Star Mountain

My travels and other interests

அரசுதமிழ்நாடு நேற்று இன்று நாளை

பாசனமும் பிரச்சினைகளும் (1997)

பாசனமும் பிரச்சினைகளும்
பழ. நெடுமாறன்

தமிழ்நாட்டின் பாசனமும் பிரச்சினைகளும் குறித்து இக்கட்டுரை நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

முதலாவதாகப் “பண்டைத் தமிழகத்தில் பாசனமும் பிரச்சினைகளும்” குறித்து ஆராயப்பட்டுள்ளது. சங்க  காலத்தில் தொடங்கி நாயக்கர் ஆட்சிக் காலம் வரை தமிழ்நாட்டில் பாசனங்கள் எப்படிச் செய்யப்பட்டன என்பதையும் அவ்வப்போது எழுந்த பிரச்சினைகள் குறித்தும் இப்பகுதியில் எழுதப்பட்டுள்ளது.

இரண்டாவதாக “ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பாசனமும் பிரச்சினைகளும்” எவ்வாறு இருந்தன என்பது ஆராயப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அணைகள், பாசனக் கட்டுமானங்கள் மற்றும் நதி நீர் உடன்பாடுகள் ஆகியவை குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மூன்றாவது பகுதியில் ”இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு உருவாக்கப்பட்ட பாசனப் பிரச்சினைகள்” சுருக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பெரியார் அணைப் பிரச்சினை, காவிரிப் பிரச்சினை, மேற்கு நதிகளின் நீரைத் தமிழகத்திற்குத் திருப்பும் பிரச்சினை, பரம்பிக்குளம் ஆழியாறு பிரச்சினை ஆகியவை குறித்து முக்கிய விவரங்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுத் தமிழகத்தின் பாசனம் மற்றும் பிரச்சினைகள் குறித்த சகல விவரங்களும் இக்கட்டுரையில் சுருக்கமாகவும் விளக்கமாகவும் தொகுத்து தரப்பட்டுள்ளன.

  1. பண்டைத் தமிழகத்தில் – பாசனமும் – பிரச்சினைகளும்

“பன்னிரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான நெடிய வரலாறு தமிழர்களுக்கு உண்டு என்பது விஞ்ஞான பூர்வமான சான்றுகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. முதற்சங்க காலத்தில், நகரங்களையும், பாசன வசதிகளையும் தமிழர்கள் நிர்மாணித்திருந் தார்கள் என்பது ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டுள்ளது. மழை நீரைச் சேமிப்பதிலும் அதைப் பயனுள்ள வகையில் பயன் படுத்துவதிலும் நீண்டகால அனுபவத்தினைத் தமிழர்கள் பெற்றிருந்தார்கள். நீண்டகால வரலாற்றில் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் தலைக்குக் கிடைத்த நீரின் அளவு வேறுபட்டு வந்துள்ளது. மிகை நீர்வளம் மிக்க காலங்களும் உண்டு. வறட்சியும் பஞ்சமும் வாட்டி வதைத்த காலங்களும் உண்டு. பருவ நிலையில் ஏற்படும் மாறுதல்களையொட்டி மக்கள் தொகையின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் அமைந்திருந்தன. பருவநிலைமை சாதகமாக இருந்தபோது மக்கள்தொகை அதிகரித்தது. பருவநிலை பாதகமானபோது மக்கள்தொகை குறைந்தது. அந்தக் காலகட்டங்களில் தலைக்குக் கிடைக்கும் நீரின் அளவு அதிகரித்தது. இதன் விளைவாக கிடைக்கும் தண்ணீர் வீணான வழிகளிலும் செலவிடப்பட்டது. பருவநிலை மோசமான காலகட்டங்களில் அதற்கேற்ப மக்கள் தொகையும் பாதிக்கப்பட்டது.

பன்னிரெண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றில் தமிழர்கள் தலைக்குக் கிடைத்த நீரின் அளவு மிகக் குறைந்த காலகட்டமும் இருந்தது. அத்தகைய ஒரு காலகட்டத்தை நோக்கித்தான் இப்போது தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது. எனவே, பழைய வரலாற்றினைப் புரட்டிப்பார்த்து அந்த அனுபவங்களிலிருந்து நாம் பாடம் கற்கவேண்டும்.

தென்னிந்தியாவில் உள்ள பாசன வசதிகள் கி.மு. 2000 முதல் கி.மு. 1000 வரையில் உள்ளான காலகட்டத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும். அதைப்போலவே கி.மு.850 முதல் கி.பி.1000 வரையிலான காலகட்டம் வேளாண்மை முயற்சிகளுக்கு ஏற்ற கால கட்டமாக இருந்திருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில்தான் தமிழர்கள் வேளாண் மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். மூன்றாம் சங்க காலத்தில்தான் தென்னாட்டில் தமிழர்கள் குடியேறி இருக்கவேண்டும். தற்போதைய மதுரைக்குத் தெற்கே உள்ள நிலப்பகுதிகளில் தான் இதற்கு முந்திய காலகட்டங்களில் தமிழர்கள் குடியேறியிருக்க வேண்டும். எனவே, நல்ல பருவ காலங்களிலும் மோசமான பருவ காலங்களிலும் வாழ்வதற்கு ஏற்ற சூழல்களைக் கண்டறிந்து அதற்கேற்ப தமிழர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கவேண்டும். கடந்த காலத்தில் தமிழர்கள் கையாண்ட முறைகளை நாம் ஆராய்ந்து அறிவோமானால் எதிர்காலத்தில் அவை நமக்கு உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை’’1

உலகத்தில் முதன்முதலில் பாசன வசதிகளில் கவனம் செலுத்தியவர்கள் தமிழர்கள் என்றுதான் கூறவேண்டும். ஆண்டுதோறும் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தத் திட்டமிட்டு வெற்றிகரமாகச் சாதித்த பெருமை சோழ மன்னர்களையே சாரும்.

முதன் முதல் காவிரியின் கரையை உயர்த்திய பெருமை சங்க காலச் சோழ மன்னனான கரிகாலனைச் சேரும். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தெலுங்கு சோழ அரசனான புண்ணிய குமாரனின் மர்லேபாடு செப்பேடுகளில் முதன் முறையாக இச்செய்தி குறிப்பிடப்படுகிறது. அதற்குப் பின்னால் தோன்றிய செப்பேடுகளும் கல்வெட்டுகளும் இலக்கியங்களும் இச்செய்தியைத் தவறாது குறிப்பிடுகின்றன. எடுத்துக்காட்டாக திருநெய்த்தானத்திலுள்ள பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்றில் கரிகாலன் கரை சுட்டப்படுகிறது.

தனது வெற்றிகரமான ஈழப் படையெடுப்பின் போது கைதிகளாகப் பிடித்து வரப்பட்ட 12,000 சிங்கள அடிமைகளைப் பயன்படுத்தி காவிரியின் இரு கரைகளையும் கரிகாலன் உயர்த்திக் கட்டினான் என கலிங்கத்துப்பரணி பாடுகிறது.

சிங்களரின் வரலாற்று நூலான மகாவம்சம் இச்செய்தியை உறுதிப் படுத்துகிறது.

காவிரியின் கரைபுரண்ட வெள்ளம் கொள்ளி-டத்தில் பாய்ந்து வீணாவதைத் தடுத்து காவிரிப்-படுகைப் பகுதிக்குள் நீரைத் திருப்பிவிடுவதற்காகச் சோழமாமன்னன் கரிகாலன் கல்லணையைக் கட்டினான். கி.பி. முதல் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அணை கட்டுக்கோப்பு குன்றாமல் இன்றளவும் நின்று நிலவுகிறது. உலகிலேயே முதன் முதல் கட்டப்பட்ட இந்த அணையின் கட்டுமான வேலைப்பாடு கண்டு உலகம் வியக்கிறது.

“நைல்நதி வெள்ளத்தைக் கட்டுப் படுத்திப் பாசனம் செய்யக் கற்றுத்தந்ததில் பெரும்பங்கு வகித்தோர் இந்தியத் தென்புல மக்கள் என்பதை ஜெர்மன் பொறியாளர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர்”.2

பண்டையத் தமிழகம்

பண்டையத் தமிழ் இலக்கியங்களில் தமிழ்நாட்டின் எல்லைகளைப் பற்றிய குறிப்புகள் ஏராளமாகக் காணக்கிடக்கின்றன.

வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத்
தென்றிசை யுள்ளிட்டெஞ்சிய மூன்றும்
வரைமருள் புணரி

எனச் சிறுகாக்கைபாடினியார் தமிழ்நாட்டு எல்லை பற்றிக் கூறியிருக்கிறார். இதற்கு உரை எழுதிய பேராசிரியர் “தெற்குக் குமரியன்றிக் கடலெல்லை யாகிய காலத்துச் சொல்லப்பட்டதென” கூறியிருக்கிறார்.

தொல்காப்பியத்திற்குப் பாயிரம் பாடிய பனம்பாரனார்;

வட வேங்கடத் தென்குமரி யாயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து

– என தமிழக எல்லைகளை வரையரைத்துள்ளார்.

 வேங்கடம் குமரி தீம்புனல் பெவமென்று
இந்நான்கு எல்லை தமிழது வழக்கே

– என சிகண்டியாரும்

வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும்
வேங்கடம் குமரி தீம்புனல் பௌவமென்று
அந்நான்கு எல்லை

– என காக்கைப் பாடினியாரும் சங்ககாலத் தமிழக எல்லைகளைக் குறிப்பிட்டுள்ளனர்.

பனம்பாரனார், சிகண்டியார், காக்கைப் பாடினியார் ஆகியோர் குமரி எனக் குறிப்பிடும்போது குமரி ஆற்றையே குறிப்பிட்டனர்.

சிலப்பதிகாரம் குமரியம்பெருந்துறை என்பதற்கு உரை கூறும்போது குமரி ஆறு என அடியாருக்கு நல்லார் எழுதியிருக்கிறார். அடியாருக்கு நல்லார் காலம் வரை குமரியாற்றைக் கடல் கொள்ளவில்லை. ஆனால் நன்னூல் எழுந்த காலத்தில் அது கடலால் கொள்ளப்பட்டுவிட்டது.

இதற்குப் பிறகு குமரிமுனை தமிழகத்தின் தெற்கெல்லையாயிற்று. கிழக்கிலும் மேற்கிலும் கடல் எல்லையாக இருந்த நிலைமை மாறி மேற்குப் பகுதியில் இருந்த செந்தமிழ்ச் சேரநாட்டில் வடமொழியின் ஆதிக்கம் பரவி மொழி திரிந்து மலையாளம் பிறந்த பிறகு தமிழகத்தோடு இருந்த மொழி பண்பாட்டுத் தொடர்புகள் அறுந்துவிட்டன.

சங்க காலத்தில் கேரளம் சேரநாடு என அழைக்கப்பட்டு தமிழகத்தின் அங்கமாகவே விளங்கியது. மொழி, பண்பாடு, சமுதாய அமைப்பு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றால் சேரநாடு தமிழகத்திலிருந்து வேறுபாடு கொண்டதாக அமைய வில்லை. சங்க காலத்திற்குப் பிறகு இப்பகுதியில் ஆரியர்களின் குடியேற்றம் ஏற்பட்டபிறகே பல மாற்றங்கள் ஏற்பட்டன.

சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ வடிகள், குலசேகர ஆழ்வார் போன்ற புலவர் பெருமக்கள் கேரள மண்ணில் தோன்றி தமிழுக்கு அழியாத புகழைத் தேடித்தந்தனர்.

கி.பி.3-ஆம் நூற்றாண்டில் பாண்டியனின் அமைச்சராக விளங்கிய மாணிக்கவாசகர் வைக்கம் வந்து மேற்குக் கடற்கரையோர மக்களின் பண்பாட்டை வியந்து பாராட்டியிருக்கிறார்.

63 சைவ நாயன்மார்களில் ஒருவரான விறல்மிண்டல் நாயனார் மத்திய திருவிதாங்கூரில் உள்ள செங்களூரில் தோன்றியவர்.

சைவ நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் சேரமன்னரின் நெருங்கிய நண்பராக விளங்கியவர்.

இப்போது கிரங்கனூர் என அழைக்கப்படும் பண்டைய முசிரியில் பிறந்த நீலகண்டனார் இறையனார் அகப் பொருளுக்கு உரை எழுதினார்.

தென் தமிழ்ப் பாவையான கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் கோவில் எடுத்தான். அதன் விளைவாக கேரள நாட்டில் பகவதி வழிபாடு என்ற பெயரில் கண்ணகி வழிபாடு இன்னமும் நடைபெறுகிறது.

கிறித்துவ ஆண்டு தொடக்கத்தில் கேரளத்தில் வழங்கி வந்தது கொடுந்தமிழே என்றும், தமிழ் கிரந்தத்தை வைத்து வட்டெழுத்து முறையில் கி.பி.10-ஆம் நூற்றாண்டு அல்லது அதற்குப் பிறகு மலையாளம் பிறந்தது என்ற ஒரு கருத்தும் கொடுந்தமிழும் பிராகிருத சமஸ்கிருதமும் கலந்து கி.பி.13-ஆம் நூற்றாண்டில் மலையாளம் பிறந்தது என மற்றொரு கருத்தும் உள்ளன. அதைப் போலவே இக்கால கட்டத்திற்குப் பிறகே கன்னடமும் தோன்றிற்று.

கர்நாடகத்தில் இப்போது கோலார் என்றழைக்கப்படும் பகுதி சோழர்காலத்தில் குவளாலபுரம் என அழைக்கப்பட்டு கங்கபாடி நாட்டின் தலைநகராக இருந்தது. சோழர் ஆட்சிக்குட்பட்ட நாடாகவே இருந்தது. 13-ஆம் நூற்றாண்டில் இந்நாட்டை ஆண்ட அமராபரண சீயகங்கன் என்னும் மன்னனின் அவையில்தான் பவணந்தி முனிவரின் நன்னூல் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

ஆக 12-ஆம் நூற்றாண்டுவரை தமிழகம் அகண்டநாடாக விளங்கி வந்தது. மலையாள, கன்னடமொழிகள் தோன்றி அதைப் பேசிய மக்கள் தமிழரிடமிருந்து அந்நியப்பட்டுபோகிற காலம்வரை அனைவருமே தமிழராக இருந்தனர். எனவே, பிரச்சினை எதுவும் தோன்றவில்லை.

12-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு பிரச்சினைகள் தலையெடுத்தன. நாட்டெல்லைப் பிரச்சினைகள் மட்டுமல்ல; நதிநீர்ப் பிரச்சினைகளும் வடிவெடுத்தன. காவிரி நதி நீர் தமிழகத்திற்கு வரவிடாமல் தடுக்கும் முயற்சிக்கு 12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அத்திவாரமிடப்பட்டது.

12-ஆம் நூற்றாண்டில்கூட காவிரி நீரைத் தமிழகம் வராமல் தடுக்கும் முயற்சியில் அந்நாளைய கர்நாடக மன்னன் ஈடுபட்டான். கி.பி.1141 முதல் 1173 வரை கர்நாடகப் பகுதியை ஆண்ட போசளநாட்டு மன்னனான முதலாம் நரசிம்மன் காவிரியின் போக்கைத் தடுக்க செயற்கை மலைகளை ஏற்படுத்தித் தமிழகத்திற்கு வரும் நீரைத் தடுத்தான். இதன் விளைவாக காவிரியில் நீர் குறைந்தது. “வான்பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியும்” பொய்த்தது சோழ நாட்டில் வறட்சி ஏற்பட்டது. அவ்வேளையில் சோழநாட்டை ஆண்ட இரண்டாம் இராசராசன் போசள நாட்டின் மீது படையெடுத்தான். போசள மன்னனைத் தோற்கடித்துச் செயற்கை மலையைத் தகர்த்து காவிரித் தண்ணீரை மீண்டும் சோழ நாட்டிற்குக் கொணர்ந்தான். இதனால் இரண்டாம் இராசராசன் காவிரி கண்ட சோழன், பொன்னிக்கு வழிகண்ட கண்டன் என்றெல்லாம் புகழப்பட்டான். இந்தப் பெரும் போருக்கான செலவை ஈடுகட்ட காவிரிக்கரை வினியோகம் என்ற வரி விதிக்கப்பட்டது. சோழனின் அரசவைப் புலவரான ஒட்டக்கூத்தர் தனது “தக்க யாகப் பரணியில்” இந்த வெற்றிச் செய்தியைப் பின்வருமாறு புகழ்ந்து பாடுகின்றார்:

அலைகொன்று வருகங்கை வாராமல் மண்மேல்
அடைகின்ற குன்றடு அறுக்கின்ற பூதம்
மலைகொன்று பொன்னுக்கு வழிகண்ட கண்டன்
பரராச ராசன்கை வாள் என்ன வேந்தே.

அவர் பாடிய இராசராச சோழன் உலாவிலும் பின்வருமாறு புகழுகின்றார்:

சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ
வழியிட்ட வாள் காண வாரிர்!

சேக்கிழாரின் பெரிய புராணத்திலும் இவ்வெற்றி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எரிபத்தநாயனார் புராணத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

“பொன்மலைப் புரிதின் நோக்கப் புதுமலை
இடித்துப்போற்றும் அந்நெறி வழியேயாக
அயல்வழி அடைத்த சோழன்”

நச்சினார்க்கினியரின் தொல்காப்பிய உரை மேற்கொள் பாடல் ஒன்றிலும் இந்த வெற்றிச் சிறப்பு பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

“மலைச்சிறைநீர் வாட்கண்டன்
வெள்ளணிநாள் வாழ்த்திக்
கொலைச் சிறைநீர் வேந்துக்குழாம்”

நாயக்கர் காலம்

கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் காவிரி நீர் சம்பந்தமாக தமிழகமும் மைசூரும் மோதிக் கொண்டன. கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையில் ராணி மங்கம்மாளும் தஞ்சையில் மராத்திய மன்னன் சகசியும் ஆண்டனர். அப்போது மைசூரை சித்ததேன் மகாராயன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவன் காவிரியின் போக்கை அணை கட்டித் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டான். இதன் விளைவாக மதுரை நாயக்கர் அரசியும் தஞ்சை மராட்டிய மன்னனும் எவ்வளவோ பிரச்சினைகளில் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதிலும் காவிரிப் பிரச்சினையில் ஒன்றுபட்டு நின்றனர். இரண்டு நாடுகளைச் சேர்ந்த படைகளும் மைசூருக்கு அனுப்பப்பட்டன. ஆனால் படை மைசூரை அடைவதற்கு முன்னால் காவிரியின் குறுக்கே மைசூர் மன்னன் கட்டிய அணை திறமையற்றவர்களால் கட்டப்பட்டதால் தானே உடைந்து சிதறிவிட்டது. காவிரியில் தடையின்றி நீர்வரத் தொடங்கியது.

தாமிரபரணி ஆற்றில் பாண்டியர், நாயக்கர் ஆட்சிக் காலங்களின் போது சில அணைகளும், வாய்க்கால்களும் அமைக்கப் பட்டன.

ஏரிப்பாசனம்

வறட்சியான பகுதிகளில் ஏரிகளை அமைத்துப் பாசனம் செய்வதில் பழந்தமிழர் திறமை வாய்ந்தவர்களாக இருந்தனர். தமிழ்நாட்டில் உள்ள 39000 ஏரிகளில் சுமார் 38000 ஏரிகள் மன்னர்கள் ஆட்சிக் காலங்களில் அமைக்கப்பட்டவையேயாகும்.

தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான வீராணத்து ஏரி இராஜாதித்த சோழன் கட்டியதாகும். தனது தந்தை பராந்தக சோழனின் பட்டப் பெயரான வீரநாராயணன் என்பதைச் சூட்டினான். வீரநாராயணன் ஏரி என்பது நாளடைவில் வீராணத்து ஏரியாயிற்று. இதைப்போல சோழ, பாண்டிய, பல்லவ, நாயக்க மன்னர்கள் ஏராளமான ஏரிகளை அமைத்து பாசன வசதிகளை ஏற்படுத்தினார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சி வருவதற்கு முன்புவரை ஏரிகளில் நிர்வாகம் கிராமச் சமுதாயத்தின் பொறுப்பில் இருந்து வந்தது. இதன் விளைவாக இவற்றை மக்களே நன்கு பராமரித்தார்கள். ஏரிகளில் இருந்து நீர்வினியோகம் செய்வதற்காக வெட்டியான், கம்புகட்டி முதலிய கிராம ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இவர்களுக்கு மானிய நிலங்கள் வழங்கப்பட்டிருந்தன.

  1. ஆங்கிலேயர் ஆட்சியில் பாசனமும் – பிரச்சினைகளும்

ஆங்கிலேயர் ஆட்சியின்போது குமரி மாவட்டம், புதுக்கோட்டை சமஸ்தானம் நீங்கலாக தற்போதைய தமிழ்நாடு சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. திருவிதாங்கூர், மைசூர் சமஸ்தானங்களும் பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்டவையாக இருந்தன. எனவே, இக்காலகட்டம் பாசனப் பிரச்சினைகள் இல்லாத காலகட்டமாகத் திகழ்ந்தது.

ஒரு ஆற்றுப்படுகையிலிருந்து மற்றொரு ஆற்றுப்படுகைக்கு நீரைத் திருப்பும் திட்டமான பெரியாறு திட்டம் நிறைவேற்றப்பட்டது. உலகிலேயே இது முதலாவது திட்டம் எனக் கூறலாம்.

வைகை ஆற்றில் வெள்ளக் காலத்தில் ஓடிவரும் நீரை நூற்றுக்கணக்கான கண்மாய்களுக்குத் திருப்பி பழைய மதுரை, இராமநாதபுரம் மாவட்ட மக்கள் விவசாயம் செய்து வந்தனர். சுமார் 22,000 ஏக்கர் நிலம் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டது. கடந்த நூற்றாண்டில் 1861-62, 1866-67, 1876-77 ஆகிய ஆண்டுகளில் இம்மாவட்டங்களில் கடும் பஞ்சம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். பல்லாயிரக் கணக்கான மக்கள் வேறு மாவட்டங்-களுக்கு இடம் பெயர்ந்தனர். இந்த நிலையைப் போக்குவது பற்றிய சிந்தனை எழுந்தது.

1798-ஆம் ஆண்டு இராமநாதபுரம் சமஸ்தான அரசில் அமைச்சராகப் பணியாற்றிய முத்து இருளப்பப் பிள்ளை பெரியாற்று நீரைத் திருப்பி வைகையோடு இணைக்க முடியுமா என்பதை ஆராய ஒரு குழுவை அமைத்தார். இத்திட்டம் சாத்தியமானதே என அக்குழு அறிக்கை சமர்ப்பித்தது. ஆனாலும், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற நிதி வசதி இல்லாததன் காரணமாகக் கிடப்பில் போடப்பட்டது. பிறகு, 1808-ஆம் ஆண்டிலிருந்து 1882-ஆம் ஆண்டுவரை பல காலகட்டங்களில் பல ஆங்கிலேய அதிகாரிகள் இத்திட்டம் பற்றி ஆய்வு நடத்தி இந்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். இறுதியாக 1886-ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசுக்கும் திருவிதாங்கூர் சமஸ்தான அரசுக்கும் இடையே ஒரு உடன்பாடு செய்துகொள்ளப்பட்டது. 1887-ஆம் ஆண்டு செப்டம்பரில் பெரியாறு அணை கட்டும் வேலை தொடங்கப்பட்டு 1895-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முடிக்கப்பட்டது. இந்த அரிய சாதனையைச் செய்து முடித்தவர் கர்னல் ஜே. பென்னிக் குயிக் என்னும் ஆங்கிலேயப் பொறியாளர் ஆவார்.

999 ஆண்டு காலத்திற்குச் செய்து கொள்ளப்பட்ட இந்த உடன்பாட்டின் விளைவாக பெரியாற்றின் மிகை நீர் குகைக் கால்வாய் மூலமாகக் கிழக்கே திருப்பப்பட்டு வைகையில் விடப்பட்டது. 22 ஆயிரம் ஏக்கர் மட்டுமே பாசன நிலமாக இருந்த பழைய மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களில் 2 இலட்சம் ஏக்கர் நிலத்திற்குப் பாசன வசதி அளிக்கப்பட்டது.

காவிரிப்பாசனம்

1890-ஆம் ஆண்டு வாக்கில் மைசூர் அரசு காவிரிப் படுகையிலும் தனது எல்லைக்குட்பட்ட ஏனைய படுகைகளிலும் புதிய பாசன வசதிகளை விரிவாக்க முற்பட்டபோது சென்னை மாகாணத்தின் பாசன வசதிகள் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்தது. இரு அரசுகளுக்கிடையேயும் ஏற்பட்ட கடிதப் போக்குவரத்து மற்றும் பேச்சுவார்த்தைகளின் பயனாக, மைசூர் மாநிலம் சென்னை அரசின் முன் அனுமதியின்றி புதிய பாசன அல்லது பாசன விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்பது பற்றிய விதிகள் தீட்டப்பட்டு இரு அரசுகளாலும் ஒப்புக்கொள்ளப் பட்டன. இவ்விதி-களின் தொகுப்பே 1892-ஆம் ஆண்டு உடன்பாடு என அழைக்கப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை காவிரி ஆற்றின் குறுக்கே அணைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. கண்ணம்பாடி அணை கட்டுவதற்கு மைசூர் அரசு சென்னை அரசின் முன் இசைவைக் கோரியது. மைசூர் அரசின் திட்டம் சென்னை மாநிலத்தின் நலன்களைப் பாதிக்கும் என்பதால் சென்னை அரசு இத்திட்டத்திற்குச் சம்மதம் தர மறுத்தது. இதைத் தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தைகளின் விளைவாக மைசூர் அரசு சில உறுதிமொழிகளை அளித்ததின் பேரில் கண்ணம்-பாடி அணை கட்டுவதற்கு சென்னை அரசு சம்மதித்தது. ஆனால் அந்த உறுதிமொழிகளை மைசூர் அரசு காப்பாற்றத் தவறிவிட்டது. எனவே, இப்பிரச்சினை 1913-ஆம் ஆண்டில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஹென்றி கிரிப்பின் என்பவரிடம் மத்தியஸ்திற்கு விடப்பட்டது. 1914-ஆம் ஆண்டில் அவர் அளித்த தீர்ப்பை எதிர்த்து சென்னை அரசு இந்திய அரசுக்கு மேல் முறையீடு செய்தது. 1916-ஆம் ஆண்டு ஏப்ரலில் இந்திய அரசு சென்னை அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து இங்கிலாந்தில் உள்ள இந்திய அரசுக்கான செயலாளருக்கு சென்னை அரசு மேல் முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டை அவர் அனுமதித்தார். மீண்டும் 1924-ஆம் ஆண்டுவரை சென்னை-மைசூர் அரசுகளுக் கிடையே பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதன் விளைவாக 1924-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் நாளில் ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இதுவே “1924-ஆம் ஆண்டு உடன்பாடு” என அழைக்கப்படுகிறது.

இந்த உடன்பாட்டு விதிகளுக்கிணங்க மேட்டூர் அணையைச் சென்னை அரசு 1934-ஆம் ஆண்டில் கட்டி முடித்தது. மேட்டூர் திட்டத்தின் கீழ்ப் புதிதாக 3.01 இலட்சம் ஏக்கர் வரை பாசன வசதி அளிப்பதற்குச் சென்னை அரசுக்கு உரிமை கிடைத்தது. இந்த உடன்பாட்டிற்கு இணங்க மைசூர் அரசு காவிரி மற்றும் அதன் கிளை நதிகளில் மொத்தத்தில் 45 டி.எம்.சி. கொள்ளளவிற்கு உட்பட்டுப் புதிய அணைகளைக் கட்டி 1.10 இலட்சம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதி அளிக்கலாம். 1974-ஆம் ஆண்டுவரை பிரச்சினைகள் ஏதுமின்றி இந்த உடன்பாடு அமுல் நடத்தப்பட்டது.

வகுக்கப்பட்ட திட்டங்கள்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1834-ஆம் ஆண்டில் சர். ஆர்தர் காட்டன் கங்கையையும் – காவிரியையும் இணைப்பதின் மூலம் இந்தியாவை வளம்மிக்க நாடாக்க முடியும் என்று கூறினார். ஆனால், இதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

1881-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் தலைமைப் பொறியாளராக இருந்த சர். ஆர்தர் காட்டன் கிருஷ்ணா பெண்ணாறு நீரை சென்னைக்குப் பயன்படுத்தும் முதல் திட்டத்தை அரசிடம் அளித்தார். மேட்டூர் அணையைக் கட்டிய கர்னல் எல்லிஸ் கிருஷ்ணா நதி நீரைக் கால்வாய் மூலம் தெற்கே கொண்டுவந்து பாசன வசதிக்குப் பயன்படுத்தும் வகையில் மற்றொரு திட்டத்தை அளித்தார். 1947-ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசு கிருஷ்ணா – பெண்ணாறு இணைப்புத் திட்டத்தைப்பற்றி விரிவான ஆய்வு அறிக்கையைத் தயாரிக்க ஆணையிட்டது. பிறகு 1951-ஆம் ஆண்டில் இத்திட்டம் திருத்தி அமைக்கப்பட்டு மற்றொரு திட்டம் அரசிடம் அளிக்கப்பட்டது. சென்னை மாவட்டம் மதுராந்தகம் ஏரிவரை கிருஷ்ணா பெண்ணாறு இணைப்புக் கால்வாயை வெட்டுவதற்கு வழிசெய்யும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டம் நிறைவேறினால் 36 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். 16 இலட்சம் டன் உணவு உற்பத்தியாகும். கூடுதலாக 250 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும். 1954-ஆம் ஆண்டில் சென்னை மாகாணம் மொழிவாரியாகப் பிரிவினை செய்யப்பட்ட பிறகு இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

பாழான பாலாறு

வடாற்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களில் உள்ள சுமார் 2 இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் பாலாற்றின் மூலம் பாசனம் செய்யப்படுகிறது. இராணிப் பேட்டைக்கு அருகில் ஓர் அணை கட்டப்பட்டு இந்த அணையிலிருந்து 317 ஏரிகளுக்குத் தண்ணீர் கொண்டுபோகப்பட்டு பாசனத்திற்கு அளிக்கப்படுகிறது.

பாலாறு அணைப்பாசனம் மிகப் பழமையானது. கி.பி.1850க்கு முன்னால் மண் அணையும் பிறகு கல் மற்றும் மண் அணையும் அமைக்கப்பட்டு முறையான பாசன வசதிகள் அளிக்கப்பட்டன.

ஆனால் 1920-ஆம் ஆண்டுகளில் தொடக்கத்தில் பாலாற்றில் வரும் நீர் குறைந்தது. மைசூர் அரசு புதிய ஏரிகளை அமைத்து பாலாற்று நீரைத் தேக்கிக் கொண்டதால்தான் ஆற்றில் நீர் வரத்துக் குறைந்தது எனத் தமிழக விவசாயிகள் புகார் செய்தனர்.

1892-ஆம் ஆண்டு சென்னை அரசும் மைசூர் அரசும் செய்து கொண்ட உடன்பாட்டின்படி சென்னை மாகாண அரசின் சம்மதமில்லாமல் மைசூர் அரசு எத்தகைய புதிய அணைகளையோ நீர்த் தேக்கங்களையோ அமைக்கக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. எந்தெந்த ஆறுகளில் இவ்வாறு செய்யக்கூடாது என்பதற்கான பட்டியலில் பாலாறும் இடம் பெற்றுள்ளது. ஆனால் இதை மீறி பல ஏரிகளைப் புதிதாக அமைத்து பாலாற்று நீரை மைசூர் அரசு தேக்கிக்கொண்டது.

இதுகுறித்து சென்னை அரசு மைசூர் அரசிடம் புகார் கூறியதோடு நின்றுவிட்டது.

1954-ஆம் ஆண்டில் மீண்டும் இப்பிரச்சினையை வடாற்காடு செங்கற்பட்டு மாவட்ட விவசாயிகள் எழுப்பியும் எந்தப் பயனும் இல்லை.

பாலாற்று நீரினால் பாசனம் செய்யப்படும் நிலத்தின் பரப்பளவு சுமார் 3,75,000 ஏக்கரில் இருந்து 2,45,000 ஏக்கராகக் குறைந்துவிட்டது. அதாவது சுமார் 1,30,000 ஏக்கர் நிலம் பாசன வசதியை நிரந்தரமாக இழந்துவிட்டது.

பிரிட்டிஷ் ஆட்சி சாதனைகள்

அன்னியராக இருந்தாலும் ஆங்கிலேயர்கள் தமது ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் பாசன வசதிகளை மேம்பாடு அடையச் செய்வதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இயற்கையாகக் கிடைக்கும் நதிநீர் வளத்தினை நன்கு பயன்படுத்தி மக்களுக்கு அதிகபட்ச நலன் கிடைக்கச் செய்வதைப் பற்றி மட்டும் சிந்தித்துச் செயற்பட்டனர். பிரதேச உணர்வுகளின் அடிப்படையில் அவர்கள் சிந்திக்கவில்லை.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான் தமிழ்நாட்டில் கீழ்க்கல்லணைத் திட்டம், கோரையாறு திட்டம், பாலாறு அணைத் திட்டம், சேத்தியாத்தோப்பு அணைத்திட்டம், காளிங்கராயன் அணைத்திட்டம், செய்யாறு அணைத்திட்டம், திருக்கோவிலூர் அணைத் திட்டம், பொய்னி அணைத்திட்டம், வெலிங்டன் அணைத்திட்டம், பெரியாறு அணைத்திட்டம், மேட்டூர் அணைத்திட்டம், பாபநாசம் அணைத்திட்டம், பைகாரா அணைத்திட்டம் ஆகியவை நிறைவேற்றப் பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  1. சுதந்திர இந்தியாவில் பாசனமும் – பிரச்சினைகளும்

நாடு விடுதலைபெற்ற பிறகு 1956-ஆம் ஆண்டில் மொழிவாரியாக மாநிலங்கள் திருத்தி அமைக்கப்பட்டன. தமிழ்ப்பகுதிகள் சில அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டதன் விளைவாக தண்ணீர் தகராறுகள் உருவாகிவிட்டன.

தமிழர்களே பெரும்பான்மையாக வாழும் தேவிகுளம் – பீர்மேடு தாலுக்காக் களிலிருந்து பெரியாறு, பம்பையாறு ஆகியவை உற்பத்தியாகின்றன. தமிழக அரசினால் கட்டப்பட்ட பெரியாறு அணை தேவிகுளம் தாலுக்காவில்தான் உள்ளது. சேரன் செங்குட்டுவன் கட்டிய கண்ணகி கோவிலும் இங்குதான் அமைந்துள்ளது. மதுரை மாவட்டம் உத்தமபாளையம் தாலுக்கா தேவிகுளம் தாலுக்காவை ஒட்டி அமைந்துள்ளது.

தேவிகுளம் – பீர்மேடு தாலுக்காக்களை கேரளம் அபகரித்துக்கொண்தன் விளைவாக பெரியாறு அணை அவர்கள் வசம் போயிற்று. பெரியாறு நீர்ப்பிரச்சினை உருவாக்கப் பட்டுவிட்டது.

1963-ஆம் ஆண்டில் பெரியார் அணை பலவீனமாக இருக்கிறது என்ற கூக்குரலை “மலையாள மனோரமா” இதழ் முதன்முதலாக எழுப்பியது.

இதன் விளைவாக 1963-ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் இந்த அணையைப் பார்வையிட குழு ஒன்றை அனுப்பியது. மத்திய நீர்ப்பாசனக் கமிஷன் இயக்குநர், தமிழக-கேரள அரசுகளின் தலைமைப் பொறியாளர்கள் ஆகியோர் அடங்கிய இந்தக் குழு அணையினைப் பார்வையிட்டு இந்த அணை மிக நல்ல நிலையில் இருப்பதாக அறிவித்தது.

அதன்பின் 1978-ஆம் ஆண்டு மீண்டும் இந்த அணைபற்றிய புகாரினைக் கேரள அரசு எழுப்பியது. இதனையொட்டி மத்திய பாசனக் கமிஷனைச் சேர்ந்த அதிகாரி ஒருவரை மத்திய அரசு அனுப்பிவைத்தது. அவர் அளித்த அறிக்கையில் இந்த அணை நல்ல நிலையில் இருக்கிறது என்றாலும் கேரள மக்களின் அச்சத்தினைப் போக்கு வதற்காக இந்த அணையின் நீரின் மட்டத்தை 152 அடியிலிருந்து 145 அடியாகக் குறைக்க வேண்டும் என்று கூறினார்.

தமிழக அரசு இதனை ஏற்றுக்கொண்டு அணையின் நீர் மட்டத்தை 145 அடியாகக் குறைத்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தப் பிரச்சினையைக் கேரள அரசு எழுப்பியது.

1979-ஆம் ஆண்டில் மத்திய பாசன கமிஷன் தலைவர் டாக்டர் கே.சி. தாமஸ் என்பவர் இந்த அணையைப் பரிசீலனை செய்தார். இந்த அணையினால் உடனடியாக ஆபத்து எதுவும் இல்லையென்றும் இந்த அணையை மேலும் பலப்படுத்த சில யோசனைகளையும் அவர் கூறினார். இந்த ஆலோசனைகளை நிறைவேற்றும்வரை அணையின் நீர்மட்டம் 136 அடியாகக் குறைக்க தமிழகம் ஒப்புக்கொண்டது.

இந்த ஆலோசனைகள் அனைத்தையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டு தனது செலவில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது. கேரள அரசின் பல தடைகளைத் தாண்டி மெதுவாக வேலைகள் நடந்தன. பெரியாறு அணையின் 152 அடி அளவுக்கு நீர்த் தேக்கிவைக்கும் விதத்தில் பலப்படுத்தும் பணி பல ஆண்டு களாகப் பல்வேறு தடைகளுக்கிடையே செய்யப்பட்டு வருகிறது. இதில் அணைச் சுவரை 9 அடி உயர்த்தி 145 அடி நீர் தேக்கி வைக்கும் விதத்தில் பலப்படுத்தப்பட்டுள்ளது. தென் மேற்குப் பருவமழைக் காலத்தில் பெரியாறு அணையில் இனி 145 அடி நீர் தேக்கிவைக்க முடியும்.

பெரியாறு அணைப்பகுதியில் பூகம்பம், நில அதிர்வு உள்ளிட்டவை ஏற்பட்டால் அதை முன்கூட்டியே அறிந்துகொள்ள வசதியாக அணையில் 60 இடங்களில் நவீனக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

ரூ.12.5 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு பெரியாறு அணையைப் பலப்படுத்திய பிறகும் கேரள அரசின் பிடிவாதம் தளரவில்லை. அணையின் நீர்மட்டத்தை பழைய நிலைக்கு உயர்த்த மறுக்கிறது.

இந்த அணையில் உள்ள நீர்மட்டம் 152 அடியாகும். இதில் 104 அடிக்கு மேல் உள்ள நீரைத்தான் தமிழகம் பயன்படுத்திக்கொள்ள முடியும். 104 அடிக்குக் கீழே உள்ள நீர் சுரங்கப்பாதைக்குக் கீழே உள்ள நீர் ஆகும். இதைத் தமிழகம் பயன்படுத்தமுடியாது. 152 அடி உள்ள நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைத்ததினால் 10.5 டி.எம்.சி ஆக உள்ள நீர் 6 டி.எம்.சி ஆகக் குறைந்து மொத்தத்தில் 4.5. டி.எம்.சி. இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டிற்கு மூன்று முறை இந்த அணையில் 4.5 – 13.5 டி.எம்.சி. நீரைத் தமிழகம் இழக்கிறது. இதன் மூலம் மதுரை, பசும்பொன், இராமநாதபுரம் மாவட்டங்களில் 80 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதியை இழந்துவிட்டது. இந்தத் தண்ணீர் கேரளத்தில் உள்ள இடிக்கி அணைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் கடந்த பத்தாண்டுகளில் 135 டி.எம்.சி.க்கு மேற்பட்ட நீரைத் தமிழகம் இழந்திருக்கிறது. 80 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பத்தாண்டு காலமாகக் தரிசாகக் கிடக்கின்றன. இடிக்கிக்குக் கொண்டு செல்லப்படும் இந்தத் தண்ணீரில் இருந்து கேரளம் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. 13.5 டி.எம்.சி. தண்ணீர் மூலம் 310 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இந்த மின்சாரத்தைச் சுமார் 9 கோடி ரூபாய் கொடுத்து தமிழ்நாடு பெறுகிறது.

ஆக மொத்தத்தில் கடந்த பல்லாண்டு களாக மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களில் 80 ஆயிரம் ஏக்கர் நிலம் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். கடுமையான வறட்சி உள்ள ஆண்டுகளில் இம்மாவட்டங்களில் குடிநீருக்குக் கூடப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

கேரள அரசு கீழ்க்கண்ட உள் நோக்கங்களுடன் செயல்படுகிறது :

அ.   1886-ஆம் ஆண்டு செய்யப்பட்ட இந்த ஒப்பந்தப்படி பெரியார் அணையில் உள்ள தண்ணீர் முழுவதும் தமிழ்நாட்டுக்குச் சொந்த-மானது. இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கது. எனவே, இந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டும் என கேரளம் முனைகிறது.

ஆ. பெரியார் அணை அபாய நிலையில் இருப்பதாகப் புரளியைக் கிளப்பி இந்த அணைக்குப் பதில் புதிய அணையைக் கட்டவேண்டும் என்று கேரளம் கோரிக்கை விடுத்துள்ளது. புதிய அணை கட்டப்படுமானால் புதிய ஒப்பந்தத்தைத் தான் செய்யவேண்டி யிருக்கும். புதிய ஒப்பந்தத்தைத் தனக்குச் சாதகமான முறையில் செய்துகொள்ள முடியும் என்று கேரளம் நினைக்கிறது.

இ.   புதிய அணை கட்டுவதனால் சுமார் 80 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் செலவாகும். அணையைக் கட்டுமிடம் கேரள மாநில மாதலால் அவர்கள்தான் கட்டுவார்கள். வேலைவாய்ப்புக் கேரள மக்களுக்குக் கிட்டும். பணம் மட்டும் தமிழகம் கொடுக்க வேண்டியதாக இருக்கும்.

ஈ.   அணையின் மட்டம் 152 அடியாக இருந்ததை 136 அடியாகக் குறைக்கச் செய்ததின் மூலம் இடுக்கி அணைக்கு அந்த உபரிநீர் செல்வதற்கு வழி வகுக்கப்பட்டுவிட்டது. மேலும் பெரியார் அணை என்ன நோக்கத்துடன் கட்டப்பட்டதோ அந்த நோக்கம் சிதைக்கப்பட்டாகிவிட்டது. மதுரை-இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளுக்கு நீர் வழங்கவே இத்திட்டம் வகுக்கப்பட்டது. அந்த நோக்கம் பாழ்படுத்தப்பட்டுவிட்டது.

குதிரை கீழே தள்ளியது மட்டுமல்ல;
குழியையும் பறித்தது

என்பதைப் போல பெரியார் உடன்பாடு செல்லத்தக்கதல்ல என்று கூறிவந்த கேரளம் பெரியார் தண்ணீருக்கு விலைபேசத் தொடங்கியுள்ளது.

“கேரளமும் பன்மாநில நதிநீர் உடன்பாடுகளும்” என்னும் தலைப்பில் திருவனந்தபுரத்தில் 23-3-97 அன்று நடைபெற்ற கருத்தரங்கைத் தொடக்கிவைத்துப் பேசிய கேரள ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சியின் முக்கியதலைவர்களில் ஒருவரான வி.சி. அச்சுதானந்தன் “பெரியார் அணையில் இருந்து சட்டபூர்வமற்ற முறையில் தமிழ்நாடு தண்ணீரைத் திருப்பிக்கொண்டு செல்வதாகக்” குற்றம் சாட்டினார். “இதைத் தடுக்கவேண்டுமானால் இந்த அணையின் மீதுள்ள கட்டுப்பாட்டினையும், அதை நிர்வகிப்பதற்கான அதிகாரத்தையும் கேரள அரசு எடுத்துக்கொள்ளவேண்டும்” என்று அவர் வற்புறுத்தினார். “ தான் பெறும் தண்ணீருக்குத் தமிழகம் விலை கொடுப்பதற்குத் தயாராக இருந்தாலொழிய கேரளம் அதற்குத் தண்ணீர் தராது. விலை கொடுக்காமல் தண்ணீரைத் திருப்பிக்கொண்டு போவது மோசடிக் குற்றமாகும்” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்தக் கருத்தரங்கில் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டி.தாமஸ் என்பவர் பேசும்போது “பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத்தின்கீழ் தமிழகம் கொண்டு செல்லும் தண்ணீரின் சரியான அளவு கணக்கிடப் படவில்லை” என்றும் குற்றம் சாட்டினார். “பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் செய்து கொள்ளப்பட்ட பெரியார் அணை உடன்பாடு பற்றி அரசாங்க அட்வகேட்-ஜெனரல்கள் சட்டரீதியான ஆலோசனை வழங்கத் தவறிவிட்டார்கள்” என்றும் அவர் குறை கூறினார். இந்தக் கருத்தரங்கை முடித்துவைத்துப் பேசிய பாசனத்துறை அமைச்சர் பேபி ஜான் பேசும்போது “பெரியார் அணையில் அதிகப்படியான மதகுகளை அமைக்கும் வேலையைத் தமிழகம் துரிதப்படுத்தவேண்டும்” என்று வற்புறுத்தினார். இதை உடனடியாகச் செய்தாகவேண்டும் என்று பொறியியல் நிபுணர்கள் ஆலோசனை கூறியிப்பதாகவும் அவர் தெரிவித்தார். பெரியாறு அணையிலிருந்து மேலும் அதிகப்படியான நீரை இடுக்கி அணைக்கு கொண்ட போவதற்காகவே கேரளம் இவ்வாறு கூறுகிறது.3

பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம்

பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்டத்திலும் கேரளம் பிரச்சினைகளை ஏற்படுத்திவருகிறது. 1970-ஆம் ஆண்டி லிருந்து 1993-ஆம் ஆண்டுவரை சுமூகமாகச் செயற்பட்டு வந்த இந்தத்திட்டத்தின் எதிர் காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

கோவை மாவட்டம் ஆனைமலையின் வடபகுதியில் பாலாறு, ஆழியாறு, உப்பாறு ஆகியவையும், கீழ்ப்பகுதியில் அமராவதியும், தெற்குப் பகுதியில் நீராறும் மேற்குப் பகுதியில் சோலையாறு, பரம்பிக்குளம் ஆகியவையும் உற்பத்தியாகின்றன. இந்த ஆறுகள் அனைத்தும் தமிழ்நாட்டில் உற்பத்தியானாலும் மேற்கு நோக்கிப் பாய்ந்து கேரள மாநிலத்தில் ஓடி அரபிக்கடலில் கலக்கின்றன. இந்த ஆற்று நீரில் சிறிதளவு மட்டுமே தமிழகம் பாசனத்திற்குப் பயன்படுத்தி வந்தது. இந்த ஆறுகளின் நீரைப் பயன்படுத்துவது பற்றி 1921-ஆம் ஆண்டில் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டது. 1947-ஆம் ஆண்டில் அத்திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட்டது. 1955-ஆம் ஆண்டில் பொதுப்பணித்துறைத் தலைமைப் பொறியாளர் ஆனந்தராவ் இத்திட்டம் பற்றி மீண்டும் ஆய்வு நடத்தி தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்தார்.

தமிழக முதலமைச்சராக இருந்த காமராசர் அவர்களும் கேரள மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்களும் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் பற்றி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உடன்பாட்டினை 1958-ஆம் ஆண்டில் செய்துகொண்டார்கள். ஆனைமலை-யில் உற்பத்தியாகி கேரள மாநிலத்திற்குள் பாய்ந்து ஓடும் பல நதிகளின் நீரை இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவாகப் பயன்படுமாறு வகுக்கப்பட்ட திட்டம் இத்திட்டம் ஆகும். இத்திட்டத்தின்கீழ் 8 அணைகள் கட்டப்பட்டன. இந்த அணைகளின் மூலம் தமிழ்நாட்டிற்கு 30.5 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கிறது.

கோவை, பெரியாறு மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளுக்கு இத்திட்டம் பெரும் பயன் அளித்து வருகிறது. 1970-ஆம் ஆண்டிலிருந்து 1993-ஆம் ஆண்டுவரை பிரச்சினை ஏதுமின்றி இத்திட்டம் செயற்படுத்தப்பட்டது. இதன் மூலம் சுமார் 4,20,000 ஏக்கருக்குப் பாசன வசதி அளிக்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திட்டம் குறித்து இரு மாநிலங்களின் பிரதிநிதிகளும் மறு பரிசீலனை செய்து கொள்வது பற்றி அதிகாரிகள் மட்டத்திலும், அமைச்சர்கள் மட்டத்திலும் பேச்சுவார்த்தை கள் நடைபெற்றன. இப்பேச்சுவார்த்தைகளில் அரசியல் ரீதியான தலையீடு உருவாக்கப் பட்டது. பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத்தில் கேரள மாநிலத்தில் அநீதி இழைக்கப்பட்டு இருப்பதாகக் கேரள சட்டமன்றத்தில் ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த கே. கிருஷ்ணகுட்டி என்பவர் புகார் கூறினார். கேரளத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்பாடுகளை தமிழகம் மீறியிருப்பதாகவும் அதுபற்றி ஆராய சட்டமன்றக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தினார். இதற்கிணங்க கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பி.எம்.ஜெகப் தலைமையில் 14 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. 1994-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தக் குழு தனது அறிக்கையைக் கேரள அரசிடம் அளித்தது. “தமிழக அரசு உடன்பாடுகளை மீறி சட்டவிரோதமான முறையில் அதிக அளவு நீரை எடுத்துச்செல்வத hக” இந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் குற்றச் சாட்டில் கொஞ்சமும் உண்மை இல்லை என்பதை ஆதாரபூர்வமாகத் தமிழக அரசு எடுத்துக்காட்டியது.

கேரளம், தமிழகம் ஆகியவற்றைச் சேர்ந்த நீர்ப்பாசனத்துறை மற்றும் மின்சாரத்துறை தலைமைப் பொறியாளர் களைக் கொண்ட “நீர் கண்காணிப்புக் கூட்டுக்குழு” அமைக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலைமையில் இக்குழுவின் கண்காணிப்பை மீறி தமிழகம் தனது பங்கிற்கு அதிமான தண்ணீரைக் கொண்டுசெல்ல வழியில்லை என்பதையும், கடந்த 20 ஆண்டுகளில் ஒருமுறை கூட கண்காணிப்புக் குழுவில் கேரள அரசு இத்தகையப் புகாரை எழுப்பவில்லை என்பதையும் தமிழக அரசு சுட்டிக்காட்டியது. ஆனாலும் கேரள அரசு தொடர்ந்து பிடிவாதம் காட்டி வருகிறது.

பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத்தை நிறைவேற்ற 138 கோடி ரூபாய்கள் தமிழக அரசு செலவளித்துள்ளது. இத்திட்டச் செலவில் கேரள அரசின் பங்கு எதுவும் இல்லை. ஆனால் இப்போது பரம்பிக்குளம் திட்டப்பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் ஒப்படைக்கவேண்டும் என்றும் கேரள அரசு வற்புறுத்துகிறது. இத்திட்டத்திற்காகக் கட்டப்பட்டுள்ள 226 கட்டிடங்களையும் உடனடியாகத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேரளம் கூறுகிறது. மேலும் இதற்கான நில அனுமதிக் கட்டணத்தையும் தமிழகம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறது. அதேவேளையில் தமிழ்நாட்டில் கேரள அரசினால் அமைக்கப்பட்ட கட்டிடங்களுக்கு வாடகை தரவோ, மின்கட்டணம், தண்ணீர்க் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்தவோ கேரளம் மறுக்கிறது.

நெய்யாற்றுத் திட்டம்

கேரள நதிகளிலொன்றான நெய்யாற்றின் குறுக்கே முதலாவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் ஒரு அணையைக் கட்டி அதன் வலப்புறக்கால்வாய் வழியாக அம்மாநிலத்தில் 15000 ஏக்கர் நிலத்திற்குப் பாசன வசதி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் இடப்புறக்கால்வாய் வெட்டப்பட்டு 19,100 ஏக்கர் நிலத்திற்குப் பாசன வசதி அளிக்கப்பட்டது.

1956-ஆம் ஆண்டு குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த பிறகு இடதுபுறக்கால்வாய் பாசன நிலத்தில் 9200 ஏக்கர் தமிழ்நாட்டிற்குள் அமைந்தன. இக்கால்வாயில் விநாடிக்கு 150 கன அடி தண்ணீர் விடப்படவேண்டும். ஆனால் தற்போது 80 முதல் 100 கனஅடி தண் ணீரே விடப்படுகிறது. சில ஆண்டுகளில் சிறிதளவு தண்ணீர்கூட விடப்படுவதில்லை. தங்களுக்கே தண்ணீர் போதாமல் இருப்பதால் குமரி மாவட்டத்திற்குத் தண்ணீர்தர இயலவில்லை என கேரள அரசு சமாதானம் கூறுகிறது. குமரிமாவட்டம் திருவிதாங்கூர், சமஸ்தானத் தோடு இணைந்திருந்தபோது தவறாமல் தண்ணீர் தந்த கேரள அரசு அம்மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த பிறகு தண்ணீர்தர மறுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கிடப்பில் போடப்பட்ட திட்டம்

மேற்குநோக்கி பாயும் நதிகளின் உபரிநீரைக் கிழக்கே திருப்புவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய ஒரு தொழில்நுட்பக் குழுவை 1976-ஆம் ஆண்டில் மத்திய அரசு அமைத்தது. அக்குழுவிற்குத் தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமான சில ஆலோசனைகளைத் தமிழக அரசு சமர்ப்பித்தது. இணைக்கப் பட்டுள்ள அட்டவணையில் இக்குறிப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன. ஆனால் கேரள அரசோ ஏற்கனவே இரு மாநிலங்களுக் கிடையே ஒப்பந்தம் அமுலில் உள்ள ஆறுகளைத் தவிர மற்ற ஆறுகளைப்பற்றி மட்டும்தான் இத்தொழில்நுட்பக் குழு பரிசீலனை செய்து உபரி நீரைக் கணக்கிடவேண்டும் என்று வலியுறுத்தியது. 1977-இல் பாரதப் பிரதமர் முன்னிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதலமைச் சர்கள் மாநாட்டில் இக்கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன்படி, வாலியாறு, பெரியாறு, படுகைகளை நீக்கி மற்ற ஐந்து ஆற்றுப் பகுதிகளே இக்குழுவின் பரிசீலனையில் உள்ளன. மேற்கு முகமாக ஓடும் நதிகளின் மிகை நீரை கிழக்கே திருப்புவதற்காக ஏற்கனவே நிறை வேற்றப்பட்டிருக்கும் திட்டங்களிலும் பேச்சுவார்த்தைக் கட்டத்தில் இருக்கும் திட்டங்களிலும் உருவாகியுள்ள பிரச்சனைகளைத் தொகுத்துத் தந்துள்ளோம். அவை வருமாறு:-

ஆரணி அணைப் பிரச்சினை

ஆரணி ஆற்றுப்பாசனத்தில் உள்ள பெரும்பகுதியான நிலங்கள் தமிழகத்தில் உள்ளன. மாநில பிரிவினைக்குப் பிறகு ஆரணியாறு அணை இருக்கக்கூடிய இடம் ஆந்திராவிற்குப் போய்விட்டது. இதன் விளைவாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 22 கிராமங்களில் உள்ள 13,000 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன வசதிகளைப் பிரித்துவைக்கக்கூடாது என்பதை இரு மாநில அரசுகளும் மத்திய அரசும் ஒப்புக்கொண்டு இருக்கின்றன. ஆந்திராவில் உள்ள 13 கிராமங்களின் வசதிக்காக ஆரணி அணைப்பகுதி அளிக்கப்பட்டது. ஆரணியாறு அணைப்பகுதியையும் 35 கிராமங்களையும் தமிழ்நாட்டுடன்தான் இணைத்து இருக்க வேண்டும். கிராமத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டால்தான் ஆரணி ஆற்றுப் பகுதி ஆந்திராவிற்குப் போய்விட்டது. பிர்க்காவை அடிப்படையாகக் கொண்டு பிரிவினை செய்திருந்தால் இந்தப் பகுதி தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும். சித்தூர், திருத்தணி, நகரி, சத்தியமேடு ஆகிய பிர்காக்கள் தமிழ்நாட்டிற்குக் கிடைத்திருக்கும்.

மேற்கு நோக்கி பாயும் நதிகள் – சாத்தியமான திருப்பும் திட்டங்கள்

வரிசை

எண்

 

 

 

 

படுகையின்

பெயர்

மொத்த

நீர்பிடிப்பு

பரப்பு

ச.மைல்

படுகையின்

மொத்த

நீர்வரவு

டி.எம்.சி.

படுகையின்

உள்ள

உபரிநீர்

டி.எம்.சி.

கிழக்கு

நோக்கித்

திருப்பக்

கூடிய

நீரின்

அளவு

டி.எம்.சி.

பாசன

வசதி

பெறக்

கூடிய

பரப்பு

(வ.ஏ.)

தமிழ்

நாட்டில்

பயன்பெறக்

கூடிய

மாவட்டங்கள்

  சாலியாறு படுகை            
1 பாண்டியாறு

புன்னம்புழா

மேயார் திட்டம்

1085 185.00* 159.3* 14.0 1.40 கோவை

பெரியார்

2 சோழாத்திப் புழா 3.0 0.30 பெரியார்
3 பன்சிஹல்லா

பெரியாறுபடுகை

0.5 0.05 பெரியார்
4 ஆனைமலையாறு 2.5 0.25 பெரியார்
5 இடுக்கி (பெரியாறு

நீர்வரத்தில் ஒரு

பகுதியைத்

திருப்புதல்

1736** 378.2** 321.0** 2.5 0.25 பெரியார்

மதுரை

இராமநாதபுரம்

6 கல்லாறு அணை 2.0 0.20 மதுரை
7 பாம்பாறு 763 222.8 190.5 26.0 2.60 இராமநாதபுரம்

திருநெல்வேலி

8 அச்சன்கோயில் ஆறு 446 76.00 62.9 9.0 0.90 திருநெல்வேலி
9 கல்லட ஆறு 600 76.00 43.7 15.0 1.50 திருநெல்வேலி
10 அட்டிங்கல்

(வாமனாபுரம்)

336 52.10 42.2 15.0 1.50 திருநெல்வேலி
11 கரமனா ஆறு 250 38.8 28.4
  மொத்தம் 5216 1028.9 848.0 82.0 8.20  

 * சாலியார் படுகை முழுவதையும் குறிக்கும் ** பெரியார் படுகை முழுவதையும் குறிக்கும்

இப்போது ஆரணி அணையிலிருந்து போதுமான அளவு தண்ணீர் தமிழக கிராமங்களுக்கு வருவதில்லை. தங்களுக்குப் போக மீதமுள்ள தண்ணீரையே தரமுடியும் என ஆந்திர அரசு கூறுகிறது.
* சாலியார் படுகை முழுவதையும் குறிக்கும் ** பெரியார் படுகை முழுவதையும் குறிக்கும்

காவிரிப் பிரச்சினை

1956-ஆம் ஆண்டில் மொழிவாரியாக மாநிலங்கள் திருத்தி அமைக்கப்பட்ட பிறகு கர்நாடகம் காவிரிப்பாசன வசதிகளை விரிவுபடுத்த விரும்பியது. கபினி, ஹேமாவதி, ஸ்வர்ணவதி அணைகளைக் கட்டத் திட்டமிட்டது. தனது நலன்களும் உரிமைகளும் இதனால் பாதிக்கப்படும் எனத் தமிழகம் எதிர்ப்புத் தெரிவித்தது.

எனவே 1968 முதல் 1970 ஆம் ஆண்டு வரை இருமாநிலங்களுக்கிடையே பேச்சுக்கள் நடந்தன. ஆனால் பிரச்சினை தீரவில்லை. பேச்சுக்கள் பயனளிக்காது என்பது திட்டவட்டமாகத் தெரிந்தபோதும்கூட நடுவர்மன்றத்தை அமைக்க இந்திய அரசு முன்வரவில்லை.

ஆகவே வேறுவழியின்றி 1971-ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்ட விவசாயிகள் சார்பில் இந்திய அரசையும், கர்நாடக அரசையும் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டது.

1972-ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா தலையிட்டு வழக்கைத் திரும்பப்பெறுமாறும் பேச்சுநடத்தித் தீர்வுகாண உதவுவதாகவும் கூறினார். அதை நம்பி வழக்குத் திரும்பப் பெறப்பட்டது. 1972-ஆம் ஆண்டில் மே மாதத்தில் 3-மாநில முதலமைச்சர்களின் பேச்சு மீண்டும் தொடங்கியது. 1924-ஆம் ஆண்டு உடன்பாட்டிற்கு இணங்க 50 ஆண்டுகள் முடிவடையும் காலமான 1974 நெருங்கிவிட்டதால் தேவையான புள்ளி விவரங்களைத் தொகுக்கக் “காவிரி உண்மை அறியும் குழு” ஒன்று அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இக்குழு தனது அறிக்கையை 1972-ஆம் ஆண்டு டிசம்பரில் அளித்தது. இதன் அடிப்படையில் 1973-ஆம் ஆண்டு இறுதியில் 3 மாநில முதலமைச்சர்களும் இந்தியப் பாசன அமைச்சர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தினர். பலமுறை பேச்சு நடத்தியபிறகு காவிரி பள்ளத்தாக்கு அதிகார அமைப்பு ஏற்படுத்தும் யோசனையை 3 மாநில முதல்வர்களும் ஒப்புக் கொண்டார்கள். அதை உடனடியாக அமைப்பதற்குப் பதில் இந்திய அரசு தானே தீர்வுகாண முயன்றதால் இந்த யோசனை கிடப்பில் போடப்பட்டது.

இதற்கிடையில் ஒருபுறம் பேச்சு நடத்திக்கொண்டே மறுபுறத்தில் கபினி, ஹேமாவதி, ஹேரங்கி அணைகளைக் கர்நாடகம் கட்டி முடித்துவிட்டது.

1990-ஆம் ஆண்டுவரை பலமுறை பேச்சுந டத்தியும் கர்நாடகம் எவ்வித உடன்பாட்டிற்கும் வரமறுத்தது. கீழ்க்கண்ட நோக்கங்களுடன் கர்நாடகம் செயல்பட்டது:

  1. ஹேமாவதி, கபினி, ஹேரங்கிப் பாசனக் கால்வாய் வேலைகள் முற்றிலுமாக முடியும்வரை பேச்சுவார்த்தைகளை இழுத்துக்கொண்டே போவது;
  2. கர்நாடகத்தில் தற்போது காவிரிப்பாசன நிலத்தின் பரப்பளவான 6.83 இலட்சம் ஏக்கராக இருப்பதைச் சுமார் 25 இலட்சம் ஏக்கராக உயர்த்துவது;
  3. தமிழகம் இருபோகம் சாகுபடி செய்வதைத் தடுத்து ஒரு போகத்திற்கு மட்டும் தண்ணீர் வழங்குவது;
  4. கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கும், தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணைக்கும் நடுவில் எந்த அணையும் இல்லை. கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பி வழிந்தாலும் இந்த இரண்டு அணைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் மழை பெய்தாலும் அவ்வளவு நீரும் மேட்டூருக்கு வந்த சேருகிறது. இதைத் தடுக்க மேட்டூர் அணைக்கு மேலே “மேகதாது” என்ற இடத்தில் புதிய அணையைக் கட்டித் தண்ணீரைத் தேக்கிக்கொள்வது. இதன்மூலம் தமிழகத்தின் ஒகனேகல் அணைத் திட்டத்தைத் தடுப்பது, மேகதாது திட்டத்தின் மூலம் மின்சாரம் உற்பத்திசெய்து அதைத் தமிழகத்திற்கு விற்பது;
  5. தனது தேவைபோக உபரி நீரைத் தமிழகத்திற்கு விற்பது. அதாவது தமிழகத்திற்கு உரிமையான காவிரி நீருக்குக் காசுகேட்பது.

கர்நாடகத்தின் இந்த உள்நோக்கங்களைத் தெரிந்துகொண்ட தமிழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 1990-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி இனிமேல் எந்தப் பேச்சுவார்த்தையிலும் தமிழக முதலமைச்சர் கலந்துகொள்ள மாட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்திய அரசின் சார்பில் வாதாடிய இணை சொலிசிடர் ஜெனரல் மேற்கொண்டும் பேச்சுநடத்த இந்திய அரசும் விரும்பவில்லை. உச்சநீதி மன்றத்தின் முடிவிற்கே இப்பிரச்சினையை விட்டு விடுவதாகத் தெரிவித்தார். எனவே, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா நடுவர் மன்றத்தினை ஒருமாத காலத்திற்குள் அமைக்கும்படி ஆணையிட்டார்.

உச்சநீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்று வதைத் தவிர வேறுவழி இந்திய அரசுக்கு இல்லை. எனவே, 1990-ஆம் ஆண்டு சூன் – 2ஆம் தேதி நடுவர் மன்றத்தை அமைத்து பிரதமர் வி.பி.சிங்., ஆணை பிறப்பித்தார். பம்பாய் உயர்நீதிமன்றத்தின் தலைமைநீதிபதி சித்தாதோஷ் முகர்ஜியைத் தலைவராகவும், அலகாபாத் நீதிமன்ற நீதிபதி எஸ்.டி. அகர்வாலா, பாட்னா உயர்நீதின்ற நீதிபதி என்.எஸ்.ராவ் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு இந்த நடுவர் மன்றம் அமைந்தது.

1991-ஆம் ஆண்டு சனவரி 5-ஆம் தேதி இடைக்கால நிவாரணம் கோரும் விண்ணப் பத்தினைத் தமிழகமும், புதுச்சேரியும் அளித்தன. நடுவர் மன்றம் இதனைத் தள்ளுபடி செய்தது. எனவே, தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகளின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இடைக்கால நிவாரணம் வழங்க நடுவர் மன்றத்திற்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, நடுவர்மன்றம் கூடி இப்பிரச்சினையை ஆராய்ந்தது. 1991-ஆம் ஆண்டு சூன் 21-ஆம் தேதியன்று நடுவர் மன்றம் கீழ்க்கண்ட இடைக்கால ஆணை வழங்கிற்று :

  1. இறுதி ஆணையை நடுவர் மன்றம் பிறப்பிக்கும் வரையில் இரு தரப்பினரும் அதைச் சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது;
  2. சூன் முதல் மே வரையிலான 12 மாதங்களுக்கு 205 டி.எம்.சி. நீரை மேட்டூர் அணைக்குக் கர்நாடகம் திறந்து விடவேண்டும்.

சூன் 6-ஆம் தேதி கர்நாடக சட்டமன்றமும் சட்டமன்ற மேலவையும் கூடி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை ஏற்க மறுத்துத் தீர்மானங்களை நிறை வேற்றின. கர்நாடகத்தில் உள்ள சகல கட்சிகளும் ஒன்று பட்டு ஏகமனதாக இந்தத் தீர்மானங்களை நிறைவேற்றின என்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்துடன் கர்நாடக அரசு நிற்கவில்லை. 1991-ஆம் ஆண்டு சூலை 25-ஆம் தேதியன்று காவிரிப்பாசனப் பாதுகாப்புச்சட்டம் என்ற பெயரில் அவசரச்சட்டம் ஒன்றினைப் பிறப்பித்தது. சூலை 27-ஆம் தேதியன்று இப்பிரச்சினையை உச்சநீதிமன்றத்தின் பரிசீல-னைக்குக் குடியரசுதலைவர் அனுப்பிவைத்தார்.

கர்நாடக அரசு பிறப்பித்த அவசரச் சட்டம் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தது.

நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையைக் கர்நாடக அரசு ஏற்க மறுப்பதைக் கண்டித்தும், அந்த ஆணையைக் கெஜட்டில் பிரசுரிக்காமல் இந்திய அரசு தாமதப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்திய இணை அமைச்சர் பதவியிலிருந்து வாழப்பாடி கே. இராமமூர்த்தி விலகினார்.

இதே கோரிக்கைகளை முன்வைத்து தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா சூலை 18-ஆம் தேதி உண்ணாநோன்பை மேற்கொண்டார்.

இதன் விளைவாக இந்திய அமைச்சர் சுக்லா கீழ்கண்ட அறிவிப்பைச் செய்தார். காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவைக் கண்காணிக்க ஒரு குழுவும்  (Monitoring Committee) அது நடைமுறைப்படுத்தப் படுகிறதா என்பதை ஆராய மற்றொரு குழுவையும் (Implementation Committee) அமைக்கப்படும் எனக்கூறினார். ஆனால் எதுவும் நடைபெறவில்லை.

உடனடியாகத் தமிழ்நாட்டிற்கு 11 டி.எம்.சி. நீரைத் திறந்து விடுமாறு நடுவர் மன்றம் பிறப்பித்த ஆணையைக் கர்நாடகம் மதிக்க மறுத்தது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. இப்பிரச் சினையில் உடனடியாகத் தலையிட்டு ஆவன செய்யுமாறு இந்தியப் பிரதமருக்கு உச்சநீதி மன்றம் ஆணையிட்டது. ஆனால் அவரோ 6 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிடுமாறு செய்துவிட்டுப் பாக்கி 5 டி.எம்.சி தண்ணீரைத் திறந்துவிடுவது பற்றி ஆராய நிபுணர் குழு ஒன்றை அமைத்துப் பிரச்சினையை ஆறப்போட்டார்.

1990-ஆம் ஆண்டு சூன் 2-ஆம் தேதி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து கர்நாடக அரசு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஒத்துழையாமைப் போக்கைக் கடைப்பிடித்தும், அதன் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டும் வருகிறது. 20 ஆண்டு காலமாக நடுவர் மன்றத்தை அமைக்கவிடாமல் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்திய கர்நாடகம் இப்போது நடுவர் மன்றத்தை முடக்கி வைப்பதில் வெற்றிபெற்றுவிட்டது.

கடந்த ஐந்தாண்டுகாலமாகச் செயற்பட்டு ஏறத்தாழ 75% விசாரணையை முடித்துவிட்ட நிலையில் நடுவர் மன்றத் தலைவர் நீதிபதி சித்தாதோஷ் முகர்ஜி பதவி விலகியிருக்கிறார். சொந்தக் காரணங் களுக்காகக் பதவி விலகல் என்று கூறினாலும் உண்மை அது அல்ல.

காவிரி நடுவர் மன்றத் தலைவர் சித்தாதோஷ் முகர்ஜியின் பதவி விலகலுக்கு பிரதமர் தேவேகௌடா கர்நாடக எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது தொடுக்கப்பட்டு இப்போது உச்சநீதிமன்றத்தின் முன் இருக்கும் வழக்குதான் காரணமாகும்.

1991-ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்ற நீதிபதிகள் தமிழகக் காவிரிப் பகுதிகளை நேரிடையாகப் பார்வையிட்ட வேளையில் சில கோயில்களுக்கு அவர்கள் வழிபடச் சென்றபோது பரிவட்ட மரியாதைகள் அளிக்கப்பட்டன. இதை தேவேகௌடா வேறுவிதமாகத் திரித்துக் குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில் விலை உயர்ந்த பரிசுகளைக் காவிரி நடுவர் மன்ற நீதிபதிகள் பெற்றிருப்பதால் அவர்கள் நடுநிலை தவறிவிட்டார்கள். எனவே, இவர்கள் வழக்கை விசாரிக்ககூடாது எனக் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேவேகௌடா வழக்குத் தொடுத்தார். கர்நாடகத்தில் அவர்கள் சுற்றுபயணம் செய்தபோது கோயில் மரியாதைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. கோவில் மரியாதைகள் அளிக்கப்படுவது விலை உயர்ந்த பரிசு அல்ல எனத் தமிழகத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எதிர்கட்சித் தலைவராக இருந்த தேவேகௌடா கர்நாடக முதலமைச்சரான பிறகும் இவ்வழக்கு திரும்பப் பெறப் படவில்லை. இப்போது அவர் பிரதமராகவும் ஆகிவிட்டார். இந்திய அரசுத் துறைகளில் ஒன்றாக “நீர் ஆதாரங்களும் அவற்றின் நிர்வாகமும்” என்பதன் கீழ் தான் நடுவர் மன்றம் இயங்கி வருகிறது.

எனவே நிர்வாகத் துறையில் தலைவராக உள்ள பிரதமர் நடுவர் மன்றத் தலைவரின் மீது தொடுத்துள்ள வழக்குத் தர்மசங்கடமான நிலையைத் தோற்றுவித்துள்ளது. இந்த வழக்கைத் தேவேகௌடா திரும்பப் பெறுவதன் மூலம்தான் இந்நிலையை மாற்ற முடியும். அதற்காக அறிகுறி தெரியாத காரணத்தினால்தான் சித்தாதோஷ் முகர்ஜி பதவி விலகியிருக்கிறார் என்பதுதான் உண்மை.

காவிரி நடுவர்மன்ற விசாரணை கிட்டத்தட்ட 75 சதவிகிதம் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் புதிய தலைவர் நியமிக்கப்பட்டு அவர் கடந்த 5 ஆண்டுகால நடவடிக்கைகளை முழுவதுமாகப் புரிந்து கொண்டு விசாரணையை நடத்தி முடிக்க மேலும் பல ஆண்டுகள் ஆகும். எனவே உச்ச நீதிமன்றத்தின்மூலம் இருக்கும் வழக்கைத் திரும்பப் பெறுமாறு தேவேகௌடாவை தமிழகம் ஒன்றுபட்டு நின்று வற்புறுத்த வேண்டும். இவ்வாறு செய்யா விட்டால் காவிரிப் பிரச்சினையில் பாதகமான விளைவுகள் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.

மற்றொரு பேரபாயமும் தலை தூக்கியுள்ளது. காவிரி நடுவர் மன்றம் 11 டி.எம்.சி தண்ணீரைத் திறந்துவிடுமாறு கடந்த ஆண்டு அளித்த ஆணையை ஆராய்வதற்காக அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் நியமித்த குழுவில் அங்கம் வகித்த கே. அலக் என்பவரை மத்திய திட்ட அமைச்சராகப் பிரதமர் தேவேகௌடா நியமித்திருக்கிறார். அரசியல் வாதியே அல்லாதவரும், தனது கட்சியையோ அல்லது கூட்டணிக் கட்சிகளைச் சாராதவரும் முன்னாள் துணைவேந்தருமான ஒருவரைத் தீடீரென இவ்வாறு நியமித்திருப்பது ஆழமான உள்நோக்கங்களைக் கொண்டதாகும்.

திட்டக் குழுவின் அனுமதி இல்லாமல் காவிரியிலும் அதன் உபநதிகளிலும் பாசனக்கட்டு மானங்களைக் கர்நாடகம் மேற்கொண்டு வருகிறது. இவற்றுக்குத் திட்டக்குழுவின் அனுமதியைப் பெறும் நோக்கத்துடன்தான் இவர் திட்ட அமைச்சராக்கப்பட்டிருக்கிறார்.

ஏற்கெனவே, நடுவர் மன்ற ஆணைப்படி அளிக்கப்படவேண்டிய பாக்கி 5 டி.எம்.சி தண்ணீரைத் தமிழகத்திற்கு அளிக்க வேண்டியதில்லை என இவர் அளித்த பரிந்துரையின் பெயரில்தான் அப்போதைய பிரதமர் ராவ் செயல்பட்டார். இவ்வாறு நடுவர் மன்ற ஆணையைப் புறக்கணித்துக் கர்நாடகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்ட ஒருவர் தீடீரெனத் திட்ட அமைச்சராக்கப்பட்டிருப்பது இந்தக் குற்றச்சாட்டிற்கு மேலும் வலுவூட்டுகிறது. திட்ட அமைச்சர் என்ற முறையில் தமிழக நலன்களுக்கு எதிராக அவர் செயல்படாதவாறு கண்காணிக்கவேண்டிய பொறுப்பு மத்திய அமைச்சரவையில் உள்ள 8 தமிழக அமைச்சர்களையும் சார்ந்ததாகும். அதை அவர்கள் உறுதியோடு செய்ய வேண்டும்.

கர்நாடகத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளின் விளைவாக 20 ஆண்டு காலமாகப் பெரும் பாதிப்பிற்கு உள்ளான தமிழகக் காவிரிப்பாசன விவசாயிகள் நடுவர் மன்றத்தின் மீது கடைசி நம்பிக்கை வைத்திருந்தார்கள். அந்த நம்பிக்கையிலும் மண்விழுந்துவிட்டது. இனி என்ன? என்ற கேள்விக்குறியுடன் அவர்கள் காத்திருக்கி றார்கள். தமிழக மக்கள் ஒன்றுபட்டு நின்று இந்த அநீதிக்கு எதிராகப் போராட முன்வராவிட்டால் அகண்ட காவிரி வறண்ட காவிரி ஆவதை யாரும் தடுக்க முடியாது.

உலகப்புகழ் பெற்ற வேளாண்மை விஞ்ஞானியான டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் காவிரி நடுவர்மன்றம் முன்பாக அளித்துள்ள சாட்சியம் மேற்கண்ட உண்மைகளை நிலைபடுத்துகிறது.

உலக நாடுகளால் மதித்துப் போற்றப் படும் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள் வேளாண்மை விஞ்ஞானப் பூர்வமான ஆதாரங்களையும் உண்மைகளையும் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அவற்றின் முக்கியப் பகுதிகளை கீழேத் தருகிறோம் :

“1991-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படித் தமிழ்நாட்டின் மக்கள் தொகையான 55.60 மில்லியனில் காவிரிப்படுகைப் பகுதியில் மட்டும் 16.85 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். கி.பி. 2001-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 65 மில்லியன்களை எட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதில் 20 மில்லியன் மக்கள் காவிரிப் படுகை பகுதியில் வாழ்வார்கள். கி.பி.2025-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மக்கள்தொகை 95 மில்லியன் எட்டக்கூடும். இதில் 29 மில்லியன் மக்கள் காவிரிப் படுகைப்பகுதியில் வாழ்வார்கள்.

1979-80-ஆம் ஆண்டுகளிலிருந்து தமிழ்நாட்டில் ஆற்றுநீர்ப் பாசனம் மூலம் விவசாயம் செய்யப்படும் பகுதிகளின் பரப்பளவு குறைந்து வந்திருக்கிறது. காவிரியில் வரும் தண்ணீரின் அளவு குறைந்ததின் காரணமாக இதன் நீரைக்கொண்டு விவசாயம் செய்யப்படும் நிலத்தின் பரப்பளவு 39.83 இலட்சம் ஹெக்டேரில் இருந்து 28.94 இலட்சம் ஹெக்டேராகக் குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் ஆற்று நீரைக் கொண்டு கால்வாய்கள் மூலம் பாசனம் செய்யப்படும் நிலப்பரப்பளவில் 85ரூ காவிரிப்படுகையில் உள்ளது. எனவே, காவிரி நதி என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு உயிரோட்டமான ஒன்றாகும்.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள காவிரிச் சமவெளிப் பகுதியில் உள்ள வண்டல் படிந்த மண்வளம் நெல்சாகுபடிக்கு மிகவும் ஏற்ற ஒன்றாகும். ஜுன் முதல் அக்டோபர் வரை இப்பகுதியில் செய்யப்படும் நெல் சாகு படியின் மூலம் அதிகபட்ச நெல்விளைச்சல் செய்யப்படுகிறது.

காவிரிச் சமவெளிப் பகுதியில் காவிரி, வெண்ணாறு ஆகிய இரு முக்கிய நதிகள் மற்றும் இவற்றிலிருந்து பிரிந்து செல்லும் 36 கிளைநதிகள் ஆகியவற்றின் மூலம் பாசனம் செய்யப்படும் விவசாய நிலம் மிகத் தொன்மையான ஒன்றாகும். சிந்துநதிப் பள்ளத்தாக்கில் பாசன விவசாயம் செய்யப்பட்ட அதே காலகட்டத்தில் காவிரிப் பாசன விவசாயமும் தொடங்கியது.

சாதகமான மண்வளம், நீர்வளம் ஆகியவற்றின் விளைவாகக் காவிரிச் சமவெளிப் பகுதியில் உள்ள விவசாயிகள் நீண்ட நெடுங்காலமான நெல்சாகு-படியில் திறமை வாய்ந்தவர்களாக விளங்குகிறார்கள்.

தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு நேரிடையான காவிரி நீரைப் பொறுத்தது ஆகும். மேலும் தமிழக மக்கள்தொகையில் 30ரூ மக்களின் வாழ்வுப் பாதுகாப்பு காவிரியைப் பொறுத்தே அமைந்திருக்கிறது. அத்துடன் குடிநீர்ப் பாதுகாப்பு, சத்துணவுப் பாதுகாப்பு, எரிபொருளைத் தரும் மரங்களின் பாதுகாப்பு, கடற்கரைப் பகுதியில் உள்ள மாமரத் தோப்புகள், சவுக்குத் தோப்புகள் போன்ற இயற்கை வளப்பாதுகாப்பு ஆகிய எல்லாமே காவிரியில் வரும் நீரைப் பொறுத்ததேயாகும்.

தஞ்சை மாவட்டத்தில் நெல்சாகுபடி செய்யப்படும் நிலத்தின் பரப்பளவு 1974-75-இல் 5.81 இலட்சம் ஹெக்டேராக இருந்தது. போதுமான தண்ணீர்வரத்து இல்லாமையால் 89-90-ஆம் ஆண்டில் 4.60 இலட்சம் ஹெக்டேராகக் குறைந்தது. இதன் விளைவாக 1974-75-ஆம் ஆண்டிலிருந்து 1989-90-ஆம் ஆண்டுகளுக்கு உட்பட்ட காலகட்டத்தில் நெல் உற்பத்தி 0.11 இலட்சம் டன் முதல் 8.70 இலட்சம் டன்கள் வரை குறைந்தது.

நெல் சாகுபடி என்பது பல சாதகமான அம்சங்களைப் பொறுத்ததாகும். சமபரப்பான வண்டல் மண்படிந்த நிலம், வற்றாத நீர்வளம், அபரிமிதமான சூரிய வெளிச்சம் மற்றும் தேவையானத் தட்ப வெப்ப அம்சங்கள் ஆகியவற்றைப் பொறுத்து நெல்சாகுபடி அமையும்.

ஆசிய நாடுகளில் ஆண்டுதோறும் இரு பருவங்களில் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. சூன் முதல் அக்டோபர் வரையுள்ள பருவ காலத்தில் செய்யப்படும் நெல் உற்பத்தியின் அளவு நவம்பர் பிப்ரவரி பருவகாலத்தில் செய்யப்படும் நெல் உற்பத்தியின் அளவைவிடக் குறைவாகவே உள்ளது. சூன் முதல் அக்டோபர் வரையிலான கால கட்டத்தில் மப்பும் மந்தாரமுமான பருவ நிலை இருப்பதும், பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருப்பதுமே இவற்றிற்குக் காரணங்களாகும். இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இதே நிலை நிலவுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் இதற்குமாறான சூழ்நிலை உள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும். தமிழ்நாட்டில் காவிரிச் சமவெளிப் பகுதியில் குறுவை பருவ காலத்தில் நெற்பயிருக்கு மிகவும் சாதமான சூழ்நிலை நிலவுகிறது. சூரிய வெப்பம் குறைந்தளவு 24.7 செல்ஷியஸ் ஆகவும் அதிகபட்சம் 37.1 செல்ஷியஸ் ஆகவும் உள்ளது. ஈரப்பதம் 68.85ரூ ஆக உள்ளது. இதன் விளைவாகப் பூச்சிகளும், நெற்பயிர்களுக்கு வரும் நோய்களும் மிகக்குறைவாகவே ஏற்படுகின்றன. இதனால், குறுவை சாகுபடி நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. சம்பா, தாளடி போன்ற பருவ காலங்களில் உற்பத்தி செய்யப்படும் நெல்லைவிட இது மிக அதிகமாகும். எனவேதான், காவிரிச் சமவெளி பகுதியில் உள்ள விவசாயிகள் ஜுன் – செப்டம்பர் – அக்டோபர் பருவ காலத்தைத் தேர்ந்தெடுத்துக் குறுவை சாகுபடி செய்து வருகிறார்கள். கடந்த 10 ஆண்டு காலத்தில் சராசரி நெல்விளைச்சலை எடுத்துக்கொண்டு பார்ப்போமானால் குறுவை சாகுபடியின் போது ஒரு ஹெக்டருக்கு 5.273 டன்களும், சம்பா சாகுபடியின்போது 3.761 டன்களும்,  தாளடி சாகுபடியின்போது 3.686 டன்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. காவிரிச் சமவெளிப் பகுதியில் ஆண்டுதோறும் 6.43 இலட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப் படுகிறது. இதில் 2 இலட்சம் ஹெக்டேரில் குறுவையும், 2.78 இலட்சம் ஹெக்டேரில் சம்பாவும் 1.65 இலட்சம் ஹெக்டேரில் தாளடியும் பயிரிடப்படுகின்றன. 1971-72-ஆம் ஆண்டிலிருந்து போதுமான நீர் காவிரியில் வராததால் குறுவை சாகுபடியும் அதற்குத் தக்கபடி தாளடி சாகுபடியும் குறைந்து கொண்டே வந்திருக்கின்றன.

இதன் விளைவாகத் தஞ்சை மாவட்டத்தில் நெல் உற்பத்திப் பெருமளவு பாதிக்கப்பட்டு விட்டது. 1974-75-ஆம் ஆண்டில் நெல் உற்பத்தி 0.11 இலட்சம் டன்களாகவும், 1989-90-ஆம் ஆண்டில் 8.70 டன்களாகவும் குறைந்துவிட்டது. காவிரிச்சமவெளி பகுதியில் உள்ள நிலம் களிமண்ணும் மணலும், களிமண்ணும் சுண்ணாம்பும் கலந்த நிலமாக அமைந்துள்ளது. இது நெல் உற்பத்திக்கு மிகவும் ஏற்ற நிலமாகும். பருத்தி மற்றும் புஞ்சைத் தானியங்கள் பயிரிடுவதற்கு இந்த நிலம் ஏற்றதல்ல. விவசாயிகள் வேறு தானியங்கள் பயிரிடுவதற்குச் செய்த முயற்சிகள் போதுமான பலனை அளிக்கவில்லை.

தஞ்சை மாவட்டத்தில் 1991-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்குப்படி 4.5 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் 0.38 மில்லியன் விவசாயிகளும், 0.83 மில்லியன் விவசாயத் தொழிலாளிகளும் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை என்பது விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. நெல் சாகுபடி நிலத்தின் பரப்பளவு குறைந்ததின் விளைவாக விவசாயத் தொழிலாளர்-களின் ஊதியம் குறைந்து அவர்களின் வாங்கும் சக்தி பாதிக்கப்பட்டது. ஒரு ஆண்டில் 7-8 மாதங்கள் வரை குறுவை, சம்பா, தாளடி பருவகாலம் நீடிப்பதால் விவசாயத் தொழிலாளர்களுக்குப் போதுமான அளவுக்கு வேலைவாய்ப்பு இருந்தது. நெல் சாகுபடிக்குப் போதுமான நீர் கிடைக்காமல் போனால் அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகள் ஏற்படுத்துவது சுலபமானது அல்ல.

நெல் உற்பத்திப் பாதிக்கப்பட்டதினால் கால்நடைகளுக்குத் தேவையான வைக்கோல் உற்பத்திப் பாதிக்கப்பட்டது.

காவிரி சமவெளிப் பகுதியில் நிலத்தடி நீரில் கடல்நீர் உள்ளேறிவராமல் தடுக்கவும், காவிரியில் தேவையான அளவு நீர்வரத்து இருக்க வேண்டும். தென்னாற்காடு, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் உள்ள வளமான மாந்தோப்புகள், காவிரியில் நீர்வரத்துப் போதுமான அளவு இல்லையென்றால் பெருமளவு பாதிக்கப்பட்டுவிடும். வடகிழக்குப் பருவ காலத்தில் வழக்கமாக வீசும் புயலிலிருந்து மக்களைப் பாதுகாப்பது இந்த மாந்தோப்புகளும் மற்ற காடுகளுமே ஆகும். இந்த மாந்தோப்புகளிலிருந்து கடற்கரையோர காடுகளின் மூலமும் பிரான்வகை மீன்கள் வளர்ச்சி செய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டில் காவிரிப்பாசன பகுதியில் இயற்கையான வளமான நிலத்தையும், சாதகமான சீதோஷ்ண சூழ்நிலையையும் பயன்படுத்தி நடைபெறும் நெல்சாகுபடி பாதிக்கப்படுவது என்பது தமிழ்நாட்டின் நலன்களை மட்டுமல்ல; இந்தியாவின் தேசிய நலன்களையே பாதிப்பதாகும். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 2 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் குறைந்த அளவு 10 மில்லியன் டன்கள் அரிசியைத் தமிழ்நாடு உற்பத்தி செய்தாகவேண்டும். இவ்வாறு செய்ய வேண்டுமானால் குறுவை, சம்பா, தாளடிப் பயிர்ச்சாகுபடி முறை தொடர்ந்து கையாளப்படவேண்டும். காவிரியில் போதுமான நீர் தர மறுப்பதன் மூலம் நெல் உற்பத்தி பாதிக்கப்படும். சொல்லொனாத் துயரம் மக்களுக்கு ஏற்படும். இதன் விளைவாகக் கிராமக்புறங்களிலிருந்து விவசாயிகள் நகர்புறங்களில் குடியேறிச் சுற்றுப்புறங்களைப் பாதிக்கும் அகதிகளாகப் பெருகுவார்கள்.”4

  1. எதிர்காலத் தமிழகத்தில் – பாசனமும் பிரச்சினைகளும்

“நீரின்றி அமையாது உலகு” எனக் கூறினார் வள்ளுவர். ஆனால் அவரைப் பெற்றெடுத்த தமிழகம் நீரின்றித் தவிக்கும் நிலை உருவாகிவிட்டது. உலக நீரியல் நிபுணர்கள் வகுத்துள்ள கொள்கைப்படித் தமிழகம் தண்ணீர்ப் பற்றாக்குறை நாடாக விளங்குகிறது.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நீரியல் நிபுணரான திருமதி மாலின் பேசன் மார்க் என்பவர் நீர் நெருக்கடி பற்றிய கொள்கை ஒன்றினை வகுத்தார். வறட்சிப் பகுதியில் உள்ள சுமாராக வளர்ச்சி அடைந்த ஒரு நாட்டில் தேவையான அளவுக்கு வாழ்க்கையை நிம்மதியுடன் நடத்த ஒரு நபருக்குக் குறைந்த அளவு எவ்வளவு நல்ல நீர் தேவைப்படும் என்பதை ஆராய்ந்து அவர் வகுத்தார். வீட்டு உபயோகத்திற்கும் உடல் நலமுடன் வாழ்வதற்கும் குறைந்தபட்சம் தலைக்கு நாள் ஒன்றுக்கு 100 லிட்டர் நீர் தேவைப்படும் என்று அவர் கருதினார். அதாவது தலைக்கு ஆண்டு ஒன்றுக்கு 365 கியூபிக் மீட்டர் நீர் தேவைப்படும். சுமாராக வளர்ச்சியடைந்த நாட்டில் திறமையான நீராண்மை இருந்தால் அந்நாடுகளில் இந்த அளவு என்பது 4 முதல் 20 தடவை அதிகமாக வேண்டி யிருக்கிறது என்பதையும் அவர் கண்டறிந்தார். விவசாயம், தொழில், மின் உற்பத்தி ஆகியவற்றின் தேவையையும் வைத்துப்பார்க்கும்போது மேற்கண்ட-வாறு அளவு உயருகிறது என்று அவர் கருதினார். இந்தக் கண்டுபிடிப்புகளின் விளைவாக த் திருமதி. பேசன் மார்க் நீர் நெருக்கடி, நீர்ப்பற்றாக்குறை பற்றிய திட்டவட்டமான கோட்பாடுகளை வகுத்தார்.

“ஒரு நாட்டில் ஆண்டுதோறும் தலைக்குக் கிடைக்கக்கூடிய நல்ல நீரின் அளவு 1,700 கியூபிக் மீட்டருக்கு அதிகமானால் அந்நாட்டில் எப்போதாவது தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். இந்த அளவு குறைவாகத் தண்ணீர் கிடைக்கும் நாடுகளில் பருவந்தோறும் அல்லது வழக்கமான முறையில் நீர் நெருக்கடி ஏற்படும். ஆண்டுதோறும் தலைக்கு 1000 கியூபிக் மீட்டர் நீருக்குக் குறைவாகக் கிடைக்குமானால் அந்த நாடுகளில் மிக மோசமான நீர்ப்பற்றாக்குறை ஏற்படும். இதன் விளைவாக அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும், மனிதர்களின் உடல் நலமும் பாதிக்கப்படும். இந்த அளவு 500 கியூபிக் மீட்டருக்கும் குறையுமானால் அந்நாடுகள் முழுமையான நீர்ப்பற்றாக்குறை நாடுகளாகும். மேற்கண்ட அளவுகள் துல்லியமானவை என்று கூறமுடியாது. ஆனால் ஓரளவு சரியான அளவுகோல் ஆகும்.

ஆண்டுக்குத் தலைக்கு 1000 கியூபிக் மீட்டர் நல்ல நீர் என்ற அளவு நீர்பற்றாக்குறையின் தன்மையைக் காட்டும் என்று உலக வங்கியும் மற்றும் நீரியல் நிபுணர்களும் மதிப்பிட்டுள்ளர். பசிபிக் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த பிளெய்க் என்னும் நிபுணர் சுமாரான வளர்ச்சி அடைந்த நாட்டில் நிம்மதியாக வாழ்க்கை நடத்துவதற்குக் குறைந்தபட்சத் தேவையாக இந்த அளவைக் கருதுகிறார்.

மேற்கண்ட பல்வேறு ஏற்றத் தாழ்வுகளை ஆராய்ந்து நீரியியல் நிபுணர்கள் உலகம் முழுவதிலும் நீர்த்தேவைக்கு அளவு கோலாகத் தலைக்கு 1,000 கியூபிக் மீட்டர் என நிர்ணயித்துள்ளனர். திருமதி. பேசன் மார்க் வகுத்த தலைக்கு 1,700 என்னும் அளவு மக்கள் தொகை அதிகரித்துவரும் நாடுகளுக்கு எச்சரிக்கை விளக்காகும். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்காத நீர் பற்றாக்குறை நாடுகள் நீர்ப்பஞ்சம் நிறைந்த நாடுகளாக எதிர்காலத்தில் மாறிவிடும்.”5

தமிழகத்தில் கி.பி.1901 ஆம் ஆண்டில் இருந்து 2001-ஆம் ஆண்டுவரையிலான புள்ளிவிவரங்களின் படி பார்த்தால் தமிழகத்தில் தலைக்குக் கிடைக்கும் தண்ணீரின் அளவு குறைந்துகொண்டே போகிறது. கீழ்க் கண்டுள்ள பட்டியல் அதற்குச் சான்று பகருகிறது :

தமிழகத்தில் கிடைக்கும் மொத்த நீரளவு

மேற்பரப்பு நீர் – 23597.84 மில்லியன் கன மீட்டர்
பிற மாநிலங்களிலிருந்து கிடைக்கும் நீர் – 12126.07     “
மொத்தம் – 35723.93     “
நிலத்தடி நீர் – 22432.50     “
ஆக மொத்தம் – 58156.43     “
பயன்படுத்த முடியாத நீரைக் கழித்த பிறகு – 46030.36     “

 

ஆண்டு மக்கள் தொகை தலைக்குக்

கிடைக்கும்

மேற்பரப்பு

நீர் (அ)

தலைக்குக்

கிடைக்கும்

மேற்பரப்பு

நீர்-நிலத்தடி

நீர் (ஆ)

தலைக்கு

(அ + ஆ)

பயன்படுத்த

முடியாத நீர்

1901 1,92,53711 1855 3020 2390
1911 2,09,03730 1709 2782 2202
1921 2,16,29080 1652 2689 2128
1931 2.34.71854 1522 2478 1961
1941 2,62,67,318 1360 2214 1752
1951 3,01,18066 1186 1931 1528
1961 3,36,87,024 1060 1726 1366
1971 4,11,19168 869 1415 1120
1981 4,84,08,077 738 1201 951
1991 5,58,58,946 640 1042 825
2001 6,42,37788 556 905 716

 திட்டம்

தமிழ்நாட்டில் நகர்புறங்களில் வாழும் மக்களுக்குத் தலைக்கு 100 லிட்டர் தண்ணீர் நாள்தோறும் அளிக்கவேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு ஒரு நாளைக்கு தலைக்கு 40 லிட்டர் தண்ணீர் அளிக்கவேண்டும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் குறைந்த பட்சம் தலைக்கு 150 லிட்டர் தண்ணீராவது அளிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. இந்த அளவுடன் ஒப்பிட்டால் தமிழகத்தின் திட்டம் மிகக் குறைவானதே ஆகும். ஆனால், இந்தக் குறைந்த அளவு நீரையாவது கொடுக்கமுடியுமா என்பது பெரும் கேள்வியாகும்.

தமிழ்நாட்டின் சகல நகரங்களிலும் குடிநீர்ப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவாகி வருகிறது. கி.பி.2000-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நகர மக்களின் எண்ணிக்கை என்பது மொத்த மக்கள் தொகையில் 60ரூ ஆக இருக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. இந்நிலையில் நகர்புறங்களில் வாழும் மக்களுக்கு நாள்தோறும் தலைக்கு 100 லிட்டர் நீர் கொடுக்க வேண்டுமானால், பாசனத்திற்கு அளிக்கபட்டு வரும் நீரில் இருந்துதான் கொடுக்க வேண்டியிருக்கும். அப்படி கொடுக்கும்போது விவசாயம் பெருமளவுக்கு பாதிக்கப்படும்.

தமிழகம் தொழில் துறையில் சிறந்து விளங்கவேண்டும் என அனைவரும் விரும்புகிறோம். அதற்கான சகல வாய்ப்புகளும் தமிழ்நாட்டில் உள்ளன. தமிழ்நாட்டில் இயற்கைவளம் குவிந்து கிடக்கிறது. பழுப்பு நிலக்கரி, இரும்புத்தாது, கிராபைட், ஜிப்சம், காமட், சுண்ணாம்புக்கல், உயர்ரக களிமண், மேக்னசைட், சிலிகா மணல், பெட்ரோல், இயற்கைவாயு போன்றவை ஏராளமாகக் கிடைக்கின்றன.

தமிழ்நாட்டின் காடுகளில் மூங்கில், தேக்கு, சந்தனக்கட்டைகள் ஏராளமாக உள்ளன. காபி, தேயிலை, ரப்பர், முந்திரி போன்ற பணப்பயிர்களும், தோட்டப் பயிர்களான பருத்தி, கரும்பு, மிளகாய் போன்றவைகளும் பயிரிடப்படுகின்றன.

தமிழ்நாட்டில் 64%க்கு மேற்பட்டோர் கல்வி அறிவு பெற்றவர்கள் ஆவார்கள். 15 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் இயங்கிவருகின்றன. தொழில் கல்வியில் தமிழகம் வெகுவாக முன்னேற்றம் அடைந்துள்ளது. 47 பொறியியல் கல்லூரிகளும், 124க்கும் மேற்பட்ட தொழிற்பள்ளிகளும் இதரத் தொழிற் கல்வி நிலையங்கள் 547ம் தமிழ்நாட்டில் உள்ளன. தொழில் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக் கழகம் தனியே அமைந்துள்ளது. இவற்றிலிருந்து பல்வேறு தொழில்களில் தேர்ச்சிபெற்ற மாணவர்கள் ஆண்டுதோறும் ஆயிரக் கணக்கில் வெளிவந்த வண்ணம் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி பெருகினால்தான் அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கமுடியும்.

மின்சாரப் பற்றாக்குறை இருந்தாலும் புதிய திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் சில ஆண்டு காலத்தில் மின்சாரத்தேவை நிறைவு செய்யப்பட்டுவிடலாம். ஆனால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு மேற்கண்டவையெல்லாம் இருந்தும் மிகவும் இன்றியமையாத ஒன்று இல்லை. அதுதான் தண்ணீர் ஆகும். விவசாயத்திற்கும் குடி நீர்க்கும் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் போது தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான நீரை எப்படி அளிக்கமுடியும் என்ற கேள்வி விசுவரூபம் எடுத்துள்ளது. தொழில் பெருகப்பெருக தண்ணீர்த் தேவையும் அதிகரிக்கும். பாசனத்திற்குப் பயன்படும் நீரில் இருந்துதான் தொழிலுக்கும் நீரை அளிக்க வேண்டியிருக்கும். இவ்வாறு செய்தால் விவசாய உற்பத்தி பாதிக்கும் என்பது மட்டுமல்ல; பெருகிவரும் மக்கள் தொகை உணவு பற்றாக்குறைக்கு உள்ளாகித் தவிக்க நேரிடும்.

தொழிற் சாலைகள் பெருகப் பெருக நல்ல நீருக்கு ஏற்படும் பற்றாக்குறை ஒருபுறம் நம்மை மிரட்ட மறுபுறத்தில் இதைவிடப் பெரியதொரு அபாயமும் மக்களை அச்சுறுத்துகிறது. தற்போது தமிழகத்திலுள்ள தொழிற் சாலைககளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை விஞ்ஞான முறைபடி சுத்தப்படுத்தாமல் கண்டபடி வெளியேற்றி ஆறுகளிலும் குளங்களிலும் விடுவதால் அவைகளில் இருக்கிற நல்ல நீரும் மாசுபடுகிறது. நிலத்தடி நீரும் கெடுகிறது. இதன் விளைவாக மக்களின் சுகாதாரத்திற்குப் பெரும் கேடு விளைகிறது. உச்சநீதிமன்றமே இந்தப் பிரச்சினையில் தலையிட்டுக் கழிவுநீரைச் சுத்தப்படுத்தி வெளியேற்றாத தொழிற் சாலைகள் மூடப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தபிறகும் கூடப் போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது சம்பந்தமான சட்டங்கள் கடுமையாக இருந்த போதிலும் அவை ஒழுங்காக அமுல் நடத்தப்படவில்லை.

தொழிற்சாலைகளுக்குத் தேவையான நீரை அளிக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை. ஆனால் அதை விவசாயத்திற்கு அளிக்கப்படும் நீரிலிருந்து பகிர்ந்து அளிக்கக்கூடாது. ஏற்கெனவே விவசாயத் திற்குத் தேவையான நீர் பற்றாக்குறையாக இருக்கும்போது மேலும் மேலும் அந்த நீர் அளவைக்குறைப்பது என்பது உணவு உற்பத்தியைப் பாதித்துவிடும். பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தி அதிகரிக்கவில்லையென்றால் பஞ்சம் ஏற்பட்டுவிடும். உணவுப் பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறிவிடும். எனவே, இந்தப் பிரச்சினைக்குத் தக்க பரிகாரம் காணவேண்டியது அவசியமாகும்.

சென்னை, தூத்துக்குடி போன்ற துறைமுக வசதி கொண்ட நகரங்களை மையமாக வைத்துப் பெரும் தொழிற் சாலைகள் உருவாக்கப்பட்டன. உருவாகியும் வருகின்றன. உதாரணமாகத் தூத்துக்குடியில் பிரும்மாண்ட மான ஸ்பிக் உரத்தொழிற் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அங்குப் பெரியதொரு அனல்மின்சார நிலையமும் உள்ளது. இவை இரண்டுக்கும் நாள்தோறும் 20 மில்லியன் கேலன் நீர் தேவைப்படுகிறது. தாமிரபரணி ஆற்றிலிருந்து இந்தத் தண்ணீர் அளிக்கப்படுகிறது. இதன் விளைவாகத் தாமிரபரணி ஆற்றுப்பாசன விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதுபோதாது என்று தூத்துக்குடியில் ஸ்டேர்லைட் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு 30 மில்லியன் கேலன் தண்ணீர் நாள்தோறும் வேண்டும். பாசன நீரிலிருந்துதான் இந்த அளவு நீரையும் கொடுக்க வேண்டியிருக்கும். ஆக மொத்தம் நாள்தோறும் தூத்துக்குடியில் உள்ள இந்த தொழிற்சாலைகளுக்கு 50 மில்லியன் கேலன் நீரைத் தினமும் அளித்தால் விவசாயிகளின் கதி என்ன ஆவது?

தூத்துக்குடியில் உள்ள அனல் மின்நிலையம் மிகவும் முக்கியமானது என்பது மறுக்கமுடியாது. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் நான்கில் ஒரு பகுதி மின்சாரத்தை அதாவது தினமும் 1500 மெகாவாட் மின்சாரத்தை இந்த நிலையம் உற்பத்தி செய்து வருகிறது. எனவே, இதை மூட முடியாது. எனவே விவசாய தொழில் துறைகளுக்கும், குடிநீருக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குக் கீழ்க்கண்ட வழிகளில் பரிகாரம் காணவேண்டியது மிக அவரசமானதாகும் :

  1. சென்னை, தூத்துக்குடி போன்ற கடற்கரையோர நகரங்களில் அமைக்கப் படும் தொழிற்சாலைகளில் நல்ல நீர்த்தேவை கடல் நீரைச் சுத்தப் படுத்துவதின் மூலம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆணையைப் பிறப்பிக்கப்பட வேண்டும். இதன் மூலம் இந்தத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான அளவுக்கு மேல் நீர் கிடைக்கும். பாசன நீரையோ, குடிநீரையோ எடுத்து அதன் மூலம் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கமுடியும்.
  2. தமிழக மக்கள் விவசாயத்திற்காகவும், குடிநீருக்காகவும் நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலத்தடிநீர் குறையக்குறைய எதிர் காலத்தில் தேவையான அளவுக்கு நீர் கிடைக்காமல் போகலாம். எனவே நிலத்தடி நீர் சேமிப்பை அதிகரிப்பது பற்றி நீண்டகாலத் திட்டம் தேவைப்படுகிறது.
  3. தென்னிந்தியாவில் உள்ள நதிகளை இணைப்பதன் மூலம் ஏராளமான வெள்ளநீர் வீணாகி கடலில் கலப்பதைத் தடுக்கமுடியும் என்பது கண்டறியப்பட்டு அதற்கான திட்டமும் வகுக்கப் பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்திற்குத் தேவையான நிதி ஆதாரத்தின் ஒரு பகுதியை உலகவங்கி மூலம் பெறலாம். தென்மாநிலங்-களைச் சேர்ந்த தொழிலதிபர்கள் தங்கள் தொழிற் சாலைகளுக்குத் தேவைப்படும் நீர் அளவிற்கு ஏற்பவும், தென்னக நதிகளின் இணைப்பினால் பாசனவசதிபெறும் விவசாயிகளின் நிலப்பரப்பளவிற்கு ஏற்பவும், இத்திட்டம் மூலம் குடிநீர்வசதி பெறும் நகராட்சிகள், ஊராட்சிகள் பெறவிருக்கும் குடிநீர் அளவிற்கு ஏற்பவும் கடனாக அளிக்கும்வகையில் கடன் பத்திரங்களை அரசு வெளியிட்டு இத்திட்டத்திற்குத் தேவையான நிதியைத் திரட்டவேண்டும். இதன் மூலம் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான நீர் மட்டு மல்ல; விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தேவையான அளவுக்கு நீர் அதிகமாகவே கிடைக்கும். இதையும் அவர்கள் ஆராய வேண்டும். இதற்கு முதல் கட்டமாகத் தமிழ்நாட்டுத் தொழில் அதிபர்கள், விவசாயிகள் உதவியுடன் தமிழ்நாட்டு ஆறுகளை இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் வெள்ளக்காலங்களில் பெருகி ஓடி வீணாகக் கடலில் கலக்கும் நீரை நல்ல முறையில் பயன்படுத்த வழி ஏற்படும்.
  4. கேரளத்தில் ஓடும் மேற்குநதிகளின் நீரைத் தமிழகத்திற்குத் திருப்புவது சம்பந்தமாக ஏற்கெனவே ஒப்புக் கொள்ளப்பட்ட திட்டங்களை நிறை வேற்றுவதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
  5. காவிரிப் பிரச்சனையில் நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அமுல்நடத்த காவிரி நதிநீர் வாரியம் அமைப்பதற்கான சட்டப் பூர்வமான நடவடிக்-கையை மேற்கொள்ளமாறு இந்திய அரசை வற்புறுத்தவேண்டும்.

இந்திய அரசியல் சட்டத்தில் 262-வது பிரிவிற்கு இணங்க பன்மாநில நதிகள் மற்றும் நதிப்படுகைகள் ஆகியவற்றுக்கு நதி வாரியங்கள் அமைப்பது சம்பந்தமாக 1956-ஆம் ஆண்டில் நதிவாரியச் சட்டம் ஒன்றினை இந்திய அரசு கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின் இரண்டாவது பிரிவில் நாட்டில் “பொது நன்மையைக் கருதி பன்மாநில நதிகள் மற்றும் நதிப்படுகைகள் ஆகியவற்றை ஒழுங்குப்படுத்தவும் வளர்ச்சி அடைய செய்யவும் இந்திய அரசு இவற்றை எடுத்துக்கொள்ளலாம் என்றும், இதற்கான நதிவாரியங்கள் அமைக்கலாம்” என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்தச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைக் கடந்த 40 ஆண்டுகளில் ஒரு முறை கூட இந்திய அரசு பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி “காவிரி நதிநீர் வாரியம்” அமைக்குமாறு இந்திய அரசை வற்புறுத்தவேண்டும். காவிரியில் ஆண்டுதோறும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் நீரின் அளவு நிச்சயமற்ற தன்மையில் இருக்கும் நிலை நீடிப்பது தமிழகத்தின் விவசாய, தொழில்துறைகளில் தேக்கநிலையையும், பின்னடைவையும் ஏற்படுத்திவிடும்.

மேற்கண்ட வழிகளில் தமிழகத்தில் தண்ணீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாவிட்டால் உலக நீரியல் நிபுணர் திருமதி. மாலின் பேசன் மார்க் வகுத்துள்ள நெறிகளுக்கு இணங்க எதிர்காலத்தில் தமிழகம் தண்ணீர்ப் பற்றாக்குறை நாடு என்ற நிலையிலிருந்து தண்ணீர்ப்பஞ்சமுள்ள ஒரு நாடாக மாறிவிடும்.

இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் காடுகாண் காதையில் பின்வருமாறு கூறியுள்ளதைத் தமிழர்கள் இக்கட்டத்தில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்இயல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்து
பாலை என்னும் ஓர் படிவம் கொள்ளும்

அடிக்குறிப்புகள்

  1. முனைவர் டாக்டர் எஸ். முத்துக்குமரன், நாட்டின் நீர்வளம் பற்றிய சில சிந்தனைகள்
  2. முனைவர் கொடுமுடி ச. சண்முகம், எட்டாம் உலகத் தமிழ் மாநாடு அறிவியல் மலர் – பக்.229
  3. Hindu. Dated. 24-03-1997
  4. Dr. M.S. Swaminathan Deposition before the Cauvery Tribunal
  5. Robert Enselman & Leroy, Sustaining Water, population and the Future of renewable water supplies p.19.

பழ. நெடுமாறன்:

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பயிலும் சமயத்திலேயே மாணவர் தலைவராகச் செயல்பட்டவர். திராவிட மாணவர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை முதன் முதல் நிறுவதற்குக் காரணமாக இருந்தவர். கல்வி முடித்துத் தன்னைப் பொது வாழ்க்கைக்கு அர்ப்பணித்துக்கொண்ட இவர் பெருந்தலைவர் காமராசரின் அன்பிற்குரியவர். முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் திருமதி இந்திரா காந்திக்கு நெருக்கமாக அறிமுகமானவர். ஈழச்சிக்கல் தோன்றிய பிறகு தன்னை முற்றுமாக ஈழத்தமிழர் நலத்திற்காக ஒப்புக்கொடுத்தவர். நல்ல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியவர்.

You Might Also Like