Star Mountain

My travels and other interests

அரசுதமிழ்நாடு நேற்று இன்று நாளை

வேளாண்மை (1997)

வேளாண்மை
கா. சிவப்பிரகாசம்
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
மதுரை – 625 104.  தமிழ்நாடு

நேற்று

வேளாண்மை வளத்திற்கு வேண்டிய பல்வேறு வாய்ப்புகள் தமிழகத்திலே நிலவுகின்றன. ஆயினும் தமிழகத்தில் உணவுப் பற்றாக்குறையினால் பிற நாடுகளிலிருந்து வரும் இறக்குமதிப் பொருட்களை எதிர்பார்த்து நிற்கும் சூழ்நிலைதான் அன்று நிலவியது. விளை பொருட்களின் உற்பத்தித் திறன் மிகவும் குறைவாகவே இருந்தது. உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்காக மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிட்டவில்லை. வேளாண்மையில் ஒரு திருப்பத்தைக் கண்டிட வேண்டிய அறிவியல் அறிவும் அவற்றைத் திறம்படச் செயலாற்றிட வேண்டிய ஏனைய துணைப் பொருட்களும் அன்று நம்மிடம் இல்லை.

இன்று

பல்வேறு பயிர்களிலும் உயர் விளைச்சல் திறனைக் கொண்ட வகைகள் இன்று கிடைத்திருக்கின்றன. நெல்லில் சாயாத மிகுதியான உரமேற்றுக் கூடுதல் விளைச்சலைத் தரும் தன்மை கொண்ட குட்டை வகை நெல் இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நெல்லை அடுத்து சோளம், கம்பு, கரும்பு, பருத்தி மற்றும் பிற பயிர்களிலும் உயர் விளைச்சல் இரகங்கள் வெளிவந்துள்ளன. புதிய வகைகளை உருவாக்குவதில் திசு வளர்ச்சி நுட்பம் (Tissue Culture Technique) அண்மைக் காலத்தில் பயன்படுகின்றது. புதிய இரகங்களின் முழுப்பலனையும் பெற்றிட உரத்தேவை அதிகரித்தது. எனவே நாட்டில் உற்பத்தியாகும் செயற்கை உரங்கள் தேவைக்கு ஏற்ற அளவு இல்லையென்ற காரணத்தால் அன்னிய நாடுகளிலிருந்து உரங்களை இறக்குமதி செய்ததுடன் புதிய உர ஆலைகளும் அமைக்கப்பட்டன. நாளடைவில் உயிர் உரங்களும் (Bio Fertilizers) உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு பயிர்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வோளண்மை உற்பத்தியைப் பெருக்க ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் ஒருங்கிணைந்த மானாவாரி சாகுபடித் தொழில் நுட்பங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. பயிர்களைப் பாதிக்கும் பூச்சிகள், நோய்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் இரசாயன மருந்துகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளைப் பயிரிடல் மற்றும் பல்வேறு உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் (Biocontrol Methods) போன்றவை அண்மைக்காலத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

நாளை

புதிய மரபுக் கூறுகளைப் பயிர்களில் புகுத்தும் உயிரியல் தொழில் நுட்பம் (Biotechnology) அண்மையில் வளர்ந்து வருகின்றது. பேக்டீரிய மரபுக் கூற்றுத் தொகுதிகள் பிரிந்தெடுக்கப்பட்டு பயிரினங்களில் புகுத்தி பண்பேற்றம் அடையச் செய்து அவற்றிலிருந்து மறுவளர்ச்சிப் பெற்ற புதிய பயிர் வகைகளை உருவாக்கும் ஆய்வுகள் பெருகி வருகின்றன. இதன் மூலம் பல்வேறு பயிரினங்களிலும் உயர் விளைச்சல் திறன், பயிர் நோய் எதிர்ப்புத்தன்மை, பூச்சிகளை எதிர்க்கும் தன்மை, வறட்சி தாங்கும் தன்மை ஆகியவற்றுக்கான மரபுக் கூறுகளைப் பயிரினங்களில் புகுத்தும் முறைகளை எளிதில் செயல்படுத்தும் வாய்ப்புள்ளது.

வேளாண்மை உற்பத்தியைப் பெருக்க கலப்பு வகைகள் (Hybrid Varieties), கலப்பு எழுச்சி வகைகள் (Hybrid Vigour) போன்றவை பல பயிர்களிலும் உருவாக்குவதற்கு வாய்ப்புள்ளது.

பயிர் மேம்பாடு (Crop Improvement), பயிர் மேலாண்மை (Crop Management), பயிர்ப் பாதுகாப்பு (Crop Protection) ஆகியவற்றில் பல்வேறு புதிய நுணுக்கங்கள் பெருகி தமிழகத்தின் வேளாண்மை வளம் வருங்காலத்தில் மேலும் சிறப்படையும் என்பதில் ஐயமில்லை.

 அ. நேற்று

வேளாண்மை வளத்திற்கு வேண்டிய பல்வேறு வாய்ப்புகள் தமிழகத்திலே அன்றும் நிலவின. ஆயினும் தமிழகத்தில் உணவுப் பற்றாக்குறையினால் பிற நாடுகளிலிருந்து வரும் இறக்குமதிப் பொருட்களை எதிர்பார்த்து நிற்கும் சூழ்நிலைதான் அன்று நிலவியது. விளை பொருட்களின் உற்பத்தித்திறன் மிகவும் குறைவாகவே இருந்தது. உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்காக மேற்கொண்ட முயற்சி களுக்கு ஏற்றபலன் கிட்டவில்லை. வேளாண்மையில் ஒரு திருப்பத்தைக் கண்டிட வேண்டிய அறிவியல் அறிவும் அவற்றைத் திறம்படச் செயலாற்றிட வேண்டிய ஏனைய துணைப்பொருட்களும் அன்று நம்மிடம் இல்லை.

இந்திய நாட்டின் தென்கிழக்குப் பகுதியிலே அமைந்துள்ள தமிழகம் 192 கி.மீ. நீளக்கடற்கரையையும் 1.30 இலட்ச சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் கொண்டுள்ளது.

நெல்

தமிழகத்தில் அன்று பல்வேறு நெல் வகைகள் பயிரிடப்பட்டுவந்தன. அவற்றி லிருந்து அதிக விளைச்சல் கொடுக்கும் பயிர் இனங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பணி கோவை நெல் ஆராய்ச்சிப் பண்ணையில் 1913 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இதன் பின்னர் ஆடுதுறையிலும், அம்பாசமுத் திரத்திலும், திரூர்குப்பத்திலும் நெல் ஆராய்ச்சிப் பண்ணைகள் ஏற்படுத்தப்பட்டன. கோவை நெல் ஆராய்ச்சிப்பண்ணையில் ஆரம்ப காலத்தில் தோற்றுவித்த ஜி.இ.பி.24 என்ற நெல் இரகம் அரிசியின் தரத்தில் சிறந்து விளங்கியதால் உலகின் பலநாடுகளில் பரவி ஆங்காங்குள்ள நெல் இரகங்களின் தரத்தை உயர்த்துவதற்கும் பெரிதும் பயன்படுத்தப் பட்டது.

கட்டைச் சம்பா, கோ25, அம்பை 5, டி.கே.எம். 6, கோ 29 ஆகிய நெல் இரகங்கள் நாளடைவில் மிகுதியான பரப்பளவில் பயிரிடப்பட்டன. அரிசி உற்பத்தி 1950 ஆம் ஆண்டு 18 இலட்சம் டன் என்ற அளவில் இருந்து 1960 ஆம் ஆண்டு 35 இலட்சம் டன்னாக உயர்ந்தது. நெல்வகைகளின் விளைவுத்திறனை மேலும் உயர்த்த ஜப்பானிகா – இன்டிகா இனக் கலப்புத்திட்டம் ஒன்றினைச் செயல்படுத்த பல ஜப்பானிகா இரகங்களுடன் தமிழ்நாட்டு நெல் இரகங்கள் இனக்கலப்புச் செய்யப்பட்டன. இம் முயற்சியின் பலனாக ஆடுதுறை-27 என்ற உயர் விளைச்சல் இரகம் தோற்றுவிக்கப் பட்டது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் மூன்று இலட்சம் டன் நெல் உற்பத்தி பெற முடிந்தது.

பிற பயிர்கள்

தமிழகத்தில் தானியப் பயிர்களான சோளமும், கம்பும், கேழ்வரகும், மொக்கைச் சோளமும் நுண் தானியங்களான தினையும், வரகும், குதிரை வாலியும், பனிவரகும், சாமையும், பயறுகளான அவரையும், துவரையும், மொச்சையும், காராமணியும், கொத்தவரையும், கொள்ளும், நரிப்பயறும், குத்துக்கடலையும், உளுந்தும், பாசிப்பயரும் ஆகிய பல்வேறு பயிர்கள் வளர்க்கப்பட்டன. வணிகப்பயிர்களாகப் பருத்தியும், கரும்பும், புகையிலையும் வளர்க்கப்பட்டன.  வெந்தய மும், வெங்காயமும், வெள்ளைப்பூண்டும், சீரகமும், கொத்தமல்லியும், மணங்கமழும் மணப் பொருட்கள், தென்னையும், எள்ளும், குசும்பாவும், (Safflower), பேயெள்ளும், ஆமணக்கும், நிலக்கடலையும், ஆளிவிதையும் (Linseed), கடுகும் முக்கிய எண்ணெய் வித்துப் பயிர்கள். ஆயினும், இவற்றின் விளைவுத்திறன் மிகவும் குறைவாகவே அன்று இருந்தது.

உரங்கள்

இயற்கை உரங்களைத் தொன்று தொட்டு நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். தொழுஉரம், கரம்பை, பூவரசு, ஆவாரை, எருக்கு, வேம்பு, புங்கம், கிளைரிசிடியா, வாகை போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. நாளடைவில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகியவை கொண்ட செயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்டன. செயற்கை உரங்கள் தேவைக்கு ஏற்ற அளவு இல்லையென்ற காரணத்தால் அன்னிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய சூழல் இருந்தது.

பயிர்காப்பு

பயிர்களில் பூச்சிகள், நோய்கள் போன்றவை தோன்றுவதற்கான காரணங் களைப்பற்றியும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றியும் முன்னோர்கள் அறிந்திருக்கவில்லை. பேய், பிசாசு, கோள்கள் ஆகியவற்றின் தீய விளைவுகளாலும் கடவுளின் சீற்றத்தாலும் பூச்சிகளும் நோய்களும் தோன்றுவதாகக் கருதினர். எனவே, இத்தீய செயல்களிலிருந்து விடுபடுவதற்காகப் பொதுவழிபாடுகளும் விழாக்களும் நடத்தப்பட்டன. உரோமானியர், ரூபிகோ என்ற கடவுளை உருவகப்படுத்தி பயிர்களைப் பாதுகாப்பதற்காக வழிபாடு நடத்தி வந்துள்ளனர்.

செர்மன் நாட்டு அறிவியலரான ஆன்டன் டீபேரி 1854 ஆம் ஆண்டில் நோய்க்கிருமிகளால் பயிர் நோய்கள் தோன்றுவதற்கான சான்றினை முதல் முதலாக வெளிப்படுத்தினர். இந்த ஆய்வே பயிர் நோயியல் வளர்வதற்கு முன்னோடியாக அமைந்தது.

போர்டோக் கலவையின் பூசணக் கொல்லித்தன்மை 1882 ஆம் ஆண்டு வெளிப்படுத்தப்பட்டது. போர்டோக்கலவை திராட்சையின் அடித்தேமல் நோயைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியது கண்டறி யப்பட்டது. அதன் பின்பே பயிர் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன.

உணவுக்காளான்

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழ் நூல்களாகிய சங்க இலங்கியங்களில் காளானைப் பற்றிய குறிப்புகள் காணப் படுகின்றன. மழைக்காலத்தில் நிலத்தில் தோன்றுகின்ற காளான்களையும் அடுப்பில் பூக்கின்ற காளான்களையும் அறிந்து புலவர்கள் பாடியிருக்கின்றனர். கம்பராமாயணம், பெரும் பாணாற்றுப் படை, மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம், காசிக்கலம்பகம், புறநானூறு, களவழி நாற்பது, பதார்த்த குணசிந்தாமணி போன்ற நூல்களில் காளான்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. இயற்கையிலே கிடைக்கின்ற காளான்களைச் சேகரித்து உண்ணும் பழக்கம் அன்று நிலவியது. ஆயினும், வளர்ப்பு நுணுக்கங்கள் அன்று உருவாக்கப்படவில்லை.

ஆ. இன்று

பயிர் வளம்

மண்வளம், நீர் வளம், இடுபொருட்கள் போன்றவற்றைக் கொண்டு பயிர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. உணவுப் பயிர்களுக்கும் பிற பயிர்களுக்கும் உள்ள விகிதம் 1950 ஆம் ஆண்டில் 71 : 29 ஆக இருந்த நிலை மாறி 1980 ஆம் ஆண்டில் 63 : 37 ஆக மாற்றமடைந்திருக்கிறது. உணவுப் பயிர்களிலும் கூடுதல் வருமானத்தைப் பெறும் வழியில் நெல், பருத்தி போன்ற பயிர்களில் ஒட்டுரக விதைப் பெருக்கம் மேற்கொள்ளப் படுகின்றது.

பயிர் வளர்ப்பில்  சிறுதானியங்கள், பயறு வகைப்பயிர்கள், வணிகப்பயிர்கள் தோட்டப் பயிர்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

1965 ஆம் ஆண்டு முடிய தமிழ்நாட்டின் நெல் இரகங்கள் எக்டருக்கு ஏறத்தாழ 5 டன் நெல் மகசூல் கொடுத்து வந்தன. 1965 – 66 ஆண்டுகளில் அகில உலக அரிசி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து தருவிக்கப்பட்ட ஐ.ஆர்.8, டெய்ச்சுங்நேட்டிவ் என்ற இரகங்களுடன் தமிழக நெல்வகைகள் இனக்கலப்பு செய்யப்பட்டன. காஞ்சி, வைகை, கருணா, கண்ணகி, ஆடுதுறை 31,  பகவதி,  இராசராசன் போன்ற நெல் இரகங்கள் நல்ல விளைவுத்திறன் பெற்றிருந்ததால் தமிழ்நாட்டில் விரைவில் பரவ ஆரம்பித்தன. பவானி, ஐ.ஆர்.20 ஆகிய இரகங்கள் அறிமுகப் படுத்தப்பட்டன. தமிழ் நாட்டில் இன்று 62 இலட்சம் டன் அரிசி உற்பத்தி ஆகிவருகின்றது. 1950 ஆம் ஆண்டு விளைச்சலை விட மூன்று மடங்குக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி உயர்ந்துள்ளது. இதனால் இன்று தமிழக மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள் தமிழகத்திலேயே விளைவிக்கப் படுகிறது.

சோளத்தில் சி.எச்.எச்.1 என்ற வகையும்  மொச்சை, அவரை ஆகியவற்றைப் பண்பகக் கலப்பு வழியில் இணைத்து மொச்சவரையும் பருத்தியில் மென்மையும் உறுதியும் தரமும் கொண்ட இழை தரவல்ல நெட்டை இழைப்பருத்தியும் உயர் விளைச்சல் திறன் கொண்டவை.

திசுவளர்ப்பின் மூலம் நெல், பார்லி, கோதுமை, சோளம், பீட்ரூட் போன்ற பயிர்களில் புதிய இரகங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் பயிரிடப்படும் பல்வேறு பயிர்களிலும் பல்வேறு வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த பண்ணையம்

வேளாண்மைத் தொழிலோடு வேளாண்மை சார்ந்த பிற தொழில்களான கால்நடை வளர்ப்பு, வேளாண்மைக் காடுகள் வளர்ப்பு, மரம் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற வருமானம் தரும் தொழில்களையும் இணைத்து ஒருங்கிணைந்த பண்ணையமுறை கடைப் பிடிக்கப்படுகின்றது.

ஒருங்கிணைந்த மானாவாரி சாகுபடி

தமிழகத்தில் மானாவாரி நிலப்பரப்பு கூடுதலாகும். மானாவாரி சாகுபடியில் அதிக விளைச்சலைப்பெற ஏற்ற பயிரைத் தேர்ந்தெடுத்தல், ஒவ்வொரு பயிருக்கும் ஏற்ற இரகங்களைத் தேர்ந்தெடுத்தல், மானாவாரி நில அமைப்புக்கு ஏற்ற முறையில் நிலம் தயார் செய்தல், வறட்சியை எதிர்க்கின்ற சக்தியைப் பெற விதைகளைக் கடினப்படுத்துதல், இயற்கை உரங்கள், நுண்ணுயிர் உரங்கள் போன்றவற்றைப் பயிருக்கு ஏற்றவாறு இடுதல், விதை நேர்த்தி செய்தல், மானாவாரி நிலத்திற்கேற்ற நீர் நிர்வாகம் செய்தல், பயிர்க்காப்பினை மேற்கொள்ளல் போன்ற ஒருங்கிணைந்த தொழில் நுட்பங்கள் பின்பற்றப்படுகின்றன.

நீர் வேளாண்மை

பயிர்களின் விளைவுத்திறனைக் கூட்டுவதில் நீர் முக்கியமான அங்கம் வகிக்கின்றது. நீரின் தேவையை நிறைவேற்றுவதில் கால்வாய், கண்மாய், கிணறு ஆகியவை பெரும்பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் 1950 முதல் 1980 ஆம் ஆண்டு வரை உள்ள இடைப்பட்ட 30 ஆண்டுகளில் வேளாண்மைக்குப் பயன்படும் கால்வாய்த் தண்ணீர் 37.3 விழுக்காட்டிலிருந்து 32.9 விழுக்காடாகவும், கண்மாய்ப்பாசனம் 36.7 விழுக்காட்டிலிருந்து24.6 விழுக்காடாகவும் குறைந்திருக்கின்றது. ஆனால் கிணற்றுப் பாசனம் 23.5 இலிருந்து 41.6 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. இது நிலத்தடிநீரைப் பயன்படுத்துவதில் உள்ள முன்னேற்றத்தை வெளிப்படுத்துகின்றது. தமிழகத்தில் 31.47 இலட்சம் எக்டர் நிலப்பரப்புக் கிணற்று நீரைப்பயன்படுத்தும் வாய்ப்பைக் கொண்டுள்ளது.

ஊட்டச்சத்து நிர்வாகம்

பயிர்ச்சாகுபடியில் உற்பத்தியைப் பெருக்கவும் நிலவளத்தைப் பாதுகாக்கவும் பயிர்களின் தேவையை அறிந்து இயற்கை உரம், செயற்கை உரம், உயிர் உரம், நுண் சத்து உரம் ஆகியவற்றைக் கொண்டு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் மேற்கொள்ளப் படுகின்றது. இயற்கை உரங்களான பண்ணை எரு, மாட்டு எரு, ஆட்டு எரு, ஆட்டுக் கிடாவைத்தல், கம்போஸ்ட் உரம், சர்க்கரை ஆலைக் கழிவு, குளத்து வண்டல், பறவைகளில் எச்சங்கள், பசுந்தழைப் பயிர்களான தக்கைப்பூண்டு, சணப்பு, கொழுஞ்சி போன்றவை சிறந்த இயற்கை உரங்கள். அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா, ரைசோபியம், நீலப்பச்சைப்பாசி, அசோலா போன்றவை சிறந்த உயிர் உரங்கள். இராசயன உரங்களில் யூரியா, சூப்பர் பாஸ்பேட், மூரியேட் ஆப் பொட்டாஸ் போன்றவையும், கால்சியம், மக்னீசியம், கந்தகம் போன்ற இரண்டாம் நிலை உரங்களும் துத்தநாகம், இரும்பு, தாமிரம் போன்ற நுண் சத்துக்களும் பயிர் விளைச்சலுக்கும் மண் வளத்திற்கும் சிறந்தவை.

பயிர்க்காப்பு

பூசணம் (Fungus), பேக்டீரியா, பூக்கும் தாவர ஒட்டுண்ணிகள், நூற்புழுக்கள் (Nematodes), நச்சுயிரிகள் (Viruses) போன்ற உயிருள்ள நோய்க்காரணிகள், ஊட்டக் குறைவு, நிலத்தின் தீயதன்மை,  காற்றில் நிலவும் குறைபாடுகள் போன்ற உயிரற்ற நோய்க் காரணிகள் போன்றவை பயிர்நோய்களுக்குக் காரணமாக அமைவதை இன்று அறிந்துள்ளோம்.

தவிர்த்தல் (Exclusion), அழித்தல் (Eradication), காத்தல் (Protection), பூச்சி மற்றும் நோய்தடுக்கும் சக்தியூட்டல் (Immunization) ஆகிய நான்கு அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றிப் பூச்சிகளையும் நோய்களையும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பின்பற்றப் படுகின்றன.

நோய்களைக் கட்டுப்படுத்துவதில் பூசணக் கொல்லிகள் பயன்படுத்தப் படுகின்றன. இவை நோய்களைக் கட்டுப் படுத்தும் திறனை ஓரளவு பெற்றிருந்தாலும்கூட பல்வேறு தீயவிளைவுகளை ஏற்படுத்து கின்றன. சுற்றுப்புறத் தூய்மைக்கேட்டினைத் தோற்றுவிப்பதுடன் பயிரினங்களுக்கும் உயிரினங்களுக்கும் கேடுவிளைவிக்கும் இயல்பைக் கொண்டிருக்கின்றன. எனவே பயிர் நோய்க்கட்டுப்பாட்டில் பூசணக் கொல்லிகளை இயன்றளவு தவிர்த்து மாற்றாகப் பல்வேறு புதிய அணுகுமுறைகளை மேற்கொள்வதற்கு வாய்ப்புப் பெருகி வருகின்றது.

அங்ககப் பொருட்களை நிலத்தில் இட்டு மண் வழிப்பரவும் பல நோய்களைக் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு இடப்படும் பொருட்களில் பசுந்தழை உரம், தொழு உரம், கம்போஸ்ட், பிண்ணாக்கு முதலியவை முக்கியமானவை.

எதிர் நுண்ணுயிரிகளைப் (AntagoOnists) பயன்படுத்தி நோய்க் காரணிகளைக் கட்டுப்படுத்தலாம். இதனால் நோய்க் காரணிப் பெருக்கம் குறைவதுடன் நோய்க் காரணியின் செயல்திறனும் கட்டுப்படுத்தப்படுகின்றது. விதையின் மேல்புறத்தில் உள்ள நோய்க் காரணிகளை அழித்தல், மண்வழிப்பரவும் நோய்க் காரணிகளிலிருந்து பாதுகாப்பளித்தல் நன்மை பயக்கும் உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்காதிருத்தல், உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம் ஆகிய வற்றுடன் இணையும் தன்மை ஆகிய இயல்புகளை டிரைகோடெர்மா போன்ற எதிர் நுண்ணுயிரிகள் கொண்டுள்ளன. டிரைகோ டெர்மா (Trichoderma) லேட்டிசீரியா ஆர்வாலில் (Laetisaria Arvalis), கிளையோகி லேடியம் வைரன்ஸ் (Gliocladium Virens) போன்ற பூசணங்களும், பேசில்லஸ் சப்டில்ஸ் (Bacillus Subtilis), சியுடோமோனஸ் ப்ளாரசென்ஸ் (Pseudonomas Fluorescens) போன்ற பேக்டீரி யாவும் பல்வேறு நோய்க் காரணிகளைக் கட்டுப்படுத்தும் எதிர் நுண்ணுயிரிகள் ஆகும்.

செடிகளின் வேர்ப்பாகத்தில் பரவும் திறனுடைய நன்மை பயக்கும் வேரூட்டப் பூசணங்கள் பல உள்ளன. இவற்றினால் பயிர் வளர்ச்சி கூடுதல், கூடுதலான நுண்ணூட்டம் கிடைத்தல், மண் மூலம் நோய்களைப் பரப்பும் நோய்க் காரணிகளைப் கட்டுப்படுத்தல் போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன. குளோமஸ் பேசிகுலேட்டஸ் (Glomus Fasciculatus), குளோமஸ் மோசே (Glomus Mosseae) போன்ற வேரூட்டப் பூசணங்கள் தக்காளி வாடல், கொண்டைக்கடலை வாடல், உளுந்து வேரழுகல் போன்ற நோய்களுக்குக் காரணமான பூசணங்களின் நோயுண்டாக்கும் செயல்திறனைக் குறைக்கும் இயல்பைப் பெற்றிருக்கின்றன.

தாவரப் பொருட்கள் (Plant Products) பூசண வளர்ச்சி மற்றும் பூசணவித்து முளைத்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன. பொதினா, வெங்காயம், ஆகியவற்றின் சாற்றில் நெல் விதைகளை நனைத்து வைத்திருப்பதன் மூலம் செம்புள்ளி நோய்க்குக் காரணமான பூசணம் கட்டுப்படுத்தப்பட்டு முளைப்புத்திறன் கூடுவதுடன் வலுவான நாற்றுக்களும் உண்டாகின்றன. தக்காளி விதைகளை வெற்றிலைச் சாற்றில் 20 விழுக்காடு அடர்வில் ஆறுமணி நேரம் நனைத்து வைத்திருந்து நாற்றுப் பாவுவதால் தக்காளி நாற்றழுகல் நோய்க்குக் காரணமான பித்தியம் அபோனிடர் மேட்டம் என்ற பூசணம் கட்டுப்படுத்தப்பட்டு விதைகளின் முளைப்புத்திறன் கூடுகின்றது. வாழைக்காய்களின் காம்பின் வேப்ப எண்ணெய் 1 விழுக்காடு அல்லது துளசி 10 விழுக்காடு கரைசலில் நனைத்து வைத்திருப்பதால் சேமிப்பின் போது ஏற்படும் பழம் அழுகல் நோய் குறைகின்றது. வேப்ப எண்ணெய் 3 விழுக்காடு, வேப்பமுத்துச் சாறு 5 விழுக்காடு ஆகியவற்றைத் தெளிப்பதால் நெல்லில் கதிர்உறை அழுகல் (Sheath Rot) மற்றும் செம்புள்ளி, நிலக்கடலையில் துரு (Rust) ஆகிய நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

வேளாண் அறிவியலில் கணிப் பொறிகள் பல்வேறு வழிகளில் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. வானிலை மாற்றங்களைக் கணக்கிட்டுப் பூச்சிகளின் பெருக்கத்தை அறிய மாதிரிகளைக் (Simulation Models) கணிப்பொறிகளைப் பயன்படுத்தி செயல்படுத்தலாம். இதனால் ஏற்ற நேரத்தில் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வழிவகுக்கும். பயிர் மூலக்கூறு உயிரியல் (Plant Molecular Biology) முறைகளைப் பயன்படுத்தி, உயர்த்தொழில் நுட்பங்களின் (Biotechnology) மூலம் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு இரகங்கள் உருவாக்கமுடியும். மிதமான எதிர்ப்புத் திறனுடைய இரகங்கள் மற்ற ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக முறைகளோடு இணைத்துச் செயல்படுவது பலனளிக்கும். இனக்கவர்ச்சி ஊக்கிகள் (Sex Pheremone) பூச்சிகளிலிருந்து பிரித்தறியப்பட்டுச் செயற்கையாகத் தயார் செய்யப்பட்டுப் பொறிகளில் பயன்படுத்தி பூச்சிகளைக் கவர்ந்தழிக்க இயலும். பூச்சிகளின் பெருக்கத்தை இயற்கையாகவே கட்டுப் படுத்தும் இயற்கை எதிரிகள் உள்ளன. இவற்றை வயல்வெளிகளில் பாதுகாப்பதாலும் செயற்கையாக உற்பத்தி செய்து வயல்களில் விடுவதன் மூலமும் பூச்சிகளைக் கட்டுப் படுத்தலாம். இரை விழுங்கிகள், ஒட்டுண்ணிகள், பூசணங்கள், பேக்டீரியா, நச்சுயிரிகள் போன்றவற்றைப் பெருமளவில் பயன்படுத்திப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வாய்ப்புள்ளது.

உணவுக்காளான்

அறிவியல்வளரக் காளான் பற்றிய ஆய்வுகள் பெருகிவருகின்றன. இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவிற்கு வந்த பர்மிய நாட்டு அறிவியலாரான திரு. சுகோவையில் வைக்கோல் காளான் வளர்க்கும் முயற்சியில் 1940 ஆம் ஆண்டில் ஈடுபட்டார். அம்முயற்சியைத் தொடர்ந்து திரு. கே.எம். தாமஸ் குழுவினர் (1943) வால்வேரியெல்லா வகையைச் சேர்ந்த வைக்கோல் காளான் வளர்ப்பு நுணுக் கங்களைக் கண்டறிந்து வெளியிட்டனர். தமிழகத்தில் அகோரிகஸ் பைஸ்போரஸ் என்ற இனத்தைச் சேர்ந்த ஐரோப்பியக் காளான் வளர்க்கின்ற ஆய்வினை முதல் முதலில் 1970 ஆம் ஆண்டு  முனைவர் நா. சண்முகம், முனைவர் கா. சிவப்பிரகாசம் ஆகியோர் மேற்கொண்டனர். தற்பொழுது உதகமண்டலம், கொடைக்கானல் போன்ற பகுதிகளில் மிகப்பெரிய அளவில் இக்காளான் வளர்ப்புப் பண்ணைகள் நடைபெற்று வருகின்றன.

பிளிரோட்டஸ் சஜோர்காஜு என்ற சாம்பல் நிறச் சிப்பிக்காளானைப்பற்றிய ஆய்வினைத் தமிழகத்தில் 1975 ஆம் ஆண்டு முனைவர் கோ. அரங்கசாமி குழுவினர் மேற்கொண்டனர். இக்காளான் வளர்ப்பு நுணுக்கங்கள் பற்றிய ஆய்வுக்காக 1980 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் திரு. கா. சிவப்பிரகாசம் பி.எச்.டி. பட்டம் பெற்றார். கேலோசைபே இண்டிகா என்ற பால்காளான் வளர்ப்பு நுணுக்கங்களை முனைவர் கா. சிவப்பிரகாசம் மற்றும் முனைவர் நா. சண்முகம் ஆகியோர் தமிழகத்தில் வெளிப்படுத்தினர். பிளிரோட் டஸ் சிட்ரினோபைலியோட்டஸ் என்ற புதிய வெள்ளைச் சிப்பிக்காளானை முதன் முதலில் 1987 ஆம் ஆண்டு கண்டறிந்து முனைவர் கா. சிவப்பிரகாசம் குழுவினர் வெளிப்படுத்தினர். இக்காளான் கோ.1 சிப்பிக்காளான் என்று வெளியிடப்பட்டுள்ளது. பிளிரோட்டஸ் ஜமோர் என்ற புதிய வெள்ளைச் சிப்பிக் காளான் திருமதி. டி. கீதா, முனைவர் கா. சிவப்பிரகாசம் ஆகியோரால் 1990 இல் கண்டறியப்பட்டுள்ளது. இக்காளான் 1997இல் முனைவர் கா. சிவப்பிரகாசம் குழுவினரால் எம்.டி.யு. 1 சிப்பிக்காளான் என வெளியிடப்பட்டுள்ளது. பிளிரோட்டஸ் ஈஓஸ் என்ற சிப்பிக் காளான் முனைவர் மா. முத்துசாமி குழுவினரால் கண்டறியப்பட்டு 1996 இல், ஏ.பி.கே.1 என்று வெளியிடப்பட்டுள்ளது. காளான் பற்றிய ஆய்வுகள் தமிழகத்தில் நாளுக்குநாள் வளர்ந்து வருகின்றன.

இ. நாளை

  1. தேவைப்படும் உற்பத்தி

வேளாண்மை வளர்ச்சியில் நாம் ஒரு திருப்புமுனையை எதிர்நோக்கியிருக் கின்றோம். உணவு உற்பத்தி கடந்த 40 ஆண்டுகளில் மூன்று மடங்குக்கு மேலாகப் பெருகி நமது தேவையை நிறைவு செய்கின்றது. ஆயினும் மக்கட்பெருக்கம் கூடிவருவதால் உணவுத் தேவை அதிகரித்து வருகிறது. கி.பி.2000 ஆண்டில் தமிழகத்தில் மக்கள் தொகை 63.15 மில்லியன் ஆகவும் உணவு தானியங்களின் அளவு 112 லட்சம் டன்களாகவும் இருக்குமென்றும் இதனால் உருவாகும் இடைவெளி ஏறத்தாழ 22 லட்சம் டன்களுக்குக் கூடுதலாக இருக்குமென்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் மக்கட்பெருக்கத்திற்குத் தேவையான உற்பத்திப் பெருக்கம் தொடர்ந்து நடைபெறுவதற்கான வாய்ப்பினை உருவாக்க வேண்டும்.

  1. பயிர் மேம்பாடு

தேவைப்படும் உற்பத்திப் பெருக்கம்

 

 

 

 

பயிர்

2000ம் ஆண்டில் தேவைப்படும் அளவு (இலட்சம் டன்கள்) ஆண்டு தோறும் நடைபெறவேண்டிய உற்பத்திப் பெருக்கம் (விழுக்காடு)
நெல் 100.12 5.15
சோளம் 8.03 5.75
கம்பு 4.74 7.90
மக்காச் சோளம் 3.98 26.68
கேழ்வரகு 5.10 6.55
பிற தானியப் பயிர்கள் 1.95 6.26
பயறுகள் 265.08 29.29
எண்ணெய்வித்துக்கள் 42.45 12.01
பஞ்சு (இலட்சபேல்கள்) 20.00 51.52
கரும்பு 227.95 ….
காய்கறிகள் 90.75 10.24

 நெல் சாகுபடிப்பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதும் மக்கட் பெருக்கம் அதிகரித்து வருவதால் உற்பத்தி அதிக அளவில் தேவைப்படுவதும் வேலையாட்கள், நீர், பொருளாதார வசதிகள் குறைந்து வருவதும் பூச்சிகள் மற்றும் நோய்கள் பெருகிவருவதுமான ஒரு சூழ்நிலை நிலவுகின்றது. எனவே கூடுதல் நெல் உற்பத்தி இலக்கையடைய ஒரு எக்டரில் விளையும் தானிய மகசூலை மேலும் அதிகரிக்கவேண்டியது இன்றியமையாத தாகும். இந்நிலையில் பல்லாண்டு காலமாகப் பாதுகாக்கப்பட்டு வரும் நெற்கருவூலங்களைத் திறம்பட ஆய்ந்து பூச்சி, நோய், மண் குறைபாடுகள், தட்ப வெப்பச் சூழ்நிலைகள், தரமான  வகை போன் வற்றிற்கேற்ற வகையில் பண்டை இரகங்களைத் தேர்ந் தெடுத்துக் கரு ஒட்டுச் சேர்க்கையில் பயன்படுத்துதல் சிறந்த முறையாகும்.

இண்டிகா – சப்பானிகா இனக்கலப்பின் மூலம் ஆடுதுரை 27, பொன்னி போன்ற நெல்வகைகள் வெளிவந்திருக்கின்றன. மேலும் , இவ்வாராய்ச்சியைத் தொடர்ந்து நவீன உயிரியல் நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக உற்பத்தி காணும் இரகங்களை உருவாக்க வேண்டும்.

நெல் இரகங்களின் விளைதிறனை முழுமையாகப் பெறவும் ஒருநிலைப்படுத்தவும் நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளுக்கும் நோய்களுக்கும் எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களை உருவாக்குவதற்கு வாய்ப்புண்டு.

மகரந்தத்துகள் வழி இனப்பெருக்கம் திசுவரை மரபியலோடு தொடர்பு கொண்ட முறையாகும். இதன்மூலம் மரபுவழி வேறு பாடுகளை அதிகப்படுத்தவும் குறுகிய கால வித்துக்களைப்பெறவும், மிகுந்த வேறுபாடு கொண்ட இரகங்களைக் கருவொட்டுச் சேர்ந்து உண்டாகும் முதல் சந்ததியில் பதர்கள் அதிகமாவதைத் தடுக்கவும் முடிகிறது.

வீரிய ஒட்டு நெல் இரகம் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு வீரிய ஒட்டு இரகங்களை உருவாக்க வேண்டும்.

தமிழகத்தில் இதுவரை 64 உயர் விளைச்சல் பயறு இரகங்கள் வெளியிடப் பட்டுள்ளன. துவரையில் ஐ.பி.எச்.732 என்ற வீரிய ஒட்டுத்துவரை இரகம் தோந்தெடுக்கப் பட்டுள்ளது. மானாவாரிக்கேற்ற பயறு இரகங்கள், குறுகிய காலப் பயறு வகைகள், நெல் தரிசு நிலங்களுக்கேற்ற பயறு இரகங்கள், காய்கறிகளுக்கு ஏற்ற பயறு வகைகள் போன்றவை தொடர்ந்து வெளிவர வேண்டும்.

பருத்தியில் எம்.சி.யு.5, எம்.சி.யு.7, எம்.சி.யு.10, டி.சி.எச்.பி.213, சுவின், எல்.ஆர்.ஏ.5166, கே.10, பையூர் 1, ஏ.டி.டி 1, எச்.பி.224 போன்ற இரகங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குப் பரிந்துரைக்கப் படுகின்றன. வீரிய ஒட்டுப்பருத்தி இரகங்கள் மேலும் வெளிவரும் வாய்ப்புள்ளது.

பல்வேறு பயிர்களிலும் உயர் விளைச்சல் திறன் கொண்ட இரகங்களை உருவாக்குதல் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

உயிரியத் தொழில் நுட்பம்

பயிர் விளைச்சலைக் கூடுதலாக்கும் நற்பண்புகளைத் தாங்கிவரும் மரபுக் கூறுகளைப் பயிரினங்களில் புகுத்தி மேம்பட்ட புதிய பயிர்வகைகளை உருவாக்குவதற்காகக் கலப்பினச் சேர்க்கை முறை (Crossing Method) இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அண்மையில் உயிரியத் தொழில் நுட்பத்தினைக் கடைப்பிடித்துப் புதிய வகைகளை உருவாக்க முடியும் என்பது தெளிவாகியிருக்கிறது. இம்முயற்சியின் முதல்படியாகப் பேக்டீரிய மரபுக் கூற்றுத் தொகுதிகள் சில பிரித்தெடுக்கப்பட்டு அவற்றைத் தாவர உயிரணு, இழைமம், மகரந்தம், உயிர்மம் ஆகியவற்றுள் இட்டுப் பண்பேற்றம் அடையச் செய்து அவற்றிலிருந்து மறுவளர்ச்சி பெற்ற புதிய பயிர் வகைகள் உருவாக்கப் பெற்று இவை பண்பேற்றம் பெற்ற பயிர் வகைகள் என அழைக்கப்படுகின்றன. அடுத்தபடியாக, பேக்டீரிய மரபுக் கூற்றுத் தொகுதிகளைத் தாங்கிவரும் பயிர்வகைகள் புதிதாகக் கிடைக்கப்பெற்ற மரபுக் கூறுகளை ஒதுக்கித் தள்ளிவிடாமல் மரபியல் விதிகளுக்குட்பட்டு அடுத்த தலைமுறைக்கும் தடையின்றி செல்வதற்கு அனுமதிக்கின்றனவா என்பது குறித்தும் ஆய்வுகள் ஆரம்பமாகியிருக் கின்றன.

தற்பொழுது பண்பேற்ற ஆய்வுகள் நடத்த ஏற்ற பேக்டீரிய மரபுக் கூற்றுத் தொகுதிகளில் சிறந்தவையாக ஹைக்ரோமைசின் எனும் நுண்ணுயிரெதிரிக்கான எதிர்ப்புத்தன்மை அளிக்கும் மரபுக்கூறு மற்றும் தாவரங்களில் காணப்படாத ஆனால் பேக்டீரியாவில் உள்ள பீட்டா குளுக்யுரோனிடேஸ் எனப்படும் பேக்டீரிய  நொதிக்குக் காரணமான மரபுக்கூறு ஆகிய இரு மரபுக் கூறுகளே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. நெல், புகையிலை முதலான பயிர்களில் இவ்விரண்டு மரபுக் கூறுகளைப் புகுத்தி, பண்பேற்றம் பெற்ற பயிர்வகைகள் ஆய்வக அளவில் உருவாக்கப் பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து பயிர்நோய் எதிர்ப்புத்தன்மை, பூச்சிகளை எதிர்க்கும் தன்மை, வறட்சி தாங்கும் தன்மை போன்ற வற்றை அளிக்கும் மரபுக்கூறுகளைப் பயிரினங்களில் உட்புகுத்தும் முயற்சிகள் பெருமளவில் நடைபெறவிருக்கின்றன.

  1. பயிர் மேலாண்மை

3.1 ஒருங்கிணைந்த பண்ணையம்

பயிர்த் தொழிலோடு பட்டுப்பூச்சி வளர்ப்பு, கோழிவளர்ப்பு, காளான் வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, முயல் வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, பறவைகள் வளர்ப்பு, காடை வளர்ப்பு, மீன் வளர்ப்புப் போன்ற பிற தொழில்களையும் இணைத்து ஒருங்கிணைந்த பண்ணையம் மேற்கொள்ளல் வருவாய் கூடுவதற்கு வழிகோலும். ஒருங்கிணைந்த பண்ணையத் திற்கேற்ற சிறந்த சார்புத் தொழில்களைக் கண்டறிய வேண்டும்.

3.2 தரிசுநில மேம்பாடு

தமிழகத்தில் உள்ள தரிசு நிலங்களில் 9 லட்சம் ஏக்கர் பரப்பளவு தீவனப்பயிர், தோட்டப்பயிர் மற்றும் சமூகக்காடுகள் வளர்ப்பதற்கு ஏற்றதாக உள்ளது. எனவே தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றி யமைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

3.3. களர் உவர் நில மேம்பாடு

தமிழ்நாட்டில் 3.19 லட்சம் எக்டர் அளவில் களர் மற்றும் உவர் நிலம் காணப் படுகின்றது. களர்த்தன்மையையும் உவர்த் தன்மையையும் மாற்றுவதற்கான தொழில் நுட்ப முறைகளைக் கையாள்வதன் மூலம் ஆண்டு ஒன்றிற்கு 3.49 லட்சம் டன்கள் தானிய உற்பத்தியைக் கூடுலாக்கும் வாய்ப்புள்ளது.

3.4. பாசன மேம்பாடு

பாசன அமைப்புகளை மேம்படுத்தினால் நீர்ப்பாய்ச்சும் பரப்பளவு 25 முதல் 40 விழுக்காடு கூடுதலாகி உற்பத்தித்திறன் 14.5 விழுக்காடு கூடுதலாம் எனக் கணக்கிடப் படுகின்றது.

தமிழகத்தில் ஏறத்தாழ 32,829 ஏரிகள் உள்ளன. இவற்றின் நீர்த் தேவையைப் பூர்த்திசெய்தல், சேமிப்பு, விநியோகம் ஆகிய முன்றையும் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தினால் கூடுதல் உற்பத்தியைப் பெறமுடியும்.

நிலத்தடி நீர் 50 விழுக்காடு வரை இன்னும் பயன்படுத்தாத நிலையிலே உள்ளதாகக் கணக்கிடப்படுகிறது. தற்பொழு துள்ள நிலத்தடி நீரின் அளவுப்படி 11 லட்சம் கிணறுகள் கூடுதலாகத் தோன்றலாம். இதன் மூலம் கூடுதல் விளைச்சலைப் பெற வாய்ப்புள்ளது.

ஆற்றுநீரைச் சிக்கனப்படுத்த பண்ணை மேம்பாடு செய்ய வேண்டும்.  தமிழ்நாட்டிற்குத் தென்னக நதிநீர் இணைப்பு மூலம் ஆற்றுப்படுகையிலிருந்து நீரைக் கொண்டு வரவேண்டும். சொட்டு நீர்ப்பாசனம் திராட்சை, தென்னை, ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற அகன்ற இடைவெளிப் பயிர்களில் பயன்தரும், தெளிப்பு நீர்ப்பாசனம் மலைப்பகுதிப் பயிர்களில் நீர்த் தேவையைக் குறைப்பதற்குப் பயன்படும்.

3.5. உர மேலாண்மை

உணவு உற்பத்தியைப் பெருக்குவதில் மண்ணின் பங்கு முக்கியமானது. மண் வளம் உடையதாகவும் விளைதிறன் உடையதாகவும் இருக்க இயற்கை எருக்கள் முக்கியமானவை. இயற்கை எருக்களைச் செடிகளின் கழிவுகள், விலங்குகளின் கழிவுகள், பசுந்தழை உரங்கள் மூலம் பெறுகிறோம். இவை தவிர எண்ணெய் வித்துக்களின் பிண்ணாக்குகள், மீன் கழிவுகள், பறவைகளின் கழிவுகள் போன்றவை மூலமும் கிடைக்கின்றன. இருந்தாலும் தொழு எரு, சாண எரிவாயுக் கழிவு, பசுந்தாள் உரங்கள், கம்போஸ்ட் ஆகிய இயற்கை எருக்களே பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கை உரங்களின் மிக எளிதாகக் கிடைக்கக் கூடியது பசுந்தாள் உரம். தக்கைப் பூண்டு, சீமை அகத்தி, கொழுஞ்சி, சணப்பு, அவுரி, ஆவாரை, பூவரசு, எருக்கு, புங்கம், நொச்சி போன்றவை பசுந்தாள்-பசுந்தழை உரமாகப் பயன்படுகின்றன.

ஆசாஸ்பைரில்லம், ரைசோபியம், அசோலா, நீலப்பச்சைப் பாசி போன்ற உயிர் உரங்கள் பயிர் நேரடியாக எடுத்துக் கொள்ள முடியாத காற்று மண்டலத்திலுள்ள தழைச் சத்தை நிலைப்படுத்திப் பயிருக்குக் கிடைக்கச் செய்கின்றன. மைக்கோரைசா, பாஸ்போ பேக்டீரியம் போன்றவை நிலத்தில் கிட்டாநிலையில் இருக்கும் மணிச்சத்தினைப் பயிருக்குக் கிடைக்கும் நிலைக்கு மாற்றம் செய்ய உதவுகின்றன. திறன் வாய்ந்த உயிர் உரங்களைக் கண்டறியவேண்டும். இயற்கை எருக்கள், செயற்கை உரங்கள், உயிர் உரங்கள் ஆகியவற்றைப் பயிருக்கேற்பத் தேர்ந்தெடுத்து ஒருங்கிணைந்த உரநிர்வாகத்தைக் கடைப் பிடிக்க வேண்டும்.

  1. பயிர்க்காப்பு

4.1. பூச்சி மேலாண்மை

பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் உழவியல் முறைகள், பூச்சிக் கொல்லிகள், உயிரியல் முறைகள் மற்றும் இனக்கவர்ச் சிப்பொறி, விளக்குப்பொறி, பூச்சிகளின் வளர்ச்சிப்பொறி, பூச்சிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வளர்ச்சி ஊக்கிகள் (Hormones) ஆகியவை பயன்படுகின்றன.

ஒட்டுண்ணிகளையும் ஊனுண்ணி களையும் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்திசெய்து வயல்களில் விடுவதன் மூலம் இவை அவற்றின் இரைப்பூச்சிகளைத் தேடி அழித்து விடுகின்றன. ஒட்டுண்ணிகளான டிரைக்கோகிரம்மா, பெத்திலிட், யூலோபிட் ஆகியவையும் ஊனுண்ணிகளான கிரை சோபோ, பொறிவண்டுகள் போன்றவையும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர, பூச்சிகளைத் தாக்கி நோய் உண்டாக்கி அழிக்கும் பேக்டீரியா, பூசணம், நச்சுயிரி (Virus) போன்றவற்றைப் பயன் படுத்தியும் பலபூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

அமெரிக்கன் காய்ப்புழுவைக் கட்டுப் படுத்த என்.பி.வி. என்ற நச்சுயிரியும், கரும்பு இளங்குருத்துப் புழுவைக் கட்டுப்படுத்த கிரானுலோசிஸ் என்ற நச்சுயிரியும் தென்னை காண்டாமிருக வண்டினைக் கட்டுப்படுத்த பேகுலோவைரஸ் என்ற நச்சுயிரியும் வைரமுதுகுத்தத்துப் பூச்சியைக் கட்டுப்படுத்த பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் என்ற பேக்டீரியாவும் பரவலாகப் பயன்படுத்தப் படுகின்றன. திறன் வாய்ந்த ஒட்டுண்ணிகள், ஊனுண்ணிகள் போன்றவற்றைக் கண்டறிந்து அவற்றைப் பெருவாரியாகப் பெருக்குவதற் குரிய வாய்ப்புகளையும் பூச்சிகளைத்தாக்கும் திறன் வாய்ந்த பூசணம், பேக்டீரியா, நச்சுயிரி போன்றவற்றை வணிகரீதியாகப் பெருக்கு வதற்குரிய வாய்ப்புகளையும் வருங்காலத்தில் மேலும் உருவாக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த பூச்சிக்கட்டுப்பாடு முறைகளை ஒவ்வொரு பயிருக்கும் உருவாக்க வேண்டும்.

4.2. நோய் மேலாண்மை

நோய்களைக் கட்டுப்படுத்துவதில் இரசாயன மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன. இவை நோய்களைக் கட்டுப் படுத்தும் திறனைப் பெற்றிருந்தாலும் பல்வேறு தீய விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. எனவே, இவற்றை ஓரளவு தவிர்ப்பதுடன் பல்வேறு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

4.2.1. அங்ககப் பொருட்கள்

அங்ககப் பொருட்கள் நிலத்தில் இட்டு மண் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப் படுத்தலாம். பசுந்தழை உரம், தொழுஉரம், பிண்ணாக்கு, கம்போஸ்ட் போன்றவை முக்கியமானவை. இவற்றை நிலங்களில் இடுவதால் ஒரு சில நோய்க் காரணிகளின் பொருக்கம் தடைப்பட்டு நோய்களும் குறைகின்றன. ஆனால் சில நோய்க்காரணிகள் பெருகி நோய்களும் கூடுதலாகின்றன. எனவே இவற்றை விரிவாக ஆய்ந்து பயனுள்ள அங்ககப் பொருட்களைக் கண்டறிந்து எதிர் நுண்ணுயிரிகளைப் பெருக்கவும் நோய்க் காரணிகள் பெருக்கத்தைக் குறைக்கவும் ஏற்ற வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.

4.2.2. எதிர் நுண்ணுயிர்கள்

எதிர் நுண்ணுயிர்களைப் பயன்படுத்தி நோய்களைக் கட்டுப்படுத்தலாம். டிரைகோ டெர்மா, கிளையோகிலேடியம் வைரன்ஸ், லேட்டிசீரியா ஆர்வாலிஸ் போன்ற பூசணங்களும், சியுடோமேனஸ் ப்ளாரசென்ஸ், பேசில்லஸ் சப்டிலின்ஸ் போன்ற பேக்டீரியாவும் பல்வேறு நோய்க் காரணிகளைக்  கட்டுப்படுத்தும் திறன் வாய்ந்த எதிர் நுண்ணுயிர்கள் தவிர திறன் வாய்ந்த பல்வேறு புதிய எதிர் நுண்ணுயிர்கள் ஆகும். இதுவரை கண்டறியாத எதிர் நுண்ணுயிர்கள் கண்டறியப்படவேண்டும். இவற்றை வணிகரீதியில் பெருக்கம் செய்யவும் விதைகளிலும், நிலத்திலும் எளிய முறையில் வளர்த்து நோய்களைத் தவிர்ப்பதற்கான முறைகள் உருவாக்கப்படவும் வாய்ப்புள்ளது.

4.2.3. தாவரப் பொருட்கள்

தாவரங்கள் 5280 வகைகளை ஆய்ந்தலில் 1134, 346,92,90 வகைகள் முறையே பூச்சிக் கொல்லி (Insecticidal), பூசணக் கொல்லி (Fungicidal), பேக்டீரியக் கொல்லி (Bactericidal), நச்சுயிர்க்கொல்லி (Antiviral) ஆகிய இயல்புகளைக் கொண்டுள்ளவையென அறியமுடிகின்றது. எனவே, இவைபோன்று நோய்களையும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட தாவரங்களைக் கண்டறிவதற்கு வாய்ப்புள்ளது. அத்துடன் அவற்றிலுள்ள நச்சுப்பொருட்களைப் பிரித்தெடுத்து வணிகரீதியில் பெருக்கி வழங்குகின்ற வாய்ப்புகளும் உள்ளன.

4.2.4. எதிர்ப்புத் திறன் கொண்ட வகைகள்

நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளை உருவாக்குதல் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு எளிதான முறையாகும். கோ 36, கோ 37, கோ 41, கோ 42, கோ 43, கோ 44, பையூர் 1, பொன்மணி ஆகியவை நெல்லின் குலைநோய்க்கும், கோ 1 மக்காச்சோளம் அடித்தேமல் நோய்க்கும், ஏ.எல்.ஆர். 1 நிலக்கடலை இலைப்புள்ளி, துருநோய்களுக்கும் ஓரளவு எதிர்ப்புத் திறனைக் கொண்டுள்ளன. இனப்பெருக்க முறைகளைக் கையாண்டு ஒவ்வொரு பயிரிலும் பல்வேறு நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளை உருவாக்குவதற்கு வாய்ப்புள்ளது. திசுவளர்ப்பு நுணுக்கத்தைக் (Tissue Culture) கடைப்பிடித்து நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்ட செடிகளை உருவாக்க முடியும்.

நோய் எதிர்ப்புத் திறனைக் கொண்டுள்ள பயிர் வகைகளில் பீனாலிக்ஸ் (Phenolics), பைட்டோ அலக்சின்ஸ் (Phytoalexins), லிக்னின் (Lignin) ஆகியவை கூடுதலாக உள்ளன. இவை மூன்றும் உற்பத்தியாவதில் பெனைல் அலானின் அம்மோனியாலையேஸ் (Phenylalanine Ammonialyase) சிறப்பான இடத்தைப் பெறும் நொதிப் பொருளாகும். அமினோ ஆக்சி ஆசிடேட் (Amino Oxy Acetate), அமினோ ஆக்சி-பி-பினைல் புரபியோனிக் அமிலம் (Amina Oxy-B-phenyl Propionic Acid) ஆகியவை இந்நொதிப் பொருளைக் கட்டுப்படுத்தும் இயல்புகளைக் கொண்டிருக் கின்றன. இந்நொதிப்பொருளின் அளவு குறையும் பொழுது நோய்க்கு எதிர்ப் புத்திறன் கொண்ட வகைகளும் நோய்க்கு இலக்காகும் நிலையை அடைகின்றன. அமினோ ஆக்சி அசிடேட், அமினோ ஆக்சி-பி-பினைல்-புரபியோனிக் அமிலம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் பெனைல் அலானின் அம்மோனியாலையேஸ் என்ற நொதிப் பொருளின் செயல்திறனை ஊக்குவிப்பதற்கும் காரணமான பண்பகத்தைக் (Gene) கண்டறிய வேண்டும். இத்தகைய பண்பகத்தைப் பிரித்தெடுத்து உயர்விளைச்சல் திறனைக் கொண்டுள்ள பயிர் வகைககளுக்கு மாற்றி பண்பகமாற்றிய வகைகளைத் தோற்று விப்பதால் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட உயர் விளைச்சல் வகைகளை உருவாக்க இயலும்.

4.4.5. பண்பக மாற்று நுணுக்கம் (Genetic Engineering)

கைட்டினேஸ் பண்பகம் (Gene) பயிர்களுக்கு நோய் எதிர்ப்புத் திறனைக் கொடுக்கக்கூடிய முக்கியமான பண்பகம் ஆகும். நச்சுப் பொருட்களைத் தோற்றுவிப் பதுடன் பூசண இவைகளையும் அழிக்கும் திறனையும் கைட்டினேஸ் என்ற நொதிப் பொருள் (Enzyme) கொண்டுள்ளது. டிரைகோடெர்மா என்ற எதிர் நுண்ணுயிரி இந்நொதிப் பொருளைத் தோற்றுவிக்கும் இயல்புடையது. ஆனால் நன்செய் நிலங்களில் பயிராகும் பயிர்களின் வேர்பாகத்தில் இந்த நுண்ணுயிரி எளிதில் பெருக்கமடைவதில்லை. ஆனால் சியுடோமொனஸ் பிளாரசென்ஸ் என்ற எதிர் நுண்ணுயிரி விரைவாகப் பெருக்கமடையும் இயல்புடையது. இருப்பினும் இந்த எதிர் நுண்ணுயிரியில் கைட்டினேஸ் என்ற நொதிப்பொருளைத் தோற்றுவிக்கும் திறன் குறைவாக உள்ளது. எனவே டிரைகோடெர்மாவிலுள்ள இதற்கான பண்பகத்தைப் பிரிந்தெடுத்து சியுடோமோனஸ் என்ற எதிர் நுண்ணுயிரிக்கு மாற்றினால் இந்த எதிர் நுண்ணுயிரி நன்செய் நிலங்களில் நெல் இலையுறைக் கருகல் (Sheath Blight) போன்ற நோயினைச் சிறப்பாகக் கட்டுப்படுத்த முடியும்.

இதற்கு மாற்றாக கைட்டினேஸ் பண்பகத்தை நெற்பயிருக்கு மாற்றி பண்பக மாற்றிய நெற்பயிரைக் (Transgenic Rice Plant) தோற்றுவித்தால் அப்பயிர் இந்நோயிக்கு எதிர்ப்புத் திறனைக் கொண்டிருக்கும். இவ்வாறு ஏற்ற பண்பகத்தை ஒரு நுண்ணுயிரிலிருந்து மற்றொரு நுண்ணு யிருக்கோ அல்லது பயிருக்கோ மாற்றி பல்வேறு பயிர்களிலும் நோய்க்கட்டுப் பாட்டுக்கு வழிவகுப்பதற்கு எதிர்காலத்தில் சிறப்பான வாய்ப்புள்ளது.

  1. உணவுக்காளான்

தமிழகத்திலே வால்வேரியெல்லா வால்வேசியா என்ற வைக்கோல்காளான், அகேரிகஸ் பைஸ்போரஸ் என்ற ஐரோப்பியக் காளான், பிளிரோட்டஸ்  சஜோர் – காஜு, பிளிரோட்டஸ் சிட்ரினோ பைலியேட்டஸ், பிளிரோட்டஸ் புளோரிடா, பிளிரோட்டஸ் ஜமோர் போன்ற சிப்பிக் காளான்கள் பல்வேறு பகுதிகளிலும் வளர்ப்பதற்கு ஏற்றவையாக உள்ளன. இவற்றிலே இயற்கையிலே நிலவும் வானிலையில் சிப்பிக்காளான் சிறப்பாக வளரும் வாய்ப்புள்ளது. வேளாண் கழிவுப் பொருட்களையும் தொழிற்சாலைக் கழிவுப் பொருட்களையும் பயன்படுத்திச் சிப்பிக் காளானை வளர்க்க இயலும். தமிழகத்தில் சிப்பிக்காளான் வளர்ப்பதற்கேற்ற வேளான் கழிவுப்பொருட்கள் ஆண்டுதோறும் ஏறத்தாழ 178 லட்சம் டன்கள். இவற்றில் 10 விழுக்காடு அளவுக்குக் காளான் வளர்க்கப் பயன் படுத்தினாலும் ஏறத்தாழ 9 லட்சம் டன்கள் காளான் உற்பத்தி செய்ய இயலும்.

வருங்காலத்தில் லென்டினஸ் எடோடஸ், ப்ளேம்முலினா வெலுட்டிபெஸ், டிரமேல்லா பூசிபார்மிஸ், ஆரிக்குளேரியா போன்ற காளான்களைத் தமிழகத்தில் வளர்க்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

பல காளான் பூசணங்கள் மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளன.  போமஸ் இக்னேரியஸ், போமஸ் போமென்டேரியஸ் ஆகியவை குருதியை விரைவில் உறையவைக்கும் இயல்பைப் பெற்றிருக் கின்றன. பல்வேறு ஹோமியோபதி மருந்துகளில் அமேனிடா மஸ்கேரியா இடம் பெறுகிறது. இருதய நோய்களைக் குணப் படுத்துவதில் பயன்படுத்தும் வாய்ப்புள்ளது.

வால்வேரியெல்லா வால்வேசியா, ப்ளேம்முலினா வெலுட்டிபெஸ் ஆகிய வற்றிலிருந்து பிரிந்தெடுக்கும் புரதத்தை, குருதி அழுத்தத்தைக் குறைப்பதிலும் கழலைத் திசுக்களுக்கு எதிராகவும் பயன்படுத்துவதற்கும் வாய்ப்புள்ளது. கேன்சர், இன்புளுயேன்சா ஆகியவற்றைக் குறைக்கும் திறனை லென்டினஸ் எடோடஸ் என்ற காளான் பூசணம் கொண்டுள்ளது. இது போன்ற அடிப்படை ஆராய்ச்சிகளை விரிவுபடுத்தி நடைமுறையில் காளான்களைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்தும் நிலை வளர வேண்டும்.

நார்க்கழிவு உரம் தயாரிப்பதற்குக் காளான் பூசணங்கள் பயன்படுகின்றன. பல்வேறு கழிவுப் பொருட்களை உரமாக மாற்றுவதற் கேற்ற காளான் பூசணங்களைக் கண்டறிவதற் கேற்ற ஆய்வுகள் மேலும் பெருக வேண்டும்.

பயிர் மேம்பாடு (Crop Improvement), பயிர் மேலாண்மை (Crop Management), பயிர்க் காப்பு (Crop Production) ஆகியவற்றில் பல்வேறு புதிய நுணுக்கங்கள் பெருகி தமிழகத்தின் வேளாண்மை வளம் வருங்காலத்தில் மேலும் சிறப்படையும் என்பதில் ஐயமில்லை.

துணை நூல்கள்

அரங்கசாமி, கோ. மற்றும் கா. சிவப்பிரகாசம், 1975. பயிர்களின் பேக்டீரிய நோய்கள். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர். ப.134.

இராமநாதன், கா.மு. மற்றும் ஆர். விஜயராகவன் (தொகுப்பு) 1994, 2000 ஆம் ஆண்டில் வேளாண்மை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர், ப.203.

சிவப்பிரகாசம், கா. 1973. தாவர நச்சுரி நோய்கள். உழவர் பயிற்சி நிலையம், கோவில்பட்டி. ப.90.

சிவப்பிரகாசம், கா. 1996, காளான் வளர்ப்பு, வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை. ப.120.

தமிழக அறிவியல் பேரவை. நான்காம் கருத்தரங்கு ஆய்வுச் சுருக்கமலர். 1996 (மே 17, 18) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர், ப.301.

Rangaswami, G (Ed) 1993. Prosperity 2000. Bharatiya Bhavan, Bombay.

Sivaprakasam, K. and K. Seetharaman (Ed) 1994. Crop Diseases.

Innovative Techniques and Management. Kalyani Publishers, New Delhi P.584.

கா. சிவப்பிரகாசம்

எம்.எஸ்.சி. (வேளாண்மை), பி.எச்.டி., ஆகிய தேர்வுகளில் முதன்மையும் பரிசுகளையும் பெற்ற இவர் 306 அறிவியல் கட்டுரைகளையும், 170 பொதுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.  சிப்பிக்காளான் பற்றிய ஆராய்ச்சிக்காக இவருக்கு பி.எச்.டி. பட்டம் வழங்கப்பட்டது.

பல தமிழ் நூல்களையும், Oyster Mushroom Production, Crop Diseases: Innovative Techniques and  Management ஆகிய ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார்.  இவர் மேற்கொண்ட சிறப்பான ஆராய்ச்சிக்காக மூன்று தங்கப்பதக்கங்களைப் பெற்றுள்ளார்.  உழவர் மேம்பாட்டுக்கேற்ற காளான் வளர்ப்பு தொடர்பான சிறந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படுத்தியதற்காக தமிழக அரசின் விருதும் பெற்றுள்ளார்.  தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசினையும் பெற்றுள்ளார்.

You Might Also Like