நாட்டுப்புறவியல் (1997)
நாட்டுப்புறவியல்
அ. அறிவுநம்பி
இணைப்பேராசிரியர்
தமிழ்த்துறை, புதுவைப் பல்கலைக்கழகம்
புதுவை – 605 014
தமிழ் இலக்கியவுலகில் நாட்டுப்புறவியலுக்குத் தனித்த இடமுண்டு. நாட்டுப்புற மக்களின் வாழ்வியற் கூறுகளை மொழியும் நாட்டுப்புறவியலின் காலத்தை அறிய இயலாது. தொல்காப்பியத்திலேயே நாட்டுப்புறவியற் கூறுகள் பேசப்படுகின்றன. வாய்மொழி மரபாகவே இவை தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து புழங்கி வருகின்றன.
நாட்டுப்புறவியல் நேற்று : நாட்டுப்புறக் கூறுகளைத் தொகுக்கும் பணி தொடக்கக் காலத்தில் நிகழ்ந்தது. குறிப்பிட்ட நோக்கமெதனையும் கருதாமல் எழுத்து வடிவில் அவற்றைப் பதிவாக்கும் போக்கு மட்டுமே நிகழ்ந்தது. போதிய விளக்கங்கள் ஆய்வுப் பார்வைகள் போன்றவை இத்தொகுப்புக் காலகட்டத்தில் கருதப்பெறவில்லை.
நாட்டுப்புறவியல் இன்று : நாட்டுப்புறக் கூறுகளை வகைப்பாடு செய்வதும், அதற்கேற்பத் தொகுப்புப் பணிகளை மேற்கொள்ளுவதும் நிகழ்கின்றன. இலக்கியங்கள், கலைக்கூறுகள், பிறவழக்காறுகள் என இவற்றை மூன்றாகக் கருதுவது நடப்பியல். மேலைநாட்டாரின் ஆய்வுக் கோட்பாடுகள் பயன்படுத்தப் பெறுகின்றன. கல்வி, ஆய்வு நிறுவனங்கள் நாட்டுப்புறவியலுக்கு முன்னுரிமை தருகின்றன. வாய்மொழி நிலையிலிருந்து அச்சாக்க நிலையில் இலக்கியங்கள், ஆய்வுக் குறிப்புகளுடன் வெளிவருகின்றன. நாட்டுப்புறவிலுக்கென்றே ஏடுகள் வருவதும், கருத்தரங்குகள் அமைவதும் இன்று இயல்பாகிவிட்டன. பல்துறையாய்வுகளும் பெருகியுள்ளன.
நாட்டுப்புறவியல் நாளை : துல்லியத்தன்மை பெறுமாறு ஆய்வுகள் ஆழமாகும். கோட்பாடுகளை மண்சார்ந்து கண்டுணரத் தலைப்படுவர். பல்துறைக் கோணங்களில் ஆய்வு எல்லை விரியும். மரபுகள் மீளவும் பார்வைக்குக் கொணரப்பெற்று வளர்ச்சி நிலைகள் உணரப்பெறும். நாட்டுப்புறக் கல்வியும், ஆய்வும் வலுப்பெறும்.
இலக்கியவுலகில் குறிக்கத்தக்க இடத்தைப் பெற்றது நாட்டுப்புறவியல். இதன் தொடக்க காலம் எதுவென்று அறிய இயலாத அளவு இது பழமை வாய்ந்தது. பிற்காலச் செவ்வியல் இலக்கியங்களுக்குத் தோற்று வாயாக நாட்டுப்புற இலக்கியங்களைக் கருதுவது பொதுவான கருத்தாகும். வளர்ந்துவரும் இலக்கிய உலகின் மாற்றங்களை நாட்டுப்புறவியலும் பெற்றுள்ளது. எனவே, நேற்றைக்கிருந்த நாட்டுப் புறவியல் இன்றைக்கு மாறு பாடுகளுடன் காணப் பெறுவதும், எதிர்காலத்தில் வேறுவிதமாகக் காணப் பெறவிருப்பதும் நடைமுறைச் செய்திகள்.
“நாட்டுப்புறவியல் நேற்று – இன்று – நாளை” என்ற தலைப்பிலான இக்கட்டுரை, நாட்டுப்புறவியலின் பண்டைச் செய்திகளையும், நடப்பியல் செய்திகளையும், எதிர்காலச் செய்திகளையும் தொகுத்துக்காண முனைகின்றது.
நாட்டுப்புறவியல் – விளக்கம்
மனித இனம் தோன்றிய நாளிலேயே நாட்டுப்புற-வியலும் தோன்றிவிட்டதாகக் கருதுவர். நாட்டுப்புற மக்களுடைய பண்பாடுகள், நம்பிக்கைகள், இலக்கியங்கள் போன்றவற்றைப் பேசுவதே நாட்டுப் புறவியல் என்பது ஒரு பொதுவான அறிமுகமாக அமையும்.
நாட்டுப்புறவியல் என்ற சொல் வழக்கிற்கு வருமுன்னர் மக்களின் மரபியல், பொதுப் புராணவியல், விவசாயிகளின் இலக்கியம் என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் இவ்வியல் வழங்கப் பெற்றது. ஆங்கிலத்தில் இதனை FOLKLORE என்ற சொல்லால் குறிப்பிடுவர். FOLK என்பதற்கு நேரடிப் பொருளாக வேளாண்மைத் தொழில்புரியும் சமுதாயம் கருதப்பெற்றது. LORE என்பது ‘மரபுக் கூறுகளின் தொகுப்பு’ என்பதாக அமையும். 1846இல் வில்லியம் சான் தாமசு (W. J. Thoms) என்பவர்தாம் FOLKLORE என்ற சொல்லை முதன் முறையாகக் கையாண்டவர் என்பர். அவருடைய கருத்தின்படி நாட்டுப்புறவியல் என்பது பண்டைப் பண்பாட்டின் எச்சம் (Cultural Survival) என்ற பொருளில் கையாளப்பெற்றது. காலப் போக்கில் நாட்டுப்புற மக்கள் எனப்படுவோர் படிப்பறிவற்றவர்கள் என்றும், பொதுவான தொழில், சமயம், மொழி ஆகியவற்றைக் கொண்ட குழுவினர் என்றும் விளக்கப்பெற்றனர். நாட்டுப்புற மக்களின் வாழ்வியற் கூறுகளை எடுத்து மொழிவதே நாட்டுப்புறவியல் என்பது போதுமான விளக்கமாக அமையும்.
நாட்டுப்புறவியலை இலக்கியம், கலை என்று வகைப்பாடு செய்வது மரபு. தொடக்க நிலையில் இவ்விரண்டு கூறுகளே முதன்மைப்படுத்தப்பெற்றன. அதன் பின்னர் நாட்டுப்புறப் பேச்சுவழக்குகள், உணவு, உடை, கைத்தொழில், மருத்துவம் எனப் பல்வேறு கூறுகளை நாட்டுப்புறவியல் பேச ஆரம்பித்தது. எனவே நாட்டுப்புற மக்களைப் பற்றிய அனைத்துச் செய்திகளும் நாட்டுப்புறவியலில் இடம்பெற வேண்டியதாயிற்று. இவ்வியலை பாமரர் இயல், நாட்டார் வழக்காற்றியல், சிற்றூரியல், வாய்மொழி இலக்கியங்கள் எனப் பல்வேறு பெயர்களிட்டுத் தமிழகத்தில் அழைத்து வந்தனர். எனினும் கல்வி நிறுவனங்கள் உட்படப் பொதுநிலையில் அனைவரும் ‘நாட்டுப்புறவியல்’ என்ற சொல்லையே புழங்கி வருகின்றனர்.
தமிழரின் தொன்மையிலக்கண நூலாகிய தொல்காப்பியம் ஏழு யாப்பு வகைகளை விளக்குமிடத்து அடிவரையில்லனவாகக் கூறும் வகைகள் பன்னெடுங் காலமாக வழக்கிலிருப்பவை எனக் குறிப்பிடும் நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்புமொழி, எனப்பெறும் ஆறனுள் பிசி என்பது விடுகதை. முதுமொழி எனப்பெறுவது பழமொழி. இவ்விரண்டும் இன்று நாட்டுப்புற இலக்கியவுலகில் குறிக்கத்தக்க இடத்தைப் பெற்றிலங்குகின்றன. தொல்காப்பியரின் “பண்ணத்தி” என்ற கூறு நாட்டுப்புறப் பாடல்களைக் குறிப்பதாகக் கருதுவர். இதற்குச் சான்றாகப் பழம் பாட்டினூடு கலந்த பொருளே தனக்குப் பொருளாகப் பாட்டும் உரையும் போலச் செய்யப்படுவன பண்ணத்தி என்றவாறு” என்ற பேராசிரியர் உரைக்குறிப்பையும் சுட்டுவர். உணர்வுகளை வெளிப்படுத்தப் பழங்காலத்தில் இலக்கண வரம்பு-களைக் கொண்டிராத பாடல்களைத் தம் மனப்-போக்கில் பண்டை மாந்தர்கள் உருவாக்கியிருத்தல் இயல்பானது. எழுத்து வடிவிலிடம் பெறாத காரணத்தாலும் ஒருவர் பிறரிடம் எடுத்து மொழியாத காரணத்தாலும் இத்தகைய தன்னுணர்ச்சிப் பாடல்கள் மறைந்தொழிந்தன. எனவே, நாட்டுப்புற இலக்-கியத்தின் காலப்பழமையை அறிதற் கியலவில்லை.
வகைபாடுகள::
பரப்பை அடிப்படையாகக் கொண்டும் வழக்கி-லிருப்பதைக் கணக்கிலெடுத்துக் கொண்டும் நாட்டுப் புறவியல் இருபெரும் பிரிவுகளாகக் கொள்ளப் பெற்றது.
- நாட்டுப்புற இலக்கியங்கள்
- நாட்டுப்புற கலைகளும் பிறவும்
தொடக்க நிலையில் நாட்டுப்புற இலக்கியங்களைத் தொகுத்துக் கண்ணுற்றோர் அவற்றினிடையே காணலாகும் பண்பு நலன்களை பல்வாறாகக் குறிப்பிட்டனர்.
- வாய்மொழியாகப் பரவல் (It is oral)
- மரபு வழிப்பட்டது (It is Traditional)
- பல்வேறு வடிவங்களாகத் திரிபடைதல் (It exists in different versions)
- ஆசிரியர் இல்லாமை (It is usually anonymous)
- ஒருவித வாய்பாட்டுக்குள் அடங்குவது (It tends to become formulized)
இவற்றுள் முதல் மூன்றும் இன்றியமையாதன எனச் சுட்டி விளக்கம் தருவார் சான் கெரால்டு பிருண்வார்ட்1 (Jan Harold Burnward – The study of American folklore P.4). தொடக்கநிலையில் நாட்டுப்புற மரபுக்கூறுகள் தொகுக்கப்பெற்றபோது இத்தகைய தன்மைகளை அவை பெற்றுள்ளனவா என்று பார்ப்பதுகூட இன்றியமையாததாகக் கருதப்பெற வில்லை. ஒட்டுமொத்தமாகத் தொகுப்பதும், அவற்றை ஏதேனும் ஒரு பொதுத் தலைப்பின்கீழ் அடக்குவதுமே பணிகளாயமைந்தன. பிறகு காலப்போக்கில் அறிவியல் நெறிப்பாடு களுக்கேற்பத் தொகுப்புப் பணிகளும் மாற்றங்களைக் கொண்டன.
நாட்டுப்புறவியல்: நேற்று
நாட்டுப்புற மக்கள், தம்மிடையே காணப்பெறும் மரபுக் கூறுகளை எழுத்துவடிவில் பதிவு செய்திருக்கவில்லை. நெடிய பாடல்கள் உட்பட பிளவுமே வாய்மொழி மரபாகவே தொடர்ந்து வழக்கத்திலிருந்த தன்மை குறிக்கத்தக்க கூறாகும். சடங்குகள், பழக்கவழக்கங்கள் உட்பட வாழ்வியற் கூறுகள் எந்தப் பின்புலத்தில், என்ன நோக்கத்துடன் உருவாக்கப் பெற்றன என்பதையும் நாட்டுப்புற மக்கள் எழுதி வைத்திருக்க வில்லை. ஒரு தலைமுறை யிலிருந்து அடுத்த தலை முறைக்கு அனைத்துக் கூறுகளும் செவிவழியாகவே இறக்குமதியாகின. ஏட்டுக் கல்வி இன்மை என்பது முதலாவது காரணம். இரண்டாவதாக இவற்றை எதற்காக ஆவணப்படுத்த வேண்டும் என்று சிந்திக்காத மனநிலை. பெரும்பாலான நாட்டுப்புற இலக்கியங்கள் எழுத்தறிவற்றவர்களால் பரம்பரை பரம்பரையாக வாய்மொழி மரபில் வாழ்ந்து வந்தன. ஆயினும் இலக்கியங்கள் எவையும் இறந்தொழியாதவாறு செவி வாயிலாக, நெஞ்சுகளனாக அமைய, மீண்டும் அடுத்தவரின் செவிக்கு அவ்விலக்கியங்கள் பரவிடும் மரபு தொடர்ந்தது. இவ்வண்ணம் நாட்டுப்புற மக்கள் பல தலைமுறைகளாக வாய்மொழி மரபிலேயே இலக்கியங்களையும், இன்னபிறவற்றையும் பாதுகாத்து வந்துள்ளனர். நாட்டுப்புறவியற் கூறுகளைக் கண்டறிந்து அவற்றைத் தொகுத்தும் வகுத்தும் முறைப்படுத்தும் எண்ணம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் முகிழ்த் திருக்க வேண்டும். காரணகாரிய நிலைகளைக் கருதாத வெறும் தொகுப்புகளாக நாட்டுப்புற இலக்கியங்-களைச் சேகரிக்கும் பணியில் மெதுவாகச் சிலர் ஈடுபட முனைந்தனர். இதனுடைய தொடர்ச்சியாக நாட்டுபுற இலக்கியங்களின் தொகுப்பே முதலில் மேற்கொள்ளப்பெற்றது. விடுகதைகளை மட்டும் சிலர் தொகுத்தனர். வேறுசிலர் பழமொழிகளைத் திரட்டினர். கிடைக்கப் பெற்ற இடம், பாடிக் காண்பித்தவர், வேலை, வயது போன்ற குறிப்புகளைக் கருதாமல் நாட்டுபுறப் பாடல்களைத் திரட்டி நூலாக்க முனைந்தனர் பலர். இவற்றுள் தாலாட்டுப் பாடல்கள் மிகுதி. தொழிற்களங்களில் பாடப்பெறும் பாடல்கள் அடுத்த நிலையிலும், கதைப்பாடல்கள் அடுத்த நிலையிலும் தொகுக்கப் பெற்றன. கதைகள் மிக அருகிய நிலையில் சேகரிக்கப்பெற்றன. களஆய்வு செய்ய வேண்டிய இடர்ப்பாடுகளும் பிறவும் இத்தொகுப்புகள் மிகுதியாக வாராமைக்குரிய காரணங்களாகும். நாட்டுப் புறக் கலைகளைக் கண்டு மகிழும் போக்கே தொண்ணுற்றெட்டு விழுக்காட்டளவில் தென்பட்டது. அக்கலைக் கூறுகளை ஆவணப்படுத்துதல் தேவையென்ற மனநிலை தோன்றவில்லை என்றே கருதவேண்டும். அதனைப் போன்றே நாட்டுப்புற நம்பிக்கைகள், சடங்குகள், கைத்தொழில்கள் போன்ற கூறுகளும் எழுத்துருவில் பதிவு செய்யப் பெறவில்லை. இத்தொகுப்புகள் எதிலும் ஆய்வுப் பார்வை இடம்பெறவில்லை. அத்தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளவை ஒரு குறிப்பிட்ட தலைப்பு அல்லது பொருளின் அடிப்படையில் வகைப்படுத்தப் பெறவுமில்லை. எல்லையையும் அவை வரையறை யாகக் கொள்ளவில்லை. ஒரு பாடலுக்குரிய மாறுபாடுகளை (பாட பேதங்கள் போன்ற கூறுகள்) விளக்கிக் காட்டுவதும் இடம்பெறவில்லை. நாட்டுப்புற இலக்கியங்களைத் தொகுப்பது என்ற ஒரே குறிக்கோள் மட்டுமே முதன்மைப்படுத்தப் பெற்றதால் மேற்கூறிய எக்கூறும் அத்தொகுப்பில் அமையவில்லை. நாட்டுப் புறவியலில் ஈடுபாடு கொண்டவர்களும், மேலைநாட்டினர் சிலரும் இவ்வாறான தொகுப்புப் பணிகளில் ஈடுபட்டதன் மூலம் நாட்டுப்புற இலக்கியக் கூறுகளில் சில எழுத்துவடிவில் கிடைக்கத் தொடங்கின.
நாட்டுப்புறவியல்: இன்று
பழையன கழிந்து புதியன புகும் வாழ்வில் பழையனவற்றையும் அலசிப்பார்க்கும் புத்துணர்வுச் சிந்தனை இன்று பரவலாகி விட்டது. முன்னோரின் மரபுக் கூறுகளைக் கண்டறிவதும், வரலாற்றுச் சிறப்புகளை உய்த்தறிவதும், பண்பாட்டு, சமூகப் பின்னணிகளை நோக்குவதும் இன்றைய தேவைகளாகிவிட்டன. இதனால் நாட்டுப்புற இலக்கியங்களைத் தொகுத்த மு. அருணாசலம், அன்னகாமு, கி.வா. செகந்நாதன் போன்றோர் அவற்றைக் குறிப்பிட்ட வகைப் பாடுகளுக்குள் அமைக்க முயன்றனர். அவர்களைத் தொடர்ந்து வெவ்வேறான வகைப்பாடுகளில் ஆறு. அழகப்பன், மா. வரதராசன், நா. வானமாமலை, ஆறு. இராமநாதன், சு. சக்திவேல், சு. சண்முகசுந்தரம் போன்றோர் நாட்டுப்புற இலக்கியங்களைத் தொகுத்தனர். அமங்கலம் என்று கருதப்பெற்ற ஒப்பாரிப் பாடல்களும் தொகுக்கப்பெறுதல் வேண்டுமென்ற மனப்போக்கு நாட்டுப்புற ஆர்வலர்களிடம் காணப்பெற்றது. இதன் காரணமாக நாட்டுப்புற மக்களின் வாழ்வியலைச் சித்திரிக்கும் – இன்ப, துன்ப, பொது நிலைகளைப் பேசும் – அனைத்து இலக்கியங்களும் ஏட்டுக்கு வரத்தொடங்கின. இவ்வாறான தொகுப்புப் பணிகளின்போது தென்படும் வேறுபாடான கூறுகள் இன்றைக்குக் கணிக்கப் பெறுகின்றன. இதற்கான காரணங்கள் இரண்டு.
- வாய்மொழி இலக்கியங்கள் வெறும் தொகுப்பாக மட்டும் வருதல் கூடாது எனவும் அதன் பின்புலம், போன்ற கூறுகள் விளக்கப்பெற வேண்டும் எனவும் எழுந்த சிந்தனை.
- கல்வி நிறுவனங்கள் நாட்டுப்புறவியலைப் பாடமாகவும், ஆய்வுப் பொருளாகவும் வரவேற்றமை.
இதனால் ஏனைய ஏட்டிலக்கியங்களுக்கு நிகரான மதிப்புகளை நாட்டுப்புறவியல் பெற்றுள்ளது.
பட்டம் அல்லது படிப்பு என்பதனை நோக்காகக் கொள்ளாத தொகுப்பாளர்களும் கூட அத்தொகுப்புப் பணிகளில் சில வரையறைகளை வடிவமைத்துக் கொண்டுள்ளனர். சான்றாக ஒரு நாட்டுப்புறப் பாடல் பல்வேறு மாறுபாடுகளுடன் தென்படும் போது அவற்றிற்கான காரணங்களைக் கீழ்க்கண்ட கூறுகளுடன் பொருத்திக் கண்டனர்.
- நிலவியல் சூழல் (Geographical Environment)
- சமூகச் சூழல் (Social Environment)
- வட்டார வழக்கு வேறுபாடு (Dialect Variation)
- பாடுவாரின் பண்புநலன்கள் (Performer’s Characters)
ஆய்வுக் கண்ணோட்டம் இடம்பெற்ற காரணத்தால் நாட்டுப்புற இலக்கியங்களில் பாடம் (Text) அமைப்பு (Form) சூழல் (Context) ஆகியவற்றை முன்நிறுத்திப் பார்ப்பது இன்றியமையாததானது. விருப்பு வெறுப் புகளுக்கப்பால் தரவுகள் சேகரிப்பது, வகைப்பாடு செய்வது, ஆய்வு செய்வது போன்றவை இன்று மையப்படுத்தப் பெறுகின்றன. இன்றைக்கு நிலவும் நாட்டுப்புறவியல் வகைப்பாட்டினைக் கீழ்க்கண்டாங்கு குறிக்கவியலும்.
கற்றமாந்தர்களிடையே நாட்டுப் புறவியலுக்குத் தனித்த மதிப்பேற்பட்டமைக்கு வெளிநாட்டு நாட்டுப் புறவியல் சிந்தனைகளும் ஒரு காரணம் எனலாம். மேலை நாட்டாரைப் போன்று தமிழக நாட்டுப்புறவியலில் அழுத்தமான சிந்தனைகளைப் படரவிட்ட ஆய்வாளர்கள் தொகுப்புப் பணிகளுக்கு அப்பால் தொகுக்கப் பெற்றவற்றின் பின்புலங்களை விளக்குவது, தகவலர்களின் வயது, பணி, பால், கல்வித் தகுதி போன்றவற்றைக் குறிப்பது, பாட வேறு பாடுகளுக்கான காரணங்களைத் தேடுவது, வட்டாரச் சிறப்புகளை எடுத்துரைப்பது போன்ற பணிகளில் முனைந்தனர். இதனால் தமிழாய்வுலகில் நாட்டுப்புறவியல் தனக்கென ஓர் சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது. நாட்டுப்புறவியல் இன்று பெற்றுள்ள வளர்ச்சியைக் கீழ்க்கண்டவாறு விளக்குவர் (2).
——————————————————————————————————————————————————-
நாட்டுப்புறவியல் |
||
நாட்டுப்புற இலக்கியம்
1.பாடல்கள் 2.கதைகள் 3.கதைப்பாடல்கள் 4.புராணங்கள் 5.விடுகதைகள் 6.பழமொழிகள் |
நாட்டுப்புறக் கலைக் கூறுகள்
1.கலைகள் 2.கைவினைத் தொழில்கள் 3.விளையாட்டுக்கள் |
நாட்டுப்புற வழக்காறுகள்
1.பழக்கவழக்கம் 2.வழிபாடுகள் 3.நம்பிக்கைகள் 4.மருத்துவம் 5.சடங்குகள் |
சேகரிப்பு நிலை>>>>>>>>விளக்க நிலை>>>>>>>>>>>ஒப்பாய்வு நிலை
(Collection stage) (Description stage) (Comparative stage)
அமைப்பியல் ஆய்வுக்கு முந்தையநிலை>>>அமைப்பியல் ஆய்வுக்கு முந்தையநிலை
(Pre-structural stage) (Post-structural stage)
——————————————————————————————————————————————–
இவ்வாறான சூழலில் மேலைநாட்டுத் திறனாய்வுக் கோட்பாடுகள் நாட்டுப் புறவியலில் இறங்கின. ஒரு குறிப்பிட்ட ஆய்வுக் கண்ணோட்டத்தில் நாட்டுப்புறவியற் கூறுகளை அலசவேண்டுமென்ற எண்ணம் அழுத்தமாகவும் ஆழமாகவும் வேர்விட்டது. இதன் காரணமாக இன்று பல்துறை ஆய்வுகளாக நாட்டுப்புறவியலாய்வுகள் பெருகிக் கொண்டுள்ளன. அமைப்பியலுக்கப்பால், வரலாற்றியல், மொழியியல், உளவியல், பண்பாட்டியல், சூழ்நிலையியல் போன்ற இயல்கள் இடம்பெறத் தொடங்கியுள்ளன. ரிச்சர்ட் டார்சன் என்பார் பன்னிரு கோட்பாடுகளைக் குறிப்பிடுவதும், கொம்மே (Gomme) ரூத் பெனிடிக்ட் (Ruth Benedict) பிரேசர் (Frazer) டான்யோடர் (Don Yoder) போன்றார் நாட்டுப்புறவியல் பற்றி விளக்குவதும் தமிழ்நாட்டுப்புற உலகில் கருதப்பெற்றன. குறிப்பாக, விளாடி மிர் பிராப் (Vladimir Propp) லெவி ஸ்டிராஸ் (Levi Strauss) ஆகியோரின் கருத்தாக்கங்கள் நாட்டுப்புறவில் ஆய்வாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. நாட்டுப்புறவியலைச் சமூகவியல், மானிடவியல், மெய்ப்பொருளியல் போன்ற இயல்களுடன் இணைத்துக் காணும்போக்கும் இன்று பெருகியுள்ளது.
இன்று, ஆய்வுப் பணிகளுக்கப்பால் நாட்டுப் புறவியலின் பரந்துபட்ட வளர்ச்சியில் குறிக்கத்தக்கவை இரண்டு.
- ஓலைகளிலிருந்தும், வாய்மொழியிலிருந்தும் இலக்கியங்களை எழுத்துருவில் கொணருதல்.
- நாட்டுப்புற வியலுக்கென்றே இதழ்கள் நடத்துதல்.
பதிப்புப் பணிகள் மிகுந்த வேகத்துடன் இல்லையெனினும் ஆங்காங்கே ஓலைச் சுவடிகளிலிருந்து அச்சுருவாக்கத்திற்குப் பல நாட்டுப்புறக் கூறுகள் மாறிவருகின்றன. சிலர்மட்டும் ஆய்வுக் குறிப்புகளுடன் இவற்றை வெளியிட்டு வருகின்றனர். நாட்டுப்புறவியல், தன்னான்னே நாட்டார் வழக்காற்றியல் போன்ற இதழ்களின் பங்களிப்பு கருதத்தக்கது. பல்கலைக் கழகங்களில் நாட்டுப்புறவியல் துறை எனத் துறை அமைக்கப் பெற்றிருப்பதும், பாளையங் கோட்டையில் நாட்டுப்புறத் துறை சிறந்த ஆவணக் காப்பகத்தைக் கொண்டிருப்பதும், Fossils போன்ற அமைப்புகள் நாட்டுப் புறவியற் கருத்தரங்குகளை இடை விடாது நடத்திவருவதும் குறிக்கத் தக்கவை. பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு (University Grants Commission) போன்ற அமைப்புகள் நாட்டுப்புறக் கலைகளுக்கான பயிலரங்குகள் (Workshops), கருத்தரங்குகள் (Seminars) நடத்த உதவுவதும், கலை நிறுவனங்கள் நாட்டுப்புறக் கலைகளையும் பிறவற்றையும் நிலைநிறுத்திக் காட்ட முனைவதும் நடப்பியல்கள். பண்டைக்காலம் போலக் கருவிகள் இல்லாச் சூழல் இன்றில்லை. எனவே ஒலியிழைகள், ஒளியிழைகள் இவற்றின் உதவியால் நாட்டுப்புறக் கூறுகள் காட்சிப்படுத்தப்படவும் ஒலித்துக்காட்டப்பெறவும் வாய்ப்புகள் மிகுதியாயுள்ளன. எனவே இன்றைய சூழல் நாட்டுப்புறவியலுக்கு ஓர் ஏற்றத்தைத் தந்துள்ளது எனக் கூறவேண்டும். தீண்டத்தகாதது போன்று கிடந்த நாட்டுப்புறக் கூறுகள் கல்வி, ஆய்வு நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளன. ஏடுகளும், தெலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்களும் நாட்டுப் புறவியலுக்குத் தம்மாலான பணிகளைச் செய்து வருகின்றன. பழைய மரபுகளைப் புதியனவற்றில் இணைத்துக் காட்டும் பிறதொரு கட்டமும் இன்று காணப்பெறுகின்றது.
நாட்டுப்புறவியல்: நாளை
அறிவியல் வளர்ச்சியால் மனிதர்களின் பணிகள் துல்லியத்தன்மை பெற்று வருகின்றன. நாட்டுப் புறவியல் நாளை வெவ்வேறான கோணங்களில் மக்களிடையே மீட்டுருவாக்கப் பெற மிகுதியான வாய்ப்புகள் தென்படுகின்றன. குறிப்பாக நாட்டுப்புற மருத்துவம் இன்று மருத்துவத் துறையில் வெளி நாட்டுக்காரர்களாலும் புகழப்பெறுவதைக் கூறலாம். பகுத்தறிவுக்கு ஒவ்வாத நாட்டுப்புறச் சடங்குகள், பழக்க வழக்கங்கள் பதிவு செய்யப் பெறுவதுடன் நில்லாது மீள்பார்வைக்கு உரியதாக்கப் பெறும். கோட்பாடுகளை மட்டுமே கணக்கில் கொண்டு ஆயும் போக்கிலிருந்து மாறி, வட்டாரம் போன்ற கூறுகள் முதன்மைப் படுத்தப்பெற்று நாட்டுப்புறக் கூறுகளுக் கான மெய்ம்மைகள் உரைப்பெறும். கணிப் பொறியின் உதவியுடன் ஒப்பீட்டுப் பார்வைகள் பெருகும். நாட்டுப்புறக் கூறுகள் எப்பகுதிகளில் எக்காரணங்களால் எவ்வளவு காலமாக வழக்கிலிருந்து வருகின்றன என்பதை ஓரளவு துல்லியத் தன்மையுடன் காணும் நுண்ணிய ஆய்வுகள் மலரத் தொடங்கும் நாட்டுப்புறக் கூறுகளின் அகல நீளங்கள் மாற்றம் பெறத்தக்கன அல்ல. ஆனால் தேவைகருதிய சூழலில் மீளவருதல், பன்முறை கூறப்பெறல் போன்ற கூறுகள் சுருக்கப்பெறக் கூடிய வாய்ப்புகளும் உண்டு. காலந்தோறும் நாட்டுப்புறக் கலைகளில், இலக்கியங்களில், பிற வழக்காறுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் சமூக, வரலாற்று, உளவியல் பார்வைகளால் கணித்தறியப் பெறுவதற்கான சூழல்கள் இன்னும் விரிவாகும். ஆவணப்படுத்தும் பணிகள் தொழில்நுட்பக் கூறுகளால் மேலும் வலுப்பெறும். ஆய்வுக் கண்ணோட்டங்கள் பல்துறைப் பார்வைகளாக மாறும். குறிப்பிட்ட ஒரு துறையில் வல்லாண்மை பெற்றோரால் நாட்டுப்புறக் கூறுகள் ஒவ்வொன்றும் ஆழ்ந்து நோக்கப்பெறும். விரிந்தும் பரந்தும் அமைந்துள்ள நாட்டுப் புறவியல் மேலும் ஒளிர்ந்து திகழும் காலமாக எதிர்காலம் அமையும். ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்றாலும் நாட்டுப் புறப் பழமொழி ஒன்று உரைக்கும் பொருள் கருதத்தக்கது. அது…. ‘மூத்தோர் சொல்-வார்த்தை அமிர்தம்’.
குறிப்புகள்:
- மேற்கோள், சு. சக்திவேல், நாடுப்புறவியலாய்வு,.4-5
- மேலது ப. 15.
அ. அறிவுநம்பி:
‘தமிழகத்தில் தெருக்கூத்து’ என்ற தலைப்பில் நாட்டுப்புற நாடகம் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். முதுகலையில் பல்கலைக்கழக முதன்மை பெற்ற இவர் இதுவரை பத்து நூல்களை எழுதியுள்ளார். நாட்டுப்புறவியல், நாடகவியல், இலக்கியவியல் இவற்றில் ஈடுபாடு கொண்ட இவர் பன்னாட்டுக் கருத்தரங்குகள் உட்படப் பல கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கி வருகிறார்.