Star Mountain

My travels and other interests

தமிழ்நாடு நேற்று இன்று நாளைபொருளாதாரம்

வங்கியியல் (1997)

வங்கியியல்
சோ. முத்தையன்
உதவிப் பொது மேலாளர்
பாரத ஸ்டேட் வங்கி, சென்னை. இந்தியா

வங்கித் தொழிலைச் செ­யும் நிறுவனம் வங்கி என்றும், கடன் தருவதற்காக, பொதுமக்களின் வைப்பு நிதிகளை ஏற்பதும், அந்நிதிகளை, காசோலை அல்லது விண்ணப்பம் மூலமாகத் திரும்பப் பெற உதவுவதும் வங்கித் தொழில் என்று பாங்கிங் கம்பெனிச் சட்டம் கூறுகிறது. வங்கித் தொழிலில் அடிப்படையானவை வாடிக்கையாளர் சேவை, பணம், சேமிப்பு, கடன், சட்டதிட்டங்கள் முதலியன. இத்தொழில் சட்டதிட்டங்களோடு வளர்ச்சிபெற்று விளங்க ஆரம்பித்தது அண்மைக் காலத்தில்தான் – பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் தான் என்றாலும், பணத்தின் தன்மை, வங்கியியல் இவை ஏதோ ஒரு வகையில் மக்களின் வாழ்வில் இருந்து கொண்டேதான் வந்திருக்கிறது.

ஆதி மனிதன் உணவு தேடும் வேலையை முழுமையாகச் செய்தபோது , உணவையே சேமிப்பாகவும், பண்டமாற்றுப் பொருளாகவும் பயன்படுத்தினான். நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்த பழங்குடியினர், எருமை மாடுகளைத் தங்கள் செல்வமாகவும், பண்டமாற்று மற்றும் திருமணச் சீராகவும் பயன்படுத்தினர். புத்தமத இலக்கியங்கள் பண்டமாற்று பற்றிக் குறிப்பிடுவதுடன், கடன்தருநர்களை ஸ்ரிஸ்திஸ் (Sresthis) என்றும் அழைக்கின்றன. கௌடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் அடமானம் அல்லது ஈடு (Security) உள்ள கடனுக்கு வட்டிவிகிதம் 15 சதவிகிதம் என்றும், அடமானமில்லாத கடனுக்கு 40 சதவீதம் என்றும், நட்டம் ஏற்படக்கூடிய கடனுக்கு (High Risk) வட்டி 240 சதவிகிதமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2000 ஆண்டுகட்கு முன்பே திருவள்ளுவர் அரசுக்குரிய இலக்கணங்களை வகுத்தபோது,

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் – காத்த
வகுத்தலும் வல்ல தரசு

என்றார்.

தமிழ்நாட்டில் வழங்கிவந்துள்ள புராண இதிகாசங்கள், சொல்வழக்குகள், பழமொழிகள், பழங்காலத்திலிருந்த கொடுக்கல் வாங்கலைப் பற்றியும் பேசுகின்றன. “கடன்பட்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற குறிப்பையும் “பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்”, “வட்டி ஓட்டம் வாத ஓட்டத்திலும் அதிகம்” “பணம் பந்தியிலே குணம் குப்பையிலே” – “கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரி”, “வட்டி ஆசை முதலுக்குக் கேடு”, “கடன் வாங்கியும் கல்யாணம் செய்”, “அஞ்சி மணியம் பார்த்தது கிடையாது, கெஞ்சிக் கடனும் கேட்டது கிடையாது”, “அட்டமத்து சனியை வட்டிக்கு வாங்கினாற்போல” என்ற வழக்குகளையும் உதாரணமாகக் குறிப்பிடலாம். “சிறுவாடு ” சேர்த்தல்” என்ற தொன்மைப் பழக்கம் தமிழர்களின் சேமிப்பு மனப்பான்மையைக் காட்டுகிறது. ‘மண் உண்டியல்’, ‘சுருக்குப்பை’  முதலியன தொல்பொருளாராய்ச்சியினரால் அக்காலத்தில் சேமிப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்களாக விளக்கப்படுகின்றன.

அரிக்கமேடு, கரூர், மதுரை முதலிய இடங்களில் சங்ககாலப் பொற்காசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழர்கட்கும் உரோமாபுரியினர்கட்கும், கிரேக்கர்கட்கும் வணிகத்தொடர்பும், பண்டமாற்றும் பெருமளவில் இருந்தன என்றும், வாசனைத் திரவியங்கள், பட்டு, முத்து, சந்தனம், அகில், தேக்கு, அரிசி, மயிலிறகு, பாக்கு இவை ஏற்றுமதி செய்யப்பட்டும், பொன் ஆடைகள், குதிரை முதலியன இறக்குமதி செய்யப்பட்டனவென்றும் அறிகிறோம்.

பல்லவர் காலத்தில் பொன், வெள்ளி, செம்புக் காசுகள் புழக்கத்திலிருந்ததாகவும், கருவூலங்களின் மேலாளர் மாணிக்கப் பண்டாரக் காப்பான் என்று அழைக்கப்பட்டதாகவும் விலியனூர் பட்டயம் (17-1899) கூறுகிறது.

சோழர் காலத்தில் பண்டமாற்று முறையில் வாணிபமும், வளமும் கொழித்தன. வியாபாரத்திற்காகப் பல நாடுகளுக்கு “ஞானசேதி திசையாயிரத்து ஐநூற்றுவர்” சென்றனர் என்கிறது ராஜராஜசோழன் பற்றிய பட்டயம். ஆயினும், பஞ்சகாலத்தில் கோயில்கள் மூலமும், ஒரு சில பெரும் பணக்காரர்கள் மூலமும் மக்கள் உறுதிப் பத்திரம் (promissory note) எழுதிக்கொடுத்து விட்டு 121/2  முதல் 30 சதவிகிதம் வரை வட்டிக்குக் கடன் பெற்றனர் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

பாண்டியர்கள் ஆண்டபோது காசு, காணம், பொன், பழங்காசு என்ற பெயரில் நாணயப்புழக்கமிருந்ததாக அறிகிறோம். “கையிலொன்றும் காணமில்லை” என்ற சுந்தரர் பாடல்வரியும், “காசின் வாய்க்கரம் விற்பினும்” என்ற பெரியாழ்வார் பாடல்வரியும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. தனபாலன் குளிகை, சோழியக்காசு, அன்றாட நார்புதுகாசு முதலிய நாணயங்கள் புழங்கிய செய்திகளும் வரலாற்றுச் செய்திகளாம்.

நகரத்தார் என்று பெருமையுடன் அழைக்கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், தமிழ்நாட்டு வங்கியியலில் பாண்டவர் காலந்தொட்டும், அதற்கு முன்பிருந்தும் மிகச் சிறப்பான பங்களிப்புப் பெறுகின்றனர். அரேபியா, இலங்கை, மலேசியா, பர்மா, ஜாவா, சுமித்திரா முதலிய நாடுகளுடன் கொண்ட தமிழர் வாணிபத்திலும், நடைபெற்ற வங்கியியலும் நகரத்தார் பணி சிறப்பிற்குரியது.

நாயக்கர்கள் ஆண்டபோது மக்களிடம் வரியை பணமாக வசூலித்தார்கள் என்றும், வேலூர், செஞ்சி முதலிய இடங்களில் உள்ள கோட்டைகளுக்கான கட்டுமானப் பணிகளுக்காக கூலியாகப் பணம் மற்றும் அரிசி வழங்கப்பட்டதாக வரலாற்றுச் செய்தி கூறுகிறது.

மொகலாயர் காலத்திலும், கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் நிறுவப்பட்ட போதும் நாட்டுப்புறக் கடன்தருநர்களின் (Village Money lenders) ஆதிக்கம் மேலோங்கியிருந்ததாக உணரப்படுகிறது. இத்தகைய கிராமப்புறக் கடன்தருநர்கள் கிராமியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக – பலம்பொருந்திய சக்திகளாக விளங்கிவந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் தொழிற்புரட்சியும், விரிவடைந்த சந்தைகளும், பணப்புழக்கமும் பெருகிவிட 18-19ஆம் நூற்றாண்டுகளில் வங்கிகள் மிகவேகமாக வளரலாயின.

வங்கிகள் தொடர்பான சட்டங்களும், விதிமுறைகளும் இங்கிலாந்தில் தோன்றின. ஆங்கிலேயர் ஆட்சிபுரிந்த இடங்களில் எல்லாம், அவர்களது கண்டுபிடிப்புகளும், பழக்க வழக்கங்களும், சட்டதிட்டங்களும் பரவியதால், இந்தியாவுக்கு இச்சட்டங்கள் வந்தன. 1881இல் கைமாறு காசிதழ் சட்டம் (Negotiable Instruments Act 1881) இந்தியாவில் நிறைவேற்றப்பட்டது. இது வங்கிகள் கையாளும் பணத்தொடர்பான, எழுத்துமூலமான கருவிகளான உறுதிப்பத்திரம் (Promissory Note) உண்டியல் (Bill of Exchange) மற்றும் காசோலை (Chequesy) பற்றிய விதிமுறைகளை வகுக்கும் சட்டமாகும். அதேபோல வங்கிகளின் நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் (Banking Regulations) 1949இல் உருவானது. கடன் வழங்கவும், முதலீடு செய்யவும் பொதுமக்களிடமிருந்து சேமிப்புப் பணத்தைப் பெறுவதும், அவர்கள் கேட்கும்போது அல்லது அவர்கள் விருப்பம்போல அவர்கள் சேமிப்புப் பணத்தை காசோலை அல்லது வரையோலை அல்லது அவர்கள் ஆணைப்படித் திருப்பித் தருவதும் தான் வங்கியியல் என்று இந்தச் சட்டம் கூறுகின்றது.

இந்தியாவில் பாங்க் ஆப் இந்துஸ்தான் என்ற வங்கி 1770இல் தொடங்கப்பட்டது. 1806இல் பாங்க் ஆப் கல்கத்தா தொடங்கப்பட்டு அது 1809இல் பெங்கால் பிரசிடென்சி பாங்க் என்று மாற்றப்பட்டது. 1840இல் பாங்க் ஆப் பாம்பேயும் 1843இல் பாங்க ஆப் மெட்ராசும் உருவாயின. இந்த மூன்று பிராந்திய வங்கிகளே இந்திய வங்கித் தொழிலில் 80 ஆண்டுகள் ஆதிக்கத்துடன் செயல்பட்டன. 1850இல் தனியார் அமைப்புகள் ‘நிதி’ என்ற பெயரில் சென்னையில் அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டன. 1882இல் ‘அஞ்சல்துறை சேமிப்பு’ வங்கி துவங்கப்பட்டது.

1929ல் பாங்க ஆப் செட்டிநாடு லிமிடெட் என்ற வங்கி சென்னை மாகாணத்தில் நகரத்தாரால் துவங்கப்பட்டது. வெளிநாடுகளில் கூட  இதன் கிளைகள் துவக்கப்பட்டன. இது இந்தியன் கம்பெனிச்சட்டத்தின் கீழ் இயங்கி வந்தது. 1935 முதல் வங்கித் தொழில் நல்ல வளர்ச்சி பெற்றது. அப்போது 101 தனியார் வங்கிகளும், 17 எக்ஸ்சேஞ்ச் வங்கிகளும் 12054 கூட்டுறவுச் சங்கங்களும் 12926 அஞ்சல்துறை கிளைகளும் இயங்கின. இந்தியா முழுமையும் 1935ல் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா துவக்கப்பட்டு 1949இல் அது தேசியமயமாக்கப்பட்டது. அது முதல் வங்கிகளின் வங்கியாக, நாட்டின் பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும் வங்கியாகச் செயல்படத் துவங்கியது. 1955ஆம் ஆண்டு இம்பீரியல் பாங்க் ஆப் இந்தியா சட்டரீதியாக மாற்றப்பட்டு ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா என்றாகியது. இதற்கு ஸ்டேட் பாங்க ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் போன்ற ஏழு துணைநிலை வங்கிகள் உண்டு. இந்திய நாடு சுதந்திரம் பெற்றபிறகு, வங்கித் தொழிலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. 1969இல் மேலும் 14 வங்கிகளும், 1980இல் 6 வங்கிகளும் நாட்டுடைமையாக்கப்பட்டன. இந்த நிகழ்வுகளை வங்கிப் புரட்சி என்றுகூடச் சொல்லலாம். ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையிலும், தனியான ஒரு பெரும் சக்தியாக விளங்கிவந்த கடன்தருநர்களை ஒழிக்கவும்  இந்த வங்கிகள் நாட்டுடைமை யாக்கப்பட்டன. பெரிய வங்கிகள், சிறிய வங்கிகளைத் தன்னோடு இணைத்துக் கொண்ட நிகழ்வுகளுமுண்டு. இப்படிப்பட்ட சேர்க்கையினாலும், ஒருங்கிணைப்புகளினாலும் 1951ஆம் ஆண்டு 566 என்று ஆகியிருந்த ஷெட்யூல்டு வங்கிகளின் மொத்த எண்ணிக்கை 1974இல் 83 என்றாகியது. அதுபோலவே ஷெட்யூல்டு அல்லாத வங்கிகளின் மொத்த எண்ணிக்கை 1951ஆம் ஆண்டு 474 என்றிருந்து 1974இல் அது 9 ஆகச் சுருங்கியது. சென்ட்ரல் பாங்க் போன்ற பெரிய வங்கிகளின் வீழ்ச்சியும் இதிலடங்கும்.

தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட வங்கிகள் பல. தி நாடார் பாங்க் லிமிடெட் (1810), பாங்க் ஆப் செட்டிநாடு (1929), இந்தியன் பாங்க், இந்தியன் ஓவர்சீஸ் பாங்க், கரூர் வைசியா பாங்க், லட்சுமி விலாஸ் பாங்க், பாங்க் ஆப் மதுரை, சிட்டி யூனியன் பாங்க், பாங்க் ஆப் தஞ்சாவூர், பாங்க் ஆப் தமிழ்நாடு என்ற பட்டியல் நீளமானது.

இன்று

வங்கித் தொழில் இன்று உலக அளவில் பிரம்மாண்டமான வளர்ச்சி கொண்ட, நவீனத்துவம் நிறைந்த, மிகத் தேவையான தொழிலாகி விட்டது. ரிசர்வ் வங்கியியன் கட்டுப்பாட்டுக்குள் வங்கிகளும், சிறப்பு நிதி நிறுவனங்களும், முதலீட்டு நிறுவனங்களும், சேமிப்பு நிறுவனங்களும், இவற்றுக்கெல்லாம் உதவிபுரிந்திடும் வண்ணம் காப்பீட்டுக் கழகங்களும், ஏனைய அமைப்புகளும் பொதுத் துறையிலும், கார்ப்போரேட் பிரிவிலும் தனியார் துறையிலுமாக ஏற்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றன. இதன் விவரங்களை இணைப்பு Iஇல் காண்க.

கூட்டுறவு வங்கிகள், வங்கிச் சட்டத்தின் கீழ் வராவிடினும், தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அபரிதமாகப் பங்கேற்றுள்ளன. தமிழ்நாடு அபெக்ஸ் ஸ்டேட் கோவாப்பரேட்டிவ் பாங்க் மிகப் பெரிய அளவில் இயங்கி மகத்தான பணியாற்றிவருகிறது. இது தவிர்த்து, ஷெடியூல்டு மற்றும் வணிக வங்கிகள் தமிழகத்தில் நல்ல வண்ணம் சேவை புரிந்து வருகின்றன. வணிக வங்கிகள் கிராமப் புறங்களிலும், வளர்ச்சி பெறாத நகர்ப்புறங்களிலும், நன்கு வளர்ந்த நகர்ப்புறங்களிலும் பரந்து விரிந்து செயல்பட்டு வருகின்ற விவரத்தைக் கீழ்க்காணும் புள்ளி விவரம் விளக்கும்.

வருடம் கிளைகள் கிராமப்புறம் வளர்ச்சிபெறாத

நகர்ப்புறம்

வளர்ச்சிபெற்ற

நகர்ப்புறம்

மையங்கள்
1962 800
1970 1279 287 595 399
1975 2058
1976 2240 605 782 853 828
1980 2952 1105 845 1002 1289
1987 3990 1679 1036 1275

1980ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 1289 மையங்களில் செயல்பட்டு வந்த வங்கி, 1994இல் 2286 மையங்களில் பணியாற்றத் தொடங்கியது. ஒவ்வொரு வங்கிக்கிளையும் பணியாற்றிடும் மக்கள் தொகை 1955இல் 6000 என்றிருந்த நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டு 1995இல் 14000 என்றாகியது. கிரிடிட் டெபாசிட் சதவிகிதம் தமிழ்நாட்டில் 1978-79 134.7 சதவிகிதம் என்றும், 1992இல் 89 சதவிகிதம் என்றும், 1993இல் 86.2 சதவிகிதம் என்றும் அமைந்து இந்திய அளவில் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. விவசாயிகளின் பொருளாதார நிலைமை, நிலத்தின் தன்மை, வளர்க்கும் பயிர்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு வங்கிக் கடன்கள் வழங்கப்படுகின்றன. அப்படி வழங்கப்படுகையில் விவசாயி பயிரிடும் இடத்தின் வெப்பநிலை, இடத்தின் தன்மை முதலியவையும் பரிசீலிக்கப்படுகின்றன. விவசாயம் ஒரு வாழ்க்கை முறை என்ற நிலைமை மாறி அது ஒரு தொழில் என்றாகியிருக்கிறது. தனக்கென வைத்துக் கொள்வதைவிடவும், சந்தையில் விவசாயப் பொருட்களை விற்பனைக்குக் கொண்டு வருவது விவசாயிகளுக்கு வழக்கமாகி விட்டது. ஆதலால், அதிக உற்பத்தி செய்திடும் எண்ணம், சிறிய அறிவிலான நீர்ப் பாசனம், கிணறு தோண்டுதல், பம்ப்செட், ஜெனரேட்டர், நிலத்தையும் சீர்படுத்துதல் என்ற வகையில் விவசாயிகளைக் கொண்டு சென்றிருக்கிறது. தொழில் துறையிலும் இத்தகைய எண்ணம் நிறைந்திருப்பதால், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி நல்ல வண்ணம் ஏற்பட்டிருக்கிறது. புகையிலை மற்றும் மது பானங்கள் உற்பத்தி தவிர்த்து மற்ற வகைகளில் குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டம் சேலம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்கள் நெசவுத் தொழிலிலும் (Cotton Textile units 1681) முன்னேறியிருக்கின்றன. இராமநாதபுரம் மாவட்டம் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு. கோயம்புத்தூர் மாவட்டங்கள் தொழிற்சாலை வேலைவாய்ப்புக்கு நல்ல பங்களிப்பு செய்திருக்கின்றன. 1980களில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு Productive Council அளவில் பாராட்டத்தக்க வகையில் பெற்றிருந்தது. தமிழ் நாட்டின் வளர்ச்சிவிகிதம் மற்றும் உற்பத்தி மதிப்பில் 10.1 சதவிகிதம், 6.4 சதவிகிதம் என்றும் பெற்று பாராட்டத்தக்க நிலையிலிருந்தது. ஆனாலும் கூட இத்தகைய வளர்ச்சியில் பிராந்திய அளவில் மிகுந்த ஏற்றத்தாழ்வுகள் இருந்தன.

வருடம வங்கிகள் சேமிப்புத் தொகை

ரூ. இலட்சத்தில்

கடன் தொகை

ரூ. இலட்சத்தில்

1970 39 351.38 466.55
1976 50 1169.15 129.382
1980 2523.37 237.369
1993 19183.53 1653833

வங்கித்தொழில் வலிவும், நுட்பமும், அடையும் தன்மையில் பல்வேறு வகையான சிறப்புக் கிளைகளும், கிளைகளுக்குள் சிறப்புப் பிரிவுகளும், ஏற்படுத்தப்பட்டன. உதாரணமாக, விவசாய வளர்ச்சிக் கிளை, விவசாயப் பிரிவு, தொழில்நிதிக் கிளை (Industrial Finance Branch)  சிறுதொழில் கிளைகள், வெளிநாட்டு இந்தியருக்கான கிளை (NRI) தோல் வணிக  உற்பத்தியை ஊக்குவிக்கும் கிளைகள், வெளிநாட்டு வணிகக் கிளைகள் (Overseas Branches), வணிகக்கிளைகள் (Commercial Branches), உயர்தொழில் நுட்ப விவசாயக் கிளைகள் (Hitech Agri. Branches), தனியார் வங்கியியல் கிளைகள், இப்படியெல்லாம் தனிக் கவனம் செலுத்தி வங்கிகள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. கீழ்க்கண்ட புள்ளி விவரம் வங்கிகள் பல்வேறு காலகட்டங்களில் சேர்த்த சேமிப்புகளையும், கொடுத்த கடன்களையும் விளக்குகிறது.

அனைத்து வங்கிகளும் தமிழ்நாட்டில் கொடுத்துள்ள கடன் அளவு (Credit Limit) தொழில் ரீதியாகக் கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளது. 1994 விவரப்படி:

தொழில்   (ரூ. இலட்சத்தில்)
1 விவசாயம்

நேரடிக் கடன்

மறைமுக்க் கடன்

 

2246.79

312.68

 

 

2537.63

2 தொழிற்சாலைகள் (உணவு உற்பத்தி, கனிமத் தொழில், புகையிலை, நெசவுத் தொழில், காகிதம், தொல், ரப்பர், ரசாயனப் பொருட்கள், பெட்ரோலியப் பொருட்கள், உலோகங்கள், எஞ்சினியரிங், போக்குவரத்துக்கான பொருள் உற்பத்தி, மின்சாரம், கட்டுமானத் தொழில் முதலியன)  

 

 

 

9796.93

3 போக்குவரத்து நடத்துனர் 428.70
4 தனியார் சேவை மற்றும் வாழ்க்கைத் தொழில்கள் 2537.63
5 வாணிபம்

மொத்த வாணிபம்

சில்லரை வாணிபம்

 

1467.38

622.88

 

 

2090.26

6 நிதி நிறுவனங்கள் 780.64
7 மற்றவைகள் (Others) 1058.11
மொத்த வங்கிக் கடன்கள் 19251.73

இதில், கைவினைஞர் மற்றும் கிராமத் தொழில் முனைவோர்       32.52

பிற சிறு தொழில்கள்                                              2505.27

மாவட்ட ரீதியாக வழங்கப்பபட்டுள்ள கடன்களின் விபரங்களை ஜுன் மாதம் 1995ஆம் வருடக் கணக்குப்படி இணைப்பு IIஇல் காண்க. சென்னை மாவட்டம் முதலிடத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மாவட்டம் மட்டுமே 42.85 சதவிகித தலைவாரி (Per Capita) வருமானமும், ராமநாதபுரம் 1 சதவிகித தலைவாரி வருமானமும் பெற்ற நிலையும், சென்னை, கோவை, நீலகிரி மாவட்டங்கள் மாநிலத் தலைவாரி வருமானத்தை விட மிக அதிகம் பெற்று, மாவட்டங்களுக்குள் நிலவும் பரந்த வேற்றுமையைக் காண்பிக்கின்றன. கடன் , சேமிப்பு விகிதம் காமராஜர், தர்மபுரி, சென்னை, கோவை, நீலகிரி மாவட்டங்களில் 1991 ஆம் ஆண்டு கணக்கின்படி மிக அதிகமாகவும், திருநெல்வேலி கட்டபொம்பன் மாவட்டம் மிகக் குறைவாகவும் உள்ளது.

புதிய துறைகளில் கவனம்

மத்திய அரசின் தாரளமயமாக்குதல், உலக அளவிலான தரத்தை எட்டுதல், தனியார் மயமாக்குதல் போன்ற கொள்கைகள், வங்கிகளின் செயல்பாட்டில் பெரியதொரு மாற்றத்தையும். வெளிப்படையான (Transparant) தன்மையையும், லாப நோக்கில் இயங்குவதையும், வெளிநாட்டு வங்கிகள் நாடெங்கிலும் இயங்கத் தொடங்குவதால் அவற்றுடன் போட்டியிடும் பாங்கையும், கணிப்பொறியை முழுஅளவில் பயன்படுத்தும் நிலைக்கு வங்கிகள் முயன்று வருவதையும் காண்கிறோம்.

தொழில் நுணுக்க அறிவு, மற்றும் தொழில் தொடங்குவதற்கான சாதனங்கள், இயந்திரங்கள் முதலியவற்றை இறக்குமதி செய்திடவும், வெளிநாட்டு நாணயத்தில் கடன்வழங்கும் வசதி, வெளிநாட்டார் இந்திய நாட்டில் முதலீடு செய்திட வாய்ப்பு, தொழில் தொடங்க லைசென்ஸ் தேவையில்லாமை (ஒரு சில தொழில்கள் தவிர) என்ற அரசின் நிலை, போக்குவரத்து, மின்உற்பத்தி, தொலைத் தொடர்பு முதலிய துறைகளில் தனியார் ஈடுபடலாம் என்ற அறிவிப்பு – இவை எல்லாம் வங்கிகளின் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி வருகின்றன. கடன் வழங்குவது மட்டுமின்றி, கடனை வசூல் செய்திடும் வகையிலும், செயலிழந்த சொத்துக்களை (Non Performing Assets) தரமான சொத்துக்களாக (Standard Assets) மாற்றும் முயற்சியிலும் (சமாதானம் – தள்ளுபடி ரத்து செய்தல் – Compromise – write off – waiver) வங்கிகள் ஈடுபட்டு வருகின்றன. ரூபாய் பத்து லட்சத்திற்கு மேற்பட்ட கடன் பற்று வழங்க Debt Relief Tribunal விசாரித்து விரைவில் தீர்ப்பு வழங்க அமைக்கப்பட்டு அவை செயல்பட ஆரம்பித்திருப்பது வங்கிகளுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாகும்.

நிதி உதவிகளை ஜீரணித்து வளர்ச்சி பெறுவதில் சமூகப் பொருளாதார நிலைமையும், துணை அமைப்புகளின் (Infrastructure) வளர்ச்சியும் பெரும்பங்கு வகிக்கின்றன. தமிழ்நாட்டில் மின் உற்பத்தியும், சாலைப் பராமரிப்பும், போக்குவரத்து வசதிகளும் பொதுவாகத் திருப்திகரமாக உள்ளன. தொழில் வளர்ச்சி ரீதியிலும், வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தியில் பங்கு பெறுவதிலும் தமிழ்நாடு அகில இந்திய அளவில் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நிலைகளுக்குள் இருந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனாலும் தமிழ்நாட்டின் சராசரித் தனிநபர் வருமானம் அமெரிக்க டாலர் கணக்கில் கூறப்போனால் $210 என்றும், அகில  இந்தியாவில் தனிநபர் வருமானம் $350 என்றும் அறிந்திடும் போது  தமிழ்நாட்டின் பரவலான ஏழ்மையின் பிரதிபலிப்பு மேலிடத்தான் செய்கிறது. விவசாயத்தை மட்டும் நம்பி இருக்கும் மக்கள் தொகை சதவிகிதம் 63.3 சதவிகிதம் (1960-61) 61.8 சதவிகிதம் (1969-70), 60.9 சதவிகிதம் (1981-82) என்றும் அதேசமயத்தில் தமிழ்நாட்டின் மொத்த வருமானத்தில் விவசாயத் துறையின் பங்கு 52 சதவிகிதம் (1960-61), 39 சதவிகிதம்  (1969-70), 29 சதவிகிதம் (1981-82) என்று குறைந்து கொண்டே வரும் வருமானத்தை நிலையான சுமார் 60 சதவிகித மக்கள் பங்கிட்டுக் கொள்கிறார்கள். காவிரிச் சமவெளியில் விவசாயம் பொய்த்தாலும், புதிய வேலை வாய்ப்புகள் பெருமளவில் பெருகிவிடவில்லை. மாநிலங்களுக்குள் கேரளாவும், பஞ்சாப்பும் நல்லவண்ணம் வளர்ச்சியடைந்திருப்பதுபோல, தமிழ்நாட்டு மாவட்டங்களுக்குள் கோயம்புத்தூர், பெரியார், சேலம் மற்றும் சென்னை மாவட்டங்கள் வளர்ச்சியடைந்திருப்பதற்குக் காரணம் இப்பகுதி மக்களின் தன் முனைப்பும், உழைப்புமே காரணம்.

59 சதவிகித விவசாயிகள் இன்னமும் சொந்த மூலதனத்தையும், கிராமத்துக் கடன் தருநரையும் நம்பியே இருக்கிறார்கள்: சிறுதொழில் புரிவோர் கந்துவட்டிக்கு வெளியில் கடன் வாங்கிடும் சூழலில் வாழ்கின்றனர்: சிறுதொழில் புரிவோர் பெரும்பகுதி தனியார் வழங்கும் கடன்களையே நம்பி 120 முதல் 181 சதவிகிதம் வரை கொடுத்துத் தங்கள் பொருளாதார நிலையைச் சீர்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளை இழந்துள்ளனர். இதுவல்லாமல், வங்கித் தொழிலில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதை மறுக்க இயலாது. வங்கி அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் மக்கள் தொடர்பும், மக்கள் சேவையும், மக்களை நேசிக்கும் இயல்பும் இன்னும் பெருமளவில் தேவைப்படுகின்றன. சமுதாயத்தில் புரையோடிப்போயுள்ள சாதிமதக் கண்ணோட்டங்கள் வங்கியாளர்களின் அணுகுமுறையைப் பாதித்திருக்கின்றன. சகமனித மேம்பாடு என்ற சமூகச்சிந்தனை வளர்வதற்கு அடித்தளம் இன்னும் சரியாக அமைக்கப்படாமலேயே வங்கிகள் செயல்படுகின்றன. சம்பளம் அதிகரித்து, உற்பத்தி குறைந்துள்ளது என்ற உண்மை நிலையை யார்தான் மறுக்க முடியும்? கடன் வழங்கலில், செயலிழந்த சொத்துக்கள் (Non Performing Assets) என்று வகைப்படுத்தப் பட்டுள்ள வராத கடன்களை வசூல்செய்யும் உத்திகளாக சமரசம் – தள்ளுபடி (Compromise – write off) போன்ற அணுகுமுறைகள் பல்வேறு ஊழல்களுக்கு இடமளிக்கின்றது. பெரிய அளவிலான பாதுகாப்புப் பத்திர ஊழல் (Security Scam), பல்வேறு வங்கிகளில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரிய ஊழல்கள் போன்ற பாதிப்புகள் வங்கித் தொழிலுக்கு இழுக்கைத் தேடிக் கொடுத்திருக்கின்றன என்பது தேசிய அளவிலான சோகம். ஒரு சில வங்கிகளைத் தவிர, பெரும்பாலான வங்கிகளில் தொழிற் சங்கங்களின் வலிமையும், ஆதிக்கமும், தலைநிமிர்ந்து நிற்பது வெள்ளிடைமலை. வங்கி நிர்வாகத்தில் அதிகாரிகள் ஊழியர்களது பிரதிநிதித்துவம் இருந்தாலும் கூட, வங்கிகள் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களது நலனைக் கருத்திற் கொண்டு செயல்படவேண்டும் என்ற அடிப்படைக் கொள்கை எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டு வருகிறது என்பது விவாதத்திற்குரியது. இன்னும் கூட நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு வங்கி வசதிகள் சென்றடையவில்லை. தமிழ்நாட்டில் கடன் வழங்கல் , சேமிப்பு விகிதம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மிக அதிகமாக இருந்தாலும், இது மாவட்டங்களுக்குள் வேறுபட்டுக் காணப்படுகிறது. அரசுத்திட்டங்கள் செம்மையாகத் தீட்டப்பட்டிருந்தாலும்கூட, அவற்றை நிறைவேற்றுவதில் சமுதாய உணர்வு இல்லாத, சில பல அரசு அதிகாரிகள், வங்கியாளர்கள் மற்றும் இடைத்தரகர்களது ஊழலால் கணிசமான தொகை அது கடன் தொகையானாலும் சரி- மானியத்தொகை ஆனாலும் சரி, ஏழை எளிய மக்களை முழுமையாகச் சென்றடைவதில்லை. அரசாங்கத்தில் அரசியல் காரணங்களுக்காக செய்யப்படும் கடன் தள்ளுபடிகள் கடனைத் திருப்பிக் கட்டவேண்டும் என்ற உள்ள உறுதிபடைத்தவர்களைக்கூட சபலத்திற்கு உள்ளாக்கி விடுகின்றன. தனியார் ஆரம்பித்த நிதி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பொதுமக்களது பலகோடி ரூபாய் மதிப்புள்ள சேமிப்புகளை மோசடி செய்துள்ள நிகழ்ச்சிகள், உண்மையான வங்கித் தொழிலுக்கு ஊக்கம் ஏற்படுத்தியிருக்கின்றன. மக்களிடையே ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

நாளை

தமிழகத்தின் மிக முக்கியம் பொருளாதார அடிப்படைக்கு ஆதாரமாக அமைந்துள்ள அனைத்து கிராம மக்களையும் வங்கிச் சேவைகள் படிப்படியாகச் சென்றடைய வேண்டும். வணிக ரீதியில் விவசாயம் தமிழ்நாட்டில் லாபகரமாக இல்லை என்பது உண்மை. ஆயிரக்கணக்கான சிறுவியாபாரிகள் இன்னமும் 36 முதல் 60 சதவிகித வட்டிக்கு தனியார் நிதி உதவிகளை எதிர்பார்த்திருக்கின்ற நிலை மாறிடவேண்டும். சிறு வியாபாரிகளையும், விவசாயிகளையும் சுரண்டி வாழும் இடைப்பட்ட நபர்கள் மொத்த வியாபாரிகள் இவர்களது ஆளுமையை அரசு கட்டுப்படுத்தி விவசாய உற்பத்திப் பொருட்களுக்கும் மற்ற சிறுதொழில்களால் உற்பத்தியாகும் பொருட்களுக்கும் லாபகரமான சந்தைகளை உருவாக்கித் தந்திட வேண்டும். இனி வருங்காலகட்டத்தில் வங்கிகள், வீடுகட்டும் தொழில் நுகர்பொருள் நிதி, போக்குவரத்துச் சாதனங்கள் தொடர்பான தொழில்கள், செய்தித் தொடர்பு, கடல் உணவு, காய்ந்த நில விவசாயம் (Dry land forming) மருத்துவ மூலிகைகளைப் பயிரிடல், காய்கறி, முட்டை முதலிய சத்துணவுப் பொருட்களைப் பொடி செய்து வேண்டும்போது பயன்படுத்தும் வகையில் பதப்படுத்தும் தொழில்கள், கீழ்த்தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கான முதலீடுகள், சுற்றுப்புறச் சூழலைக் கெடுக்காவண்ணம் அவற்றைப் பாதுகாக்கும் பயனுள்ள திட்டங்கள், சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கும் திட்டங்கள், நவீன விஞ்ஞான அறிவு வளர்ச்சிப் பணிகள், பெண்களுக்கான அதிக வேலைவாய்ப்புத் திட்டங்கள், எங்கும், எதிலும் கணிப்பொறி மயமாக்கும் திட்டங்கள், உலகத்தரமான பொருட்களைத் தயாரித்தும், விளைவித்தும் ஏற்றுமதிச் சந்தைக்குத் தமிழகத்தைத் தயார்படுத்த ஊக்குவிப்புத் திட்டங்கள் என்று வளர்ச்சிக் கருவிகளான வங்கிகள் எதிர்காலத்தில் சிறப்பான திட்டங்களை அமுல்படுத்தும் வகையில் செயல்படும். மூலதனத் திரட்சி வீதம் உயரும்; உற்பத்தித் திறனும் உயர்ந்திட மனவளம் பெருகிட வேண்டும். இப்போது ஆரம்பித்துள்ள வங்கித் தொழிலில் உள்ள ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை, வங்கிகளின் தரத்தையும், செயல்பாட்டையும் உயர்த்திடும், வளர்த்திடும் தொழில் நுட்ப அறிவு பெருகிட வங்கிகள் உதவிடும்; அடிமட்டத்து மக்கள் கல்விபெற்று தொழில் முனைந்திட அரசின் திட்டங்களோடு கிராமப் பொருளாதாரத்தை உயர்த்திடும் சிறப்புத் திட்டங்களை, இப்போதுள்ள முன்னோடி வங்கித் திட்டம் (Lead Bank Scheme) விரிவாக்கிடும். வங்கிகளின் பங்கு அதில் மகத்தானதாகவும் இருக்கும். தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும், இந்தியர்களின் கவுரமான வளர்ச்சிக்கும் உதவமுடியும். தமிழ்நாட்டு அரசின் முழு ஈடுபாட்டோடு வங்கித்துறைத் தமிழார்வ நிபுணர்கள் ஆக்கபூர்வமான புதிய சிந்தனை, புதிய முயற்சி, புதிய உற்சாகம் பெற்றுச் செயல்படுவார்கள். வெளிநாட்டு வங்கிகள், தனியார் வங்கிகள் இத்தகைய செயல்பாட்டுக்குக் காரணமாக அமையும். தமிழக அரசின் அருள், எதிர்கால வங்கிகளின் பொருள் இவை இணைந்தால் தமிழ்நாட்டில் இனி இருள் ஏது?

References

(1) IDBI – Report on Development Banking in India – 1990-91

(2) Statistical Hand Book 1994 – Department of statistics Government of Tamil Nadu.

(3) India’s Eco. Problems – Edited by J.S.Uppal

(4) The Indian Economy-Iswar C.Dhingra

(5) IBA Bulletins

(6) Review of Tamil Nadu Economy 1978-79. Dr.Malcom Adhiseshaiah

(7) Currency & Finance & RBI Bulletin.

(8) Statistical Tables Relating to Banking in India

(9) RBI-BSR-Vol.22/1993

(10) Development Indicators for Tamil Nadu since 1950-51- Tamil Nadu State Planning   Commission.

(11)  Technical Studies prepared for The Banking Commission.

(12)  Report of the study group on Non Banking financial Institutions.

(13)  Tamil Nadu Provincial Banking Enquiry Comm. 1930

(14)  Tamil Nadu Social & Cultural History by Dr.A.Swaminathan.

இணைப்பு – 1

Authorised

Institutions

Public Sector Cooperative Sector Private Sector
(1)Central Monitoring

authority (RBI)

(2) Credit Institutions

(a) Commercial Banks

 

 

 

 

(b) Specialised Financial

Institutions

27 Public sector banks and

regional rural banks.

 

 

 

 

IDBI-IFCI, SFCs, NSCSTFC,

NABARD, SIDBI, NHB,

Exim bank +23 SC/ST,

cooperations at  State level

State co-operative banks at state

level, district co-operative banks at district level, and Primary credit

co-operative society at village levels.

 

 

State and DBs, Primary land

development Banks, FSS Indian dairy

development cooperations, National

Bank of India

 

Indian Private

Sector banks,

Foreign banks,

non-scheduled

commercial banks.

 

ICICI, HDFC, leasing

companies, non-

banking financial

Companies

 

(3) Investment Institutions LIC, GIC, UTI, Mutual funds,

Provident funds, Money Market Mutual funds.

 

– – – – – – –
(4) Savings Institution Post Office Savings banks. – – –  – – – – –
(5) Merchant Banking

Institutions

Subsidiaries of banks and banks departments. – – – – – – –  –
(6)Support Service Institutions DICGC, ECGC, NCDC, DFHI,

CRISIL, ICRA, UTI Credit Rating Limited, CARE, Stock holding corporations, National Stock Exchange, Over the Counter Exchange of India, SEBI,DFHI, Securities Trading Corporation of India etc.

 

Private Merchant

Banking Corporations

Etc. ONICRA

இணைப்பு – II

தமிழ்நாடு மாவட்ட வாரியான வங்கிக் கிளைகளும்,

சேமிப்பு மற்றும் கடல் வழங்கள் விபரங்களும்- ஜூன் 1995 (ரூ. இலட்சத்தில்)

 

பொதுத்துறை

வங்கிகள்

பிராந்தியக் கிராம

வங்கிகள்

அனைத்து ஷெடியூல்டு

வணிக வங்கிகள்

கிளை சேமிப்பு கடன் கிளை சேமிப்பு கடன் கிளை சேமிப்பு கடன்
1 அண்ணா 106 268.23 244.97 140 341.64 316.43
2 செங்கை எம்.ஜி.ஆர். 240 1042.19 705.62 269 1115.5 744.20
3 சிதம்பரனார் 76 440.15 204.28 29 17.46 13.52 148 430.33 323.04
4 கோயம்புத்தூர் 261 2153.59 2642.49 354 2696.66 3367.49
5 தர்மபுரி 112 268.73 250.51 25 12.54 14.25 150 307.39 276.37
6 காமராஜர் 66 274.73 355.49 33 18.15 17.63 119 382.09 454.96
7 கன்னியாகுமரி 101 419.81 180.97 124 495.96 222.68
8 சென்னை (மெட்ராஸ்) 530 8939.51 10068.00 653 11174.33 12979.41
9 மதுரை 196 765.50 739.27 275 991.46 917.34
10 நாகப்பட்டினம்

காயிதே மில்லத்

118 513.29 202.16 167 619.58 246.37
11 நீலகிரி 67 277.57 448.44 72 293.43 454.81
12 பசும்பொன்

தேவர்திருமகன்

52 227.57 448.44 112 310.36 149.70
13 பெரியார் 137 663.61 425.65 194 846.70 582.75
14 புதுக்கோட்டை 61 151.02 105.74 90 191.53 124.77
15 ராமநாதபுரம் 44 153.93 60.02 22 14.09 13.24 76 193.38 81.28
16 சேலம் 192 947.24 627.42 262 1232.37 828.92
17 தென் ஆற்காடு

வள்ளலார்

114 389.36 210.73 8 4.86 5.81 152 465.75 247.19
18 கட்டபொம்மன் 124 540.33 250.96 50 35.43 27.09 119 639.44 312.84
19 திருவண்ணாமலை

சம்புவராயர்

99 190.24 188.23 115 208.49 199.22
20 தஞ்சாவூர் 122 444.01 276.06 170 597.75 354.86
21 திருச்சிராப்பள்ளி 253 951.37 694.70 329 1197.35 830.27
22 வேலூர் அம்பேத்கார் 162 535.58 445.86 198 576.82 480.29
23 விழுப்புரம்

இராமசாமி படையாச்சி

116 215.63 178.25 14 6.92 8.43 159 260.48 211.89
   மொத்தம் 3351 20663.19 19954.26 181 109.45 99.97 4436 25568.79 24706.49

சோ. முத்தையன் :

அண்ணமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. சமூகவியல் பயின்று பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றித் தற்போது உயர்நிலையில் இருப்பவர்.பொது ஆர்வம் மிக உடையவர்; முற்போக்குச் சிந்தனையாளர்.

 

 

You Might Also Like