Star Mountain

My travels and other interests

கல்விதமிழ்நாடு நேற்று இன்று நாளை

நூல்கள் (1997)

நூல்கள்
ச. மகாவிஷ்ணு
புதுவைப் பல்கலைக்கழகம்
புதுச்சேரி

ஒருவர் கருத்தைப் பிறரறியச் செய்வதற்குத் தொடர்புச் சாதனங்கள் பயன்படுகின்றன. அச்சாதனங்கள் பருவ ஏடுகள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் நூல்கள் ஆகியனவாம். இவற்றுள் நூல்கள் முற்காலத்தில் உருவமற்ற நிலையில் வாய்மொழியாகத் திகழ்ந்தன. எழுத்தின் தோற்றத்திற்குப் பின் பனையோலை நறுக்குகள், எழுத்தாணி முதலிய எழுதுபொருட்களின் துணையோடு செய்யுள் நூல்கள் உருவாக்கப் பெற்றன. அவற்றை வாசிப்பதற்கு மரபிலக்கணம் முதலியன தேவையாக இருந்தன. தாள், மை, அச்சு ஆகியவற்றின் வருகையால் தமிழ் நூல்கள் அச்சாக்கப் பெற்றன. அத்தகைய நூல்கள் வாசிப்பவருக்கு வசதியாகவும் எளிமையாகவும் இருந்தன. செய்யுள் நடை மட்டுமன்றி உரை நடையிலும் தமிழ் நூல்கள் அச்சிடப்பெற்றன.

பின்னர் மின்னணு முறையில் கணிப்பொறியின் துணையோடு அச்சிடப்பெற்ற நூல்கள் அறிமுகமாயின. இந்நிலையில் வசதிகள் மிகுதியாக இருப்பினும் செலவு கருதி குறைவானவர்களே (15%) கணிப்பொறி உதவியோடு நூல்களை வெளியிடுகின்றனர். இதே சூழலில் சி.டி.ரோம் (C.D. Rom) என்னும் தொழில் நுட்பத்தின் வழி ஓரிரு நூல்கள் வெளியிடப் பெறுகின்றன. தற்போது இந்த முறை நூலகங்களில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. இலக்கியம் என்பது மட்டுமன்றிப் பிற துறை நூல்களின் தோற்றம் தற்காலத்தில் மிகுதியாக உள்ளது. முற்காலத்தில் பொதுவாக நூல்கள் என்று குறிக்கப்பெற்ற நிலைமாறி, கதை நூல்கள், சிறுவர் நூல்கள், அறிவியல் நூல்கள் முதலிய பல்வேறு நிலைகளில் விரிவடைந்துள்ளன. அவற்றை வாசிப்போரும் மிகுந்துள்ளனர். எனினும் மிகுதியான வாசகர்களை நூல் வாசிப்பினின்றும் திசை திருப்பும் வகையில் தொலைக்காட்சி அலைவரிசைகள் மிகுந்து வருகின்றன. இவை தமிழ் மக்களின் சுவை ஈடுபாட்டை மாற்றும் தன்மையவாயும் விளங்குகின்றன.

எதிர்காலத்தில் நூல்கள் அச்சு வழியில் அல்லாமல் ஒலிநாடாக்களாகவே வெளியிடப்பெறும். அத்தகைய நூல்களை வாசிப்பதற்கு எத்தகைய சூழலும் தடையாக இராது; உருவாக்கும் செலவும் குறையும். எனவே குறைவான விலையில் நூல்களை வாங்கி வாசிக்க மிகுதியானோர் முன்வருவர். அச்சு நூல்களும் குறைவாக வெளியிடப்பெற்று வாசிக்கப்பெறும். மொழி மட்டுமன்றி இசை முதலிய சிறப்பொலிகள் ஒலிநாடா நூலில் அமைக்கப்பெறும். பழங்காலத் தமிழகத்தில் இருந்த பாடங்கேட்டல், வாய்மொழிக்கல்வி, செவிவாசிப்பு முதலியவற்றோடு மிகவும் தொடர்புடையதாக எதிர்காலத்தில் ஒலிநாடா நூல்கள் வெளியிடப்பெற்று வாசிக்கப்பெறும்.

உலகில் மானிட இனம் பல்வேறு வளர்ச்சிகளைக் கடந்து தோன்றியதாகும். இம்மானிட இனத்தின் அறிவு நிலையும் படிப்படியாக வளர்ந்ததை மானிடவியல் சுட்டும். அத்தகைய சூழலில் மானிடன், தான் புதிதாகக் கண்ட, சிந்தித்த கூறுகளைப்/ செய்திகளைப் பிறருக்கு எடுத்துரைத்தான். மொழியின் தோற்றத்திற்குப் பிறகு இந்த நிலை மிகுதியாக வளர்ந்துள்ளது. கருத்தை வெளியிடுவதற்கும் அதைப் புரிந்து கொள்வதற்கும் மொழி இன்றியமையாதது. மொழி என்பது பேச்சுமொழி, எழுத்து மொழி என இருவகைப்படும். இவற்றுள் பேச்சுமொழியே முதலில் தோன்றியதாகும். எனவே கருத்தை வெளியிடுதல் என்பது பேச்சு மொழி வழியே முதலில் நிகழ்ந்துள்ளது. அதன்பின் எழுத்து நடைமுறைக்கு வந்தது. அத்தகைய காலகட்டத்தில் மானிடன் தனக்குக் கிடைத்த எழுது பொருட்களில் கருத்தை எழுதி வெளிப்படுத்தினான்.

ஓலை, எழுத்தாணி முதலியவற்றை எழுதுபொருட்களாகப் பயன்படுத்திய நிலை பண்டைத் தமிழகத்தில் மிகுதியாக இருந்துள்ளது. பிறகு தாள், மை, அச்சு முதலியவற்றின் தோற்றத்தையடுத்து அச்சு நூல்கள் தோன்றியுள்ளன. இந்நிலையே தற்காலத்தும் தொடர்கின்றது. இத்தகைய பின்புலத்தைக் கொண்ட தமிழ் நூல்கள் முற்காலத்தும் தற்காலத்தும் எத்தகைய நிலையில் இருந்தன, இருக்கின்றன என்பனவற்றை ஆய்வது இக்கட்டுரையின் நோக்கம். அதன் வழி எதிர்காலத்தில் தமிழ் நூல்கள் எவ்வாறு அமையும் என்பதை ஆய்வு செய்யும் முயற்சி மேற்கொள்ளப் பெறும். தற்காலத் தமிழ் நூல்களின் நிலை சென்னையில் நூல் வெளியீட்டாளர்களிடம் கள ஆய்வின் வழி திரட்டப் பெற்ற தரவுகளைக் கொண்டு – ஆய்வு செய்யப் பெறும்.

சமூகவியல் நோக்கில் நூல்

நூல் வெளியீடு என்பது சமூகத்தில் நிகழும் தன்மையதே. எனவே நூல் வெளியீடு பற்றிய சமூகவியல் கோட்பாட்டை வரையறுப்பது இவண் தேவையானதாம். சமூகவியலின் பல்வேறு கூறுகளுள் இன்றியமையாதது பண்பாடு ஆகும். இப்பண்பாடு என்பதனை, “மனிதன் சிந்திக்கிற, கொண்டிருக்கிற, செய்கிற எல்லாச் செய்திகளையும் உள்ளடக்கியிருக்கிற ஒரு சிக்கலான தொகுதி”1 என்று சமூகவியல் சுட்டும். இவ்வரையறையில் குறிக்கப் பெற்ற சிந்தனை என்பது மனத்துள்ளேயே இருந்து விட்டால் யாருக்கும் தெரியப்போவதில்லை. அச்சிந்தனையை அல்லது எண்ணத்தை வெளிப்படுத்தும்போதுதான் பிறருக்குத் தெரிய வரும். எனவே, சமூகவியலார் சுட்டும் சிந்தனை/ எண்ணம் என்பது வெளிப்படுத்தப் பெறும் சிந்தனையேயாம். வெளியிடப் பெறும் சிந்தனை என்பது பல்வேறு வகைகளில் அமையும். சான்றுகள் வருமாறு:

  1. வானொலியில் ஒருவர் தன் சிந்தனையை வெளிப்படுத்திப் பேசுதல்
  2. மேடை/ தொலைக்காட்சியில் நாடகமாக, நிகழ்கலையாக நிகழ்த்துதல்
  3. திரைப்படமாக வெளியிடுதல்
  4. நூலாக எழுதி வெளியிடுதல்.

முதலிய அனைத்துமே சிந்தனை வெளிப்பாடாகவே அமையும்.

எனவே, நூல் வெளியீடு என்பது சமூகவியல் விளக்கும் பண்பாட்டின் ஒரு பகுதியான சிந்தனை என்பதில் அடங்கும் என்பது தெளிவு. வெளியீடு என்பது மனிதனின் சமூகத் தேவையுமாகும். மனிதன்- சிந்தித்த, கேட்ட, வாசித்த, பார்த்த – அறிந்த பல்வேறு கருத்துக் கூறுகள் குறிப்பிட்ட சூழலில் பேச்சாகவோ எழத்தாகவோ வேறு கலைகளாகவோ வெளியிடப் பெறும்.

முற்கால நூல்-விளக்கம்

தொல்காப்பியர், பவணந்தியார் இருவரும் தத்தம் இலக்கண நூல்களில் நூல் பற்றிய விளக்கங்களைத் தந்துள்ளனர்.2 அவ்விளக்கங்கள் அவர்தம் காலத்திற்கு உரியனவாய் உள்ளன. அவை தற்கால நூல்களுக்குப் பேரளவு பொருந்துவனவாய் இல்லை.

நூலின் பெயர்கள்

பழங்காலம் முதல் தமிழர் ஒவ்வொரு பொருளுக்கும் அதன் பண்பு, உரு அமைவு, நிறச்சாயல், பயன்படும் விதம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெயர் வைத்திருக்கின்றனர். அவ்வகையில் நூல் என்பது ஏடு, சுவடி, ஓலை, தூக்கு, பனுவல், புத்தகம், பிரதி, படைப்பு என்றெல்லாம் பெயர் பெற்றிருக்கின்றது.

நூல் = இலக்கியம்

’நூல்’ என்றாலே இலக்கியம் என்ற கருத்தும் தமிழ் நூலாசிரியர்களால் சுட்டப்பட்டுள்ளது. மேலும் இலக்கியம் என்றாலே நல்ல நூல் என்றும் கருதப்பெற்றுள்ளது. ‘நல்லநோக்கம் அல்ல நல்ல பயன்’ என்று பொருள் தரக்கூடிய ‘இலக்கியம்’ என்ற சொல்லைத் தமிழர்கள் எழுத்தாலாக்கப்பட்ட எல்லா நூல்களுக்கும் பொதுப் பெயராக வழங்கி வருவதைக் கவனித்தால் தமிழுக்குள்ள தனிச்சிறப்புப் புலப்படும். என்னவென்றால், தமிழ் மொழியில் எழுதப்படுகிற எந்த நூலுக்கும் ஒரு சிறந்த நோக்கம் இருக்க வேண்டும் என்பதையே தமிழர்கள் விரும்பினார்கள் என்பது விளங்குகிறது. ‘இலக்கியம்’ என்று தமிழில் சொன்னால் ‘ஒரு நூல்’ அல்லது ‘ஒரு புத்தகம்’  என்றுதான் அர்த்தமாகும் என்ற கருத்து அரண் செய்யும். இக்குறிப்பில் வந்துள்ள நல்ல நூல்கள் எனத் தகும். ஆயினும் நல்லநோக்கம், நல்ல பயன் என்பது எல்லா வாசகர்களுக்கும் ஒரே மாதிரி இருந்துவிடுவதில்லை. எனவே ஒருசிலருக்கு நல்ல நூலாக இருப்பது வேறு சிலருக்கு நல்ல நூலாகத் தோன்றாமல் இருக்கும். ஆக, ‘எது நல்ல நூல்’ என்ற வினாவிற்கு விடைகள் மாறுபட்டிருக்கும்.

கல்வெட்டு

தமிழகத்தில் கல்வெட்டு முதலியவற்றில் எழுதி வைக்கும் போக்கு இருந்துள்ளது. எனினும் அவற்றில் அரசாணை முதலிய வடிவங்கள் இருந்தனவேயன்றி இலக்கியப் பாடல் வடிவங்கள் பேரளவு இடம் பெறவில்லை. காரணம் ஓலையைத் தேவையான இடத்திற்கு எடுத்துச் சென்று வாசிக்க இயலும். கல்வெட்டை அவ்வாறு எடுத்துச் செல்ல இயலாது. இசை பற்றிய கட்டுரை ஒன்று குடுமியான் மலையில் கல்வெட்டாகச் செதுக்கப்பட்டுள்ள செய்தி வரலாற்றில் குறிக்கப்பட்டு உள்ளது. எனினும் அது பெருவழக்கன்று.

ஓலைச்சுவடி – தன்மை

பழந்தமிழர்கள் இலக்கியத்தை / பாடல்களை ஓலைகளில் எழுதி வந்தமையே மிகுதி. ஓலையில் இரும்பு ஆணி கொண்டு எழுதுவதால் புள்ளி வைக்க இயலாது. புள்ளி வைத்தால் ஓலையின் அடுத்த பக்க எழுத்திலும் அப்புள்ளி அமைந்துவிடும். அதுமட்டுமன்றி, ஓலை கிழிந்துவிடவும் கூடும். எனவே ஓலைச் சுவடியின் வரி வடிவத்தில் புள்ளி எழுத்து எனப்படும் ஒற்றெழுத்துகளும் முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, காற்புள்ளி முதலியனவும் இடம்பெறா. அதே போல் ஓலைச்சுவடியின் எழுத்து முறையில்… +++++++++ர-ர-ஈ, கொ-கோ, என்ற அமைப்பு காணப்படுகிறது.

எனவே, எந்த எழுத்து எப்படி இருக்கும், எந்த எழுத்து (குறிப்பிட்ட சொல்லில்) எப்படி அமையும் போன்ற தெளிவுகள் தெரிந்திருந்தாலோ பாடல்களைச் சரியாக வாசிக்க முடியும். மேலும் அடிகள் எங்கு முடியும் என்பது பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். காரணம், ஓலைச்சுவடியில் இடைவெளியின்றித், தொடர்ந்து எழுதப் பெற்றிருக்கும். எனவே, அந்நூல்களை வாசிப்பதற்கு மரபிலக்கணத் தேவை மிகுதி.

ஓலைச்சுவடிகள்: நூல்கள்

வாய்மொழி/செவிவழி வாசிப்பு முறையை அடுத்து எழுத்து – வரி வடிவம் தோன்றியது. எழுத்து முறை நடைமுறைக்கு வந்தபின் பாடல்களை ஓலைகளில் எழுதி வைத்தனர். ஓலையில் எழுதி வாசிக்க வேண்டிய தேவை ஏற்பட்ட நிலையை, “வாய்மொழி வழியாகக் குறிப்பிட்ட ஒரு சில நூல்களை மட்டும் கற்க முடிந்தது. மேலும் பல நூல்களையும் உரைகளையும் கற்க வேண்டிய நிலையில் ஏடுகளில் எழுதிப் படித்தனர்.”5 என்பர்.

இக்கருத்தில் ஓலையில் எழுதவேண்டிய தேவை உரைகளைக் கற்க வேண்டிய நிலையில் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் முதலில் பாடல்களை வாசிப்பதில் எளிமையை விரும்பியே ஓலையில் எழுதினர். ஆய்வாளர் குறிப்பிடுவது போல் உரைகளைக் கற்பதற்காகச் சுவடியில் எழுதியதாகக் கருதுவது மறு ஆய்வுக் குரியது. காரணம் நூல்கள் தோன்றி, அவை சுவடிகளில் இடம் பெற்றுப் பல ஆண்டுகள் கழிந்தபின்பே உரை எழுத விரும்பியவர்கள் பாடத்தை/ நூலை முதலில் ஓலையில் எழுதியிருக்க வேண்டும் அல்லது அதன்பின் எழுதப்பெற்ற நூலை உரை எழுதுவதற்காகத் தேர்ந்தெடுத்து ஓலையில் (உரை) எழுதியிருக்க வேண்டும்.

எனவே, நூல்/இலக்கியம் முதலிலும் உரைகள் அடுத்ததாகவும் ஓலைச் சுவடிகளில் எழுதப்பெற்றுப் பதிவு செய்யப்பட்டன என்பது தெளிவு. அவ்வாறு பல்வேறு காலகட்டங்களில் எழுந்த வாய்மொழி இலக்கியங்களை ஓலையில் எழுதி வைக்கும் போக்கு சங்க காலத்தில் இருந்துள்ளது.6

சுவடித்தொகுப்பு

காலப்போக்கில் அவ்வோலைச் சுவடிகள் அழிய முற்பட்டிருக்க வேண்டும். அக்காலத்தே வாழ்ந்த மன்னர்கள் சங்கப் பாடல்களின் மீது பற்றுக் கொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் அப்பாடல்களை அழியாமல் பாதுகாக்கும் பொருட்டுத் தகுந்த புலமை மிக்கவரைக் கொண்டு, சுவடிகளைத் திரட்டி ஒழுங்கு படுத்தி உள்ளனர். தமிழ் மன்னர் பலர், பலவிடத்தும் வாழ்ந்து வந்த புலவர்களைத் தொகுக்கச் செய்தனர். எழுதச் செய்து பாதுகாத்து வந்தனர். இதனை, ‘இத்தொகை முடித்தான் பூரிக்கோ; இத்தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர். இத்தொகை நாலடிச் சிற்றெல்லையாகவும் எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக்கப்பட்டது’ என்னும் தொன்மைச் சான்றே (குறுந்தொகைச் சுவடியின் இறுதி) நன்கு புலப்படுத்தும்”7 என்ற குறிப்பு உறுதிப்படுத்தும். அவ்வாறே, ‘நூலோர் தொகுத்தவற்றுள்’8 என்பதில் இருந்து, திருவள்ளுவர் காலத்தில் சுவடி எழுதித் தொகுக்கும் போக்கு இருந்ததை அறிய முடியும்.

எனவே, தொகுப்பதற்காகவும் பழைய பாடல்கள் வாசிக்கப்பட்டு இருக்கின்றன. தொகுத்தவர்களுக்கு விருப்பமான பாடல்கள் மட்டும் தொகுக்கப்பட்டுள்ளன. அவர்தம் வாசக விருப்பமே இன்றுள்ள சங்க இலக்கியமாகும்.

பழங்காலத்தில் மேற்கொண்ட ஓலையில் எழுதித் தொகுக்கும் போக்கும் படியெடுக்கும் போக்கும் பின்னரும் தொடர்ந்து வந்துள்ளன. அதனாலேயே இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட் பாடல்களை இன்றும் வாசிக்க முடிகிறது. சங்கப் பாடல்கள் இன்றும் ஓலைச் சுவடியில் காணக்கிடைக்கின்றன.9

ஆராய்ச்சியின் பொருட்டும், செம்பதிப்பு வெளியீட்டின் பொருட்டும் பயிற்சியின் பொருட்டும் சங்கப் பாடல்களை ஓலைச் சுவடியின் வாசிக்கும் போக்கு (5%) இன்றும் காணப்படுகிறது.

வாசிப்பின் வளர்நிலை

வாய்மொழி இலக்கியத்தைத் தொடர்ந்து ஓலையில் இலக்கியம் இடம்பெறத் தொடங்கியபோது வாசிப்பும் தனது பரிணாமத்தை அடைந்துள்ளது. செவிவழியாக மட்டுமே நிகழ்ந்த வாசிப்பு- பார்த்து வாசித்தல், படியெடுக்க வாசித்துச் சொல்லல் என்ற நிலைகளில் வளர்ந்தது. ஆயினும் செவிவழி வாசிப்பு முற்றும் மறைந்து விடவில்லை. சுவடிகள் தட்டுப்பாடாக இருந்த காலத்தும் இடத்தும் பழைய முறையான செவி வாசிப்பும் நடைமுறையில் இருந்துள்ளது; வாய்மொழி வடிவிலேயே நூல்கள் இருந்துள்ளன.

மறைந்து போன தமிழ் நூல்கள்

இளம்பூரணர், அடியார்க்கு நல்லார் முதலிய உரையாசிரியர்கள் த்த்தம் உரைகளில் பழைய தமிழ் நூல்கள் பல மறைந்து போனது பற்றிய குறிப்புகளைத் தந்நுள்ளனர். அவற்றுள் முதுநாரை, முதுகுருகு முதலிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. அவ்வாறான மறைந்துபோன பல தமிழ் நூல்களைப் பற்றி மயிலை.சீனி வேங்கடசாமி நூல் எழுதியுள்ளார்.10 நூல்களின் மறைவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. 1. கடல்கோள், 2. வேற்றுமொழி ஆட்சி.

கடல்கோள் நிகழ்ந்தமைக்கான சான்றுகள் தமிழிலக்கியங்களிலும் வரலாற்றுக் குறிப்புகளிலும் கிட்டியுள்ளன. எனவே, பழந்தமிழ் நூல்களும் அக்கடல்கோளில் அழிந்திருக்க வேண்டும். பிறமொழி ஆட்சிகளின் கீழ்த் தமிழகம் இயங்கியபோது, தமிழ் நூல்கள் படியெடுக்கப்பெறாமல் காலத்தால் அழிந்து போயுள்ளன. காரணம் பனையோலை நறுக்குகளின் ஆயுள் நூறாண்டுகளில் முடிந்து விடும் என்பதே.

தமிழ்நாட்டில் நூல்கள் ஐந்து நிலைகளில் வெளியிடப் பட்டுள்ளன. அவற்றின் விளக்கங்கள் வருமாறு:

முதல் நிலை

வெளியீடு என்பது பிறருக்காக, பிறர் அறியும் வகையில் வெளிப்படுத்துதல். தொடக்க கால/நிலை நூல் வெளியீடு என்பது வாய்மொழியாக இருந்த படைப்பை (ஓலையில் எழுதி சுவடியாக்கும் முன்பே) பிறருக்கு, மாணவர்க்கு எடுத்துரைத்தலைக் குறிக்கும். ஆயினும் அதனைப் ’பாடம் சொல்லல்’ என்றே குறிப்பிடுவர். நூல், ஆசிரியரின் மனத்திலிருந்து ‘பாடம் சொல்லுதலின் வழி வெளிவரும் என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதே. எனவே நூல், ஆசிரியரின் மனத்திலிருந்து வெளிவரும் நிலையே தொடக்கநிலை நூல் வெளியீடு எனல் தகும். வாய்மொழி இலக்கியம் (என்னும் நூல்) அவ்வாறுதான் வெளியிட, எடுத்துரைக்கப் பெற்றுள்ளது. திருக்குறள் என்பது நூல்வடிவில் இருப்பது மட்டுமல்ல. பலருடைய மனங்களில் மனப்பாடமாய்த் திருக்குறள் இருப்பின் அதுவும் திருக்குறள்தான்; திருக்குறள் நூல்தான்.

இரண்டாம் நிலை

ஓலை, எழுத்தாணி எழுத்துமுறை முதலியவற்றின் தோற்றத்திற்குப் பின், ஓலைச்சுவடிகளில் படைப்பை எழுதினர். இதனையும் நூல் வெளியீடு என்றே கொள்ள வேண்டும். காரணம் ஆசிரியர் மனத்துள் இருந்த நூலை மற்றவர் வாசிக்கும் பொருட்டு எழுதிவிட்டார். மற்றவர்க்காக எழுதியமையால் அதுவும் வெளியீடே. ஆசிரியரே அதை வாசித்தாலும் அந்நூல் பிறரால் வாசிக்கப்படும் போதுதான் வெளியீடாகக் கருதப்பெறும். இதுபோன்ற நூல் என்பதே சுவடிகளாகத்தான் பழங்காலத்தில் (அச்சுக்கு முன்வரை) வெளியிடப் பெற்றது. வெளியீட்டிற்குப் பின் அச்சுவடியை ஆசிரியரின் அனுமதியோடு படியெடுத்துக் கொள்ள இயலும். அதனை நூல் வெளியீடு எனல் தகாது. ஓலைச் சுவடியில் படியெடுத்தலேயாம்.

தொல்காப்பிய நூல் வெளியீடு பாண்டியன் அவையத்தில் நிகழ்ந்துள்ளது. அதாவது நூலைப் பிறர் அறியச் செய்யும் அரங்கேற்றம் நிகழ்ந்துள்ளது. இதனைத் தொல்காப்பியப் பாயிரத்தின் (பனம்பாரனார்) மூலம் அறிய முடியும். எனவே, இதுபோன்ற ஏனைய தமிழ் நூல்களும் பலர் முன்னிலையில் வெளியிடப் பெற்றிருக்கும் என்பது உண்மை. ஆயினும் தொல்காப்பியம், நன்னூல் தவிர்த்த ஏனைய நூல்களின் வெளியீடு பற்றி அறிவதற்கான சான்றுகள் கிட்டவில்லை.

மூன்றாம் நிலை

தாள், மை முதலியவற்றின் தோற்றத்திற்குப் பின் படைப்பைத் தாளில் எழுதி மற்றவர்க்கு வெளியிடும் போக்கு நிகழ்ந்துள்ளது. ஓலைச்சுவடியைப் பார்த்து தாளில் எழுதியதும் உண்டு. ஆயினும் அது வெளியீடு ஆகாது. படியெடுத்தலேயாம்.

இம்முதல் மூன்று வெளியீட்டு நிலைகளிலும் ஆசிரியரே வெளியீடுவோராக உள்ளமை விளங்கும். அவ்வாறே இம்மூன்று நிலைகளிலும் ஒரு (படி) நூல் மட்டுமே வெளியிடப்பெறும் என்பது புலப்படும்.

அச்சுக்குப்பின் நிகழ்ந்த நூல் வெளியீட்டு நிலையில் நூறு படிகள் வரை ஒரே நேரத்தில் வெளிவந்தன. அதன்பின் தொழில் நுட்ப வசதிகளின் பெருக்கத்தாலும் வாசகர் எண்ணிக்கை மிகுந்ததாலும் ஆயிரக்கணக்கில் அச்சு நூல்கள் வெளியிடப்பெற்றன.

நான்காம் நிலை

நான்காம் நிலையில் நூல் வெளியீடு ஓலைச் சுவடிகளைப் பதிப்பிக்கும் செயலைக் குறிக்கும். இந்நிலையில் பதிப்பாசிரியரின் பணி இன்றியமையாதது. பதிப்பாசிரியர் சிறந்த வாசகராக இருந்தால்தான் நூலை அச்சேற்று வெளியிட முடியும். இலக்கணம், பன்னூல் புலமை முதலியன இப்பதிப்பாளருக்குத் தேவை. மேலும் அவர் பண வசதி கொண்டவராகவும் இருத்தல் வேண்டும். காரணம் படைப்பைச் அச்சிடுவதற்குரிய செலவுகளைத் தாமே ஏற்க வேண்டியிருந்த்து. அவரே அந்நூலை விற்பனை செய்தலையும் (அச்சகத்தின் வழி) மேற்கொள்வர்.

படைப்பு (மூலம்) மட்டும் அச்சேறிய காலகட்டத்திற்குப்பின் குறிப்புரை, அரும்பதவுரை, தெளிவுரை முதலியவற்றையும் சேர்த்து அச்சேற்றும் பாங்கு பின்பற்றப்பட்டுள்ளது. அத்தகைய நூல்களை வெளியிட்டவர்கள் மூளை உழைப்பை மிகுதியாகச் செலவிட வேண்டியிருந்தது. அச்சுக்குரிய நூல் படியைச் சிறப்பாகத் தயாரிப்பதில் அவர்தம் உழைப்பு மிகவும் பயன்பட்டுள்ளது. (தற்காலத்தில் பேரளவு நூல் வெளியீட்டாளரின் (75%) மூளை உழைப்பு, விற்பனை, விநியோகம் போன்றவற்றைத் திட்டமிடுவதற்குப் பயன்படுகின்றது.)

மேலும் இலக்கண அறிவு, இலக்கியப் புலமை, மொழித்திறம் முதலிய பல்வேறு தகுதிகள் தொடக்க கால நூல் வெளியீட்டாளர்களுக்குத் தேவைப்பட்டன. தற்கால வெளியீட்டாளர் அத்தகுதிகள் இன்றியும் தம் தொழிலை இலாபகரமாகச் செய்ய முடிகிறது. “முற்காலங்களில் படிப்போர் தொகை குறைவாக இருந்த காரணத்தினாலும் குறைவான எண்ணிக்கையில் நூல்கள் அச்சிடப்பெற்று வந்ததனாலும், நூல்களை வெளியிட்டு விற்பனை செய்வதற்கென்று தனியே பதிப்பகங்களோ விற்பனை நிலையங்களோ ஏற்படவில்லை. இப்பணியினை அச்சகங்களே பெரும்பாலும் செய்து வந்தன.”11 என்ற கருத்தின் வழி நூலை வெளியிட்டவர்களே விற்பனைப் பொறுப்பை ஏற்றிருந்தனர் என்பது பெறப்படும். அதன்படி வெளியீட்டாளருக்கும் அச்சகத்தாருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்பது புலப்படும்.

தொடக்கநிலை முயற்சிகள்

முதன்முதலில் இந்திய மொழிகளில் தமிழே அச்சிலேறியது. 1554ஆம் ஆண்டில் லிஃச்பன் நகரில் ‘கார்டில்லா என்னும் லூசே தமிழ்ச் சமய வினாவிடை’ என்ற துண்டுப் பிரசுரம் வெளியிடப்பெற்றது. இதில் தமிழ் எழுத்துகள் ரோமன் வரி வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

அதனையடுத்து 1557 ஆம் ஆண்டு ‘தம்பிரான் வணக்கம்’ என்னும் பதினாறு பக்க நூல் கொல்லத்தில் அச்சடிக்கப் பெற்றுள்ளது. இதுவும் சமய வினாவிடை நூலேயாம். இந்நூலின் முதல் எட்டுப் பக்கங்கள் கோவாவில் உருவான தமிழ் அச்செழுத்தாலும் ஒன்பது முதல் பதினாறு பக்கங்கள் வரை கொல்லத்தில் உருவான தமிழ் அச்செழுத்தாலும் அச்சிடப்பட்டுள்ளன.

இதற்குப் பிறகு தரங்கம்பாடியில் சீகன்பால்க் ஐயரால் தம்பிரான் வணக்கம் 1712 இல் வெளியிடப்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு சிறு சிறு நூல்களை அச்சேற்றி வெளியிடுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நீதி வெண்பா, கொன்றை வேந்தன், உலக நீதி ஆகிய நூல்கள் (1708) வெளியிடப் பெற்றுள்ளன. கிறித்துவ வேதமான விவிலியத்திலுள்ள புதிய ஏற்பாட்டைச் சீகன் பால்க் ஐயர், தாமே தமிழில் மொழி பெயர்த்து 1715இல் வெளியிட்டார். அதிக (494) பக்கங்கள் கொண்ட முழுமையான நூலாக முதலில் வெளியிடப் பெற்றது இதுவேயாம்.

அதன்பின் தமிழ் அச்சு நூல் வெளியீட்டில் ஒரு தேக்கம் காணப்படுகிறது. எஃப்.டபிள்யூ. எல்லீஃச் என்பவர் 1812 ஆம் ஆண்டு திருக்குறள் மூலபாடம் என்ற பெயரில் அறத்துப்பாலை மட்டும் அச்சேற்றி வெளியிட்டுள்ளார். இத்தகைய காலகட்டத்தில் இருந்துதான் தொடர்ந்து அண்டு தோறும் நூல்களை அச்சேற்றி வெளியிடல் வழக்கமாகியுள்ளது.

தொடக்கநிலை அச்சு

முதல்முதலில் தமிழை அச்சுக்கு உட்படுத்தியவர் வெளிநாட்டுப் பாதிமாராவார். அவர்கள் ஓலைச் சுவடிகளில் தமிழ் எழுத்துகளின் தோற்றம் (அமைப்பு) இருந்தது போன்றே அச்செழுத்துகளை உருவாக்கினர். அந்த அச்செழுத்துகளைக் கொண்டே நூல்களை வெளியிட்டனர். எனவே நெடில் எழுத்து, மெய்யெழுத்து முதலியவை நூல்களில் தெளிவில்லாமல் இருந்தன.12

வீரமாமுனிவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுத்துச் சீரமைப்பை அறிமுகப்படுத்திய பின் தமிழச்சு முறை சற்றுச் சிறப்பாக மாறியது. எனவேதான், “பழங்காலத்துத் தமிழ் அச்சு நூல்களைப் பார்க்கும் போது, அவை தலைப்பேடுகளிலும் பிற பகுதிகளிலும் மெய்க்குறியீடுகள் இடப்படாமலும் நெடிற்கொம்புகள் சுழிக்கப்படாமலும்… இருந்து வந்து இருக்கின்றன”13 என்று சுட்டப் பெறுகிறது. மேலும், தமிழ் நூல்களுக்கு ஆங்கிலத்திலும் தலைப்பிடும் வழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது. அதுமட்டுமன்றி நூலின் பெயர், நூலைப் பரிசோதித்தவரின் பெயர், பதிப்பித்தவரின் பெயர், நூலை அச்சிட்டவரின் பெயர் மற்றும் அச்சகத்தின் பெயர் ஆகியன அட்டையில் அமைக்கப் பெற்றிருந்தன.

இவ்வாறு சுவடிகளைப் பதிப்பித்தலில் முன்னோடியாக விளங்கியோர் பலர். அவர்களுள் மிகுதியாக நூல் வெளியிட்ட முதன்மையானவர்கள் சி.வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர், உ.வே.சா. ஆகியோராவர். இவர்கள் கால நூல் வெளியிடும் முன்னதாகச் சுவடிகளில் உள்ளவற்றைப் படி எடுத்து எழுதி அதை அச்சேற்றி வெளியிடுதலாக இருந்துள்ளது. இத்தகைய நூல் வெளியீடு – (நான்காம் நிலை) ‘பதிப்பு’ என்றே குறிக்கப்பெறும். அச்சுப் பதித்தல் வழி நூல் வெளியிட்டமையால் இப்பெயர் (ஆகுபெயர்) பெற்றது.

தற்கால நூல் வெளியீடு (ஐந்தாம் நிலை)

நாடு சுதந்திரம் பெற்றபின், கல்வி நிறுவன வளர்ச்சியால் படித்த நடுத்தர மக்கள் பிரிவு உருவானது. அவர்தம் கடமைகளை- பணிகளைச் செய்த நேரம் போக எஞ்சிய ஓய்வு நேரங்களில் வாசிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதன்விளைவாக நூல்களை அச்சேற்றி வெளியிடும் போக்கு மிகுந்துள்ளது. மேல்நாட்டுத் தாக்கத்தால் புதினம் (நாவல்) முதலிய புதிய இலக்கிய வடிவங்கள் தோன்றத் தொடங்கின.

பொதுவாக ஒரு நூலை வெளியிடுவதற்கு நூலாசிரியர், அச்சகத்தார், வெளியீட்டாளர் – பதிப்பாசிரியர், விற்பனையாளர் மற்றும் வாசகர் ஆகியோர் தேவை.

தற்காலத்தில் நூலாசிரியர் நூலை எழுதுகிறார். அச்சகத்தார் அச்சிடுகின்றனர். (இவர்கட்கு ஓவியர், மெய்ப்புத்திருத்துநர், லேமினேட்டர் முதலியோர் உதவுவர்) வெளியீட்டாளர்கள் தாள், அச்சு போன்றவற்றின் செலவுகளை ஏற்றுக் கொள்கின்றனர். அவ்வாறு தயாரான நூல்களைத் தம் நிறுவன வழியாகவோ, வேறு நூல் வெளியீட்டகத்தின் வழியாகவோ, பிற விற்பனை நிலையங்களின் வழியாகவோ வாசகர்களுக்கும் நூலக ஆணைக்குழு போன்றவற்றிற்கும் நூல் விற்பனை செய்கின்றனர். அவ்வாறு விற்பனை செய்கையில் தம் முதலீட்டை உரிய இலாபத்துடன் திரும்பப் பெறுவர். சில நூல்கள் விற்பனைக் குறைவால் இலாபமின்றி நட்டம் ஏற்படுத்தவும் செய்யும்.

நூல் எழுதக் காரணங்கள்

கலை, படைப்பு தோன்றுவதற்கு.

  1. தன்னுணர்ச்சியை வெளியிடும் விருப்பம்
  2. பிறருடைய வாழ்விலும் செயலிலும் உள்ள அக்கறை
  3. உண்மையுலகில் உள்ள ஆர்வமும் அதை ஒட்டிக் கற்பனை உலகினைப் படைப்பதில் உள்ள ஆர்வமும்
  4. ஒலி, சொல், கோடு, வண்ணம் முதலியவற்றிற்கு அழகிய வடிவம் தந்து அமைப்பதில் உள்ள ஆசை

ஆகிய நான்கும் காரணங்களாக உள்ளன என்பர் வின்செஸ்டர்.14 அவ்வாறே, ஒரு நூலாசிரியர் அல்லது வெளியீட்டாளர் நூல் எழுதி வெளியிடுவதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. அவை வருமாறு:

  1. தன் மன உளைச்சல்களை விலக்கிக் கொள்ளல்
  2. தன் சிந்தனைகளை மற்றவர்களுக்குத் தெரிவித்தல்
  3. தன் எழுத்து வெளியீட்டால் மற்றவர்கள் போற்றுவர், தனக்குப் புகழ் கிடைக்கும் என்ற எண்ணம்
  4. தன் கருத்துகள் வாசகரை மகிழ்விக்கும்; அவர்களுக்குத் தன் கருத்துகள் பயன்படும்
  5. தன் எழுத்து சமூகத்தின் அறியாமையையும் சீர்கேடுகளையும் நீக்கும் என்ற நம்பிக்கை
  6. தன் உறவினர், நண்பர், உடன் பணி செய்வோர், அதிகாரி முதலியோரிடம் தன்னை நூலாசிரியராக வெளிப்படுத்திக் கொண்டு அதன்வழிப் பாராட்டைப் பெற நினைத்தல்
  7. சமூகத்தில் எழுத்தாளர் என்ற மதிப்பை எதிர்பார்த்தல்
  8. தன் ‘கருத்து அதிகாரத்தை’ வாசகரிடம் காட்ட நினைத்தல்
  9. வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கை
  10. தன் எழுத்து- தன் மறைவுக்குப் பிறகும் வாழும்; வாழவேண்டும் என்ற எதிர்பார்ப்பு
  11. தன் நூல் நிறைவான வருவாய் தரும் என்ற நம்பிக்கை
  12. தன் நூலுக்குப் பரிசு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு – முதலியன.

அவ்வகையில் ஒருவர் தம் சிந்தனையைக் கட்டுரை, கதை, கவிதை, நாடகம் முதலிய ஏதேனும் ஒரு வடிவத்தில் எழுதி, அதை நூலாக்கி வெளியிடுவார். இவர்களில் எழுதியதோடு மட்டும் நிறுத்திக் கொள்பவர்கள் (பிறர் வெளியிடுவர்), வெளியிடவும் செய்பவர்கள்  என இரு வகையினர் உண்டு.

நூலின் தோற்றம்

அவ்வாறான நூல்களை எழுதும் படைப்பாளிகள், “எழுதத் தொடங்கும் போது முதலில் மொழியே அவர்களுக்குக் கை கொடுக்கிறது. பின்னர் யாருக்காக எழுதுகிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டு செய்தியாகவோ கவிதையாகவோ எழுதத் தொடங்குகின்றனர் (modes). இவ்வாறு எழுதத் தொடங்குவதற்கு முன்னர் தம்முடைய கருத்தை வெளிப்படுத்துவதற்கும் அதைச் சரிவர வாசகர்கள் உணர்ந்து கொள்வதற்கும் ஏற்றதொரு வகையைத் தேர்ந்தெடுக்கின்றனர். அந்த இலக்கிய வகையில் தம்மைச் சார்ந்த குழுவினரின் – தாம் சார்ந்துள்ள சமூகத்தினரின் எண்ணங்களாக வெளியிடுகின்றனர்.”15 இவண், “ஓர் எழுத்தாளனை எடுத்துக்கொண்டால், அவன் பின்னணிதான் அவனது எழுத்தை எழுதுகிறது. அவன் சாதி, மதம், தெரு, பழக்கவழக்கங்கள், படித்த புத்தகங்கள், தேர்வு செய்கிற பத்திரிகைகள் எல்லாம் சேர்ந்துதாம் அவன் எழுத்தைக் கட்டமைக்கின்றன”16 என்ற கருத்து ஒப்புநோக்கத்தக்கது.

தற்கால நூல் – விளக்கம்

யுனெஸ்கோ நிறுவனத்தின் விளக்கப்படி நூல் என்பது அட்டைகள் நீங்கலாக நாற்பத்தெட்டுப் பக்கங்களுக்குக் குறையாமல் இருப்பது ஆகும். ஆக்ஸஃபோர்ட் அகராதி, (இலக்கியப் படைப்பாக) அச்சடிக்கப்பட்ட பல காகிதங்களைச் சேர்த்துக் கோர்க்கப்பட்ட ஒரு தொகுப்பு – நூலாகும் என்று குறிக்கிறது. அமெரிக்க வெஃப்ஸ்டர் அகராதி, எழுதப்பட்ட மற்றும் எழுதப்படாத காகிதங்களைச் சேர்த்துத் தைக்கப்பட்ட ஒரு தொகுப்பே நூல் ஆகும் என்று தெரிவிக்கிறது. இவ்விளக்கங்கள் பருவ இதழ்களுக்கும் பொருந்துவனவாய் உள்ளன என்பது கருதத்தக்கது. எனினும் உள்ளீடுகளில் நூல்களுக்கும் பருவ இதழ்களுக்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன.

நூல்களின் வகைகள்

நூல்களில் பல வகைகள் உள்ளன. கருத்தை அடிப்படையாகக் கொண்டு அமையும் நூல்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பெறும். அவை: தகவல் தருபவை, புத்துயிர் தருபவை, உயிர்ப்புத் தருபவை. ஒரு வகையான நூலில் மற்ற வகை நூல்களின் தன்மையும் அமையக்கூடும். ஏனெனில் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. எனவே ஒவ்வொரு நூலிலும் உயர்ந்து நிற்கும் கருத்தினைக் கொண்டு அதன் வகை முடிவு செய்யப்பெறும்.

மேலும் நூலகவியலார், நூல்களின் தரத்தின் அடிப்படையில் ஐந்து பிரிவுகளாக்குவர். அவை, கரு மூலம் கொண்டவை. ஆய்வுப்பொருள் கொண்டவை, விளக்கம் தருபவை, தொடக்க நிலையின, அறிக்கை நிலையின என்பனவாகும். பொதுவாக நூல்களை இருவகைப்படுத்தவியலும்.

  1. வாழ்க்கைக்கு உரியன
  2. பொழுது போக்கிற்கு உரியன

மேலும் இலக்கியம், இலக்கணம், சமயம், வரலாறு, புதினம் (நாவல்), நாடகம், திறனாய்வு, அறிவியல், கலைகள், விளையாட்டு, சமூகவியல், மொழியியல், நாட்டுப்புறவியல், புதுக்கவிதை, பொருளியல், வணிகவியல், தொழில்நுட்பம், வேளாண்மை… என்று பொருள் (உள்ளீடு) அடிப்படையில் நூல்களின் வகைகள் அமைதலும் உண்டு.

இருவகை நூல்கள்

தமிழில் வெளியிடப்பெறும் நூல்கள் பலவகைப்படும். அவற்றைத் தனிநூல்கள், தொகுப்பு நூல்கள் என இரு பெரும் பிரிவாக்கி வகைப்படுத்த இயலும். சான்றுகள் வருமாறு:

தனி நூல்கள் – நெடுநல்வாடை, ஆய்வேடு (நூலாக வெளிவரல்), புதினம் (நாவல்) முதலியன.

தொகுப்பு நூல்கள் – புறநானூறு, சிறுகதைத் தொகுப்பு, ஆய்வுக்கோவை முதலியன.

ஓர் ஆசிரியரின் ஒரு பொருள் குறித்த ஒரு நூல் தனிநூலாகும். இயல்கள் இருப்பின் அவை ஒரே செய்தியை அடிப்படையாகக் கொண்டு விளக்குவனவாய் இருக்கும். அவ்வாறே தொகுதிகள் இருப்பின் அவையும் ஒரு பொருள் குறித்ததாய் அமைந்திருந்தால் தனிநூல் என்றே வழங்கப் பெறும்.17

ஒரே ஆசிரியரின் வேறுபட்ட கட்டுரைகள், படைப்புகள் முதலியவற்றைத் தொகுத்து வெளியிடுதல் தொகுப்பு நூல்களாகும். அவை வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டிருத்தலும் உண்டு. ஒரே காலகட்டத்தில் பல்வேறு ஆசிரியர்களால் எழுதியவற்றைத் தொகுத்து வெளியிடுவதும் தொகுப்பு நூல்களேயாம்.

நூல்களின் சிறப்புகள்

ஒரு கருத்தை ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எடுத்துரைக்கும் சாதனங்களைத் தொடர்புச் சாதனங்கள் என்பர். தகவல் தொடர்புச் சாதனங்கள் என்பவை பருவ வெளியீடுகள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், காணொளி (வீடியோ) நாடாக்கள் முதலயனவாகும். இவற்றோடு நூல்களையும் சேர்க்கவேண்டும். காரணம், “நூல்களைப் போன்றே நம்பகமான தகவல் சாதனம் வேறெதுவுமில்லை.”18

இத்தகைய சிறப்புக்குரிய நூல்களின் சிறப்புகள் பலப்பல. நூல்கள் உலகமாந்தர் மனத்தோடு மனம் பேசிக்கொள்ள உதவும். அவை உலகத்தின் அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும். இங்கு, “வாழ்க்கை என்ற மரத்தின் பல்வேறு கிளைகளைச் செழித்து வளரச் செய்வது புத்தகம்…”19 என்ற கருத்து குறிக்கத்தக்கதாகும். மேலும் ஒரு நாட்டின் தொழில்துறை முன்னேற்றத்திலும் பண்பாட்டுச் சிறப்பிலும் இன்றியமையாத பங்கு வகிப்பவை நூல்கள் ஆகும். எனவேதான், “புத்தகங்கள் தருமுதவி பெரிது; மிகப்பெரிது”20 என்று பாரதிதாசன் பாடியுள்ளார்.

மேலும் நூல்களின் வழியே நூலாசிரியர்களின் மனத்தையும் வாசகர் தெரிந்துகொள்ள முடியும். அவ்வகையில் பழங்கால (மறைந்த) ஆசிரியர்களுடனும் அறிஞர்களுடனும் கூட வாசகர்கள் பழக முடியும். காரணம் அவர்கள் எழுதிய நூல்கள் இன்றும் உள்ளன என்பதுதான். எனவேதான், “வள்ளுவர், இளங்கோ, கம்பர் முதலானவர்களுடன் தொடர்புகொள்ளாதவாறு காலம் நம்மைப் பிரித்து வைத்த போதிலும் அவர்களின் நூல்கள் அந்தச் சான்றோர்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தித் தருகின்றன”21 என்று இராம. சுப்பிரமணியன் குறிப்பிடுவர். இவண், “புத்தக உலகமே, மனிதப் படைப்புகளில் மிகச்சிறப்பானது. அவன் படைப்புகளில் வேறெதுவும் நீண்ட காலம் நிலைப்பதில்லை. வரலாற்றுச் சின்னங்கள் வீழ்ச்சி அடைகின்றன. நாடுகள் அழிகின்றன. நாகரிகங்கள் முதுமையுற்று மடிகின்றன… அன்று எழுதப்பட்டவை போலவே, இன்றும் வேகம் குறையாமல் பல நூற்றாண்டுகளுக்குமுன் மறைந்து போன இதயத்துடிப்புகளை இன்றைய மனிதருக்கும் எடுத்துச் சொல்லும் நூல்கள் பல, புத்தக உலகில் நிலைத்துள்ளன”22 என்ற கருத்தும், “ஹோமரின் கவிதைகள் இரண்டாயிரத்து ஐந்நூற்று ஆண்டுகளாகவும் அதற்கு மேலாகவும், ஓரெழுத்தோ, சீரோ, சிதையாமல் நிலைக்கவில்லையா? அதேகாலத்தில் எண்ணற்ற மாளிகைகள், ஆலயங்கள், கோட்டைகள், நகரங்கள் சிதைந்து அழிந்ததில்லையா?”23 என்ற கருத்தும் ஒப்புநோக்கத்தக்கன. அவ்வாறே, தமிழிலும் சங்கப் பாடல்கள் முதலிய பழம்பெருமை வாய்ந்த நூல்கள் எல்லாம் காலங் கடந்து நிலைத்து வருகின்றன என்பது இவண் குறிப்பிடத்தக்கதாகும். எனவே, காலத்தால் அழியாதவை நூல்கள் என்பது வெளிப்படை.

நூல்களின் குறைபாடு

நூலுலகில் ஒரு குறைபாடு உண்டு. தரமான நூல்கள் இருப்பது போல் தரமற்ற மோசமான நூல்களும் இருக்கவே செய்கின்றன. தரமானவை, தரமற்றவை என்ற பாகுபாடு நூல்களில் மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் உள்ளன. நல்ல அறிவு நூல்கள் மக்களுக்கு உலக இயல்பினை விளக்கி அவர்களை மகிழ்வுறச் செய்யும். ஆனால் அதற்கு மாறான நூல்களுள் உள்ளன. அவை, “மதுவுண்டு வெறிகொண்ட குரங்கு ஒன்றினைப் பேயும் பிடித்தலைப்பதே போல், அறியாமையால் நலிவுற்ற மக்களைப் பாழ்படுத்தும்”24 இவண், “இன்று நாட்டில் வெளியாகும் நூல்களில் தொண்ணூறு விழுக்காடு அறிவு வளர்ச்சிக்குப் பயன்படுவதாய் இல்லை”25 என்ற கருத்து ஒப்புநோக்கத்தக்கதாகும். எனினும் குறைபாடுள்ள நூல்கள் பேரளவு கதை நூல்களே என்பதும் கருத்த்தக்கது.

தேவைகள்

சமுதாயத்தின் வளர்ச்சிக்குப் பயன்படும் பயனுள்ள நூல்களே இன்றைய தேவை. அத்தகைய நூல்கள் நிறைய வெளியாக வேண்டும். மக்களின் வாழ்க்கைநிலை உயரும் வகையிலும் அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையூட்டும் வகையிலும் நூல்கள் வெளிவர வேண்டும். அதற்கு எழுத்தாளர்கள் முன்வர வேண்டும். எழுத்து ஒரு நல்ல கருவி. அதனை எழுத்தாளர்கள் சமுதாய உணர்வுடனும் பயன்படுத்த வேண்டும். ஒவ்வோர் எழுத்தாளரும் மனிதனின் வாழ்வும் அறிவும் முன்னேறும் முறையில் மட்டுமே எழுதவேண்டும் என்று உறுதி செய்து கொண்டு அதனடிப்படையிலேயே எழுதவேண்டும். அப்போதுதான் பண்புடையாளரின் தொடர்பைத் தரும் நூல்கள் மக்களுக்குக் கிடைக்கும்.

நூல்களை வாசிக்கும் வாசகர்கள் வாசித்து முடித்ததும் நூலின் தரம் பற்றிய தம் கருத்துக்களைத் தொடர்புடைய ஆசிரியருக்கோ வெளியீட்டாளருக்கோ எடுத்துரைத்தல் வேண்டும். தரக்குறைவான நூல்களின் குறைகளை அவற்றின் ஆசிரியருக்கு எடுத்துரைத்து இடித்துரைக்க வேண்டியது வாசகரின் கடமையாகும். அவ்வாறே தரமான நூல்களின் சிறப்புகளைப் பாராட்டியுரைப்பதும் வாசகர் கடமை.

நேற்றும் இன்றும்

முற்கால நூல்களில் அகம், புறம் என்ற பாகுபாடு இருந்தது. அவற்றுள் அகம் தொடர்பானவை மிகுதியும் வாசிக்கப் பெற்றன; வாசிக்கப் பெறுகின்றன (72%). தற்காலத் தமிழ் நூல் வெளியீட்டிலும் அகம் தொடர்பான கதை நூல்களே பெரிதும் வெளியிடப் பெறுகின்றன; வாசிக்கப் பெறுகின்றன (45%). இவண், “தொல்காப்பியத்துள் தலைமையானது பொருளதிகாரமே… பொருளதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களில் அகம் பற்றிய இயல் முதன்மையான இடம் பெற்றிருப்பது தற்செயலானது அன்று. சங்கப் பாக்களுள் அகம்பற்றிய பாக்கள் மிகுதியாக இருப்பதும் தற்செயல் நிகழ்ச்சி அன்று. சிக்கனத்திற்குப் பெயர் போன திருவள்ளுவர் காமத்திற்கு எனத் தனிப்பாடலும் 250 குறட்பாக்களும் அமைத்ததும் தற்செயல் நிகழ்ச்சி அன்று. இவையெல்லாம் (தமிழரின்) காதல் வாழ்வு தலைமை பெற்றிருந்ததைக் காட்டும் சான்றுகள்”26 என்ற் கருத்து குறிக்கத்தக்கதாகும்.

முற்காலத்தில் வாசிக்கப்படும் பொருட்கள் (ரீடிங்மெடீரியல்ஸ்) நூல்களாக மட்டுமே இருந்தன. அதனால் அக்காலத்தில் கற்றவர்களில் மிகுதியானோர் நூல்களை வாசித்தனர். பருவ இதழ்கள் தோன்றிய பின் அவற்றையும் வாசிக்கத் தொடங்கினர். வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் ஆகியவற்றின் வரவுகளும் வளர்ச்சிகளும் தமிழ் நூல் வாசிப்பைக் குறைத்தன. குறைத்துக் கொண்டும் வருகின்றன. இதனை மெய்ப்பிக்கும் வகையிலேயே தற்காலக் களஆய்வுத் தரவுகள் உள்ளன. தற்காலத் தமிழ் வாசகர்களில்…

நூல்களை மட்டும் வாசிப்போர்-12%

இதழ்களை மட்டும் வாசிப்போர்-35%

தொலைக்காட்சி முதலிய பிற ஊடகங்களில் நிகழ்ச்சிகளை வாசிப்போர் (நுகர்வோர்)-53%

நூல் வாசிப்பு – குறைவு

ஆண்டுதோறும் தமிழ் நூல்களின் வெளியீட்டு எண்ணிக்கை மிகுகின்றது. அவ்வாறே நூலகங்களில் வாசிக்க வருபவர் எண்ணிக்கையும் நூல்களை எடுத்துச் செல்வோர் எண்ணிக்கையும் மிகுகின்றன. எனினும் கல்வியறிவு பெற்றவர் தொகையையும் மக்கள் தொகைப் பெருக்கத்தையும் இணைத்து ஆய்ந்தால் நூல் வாசிப்பு குறைவு என்பது விளங்கும்.

“ஆண்டுக்கு இரண்டாயிரம் (சராசரி) பக்கங்களை வாசிப்பவர்களைத் தாம் உயிரோட்டமும் விழிப்பும் கொண்ட குடி மக்களாக ஐக்கிய நாடுகள் அவை வரையறுத்துள்ளது. ஆனால் இந்தியாவில் ஆண்டுக்குச் சராசரியாக ஒரு வாசகர் வாசிக்கும் பக்கங்கள் வெறும் முப்பத்திரண்டுதாம்”27 என்ற குறிப்பிலிருந்து (இந்திய) நூல்வாசிப்பு குறைவு என்பது புலப்படும்.

அவ்வாறே தமிழ் நூல் வாசிப்பும் குறைவு. இதனை, “நகரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் இருப்பதும் அவை ஒவ்வொன்றும் பன்னிரண்டு மணிநேரம் இயங்குவதும், இடமில்லை என்னும் அறிவிப்பும், அதே சமயம் நகர மைய நூலகம் தவிர ஏனைய நூலகங்கள் பகுதி நேரம் இயங்குவதும் நூலகங்களின் எண்ணிக்கைக் குறைவும் நெருக்கம் இன்மையும் ஒருங்கே வைத்துச் சிந்திக்கத்தக்கன.”28 என்ற கருத்து அரண் செய்யும்.

தமிழ் நூல் வாசகர்களில்…

மாதந்தோறும் நூல் வாங்கத் தொகை ஒதுக்குபவர்கள்-02%

காலாண்டு தோறும் நூல் வாங்கத் தொகை ஒதுக்குபவர்கள்-08%

அரையாண்டு தோறும் நூல் வாங்கத் தொகை ஒதுக்குபவர்கள்-12%

ஆண்டுதோறும் நூல்வாங்கத் தொகை ஒதுக்குபவர்கள்-19%

எப்போதாவது – விரும்பினால் நூல் வாங்குபவர்கள்-22%

நூல் வாங்காமல் இரவல் பெற்று வாசிப்பவர்கள்-37%

இவற்றிலிருந்து தமிழ் நூல் வாசிப்புக் குறைவுக்கான காரணம் புலப்படும்.

தற்காலத் தமிழ் நூல் வெளியீட்டில்…

முதலிடம் பெறுபவை: கதை நூல்கள் – 45%

இரண்டாமிடம் பெறுவமை: சிறுவர் நூல்கள், சமய நூல்கள், அறிவியல் நூல்கள், ஆய்வு நூல்கள் – 30%

மூன்றாமிடம் பெறுபவை: நுண்கலை நூல்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், பயண நூல்கள் – 17%

நான்காமிடம் பெறுபவை: கவிதை, சமூகவியல் முதலிய பிறவகை நூல்கள் -08%

கதை நூல்களை மிகுதியானோர் வாங்கி வாசிப்பதால் அவை மிகுதியாக வெளியிடப் பெறுகின்றன. கதை நூல் வாசிப்புக்குக் காரணம்…

  1. சிறு வயது முதலே கதை கேட்டுக் கதை கேட்டுப் பழக்கப்பட்டுப் போன மனம், கதை நூல்களை வாசிப்பதில் விருப்பம் கொள்ளுதல்.
  2. நிகழ்காலத் துன்பத்தை நினைக்காமல் தம்மை மறந்து வாசகர் கதை நூலை வாசிக்க முடிதல்.
  3. வேகமாக வாசிக்கக் கூடிய எளிமை பிற வகை நூல்களைக் காட்டிலும் மிகுதியான அளவு கதை நூல்களில் கிட்டுதல்.

தமிழ்நாடு : கேரளா

அண்டை மாநிலமான கேரளாவில் எழுத்தறிவு பெற்றோர் தொகை 90%. தமிழ்நாட்டில் எழுத்தறிவு பெற்றோர் தொகை 63%. இக்குறைபாட்டு விகிதம் இரு மாநிலங்கங்களின் நூல்/ இதழ் வெளியீடு, விற்பனை, வாசிப்பு ஆகிய நிலைகளுக்கும் பொருந்தும்.29

கேரளாவில் மிகுதியான நாளிதழ்கள் (ஏழு இலட்சம் –மலையாள மனோரமா) விற்பனையாகின்றன. தமிழ்நாட்டில் அந்த எண்ணிக்கை குறைவு (மூன்றரை இலட்சம் – தினத்தந்தி) ஆனால், தொலைக்காட்சிப் பெட்டிகள் தமிழ்நாட்டில் பதினேழரை இலட்சமும் கேரளாவில் ஐந்து இலட்சமும் இருப்பதை இவண் இணைத்து நோக்க வேண்டும். எனவே, தொலைக்காட்சி முதலிய பொழுதுபோக்குப் பழக்கம் அறிவுப்பழக்கமான நூல் வாசிக்கும் பழக்கத்தை முடிவு செய்கிறது எனல் தகும்.

எதிர்கால நூல்

அருவ நிலை, ஓலைச்சுவடி, தாள் சுவடி, அச்சு நூல், கணிப்பொறி (வட்டத்தகடு – C.D.) ஆகிய ஐந்து நிலையில் தமிழ் நூல் தோன்றி வளர்ந்துள்ளது. முற்காலத்தில் அருவ நிலையில் இருந்த நூல் எழுது பொருட்களின் துணையோடு ஓலைச்சுவடியாக உருவ நிலையை அடைந்த்து. அச்சுக்கலையின் தோற்றத்திற்குப் பிறகு ஒரே நேரத்தில் பன்னூறு நூற்படிகள் உருவாக்கப் பெற்றன. இவ்வாறு ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு நூல் மாறியது மக்களுக்கு எளிமையாகவும் வசதியாகவும் இருந்தது. இந்த நிலை மாற்றத்தின் இன்றியமையாத காரணம்,

  1. அறிவு முன்னேற்றம்
  2. அறிவியல் முன்னேற்றம்

தற்காலத்தில் அச்சு நூல்களை உருவாக்குவது போன்று, கணிப்பொறியில் பொருத்தி வாசித்துக் கொள்ளும் வகையில் வட்டத் தகடுகளில் (C.D. Rom) நூல் உருவாக்கும் முயற்சிகள் நடைமுறையில் உள்ளன.30 இதன்வழிக் கணிப்பொறி வசதி கொண்டவர்களால் மட்டுமே பயன்கொள்ளப்பெறும். இதற்குப் பொருட்செலவும் மிகுதி. முன்னேறும் நாடான தமிழ்நாட்டின் பொருளாதாரச் சூழல், அனைவரும் கணிப்பொறியில் நூல் உள்ளடக்கத்தை ஒலி நாடாவில் தகுந்த ஏற்ற இறக்கத்துடன் பதிவு செய்து வெளியிடும் நிலை எதிர்காலத்தில் ஏற்படும். அந்நூல்களில் (ஒலி நாடாக்களில்) பின்னணிக்கும் முதலிடம் அளிக்கப்பெறும். படைப்பின் கருத்திற்கேற்ப இசை மற்றும் சிறப்பு ஒலிகள் பின்னணியாக அமைக்கப்பெறும். அச்சுக்கலை, கணிப்பொறிக்கு வந்த போது நிகழ்ந்து உள்ள சிறப்பு மாற்றங்கள் பல. அவற்றுள் பல வகைகளில் எழுத்தின் வடிவங்களை மாற்றி அமைத்தலும் தலைப்புகளுக்கு விதவிதமான புறவட்டங்களை அமைத்தலும் பத்தி அமைப்புகளில் புதுமையைச் செய்தலும் குறிப்பிடத்தக்கன. அவ்வாறே ஒலி நாடாவிலும் புதிய கூறுகள் கேட்பவரை (வாசகரை) இன்புறச்செய்யும் வகையில் அமைக்கப்பெறும்.

மேற்கோள்களாக எடுத்தாளப்பெறும் தொடர்கள் கருத்துகள் மூல ஒலிநாடாவிலிருந்து எடுத்து உரிய இடத்தில் பதிவு செய்யப்பெறும். எனவே, மேற்கோளுக்குரிய நூலாசிரியரின் குரல் (அல்லது அவர்தம் சார்பாளர் குரல்) ஒலி நாடாவில் நூலைக் கேட்பவர்களுக்குக் கிடைக்கும்.

தமிழ்ச் சூழலில் பயணநேரம் மிகுதி. இந்நேரத்தைத் தற்காலத்தில் நூல் வாசிப்பதற்குப் பயன்படுத்துவோர் குறைவு. காரணம், அச்சு நூல்களை ஓடும் உந்தில் வாசிப்பதால் பார்வைக் குறைவு ஏற்படும். மேலும் இருசக்கர உந்துகளில் செல்வோர் அவ்வாறு வாசிக்க முடியாது. ஆனால் ஒலி நாடாவில் உருவாகும் நூல்களை ஓட்டுநரும் வாசிக்க (கேட்க) முடியும்.

மேற்கோள்களாக எடுத்தாளப்பெறும் தொடர்கள், கருத்துகள் மூல ஒலிநாடாவிலிருந்து நாடாவிலும் புதிய கூறுகள் கேட்பவரை (வாசகரை) இன்புறச் செய்யும் வகையில் அமைக்கப்பெறும்.

அச்சுநூல்களின் பெருக்கத்திற்குப் பிறகும் பழைய நூல் வடிவங்கள்- ஓலை, தாள் சுவடிகள்- வாசிக்கப் பெறுகின்றன. அவ்வாறே கணிப்பொறியில் வாசிக்கும் வசதி பெற்றவர்களும் அச்சு நூல்களையும், வாசிக்கின்றனர். இதேபோல் ஒலி நாடாவில் மிகுதியாக நூல் வாசிப்போரும் தேவை கருதி அச்சு நூல்களை வாசிக்க நேரிடும். குறிப்பிட்ட பக்கத்தில் உள்ள கருத்துகளை மட்டும் வாசிக்க வேண்டுமெனில் அச்சு நூலில் உடனே அப்பக்கத்தைப் புரட்டி வாசிக்க முடியும். கணிப்பொறி வாசிப்பில் உரிய முறையில் கணினி நிகழ்வை மாற்றி அமைத்து வாசிக்க வேண்டும். அவ்வாறே ஒலிநாடாவில் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேர்ந்தெடுக்கும் வகையில் தொழில் நுட்பங்கள் மிகும்.

வீட்டில் பிற வேலைகளைச் செய்துகொண்டு வானொலி கேட்பது போல், போல், ஒலி நாடாவில் நூல் வாசிப்பு நிகழ்வது ஏற்படும். ஊன்றி வாசிக்கும் விருப்பமுடையோர் தனிமையில் அமைதியாக வாசிப்பது போல் ஒலி நாடாவிலும் வாசிப்பர். வாசிப்பதே இல்லை என்ற சூழலை மாற்றி ‘ஊன்றி’ வாசிக்கவில்லை எனினும் ‘வாசித்தார்’ என்பதை வரவேற்க வேண்டும். ஊன்றி வாசிக்கும்படியான தேவையை, கட்டாயத்தை ஒலிநாடா நூல் ஏற்படுத்தும் வகையில் நூலாசிரியர், நூல் வெளியீட்டாளர் முயற்சிகளை மேற்கொள்வர். சுழற்சி நூலகங்களில் அச்சு நூல்கள் கிடைப்பது போன்றும் காணொளி நூலகங்களில் பட நாடாக்கள் (வீடியோ கேசட்) கிடைப்பது போன்றும் ஒலி நாடாக்களுக்கான நூலகம் அமைக்கப் பெறும்.

ஒலிநாடாவிலான நூலை உரிய நாடாப் பதிவியில் பொருத்தி, பிறவொலி புகாதவாறு காதுகளில் சிறு ஒலி பெருக்கிகளைப் பொருத்திக் கொண்டு நூலை வாசிக்க முடியும். இம்முறையில் தற்காலச் சுற்றுலாப் பயணிகள் பாடல்களைக் கேட்கின்றனர். இவ்வாறே எதிர்காலத்தில் நூல்களையும் வாசிக்க முடியும்.

தற்காலத்தில் குழந்தை/ சிறுவர் நூல்கள் வண்ண வண்ணமாக அச்சிடப்பெற்று உருவாக்கப்பெற்றபோதிலும் ஒலிநாடாக்களில் குழந்தைப் பாடல்கள், கதைகள் முதலியன வெளியிடப் பெற்று விற்பனை செய்யப்பெறுகின்றன. நூல் (ஒலிநாடா) வாசிப்போரே பதிவு செய்து கொள்ளும் வசதி ஒலிப் பதிவியில் (டேப் ரெக்கார்டர்) இருப்பதால் நூல்கள் விற்பனையில் முறைகேடுகள் நிகழும். அதைத் தவிர்க்கும் பொருட்டு உரிய தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும்.

தாளின் விலை மிகுதியாகிக் கொண்டே உள்ளது. கணினியில் வாசிப்பதும் (சி.டி.ரோம்) பொருட்செலவு மிக்கது. இவற்றைக் காட்டிலும் ஒலிநாடாவின் விலை குறைவே. அறிவியல் தொழில்நுட்பம் வளர்வதற்கேற்பவே நூல் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது. எனவே எதிர்காலத்தில் ஒலிநாடாவில் நூல் உருவாகும் என்பதில் ஐயமில்லை.

சான்றெண் விளக்கம்

  1. டி. சுந்தரம்(பதி), சமூகவியல் (தொகுதி 1) ப.80
  2. தொல்காப்பியம் செய்யுளியல், நூற்பாக்கள், 15,9, மரபியல் நூற்பாக்கள்: 5-99 நன்னூல், நூற்பாக்கள், 5-8, 10, 24, 25
  3. வெ. இராமலிங்கம் பிள்ளை, இலக்கிய இன்பம், ப.2
  4. ஆ.இராமகிருட்டிணன், தமிழக வரலாறும், தமிழர் பண்பாடும், ப.15
  5. பூ. சுப்பிரமணியன், சுவடியியல், ப.23
  6. ‘ஓலை’ என்ற சொல் சங்கப் பாடல்களில் பயின்று வந்துள்ளது. நற்றிணை-250, 369, அகநானூறு-77, புறநானூறு-350, கலித்தொகை-94
  7. பூ. சுப்பிரமணியன், முற்சுட்டிய நூல், ப.63
  8. திருவள்ளுவர், திருக்குறள்-332
  9. கீழ்த்திசைச் சுவடி நூலகம்- சென்னை, உ.வே.சா. நூலகம்- சென்னை, ஆசியவியல் ஆய்வு நிறுவனம்- சென்னை (செம்மஞ்சேரி), சரசுவதி மகால் நூலகம்- தஞ்சை.
  10. விரிவிற்கு: மயிலை சீனி. வேங்கடசாமி, மறைந்து போன தமிழ் நூல்கள்
  11. மா.சு. சம்பந்தன், எழுத்தும் அச்சும், ப.62
  12. காண்க: S. Kesavan, History of Printing and Publishing in India (Vol .I). Pa.33, 44, 45,47, 66,97
  13. மா.சு. சம்பந்தன், முற்சுட்டிய நூல், ப.58
  14. மு.வ. இலக்கியத்திறன், (மேற்கோள்- அடிக்குறிப்பு) ப.60,61
  15. கி. இராசா, படைப்பாளர்- இலக்கிய வாகை – வாசகர், தமிழ்ப் பொழில் (மே.95), ப.51
  16. எம்.டி. முத்துக்குமாரசாமி, மேலும் (ஆகஸ்ட்-92), ப.44
  17. சான்று: பொன்னீலன், புதிய தரிசனங்கள் (மூன்று தொகுதிகள்), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
  18. லேனா தமிழ்வாணன் (பதி.) உங்களை படைப்புக்களை நூலாக்கி வெளியிடுவது எப்படி? ப.34
  19. மேலது. ப.22
  20. பாரதிதாசன், பாரதிதாசன் கவிதைகள், ப.108
  21. இராம. சுப்பிரமணியன், நூலகம், ப.14
  22. கிளரென்ஸ்டே (இளையவர்), கா. திரவியம் (தொகு). சிந்தனைக் களஞ்சியம் (தொகுதி-3), ப.168
  23. ஃபிரான்சிஸ்பேக்கன், மேலது ப.169
  24. இராம.சுப்பிரமணியன், நூலகம், ப.16
  25. வே.தில்லைநாயகம், இந்திய நூலக இயக்கம், ப.103
  26. க.ப.அறவாணன், படைப்பாளி+சமுதாயம்=இலக்கியம், ப.84
  27. ஆர்.வி., ஜூனியர் போஸ்ட், ப.11 (10-09-93)
  28. அறவேந்தன், தமிழர் நோபல் பரிசு பெற வழிகள், ப.40
  29. இக்கட்டுரையில் பயன்படுத்தப்பெற்றுள்ள புள்ளி விவரங்கள் கள ஆய்விலும் (1985-96) மனோரமா ஆண்டேட்டிலும் பெறப்பட்டவை.
  30. விரிவிற்குக் காண்க: பெ. இராமநாதன் (தொகு.), நூலகப் பயன்பாட்டில் தகவல் நுட்பவியல், ப.208-271.

ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள், இதழ்கள்

அறவாணன், க.ப., படைப்பாளி+சமுதாயம்=இலக்கியம், தமிழ்க்கோட்டம், புதுச்சேரி, 09-08-1995.

அறவேந்தன், தமிழர் நோபல் ப ரிசு பெற வழிகள், தமிழ்க்கோட்டம், புதுச்சேரி, 1990.

இராமகிருட்டிணன், ஆ., தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, அக்டோபர், 1983.

இராமநாதன். பெ. (தொகு). நூலகப் பயன்பாட்டில் தகவல் நுட்பவியல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை-1994.

இராமலிங்கம் பிள்ளை, வெ., இலக்கிய இன்பம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, ஆறாம் பதிப்பு, 1982.

சங்கப் புலவர்கள், சங்க இலக்கியங்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, இரண்டாம் பதிப்பு, 1981.

சம்பந்தன், மா.சு., எழுத்தும் அச்சும், தமிழர் பதிப்பகம், சென்னை, 1981.

சுந்தரம், டி., (பதி.) சமூகவியல் (தொகுதி-1) தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, மறுபதிப்பு, 1988.

சுப்பிரமணியன், இராம. நூலகம், தமிழ்க்கடல் பதிப்பகம், நந்தனம், சென்னை, ஆகஸ்ட், 1986.

சுப்பிரமணியன், பூ., சுவடியியல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, டிசம்பர், 1991.

திரவியம், கா. (தொகு), சிந்தனைக் களஞ்சியம் (தொகுதி-3) பூம்புகார் பிரசுரம், சென்னை, 1989.

திருவள்ளுவர், திருக்குறள், கழக வெளியீடு, சென்னை, மறுபதிப்பு, 1980.

தில்லைநாயகம், வே., இந்திய நூலக இயக்கம், பாரி நிலையம், சென்னை, 1978.

தொல்காப்பியர், தொல்காப்பியம், கழக வெளியீடு, சென்னை, அக்டோபர்; 1969.

பவணந்தியார், நன்னூல், கழக வெளியீடு, சென்னை, மறுபதிப்பு, 1986.

பாரதிதாசன், பாரதிதாசன் கவிதைகள், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், மறுபதிப்பு, 1980.

பொன்னீலன், புதிய தரிசனங்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 1993.

வரதராசன், மு., இலக்கியத் திறன், தாயக வெளியீடு, சென்னை, மறுபதிப்பு, 1987.

வேங்கடசாமி, மயிலை.சீனி. மறைந்துபோன தமிழ் நூல்கள், சாந்தி நூலகம், சென்னை, இரண்டாம் பதிப்பு, 1956.

Kesavan. B.S., History of Printing and Publishing in India, Vol. I, National Book Trust, New Delhi,1985.

ஆர்.வி. ஜூனியர் போஸ்ட், 10-9-93.

இராசா. கி., படைப்பாளர்- இலக்கிய வகை- வாசகர், தமிழ்ப்பொழில், மே, 1995.

முத்துக்குமாரசாமி, எம்.டி., உரையாடல், மேலும், ஆகஸ்ட், 1992.

மேத்யூ கே.எம்., (முதன்மைப் பதிப்பாளர்), மனோரமா இயர் புக், கோட்டையம், கேரளா, 1995.

 

ச. மகாவிஷ்ணு:

எம்.ஏ., (கல்லூரி முதல் மதிப்பெண்), முனைவர் பட்ட ஆய்வு, புதுவைப் பல்கலைக்கழகம். சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய மாநில அளவிலான விரிவுரையாளர் தகுதித் தேர்ச்சி, பல்கலைக்கழக நல்கைக்குழு தேசிய அளவில் நடத்திய ஆய்வூதியம் (JRF), விரிவுரையாளர் தகுதித்தேர்வு – தேர்ச்சி. நூலகங்களும் வாசிக்கும் பழக்கமும் (ஆய்வு நூல்), அன்புடன்… அன்புடன்… (கதை நூல்), ஆய்வுக்கட்டுரைகள் ஆறு, குறு ஆய்வுகள் மூன்று.

 

1 COMMENTS

  1. நிறைய செய்திகளை அறிந்துக்கொண்டேன். இது எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. மிக்க நன்றி

Comments are closed.

You Might Also Like