Star Mountain

My travels and other interests

தேவாரம் (2008)

தேவாரம்

தென் இந்தியாவில் கி.பி. 600-900 ஆண்டுகளில் தோன்றி, வளர்ந்த இயக்கம் பக்தி இயக்கம். இதுவே முதல் திராவிட இயக்கம் என்று நினைக்கத் தோன்றுகிறது. இதன் தந்தையர் மூவர். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர். இப்பெரியாரின் சிந்தனைகளைத் தொகுத்து வழங்குவது தேவாரம். சுமார் 8000 பாடல்கள் கொண்டது. இதை வெறும் பக்தி இலக்கியம் என்று தள்ளி விட முடியாது. இது ஒரு மறு மலர்ச்சி இலக்கியம். தமிழர் வாழ்வில் மறு மலர்ச்சி உண்டு பண்ணிய இலக்கியம். தமிழிசையில் மறுமலர்ச்சி கொண்டுவந்த இலக்கியம். தமிழ் இலக்கியத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய இலக்கியம்.

வாழ்வில் மறுமலர்ச்சி:

இந்து மதம் புராண கால மதம். புராதன மதம். இது நன்னெறியிலிருந்து வழுவிய காலமும் உண்டு. இதை எடுத்துக்காட்டி மக்கள் மத்தியில் பிரபலமடைந்த மதங்கள் ஜைனமதமும், பௌத்தமதமும். ஆயின் இம்மதங்களும் குறைபாடுள்ள மதங்களாய் மாறின. மனதிற்கு எளிதில் அறிய முடியாத, ஸ்தூலமற்ற அற ஒழுக்கங்களையும், முக்தி கொள்கைகளையும் இந்த மதங்கள் பரப்பின. கண்ணுக்கு புலனாகாத கடவுளை, மோட்சத்தை வாழ்க்கையின் பயன் எனப் பிரசாரம் செய்தன. இம்மையைவிட மறுமையே சிறந்தது. இல்லறத்தை விட துறவறமே சிறந்தது போன்ற சிந்தனைகள் மக்களிடத்தில் திரும்ப திரும்பச் சொல்லப்பட்டன. இதனால் மாதருக்கும், மதிப்புக் குறைந்தது.மக்களுக்கு வாழ்வின் மீது பிடிப்புக் குறையும் அபாயம் ஏற்பட்டது. இதை மாற்றவேண்டும் என்ற சரித்திரத் தேவையை நன்கு உணர்ந்தனர் முதலில் வந்த நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும். இவர்களைத் தொடர்ந்து வந்தவர் சுந்தரர். இம்மூவரும் தமிழ் பாரம்பரியத்தை உற்று நோக்கி, அறம், பொருள், இன்பம், வீடு என்பது பண்டைத் தமிழர் வாழ்வு நெறி. இதுவே நம் மதமுமாகும். பௌத்தமும், ஜைனமும் போதிப்பது அறமும், வீடும் மட்டுமே. இது நமக்கு அயலான சித்தாந்தம் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்தினர்.

இறைவனை கூத்தபிரானாய், நடராசப் பெருமானாய் ஸ்தூலமுடையவனாய் காட்டினர். இம்மை இனிது. இல்லறம் இனிது. துறவின் பயன் நல்லதொரு மறுமை என்றால் இல்லறத்தின் பயனும் அஃதே. இல்லாளோடு நல்வாழ்க்கை நடத்தினால் எல்லா நலங்களும் கிடைக்கும் என்பதை எடுத்துச் சொன்னார்கள் இந்த நாயன்மார்கள். இதனை மக்களும் ஆமோதித்தனர் என்பதற்குச் சான்று. இன்றும் பல சைவத்திருமணங்களில் ஓதப்படும் பாட்டு:

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கோர் குறையுமிலை
கண்ணில் நல்லதுரும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளோடு பெருந்தகை இருந்ததே

திருஞானசம்பந்தரின் இப்பாட்டு இல்லறத்தை முதன்மைப்படுத்தியது. இல்லாளை முதன்மைப்படுத்தியது. வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டு பண்ணியது.பெண்ணுக்குரிய இடம் சங்கம் தொட்டு இருந்து வந்ததை உணர்ந்த இச்சைவ சமயத்தினர், இறைவனை உமையொரு பாகனாய் படைத்து, சமத்துவத்தை நிலைநாட்டினர். மூடப் பழக்க வழக்கங்களையும் எதிர்த்தனர். நல்ல நேரம், கெட்ட நேரம் என்ற பாகுபாடுகளை எதிர்த்தனர். இறைவன் குடியிருக்கும் உள்ளத்தில் கெட்ட நேரத்திற்கு வேலையில்லை என்பதை விளக்கிச்சொல்லினர்.

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணைதடவி
மாசறு திங்கள் கங்கைமுடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

சிவபெருமான் அடியார் உள்ளத்தில் இருக்கும்போது, கிரகங்களும், ராகு, கேது எனப்படும் பாம்புகளும் அவரைத் தீண்டா. அப்படித் தீண்டினாலும் அடியார்க்கு நல்லதே விளையும். மிக நல்லதே விளையும் என்று சமூகத்திற்கு உறுதியாகக் கூறினார் சம்பந்தர். இவ்வாறு வாழ்க்கையின் மறுமலர்ச்சிக்கு வழிகோலும் பல சிந்தனைகளை தேவாரத்தின் மூலம் தொகுத்து வழங்கினர் இத்தேவார மூவர்.

இசையில் மறுமலர்ச்சி:

தேவாரம் என்பதற்கு பல பொருள் உண்டு. தே என்றால் இறைவன்; ஆரம் என்றால் மாலை. இறைவனுக்குப் போடப்படும் மாலை என்று  ஒரு பொருள். வாரம் என்றால் அன்பு. இறைவன்மேல் செலுத்தும் அன்பு என்று இன்னொரு பொருள். வாரம் என்பது ஒரு வகை இசை பாட்டு. சிலப்பதிகாரம் இதை சொல், பொருள், இசை ஒழுக்கம் பொருந்திய பாட்டு என்று கூறுகிறது.

வாரம் என்பது வகுக்கும் காலை
நடையினும் எழுத்தினும் நோக்கி
தொடையமைந்து ஒழுகும் தொன்னமத்து என்ப

இறைவன் மேல் பாடிய வாரப்பாட்டு என்று மற்றுமொரு பொருள். இதுவே பொருத்தமான பொருளாய் தென்படுகிறது. தேவாரத்தை இசையோடு பாடினார்கள் தேவார மூவர்.இந்த இசைக்கான பண்கள் தொன்று தொட்டு தமிழகத்தில் வழங்கிவந்த பண்கள். சிலப்பதிகாரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இதில் வாரம் இரண்டும் வரிசையில் பாடியபின்னரே  மாதவி தனது நாட்டியத்தைத் தொடங்கினாள் என்ற குறிப்பு இருப்பதாய் தமிழிசை அறிஞர் வி.ப.க.சுந்தரம் கூறுகிறார் [1] வாரப்பாடல் ஒன்றாம் காலம், இரண்டாம் காலம் என்று அளவையில் வேறுபாடுகள் உடைய பாடல் என்று சொல்லப்படுகிறது. தொல்காப்பியத்திலும் இது பற்றிய குறிப்பு இருக்கிறது. தொல்காப்பியம் மூல நூலுக்கும், வழி நூலுக்கும் வரையறை வகுத்துள்ளது. மூல நூல் வாரப்பாட்டின் ஒன்றாம் காலம் மாதிரியும், வழிநூல் இரண்டாம் காலம் மாதிரியும் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறது. தொல்காப்பியம் கி.மு. 350-100 காலப்பகுதியைச் சேர்ந்தது.  இதிலிருந்து தேவாரப் பண்கள் எவ்வளவு தொன்மையானவை என்று தெரிகிறது. தாம் இயற்றிய தேவாரத்தை, பண்டைத் தமிழர் பண்களில் பாடி தமிழிசக்கு மறு மலர்ச்சியைக் கொடுத்துள்ளார்கள் தேவார ஆசிரியர்கள்.  பின்னர் தென்னிந்தியாவில் பிரபலமான கீர்த்தனை யுகத்திற்கும் இதுவே முன்னோடி என்று பேராசிரியர் சுந்தரம் கூறுகிறார். தென் இந்திய இசையின் சரித்திரத்தை ஒரு ஆரோக்கியமான ஆலமரத்திற்கு ஒப்பிடுகிறார் சுந்தரம்.தென்னிசை தொல்காப்பியக்காலத்தில் வேர்விட்டு, சங்க காலத்தில் முளைவிட்டு, சிலப்பதிகார காலத்தில் நல்ல அடிமரமாகி, நாயன்மார்கள், ஆழ்வார்கள் என்னும் பாசுரக்காலத்தில் கிளைவிட்டு. கீர்த்தனைக்காலத்தில் பூத்துக் காய்த்து கனிந்துள்ளது. கீர்த்தனைக் காலத்தின் (கி.பி.1700-2000) முன்னோடி தேவாரம் தோன்றிய பாசுரக்காலம் (கி.பி.600-900). பாசுரக்காலத்தின் முன்னோடி, சிலப்பதிகாரக்காலம் (கி.பி.200). சிலம்புக்காலத்தின் முன்னோடி பாணர் விறலியர் எனும் சங்க காலம் (கி.மு.300-100). இதற்கும் முன்னோடி தொல்காப்பியக் காலம் (கி.மு.400-200).எனவே தமிழிசையின் மறு மலர்ச்சியாய் தேவாரம் அமைந்துள்ளது. இடரினும் தளரினும், மாதர் மடப்பிடியும், காதலாகி கசிந்து முதலிய பாடல்கள் பிற்காலக் கீர்த்தனைகளுக்கு அமைப்புக் காட்டியவை.தேவாரத்தில் கீர்த்தனைகளாகவே இசை வடிவம் பெற்ற பாடல்கள் உண்டு.அவை பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற பகுப்புக்களைப் பெறவில்லையேனும், அப்பகுப்புக்களின் இசை வடிவங்களைப் பெற்றுள்ளன[1].

பக்தி ததும்பும் பாடல்களை, பழந்தமிழ் பண்களில்  தாம் பாடி, மக்களையும் பாட வைத்து தமிழிசையில் மறுமலர்ச்சி  ஏற்படுத்தினர் தேவார மூவர்.

இலக்கியத்தில் மறுமலர்ச்சி:

தேவார காலத்திற்கு முன் இருந்த காலம்  கி பி 250-600. இதனை இருண்ட காலம் அல்லது சங்கம் மருவிய காலம் என்று ஒரு சாரார் கூறுகின்றனர் [2]. களப்பிரர்கள் எனப்படும் கன்னடியர்களும், பல்லவர்களும் தென்னிந்தியாவை ஆண்ட காலம். பிராகிருத மொழியும், பாலி மொழியும், வடமொழியும் அரசினரின் ஆதரவு பெற்றிருந்த காலம்.பௌத்தமும், சமண மதமும் மன்னர்களின் மதிப்பை பெற்றிருந்த காலம். இம்மதங்கள் மறுமையைப் போற்றியதாலும், துறவறத்தைப் போற்றியதாலும், மாதருக்கு மதிப்புக் கொடுக்காததாலும். இக்கால இலக்கியங்களும் இச்சிந்தனைகளையே பிரதிபலித்தன. நீதி நூல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. அகம், புறம் பற்றிப் பாடி வந்த தமிழ் இலக்கியம் இயல்பான மனித உணர்ச்சிகளான் இயற்கை வருணணை, காதல் முதலிய உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டதாய் மாறின. சங்க இலக்கியத்தின் அடிப்படைக் கூறுகளான அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கும் அறம், வீடு என்று இரண்டாகச் சுருங்கின. இலக்கியம் வறட்சி நிலை கண்டது. வறட்சி நிலை கொண்டது. பக்தி இயக்கம் இந்நிலையை நன்கு கவனித்து, இதை மாற்றுவதற்கு முயற்சிகள் எடுத்தது. தேவார மூவர் இயற்கை வருணனைகளை தாரளமாய்ப் பயன்படுத்தினர். சிவபெருமான் கோவில் தலங்களின் இயற்கையை நெஞ்சைத்தொடும் வண்ணம் பாடினர். தெய்வீகக் காதலின் மூலம் மானிடக்காதலை பதிவு பண்ணினர். பின்னர் வரப்போகிற மானிட இலக்கியத்திற்கு, சுதந்திர இலக்கியத்திற்கு வழிகாட்டும் இலக்கியத்தினைப் படைத்தனர்.

ஞானசம்பந்தர் திருவையாற்றை வருணிக்கிறார்-

“வலம்வந்த மட வார்கள் நடமாட
முழவதிர மழையென் றஞ்சி
சிலமந்தி அலமந்து மர மேறி
முகில் பார்க்கும் திருவையாறே”

“இஞ்சாயல் இளந்தெங்கின் பழம் வீழ
இளமேதி இரிந்தங்கு ஒடி
செஞ்சாலி கதிர் உலக்கி செழுங்கமல
வயல் படியும் திருவையாறே”

“குன்றெலாம் குயில் கூவ கொழும்பிரச
மலர் பாய்ந்து வாச மங்கு
தென்றலார் அடிவருட செழுங்கரும்பு
கண்வளரும் திருவையாறே”

சிவபெருமான் திருக்கோயில் கொண்டுள்ள திருவையாறு இயற்கை வனப்புள்ளது. அங்குள்ள கோயிலை வலம் வந்து நடனம் ஆடும் மாதரின் பாத ஓசையையும், மத்தள ஒசையையும் கேட்டு, மரத்தில் உள்ள குரங்கு இடி இடிக்கிறதே, மழை வருமோ என்றஞ்சி மரத்தின் மேலேறி மேகத்தை பார்க்கின்ற திருவையாறு; காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து விழ, கீழிருந்த எருமைக் கன்றுகக்குட்டி மிரண்டு, வயலில் உள்ள கதிர்களை விலக்கி ஓடி, மறு பக்கத்தில் உள்ள தாமரைக் குளத்தைச் சேர்ந்தடைகிற திருவையாறு;குன்றிலிருந்து குயிலோசையைக் கேட்டு மகிழ்ந்த தென்றல், நறுமண மலர்கள் நிறைந்த சோலை வழியே சென்று, மலர்களின் நறுமணத்தை எடுத்துக்கொண்டு, கரும்புக்காட்டில் செழிப்பாக வளர்ந்திருக்கும் கரும்பின் பாதத்தை வருட, அச்சுகத்தில் துயிலும் கரும்புகள் நிறைந்த திருவையாறு போன்ற பாடல்கள் பலவற்றை தமிழ் இலக்கியம் இன்றும் நினைவுகொள்கின்றது[3].

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே

என்பது நாவுக்கரசர் எழுதிய தேவாரப் பாடல். இதில் இயற்கை இனிது. உலகம் இனிது. இந்த வாழ்க்கை இனிது என்ற கருத்துக்கள் மிளிர்கின்றன. ஒருபானைச்சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்ற முறையில் உலக இன்பத்தை பட்டியல் போடுகிறார் கவிஞர். ஓசை இன்பம், ஒளி இன்பம், ஸ்பரிச இன்பம், பருவம் தரும் இன்பம், காட்சி இன்பம் என்று எத்தனை விதமான  இன்பம் இந்த உலகத்தில். யார் கொடுத்த இன்பம் எது? இறைவன் கொடுத்ததன்றோ? அவ்வாறாயின் அவனது திருவடி நிழல் கொடுக்கும் இன்பம் வேறோ?அதுவும் இது போன்றது தான் என்ற முடிவுக்கு வருகிறார் அப்பர் என்னும் தேவார முதல்வர்.  மாசில்லாத வீணையிசை, மாலைக்குப்பின் வரும் நிலா வெளிச்சம், வீசுகிற தென்றல் காற்று, இளவேனில் எனும் வசந்த காலம், குளத்திலுள்ள பூக்கள் வண்டுகளுக்குத் தேன் வழங்கும் காட்சி முதலியன தரும் இன்பம், ஈசன் திருவடி இன்பமாகும் என்ற பாட்டு தமிழ் இலக்கியத்திற்கு தேவாரம் தரும் அழகியல் பாட்டு. இப்பாடல் மறைமுகமாகச் சொல்வதும் ஒன்றுண்டு. இறைவன் திருவடி சேர்ந்தபின் வரும் இன்பம் இப்பிறவியில், இங்கேயே இயற்கையாக வழங்கப்பட்டுள்ளது. இதை அனுபவிப்போம் என்ற வாழ்க்கை வாழ்வதற்கே சித்தாந்தம் அது. காலந்தோறும் தமிழன் இரத்தத்தில் ஊறிய இந்தப் பாட்டின் சாராம்சம் “ எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா! இறைவா!” என்று பாரதியின் மகாகவிதையாய் மலர்ந்துள்ளது.

காதல் என்பது இயல்பான மனித உணர்ச்சி. பக்தி எப்படி அதை மறக்க முடியும்? மறைக்க முடியும்? என்ற கோட்பாடுடையவர்கள் தேவார ஆசிரியர்கள். தெய்வீகக் காதலுக்கு உதாரணம் திருநாவுக்கரசர் எழுதிய இந்தப்பாட்டு.

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள்தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

தலைவி முதலில் தலைவனின் (இறைவனின்) பேரைக் கேட்டாள்; அவனது குணாதிசயங்களைக் கேட்டாள்; பின்னர் அவனது ஊரைக்கேட்டாள்; இப்பொழுது அவ்னுக்கு அடிமையாய் விட்டாள்; தாய் தந்தையரை நினையாள்; கட்டுப்பாடுகளை நீத்தாள்; தன்னை மறந்தாள்; தன் பேரையும் இழந்தாள்; தலைவன் தாளையே அடைய தலைப்படுகிறாள் என்ற பாட்டு தெய்வீகக் காதலாய் சொல்லப்பட்டு மானிடக்காதலை வெளிப்படுத்தும் பாட்டு. அங்கீகரிக்கும் பாட்டு. இதன் தாக்கம் தான் கண்ணதாசன் சினிமாவிற்கு எழுதிய “அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்; அடுத்த நாள் அவனுடைய ஊரைக் கேட்டேன்; இன்று வரை அவன் முகத்தை நானும் கானேன்” என்ற இன்னிசைப் பாட்டு.

தேவார காலத்திற்கு முந்தைய காலம் மன்னர்கள் எல்லாத்துறைகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலம். இலக்கியமும் அவர்கள் ஆணையில் அடங்கியிருந்த காலம். இதற்கு எதிர்க் குரல் கொடுத்தது தேவாரம். திருநாவுக்கரசர் மன்னரை மறுத்து, மன்னரை எதித்து எழுதிய பாட்டு இது.

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பமில்லை
தாமார்க்கும் குடியில்லாத் தன்மை யான
சங்கரன் நற் சங்கவெண் குழையோர் காதில்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே

நான் யார்க்கும் அடிமையில்லை; எமனுக்கு நான் அஞ்சுவதில்லை; நரகத்திலும் நான் வேதனைப்படமாட்டேன்; உனக்கு நான் அடிபணிய மாட்டேன்; இன்பமே எனக்கு என்றும்; துன்பமில்லை; யான் வணங்கும் சங்கரன் யாருக்கும் தலை வணங்கும் குடிமகன் அல்ல; அவன் தாள் தான் பணிவேனேயன்றி உன் தாள் அல்ல என்று அரசனுக்கு எச்சரிக்கை விடுகிறார் நாவுக்கரசர். இப்பாட்டு இந்தியச் சுதந்திரப்போராட்டத்தில் வெள்ளையருக்கு எதிராகப் போராடிய தமிழருக்கும், அவர் தம் தலைவருக்கும் ஊக்கம் தந்த பாட்டு.அவர்களது போர்க்குரலோடு கலந்த பாட்டு.

நாவுக்கரசரை நாவார வாழ்த்தவந்த மகாகவி பாரதியும் “பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்- பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்” என்று அதையே பாடி தேவாரத்தை தனது முன்னோடி இலக்கியம் என்று அங்கீகரித்துள்ளார்.

தேவாரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டாலும் இன்றைய திரைப்பாடலின் எளிமையும், இனிமையும், இசைக்கு ஏற்றதாயும் இருப்பது தேவாரத்தின் அழகா?தமிழ் மொழியின் அழகா என்று வியக்கத்தோன்றுகிறது. ஒசை ஒலியெலாம் ஆனாய் நீ- என்று கதாநாயகி பாட, வாச மலரெலாம் ஆனாய் என்று கதாநாயகன் முடிப்பது போல் உள்ளது ஞான்சம்பந்தர் தேவாரம்.

இவ்வாறு தமிழர் வாழ்வில் மறுமலர்ச்சி, தமிழிசையில் மறுமலர்ச்சி, தமிழ் இலக்கியத்தில் மறுமலர்ச்சி என்று தேவாரம் பக்தி இலக்கியக் கீர்த்தியோடு மேலும் பல கீர்த்திகளுடையதாய் காலம் தோறும், நாடு தோறும் தமிழரின் பாரம்பரியச் சொத்தாக விளங்கி வருவதை இன்றும் காண்கிறோம். இதற்கு நியூஜெர்சியில் நீங்கள் இன்று கொண்டாடும் தேவாரப் பயிற்சியின் முதலாண்டு விழா நல்லதொரு சாட்சி. பயிற்சி பெறும் மாணவர்க்கு எனது வாழ்த்துக்கள். தேவாரத்தை இசையுடன் கற்பிக்கும் இலங்கை இசைப்பேரரசி திருமதி. சரோஜினி தனபாலசிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழையும், தேவாரத்தையும் இன்று உலகெங்கும் பரப்பிவரும் இலங்கைத்தமிழருக்கு வாழ்த்துக்கள்.

துணை புரிந்த நூல்கள்:

  1. தமிழிசை- வி.ப.கா.சுந்தரம்,தமிழ் நாடு, நேற்று இன்று நாளை என்ற புத்தகத்தில் வெளியான கட்டுரை, நியூஜெர்சி தமிழ் சங்க வெளியீடு, 1997
  2. மது. ச.விமலானந்தம், தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம், ஐந்திணைப் பதிப்பகம், 1987
  3. தமிழ் இலக்கிய வரலாறு, மு.வரதராசன், சாகித்ய அக்காதெமி வெளியீடு, 1972

(மூலம்: தேவாரப் பயிற்சி முதலாண்டு விழா, பிளெய்ன்ஸ்பரோ, நியூ ஜெர்சி,  செப்டம்பர் 14, 2008. திருமதி.சரோஜினி தனபாலசிங்கம் அவர்களின் மாணவர்கள் நடத்திய நிகழ்ச்சியில் முருகானந்தம் பேசிய உரை,)

You Might Also Like