Star Mountain

My travels and other interests

சமூகம்தமிழ்நாடு நேற்று இன்று நாளை

சமயம் (1997)

சமயம்
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
திருவண்ணாமலை ஆதினம்,
குன்றக்குடி – 630 206.

உண்ணல், உறங்கல், உயிரினம் பெருக்கல் அனைத்தும் விலங்கினத்திற்கும் மானுடத்திற்கும் பொதுச் செயல்களே! மனிதன் தான் ஆறாவது அறிவுடையவன்; பகுத்தறிவுடையவன். நன்று எது? தீது எது? என்பதை ஆராயும் ஆற்றல் உள்ளவன். எப்படியும் வாழ்வது இவன் இலட்சியம் அல்ல! இப்படித்தான் வாழவேண்டும் என்பதே மனித இலட்சியம்!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தேவ நிலைக்கு உயர்தல் மனிதப் பிறவியின் நோக்கம்! தம்மை நெறிப்படுத்தி வாழும் உயர்நிலைக்கு முயலத்தான் சமயம் உதவுகின்றது.

மனிதனின் விலங்குணர்வை அகற்றி, மனித உணர்வை வளர்த்துத் தெய்வக் குணத்துக்கு உயர்த்துவது சமயத்தின் பணி.

சமயம் நேற்று எப்படி இருந்தது? இன்று எப்படி இருக்கின்றது? நாளை எப்படி இருக்கவேண்டும்? இதுவே நம் கட்டுரையின் நோக்கம்.

மேற்றிசை நாட்டு அறிஞர்கள் அச்சத்திலிருந்து சமயம் பிறந்தது, கடவுட் கருத்துத் தோன்றியது என்று கூறியுள்ளனர். ஆதி மனிதன் கல்லில் இடித்துக் கொண்டான். அவனுக்குள் துன்பம் ஏற்பட்டது! துன்பத்திற்கு அஞ்சியே துன்பத்திற்குக் காரணமாய் இருந்த கல்லையே தொழத் தொடங்கிவிட்டான் என்பர். மேற்றிசை நாட்டிற்கு இக்கருத்துப் பொருத்தமாக இருக்கலாம். ஐரோப்பிய சமய நாகரிகத்தின் அடித்தளம் அச்சம் என்று சொல்லலாம்.

ஆரிய இனத்தைச் சார்ந்தவர்கள் நிலம், நீர், காற்று இவைகள் விளைவிக்கும் சேதங்களைக் கண்டு அஞ்சி அவற்றையே வழிபடத் தொடங்கிவிட்டனர். வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் இவ்வழிபாடு சிறுபிள்ளை விளையாட்டாகிவிடுகிறது. தமிழர்களின் வழிபாடு, கடவுள் நம்பிக்கை அச்சத்தில் ஐயத்தில் தோன்றியது அல்ல; அறிவின் வழிப்பட்டது.

“முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே”

என்ற மணிவாசகர் வாக்கிற்கு இணங்கப் பழமைக்கும் புதுமைக்கும் இணைப்புப்பாலம் இட்ட நெறி.

“தொன்மையவாம் எனும் எவையும் நன்றாக இன்று
தோன்றிய நூல் எனும் எவையும் தீது ஆகா”

என்ற உமாபதி சிவம் வாக்கிற்கிணங்கப் பழமையின் சிறப்பும் புதுமையின் உயர்வும் பெற்ற நெறி தமிழரின் சமய நெறி.

“சோதியே சுடரே சூழொளி விளக்கே!”
என்று மணிவாசகனார் போற்றும் இறைவன் வடிவங்கள் சிறப்புடைய ஐந்து.

அடல்விடை ஊர்ந்து ஆண்டு கொண்டருளும் நிலை கொன்றை மாலையும் திரிசூலமும் கொண்டு விளங்கும் கோலம். இரண்டாவது படிமம் அம்மையப்பன். மூன்றாவது ஆசிரியனாக இருந்து நன்னெறி உணர்த்திடும் நிலை. நான்காவது நிலம், நீர், தீ, வளி, வெளி, கதிரவன், திங்கள், ஆதன் என எண்பெரும் வடிவநிலை. ஐந்தாவது ஆடல்வல்லான் நிலை இஃது இறைவனை வழிபடும் வழிபாட்டுத் திருமேனிகளின் படிமமுறை வளர்ச்சி.

நேற்று என்பது சங்க காலம்தொட்டு நேற்றுவரை உள்ள நிகழ்வுகளின் தொகுப்பு. சங்க காலத்தில் சமய நம்பிக்கை இருந்தது. கடவுள் நெறி வலியுறுத்திக் கூறப்படவில்லை. எனினும் ஆங்காங்குக் கூறப்படுகின்றது. அதியமானிடம் நெல்லிக்கனி பெற்ற ஒளவையார்,

“நீல மணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே”

என்று வாழ்த்தினார். நீலமணிமிடற்றினை உடையவன் சிவபெருமான்.

“விண்ணோர் அமுதுண்டு சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் புரிபவன்”.

பாற்கடலில் தோன்றிய நஞ்சைத் தாமே உண்டு உலக உயிர்களை உய்ய வைத்த தியாகத் திருவுருவம் தான் திருநீலகண்டம். சங்க காலத்தில் சமய நம்பிக்கை, சமய வழிபாடு முற்றிலும் இல்லை என்று கூற இயலாது. நெறிபட, நிரல்பட ஆங்காங்குப் பேசப்படுகின்றது.

பழந்தமிழகத்தில் ஒரு குரல் சமய எழுச்சிக்காக மானுடத்தின் நன்மைக்காக ஓங்கி ஒலிக்கின்றது.

“ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல்
ஈர்ந்தாள் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூஅணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப,
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்
இன்னாது அம்ம, இவ் உலகம்
இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே”
(புறம். 194)

இதே ஏக்கத்தை ஒன்பதாம் நூற்றாண்டில் நற்றமிழ்ச் சுந்தரரிடமும் காணமுடிகின்றது. ஏழாம் நூற்றாண் டிலிருந்து பக்தி சமய இலக்கியத்தின் எழுச்சிக் காலம் என்று கூறலாம். ஏழாம் நூற்றாண்டில் தொடங்குகின்ற போராட்டம் வெறும் சமய வழிப் போராட்டம் அன்று; தமிழர்களின் பண்பாட்டிற்கும், நாகரிகத்திற்கும், கலாச்சாரத்திற்கும் விடுக்கப்பட்ட அறை கூவல்!

சேக்கிழார், சமணர்களுக்கும் சம்பந்தப் பெருமானுக்கும் நடக்க இருந்த சொற்போரை,

“ செழுந்தமிழ் வழக்கு அயல் வழக்கின் துறை வெல்ல”

இருக்கிறது என்று வருணிப்பார். ஆக, ஏழாம் நூற்றாண்டில் தொடங்கி சேக்கிழாரின் காலம் வரை உள்ள திருமுறைக் காலம், வெறும் சமய எழுச்சிக் காலம் மட்டும் அல்ல! சமயத்தைப் புனருத்தாரணம் செய்த வேள்விக் காலம்! சேக்கிழாரின் திருமுறை சமூக மேடு பள்ளங்களைச் சரி செய்கின்றது. திருக்கோவில் பூசனை, சீலமுடைய – அன்புடைய – பக்தியுணர்வுடைய எவரும் செய்யலாம் என்ற புரட்சியை, இன்று மக்களின் அரசும் இருபதாம் நூற்றாண்டுப் புரட்சிச் சமூகமும் செய்ய முடியாத சாதனையை நிகழ்த்திக் காட்டுகின்றது. தீண்டாமையை இல்லாது ஒழிக்கவும் ஏழை – பணக்காரர் நிறைந்த, சமூகத்தை எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் பொதுமைச் சமுதாயமாக்கவும் போராடு கின்றது. துறவிகளும் தோற்கும் தவத்தை இல்லறத்தில் நோற்கமுடியும் என்ற புது நெறி காட்டுகின்றது. இதுவரை தோன்றியுள்ள உலக நீதி மன்றங்கள் கூறாத தீர்ப்பை ஆளும் அரசுக்குக் கூறியது. பூசலாரின் மனக்கோயிலில் இறைவனை எழுந்தருளச் செய்தது. இறைவன் வான் பழித்து, மண் நடந்து அடியவர்களைத் தேடி ஆட்கொள்ளச் செய்தது! அடியார்க்கு அடியனாய் எளியார்க்கு எளியனாய் அண்டர்நாயகன் அடியவர்களில் அன்புக்கு ஆட்படும் அருமையை விவரித்தது நேற்றைய சமயம்! நேற்று, சமயம், வாழும் மானிடத்தின் மூச்சுக் காற்று! ஒழுகலாறு! சமய வாழ்க்கை, ஊனும் உயிரும் கலந்த பிரிக்க முடியாத வாழ்க்கை! அரசன் தழுவும் மதமே, மக்களின் மதம் என்ற முடியாட்சிக் காலத்தில் சமயம் எளிமையாக இருந்தது. கோயிலைத் தழுவிக் குடிகளும், குடிகளைத் தழுவிக் கோயிலும் அமைந்திருந்தன.

இன்று சமயம் எங்கே இருக்கின்றது? இன்று வருத்தத்திற்குரிய செய்தி! முன்பு முடியாட்சிக் காலத்தில் மன்னரின் சமயமே மக்களின் சமயம்! இன்று சமயம் அரசிடமிருந்து விடைபெற்று மக்களுக் குரியதாக மாறிவிட்டது! சமயம், மக்கள் விரும்பும் நெறி என்ற நிலையில்தான் சமயம் வளர்க்கும் நிறுவனங்கள், திருக்கோயில்கள் அதிகார வர்க்கத்தின் ஆளுமைக்கு உட்பட்டுள்ளது. ஆனால், சமய நிறுவனங்கள், திருக்கோயில்கள் அரசின், வரவு செலவு தணிக்கைக் குரியனவாய்ப் போயின. அசையும் சொத்து, அசையாச் சொத்துப் பட்டியல், ஆவணக் காப்பறையில் பாதுகாப்புடன் உள்ளன. இயங்கும் சொத்தாம் மக்கள் சொத்து, தில்லை அம்பலத்துத் தீப்புகுந்த திருநாளை போவாரைப் போல் வர மறுக்கிறது.

இன்று சமயம் மக்களுக்கு வேண்டியதை – மக்கள் விரும்புவதைத் தரும் அலாவுதீன் அற்புத விளக்கு என்ற மனோபாவம் வளர்ந்துவிட்டது. அதனால் தான் இன்று ஆண்டவன் கூடப் பணக்காரன் – ஏழை என்று பாகுபடுத்தப்பட்டுவிட்டான். திருப்பதி ஆண்டவனும் , பழனி முருகனும் உலக வங்கிக்கு நிதி உதவி செய்யலாம். நம் தெருக்கோடி விநாயகரோ நித்திய பூசைக்குத் தடுமாறுகின்றார்! ஏன்? என்ன காரணம்? எந்த ஆண்டவன் பணம் அள்ளித் தருவார் என்ற நம்பிக்கையை மக்களுக்கு உண்டாக்கினாரோ அவர் பணக்காரராக மாறிவருகின்றார். இதுதான் இன்றைய சமயநிலை!

நாளை எப்படி சமய உலகம் இருக்கவேண்டும்? சமயம் மனிதனை உழைக்காமல் செல்வன் ஆக்க அல்ல. அவனை வாழ்வாங்கு வாழச் செய்து வாழும் நிலையை உயர்த்தத்தான்! சமயம் மீண்டும் தொண்டு நெறியின் உறைவிடமாக மாறவேண்டும். மானுடச் சமூகத்தின் மையங்களாகத் திருக்கோயில்கள், சமய நிறுவனங்கள் மாற வேண்டும்.

“நடமாடக் கோயில் நம்பற்கொன் றீயிற்
படமாடக் கோயில் பகவற்க தாமே”

என்ற நெறியில் நடமாடும் மனிதச் சமூகத்திற்குத் தொண்டு செய்யவேண்டும். மக்கள் திருக்கோயிற் பணிக்கு என்று தனி நேரம் – உழைப்பு நேரம் ஒதுக்க வேண்டும். ஊன் உருகும் உயிர் உருகும் தேனினும் இனிய தீந்தமிழ் மறைகள் திருக்கோயில்களில் முழங்கவேண்டும். அன்பை, நட்பை, காதலை, பண்பாட்டை, கலாச்சாரத்தை வளர்க்கும் மையங்களாகச் சமய உலகம் மாறவேண்டும். நாத்திகம் நஞ்சு! நாகரிகப் பண்பாட்டு வாழ்க்கைக்கு ஏற்றதல்ல. அதேபொழுது கடவுள் நம்பிக்கை மனித நேயத்திற்கு மாறாக இருப்பின் நாத்திகத்தினும் கொடிது.

“அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒரு குலமும் சுற்றமும் ஓரூயிரும் நீ”

என்று சகல உறவுகளும் கலந்த உயிர்ப்பு உறவினைச் சமய வாழ்க்கை கற்றுத் தீரவேண்டும். விலங்கு உணர்விலிருந்து மனித சமூகத்தை விடுவித்துத் தேவநிலைக்கு உயர்த்துவதாய், வழிகாட்டுவதாய் நாளைய சமய உலகம் அமையவேண்டும். நேற்று, சமயம் அரசர்களின் சமயமாய் இருந்த காலத்தில்கூட மக்களுககுரியதாய், மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருந்தது. இன்று சமயத்திற்கும் மக்களுக்கும் நீண்ட வெளி! இன்னும் சிலரின் சமய நம்பிக்கை, கடவுள் நாம் விரும்பியதைத் தரும் பரிசுச் சீட்டு என்று எண்ணுகின்ற மனோபாவம்! இந்நிலை மாறிட சமயத்துறையில் மாபெரும் புனருத்தாரணம் அவசியம். ஏறத்தாழ 1300 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவற்றைக்கூட நினைத்துப் பார்க்க இயலாதநிலை. எனவே, சமயத்துறையில் மார்ட்டின் லூதர் கிறித்தவச் சமயத்தைப் புனருத்தாரணம் செய்ததைப் போலப் புனருத்தாரணப் பணிகள், இளைய தலைமுறைக்குக் காத்திருக்கின்றன. இன்று மதங்களுக்குள் சண்டைகள்! வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தி, முரண்பாடுகளை உருவாக்கித் தமக்குள் முட்டி மோதி அழிக்கின்றனர்.

நாளைய சமயம் எப்படி இருக்க வேண்டும்? சமயம், சமூகத்திற்கே என்ற திசைநோக்கி நகரவேண்டும். நோயை ஆற்றாத மருந்தால் பயன் இல்லை! நெறிப்படுத்தாத சமயம், சமயமும் அல்ல. பண்பாட்டை, கலாச்சாரத்தை, நாகரிகத்தைப்பேணி காக்கும் நெறியே சமயம்! நாளைய சமயம் மனித நேயத்தை வளர்க்க வேண்டும்.

தொண்டின் உறைவிடமாக, நன்னெறி போற்றும் வகையில் நாளைய சமய உலகம் அமைய வேண்டும்!

நாளைய சமய உலகின் புனருத்தாரணம் அன்பால் வழிபடுவதே ஆகும்.

நாளைய சமயம், மனிதகுலம் உய்யும் நெறி காட்டும் திசைநோக்கி நகரட்டும். வான்முகில் வழாது பெய்து வளம் பெருகி, மேன்மைகொள் சமய நீதி உலகம் எல்லாம் விளங்கும் திசை நோக்கிப் பயணம் செய்வோம்.

பொன்னம்பல அடிகளார்:

தவத்திரு குன்றக்குடி அடிகளார் மறைவிற்குப் பின் தவத்திரு பொன்னம்பல அடிகளார் திருவண்ணாமலை ஆதீனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளவர்.

You Might Also Like