Star Mountain

My travels and other interests

சமூகம்தமிழ்நாடு நேற்று இன்று நாளை

உடல் ஊனமுற்றோர் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டோர் (1997)

உடல் ஊனமுற்றோர் மற்றும்
மனநிலை பாதிக்கப்பட்டோர்
கோபிகிருஷ்ணன்

உடல் ஊனமுற்றோர் சமூகத்தின் பயனுள்ள சம உரிமையுள்ள உறுப்பினர்களாகச் செயல்படும் வகையில் பல உதவிகள் கிடைக்கின்றன. உடல் ஊனமுற்றோர் தாழ்வாளர்கள் என்ற சிந்தனை மறைந்து எந்தப் பொறுப்புகளையும் ஏற்றுச் சிறப்புறச் செயல்படக் கூடியவர்கள் என்ற எண்ணம் சமூகத்தில் பரவலாக ஏற்பட வேண்டும்.

உடல் ஊனமுறுவதற்கு வறுமைக் காரணங்களும், நோய்க் காரணங்களும் உள்ளன. பார்வையற்றோர் சில துறைகளில் முன்னேறியுள்ளனர்.

மனநிலை குன்றியவர்களுக்குச் சிறப்புப் பள்ளிகள் தோன்றியுள்ளன. விளையாட்டு மூலமாகச் சிகிச்சைகள் தோன்றியுள்ளன. ஆனால், நோயாளிகளை அடித்துத் துன்புறுத்துவது இன்னும் முழுமையாக மறைந்து விடவில்லை.

இக்கட்டுரை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. முதல் பகுதி உடல் ஊனமுற்றோர் பற்றியும் இரண்டாம் பகுதி மனப் பாதிப்புக்கு உள்ளானோர் பற்றியும் விவரிக்கின்றன.

உடல் ஊனமுற்றோர்

கை, கால் முதலிய உறுப்புக்களை இழந்தோர், இளம்பிள்ளைவாதத்தினால் (Poliomyelitis) கை கால்கள் சூம்பிப் போனவர்கள், கை, கால் இல்லாமல் அல்லது கை கால் நீளத்தில் குறைவுடன் பிறப்பவர்கள் ஆகியோரைப் பற்றி முதலில் பார்ப்போம்.

கை, கால் ஊனத்திற்கான காரணங்கள் விபத்து, தொடர்ந்து புகைப்பதினால் விரல்கள் கறுத்து (Dry Gangrene) என்ற நிலை ஏற்பட்டுக் கை, கால்கள் பாதிக்கப்பட்டு, அறுவைச் சிகிச்சை மூலம் கை கால்கள் அகற்றப்படுதல் (Amputation), உடல் ரீதியான பிற காரணங்கள், இளம்பிள்ளைவாதம் முதலியன.

முன்பெல்லாம் கால் ஊனமுற்றோர், தாங்கு கட்டைகள் (Crutches) மூலமோ ஒரு நீண்ட கழியைக் காலில் வைத்துப் பொருத்திக் கட்டிக் கொள்வதன் (Peg leg) மூலமோ நடந்துசெல்வதைச் சாத்தியப்படுத்திக் கொண்டார்கள். இளம்பிள்ளைவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் ஊனத்தின் அளவுக்கு ஏற்பக் காலைத் தாங்கித் தாங்கி நடந்தார்கள் அல்லது தரையில் தவழ்ந்து நகர்ந்தார்கள் அல்லது தரையில் அமர்ந்து கைகளைக் கொண்டு உந்தித் தேய்த்து நகர்ந்தார்கள் அல்லது ஒரு தட்டையான பலகையில் நான்கு சிறு இரும்புச் சக்கரங்களைப் பொருத்தி அந்த அமைப்பின் மேல் அமர்ந்து சென்றார்கள்.

இப்பொழுது நிலைமை மாறியுள்ளது. ஆரம்பக் கட்டத்தில் சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் இயங்கிக் கொண்டிருந்து இப்பொழுது சென்னையின் கே.கே. நகர்ப் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு புனர்வாழ்வு மருத்துவ நிலையம் மற்றும் செயற்கை அவயவங்கள் நிலையம் (Government Institute of Rehabilitation Medicine and Artificial Limb Centre) கைகால் இழந்தோர்க்குச் சிறந்த முறையில் தொண்டு செய்துவருகிறது. செயற்கைக் கால்களும் கைகளும் இந்நிலையத்தில் தயாரிக்கப் படுகின்றன. இந்நிலையத்தின் கிளைகள் மதுரை, சேலம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் உள்ளன.

செயற்கைக் கால் மிகவும் லேசான, பளு இல்லாத ஒரு மரத்தால் செய்யப்படுகிறது. செயற்கைக் காலின் பாதத்தில் ஜோடுகள் (Shoes) பொருத்தப்படுகின்றன. சென்னைக் கால் (Madras Foot) என்ற சிறப்பு வகைச் செயற்கைக் காலும் இந்நிலையத்தில் தயாரிக்கப்படுகிறது. இந்தக் காலில் விரல்களும் நகங்களும் இருக்கும். அடிப்பாகத்தில் ஜோடுகளுக்குப் பதிலாகச் செருப்புப் பொருத்தப்பட்டிருக்கும். கோவிலுக்குள் செல்லும் முன்னும் சமையலறைக்குள் செல்லும் முன்னும் செருப்பைக் கழற்றி விடலாம். திருமணமானப் பெண்களுக்கென்றே இந்தக் கால்களில் மெட்டி வரையப்பட்டிருக்கும். தமிழ்நாட்டின் சமூகச் சூழலுக்குப் பொருந்திப்போகும் வகையில் இந்தக் கால்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தக் கால் குறிப்பாக இந்து மதத்தினருக்குப் பெரிதும் பயன்படும் வகையில் அமைந்திருக்கிறது. செயற்கைக் கால் பொருத்தப்பட்டவர்கள் ஊனம் இல்லாத பிறர்போல் நடந்து செல்கிறார்கள்.

செயற்கைக் கைகளும் தயாரிக்கப் படுகின்றன. தோற்றத்துக்கான கை (Cosmetic hand), இயங்கும் திறன் படைத்த கை (Functional Hand) இவ்விரு வகைக் கைகளும் தேவைக் கேற்பத் தயாரிக்கப்படுகின்றன. இயங்கும் கையில் பெருவிரலும் இன்னும் இரண்டு விரல்களும் இருக்கின்றன. ஒரு பொருளைப் பிடித்துக்கொள்ளுதல், கரண்டியால் சாப்பிடுதல், தலை வாரிக்கொள்ளுதல், எழுதுதல் போன்ற செயல்களைச் செய்ய இயங்கும் கை உதவுகிறது. தக்க மாற்றம் செய்து கொள்வதன் மூலம் மிதமான பாரத்தையும் தூக்கலாம்.

இளம்பிள்ளைவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செயற்கை அவயவங்கள் (Calipers) பொருத்தப்படுகின்றன. உடலியக்கப் பயிற்சியும் (Physiotherapy) அளிக்கப்படுகிறது. கால் மிகவும் மடங்கியிருந்தால் அறுவைச் சிகிச்சை (Corrective Surgery) செய்யப்பட்டுப் பின்பு அவயவங்கள் பொருத்தப்படுகின்றன.

இந்நிலையம் செயற்கைக் கை, கால்களுக்கும் அவயவங்களுக்கும் குறைந்த கட்டணமே வசூலிக்கிறது. மாநில அரசின் உதவியுடன் இது இயங்கிவருகிறது.

செயற்கை உறுப்புகளைப் பொருத்துவதுடன் மட்டும் இம்மையத்தில் பணி நின்றுவிடவில்லை. தையல், ரேடியோ அறிவியல், வாழ்த்து அட்டைகள் தயாரித்தல் போன்ற தொழில்களைப் பாதிக்கப் பட்டவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது. வேலை வாங்கித் தருவதையும் இம்மையம் மேற்கொண்டுள்ளது. ஊனமுற்றோர்க்கு மூன்று சக்கர சைக்கிள்களையும் இலவசமாக வழங்குகிறது.

உறுப்புகளை இழந்தோர்க்கு மனம் சார்ந்த சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இழப்புணர்வு, மனச்சோர்வு (Depression) போன்றவற்றோடுகூட ஒரு வினோதமான உணர்வு நிலை ஏற்படுகிறது. அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு இல்லாமல் இருக்கும் உறுப்பில் நமைச்சல் தோன்றுகிறது. வலி ஏற்படுகிறது. வலது கையை இழந்து ஒருவர் தான் மோதிரம் அணிந்து கொண்டிருப்பதாகவும் கைக் கடிகாரம் கட்டிக்கொண்டிருப்பதாகவும் உணர்கிறார். இந்த மாய உணர்வு (Phantom Sensation) சிலருக்கு உண்டாகிறது. உளவியல் ஆலோசனை (Counseling) மூலம் தீர்வு ஏற்படுகிறது.

சென்னையில் உடல் ஊனமுற்றோருக்குத் தொழில் பயிற்சி அளிப்பதற்காகவே கிண்டி என்ற இடத்தில் மத்திய அரசு நடத்தும் புணர்வாழ்வு மையம் ஒன்றும் இருக்கிறது. இங்குப் பல்வேறு தொழில்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

தவிர செயற்கை உறுப்புகளைத் தனியார் தொழிற்சாலைகள் சில தயாரித்து வருகின்றன. ஓரளவு பண வசதியுள்ள உடல் ஊனமுற்றோரின் தேவைகளை இத்தொழிற் சாலைகள் பூர்த்தி செய்கின்றன.

செயற்கைக் கால் அணிந்தவர் தவறுதலாக இடறிவிழ நேரிடும்போது உடலின் பாகங்கள் அடிபடாமல் எப்படி விழுவது என்பதை உடல் இயக்க வல்லுனர்கள் (Physiotherapists) சொல்லிக் கொடுக்கிறார்கள். அந்த அளவிற்குத் துறையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இது மாத்திரமின்றி, நாடு தழுவிய போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இளம்பிள்ளைவாதத்தை 2000ஆம் ஆண்டுக்குள் முற்றாக ஒழிப்பதற்கான தீவிர முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது.

அடுத்து, காது கேளாதோர், வாய் பேசாதோர் பற்றிப் பார்ப்போம்.

முன்புபோல் அல்லாமல் இப்பொழுது இவர்களுக்கென்றே சிறப்புப் பள்ளிகள் உள்ளன. ஆசிரியைகள் இவர்களுக்குக் கல்வி கற்பிப்பதற்கான சிறப்புப் பயிற்சி பெற்றவர்களாக இருக்கின்றனர். ஆசிரியையின் உதட்டு அசைவுகளைப் பார்த்து மாணவன் பாடம் கற்றுக் கொள்கிறான். அம்மா தன் குழந்தைகளுடன் பேசும் பாணி சில சிறப்புப் பள்ளிகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. சைகை மொழி பள்ளிக்குப் பள்ளி வேறுபடுகிறது.

முதல் வகுப்பிலிருந்து தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனப் பாடத் திட்டம் அனைத்துச் சிறப்புப் பள்ளிகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் ஏதேனும் ஒரு மொழி கற்றுக்கொண்டால் போதும். உதாரணமாக, தமிழ்ப் பயிற்று மொழியில் பயிலும் மாணவன் ஆங்கில மொழியை ஒரு பாடமாகக் (Subject) கற்றுத் தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை. இது அரசு இவர்களுக்கு அளித்துள்ள சிறப்புச் சலுகை.

பள்ளிகளில் தொழில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இக்குறையுள்ள பெண்களில் அனேகம் பேர் ஆடைகள் ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைகளில் தையல் பணி செய்கின்றனர். ஆண்களை விடப் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்கிறார் மேரி கிளப்வாலா ஜாதவ் சிறப்புப் பள்ளியின் தலைமை ஆசிரியை. ஆண்களைவிடப் பெண்களுக்குத் திருமண வாய்ப்புகள் அதிகம் என்கிறார் இவர். இதற்கு முக்கியக் காரணம் இக்குறையுள்ள ஆண்களுக்கு ஊதியம் ஈட்டும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதுதான்.

செவித் திறன் குறையுள்ளவர்களுக்குக் காதுக் கருவிகள் (Hearing aids) பொருத்தப் படுகின்றன. குறையின் அளவை மருத்துவர் நிர்ணயிக்கிறார்.

இக்குறையுள்ளோர்க்கெனச் சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் கிட்டத்தட்ட இருபது சிறப்புப் பள்ளிகள் இருக்கின்றன.

இக்குறைக்கு நெருக்கமான உறவினர்களிடையே திருமணம் செய்து கொள்வதும் பாரம்பரியமும் (Genetics), கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டத்தில் பெண் வீரியம் மிக்க மருந்துகளை உட்கொள்வதும், செயல் படுத்தவியலாத கருக்கலைப்பு முயற்சியும் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

தாழ்வு மனப்பான்மை இவர்களில் சிலரிடம் காணப்படும் ஒரு குறை. இத்துடன் கூடவே, பெற்றோர்கள் ஏதோ பேசிக் கொண்டிருக்கும்போது அவர்கள் தன்னைப் பற்றித்தான் பேசிக் கொள்கிறார்கள் என்று இவர்களில் சிலர் நினைக்கிறார்கள். சரியான புரிதலை ஏற்படுத்துவதன் மூலம் இத்தவறு திருத்தப்படுகிறது.

இக்குறையுள்ளவர்களுக்கு நடுவே பணிபுரியும் சமூகப்பணியாளர்கள் இவர்களது பெற்றோர்களிடையே இக்குறை குறித்தான சரியான கண்ணோட்டத்தை ஏற்படுத்த முயன்று கொண்டிருப்பது ஆறுதலான செயல்.

அடுத்து, பார்வையற்றோர் பற்றிப் பார்ப்போம்.

பார்வை இழப்புக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. பல வருடங்கள் பின்னோக்கிச் சென்றால் பின் வருவனவற்றைக் காரணங்களாகச் சொல்ல முடியும்:

  1. கண் பராமரிப்புப் பற்றிய அறியாமை
  2. போதுமான மருத்துவ வசதி இல்லாமை. இது குறிப்பாக மிகவும் உள்தள்ளியிருக்கும் கிராமப் புறங்களைப் பொறுத்தவரை உண்மை.
  3. அம்மை நோய் முதலியவை.

இப்பொழுதுள்ள காரணங்கள்:

  1. வறுமையும், குழந்தைக்கு ஐந்து வயது வரை சமச்சீர் உணவு (Balanced Diet) குறிப்பாக வைட்டமின் ஏ அடங்கிய உணவு கொடுக்கப் படாமையும்.
  2. மூளையில் ஏற்படும் கட்டி
  3. கடுமையான காய்ச்சலின் போது சில நச்சுப்பொருள்கள் கண் நரம்புகளைத் தாக்குவது
  4. கண்ணில் அடிபடுதல் முதலியவை.

பார்வையை இழக்கச் செய்யா விட்டாலும் பார்வையைப் பாதிக்கும் சில காரணங்கள்:

  1. சரிவரச் சிகிச்சைக்கு உட்படுத்தப்படாத வைரஸ் தொற்று (Madras Eye)
  2. புற்று நோய்
  3. சிஃப்பிலிஸ் (Syphilis) எனப்படும் பால்வினை நோய் முதலியவை.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அந்தக்கவி வீரராகவ முதலியார், மாம்பழக் கவிச்சிங்கம் ஆகிய கவிஞர்கள், சரப சாஸ்திரிகள் என்ற புல்லாங்குழல் மேதை போன்றவர்கள் விதிவிலக்காகத் தமிழ்நாட்டில் இருந்த போதிலும் பார்வையற்றோரின் வாழ்க்கை சொல்லும்படியாக இருந்ததில்லை.

இந்நூற்றாண்டு முப்பதுகளில்தான் பார்வையற்றோர் கல்விக்கான மிகச் சொற்ப முயற்சிகள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப் பட்டன. சர்க்ளுதா மாக்கின்ஸி (Sir Clutha Mclncy) என்ற ஆங்கிலேயர் 1943இல் பார்வையற்றோர் குறித்து ஓர் அறிக்கையை முன்வைத்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரே பார்வையற்றோர் கல்வி தொடர்பான திட்டவட்டமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

பார்வையற்றோர்க்கான முதல் அரசுப் பள்ளி சென்னையில் பூந்தமல்லியில் நிறுவப்பட்டது. இந்தப் பள்ளி விக்டரி மெமோரியல் பள்ளி (Victory Memorial School) என்ற பெயரில் முப்பதுகளிலிருந்து இயங்கிவந்த ஒன்றுதான். தமிழகத்தில் நீண்ட காலமாகவே இருந்து வரும் வேறு சில பள்ளிகள்:

  1. திருச்சியிலுள்ள பார்வையற்றோர்க்கான புத்தூர் பள்ளி
  2. சென்னையில் தேனாம்பேட்டையில் உள்ள சிறுமலர்ப் பள்ளி (The Little Flower Convent for the Blind).
  3. திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோர்க்கான பள்ளி.
  4. அடையாரில் உள்ள தூய லூயிப் பள்ளி (St. Louis Institute for the Deaf and the Blind).
  5. முன்னாள் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்த திருப்பத்தூரிலுள்ள ஸ்வீடன் மருத்துவமனையுடன் இணைக்கப் பட்டுள்ள பள்ளி (The Swedish Mission Hospital School for the Blind ) முதலியன.

ஆரம்பக் கட்டத்தில் பார்வையற்றோர்க்கான பள்ளிகள் எட்டாம் வகுப்புவரை மட்டுமே கல்வி கற்பித்தன. அதன் பிறகு பிரம்பை முடைந்து பொருட்களை உருவாக்கும் தொழிலைக் கற்பித்தன. ஐம்பதுகளில் இசைப்பயிற்சியை ஒரு தொழில் கல்வியாகக் கற்பித்தன. பிறகு சில ஆண்டுகள் சென்று மேல்நிலை வகுப்பு வரை கல்வி கற்பித்தன. ஒவ்வொரு மாவட்டத்திலும் பார்வையற்றோர்க்கான ஒரு பள்ளி இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எழுபதுகளில் மாநில அரசு கொண்டுவந்தது. இன்று பார்வையற்றோர்க்கான பள்ளிகள் பல தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன.

பார்வையற்றோர்க்கான கல்வியில் இப்பொழுது வெகுவான முன்னேற்றம் காணப்படுகிறது. பார்வையற்றோர், கல்லூரிகளில் பிற மாணவர்களுடன் சேர்ந்து படிக்கிறார்கள். பார்வையற்றோர்களிடையே முதுகலைப் பட்டதாரிகளும், முனைவர் (Ph.D.,) பட்டம் பெற்றவர்களும் இருக்கிறார்கள். கல்வி கற்றுக் கொள்வதற்கான சில வசதிகளும் பார்வையற்றோர்க்குக் கிடைத்த வண்ணமிருக்கின்றன. இவர்களுக்குப் பாடப் புத்தகங்களைப் படித்துக் காட்டச் சேவை மனப்பான்மை கொண்ட சிலர் முன்வருகின்றனர். இதற்கென்றே சில அமைப்புகளும் உள்ளன. சென்னை சி.ஐ.டி. நகரில் “கார்ல் மார்க்ஸ் நூலகம்” நடத்தி வரும் எஸ்.எஸ். கண்ணன் கடந்த பதினாறு ஆண்டுகளாகப் பார்வையற்ற மாணவர்களுக்காக இடையறாத சேவைகள் புரிந்துவருகிறார்.

பார்வையற்றோர் கல்லூரி விரிவுரையாளர்களாகவும், பேராசிரியர்களாகவும், சுயதொழில் முனைவோராகவும், பள்ளி ஆசிரியர்களாகவும், ஆயுள் காப்பீட்டுக் கழக ஏஜெண்டுகளாகவும், தட்டச்சுப் பணியாளர்களாகவும், சுருக்கெழுத்துப் பணியாளர்களாகவும் வழங்கறிஞர்களாகவும் இப்பொழுது திகழ்ந்து வருகிறார்கள். சிலர் சிறந்த நிர்வாகிகளாகவும் இருக்கிறார்கள். பெருமளவில் பார்வை பாதிக்கப்பட்ட கௌஷிக் என்னும் இளைஞர் ஒரு முதுகலைப் பட்டதாரி. சமூகப்பணித் துறையில் பட்டம் பெற்றவர். இவர் SCARF என்ற மனச்சிதைவு நோயாளிகளுக்கான ஆய்வு மருத்துவ மனையின் சமூகப்பணியாளராகப் பணியாற்றி வருகிறார். நீரிழிவு நோய் காரணமாகப் பார்வை இழந்த கோவை ஞானி தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் அறியப்பட்டவர். ‘நிகழ்’ என்னும் இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியர் இவர். அறுபது வயதைக் கடந்த இவர் கவிதை, இலக்கியம், தத்துவம், மார்க்சியம் என்று நிறையக் கற்றவர். பல இலக்கியப் புத்தகங்களின் ஆசிரியர் இவர். திறனாய்வு இவரது களம். பார்வையற்றோர்களால் பார்க்க முடியாதே தவிர பல துறைகளில் முன்னேற முடியும். ஆனால் சராசரி என்று வரும்போது, அதிகப் படிப்பில்லாத பட்சத்தில் இவர்கள் செய்யும் பணி நாற்காலிக்கு வலை பின்னுதல், கைத்தறி இயக்குதல், மெழுவர்த்திச் செய்தல், ஊதுபத்திச் செய்தல், சிறு வியாபாரம் செய்தலுமே ஆகும்.

பார்வையற்றோரின் எதிர்காலம் பற்றிச் சில வார்த்தைகள்:

தொழில் துறை முன்னேறிக்கொண்டு வருவதால் புது வகையான வேலைகள் பார்வையற்றோர்க்கெனக் கண்டறியப் படவேண்டும். முற்றிலும் தொழிற்சாலை போன்றவற்றையே சார்ந்திருக்காமல் சுயதொழில் ஆரம்பிப்பதில் இவர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும். ஒரு தற்காத்துக் கொள்ளும் முயற்சியாக, சராசரி வேலைத் திறனைவிட அதிக வேலைத் திறனுடன் இவர்கள் செயல்பட வேண்டும்.

அடுத்துக் குறிப்பிடப்பட வேண்டியது சேதமடைந்த மூளையுடன் பிறக்கும் குழந்தைகள், Cerebral Palsy என்ற பாதிப்புக்கு உள்ளான இக்குழந்தைகள் ஸ்பாஸ்டிக் குழந்தைகள் என்று குறிப்பிடப்படுகின்றன. இவர்களில் பலருக்குப் பேச்சு, பார்வை, செவி, தொடு உணர்வு ஆகியவைகளை இயக்கும் மூளையின் பகுதி செயலிழந்து காணப்படும். இத்தகைய குழந்தைகள் தமிழ்நாட்டில் பத்தாயிரத்திற்கு மேல் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இவர்களுக்குத் தேவையான பயிற்சி அளித்து சுயசார்புடன் இருக்கும் நிலைக்கு உயர்த்திச் சமூகத்தில் தைரியத்துடன் பழகத் தயார்படுத்தும் சேவையை “ஸ்பாஸ்டிக் சொஸைட்டி ஆஃப் இந்தியா” என்ற தொண்டு நிறுவனம் கடந்த பதினோர் ஆண்டுகளாகச் செய்து வருகிறது. இந்தக் கடுமையான பாதிப்பை மீறி வாழ்க்கையில் முன்னேறிய சிலர் உள்ளனர். உதாரணத்துக்கு பாலன் என்னும் இளைஞர் கோவையில் ஒரு சர்குலேட்டிங் நூலகம் (Circulating Library) நடத்தி வருகிறார்.

இத்துடன் உடல் ஊனமுற்றோர் பற்றிய பகுதி நிறைவுறுகிறது.

இரண்டாம் பகுதி: மனநிலை பாதிப்பிற்கு உள்ளானோர்

முதலில் மனவளர்ச்சிக் குன்றிய நிலையை (Mental Retardation) பற்றிப் பார்ப்போம்.

மனவளர்ச்சிக் குன்றுதல் என்பது குழந்தையின் மனவளர்ச்சியில் ஏற்படும் தாமதம். அசைவதில், புன்னகை புரிவதில், பொருட்களில் அக்கறை காட்டுவதில், கைகளை உபயோகப்படுத்துவதில், உட்காருவதில், நடப்பதில், பேசுவதில், புரிந்து கொள்வதில் ஏற்படும் தாமதம். மனவளர்ச்சிக் குன்றிய குழந்தை இவைகளை மெதுவாகக் கற்றுக்கொள்கிறது.

மிதமான மனவளர்ச்சி குன்றியவர்களால், பிறரது உதவியால் தற்பேணிக் கொள்ளவும் தங்களால் இயன்ற ஒரு பணியில் இருக்கவும் முடியும். தீவிர மனவளர்ச்சிக் குன்றியவர்கள் குழந்தை அளவிலேயே இருப்பார்கள். பிறர் அவர்களுக்கு உதவி செய்து கொண்டே இருக்க வேண்டும். அவர்களால் தனித்து இயங்க இயலாது.

மனவளர்ச்சிக் குன்றிய நிலையைக் குணப்படுத்த முடியாது, ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் ஓரளவு முன்னேற உதவ முடியும். விஷேச உதவி எவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்கிறதோ அவ்வளவு கூடுதல் திறமைகளை பாதிக்கப்பட்ட குழந்தை கற்றுக் கொள்ளும்.

மனவளர்ச்சி குன்றிய நிலைக்கான சில காரணங்களைப் பார்ப்போம்.

  1. சில குழந்தைகள் சிறிய மூளையுடனோ, வளராத வேலை செய்யாத மூளையுடனோ பிறக்கின்றன.
  2. சில வேளைகளில் பிறப்பிற்குக் காரணமான க்ரோமோஸோம்களில் (Chromosomes) குறைகள் இருக்கின்றன.
  3. ஒரு குறிப்பிட்ட வகை உணவை அல்லது தாதுச் சத்தைக் கர்ப்பிணி போதுமான அளவு உட்கொள்ளாதது.
  4. மூளையில் அடிபடுதல் – இது கரு நிலையிலோ, பிறக்கும்போதோ, பிறந்த பின்போ ஏற்படலாம்.
  5. தட்டம்மை (German Measles) கர்ப்பம் தரித்த ஆரம்ப நிலையில் பெண்ணைத் தாக்குவது.
  6. பிறந்த பின்பு சிசுவுக்கு ஏற்படும் மூளை ஜவ்வு அழற்சி (Meningitis) காமாலை, காசநோய், மலேரியா முதலியவை.
  7. குழந்தைக்கு ஏற்படும் தலைக் காயங்கள்.
  8. குழந்தையின் மூளையில் ஏற்படும் கட்டி, குழந்தையின் உடலில் கலக்கும் ஈயத்தின் மூலமான அல்லது பூச்சிக்கொல்லி மூலமாக நச்சு, சில மருந்துகள், உணவு வகைகள்.
  9. பொதுவாக உடல் மனக் குறைபாடுகளுக்குக் கூறப்படும் நெருக்கமான உறவினர்களுக்குள் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் முதலியவை.

தமிழ்நாட்டில் மனவளர்ச்சிக் குன்றிவர்களுக்கென்றே சிறப்புப் பள்ளிகள் உள்ளன. அவற்றுள் குறிப்பாகச் சொல்லப்பட வேண்டியது சென்னையில் உள்ள பால விஹார் என்னும் சிறப்புப் பள்ளி. இது ஆண்களுக்கும் பெண்களுக்குமானது. 1954இல் ஆரம்பிக்கப்பட்ட இது தமிழ்நாட்டில் மிகவும் தொன்மை வாய்ந்த பள்ளி. இப்பள்ளியில் மனவளர்ச்சிக் குன்றியவர்களுக்கு கற்றுக்கொடுப்பதற்கான சிறப்புப் பயிற்சி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படுகிறது. மாணவனின் நுண்ணறிவுத்திறனுக்கு (Intelligence Quotient) ஏற்ப வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவ மாணவியர் தங்கள் அன்றாட வேலைகளைச் செய்வதை இப்பள்ளி கற்றுக்கொடுக்கிறது. தற்பேணிப் கொள்ளுதல், ஓரிடத்துக்குத் தனியே சென்று வருதல், கடையில் போய் சாமான் வாங்குதல் போன்ற வேலைகளைச் செய்வதில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப் படுகிறது. பழங்கள், காய்கறிகள், அன்றாட வாழ்க்கையில் பயன்படும் பொருட்களின் பெயர்கள் சில்லறை மாற்றுவது, எழுத்துக்கூட்டிப் படிப்பது, எழுதுவது போன்றவையும் இங்கே கற்றுத்தரப்படுகின்றன. பதினெட்டு வயது மாணவன் நான்காம் வகுப்பளவு படிப்பதற்குண்டான அறிவையே பெற்றிருக்கிறான். தொடர்ந்து ஒரே வேலையைச் செய்யும் தொழிலையும் (Repetitive type of job) மனவளர்ச்சிக் குன்றிய ஒருவரால் செய்ய முடியும். நுண்ணறிவை அதிகம் சாராத சைக்கிளுக்குப் பங்க்சர் ஒட்டுதல், சைக்கிள் ட்யூபுக்குக் காற்று அடித்தல், தறி நெய்தல், விவசாயத்தில் சில வேலைகள் போன்றவற்றை இவர்களால் செய்ய முடியும்.

மனவளர்ச்சிக் குன்றியவர்களின் வாழ்க்கை அப்படி ஒன்றும் இருண்டு விடவில்லை. சமூகம் இவர்களுக்குத் தகுந்த இடத்தை அளித்துப் பரிவுடன் நடந்து கொண்டால் பிரச்சினைக்கு விடிவுகாலம் உண்டு என்கிறார் பால விஹாரின் இயக்குனர் திரு. பி. நாராயணன் மிகுந்த உற்சாகத்துடன்.

பால விஹார் மாத்திரமின்றி வேறு சில சிறப்புப் பள்ளிகளும் உள்ளன. சென்னையில் க்ளாக் பள்ளி, மித்ரா, செங்கல்பட்டில் உள்ள ஜீவன் ஞானோதயா பள்ளி முதலியன.

மனவளர்ச்சிக் குன்றிய நிராதரவான பெண்களுக்கென்றே சமீபத்தில் சென்னையில் ஸ்திரி சஹாயா என்ற இல்லம் தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ளவர்களின் வயது 18 முதல் 35 வரை. காகித உறைகள் தயாரித்தல், தையல் வேலை, சாக்பீஸ் (Chalk Piece) செய்தல் முதலிய தொழில்கள் இங்குச் சொல்லித் தரப்படுகின்றன.

மனவளர்ச்சிக் குன்றிவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளும், இல்லங்களும் இப்பொழுது மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்த போதிலும் சமூக விழிப்புணர்வு படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருப்பதால் இவற்றின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகமடைய வாய்ப்புகள் உள்ளன. இப்பொழுதெல்லாம் தொண்டு நிறுவனங்களின் கவனம் மனவளர்ச்சிக் குன்றியவர்கள் மீதும் திரும்பியிருக்கிறது. இது ஓர் ஆரோக்கியமான அறிகுறி.

அடுத்ததாக மனநோய்கள் பற்றிக் குறிப்பிட வேண்டும். மனநோய்கள் பலதரப்பட்டவை. இதில் சிலவற்றை மட்டும், தமிழ்நாட்டிலும் காணப்படுவனவற்றை மட்டும் இங்குக் காண்போம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் மனச்சிதைவு நோய் (Schizophrenia) அதிகமாகக் காணப்படுகிறது. சிந்தனையில் குழப்பமும், ஆளுமையின் கூறுகளும் பொருந்தாமையும், மாய உணர்வுகளும் (Hallucinations) சந்தேகமும், தவறான நம்பிக்கைகளும் இந்நோயின் முக்கியக் கூறுகள் ஆகும். மனச்சிதைவு நோய் நான்கு வகைப்படும். இதில் ஒரு வகை அதிகமாகத் தமிழ்நாட்டில் காணப்படுகிறது. அதுதான் சந்தேகத்தின் அடிப்படையில் ஏற்படும் மனச்சிதைவு நோய் (Paranoid Schizophrenia). கணவனின் தாம்பத்திய நேர்மையை அடிப்படையில்லாமல் சந்தேகிக்கும் மனைவியும், மனைவியின் கற்பைக் காரணமில்லாமல் சந்தேகிக்கும் கணவனும் இந்நோயின் சிறு உதாரணங்களே.

மனச்சிதைவு நோயின் ஒரு பகுப்பில் இரண்டு முக்கியமான நோய்க்குறிகளைக் (Symptoms) காணலாம். ஒன்று, தான் மிகவும் முக்கியமானவன் என்ற நம்பிக்கை (Delusion of grandeur), மற்றொன்று தான் முக்கியமானவனாக இருப்பதால் பிறர் தன்னைத் தீர்த்துக்கட்டச் சதி செய்வதான நினைப்புத் (Delusion of Persecution) தன்னைத் சீரழிப்பதற்காகத் தன் மீது தன் உறவினர் சூனியம் (Block Magic) வைத்திருப்பதாகவும் மனைவி தனக்குக் கொடுக்கும் பாலில் விஷம் கலந்திருப்பதான எண்ணமும், பிறர் தன்னைப் பற்றித்தான் பேசிச்கொள்கிறார்கள் (Ideas of reference) என்ற நினைப்பும் மனச்சிதைவு நோய்க்குறிகள்தாம்.

மனச்சிதைவு தமிழ்நாட்டில் காணப்படும் முக்கியமான மனநோயாக இருப்பினும் பிற மன நோய்களும் இல்லாமல் இல்லை. அவற்றில் சில…

ஆட்டிப்படைக்கும் எண்ணமும் அதற்கு இணையான சடங்கார்த்தமான செயலும் (Obsessive Compulsive Neurosis), அடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஆத்திரம், பாலுணர்வு போன்றவற்றால் ஏற்படும் வெறித்தனமான வெளிப்பாடு (Hysteria), தன் இயலாமையைச் சுவாதீனத்துடன் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும்பட்சத்தில் ஏற்படும் புலன் உணர்வு இழப்பு (உதாரணமாக Hysterical Blindness – பார்வை சம்பந்தப்பட்ட பெரிய ஒரு செயல் சவாலாக ஆகும்போது அந்தச் செயலைச் செய்யத் தன்னால் இயலாது என்று ஒருவன் எண்ணும்போது இது ஏற்படுகிறது). அதீத உற்சாகம் – அதீத மனச்சோர்வு (Manic Depressive Psychosis),, காரணமும் அடிப்படையும் இல்லாத பயம் (Phobia – பல பயங்கள் வகைமைப்படுத்தப்பட்டிருக்கின்றன). மாத விடாய் வருமுன் உண்டாகும் மனஇறுக்கம், எரிச்சல், கோபம் போன்ற நிலை (Pre-menstrual tension), குழந்தை பிறந்தவுடனேயோ சில நாட்கள் சென்றோ தாய்க்கு ஏற்படும் மனக்கோளாறு போன்றவை தமிழ்நாட்டில் காணப்படும் பிற மன நோய்கள்.

அமைதிப்படுத்திகள் (Tranquillizers), உறக்க மாத்திரைகள் (Sedatives), உக்கிரத்தைத் தணிக்கும் மாத்திரைகள் (Anti-psychotic Drugs), வருத்தமுறி மாத்திரைகள் (Anti – Depressants), வலிப்புத் தடுப்பு மாத்திரைகள் (Anti-epileptic pills), ஊசி, உடலை முழுவதும் ஆசுவாசமாக உணர வைக்கும் பயிற்சி (Relaxation exercise), நடத்தை மாற்று மருத்துவம் (Behaviour Therapy), மின் அதிர்வுச் சிகிச்சை (Electro – convulsive therapy), மனோவசிய முறை (Hypnotherapy). இவற்றுடன் கூடவே, வேலை ரீதியான சிசிச்சை (Occupational therapy), விளையாட்டு மூலமான சிகிச்சை (Play therapy), பேச்சு வழிச் சிகிச்சை மற்றும் ஆலோசனை (Talk Therapy and Counselling),, முதலியன தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள். மனநோய்க்கு உடல் ரசாயனத்தில் (Body Chemistry) ஏற்படும் சமன்நிலை இழப்பும் (Imbalance), சமூகக் காரணிகளும் மிக முக்கியக் காரணங்களாகக் கொள்ளப் படுகின்றன. பாரம்பரியமும் (Heredity) ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய மனநல மருத்துவ நிலையம் சென்னையில் அமைந்திருக்கும் அரசு மனநலக் காப்பகம் (Government Institute of Mental Health) தான். புறப்பிணியாளர் பிரிவையும் (Day Hospital), உள்ளே தங்கியிருந்து சிகிச்சை பெறும் பிரிவையும் (In-Patient Hospital) கொண்டது இப்பிரம்மாண்டமான நிறுவனம்.

இக்காப்பகத்தில் நிறைய வார்டுகள் உள்ளன. வேலை ரீதியான சிகிச்சைப் பிரிவில் காகித உறைகள் தயாரித்தல், தறி நெய்தல் முதலிய சில தொழில்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

காப்பகத்தில் சில மருத்துவ உளவியலாளர்களும் (Clinical Psychologists), ஒவ்வொரு வார்டுக்கு ஒரு சமூகப்பணியாளரும் (Psychiatric Social Worker), உளவியல் மருத்துவர்களும் (Psychiatrists) உள்ளனர். இவர்களது பராமரிப்பில் நோயாளிகள் இருக்கிறார்கள். சிறு வேலைகள் செய்யப் பணியாளர்களும் (Orderlies), மருத்துவர்களுக்குப் பணியில் உதவவும், நோயாளிகளுக்கு மாத்திரைகள் கொடுக்கவும் செவிலியரும் (Nurses) உள்ளனர்.

இக்காப்பகத்தில் மனமகிழ் மன்றம் (Recreation Therapy Centre) ஒன்று உள்ளது. மாலை நேரங்களில் இங்குச் சதுரங்கம் (Chess), கேரம்ஸ் (Carroms), மேசைப் பந்து (Table Tennis) விளையாட்டு முதலியவற்றில் ஓரளவு குணமடைந்த நோயாளிகள் ஈடுபடலாம்.

இப்பொழுது விளையாட்டு மூலமான சிகிச்சை பற்றிச் சிறிது விரிவாகப் பார்ப்போம்.

சதுரங்கம் மனக்கணிப்புகளையும், மனக் குவிப்பையும், மனதை ஒருமுகப் படுத்துவதையும், உள்ளடக்கி இருக்கிறது. சதா வேண்டாத சிந்தனையோட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள மனநோயாளிகளுக்கு இப்பாதிப்பிலிருந்து ஒரு தற்காலிக விடுப்பைச் சதுரங்கம் உருவாக்கித் தருகிறது.

கேரம்ஸ் மனநோய்க்குறிகளில் அமிழ்ந்திருக்கும் மனநோயாளியின் மனதைத் திசைதிருப்பத் தற்காலிகமாகவும் உதவுகிறது.

விளையாட்டு மூலமான சிகிச்சையிலேயே மிகவும் முக்கியமானது மேசைப் பந்தாட்டம் (Table Tennis). ஓரளவு கற்றுச் சுமாராகவும் விளையாடத் தெரிந்த மனநோயாளிகளுக்கு இந்த விளையாட்டுப் பெருமளவில் உதவும்.

மேசைப் பந்தாட்டம் ஒரு நூதன விளையாட்டு. உடல் ரீதியான இயக்கங்களை விடுத்து மனோரீதியான விஷயங்களை மட்டும் பார்ப்போம். இந்த விளையாட்டில் முக்கியமாக ஈர் அம்சங்கள் உள்ளன. ஒன்று தாக்குதல் (Offence), மற்றொன்று தற்காத்துக் கொள்ளுதல் (Defence). ஆக்ரோஷம், கோபாவேசம், சகிப்புத்தன்மை, தணிந்து போதல், சாத்வீகம் போன்ற உணர்வுகளுக்கு விளையாட்டின் மேற்குறிப்பிட்ட இரு கூறுகளும் வடிகாலாக அமைகின்றன. விளையாட்டு சரளமான ஓட்டமாக அமையும்போது மனநோய்க்குறிகள் முற்றிலும் மறக்கடிக்கப்படும் அளவுக்குச் சென்றுவிடும். இந்த விளையாட்டுக்கு மிகுந்த கவனமும் சாதுரியமும் தேவை. எதிராளியைச் சிக்கவைத்து இடறச்செய்வதற்கு மிகுந்த சாமர்த்தியமும் கணிப்பும் கவனக்குவிப்பும் தேவை. மேசைப் பந்தாட்டம் மனநோய்ச் சிகிச்சையில் மிக முக்கிய பங்கை வகிக்கும், வகிக்க வேண்டிய ஒன்று.

தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் மனநோய்க்கான சமூகக் காரணிகளைப் (Social Factors) பார்வையிடும் போது பின்வருவன தெளிவாகின்றன. சமூகத்திலுள்ள சராசரிகளில் (Norms) நிலவிவரும் முரண்பாடுகள் முக்கியக் காரணமாக விளங்கு கின்றன. குறிப்பாகப் பாலுணர்வுக்குத் தங்கள் ஆளுமையில் (Personality) எப்படி இடம் கொடுப்பது என்பதிலேயே சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. பாலுணர்வைப் பாவம் என்று கருதுவதும், இயல்பான பாலுணர்வு எழுச்சிகள் குறித்துக் குற்ற உணர்வு கொள்வதும் கலாச்சாரத்தையும் பாலுணர்வுகளையும் பாலுறவுகளையும் சேர்த்துப் போட்டுக் குழப்பிக்கொள்வதும் மனநோய்க்கு இட்டுச்செல்லும் மனநிலைகளாகும்.

சென்னையில் தியாகராய நகரில் மார்ச் 11, 1993 முதல் ஆகஸ்ட் 31, 1996 வரை ஆத்மன் ஆலோசனை மையம் என்ற ஒரு மனநல மையம் இயங்கிற்று. இம்மையத்தில் ஆலோசனை பெற்றவர்களில் 95% பேருக்குப் பாலுணர்வு, பாலுறவு பற்றிய தவறான, ஆரோக்கியமற்ற செய்திகளால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது. அனைவருக்கும் பேச்சு மூலம், ஆலோசனை மூலம் (talk therapy and counselling) சிகிச்சை அளிக்கப்பட்டது. அரிதாக என்றாலும் பொருத்தமான தமிழ் இலக்கியப் புத்தகங்கள் வாயிலாகவும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உக்கிரமான நோய்க்குறிகளைக் கொண்டிருந்த இரண்டே இரண்டு பேரை மட்டும் இம்மையம் உளவியல் மருத்துவர் ஒருவரை அணுகுமாறு பரிந்துரை செய்தது.

இது போன்ற ஆலோசனை மையங்கள் சில உளவியல், சமூகப்பணி ஆர்வலர்களால் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகின்றன.

அரசு மனநலக் காப்பகம் மட்டுமல்லாமல் தனியார் உளவியல் மருத்துவமனைகளும் மனநோய் ஆய்வு மையங்களும் சென்னையில் உள்ளன. இவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவை SCARF, PSYCARE ஆகிய அமைப்புகள்.

‘பான்யன்’ (The Banyan) ஆலமரம் என்றழைக்கப்படும் தொண்டு நிறுவனத்தைப் பற்றிக் குறிப்பிடுவதும் இங்கு அவசியமாகிறது. இவ்வமைப்பு சென்னையில் முகப்பேர் என்ற பகுதியில் கடந்த மூன்றரை ஆண்டுகளாகச் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறது. முழுக்க முழுக்க ஆர்வலர்களால் (Enthusiasts) நடத்தப்படுகிறது இது. கோபி என்ற மிதமான அளவு பார்வை இழந்த ஒரு வாலிபரும் இங்குப் பணிபுரிந்து வருகிறார். இம்மையத்தின் முக்கியக் குறிக்கோள் மனநோய்களால் பாதிக்கப்பட்ட அனாதரவான வயது வந்த பெண்களைப் (Mentally ill destitute adult women) பராமரித்து, உளவியல் சிகிச்சை அளித்து இடமும் உணவும் உடையும் கொடுத்து ஓரளவு தெளிந்த நிலை ஏற்பட்டதும் அவர்களது உறவினர்களிடம் பாதுகாப்புடன் சேர்ப்பிப்பதுதான்.

இவ்வமைப்புக்குச் சொற்ப அளவில் அங்கும் இங்குமாக அரசு உதவி கிடைத்து வருகிறது. திரைப்பட நடிகை ரேவதி இம்மையத்துக்குப் பெரும் உதவியாக இருக்கிறார். நடிகைகள் ரேவதி, ரஞ்சிதா, ரோகினி, நடிகர் நாசரின் துணைவியார் – இந்நால்வரும் சுவபிமான் அமைப்பு (Suabhimaan Foundation) என்ற ஒன்றை அமைத்துத் தங்கள் வெகுஜனப் புகழை அடிப்படையாகக் கொண்டு நன்கொடைகள் வசூல் செய்து பான்யன் போன்ற மையங்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள். பான்யனை ஆரம்பித்து நடத்தி வரும் இளம் பெண்களான வந்தனாவும் வைஷ்ணவியும் மன நலத்துறையில் குறிப்பிடத்தக்கவர்கள்.

குணமடைந்துவரும் நோயாளிகளுக்கென்றே – குறிப்பாகப் பெண்களுக்கென்றே இயங்கி வரும் இல்லங்களும் மனநலத் துறையில் சொல்லப்படத்தக்கவை. உதாரணத்திற்கு சென்னையில் எழும்பூர் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நவஜீவன் என்ற அமைப்பு. இது ஒரு Half way Home. குணமடைந்து வரும் பெண் மனநோயாளிகள் குடும்பத்தில் மறுநுழைவு செய்யுமுன் போதிய அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவும், குடும்பத்தில் உடனே ஏற்கப்படாத சூழலில் தங்கியிருப்பதற்கும், குடும்பச் சூழலுக்கு ஏற்பத் தங்கள் ஆளுமைகளைத் தகவமைத்துக் கொள்ளவும் இவ்வமைப்பு பெரிதும் உதவுகிறது. சில தொழிற் கல்வியும் இங்குக் கற்றுத்தரப் படுகிறது. பாதிப்படைந்தோர் ஆறு மாதம் முதல் ஓன்றரை ஆண்டு காலம் வரை இங்குத் தங்கலாம்.

மனநலத்துறையில் சிறந்த முன்னேற்றம் காணப்பட்டாலும் சில நெருடல்களைச் சொல்லா விட்டால் இக்கட்டுரை முழுமை பெறாது.

பல மனநோய்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுகிறது. தவிர நோயாளியின் ஒத்துழைப்பு, பங்கு கொள்ளுதல், சுயமுயற்சி இவையின்றி நோய் குணமாவது மிகமிகச் சிரமம். சில நோயாளிகள் நோய்க்குள், சிகிச்சை தரும் ஒருவிதமான இதமான நிலைக்குள் புகலிடம் தேடிக்கொள்கிறார்கள். இவர்கள் வேலைக்குச் செல்வதில்லை. இதனால் குடும்பத்தினருக்குச் சிக்கல்தான். குறிப்பாக மனச்சிதைவு நோய் மீண்டும் தாக்க வல்லது (Relapse). நோயாளி தொடர்ந்து சிகிச்சை பெற்றுக் கொண்டும் நோய்குறிகளுடன் வாழக் கற்றக்கொண்டும், அன்றாட வாழ்க்கையில் இயல்பாக இயங்கும் பொறுப்புணர்ச்சி கொண்டவராக இருந்து கொண்டும் இருக்கும் பட்சத்தில் மட்டும்தான் அவருக்கு விடிவு காலம் உண்டு.

திருமணம் என்று வரும்போது சிகிச்சை பெற்று ஓரளவு தெளிந்த நிலையில் இருக்கும் மனநோயாளி சம்பந்தி வீட்டுக்காரர்களுக்குத் தான் சிகிச்சை பெற்றுவருவதைத் தெரிவிக்காமலேயே திருமணம் செய்துகொள்கிறார். சிகிச்சை பெறுவது புது உறவினர்களுக்குத் தெரியும்போது ஏகப்பட்ட பிரச்சினைகள் எழுந்துவிடுகின்றன. மணவிலக்கு அளவுக்குப் போவதும் உண்டு. இதில் அதிகமாகப் பாதிக்கப்படுகிறவர்கள் பெண்களே.

இன்னொன்றும் சொல்லவேண்டும். மனநோய்ச் சிகிச்சையில் இன்றும் பழைமையான முறைகள் ஆங்காங்கே தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன. தமிழ்நாட்டில் குணசீலம், திருமுருகன், பூண்டி, புளியந்தோப்பு மாதா கோவில் ஏர்வாடி தர்கா, நாகூர் தர்கா முதலிய புண்ணியத்தலங்களில் மனநோயாளிகள் மீது குரூரமாகச் சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன. நோயாளிகளைச் சங்கிலியால் கட்டிப்போடுவது போன்றவை இன்றும் நிகழ்கின்றன.

சென்னையை எடுத்துக்கொண்டாலும் பில்லி, சூனியம், காத்து, சேஷ்டை, தாம்பத்தியத்தில் கசப்பு, மனநோய்கள் முதலியவவற்றுக்குப் பரிகாரம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் மலையாள முஸ்லிம் மாந்திரீகர்களும், முஸ்லிம் சாமியார்களும் (ஹஸ்ரத்), இந்துச் சுவாமிஜிகளும், பேயோட்டும் இந்துப் பூசாரிகளும், மனநோய்களுக்குக் காரணமான அசுத்த ஆவியை விரட்டும் கிறித்தவப் பாதிரிமார்களும் தங்கள் தொழிலை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால் மேற்குறிப்பிட்ட பழைமையான முறைகள் இப்பொழுதெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் காணப்படுகின்றன. விரைவில் இவை வழக்கொழிந்து போகலாம். முறையான மனநோய்ச் சிகிச்சை குறித்து அடிக்கடி விழிப்புணர்வுக் கூட்டங்களும் பொதுக் கருத்தரங்குகளும் நடத்தப்படுவதும் இந்த முன்னேறிய நிலைக்குக் காரணமாக இருக்கலாம்.

இதற்கும் ஒரு படி மேற்சென்று சிற்சில படித்தவர்களிடேயே எதிர்-உளவியல் மருத்துவ (Anti-psychiatry) கருத்தாக்கங்கள், மனநோயாளிகளின் மானுட உரிமைகள் குறித்த கோட்பாடுகள் போன்றவை மெலிதாக நிலவி வருகின்றன. இவைகளைக் கிரகித்துக் கொள்ளும் அளவுக்குத் தமிழகச் சமூகச் சூழல் மேம்பட இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும்.

இக்கட்டுரை உருவாக்கத்துக்காகக் கலந்து கொள்ளப்பட்ட நூல்கள் பத்திரிக்கைகள், பிற பிரசுரங்கள்:

  1. Disabled Village Children by David Werner.
  2. Children with Handicaps by Lorna Selfe and Lynn Stow
  3. An article by Latha Ramakrishnan titled “The Blind need Empathy Not Sympathy” Published in the march 1995 issue of a monthly magazine known as “Kannan’s Glimpses”
  4. பால விஹார் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரம்: ‘மனவளர்ச்சிக் குன்றிய நிலையைப் பற்றிய சில உண்மைகள்’ என்று தலைப்பிடப் பட்டுள்ளது.
  5. கோபி கிருஷ்ணன் எழுதியுள்ள மனநோய்கள் பற்றிய நாவலான “உள்ளேயிருந்து சில குரல்கள்” என்ற புத்தகம்.
  6. ஜனவரி 21, 1996 நாளிட்ட தினமணிக் கதிர் என்ற வார இதழில் வெளிவந்துள்ள சில கட்டுரைகள்.

கலந்து கொள்ளப்பட்ட நபர்கள்:

  1. சென்னை தியாகராய நகரில் ஆத்மன் ஆலோசனை மையம் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது அதில் முக்கியப் பங்கை வகுத்த உளவியல் ஆலோசகர் சஃபி.
  2. சென்னை கிழக்குத் தாம்பரத்தில் உள்ள பார்வையற்றோர் நல அமைப்பின் ஸ்தாபகரும் தலைவருமான முனைவர் ஜி. ஜெயராமன்.
  3. சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள மனவளர்ச்சிக் குன்றியவர்களுக்கான பால விஹார் என்னும் சிறப்புப் பள்ளியின் இயக்குனரான திரு. பி. நாராயணன்.
  4. முதுநிலை ஆய்வு (M.Phil) மாணவி செல்வி ஜி.எஸ். ராஜேஸ்வரி. இவர் சென்னை எழும்பூரில் உள்ள கில்ட் ஆஃப் சர்வீஸ் என்ற தொண்டு நிறுவனத்தில் குழந்தைகளுக்கான கல்வி நிதி உதவித் திட்டத்தின் சமூகப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார்.

கோபி கிருஷ்ணன் :

முதுநிலை டிப்ளமோ (குற்றவியல் மற்றும் தடயவியல்). சென்னை எழும்பூரில் உள்ள கில்ட் ஆஃப் சர்வீஸ் என்ற தொண்டு நிறவனத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகளுக்கான கல்வி நிதி உதவித் திட்டத்தில் உதவி சமூகப் பணியாளராகப் பணியாற்றி வருதல். வெளிவந்துள்ள நூல்கள்: ஒவ்வாத உணர்வுகள் (சிறுகதைத் தொகுப்பு 1986). உணர்வுகள் உறங்குவதில்லை (குறுநாவல் தொகுப்பு 1989). இத்தொகுப்பில் பிறழ்வு – விடிவு என்ற குறுநாவல் ஒரு மனநோயாளியின் வாழ் அனுபவங்களை மையமாக வைத்து எழுதப்பட்டது. சிறுகதைகள், குறுநாவல்கள், புத்தக மதிப்புரைகள், கட்டுரைகள், கவிதைகள் இலக்கியச் சிற்றேடுகளிலும் வெகுஜனப் பத்திரிக்கைகளிலும் வெளியாகியுள்ளன.

You Might Also Like