக்கணமாக அமைந்திருந்தது. இதனை வலுப்படுத்தும் அம்சங்கள் பல. அன்றைய சமுதாயப் பண்புக்கும் தேவைக்கும் ஏற்ப இவை இயல்பாகவே அமைந்திருந்தன.

அவற்றுள் முக்கியமான ஒன்று, ஒவ்வொரு ஊரும் அடிப்படைத் தேவைகளில் சுயதேவைப்பூர்த்தி உள்ள அலகாக அமைந்திருந்ததாகும். “சுதந்திரம் எனது பிறப்புரிமை” என்ற லோகமான்ய திலகரின் சங்க நாதமும், “வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர், பிறர் வாழும் மனிதர் எல்லோர்க்கும், பயிற்றி உழுதுண்டு வாழ்வீர், பிறர் பங்கைத் திருடுதல் வேண்டாம்” என்ற பாரதியின் சமுதாயப் பார்வையும் இதில் தொணிக்கின்றன. உரிமையும் கடமையும் இணைகின்ற ஆண்மையை இதில் காண்கிறோம். இதற்கு ஆதாரம் சுயதேவைப் பொருளாதாரம். ஊர் ஒரு குடும்பம் என்பது மாத்திரமல்ல, ஊர் ஒரு குடியரசு என்பதற்கு இது ஆதாரம்.

இதற்கு உகந்தவாறு தோன்றிய அடுத்த அலைவட்டம் உழவும் அதன் உப தொழில்களும். உணவும் இதர தேவை களுக்குரிய மூலப் பொருள்களும் உழவின் படைப்பு. அந்த மூலப் பொருள்களை நுகர்வுப் பண்டங்களாகப் படைக்கம் நூற்பு, நெசவு, செக்கு போன்றவை உழவின் உபதொழில்கள். அதுபோல் உழவுக் கருவிகளைப் படைக்கும் தச்சு, கொல்லு போன்றவையும் அதன் உபதொழில்கள். அதற்குச் சக்தி சாதனமாக விளங்கிய மாடுகள் பசு வளர்ப்பின் பிரசாதம். காய், கறி, கனிகளுடன் மிருகங்களை வேட்டையாடி ஊன், உணவையும் தேடி, நாடோடியாகத் திரிந்த ஆதி மனிதன் உழவனாக உயர்ந்த காலத்தில் அவனுக்குத் துணை புரிந்த முதலாவது மிருக நண்பன் பசு பாலுணவு மாத்திரமல்ல, சக்தி, சாதனமான மாடுகளையும் ஈன்றளித்த பசுவைத் தாயாகவும் தெய்வமாகவும் அன்றைய மனிதன் போற்றிப் பாராட்டியதில் வியப்பில்லை.

வீடுதோறும் கைராட்டை, குடும்பம் தோறும் பசு வளர்ப்பு ஊரின் செழிப்புக்கு அமைதி வாழ்க்கைக்கும் இலக்கணமாயின. ஊர்ச் சமுதாய வாழ்க்கையை இனிமைப் படுத்தும் விழாக்கள் உருவாயின. விழாக்கள் அனைத்தும் கோவிலைச் சுற்றி வட்டமிட்டன. “கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற பழமொழி அன்றைய வாழ்க்கை வழியாக இருந்தது. உழவு, அதன் உப தொழில்கள், கோவில், கலைகள், விழாக்கள் இன்னோரன்ன சுய தேவைப் பூர்த்தியுள்ள அலகுகளை இணைத்து இனிமைப் படுத்தத் தோன்றியதே சோழர் காலத்து ஊராட்சி முறை. சுதந்திரமும், சுயதேவைப் பூர்த்தியும் அதன் இரு கால்கள். கோவிலும், குடியரசும், அருளும் பொருளும் இணைந்த பண்பாட்டுக்கு இலக்காயிற்று. தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த மூவேந்தர் ஆட்சிகள் குடியரசுகளாக இயங்கிற்று என்று உறுதி கூறுவதற்கில்லை. ஆனால் பண்டைத் தமிழர் காலத்து ஒவ்வொரு ஊராட்சியையும் குடியாட்சியாகக் கருத முடியும்.

ராஜராஜன், ராஜேந்திரன் காலத்துச் சோழ சாம்ராஜ்யப் பண்டைத் தமிழரின் ஊராட்சி பற்றிய வரலாற்றுச் சுவடிகள் தஞ்சை சரஸ்வதி நூலகத்தில் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. உத்திரமேரூர் கல்வெட்டுச் சாசனத்திலும் சில குறிப்புகளைக் காணலாம். இவற்றுள், உத்திரமேரூர் கோவில் பிரகாரங்களில் பதிந்துள்ள, கற்களில் பொறிக்கப்பட்டுள்ள ஊராட்சி பற்றிய சாசனத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கட்டுரை ஆசிரியருக்கு வாய்த்தது. லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் அவர்கள் தம் எழுதியுள்ள ஊராட்சி பற்றிய நூலில் அதனை வியந்து பாராட்டியுள்ளார். காந்தியடிகள் உருவாக்கிய அகில இந்திய கிராமத் தொழில் சங்கத்தின் செயலாளராக இருந்த டாக்டர் ஜே. சி. குமரப்பா இதைக் குறித்துத் தமது வார இதழில் கட்டுரைகள் எழுதியுள்ளார். பண்டைத் தமிழரின் ஊராட்சி அமைப்பினைக் குறித்துக் காந்தியடிகள் பாராட்டிக் கூறியுள்ளார். காந்தியடிகள் எழுப்பிய “கிராம சுயராஜ்யம் எனது பிறப்புரிமை” என்ற சூளுரைக்கு இந்தச் சாசனம் கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது.

அக்காலத்திய மூவேந்தர்களோ, பிற்காலத்திய பல்லவ, சாளுக்கிய மன்னர்களோ, துருக்கிய ஆதிக்கவாதிகளோ, ஊராட்சி நிர்வாகத்தில் தலையிட்டதில்லை. கிராமத்தின் எல்லையைக் கடந்து செல்லுவதற்கு மூவேந்தர்கள் ஊராட்சித் தலைவரின் அனுமதி பெற்றனர் என்பதை உறுதிப்படுத்தும் வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. குறுநில மன்னர்கள் தங்களுக்குள் அடிக்கடிப் போரிட்டுக் கொண்ட போதிலும், ஊராட்சியின் எல்லைக்குள் போர் நடந்ததாகச் செய்தி இல்லை. மத்திய ஆட்சியிலுள்ள மன்னர்களுக்கிடையே நிகழ்ந்த போர்களுக்கும் ஊராட்சிக்கும் தொடர்பு ஏதும் இல்லை. அப்போர்களால் ஊராட்சியின் அமைதி வாழ்க்கைச் சீர்குலைந்ததாகச் செய்தி இல்லை இதனை மனதிற்கொண்டே, “ராமன் – ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?” என்று ஒரு முதுமொழி பிறந்தது போலும்! மத்திய ஆட்சியைச் சார்ந்திராமல், அடிப்படைத் தேவைகளில் சுயதேவைப் பூர்த்தியும், சுய பலமும் பெற்று அது இயங்கி வந்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதாக இம்முதுமொழி அமைகிறது.

அக்காலத்தில் மத்திய மன்னராட்சி, நாட்டை அந்நியர் படையெடுப்பினின்று காப்பது ஒன்றையே முக்கிய கடமையாகக் கொண்டிருந்தது தெரிகிறது. அதற்குரிய ராணுவத்தைப் பராமரிப்பதற்காகவே ஊராட்சிகள் அவற்றின் வருமானத்தில் ஆறில் ஒரு பங்கை மன்னருக்கு வரியாகச் செலுத்தி வந்துள்ளது எனலாம். இதைத் தவிர, ஊராட்சியின் உள் விவகாரத்தில் மத்திய ஆட்சியின் தலையீடு இருந்ததாகத் தெரியவில்லை. அண்மையிலுள்ள ஊராட்சி களுக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றினால் மாத்திரமே அவை மன்னரின் தலையீட்டை எதிர் கொண்டன. ஊர் மக்களிடையே எழும் வழக்குகளை ஊராட்சியே விசாரித்து நீதி வழங்கிற்று. இதனைப் பஞ்சாயத்து நீதி மன்றம் என்கிறோம். ஊர்கூடித் தீர்ப்பளிப்பது பஞ்சாயத்து மன்றமாகும். வழக்கு நிகழ்ந்த மையத்திலேயே கோவில் மேடையில் ஊர் கூடி நேருக்கு நேர் விசாரணை செய்து ஒளிவு மறைவுமின்றி தீர்ப்புக் கூறுவது பஞ்சாயத்து முறையாகும். தீர்ப்பின் நிறைவில் வாதி பிரதிவாதிகள் பகைவர்களாக அல்லாமல், நண்பர்களாக உறவுகொள்ளும் பாங்கில் உறவு வளர்க்கும் சடங்குகளும் உண்டு. விதிக்கப்படும் அபராதமும் கோயில் பொது நிதியில் சேர்க்கப்பட்டதால் அது ஒரு பிராயச்சித்த மாகவே கருதப்பட்டது. அத்தனை இனிமையாக ஊராட்சி நீதி மன்றம் இயங்கி வந்தது.

ஊராட்சிக்கு ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஊராட்சி மன்றம் தேர்வு செய்யப்பட்டது. ஊராட்சி மன்றத்துக்குப் பிரேரணை செய்யப்படுகிறவர்களுக்கு உரிய தகுதிகள் உண்டு. பஞ்சமாபாதகம் ஏதும் புரியாதவராகவும் ஊரார் மதிக்கப் பெற்றவராகவும் இருக்க வேண்டும். அவர்களைத் தேர்வு செய்யும் முறையை அன்றைய ஊராட்சி பற்றிய கல்வெட்டுகளில் “குடவோலை முறை” என்று குறிப்பிடுகின்றது. வேட்பாளர்களின் பெயர்களைத் தனித்தனி ஒலைச் சீட்டில் எழுதி, அவற்றை ஒரு குடத்திலிட்டு, அதைக் குலுக்கி, கோவில் மேடை மீது வைத்து, மழலை பேசும் ஒரு குழந்தையைக் கொண்டு ஒவ்வொரு ஓலையாக எடுக்கச் செய்து, முதல் ஐந்து ஓலைகளில் குறிக்கப்பட்டவர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்களாக அறிவிக்கப் பெற்றனர்.

குடவோலைத் தேர்வு கோவில் மேடையில் நடைபெறுவதால் இது தெய்வச் சம்மதம் பெற்றதாகிறது. தேர்வு நிறைவில் வேட்பாளர்களிடையே வெற்றி தோல்வி என்ற பேச்சுக்கு இடமில்லை. பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதம் எழவும் வாய்ப்பில்லை. தெய்வம் மற்றும் ஊரின் சர்வ சம்மதம் பெற்ற உறுப்பினர்களைக் கொண்ட ஊராட்சி மன்றம் அமைவதாகிறது. இதனால் குடவேலை முறையில் தேர்வு செய்யப் பெற்றோர் பொறுப்பு வகிக்கும் காலம் முழுதும் உற்றார், மாற்றார் என்ற பேதமின்றி நம்மவர் என்ற உறவு வளர்க்கும் மக்கட் பணிக்குத் தகுதி பெறுகிறவர்களாகின்றார்கள். ஊர் ஒரு குடும்பம் என்பதை உணர்த்துவதாக இந்த தேர்வு முறை அமைகிறது.

பண்டைக் காலத் தமிழரின் ஊராட்சிப் பரிபாலனம் அன்றைய உலகத்துக்கு மாத்திரமின்றி இன்றைய உலகத்துக்கும் வழிகாட்டியாக அமைந்திருந்தது எனலாம். சீன தேசத்தின் “கம்யூன்” பரிபாலனம் மத்திய ஆட்சியின் சர்வாதிகார உடும்புப் பிடியில் சிக்கிகொண்டிருந்தது. அமெரிக்கக் “கவுண்டி” பரிபாலனம் ஓரளவு தமிழரின் ஊராட்சி பரிபாலனத்தை ஒத்து இயங்கி வருவதாகக் கூறலாம். அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த சமயம் “கவுண்டி” பரிபாலனம் பற்றிய செய்திகளை அறிய வாய்ப்புக் கிடைத்தது. ஒரு சமயம் தெற்கே டெக்ஸாஸ் மாநிலம் ஊஸ்டன் நகரில் தங்கியிருந்தபோது ஜனாதிபதி பில் கிளின்டன் அங்கு விசயம் செய்தார். அவர் அந்த ஊருக்குள் நுழைவதற்குச் சம்பிரதாயத்திற் கிணங்கக் கவுண்டித் தலைவரின் அனுமதி பெற்றார் என்று கூறக் கேட்டேன். அமெரிக்காவில் கவுண்டி நிர்வாககத்தில் மத்திய அரசு தலையிடு வதில்லை.

கல்வி மற்றும் காவல் துறைக் கவுண்டித் தலைவர் வசம் உள்ளதாகவும் அறிந்தேன். சட்ட ஒழுங்கு கவுண்டி நிர்வாகத்தில் உள்ளது. இங்குத் தமிழகத்தில் அமைச்சர்களுக்கு வழங்கும் ஆடம்பர வரவேற்பு, அணிவகுப்பு, ஆரவாரம் ஆகியன அங்கு அளிக்கப் படுவதில்லை. அமெரிக்க ஜனாதிபதியும் அமைச்சர் பெருமக்களும் மற்றவர்களைப் போல் அமெரிக்க குடிமக்களே, அவர்களுக்கெனச் சிறப்புச் சலுகைகள் ஏதுமில்லை.

அன்றைய பண்டைத் தமிழரின் ஊராட்சிப் பரிபாலனம் பூரணச் சுதந்திரக் குடியரசு போன்றே இயங்கி வந்துள்ளது. அக்காலத்து மன்னர்களின் ஆடம்பர ஆட்சி, கோட்டைக் கொத்தளங்கள் தலைநகர்ப் புறத்துடன் நின்றுவிட, கிராமம் மற்றும் ஊராட்சி, அச்சமற்று சுதந்திரமாகச் செயல்பட்டு வந்தது என்பது அதன் வரலாற்றின் மைய அம்சமாகும்.

சுதந்திரப் பாங்கும் சுயதேவைப் பூர்த்தியுமிக்க பண்டைத் தமிழர்களின் ஊராட்சிக்கு ஊறு விளைவித்தது ஆங்கிலச் சாம்ராஜ்யப் பேராதிக்கமாகும். இந்தியாவின் மேல் படையெடுத்த வேறு எந்த அந்நியப் பேரரசும் இழைக்காத இத்தவற்றை ஆங்கிலப் பேரரசு செய்தது. ஆங்கிலேயர்களுக்கு ஆட்சியைவிட வியாபாரமே பிரதானம் என்பதை நாம் அறிவோம். தேன்கூட்டைப் போல் சுறுசுறுப்புடன் இயங்கி வந்த கிராமத் தொழில்களுடன் எளிய தேவைகளில் இன்புற்று மன நிறைவுடன் வாழ்ந்து வந்த ஊராட்சிகள் நடைபெறும்வரை மேல்நாட்டு இறக்குமதிப் பண்டங்கள் இந்தியாவில் விலை போகாது என்பதைக் கூர்த்தறிந்த ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனி கிராமங்களின் வசமிருந்து பொறுப்புக் கடமைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக அரசு ஆணை மூலம் அகற்றத் தொடங்கின.

இதன் தீய விளைவாக ஊராட்சிகள் செயலற்றுப் போயின. கிராமக் குடியரசுகள் வலுவிழந்து மத்திய ஆட்சிக்கு அடி பணியும் அடிமைகாளாயின. அமைதியுடன் மன நிறைவுடனும் வாழ்ந்து வந்த கிராமங்கள் வலுவிழந்து வறுமைக்கும் அடிமைக்கும் உள்ளாயின. ஆண்மை வற்றி அச்சத்துக்கு ஆளாயின. இதனைத் தெய்வீகக் கவி, கண்ணீர் மல்க, “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்ற பாடலில் வருணித்துள்ளார். “நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால், அஞ்சி, அஞ்சிச் சாவார், இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே” என்று பாடினார். மத்திய அரசின் ஆதிக்கத்தை அதுவரை கிராமத்துக் குள் கண்டறியாத மக்கள், இப்போது, “சிப்பாயைக் கண்டு அஞ்சுவார், ஊர்ச் சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார், தூப்பாக்கி கொண்டு ஒருவன், வெகு தூரத்தில் வரக் கண்டு பயந்து ஒளிந்து நிற்பார், எப்போதும் கைகட்டுவார், இவர் யாரிடத்தும் பூனைகள் போல் ஏங்கி நடப்பார், இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் நெஞ்சு பொறுக்கு தில்லையே” என்று தெய்வீகக் கவி பாரதி விம்மி விம்மி அழுதார்.

கிராமம் ஊராட்சியை இழந்து, தன்மானமற்று, தொழில்களை இழந்து, கிராமப் புறங்களைவிட்டு வயிற்றுப் பிழைப்புக்காக நகரங்களை நோக்கி நகரத் துவங்கின. அதற்கு ஏதுவாக ஆங்கிலேயரின் அடிமைக் கல்வி துணைநின்று கிராமப்புற மக்கள் அடிமைத் தொழிலுக்கு ஊக்குவித்தது. அடிமைக்கு அடிமைக் கல்வி உதவியதில் வியப் பேதுமில்லை. இதனைக் கண்ணுற்ற காந்தியடிகள் தமது நிர்மானத் திட்டங்களில் முன்னணி அறைகூவலாகக் “கிராம சுயராஜ்யம் எனது பிறப்புரிமை” என்பதை நம்முன் வைத்தார். அவரது சுதேசி தர்மம் அந்த அவநிலைக்கு அளித்த மருத்துவமாகும். “கதர்” வெறும் ஆடையல்ல, அது சுதேசித் தர்மத்தின் சின்னம். கதரின் ஒவ்வொரு இழையிலும் சுதந்திரக் குடியரசு தொக்கி நிற்கிறது. அந்நியத் துணி பகிஷ்காரம் என்ற சத்தியாகிரக இயக்கம் மக்கள் உள்ளத்தில் விழிப்புணர்வை அளிக்க மேற்கொள்ளப்பட்ட போர் முறையாகும்.

இவ்வாறு அன்றைய ஊராட்சியின் அழிவும் இன்றைய நாட்டுச் சுதந்திரத்தின் அங்குரார்ப்பணமும் துவக்கமும் காண்க.

இன்று

காந்தி யுகம் பிறந்தது. நாடு சுதந்திரம் பெற்றது. ஆயினும் 1947 ஆகஸ்டு 15 அன்று தில்லியில் சுதந்திரத் தினம் கொண்டாடிக் கொண்டிருந்தபோது அங்கே காந்தியடிகள் இல்லை. அவர் அன்று உண்ணாவிரதம் ஆற்றிக்கொண்டிருந்தார். அது வெறும் ஆட்சி மாற்றமே அன்றி மக்களாட்சி அல்ல. வெள்ளையர் ஆட்சி மாறி கருப்பர் ஆட்சிவந்துள்ளது. மக்களாட்சி ஊராட் சியிலிருந்து தொடங்க வேண்டும். தில்லியிருந்து கீழிறங்கிச் செல்லுவதல்ல மக்களாட்சி. இது இந்தியச் சுயராஜ்யமாக இருக்கலாம். ஆனால் அது கிராம சுயராஜ்யமாகாது. அது பாராளுமன்ற சுதந்திரமே அன்றி, ஊராட்சிச் சுதந்திரமல்ல. காந்தியடிகளின் கனவு கிராம சுயராஜ்யம், ஆகவே அவரது சுதந்திரப் போர் தொடர்ந்தது. அந்தச் சுதந்திரம் ஊராட்சியை எட்டும்வரை ஓயாது. இதுவே காந்தியடிகளின் அன்றைய நிலை.

இன்றைய காலகட்டத்தில் நாம் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். தமிழர் கண்ட ஊராட்சி பற்றிய நமது விமர்சனம் இந்திய துணைக்கண்டம் முழுமையும் பரந்த பார்வையில் விரிவாக்கம் பெற்றுள்ளது. சிந்து சமவெளியில் தோன்றி, திராவிடக் கலாச் சாரமாகக் குமரிக் கண்டத்தில் வேரூன்றி, இன்று அது இந்திய நாடு முழுமைக்கும வழிகாட்டுவதாகப் பரிணாமம் பெற வேண்டிய நிலையில் உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். “வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்”, என்றும் “கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்” என்றெல்லாம் பாரதி பாடினானே, அந்த கண்ணோட்டத்தில் ஊராட்சி பற்றிய ஆய்வுக்கு உயர்வோமாக.

சுதந்திரம் வருவதற்கு முன்னர் ஆங்கில அரசு மாகாணச் சுயாட்சி என்ற பெயரில் 1935ஆம் ஆண்டில் ஒரு சோதனைத் திட்டம் ஒன்றைப் பிரகடனப் படுத்தியதை இங்கு நினைவு கொள்ள வேண்டும். அதன்படி 1938இல் மாகாணச் சட்ட மன்றங்களுக்குத் தேர்தலும் நடைபெற்றது. அதற்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும் தருணத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சார்ந்த, தலித்துக்களின் சார்பில் டாக்டர் அம்பேத்கார் ஒரு பிரச்சினையைக் கிளப்பினார். ஊர் தோறும் தாழ்த்தப்பட்ட இன மக்கள் ஒதுக்கப்பட்டு ஊருக்கு அப்பால் தீண்டத்தகாதவர்களாகக் குடிசைப் பகுதிகளில் ஒதுங்கி வாழ்ந்து வருகிறார்கள் அல்லவா? அதைப்போல் அவர்களுக்கெனத் தனித்த வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும் என்றும், அவர்களால் தேர்வு செய்யப்பெறும் தாழ்த்தப்பட்ட இனம் சார்ந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பெற வேண்டும் என்றும் அவர் விவாதித்தார்.

இந்த விவாதம், மேலூடாகப் பார்க் குமிடத்து ஒரு விதத்தில் நியாயம்போல் தோன்றியபோதிலும், ஒவ்வொரு ஊரையும் நிரந்தரமாகப் பிளவுப்படுத்தும் பேராபத்து இதில் உள்ளதைக் காந்தியடிகள் கண்டார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் காந்தியடிகளைப் போல் பாடுபட்ட தியாகச் சீலர் வேறு யாருமில்லை. “அடுத்த பிறவி என்று ஒன்று இருக்குமாயின் நான் அரிஜனக் குடும்பத்தில் பிறக்க வரம் தர வேண்டும்” என்று பிராத்தித்தவர் அவர். ஏனெனில் அப்போதுதான் ஓர் அரிஜனன் படுகிற பாடுகளையும் மன வேதனைகளையும் தம்மால் அனுபவித்து பிராயச்சித்தம் செய்துகொள்ள முடியும் என்பதால். அத்தனை அளவு தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பில் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபாட்டவர். அதற்காக அவர் சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே பல நிர்மானத் திட்டங்களை உருவாக்கியவர். அரிஜன சேவா சங்கத்தை உருவாக்கிச் செயல்பட்டவர் அவர். சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட அரிஜன் என்ற பிரிவு அகன்று அது சமத்துவ உரிமையுடன் இந்தியச் சமுதாய நீரோட்டத்தில் இணைய வேண்டும் என்ற லட்சியத்தை ஏற்றுச் செயல்பட்டார்.

அந்த லட்சியத்துக்கு டாக்டர் அம்பேத்காரின் விவாதம் காந்தியடிகளுக்கு அதிர்ச்சி அளித்தது. அரசியல் உரிமைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எத்தனைச் சிறப்புச் சலுகைகள் அளித்தாலும் தகும், அதனை மகிழ்ச்சியுடன் அடிகள் ஏற்கத் தயார். அவர்களுக்கெனத் தனித் தொகுதிகள் அளிப்பதையும் அவர் வரவேற்றார். ஆனால் வாக்காளர் பட்டியலிலிருந்து அவர்களைத் தனிமைப்படுத்தி ஒதுக்குவதை அவர் ஏற்க மறுத்தார். ஏனெனில் அரிஜன மக்கள் அதனால் நிரந்தரமாக இந்தியச் சமுதாய நீரோட்டத்திலிருந்து விலக்கி வைக்கப் பட்டவர்களாகப் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை வலியுறுத்தி, அதனை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். அதன் விளைவாக டாக்டர் அம்பேத்கார் உட்பட தேசியத் தலைவர்கள் காந்தியடிகள் கோரிக்கையை ஏற்றனர். அதன்படி இன்றுவரை அரிஜன பிரதிநிதிகளுக்குத் தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளனவே தவிர, தனியான வாக்காளர் பட்டியல் இல்லை என்பதை நாம் அறிவோம்.

1947இல் சுதந்திரம் வந்தது, 1948ஆம் ஆண்டில் காந்தியடிகள் வெறியன் ஒருவானால் சுட்டுக்கொள்ளப்பட்டார். அதனையடுத்து புதிய இந்திய அரசியல் சட்டம் தயாரிக்க அரசியல் நிர்ணயச் சபை கூடிற்று. அதில் டாக்டர் அம்பேத்கார் முக்கியப் பங்கு வகித்தார் என்பதையும் நாம் அறிவோம். அரசியல் நிர்ணயச் சபையில் அங்கம் வகித்த காந்தியச் சிந்தனையாளர்கள் குடியரசுச் சாசனத்தில் ஊராட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். டாக்டர் அம்பேத்கார் அதை ஏற்கத் தயங்கினார். அதற்கு அவர் காரணமும் கூறினார். அதற்குரிய பூர்வாங்கமும் உண்டு.

வேதகாலத்து ஆரிய சமுதாயத்தில் வருணாச்சிரமத் தர்மம் கடைப்பிடிக்கப்பட்டது. பிறப்பால் அல்ல, தொழில் முறையால் அது அப்போதைய சமுதாய அமைப்புக்குப் பயனுள்ளதாக இருந்தது. பிற்காலத்தில் அது தொழில் முறையால் அல்ல, பிறப்புரிமையாக மாறி சமுதாயத்தில் ஜாதி பேதம் கற்பிக்கலாயிற்று. நாளாவட்டத்தில் அதனுள் உப ஜாதிகள் பல உருவாகி சமுதாயத்தைச் சாதி பேதத்துக்கு இரையாக்கிற்று. அதன் தீய விளைவாக நான்கு வருணங்களுடன் பஞ்சமர் என்ற ஐந்தாவது வருணத்தையும் தோற்று வித்தது. இந்தப் பஞ்சமர் தீண்டத்தகாத வராகவும் கருதப்பட்டனர். இவர்களைத்தான் நாம் தாழ்த்தப்பட்டவர் என்றும் அரிஜனங்கள் என்றும் குறிப்பிடுகிறோம். நவீன மொழியில் “தலித்துக்கள்” என்கிறோம்.

பண்டைத் தமிழர் சமுதாயத்தில் இது போன்ற ஜாதிப் பிளவுகள் இருத்ததாகத் தெரியவில்லை. அதற்கான வரலாற்றுச் சான்றுகளோ, பண்டை இலக்கியக் குறிப்புகளோ தென்படவில்லை. ஆயினும் சோழப் பேரரசு காலத்தில் பொருளாதாரப் பேதம் இருந்து வந்திருக்கிறது. குறிப்பாகப் பெரு நிலக் கிழார் என்றும் அவர்கள் கீழ் அடிமைகளாகப் பண்ணையாட்கள் என்றும் வர்க்க பேதம் நிலவிற்று. அக்காலத்திய புலவர்களில் தமிழ் மூதாட்டி என்றும் நாம் போற்றும் ஒளவைப் பாட்டி பொன்னுக்கும் பாடி, அதே சமயம் அதற்குச் சமனாக, கூழுக்கும் பாடி ஓர் அமைதிப் புரட்சி ஆற்றினாள் என்ற சான்று இந்தப் பேதத்தைச் சுட்டிக்காட்டுவதாக அமைகிறது. ஆயினும் பிற்காலத்தில் ஆரிய, திராவிட நாகரிகக் கலப்பால் தமிழர் பண்பாட்டிலும் “ஆயிரம் உண்டிங்கு ஜாதி” என்றும் பாரதி பாடியதைப்போல் எண்ணற்ற ஜாதிகள் தோன்றன. அவற்றின் அடிமட்டத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதிகளும் முளைத்தன. பக்த நந்தனார் கதை அதற்கு ஒரு சான்று.

டாக்டர் அம்பேத்கார் மகாராஷ்டிரத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சார்ந்தவர். தீண்டாமையின் கொடுமைகளுக்கு ஆளானவர். அவரை ஊக்கப்படுத்தி சமுதாயத்தில் மேல் நோக்கி உயர்த்தியவர் நல்ல உள்ளம் கொண்டு ஒரு பிராமணராயினும், கிராமப் புறத்து மேல் ஜாதி ஆணவத்துக்கும் ஆக்கிரமிப்புக்கும் ஆளான அவரது அனுபவங்கள் அவரது உள்ளத்தைப் புண்படுத்தியிருந்தன. அதன் விளைவு கிராமக் குடியரசு என்னும் கருத்து அவருக்கு ஒப்புதலளிக்காததில் வியப்பில்லை. அதை அவர் கடுமையாக எதிர்த்தார். கிராமக் குடியரசு ஏற்கனவே மலிந்துள்ள ஜாதி மேலாதிக்கத்துக்கு மேலும் அதிக உரமளிக்கும் என்று அவர் அஞ்சினார். ஆகவே அவர் ஊராட்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் தயங்கினார். இப்போதைக்குக் கிராம வளர்ச்சித் திட்டங்களுக்கு ஊக்கமளிக்கலாம் என்றும், கிராமக் குடியரசு நோக்கிய ஊராட்சிப் பற்றிப் பின்னர்க் கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு இந்தியக் குடியரசுச் சாசனத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம் என்றும் சமாதானம் அளித்தார். ஆகவே 1951ஆம் ஆண்டில் நிறைவேறிய குடியரசு சாசனத்தில் ஊராட்சி பற்றிய ஷரத்துக்கள் இடம் பெறவில்லை.

அன்றைய அரசியல் நிர்ணச் சபை கூடி ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆட்சிக் காலத்தில் ஊராட்சிக்கு ஆக்கம் அளிக்க வேண்டும் என்ற முயற்சிக்கு வடிவம் கொடுக்கப்பட்டது. அதுவரை ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒரு கருவியாக மாத்திரம் இயங்கிக் கொண்டிருந்த ஊராட்சிக்கும் ஊராட்சி ஒன்றியங்களுக்கும் சுயமாக இயங்கவும் செயல்படவும் போதிய அதிகாரம், பொறுப்பு மற்றும் நிதி ஆதாரம் வழங்கும் வகையில் குடியரசு சாசனத்தில் திருத்தம் செய்ய பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்தது. இதனை 1992ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுச் சாசனத்தில் 73ஆவது திருத்தச் சட்டம் என்று அழைக்கிறார்கள். இதனை அனுசரித்தும் மாநிலங்கள் அவற்றின் வசதிகளை அனுசரித்தும், அதே சமயம் அதன் அடிப்படைக் கோட்பாடுகளுக்குக் குந்தகம் நேரிடாத வகையில் சட்ட மன்றங்களில் சட்டம் நிறைவேற்ற வேண்டுமென்றும், அதனைச் செயல்படுத்தும் பாங்கில் உள்ளாட்சி, ஊராட்சித் தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப் பட்டது.

உள்ளாட்சிப் பற்றிய குடியரசுச் சாசனத் திருத்தச் சட்டத்தை மனமுவந்து ஏற்று ஒன்றிரண்டு மாநிலங்களைத் தவிர இந்தியாவிலுள்ள இதர மாநிலங்கள் இதனை அதனதன் சட்ட மன்றங்களில் நிறைவேற்றி, உரிய காலத்தில் ஊராட்சித் தேர்தல்களையும் நடத்தின. அதைச் செயல்படுத்தத் தயங்கிக் கொண்டிருந்த ஒன்றிரண்டு மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. மேலும் காலதாமதமின்றிச் செயல்படுத்தத் தவறினால் அம்மாநிலத்துக்கு மத்திய அரசு வழங்கும் கிராம வளர்ச்சித் திட்டங்களுக்குரிய நிதி உதவியை நிறுத்த வேண்டியிருக்கும் என்று கடுமையாக எச்சரிக்கவே, தமிழ்நாடு அரசு 1994ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஊராட்சிச் சட்ட மன்றத்தில் அவசரகாலத்தில் நிறை வேற்றியது. ஆயினும், அதனைச் செயல் படுத்துவதற்கான ஊராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் ஒத்தி வைத்துக் கொண்டே காலம் கடத்திற்று. இந்நிலையில் ஜெயலலிதா தலைமையில் இயங்கி வந்த தமிழக அரசு தேர்தலை நடத்தாமலே 1996இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வீழ்ந்தது.

அதனை அடுத்து வந்த கலைஞர் கருணாநிதி தலைமையில் அமைந்துள்ள அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தியுள்ளது. இதிலுள்ள ஒரு சிறப்பு அம்சம் என்னவெனில் ஊராட்சி, ஒன்றியக் கவுன்சில், நகராட்சி, மாநகராட்சி மற்றும் மாவட்டக் கவுன்சில் ஆகியவற்றின் மொத்தப் பதவிப் பொறுப் புகளில் மூன்றில் ஒரு பங்கு தாய்குலத்துக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகும். உள்ளாட்சித் தேர்தலில் ஜாதியமும் அரசியல் கட்சி வாதமும் ஓரளவு மாசுபடுத்திய போதிலும், மொத்தத்தில் தேர்தல் சுமுகமாக நடந்து முடிந்துள்ளது என்று கூறலாம். உள்ளாட்சித் தேர்தல் கட்சிவாரியாக வெற்றி பெற்றுள்ள உறுப்பினர்கள் தனித்தனியே கூடித் தங்களுக்குத் தாங்களே பாராட்டிக் கொண்ட மாநாடுகள் கூடிக் கலைந்தன. இறுதியாகக் கட்சி பேதமின்றி உள்ளாட்சி உறுப்பினர் களைக் கூட்டுவித்து முதல்வர் தலைமையில் அதிகாரப் பகிர்வு, நிதிப் பகிர்வு போன்ற பூர்வாங்கக் கலந்துரையாடல் நடைபெற்றது.

ஆயினும், நீண்ட நெடுங்காலமாக உள்ளாட்சி ஊராட்சிப் பற்றிய அனுபவம் தடைபட்டுப் போனதன் காரணமாக, இதன் லட்சியம் என்ன, பொறுப்பு, கடமைகள் என்ன, ஊராட்சிச் சட்டத்தில் உள்ள செய்திகள் என்ன, இன்னோரன்ன கேள்விகள் தேர்வு பெற்றுள்ள உறுப்பினர்கள் முன், கேள்விக் குறியாக உள்ளன என்பதைக் காண்கிறோம். அதுபோல் தங்கள் வசமுள்ள அதிகாரங்களையும் பதவிகளையும் பகிர்ந்து கொள்ளுவதில் ஆட்சியாளர்கள் மனதில் உள்ள தயக்கத்தையும் காண்கிறோம். ஆட்சி என்றால் அதிகாரம், அந்த அதிகாரத்தைக் கோலோச்சும் பதவி, அதனால் விளையும் ஆணவம் என்ற அளவிலே மிதந்து வந்த அரசியல் ஆதிக்கவாதிகளால் அவற்றைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளுவதில் தயக்கமும் திகைப்பும் ஏற்படுவது சகஜமே. அரசு, பதவி ஆதிக்கம் செலுத்துவதற்கல்ல, மக்கள் பணி செய்வதற்கே என்ற விழிப்புணர்வு ஏற்படும் வரை இந்த தயக்கமும் இருக்கவே செய்யும்.

இன்றை நிதர்சனமான நிலை இது. இதற்கு மாற்று என்ன? எதிர்காலம் பதில் கூறும்.

நாளை

நாளைய ஊராட்சியின் லட்சியம் பற்றிய சிந்தனைக்குப் பண்டைத் தமிழரின் ஊராட்சி பற்றிய மறு பரிசீலனைத் தேவைப்டுகிறது.

மத்தியப் பேரரசுகளின் தலையீட்டின்றிச் சுதந்திரப் பாங்குள்ள சுயதேவைப் பூர்த்தியுள்ள ஊராட்சிப், பண்டைத் தமிழராட்சி என்பதை மேலீடாகப் பார்த்தால் போதாது, ஆழமாக அலகிட்டுப் பார்க்க வேண்டும்.

முதலாவதாகச் “சுயதேவைப் பூர்த்தி” என்ற அலகினை எடுத்துக் கொள்ளுவோம். சுயதேவைப் பூர்த்தி சுதந்திரத்துக்குரிய ஒரு முக்கிய அடித்தளம் என்னுடைய தேவைக்கு மற்றொருவரை எதிர்பார்க்கும்போது, என்னையறியாமலே எனது சுதந்திரத்துக்கு ஊறு நேரிடுகிறது. இதை விளக்கத் தேவையில்லை. எனது உணவுக்கு எனது மாமாவை எதிர்பார்த்திருக்கும் வரை நான் இயல்பாகவே அவருக்கு நான் அடிமையாகிறேன். ஒன்று நான் சுயமாக உழைத்துச் சாம்பாதிக்க வேண்டும், அல்லது நான் பட்டினி கிடந்தேனும் சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் ஆண்மை உள்ளவனாக இருக்க வேண்டும். இதற்கு வேறு வழியில்லை.

இதிலிருந்து பண்டைத் தமிழிரின் ஊராட்சி பற்றிய ஆராய்ச்சிக்கு வருவோமாயின், அன்று ஒவ்வொரு கிராமமும், உணவு, உடை, வீடு போன்ற அடிப்படைத் தேவைகளில் சுயதேவைப் பூர்த்தியுள்ளதாக இருந்த காரணத்தால் அது சுதந்திரமாக இயங்கிற்று. அதற்கு உயிரூட்டிய அம்சம் என்னவெனில் அக்காலத்திய கிராமத்து மக்களின் தேவைகள் மிகவும் எளிமையானவை. அவர்களுக்குத் தேவையான உணவு கிராமத்தில் விளைந்தது. ஆடைத் தேவைக்கான பருத்தியும், அதனைப் பஞ்சாக்கி நூற்பதும், நெய்வதும் அங்கேயே நடைபெற்றன. ஓய்வுக் காலத்தில் அவரவர் வீட்டுத் திண்ணைகளில் கைராட்டை கொண்டு நூற்றனர். ஊரில் நாலைந்து குடும்பங்கள் நெசவினை முழு நேர வேலையாக ஏற்றனர். அவர்கள் நெச வாளர்கள். வீட்டுக் குரிய மரச் சாமான்கள், விவசாயக் கருவிகள் செய்ய சில குடும்பங்கள் தச்சு, கொல்லு, கொத்து போன்ற பணிகளை ஏற்றனர். ஒரு துணி வெளுப்பவர், ஒரு முடி திருத்துவோர், ஒரு குயவர், ஓர் ஆசிரியர், ஒரு மருத்துவர், ஒரு பூசாரி என்றவாறு அவரவர் விருப்பத்துக்கும் திறமைக்கும் ஏற்பத் தொழில்பட்டனர்.

தொழிலால் சமுதாய அந்தஸ்து பேதமின்றி ஊர் ஒரு குடும்பம் என்ற பாவனையில் உறவு பாராட்டிக் கிராமத்து மக்கள் வாழ்ந்தனர்.

ஆடம்பரத் தேவைகளுக்கு அவர்கள் அடிமையாகவில்லை. அவற்றுக்கு ஆசை வயப்பட்டு அவர்கள் அலையவில்லை. மன்னர்களின் கோட்டைக் கொத்தலம் நிரம்பிய தலை நகரங்களுடனான தொடர்பு மிக அபூர்வம். சத்துள்ள உணவு கிடைத்தது. வெப்பத்தட்ப நிலைக்கு ஏற்ப உடம்பில் போர்த்துக்கொள்ள உடைகிடைத்தது. சமைக்கவும் படுக்கவும் மண் வீடு போது மானதாயிருந்தது. அவர்களது உடைமைகள் மிகச் சொற்பம். ஆனால் அவர்களுக்குக் கிடைத்த மன நிறைவும் மகிழ்ச்சியும் ஏராளம். உடலுழைப்பை அவர்கள் தாழ்வாகக் கருதவில்லை. ஊராட்சித் தலைவர், கணக்கர், ஆசிரியர், பூசாரி, மருத்துவர் போன்ற அனைவருமே உழவுத் தொழில் புரிந்தனர் அல்லது ஏதேனும் ஒரு முறையில் உடலுழைப்புச் செய்தனர். மூளை உழைப்பாளி என்றும் உடலுழைப்பாளி என்றும் அந்தஸ்தில் பேதம் கற்பிக்க அவர்களது வாழக்கை வழிமுறை வாய்ப்பளிக்கவில்லை. இவற்றை எல்லாம் நாம் மனதிற் கொண்டு அன்றைய ஊராட்சியின் சுதந்திரத்துக்கும், சுயதேவைப் பூர்த்திக்கும் உரிய அடித்தளத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மற்றும் ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைப் போல் அன்று உலகலாவிய கண்ணோக்கு மிக மிகக் குறைவு. உள் நோக்கிய ஆன்மிக மற்றும் ஒழுக்கக் கல்வி முக்கியம் பெற்றிருந்ததே தவிர அறிவியல் கல்வி மிகக் குறைவு. அறிவியல் ஆய்வு இன்று நமக்கு வழங்கியுள்ள வசதிகள் ஏதும் அன்று இல்லை. இன்றைய அறிவியல் காரணமாக உலகம் சுருங்கி வருகிறது. இன்று தூரம் ஒரு பொருட்டல்ல. உலகைச் சுற்றி வருவது இன்று சாதாரணமாகிவிட்டது. இன்றைய தலைமுறையினரைவிட அன்றைய மக்கள் மன நிறைவுடன் வாழ்ந்தார்கள் என்பது உண்மையாயினும், அறிவியலும் அதனால் விளையும் புதுப் புது ஆடம்பர உல்லாசத் தேவைகளும் நவீன மயமான வசதிகளும் அவர்களுக்கு வாய்க்கவில்லை.

“தேவை என்பது இழுக்க இழுக்க விரிந்து கொடுக்கும் ரப்பரைப் போன்றது” என்று பொருளாதாரச் சாத்திரம் கூறுகிறது. அதற்கேற்ப அறிவியல் ஒத்துழைக்கிறது. இதன் விளைவாக இன்றைய பரம்பரை தேவைகளைப் பெருக்குவதில் முனைகிறது. அத்தியாவசியத் தேவைகளைவிட ஆடம்பர, அலங்காரத் தேவைகள் குவிந்த வண்ண மிருக்கின்றன. வீடு முழுவதும் சாமான்கள் நிரம்பி இன்றைய மனிதன் சாமான்களோடு அவனும் ஒரு சாமானாகத் திக்குமுக்காடித் திணறிக் கொண்டிருக்கிறான். உலகத்தின் இயற்கை வளங்களை எல்லாம் நொடிப்பொழுதில் அனுபவித்துத் தீர்த்து விடும் ஆவேசத்தில் முனைந்திருக்கிறான். இதன் விளைவு இயற்கை வளங்கள் அழிந்தவண்ணமிருக்கின்றன. இன்றைய பிரச்சினை மனிதரின் இந்த நுகர்ச்சி ஆவேசத்தைத் தவிர்த்து இயற்கை வளத்தை எவ்வாறு அவனிடமிருந்து பாதுகாப்பது என்பதுதான்.

அண்மையில் தென்னமரிக்கப் பிரேசில் நாட்டுத் தலைநகரான ரியோடி ஜெனிரோ என்ற இடத்தில் இயற்கை வளப் பாதுகாப்புப் பற்றிய ஆலோசனைக்கு உலகளாவிய பத்து நாள் உச்சி மாநாடு ஒன்று நடைபெற்றது. உலகத்து நாடுகளின் அரசு சார்புள்ள பிரதிநிதிகளும், அரசு சார்பற்ற சமுதாய நலச்சங்கப் பிரதிநிதிகளும், இயற்கைவளப் பாதுகாப்பில் அக்கறை உள்ள அறிவியல் நிபுணர்களும் அம்மாநாட்டில் கலந்து கொண்டு கருத்தரங்கு நடத்தி நல்ல பல தீர்மானங்களை இயற்றினர். அவற்றில் ஒரு தீர்மானத்தில் காந்தியடிகள் பெயர் இடம் பெற்றுள்ளது. “காந்தியடிகளின் எளிய வாழ்க்கையைச் சுட்டிக்காட்டி அது போன்ற எளிய, அதே சமயம் சத்துள்ள ஆரோக்கியமுள்ள வாழ்க்கையை உலக மக்கள் உதாரணமாகக் கொண்டு பின்பற்றி வாழ்ந்தால் இயற்கை வளப் பாதுகாப்புக்குப் பேருதவியாக இருக்கும்” என்று அந்தத் தீர்மான வாசகம் கூறுகிறது.

“There is enough with Mother Earth to satisfy everybody’s Need, but not to everybody’s GREED” என்று காந்தியடிகள் கூறியுள்ளதை இங்கு நினைவுக்கூர்வது பொருந்தும்.

மக்களாட்சிக் கோட்பாட்டை இன்றைய அரசியல் அகராதியில் பாராளுமன்ற ஜனநாயகம் என்ற சொல்லால் குறிப் பிடுகிறோம். ஆழ்ந்து சிந்திப்போமானால் இதிலுள்ள முரண்பாட்டை தெற்றென விளங்கும். எப்படி?

ஐந்தாண்டுக்கு ஒரு முறை மக்கள் பாராளுமன்றத்தைத் தேர்வு செய்கிறார்கள். அதன் வசம் மக்கள் தங்கள் பொறுப்பு, கடமை அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு, தங்கள் தேவைகளுக்குப் பாராளுமன்றத்தை எதிர் பார்த்துக் காத்திருக்கிறார்கள். பாராளுமன்றம் என்ன செய்கிறது? அது கட்சி அரசியல் பாங்குடையதாதலின், 51 விழுக்காடு உறுப்பினர்களைக் கொண்ட கட்சி ஆட்சி புரியும் தகுதியைப் பெறுகிறது. ஏனெனில் அதுவே பெரும்பாண்மைக் கட்சி, அந்தப் பெரும்பான்மைக் கட்சி உறுப்பினர்களில் எவர் ஒருவர் அக்கட்சி உறுப்பினர்களில் 51 விழுக்காடு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறாரோ (அதாவது மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் 26 விழுக்காடு) அவர் ஆட்சி பீடத்தில் அமருகிறார். இவரிடமிருந்து ஆட்சிப் பொறுப்பில் தங்களுக்கும் பங்கு கிடைக்காதா என்ற ஏங்கிக் கிடக்கும் மக்களின் பரிதாப நிலை. இந்நிலையில் ஊராட்சிக்கு என்ன தகுதி? பொறுப்பையும் கடமையையும் பாராளு மன்றத்திடம் ஒட்டுமொத்தமாகக் கொடுத்து விட்டு, அதனிடமிருந்து அப்பொறுப்பையும் கடமையையும் உரிமையையும் எதிர்பார்க்கிற ஊராட்சி ஒரு கேலிக்கூத்து.

பொறுப்பும் கடமையும் உரிமையும் கீழ் நோக்கிச் செல்வதல்ல, அது கீழிருந்து மேலே செல்ல வேண்டும். மக்களாட்சியின் ஆணிவேர் கீழே ஊன்றியிருக்க வேண்டும். அதிகாரம் மற்றும் சுதந்திரம் கீழே மக்களிடம், அதாவது ஊராட்சியிடம் இருக்க வேண்டும். மத்திய ஆட்சி அதனை ஒருங்கிணைக்கும் ஆலோசனை மன்றமாகப் பாராளுமன்றம் செயல்பட வேண்டும். அப்போதுதான் மக்களாட்சியின் சின்னமாக ஊராட்சி இயங்க முடியும். இதனைத்தான் காந்தியடிகள் “ கிராம சுயராஜ்யம்” என்று கூறினார். இதனை மனதிற் கொண்டு அடிகள், மத்திய அரசைக் குறிப்பிட்டுப் பேசும்போது, “எந்த ஒரு மத்திய ஆட்சி மிகக் குறைவாக ஆட்சி செலுத்துகிறதோ அதுவே மிக நல்ல ஆட்சி” என்று கூறினார். மக்கள் இங்கே கிராமத்தில், ஆட்சியாளர்களோ அங்கே தில்லியில் என்றால், அது எங்ஙனம் மக்களாட்சிப் பாங்குள்ள ஊராட்சியாக இருக்க முடியும்?

இந்தச் சிந்தனை பண்டைத் தமிழர் காலத்து ஊராட்சியை நினைவுப்படுத்துகிறது. மத்தியிலுள்ள மன்னராட்சியின் வசம் உள்நாட்டுப் பாதுகாப்பும் வெளிநாட்டு விவகாரமும் மாத்திரமே இருந்தன. பிற அனைத்தும் ஊராட்சியின் வசம் இருந்தன. இந்த ஆட்சி முறையே இன்றும் பொருந்தும். அதிலும் குறிப்பாக மக்களின் சிந்தனையும், செயலும், அரசியல் மற்றும் பொருளாதாரப் பரிவர்த்தனையும் உலகளாவிய விரிவாக்கம் பெற்றுக் கொண்டிருக்கும் எதிர்காலப் போக்கில், மத்திய ஆட்சி என்பது நடுவராட்சியே அன்றி நாடாளும் ஆட்சி என்ற தகுதி பெற இயலாது. இந்த எதிர்கால உலகளாவிய சிந்தனையைச் சுட்டும்போது ஒரு முறை பூஜ்ய விநோபா அடிகள் “நமது கால் தரையில் வலுவாக ஊன்றி நிற்கட்டும், தலையோ மேக மண்டலத்தையும் ஊடுருவி உயர்ந்து உலகளாவிய சிந்தனைக்கு வாய்ப்பளிக்கட்டும்” என்றார். இங்கு அவர் குறிப்பிட்ட “காலுன்றி நிற்கட்டும்” என்பது ஊராட்சியைக் குறிக்கிறது. “உலகளாவிய சிந்தனை” என்பது உலக மகாசபையைக் குறிக்கிறது.

காந்தியடிகளின் மறைவிற்குப் பின்னர் அவரை அடியொற்றி, பொருளாதாரச் சுதந்திரப் புரட்சி ஒன்றினை அங்குராப்பணம் செய்தவர் விநோபா அடிகள். அவர் துவங்கிய கிராமதான இயக்கத்தைக் கண்டு உலகமே வியந்து பாராட்டியது. காந்தியடிகள் எவ்வாறு அகிம்சை வழிமுறையில் அரசியல் சுதந்திரம் பெற உதவினாரோ, அதே வழி முறையில் பொருளாதாரச் சமத்துவத்துக்குக் கிராமதான இயக்கத்தைத் துவங்கியவர் விநோபா அடிகள். வீடு ஒரு பல்கலைக்கழகம், ஊர் ஒரு குடும்பம், ஊருக்கு ஒரு கிராம சபை. நிலம் கிராம சபையின் பராமரிப்பில் இருக்கும். மக்கள் அவரவர் உழைப்புக்கு ஏற்ப நிலத்தைப் பகிர்ந்து வாழலாம். ஆனால் அதை விற்கவோ வில்லங்கப்படுத்தவோ உரிமை பாராட்டக் கூடாது என்பது கிராமதானத்தின் அடிப்படைக் கொள்கை. ஊராட்சிக்குப் பொறுப்பு வகிப்பது கிராமசபை. “ கிராம சபைக்கு எனது முதல் மரியாதை. அதனையடுத்து நான் உலக மகா சபையை மதிக்கிறேன்” என்றார். இது நமது பண்டைத் தமிழரின் உன்னதப் பார்வையான, “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற அறைகூவலை நினைவுப்படுத்துகிறது.

இதனை லட்சியமாகக் கொண்டது காந்தியடிகளின் லட்சியச் சமுதாயமான “சர்வோதயம்”. “அண்டை அயலாரை நேசியுங்கள், அதுவே உலகோரை நேசிப்பதாகும்” என்றார் ஏசு நாதர். இதனைக் காந்தியடிகள் “சுதேசித் தர்மம்” என்றார். கதர் கிராமத் தொழில் சுதேசித் தர்மத்தை அடித்தளமாகக் கொண்டதாகும். ஒரு நீர் நிலையில் ஒரு கல்லை வீசிப்போட, அங்கே ஒரு சிறு அலைவட்டம் தோன்றுகிறது. அந்த முதல் அலைவட்டம் மற்றுமொரு அலை வட்டத்தை ஊக்குவிக்கிறது. அது படிப்படியாகப் பல அலைவட்டங்களைத் தோற்றுவித்து ஏரியின் கரைவரை விரிவாக்கம் பெறுகிறது. அந்த முதல் வட்டம் சுதேசித் தர்மத்தைக் குறிக்கிறது. அதன் விரிவாக்கம் உலகளாவிய தர்மத்தைப் பிரதிபலிக்கிறது.

சுதேசித் தர்மத்தைப் பிரதிபலிக்கும் அந்த முதல் வட்டம் ஊராட்சியாகிறது. ஊர் வாழ உலகம் வாழும். “தாயைப் பட்டினி போட்டுவிட்டு தம்பி காசிக்குச் சென்று அன்னதானம் செய்கிறான்” என்றால் அது சுதேசித் தர்மமாகாது. அது பரதர்மம். ஆடம்பரத்துக்காக ஆற்றும் போலி தர்மம். ஆகவே சுதேசி தர்மத்திலிருந்து சர்வ தேசியத் தர்மம் உருவாக வேண்டும். “கால், ஊராட்சியில் ஊன்றி நிற்கட்டும், சிந்தனை உலகளாவியதாக உயரட்டும்” என்பதும் அதுவே. இன்று உலக நாடுகளின் சிந்தனைப் போக்கை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் உலகளாவியத் தாராளமயக் கொள்கை (Liberalised Global & Multinational Economy) எனும்போது அது சுதேசி தர்மத்தை அடித்தளமாகக் கொண்டு விரிவாக்கம் பெறவேண்டும் என்பது காந்தியச் சிந்தனை. தாயைப் பட்டினி போட்டு செய்யும் தான தர்மம் போலாகி விடாது. தாயைப் போஷித்து தான தர்மம் என்ற திசை நோக்கி உலகளாவியத் தாராள மயக்கொள்கை உரம் பெற வேண்டும். இவையெல்லாம் சுய தேவைப் பூர்த்தியுள்ள சுதந்திரப் பாங்குள்ள ஊராட்சி என்னும் சுதேசி தர்மத்துக்கு ஆக்கமளிப்பவையாகும்.

இந்த யுகத்தில் தோன்றியுள்ள உலகளாவியச் சிந்தனைக்கு ஈடு கொடுக்கும் வலிமை வாய்ந்த ஊராட்சி உருவாக வேண்டும் என்பது நமது எதிர்கால நோக்கு.

கிராமசபை

1994ஆம் ஆண்டு நிறைவேற்றப் பெற்ற தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி 1996ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மற்றும் ஊராட்சித் தேர்தலின் பின்னணியில் ஒரு சிந்தனை. அது கிராமசபை பற்றிய சிந்தனை.

இச்சட்டத்தில் உள்ளாட்சி மூன்றாடுக்கு மாளிகையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தில் ஊராட்சி. அதனையடுத்துப் பல ஊராட்சிகள் கொண்ட ஒன்றியம் மூன்றாவது அடுக்கு மாவட்டக் கவுன்சில். இம்மூன்று அடுக்குகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டக் கவுன்சில் உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பெற்றனர். அதனையடுத்து ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஒன்றியத் தலைவரைத் தேர்வு செய்தனர். பின்னர் மாவட்டக் கவுன்சில் உறுப்பினர்கள் கூடி அதன் தலைவரைத் தேர்வு செய்தனர்.

இத்தேர்வுகள் அரசியல் கட்சி பேதமின்றி நடைபெற வேண்டும் என்ற ஒரு கோரிக்கை எழுந்தது. ஆனால் அது ஏற்கப்படவில்லை. ஊராட்சிக்குள் கட்சி பேதம் தலையீடு கூடாது என்பது கோரிக்கை. ஊர் ஒரு குடும்பம் என்ற லட்சியப் பார்வையில் இக்கோரிக்கை. இதனைப் பரிசீலித்த தமிழக அரசு ஊராட்சித் தலைவர் தேர்வுக்கு மாத்திரம் வேட்பாளர்கள் கட்சிகள் பெயரால் அறிவித்தல் கூடாது என்பதை ஒப்புக்கொண்டது. இதரப் பதவிகளுக்குக் கட்சியின் பெயரால் வேட்பாளர்கள் தேர்வு செய்யப் பெற்றனர்.

ஊராட்சிக்கே ஆணி வேரான கிராமசாபை உறுப்பினர்கள் பதவிக்குத், தேர்வு ஏதுவும் தேவை இல்லை. ஏனெனில் ஊரிலுள்ள வாக்காளர்கள் அனைவருமே அதன் உறுப்பினர்கள். ஆகவே கிராமசபைக்கு இது ஒரு தனிச் சிறப்பு. மக்களாட்சிக்கு மக்களே பொறுப்பு வகிக்கும் சுயம்பு இது. உலகிலுள்ள அனைத்தையும் ஒருவர் அவரவர் விருப்பத்துக்கு ஏற்பத் தேர்வு செய்யலாம். ஆனால் சிருஷ்டி கர்த்தாவான இறைவனை எவரும் தேர்வு செய்வதில்லை. ஏனெனில் இறைவன் சுயம்பு. அது போன்ற சிறப்பு இச்சட்டத்தில் கிராமசபைக்கு கிடைத்துள்ளது.

பகவத் கீதையில் “சுதர்மம்” என்ற சிந்தனை இடம் பெற்றுள்ளது. இதனைக் குறித்து விநோபா அடிகள் தமது கீதைப் பேருரையில் விளக்கும்போது சுதர்மத்தைத் தாய்க்கு ஒப்பிடுகிறார். நாம் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, உணவு, உடை, வீடு, தொழில், கல்வி, மனைவி அல்லது கணவன் இன்னோரன்னவற்றைத் தேர்வு செய்துகொள்கிறோம். ஆனால் எவரேனும் தமது தாயைத் தேர்வு செய்வதுண்டா? அது இயலாது. அந்தத் தாய் நாம் பிறவி எடுத்து முன்னரே நமக்கென இறைவனால் தேர்வு செய்யப்பெற்றவர். தாயை எவரும் மாற்றிக்கொள்ள இயலாது. வேறு அனைத்தையும் மாற்றிக்கொள்ள முடியும். கருப்போ, சிவப்போ, குட்டையோ, நெட்டையோ, அழகியோ, அழகில்லாதவளோ, தாய் தாய்தான், அதற்கு வேறு மாற்று கிடையாது. அது போன்று பிறவிக்கே வித்தாயிருக்கிற சுதர்மம் தாய் போன்றது என்று அடிகள் அதைத் தாய்க்கு ஒப்பிட்டுக் கூறுகிறார். அது போன்ற சுயம்பாக ஊராட்சிச் சட்டத்தில் கிராமச் சபை தனிச் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.

சோழப் பேரரசு காலத்தில் பண்டைத் தமிழரின் ஊராட்சிப் பரிபாலனத்துக்குப் பின், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அதை இழந்து, பின்னர் நாடு சுதந்திரம் பெற்று ஐம்பது ஆண்டுக் காலம் காத்திருந்து இன்றைய உள்ளாட்சித் தேர்தலில் பெற்றுள்ள “கிராம சபை” என்னும் அலகை ஆட்சியாளர்களும் மக்களும் மறந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. உள்ளாட்சித் தேர்தலை அடுத்து வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுக் கூட்டங்கள் மாநில அளவில் கட்சிவாரியாக வெற்றி பெற்ற வேட்பாளர்களின் மாநாடுகள், இறுதியாக அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் அழைத்து, அரசு அளிக்கக முன்வந்த பயிற்சி முகாம்கள் அனைத்திலும் “கிராம சபை” பற்றிய பேச்சே இல்லை. “கிராம சபை” இருட்டடிப்புக்கு உள்ளாயிற்று. உள்ளாட் சிக்குக் கிராம சபையே ஆணிவேர் என்பதை அனைத்துத் தரப்பினரும் உணரத் தவறியுள்ளது துரதிஷ்டமே.

பண்டைத் தமிழரின் ஊராட்சி முற்றிலும் மக்களாட்சிப் பாங்குடையது. ஏனெனில் தங்கள் பிரச்சினைகளை மக்கள் ஊர் கூடிக் கலந்துரையாடித் தீர்மானித்தனர். மக்களே நேரடியாகப் பங்கு பெற்ற மக்களாட்சிப் பண்பு அதில் தொக்கி நிற்கிறது. இன்று நாம் வானளாவப் புகழும் ஜனநாயகம் அல்லது மக்களாட்சி உண்மையில் மக்களால் தேர்வு செய்யப் பெற்ற பிரதிநிதிகளின் கட்சி ஆட்சியே. இதனை, மக்களை ஏமாற்றும் சுயநலவாதிகளின் ஆட்சி என்றே கூறுவேன். ஒரு சமயம் பிரிட்டீஷ் பாராளுமன்றத்தை “மலடி” என்றும் “விபச்சாரி” என்றும் காந்தியடிகள் விமர்சித்தார். ஏனெனில் ஏதெனும் நல்லது நடந்திருந்தால் அது பாராளுமன்றத்துக்கு வெளியே உள்ள நல்லவர்கள் துணையால் நடந்ததே அன்றி, பாராளுமன்றத்தால் அல்லவாயின் அது மலடியாகிறது. அதுபோல் உறுப்பினர்கள் அவரவர் சார்ந்த கட்சியின் கட்டளைக்கு ஏற்பத் தங்கள் மனச்சாட்சியை மாற்றிக் கொள்ளுவதால் பாராளுமன்றம் “விபச் சாரிகள்” மன்றமாகிறது. ஆகவே பாராளுமன்ற ஆட்சியை மக்களாட்சி என்று குறிப்பிடுவது பொருந்தாது.

இந்த அளவுகோலைக் கொண்டு அளவிடும்போது இன்றைய உள்ளாட்சி அமைப்பில் “கிராம சபை” என்ற அலகைத் தவிர இதர அனைத்தும் மக்களாட்சி இலக்கணத்துக்குப் பொருந்தாதவையே. தேர்தலில் போட்டியிட்டு, பொய்யும் புளுகும் பேசி, பல ஊழல்களுக்கு வாய்ப்பளித்து, வெற்றி பெற்றுவர்களைப் பாராட்டிப் பழகிய நமக்குச் சுயம்புவாக, அமைதியாக மக்களாட்சி அடித்தளமாக அமைந்துள்ள “கிராம சபை” என்னும் பொக்கிஷத்தை மதிக்கத் தவறி வருகிறோம். கிராம சபை உறுப்பினர்களே தங்களது முக்கியத்துவத்தையும் பொறுப்புக் கடமைகளையும் மறந்து எடுப்பார் கைப்பிளையாகச் செயலாற்றியிருப்பது வருந்தத்தக்கது. நீண்டகால அடிமைத் தனத்திலிருந்து இன்னும் நாம் மீளவில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. மக்களைத் தட்டி எழுப்பி விழிப்புறச் செய்வது மக்களாட்சியில் அக்கறை கொண்ட அறிஞர்களும் சமுதாய நலத் தொண்டர்களும் ஆற்ற வேண்டிய அவசரப் பணியாகும்.

பண்டைத் தமிழரின் ஊராட்சிப் பரிபாலனத்தைப் புகழ்ந்து பாராட்டிக் கொண்டிருந்தால் மாத்திரம் போதாது. அன்றைய யுகம் வேறு, இன்றைய யுகம் முற்றிலும் வேறு. அறிவியல் விழிப்பு மற்றும் வளர்ச்சி, காலத்தால் தூரத்தால் உலகம் சுருங்கி வரும் போக்கு, மொழி, ஜனம், ஜாதி, மதம் இன்னோரன்ன பேதங்களை எல்லாம் கடந்து தலை தூக்கி நிற்கும் சர்வதேசப் பார்வை, “ஊர் ஒரு குடும்பம்” என்ற சுதர்மம் “உலகம் ஒரு குடும்பம்” என்ற சர்வ தர்மமாக உயரத் துடிக்கும் பரிணாம வளர்ச்சி போன்ற எழுச்சிககளை எதிர் நோக்சிக் கொண்டிருக்கும் இன்றைய யுகம் 21ஆ-ம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. “ஊராட்சி” என்ற அலைவட்டம், சுயம்புவான முதல் அலை வட்டம் என்றால் “உலகம் ஒரு குடும்பம்” என்ற வட்டம் உலகத்தின் விளிம்பைத் தொட்டுக் கொண்டிருக்கும் சர்வதேசிய வட்டமாகி வருகிறது. இவ் விரண்டையும் இணைக்கும் புதிய பார்வை நமக்குத் தேவைப்படுகிறது. இதனையே விநோபா அடிகள், “கால் தரையில் ஊன்றி நிற்கட்டும், தலை வானுயர்ந்து உலகளாவிய சிந்தனைக்கு வாய்ப்பளிக்கட்டும் (Act Locally and Think Globally)” என்று குறிப்பிட்டார்.

அன்றைய பண்டைத் தமிழர் கண்ட ஊராட்சிப் பரிபாலனத்தில் “ஊர் ஒரு குடும்பம்” என்பது மாத்திரமே உயிர் பெற்றிருந்தது. இன்றைய “ஊராட்சி” பரிபாலனத்தில் “ஊர் ஒரு குடும்பம்” என்பதோடு “உலகம் ஒரு குடும்பம்” என்பதும் நம் முன்னே காட்சியளிக்கிறது. ஊராட்சிக்கு அடுத்து உலக மகா சபை இந்த நூற்றாண்டில் தலை தூக்கி நிற்கிறது. இவ்விரண்டு அலகுகளும் பரிணாம வளர்ச்சியில் முதுமை பெறவில்லை என்பது உண்மை. ஊராட்சியிலும் ஜாதி, மன, இன பேதங்கள் தோன்றி அதன் வளர்ச்சிக்கு ஊறு செய்கின்றன. அது போல் உலக மகா சபையிலும் தேசியம், எல்லைப் பிரச்சினை, மத பேதம், இன பேதம், அணு ஆயுதம், பொருளாதார ஆக்கிரமிப்புப் போன்ற சுயநலப் பிரச்சினைகள் குறிக்கிடுகின்றன.

ஆயினும், அதே சமயம் ஆயுதப் பரிகரணம், அணு ஆயுத ஒழிப்பு, பேச்சு வார்த்தை மூலம் கருத்து வேறுபாடுகளை அகற்றும் மனப்போக்கு, போர் இல்லாத உலகத்தைக் காண வேண்டும் என்ற வாஞ்சை, துயர் துடைக்கும் பணியில் ஆர்வம், சர்வ தேசப் பொருளாதாரப் பரிவர்த்தனை போன்ற பலவற்றுக்கு ஊக்கமளிக்கும் செயல் திட்டங்களும் உலக மகா சபையில் உருவாகி வருகின்றன. சென்ற காலம் கழித்தவை யாகட்டும். ஆயினும் அதனின்றும் பாடம் கற்போம். எதிர் காலம் என்னவாகுமோ என்ற அச்சம் நீங்கப் பெறுவோம். இவ்விரண்டு காலங்களும் நம் கைவசமில்லை. நிகழ் காலம் ஒன்றே நம் கைவசமுள்ளது. இன்றைய யுகம் நம் முன்னே நிற்கிறது. இன்றைய நமது ஊராட்சி பரிபாலனத்தையும் இன்றைய உலக அரங்கையும் செவ்விய முறையில் செயல் படுத்துவோம், அதில் எதிர்ப்படும் குறைகளைத் தவிர்த்து நிறைகளைப் பெருக்குவோம். இதற்குத் துணை அன்பு வழி. அன்பு வழியில் சத்தியத்தைத் தரிசிப்போம். இதுவே காந்தியடிகள் நமக்குக் கற்பித்த சத்திய சோதனை.

வீ. செல்வராஜ்:

1980-ஆம் ஆண்டு முதல் மதுரையில் தமிழ்நாடு காந்தி நினைவுநிதித் தலைவராகவும், தமிழ்நாடு சர்வோதயச் சங்கத் தலைவராகவும், தமிழ்நாடு ஆதாரக் கல்விச் சங்கத்தின் தலைவராகவும், தமிழ்நாடு காந்தி மன்றத் தலைவராகவும், சர்வோதய இயக்கத்தின் வார இதழான “கிராம ராஜ்யம்” ஆசிரியாரகவும், காந்தியடிகளின் நிர்மாணத்திட்ட இயக்க ஊழியனாகவும் இயங்கிக் கொண்டிருப்பவர்

You Might Also Like