அறிவியல் (1997)
அறிவியல்
ஆ. ஞானம்
துணைவேந்தர்
புதுவைப் பல்கலைக்கழகம்
உலகெங்கிலும் பரவிக்கிடந்த மனித இனம் கற்காலந் தொட்டு, உலகப் பொருள்கள் பற்றிய உண்மைகளைத் தேட முற்பட்டு, அவற்றைப் பற்றிய அறிவை வளர்த்து வரத்தலைப்பட்டது. உலகம் என்பதில் அடங்குபவையே வானம், விண்மீன்கள், மற்றும் அண்டசராசரம் யாவும், அந்த உலகப் பொருள்கள் உள் அடங்கிய அண்ட சராசரத்தின் உண்மைகளின் தொகுப்பே அறிவியலாக மலர்ந்தது. மனித இனம் இவற்றோடு மட்டுமல்லாமல், உலக நிகழ்வுகட்கும், அதன் தோற்றத்திற்கும், இயக்கத்திற்கும் விளக்கம் காண முற்பட்டு ஆன்மா, கடவுள் என்ற சித்தாந்தங்களின் வழியில் தொகுக்கப்பட்ட விளக்கங்களே ஆன்மீகமாகும்.
அத்தகைய அறிவியலின் அடிப் படையில், தொழில் நுட்பங்களை வளர்த்து, அதன்மூலம் பயனையும், வாழ்வு நலனையும் பெற்ற பாரம்பரியம் கடந்த சில நூற்றாண்டுகளாகச் சிறப்புற்றாலும், ஆதிகாலத்தில் சில தொழில் நுட்பங்களை அடிப்படையாக அமைத்துக்கொண்டு, அதன் வழி அறிவியலை வளர்க்க முற்பட்டதுதான் உண்மை. ஆக, அறிவியல் வழியில் தொழில் நுட்பமும், தொழில் நுட்ப வழியில் அறிவியலும் மாறி மாறி வளர்ந்து இன்றைய நிலைக்கு மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இன்றைய காலகட்டத்தை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஊழியென்றே கூறலாம்.
உலகெங்கும், வளர்க்கப்பட்ட இத்தகைய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வரலாற்றைப் பார்த்தோமானால், அவை களின் வளர்ச்சி, சீனா, துருக்கி, எகிப்து, கிரேக்கம், அரிசியா, ரோமானிய, மெக்சிகோ, அரேபியா போன்ற நாடுகளில் நடைபெற்றிருப்பது தெரிய வரும். இதில் இந்தியாவிற்கும் சிறு பங்குண்டு. பிற்காலத்தில் அதாவது கி.பி.10ம் நூற்றாண்டிற்குப் பின் இன்றைய இத்தாலி, ஜெர்மனி, பிரான்சு, இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் சீனாவிலும் பெரும்பாலும் முறையாக வளர்க்கப்பட்டன. ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழில் புரட்சிக்குப் பின், ஐரோப்பிய நாடுகளில் தலைப்பட்டது. சீனாவில் இத்தகைய தொழிற்புரட்சியின் தாக்கம் அதிகமாக ஏற்படாததாலும், அவர்களது வாழ்க்கைத் தொழில் புரட்சிக்குப் பிற்பட்ட காலகட்டத்திலும் மிக அண்மைக் காலம் வரை அறிவியல் வளர்ச்சிக்கான முயற்சிகள் பெருமளவில் செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை. பல்வேறு காரணங்களால், நமது கண்டுபிடிப்புகள் எனக் கூறத்தக்கவை அவ்வளவாக இல்லை என்றே சொல்லலாம். நம்முடைய வாழ்க்கை முறையும், அதற்கு முக்கியமாக நாம் கருதி வந்த வழிபாட்டு முறைகள், அதற்கான நெறிகள், சாத்தியங்கள், சூத்திரங்கள் என வளர்ந்ததேயன்றி, உலகப் பொருள்களது உண்மையறியும் முயற்சி முறையானதாக ஒன்றும் இல்லாமல் இருந்துவிட்டது.
ஆதிகால மனிதர்கள் உலகப் பொருள்களின் உண்மைகளைப் பற்றி ஆயத் தலைப்படுமுன்பே, பல சிறு சிறு தொழில்நுட்பங்களை வடிவமைத்துப் பயன்படுத்தி வந்தனர். நெருப்பினைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டது. கற்களைக் கொண்டு அடுப்பு அமைத்துச் சமைக்க ஆரம்பித்தது, பல், தந்த ஆபரணங்களை அணிந்தது, மண்பானைகள், பீங்கான் போன்றவைகளைச் செய்தது, பூமராங் என்னும் கருவி, தைக்கும் ஊசி, வில், அம்பு போன்றவைகளை வடிவமைத்துப் பயன்படுத்தியது, சுவர்ச் சித்திரங்களைத் தீட்டியது, வீட்டு விலங்குகள் எனப்படும், நாய், ஆடு, மாடு, பன்றி, குதிரை முதலியவைகளைப் படிப்படியாகப் பயன்படுத்தியது, உணவிற்கெனத் தானியப் பயிர்கள் பலவற்றைத் தெரிவு செய்தது, பின்னர் மிதப்புத் தோணி, பாய் மரக்கப்பல் போன்றவைகளைப் பயன்படுத்தியது. இரும்பு மற்றைய உலோகங்களைப் பயனுக்குக் கொண்டுவந்தது, சிறுசிறு கட்டடக் கலைகளைக் கையாண்டது, ஆகியவற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
பின்னர் சக்கரம், உலோகக் கண்ணாடி, கால மற்றும் பிற பரிமான அளவுகளையும் ‘எண்’ணங்களையும் கையாளக் கற்றுக் கொண்டார்கள். கி.மு. 277ம் ஆண்டிலிருந்து 365 நாட் கொண்ட வருடப் பஞ்சாங்கம், 360 நாட்கள் மற்றும் 12 மாத வருடக் கணக்கை வழக்கிற்குக் கொண்டு வந்தது யாவும், இவ்வகையில் வளர்ந்தவைகளே. பின்னர், சூரியக் காலங்காட்டிகள், கோடரி, வாள், மது வடித்தல், தோலில் எழுதத் தலைப்பட்டது, கண்ணாடி செய்தது, முறையாக வேளாண்மையில் ஈடுபட்டது போன்ற வளர்ச்சிகள் நேர்ந்தன. கி.மு.2000த் திலிருந்து 1500 வரையிலான காலத்தில், கணித வளர்ச்சி, ஏர், துருத்தி போன்ற சாதனங்கள் வழக்கில் வந்தன. பின்னர்க் கால்வாய் வெட்டுதல், காந்தத் திசை காட்டியைப் பயன்படுத்துதல், பாலம் கட்டுதல், பிரமிடுகள் எழுப்பியது போன்ற தொழில் நுட்ப வளர்ச்சிகள் ஏற்பட்டன. கி.மு.1000 முதல் 600 வரையிலான காலத்தில், பற்று வைத்தல், எரிவாயுவைப் பயன் படுத்துதல், மருத்துவம் நீர்யியங்கி, கடிகாரம் போன்றவைகளைச் செய்முறைக்குக் கொண்டு வந்தார்கள். பின்னர்க் கப்பல் வழிப்பயணம், அரசியல் சட்ட நிர்வாகம் போன்ற சமூக அமைப்புக்களுடன், வேளாண்மைக்கேற்ற பல முன்னேற்றங்கள், கனிமங்களைச் சுத்தப்படுத்தும் வழிமுறைகள், வானியல், கணிதம் மற்றும் மருத்துவ முன்னேற்றங்கள் எனப் படிப்படியாகத் தொழில் நுட்பங்களும் உலகப் பொருள்கள் பற்றிய அறிவும் பரவலாயின. கி.மு.400 இலிருந்து 300 வரை, கவண் மூலம் கல்லெறியும் கருவி சுண்ணாம்பு கலவையினால் கட்டிடம் கட்டுதல், பூமியைத் துளைக்கும் கருவி போன்றவை வழக்கில் வந்தன.
கிறித்து இறப்பிற்குப் பின்னைய நூற்றாண்டுகளில் சீனா, இத்தாலி, துருக்கி போன்ற நாடுகளில், தொழில் நுட்பங்களும், கணிதம், வானியல், மருத்துவம் போன்ற துறைகளும் வளர்ந்தன. கி.பி. 0-1000 ஆண்டுகளில் தொழில் நுட்பம் என்ற அளவில் தொங்கும் பாலம் கட்டும் முறை (சீனா) செயற்கை ஏரிகள் (ரோமர்கள்) தோண்டப்பட்டமை, பாய் மரக்கப்பல் மூலம் பயணம், நீர் இறைக்கும் சாதனம், நெல் தூற்றும் கருவி, இரட்டை மாட்டு வண்டி (சீனா), நாள் கணக்கீட்டுக் கருவி, தொழில் இயந்திரங்கள் வடிவமைக்கப் பெற்றன. காற்றின் விசையால் இயந்திரங்களை இயக்குவித்தமை தீப்பெட்டி, பெரு மளவில் பயன்படுத்தக் கற்றுக்கொண்டமை, அச்சு இயந்திரம், நீர்க்கடிகாரம், வேதியியல் பற்றிய தொடக்க ஆய்வுகள் (Alchemy) போன்றவை நடைமுறையில் இருந்திருக்கின்றன.
கி.பி. 1000த்திலிருந்து தொழிற் புரட்சிக் காலம் (கி.பி.16ஆம் நூற்றாண்டு) வரையில் இன்னும் பல வகை முன்னேற்றங்கள் உலகெங்கும் காணப்பட்டன. கொலம்பஸ் அமெரிக்கா சென்றது, வேதியியல், இயற்பியல். உடல்கூறு பற்றிய மருத்துவ வளர்ச்சி உயிரியல் முறையாக்கப்பட்டமை, ஆகிய யாவும் இந்தக் காலத்தில் ஏற்பட்டனவே. தொழில் புரட்சிக்குப்பின், தொழில் நுட்பங்கள், அறிவியலின் வளர்ச்சியின் அடிப்படையில் பலவாறாக வளர்ந்தன. அறிவியலும் அதன் துறைகளும் பெருமளவில் வளர்ந்தன. 1800 இலிருந்து இன்று வரை, அறிவியல் ஒரு பெரும் இயக்கமாக, பெருமூலதனத்துடன் அரசு மற்றும் சமுதாயத்தின் முயற்சியாக வளர்ந்தது.
இத்தகைய தொழில்நுட்ப, அறிவியல் வளர்ச்சி படிப்படியாக உலகெங்கும் வளர்ந்திருந்தாலும். நம் நாட்டில் இவைகளின் தாக்கம், பிறநாட்டுத் தொடர்புகளினால் ஏற்பட்டிருந்தாலும், நமது கண்டுபிடிப்பு எனக் குறிப்பிட்டுக் கூறுமளவிற்கு ஏதும் நிகழவில்லை. ஹரப்பா நாகரிகக் காலத்தில் (கி.மு. 35-15ஆம் நூற்றாண்டுகட்கு இடைப்பட்ட காலத்தில்) சில தொழில் நுட்பங்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. மது வடித்தல், குதிரை வளர்த்தல் போன்றவை, வேத காலத்தில் வழக்கில் இருந்திருக்கின்றன. கி.பி. 5ஆம் நூற்றாண்டில் இரும்பு உருக்குதல், கண்ணாடி செய்யும் முறை தெரிந்திருக்கின்றது. வேதாங்க சோதிடம் (வானியல்) சுலப சூத்திரம் (கணிதம்), அணுக் கொள்கை, கணிதத்தில் சுழிக் குறியீடு, பஞ்சபூதங்கள் பற்றிய எண்ண ஓட்டங்கள், வேளாண்மை எனத் தொழில் நுட்ப, அறிவியல் வசதிகளும் சிந்தனைகளும் பரவலாக இருந்தாலும், அவைகளை உலகிற்கு வழங்கியவர்கள் என்ற பெயர் பெறுமளவிற்கு இங்கு ஒன்றும் செய்யப்படவில்லை.
நம்நாட்டில் வழக்கத்திற்கு வந்த தொழில் நுட்ப உத்திகள் பெரும்பாலும் பிறநாட்டில் அதற்குமுன்னதாகவே வழக்கில் இருந்திருக் கின்றன. மது வடித்தல் மற்றும் குதிரையை வீட்டு விலங்காக கொண்டு வந்தது பற்றிய குறிப்புகள் வேதகாலத்தில் (3500 ஆண்டுகட்கு முன்னர்) காணப்படினும், மத்திய ஆசியாவில் சுமார். இன்றைக்கு 7000 ஆண்டுகட்கு முன்னரே இவைகள் வழக்கத்தில் வந்துவிட்டன.
உலகப்பொருள்களைப் பற்றிய அணுக் கொள்கை நம் நாட்டில் சமணர்களால் கி.மு. 4ஆம் நூற்றாண்டிலிருந்து விளக்கப் பட்டிருந்தாலும் அந்தக் கொள்கை மேலை நாடுகளில் அதற்கு முன்னரே பேசப்பட்டு விட்டது.
அண்டவியல் பற்றிய ஒரு விளக்கம் மாணிக்க வாசகரால் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்னரே தெளிவாக்கப்பட்ட செய்தியே அது.
இரும்புக்கனிமங்களை நல்ல முறையில் உருக்கி, தூண்கள் போன்ற பலவகை பொருள்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் அது அசோகர் வாழ்ந்த கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்துதான் காணப்படுகிறது. ஆனால் சீனாவிலோ இந்தத் தொழில் நுட்பம் கி.மு.20ஆம் நூற்றாண்டுகளில் வகுக்கப் பட்டிருந்தாலும், நம் நாட்டில் சுமார் ஆயிரமாண்டுகட்கு முன்னர்தான் கணிக்கப்பட்டிருக்கின்றது.
வேதியல், அல்கெமியாக கி.பி. 8ஆம் நூற்றாண்டிலிருந்து சீனாவிலும், அதற்கு முன்னரே ஐரோப்பியவிலும் தொடங் கியதற்கான குறிப்புகள் உள்ளன. அதுவே சித்தர்கள் என அழைக்கப்படுவோரால் பல நூற்றாண்டிற்குப் பின்னர் வட இந்தியாவிலும், அதன் பின்னர் தமிழகத்திலும் தொடங்கப்பெற்றது.
நம் நாட்டில் இன்னும் பயன் படுத்தப்படும் இரட்டை மாட்டு வண்டி கி.பி.2ஆம் நூற்றாண்டில் சீனாவில் வடிவமைக்கப்பட்டதாகும்.
கிறித்து பிறப்பதற்கு முன்பும், பின்பும், கிழக்கே சீனாவுடனும், மேற்கே அரேபிய நாடுகளுடனும் தொடர்பு இருந்ததால், அந்த அந்த நாடுகளின் நாகரிக, மற்றும் சமுதாயத் தாக்கம் நேர்ந்திருக்க வேண்டும். அவ்வகையில் நம் நாட்டு அறிவாளிகளின் எண்ணங்கள் பிற நாட்டில் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. தொழில் நுட்ப மற்றும் அறிவியல் வளர்ச்சியில் இத்தகைய தாக்கங்கள் இருபுறங்களிலும் ஏற்பட்டிருக்க வேண்டும். கணிதத்தில், நம் நாட்டவரது கண்டுபிடிப்பு, பின்னம் சார்ந்த கணித எண்களும், சுழியக் குறியீடும் கருதப் படுகின்றன. பாணினியின் இலக்கணம், ஆயுர்வேத மருத்துவக் குறிப்புகள் கௌடில்யரின் அர்த்தசாத்திரம், சிஷுருதா, சம்யுக்தா போன்றோரது அறிவியல் விளக்கங்கள், வாத்சாயினர், ஆர்யப்பட்டா I, வராகமிகிரர், பிரம்ம குப்தா போன்ற ஞானிகளது படைப்புகள், ஆர்யபட்டா II, ஸ்ரீதர், ஸ்ரீபதி, பாஸ்கரா II போன்றோரது எண்ண வெளிப்பாடுகள் யாவும் இந்திய அறிவியல் வரலாற்றில் முதன்மையான அம்சங்களாகும். இவர்களது படைப்புகளில் வெளி நாட்டவர்களது அறிவியல் வளர்ச்சியின் தாக்கமும். வெளி நாட்டவர்களது அறிவியல் வளர்ச்சியில், இவர்களது எண்ணத் தாக்கமும் இருந்திருக்கின்றன. ஆனாலும், மொகலாயர், மற்றும் ஐரோப்பியர்களது வருகைக்கு முன் நமது தொண்டு எனக் குறிப்பிடத்தக்கதாக ஏதுமில்லை என்றே எண்ண வேண்டியிருக்கிறது. இவற்றுள்ளும், தமிழக மக்களது ஈடுபாடு என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டும் இல்லை என்பதே உண்மை. வெளிநாட்டவர்களது வருகைக்குப் பின் அவர்கள் காட்டிய வழியில் கல்வி, பல்கலைக்கழகங்கள் என்ற அவாவிற்கு நிறுவன ரீதியாக பரவலாக்கப்பட்டாலும், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களது எண்ணிக்கை நம் மக்களிடையே நான்கிற்கும் குறைவான விழுக்காடே. இருப்பினும் இந்த நூற்றாண்டின் முற்பகுதியில், நோபல் பரிசு பெறுமளவிற்கு நம் தமிழகத்தில் இருவர் உயர்ந்திருக்கிறார்கள். சர்.சி.வி. இராமன் (இயற்பியல்), சந்திரசேகரர் (வானியல்) தவிர இராமனுஜம் (கணிதம்) போன்ற மேதைகளும் நம் தமிழகத்தில்தான் தோன்றினார்கள். இவைகட்கெல்லாம், மேலை நாட்டவரது ஊக்கமும் அவ்வளவாக இல்லாமேலே இருந்தது. 1970 இலிருந்து மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையை முறையாக அமைத்து, அறிவியல் ஆய்வுக்கு ஓரளவு ஊக்கம் கொடுக்க ஆரம்பித்தது. பின்னர்., அதிலிருந்து பல கிளைத் துறைகள் பிரிந்து, மூலக்கூறு உயிரியல் துறை, சுற்றுச்சூழலுக்கான துறை, ஆழ்கடல் ஆய்வுத் துறை என்பன மேலும் வலுப்பெற்றன. அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கவுன்சில், நம் நாட்டின் விடுதலைக்குப் பின் அமைக்கப்பட்டு, நாடளாவிய பல ஆய்வுக் கூடங்களை அமைத்து, அறிவியல் வளர்ச்சிக்ககு ஊக்க மளித்து வருகின்றது. இவைகளின் தோற்றத்தால் பல்கலைக்கழக ஆய்வுகள் முழுமையாக வளரமுடியாமல் போய் விட்டன. அவ்வகையில், வேளாண்மை மற்றும் மருத்துவம் போன்ற துறைகட்கும் தனி கவுன்சில்கள் அமைந்து ஆய்வுகளை ஊக்கப்படுத்தி வருகின்றன. இவை யாவும் அரசின் (மத்திய) முயற்சியால் வளருபவை.
இன்றைய நிலை
அரசினால் நிறுவப்பட்ட பல ஆய்வகங்கள் சிறிதும் பெரிதுமாக நாட்டின் பல பகுதிகளிலும் அமைக்கப்பட்டு முழுமூச்சுடன் ஆய்வுகளை நடத்தி வருகின்றன. இந்திய அணு ஆய்வுக் குழுமம் (Automic Energy Commission) இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (Indian Space Research Organisation), இந்திய அறிவியல் மற்றும் ஆய்வுக் கவுன்சில், இந்திய மருத்துவர் கவுன்சில் போன்றவை முக்கியமானவை. நம் நாட்டுப் பாதுகாப்புத் துறையும் பல ஆய்வுக் கூடங்களை நடத்தி வருகின்றது. பல்கலைக் கூடங்களில் அடிப்படை அறிவியல் ஆய்வுகள் ஆங்காங்கேக மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய அரசு, அறிவியலுக்கென்றே தனித் துறையை அமைத்து, தேவையான அளவு மானியத்துடன் தனி மந்திரியின் தலைமையில் அறிவியலாய்வை ஊக்குவித்து வருகின்றது. இவைகள் மூலம் ஆண்டுக்கு சுமார் 9000 கோடி ரூபாய் வரை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆய்வுகட்கு செலவிடப் படுகின்றது.
தமிழகத்தைப் பொறுத்தமட்டில், மேலே குறிப்பிடப்பட்ட நிறுவனங்களின் உள் அமைப்புகள் சில அமைக்கப் பட்டிருக் கின்றன. இம்மாதியான ஆய்வுக் கூடங்கள் அரசியல் நோக்கில் இடவாரியாக ஒதுக்கப்படுவதால், தமிழ்நாட்டிற்குரிய பங்கு கிடைத்துள்ளதாகச் சொல்லமுடியாது. மொழி, இனம், சமூகநீதி என்ற சமுதாயக் கூறுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், அறிவியலுக்கு உரிய ஊக்கமில்லை என்றே சொல்ல வேண்டும். இன்றைய அறிவியல் ஊழிக்கே நாம் வந்ததாகக் கூறமுடியாது. சமுதாயச் சீர்திருத்தம், சமூகநீதி, மொழி வளர்ப்பு போன்ற கவலைகளே மேலோங்கி யிருக்கின்றன. மாநில அரசுகள் பொதுவாக, மேல்நிலைக் கல்வியின் வளர்ச்சியிலும், ஆய்விலும் ஈடுபாடு காட்டுவதில்லை. அவைகளை நிர்மாணித்து, நடப்புச் செலவுகளை மட்டுமே வழங்குகின்றனர். ஆனாலும் சில மாநிலங்கள் முக்கியம் கருதி அறிவியலை ஊக்கப்படுத்துகின்றன. உதாரணமாக கேரளம், மகாராஷ்டிரம், வங்காளம், டில்லி போன்ற மாநிலங்களைக் கூறலாம். அங்கெல்லாம் மாநில ஆய்வு மையங்கள் பல உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்த உணர்வு தமிழகத்தில் இன்னும் வளரவில்லை.
இவ்வகையில் அரசு (மத்திய) ஊக்கப்படுத்தினாலும், ஆய்வுகள் திறம்பட செய்யமுடியாத நிலையே இன்றும் இருந்து வருகின்றது. அதற்குப் பல காரணங்களைக் கூறலாம். அறிவியல் ஆய்வுக்கென்று கடந்த 30 ஆண்டுகளில்தான் கூடுதல் நிதி அளிக்கப்படுகின்றது. அதில் பெரும் பகுதி, நிலம், கட்டிடம் போன்ற ஆதார வசதிக்கே செலவாகி விடுகின்றது. ஆய்வுக்கான நிதி உதவி குறைந்து விடுகின்றது. இரண்டாவது, நாட்டின் தொழில் வளம் பரவலாக இல்லாத காரணத்தால் ஆய்வுகளுக்கெனப் பொருள்கள் யாவற்றிற்கும் இறக்குமதியை நம்ப வேண்டியுள்ளது. அதில் பல இடையூறுகள். காலத்திலும் கிடைப்பதில்லை. நம்மிடையே உழைக்கும் கலாச்சாரம் சற்றுக் குறைவாக உள்ளதும் ஒரு காரணம். மண் வசதி மற்றும் அடிப்படை ஆதார வசதிகள் குறைவு என்பதும் உண்மை. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகப் பல சீர்திருத்தங்கள் ஏற்பட்டதோடு அல்லாமல், நாட்டின் தொழில் வளமும் பெருகியுள்ளதால், நாட்டிலேயே பல பொருள்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளன. வெண்ணைய் திரண்டு வரும்போது பானை உடைந்தது போல, ஆய்வுகளுக்கான வசதியும் வாய்ப்பும் பெருகிவரும்போது, நாட்டில் மாணவர் களிடையே அறிவியல் ஆர்வம் குறைந்து, வாணிபம், நிர்வாகம், பொறியியல் போன்ற பட்டப்படிப்பிற்கே முதல்தர மாணவர்கள் செல்லுகின்றார்கள். தொழிற் கல்வியைத் தவிர, முதல் தர மாணவர்கள் 1950, 1960களில் அறிவியலைத் தேடிப் படித்தது போய், நடுத்தரமாணவர்களே இப்போது அதுவும் குறைந்த எண்ணிக்கையில் வருகின்றனர்.
ஆயினும், உயர்மட்ட ஆய்வுகளில் மிகக் காலதாமதமாக நம் நாடு ஈடுபட்டாலும், தரமான ஆய்வுகள் செய்யக்கூடிய சூழ்நிலை இப்போது வந்துள்ளது. பிற நாடுகளில் தான் செய்யமுடியுமென்றிருந்த மூலக்கூறு உயிரியல் போன்ற முன்னோடியான பல துறைகளிலும், இப்போது இங்கு வல்லுநர்களும், அவர்களுக்கான வசதியும் மிகுந்து வளர்ந்திருக்கின்றன. “Breakthrough” எனப்படும் ஆய்வுக் கண்டுபிடிப்புகள் பல இல்லாவிடினும், ஆண்டுக்கு 4000 – 5000 பேட்டண்டுகள் பதிவு செய்யப்படுகின்றன. காலப் போக்கில் அவற்றுள் பல தொழில் நுட்ப உதவியுடன் பலவகைத் தொழிலுக்கு ஆதாரமாகக்கூடும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், அறிவியல் வளர்ச்சி அகில இந்திய ரீதியில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சற்றுப் பின்தங்கியே உள்ளது. அதற்குப் பல முக்கியக் காரணங்கள் இருக்கலாம். அரசோ, மக்களோ, அறிவியலுக்கு அவ்வளவு முக்கியம் கொடுப்பதில்லை. அறிவியல்தான் நமது இன்றைய வாழ்விற்கும் வருங்கால வளத்திற்கும் அடிப்படை என்ற எண்ணம் தோன்றவே இல்லை.. இன்றும், மொழி விற்பன்னர்க்ள், சினிமா, இசை, நடனம் போன்ற அழகுக் கலைவாணர்கள் போன்றவர்கட்குக் கொடுக்கப்படும் மரியாதை,. ஊக்கம், விஞ்ஞானிகட்குக் கொடுக்கப்படுவதில்லை. உலகத் தமிழ் மாநாடுகள் கலைமாமணி விருதுகள் மொழிக்கெனத் தனித் துறை, அதற்கான அமைச்சர் போன்றவை அரசின் எண்ண ஓட்டங்களை இனங்காட்டும். அவைகளுக்கு ஒப்பான மன ஈடுபாடும். பொருள் முதலீடும் அறிவியலுக்கு இல்லாதது அறிவியலில் நமது பின்னடைவுக்கு ஒரு காரணம். பல்கலைக் கழகம் போன்ற மேல்மட்டக் கல்வி நிறுவனங்களுக்கு, அறிவியலாய்வுக்கென கணிசமான மானியமோ அல்லது கட்டிட மற்றும் கருவிகள் போன்ற வசதிகளோ கிடைப்பதில்லை. தமிழ்ப் பல்கலைக்கழகம் இருக்கின்றது. அறிவியலுக்கெனத் தனிப் பல்கலைக்கழகம் இல்லை. தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் இப்போதுதான் வந்து கொண்டிருக்கின்றன. அவைகளும் இளங்கலைப் படிப்பில் முக்கியக் கவனம் செலுத்தும் நிலை.
சித்திரைத் திருநாள் மருத்துவ ஆராய்ச்சி மையம், Tropical Botanical Research மையம் என்ற பல மையங்களைக் கேரள அரசு தன் முயற்சியிலேயே தொடங்கிய நிறுவனங்கள், இன்று நாட்டின் முக்கிய ஆய்வுக் கூடங்களும் முக்கிய மானவைகளாகி, மத்திய அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டு நன்கு செயலாற்றி வருகின்றன. கேரள அரசில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை என்ற தனித்த அமைப்பு அறிவியல் வளர்ச்சிக்கு ஆவன செய்துவருகின்றது. மகாராட்டிரம், ஓரளவு குஜராத் போன்ற மாநிலங்களும் இந்த வகையில் முன்னோடிகளாக இருக்கின்றன. இதன் காரணமாகவே, சென்னையை விட பெங்களூர், பூனே, ஹைதராபாத் போன்ற நகரங்கள் அறிவியல் நகரங்களாகி வருகின்றன.
நாளை :
வருங்காலத்தில் தமிழகம் முன்னேற வேண்டுமானால் இன்றும் நாளையும் அறிவியல் யுகத்தைச் சார்ந்தவை என்ற உணர்வு வளரவேண்டும். அத்தகைய புதிய யுகத்திற்கு நம் மக்களைத் தயார் செய்யவேண்டும். அவர்களிடமிருந்து பழைய நம்பிக்கைகள், வழிபாட்டு முறை மற்றும் சமயம் என்னும் சமுதாய அங்கங்களில் வேண்டிய அளவிற்கு ஈடுபட்டிருக்கும் பழக்கத்தை நெறிப்படுத்த வேண்டும். மொழி வளர்ச்சி அதன் பெருமைகள் மிக்க அவசியமானால் அவையே வளர்ச்சிக்குக் காரணமாகாது. அவர்களிடம், மேலும் அறிவியல் நாட்டம், அறிவியல் அணுகுமுறை, மற்றும் அறிவியல் கலாச்சாரம் மிகுதியாக வளரவேண்டும். சமுதாய நம்பிக்கைகளைச் சமுதாயச் சீர்திருத்த இயக்கங்களின் மூலம் மாற்றி நெறிப்படுத்த முடிந்தாலும், அறிவியல் அணுகுமுறை, அறிவியல் கலாச்சாரம் வளரவே வேண்டுமானால் அறிவியலை முறையாகப் பயிலவும், அறிவியல் ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ளவும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இன்று மொழி வளர்ச்சிக்கென என்னென்ன முயற்சிகளைச் செய்கின்றோமோ அத்தனை முயற்சி களையும் அறிவியலை மக்களிடையே பரப்ப எடுத்துக் கொள்ள வேண்டும்.
அறிவியல் பாடங்களை மாணவர் களின் கல்வி நிலையில் ஒவ்வொரு மட்டத்திலும் கட்டாயமாக்க வேண்டும். பொது அறிவியல் 10+2 ஆண்டுகள் அவசியம் சொல்லிக் கொடுக்கப் படவேண்டும். அறிவியலில் ஆர்வமும், திறமையும் காட்டும் மாணவர்களை ஊக்குவித்து அறிவியலைத் தங்களது வேலையாகக மேற்கொள்ளச் செய்ய வேண்டும். அறிவியல் ஆய்வுகள், பல்கலைக்கழகத்தில் மேலும் செம்மையுற வேண்டிய மான்யங்களை அரசு அதிகப்படுத்த வேண்டும். இன்று மேல் மட்டப் படிப்பிற்கு வரும் மாணவர்களுள் நூற்றுக்கு 18-19 மாணவர்களே அறிவியல் பட்டப்படிப்புக்களுக்கு வருகின்றார்கள். அதிலும் மதிப்பெண்கள் வழியில் நிர்ணயிக்கப்பட்ட தராதரத்தில் சராசரி அளவில் இருக்கும் மாணவர்களே வருகின்றார்கள். திறமை மிக்கவர் 80-90 விழுக்காடு வாங்கியவர்கள் வருவதில்லை.
கேரளம், மகாராட்டிரம் போன்ற மாநிலங்களைப் போல, மாநில அளவிலான, மானிய அறிவியல் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படவேண்டும். அறிவியல் ஆய்வுகள் பரவலாக்கப்பட்டால்தான், அவற்றினுள் சில, தொழில் நுட்பங்களாக்ககப்பட்டு நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படும், அறிவியல் ஆய்வின் மூலம் உடனடிப் பயன் கிட்டாவிட்டாலும், பிற நாட்டு அறிவியல் ஆக்கங்களைச் செம்மையாகப் பயன்படுத்தவும், வாழ்வில் அறிவியல் கலாச்சாரத்துடனும், அறிவியல் அணுகுமுறையுடன் நலம்பெற ஏதுவாகும். இன்று பல்கலைக்கழகங்களில் அடிப்படை அறிவியல் பாடங்கள், பழைய முறையிலேயே சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. இன்று இளங்கலைப்பயிலும் தாவரவியல் மாணவனுக்கும், தத்துவம் படிக்கும் மாணவனுக்கும் அதிக வேறுபாடு இல்லாத நிலையில் உள்ளது. இந்த நிலையைப் போக்க வேண்டும்.
ஆ. ஞானம்
சென்னை இலயோலா, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தாவரவியல் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க வடக்கு கரோலினா மாநிலப் பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி. பட்டம் பெற்றவர். கார்னல் எனும் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் பயின்றவர். பல்வேறு உயர் பொறுப்புகளில் பணியாற்றிய பின் பாரதிதாசன் பல்கலைக் கழகம் (1985), சென்னைப் பல்கலைக் கழகம் (1988) ஆகியவற்றில் துணைவேந்தராகத் தொண்டாற்றிப் புதுவைப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராக 1991 முதல் தொண்டாற்றி வருபவர். உலக நாடுகளில் பல பல்கலைக் கழக அழைப்பிற்கு இணங்கப் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர். 130க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அறிவியல் தமிழை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர்தம் முதல் படைப்பு ‘அறிவியலும் ஆன்மிகமும்’ எனும் நூலாகும்.