Star Mountain

My travels and other interests

Rural Tamilnadu

திட்ட அறிமுகம் (2000)

அறிமுகம்

அமெரிக்காவில் உள்ள சிந்தனைவட்டம் (நியூ ஜெர்சி) & தமிழ் அசோசியேஷன் ஆப் நியூ ஜெர்சியும், இணைந்து தமிழகம் குறித்த சமூகவியல் ஆய்வுப்பணியொன்றை சில ஆண்டுகளுக்கு முன்பாகத் துவக்கியது. இந்த ஆய்வுப் பணியில் சுதந்திரத்திற்குப் பிறகான 50 வருடங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட சமூக, பொருளாதார, கலாச்சார, வாழ்வியல் மாற்றங்களை, அதன் விளைவுகளை  அறிந்து கொள்ளவும், இது பற்றித் தமிழ் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக தமிழ் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள், வளர்ச்சிகள், பிரச்சனைகள் குறித்து அறிஞர்கள் பார்வை, மக்கள் பார்வை, அரசின் பார்வை, என பல கோணங்களில், பல தளங்களில், துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படத் திட்டமிடப்பட்டன.

இதற்கான முதல் கட்டப் பணியாக சுதந்திரப் பொன்விழா (1997) ஆண்டில் ‘தமிழகம் – இன்று நேற்று நாளை’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வுத் தொகுப்பினை வெளியிட்டது. இந்த ஆய்வுத் தொகுதியில் தமிழக வாழ்வியல் பற்றி கடந்த் 50 வருடங்களில் ஏற்பட்ட வளர்ச்சி மாற்றங்களை விவசாயம், தொழில், நீர்மேலாண்மை, கல்வி, குடும்பம், சட்டம், ஊராட்சி, நிர்வாகம், தொடர்பு சாதனங்கள், கலை இலக்கியம் என்பது போன்ற 30க்கும் மேற்பட்ட துறைகளைப் பற்றிய வல்லுநர்களின் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. இந்த ஆய்வுத்தொகுதி உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள், கல்வி நிறுவனங்கள், தமிழ் அமைப்புகள், ஆய்வு மையங்கள், மற்றும் பொது நூலகங்கள், என அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்து பல்வேறு ஆய்வாளர்களாலும், விமர்சகர்களாலும் பாராட்டுப் பெற்றது.

இதன் தொடர்ச்சியாக 2000ஆம் ஆண்டில் ‘தமிழகம் – தற்காலப் பிரச்சனைகளும் மக்கள் எதிர்பார்ப்புகளும்’ என்ற புதிய ஆய்வுத் திட்டமொன்றைத் துவக்கியது. இது தமிழகத்தின் தற்காலப் பிரச்சனைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்தது. அதிலும் குறிப்பாக கிராம வாழ்வில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும் அதன் விளைவாக உருவாகியுள்ள நெருக்கடிகள், பிரச்சனைகள் அடையாளம் கண்டு அதற்கான காரணங்களை, தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறியவும், விவாதிக்கவும் முயற்சி மேற்கொண்டது. தமிழகமெங்கும் கிராம வளர்ச்சிக்கு அரசு வருடம் தோறும் புதுப்புது திட்டங்களை அறிவித்தபடியே உள்ளது. தமிழகமெங்கும் கல்வி, போக்குவரத்து, தகவல் தொடர்பு என பல்துறைகளும் நவீனமாக வளர்ச்சியடைந்து கொண்டு வருகின்றன. நாடெங்கும் நடைபெற்றுவரும் ஆய்வுகளின் மூலம் புதிய வளர்ச்சிக் கோட்பாடுகளையம், திட்டங்களையும் விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் தங்கள் பக்கமிருந்து தெரிவித்தபடியே இருக்கின்றனர்.

ஆனால் கிராமத்தை விட்டு நாள்தோறும் நகரங்களை நோக்கி இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகின்றது.

கிராமம் பிரச்சனைகளின் வலையில் சிக்கி மீளமுடியாமல் உள்ளது. அரசு திட்டங்கள், உதவிகள் முறையாக மக்களைச் சென்று சேர்கிறதா? மக்கள் தங்கள் பிரச்சனைகளை, உரிமைகளை, பற்றி விழிப்புணர்வு கொண்டிருக்கிறார்களா? மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் போனதற்கு யார் காரணமாக இருக்கிறார்கள்? நவீன உலகில் நாம் அடைந்துள்ள முன்னேற்றம் நிஜமான வெற்றிதானா? என கேள்விகள் பெருகிக் கொண்டேயிருக்கின்றன. இதற்கான பதிலைத் தேடி 40க்கும் மேற்பட்ட துறைகளை முதன்மைப்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. அதன் வழி தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகளைக் கண்டறிந்து அதைப் பற்றிய கண்ணோட்டத்தையும், மக்களின் பார்வையையும் ஒருங்கிணைந்து பதிவு செய்ய இந்த ஆய்வு முயற்சித்தது.

ஆய்வு முறை

இதற்காக தனியான ஆய்வு முறையானது உருவாக்கப்பட்டு முதல்கட்டமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் மாவட்டத்திற்கு முப்பது முதல் ஐம்பது நபரைச் சந்தித்துக் கள ஆய்வு நடத்தப்பட்டது. இந்தக் கள ஆய்விற்காக கிராமப்புறங்களில் இருக்கும் படித்த வேலையற்ற இளைஞர்களும், பள்ளி ஆசிரியர்களும் எழுத்தறிவு பணியாளர்களும், ஆரம்ப சுகாதாரப் பணியாளர்களும் பயன்படுத்தப்பட்டார்கள். இந்தப் பணி இரண்டு விதமாகப் பிரித்துக் கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று அல்லது நான்கு வகை கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. பின்பு இக்கிராமங்களில் நேரிடையாக ஒரு கேள்வித்தாளுடன் களப்பணியாளர் சென்று, அதில் இடம்பெற்றுள்ள கேள்விகளுக்கு உரிய பதில்களைப் பெற்று, மக்கள் முக்கியமாகக் கருதும் பத்து பிரச்சனைகளைப் பட்டியலிடும் பணி நடந்தது. இந்தக் கள ஆய்வுப் பணி எட்டு மாத காலம் நடைபெற்றது. சேகரிக்கப்பட்ட தகவல்கள் அதன் பொருள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு அவை தனித்தனி விவரங்களாக சேகரமாயின. இதன் அடிப்படையில் தமிழகம் சந்திக்கும் அன்றாட பிரச்சனைகளும் அதைப் பற்றிய மக்களின் மனப்பதிவும் தொகுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கள ஆய்விலிருந்து பயன்படுத்தப்பட்ட கேள்வித்தாள் பற்றிய அறிமுகம் இன்றியமையாதது. இக்கேள்வித் தாளில் பெரும்பான்மையானவை ஆம், இல்லை என பதில் சொல்ல எளிதாக அமைக்கப்பட்டன. ஒருசில கேள்விகளுக்குத் தான் அவர்கள் பதில் சொல்ல வேண்டியிருந்தது. ஆகவே இக்கேள்விகளை நாம் கிராமப்புறத்தில் படிப்பறிவு இல்லாத, மனிதர்களிடம் குறிப்பாக பெண்களிடம் கேட்பதற்கு எளிமையானதாக இருந்தது. அதிலும் அக்கேள்விகளுக்கு யோசித்துப் பதில் சொல்வதை விடவும் உடனடியாகத் தரும் பதில் வழியாக அவர்களின் மனக்குமுறல் இயல்பாக வெளிப்பட்டதைக் காண முடிகிறது.

சில மாவட்டங்களில் இந்தக் கேள்வித்தாள்களில் உள்ள கேள்விகளைத் தவிர்த்தும் மக்கள் நேரிடையாகப் பல்வேறு தகவல்கள் யோசனைகள் சொன்னதையும் கணக்கில் எடுத்துக்கொண்டே இந்த ஆய்வுப் பணி செயல்பட்டுள்ளது.

தற்போதைய தமிழக நிலை

சுதந்திரத்திற்குப் பிறகான இந்த 50 வருஷங்களில் தமிழகத்தில் விஞ்ஞானம், தொலைத்தொடர்பு நவீன வாகனவசதிகள் கலாச்சார மாறுதல்கள் என ஒருபக்கம் தொடர்ந்த வளர்ச்சி தெரிந்தாலும், மறுபக்கம் கிராமப்புறங்களில் விவசாயம் மெல்ல அழிந்து வருவதும் சிறிய தொழில்கள் முடக்கம் காண்பதும் மரபாக இருந்து வந்து வணிக பொருட்கள், தொழில்கள் அழிந்து போவதும், மக்கள் அவர்களின் அடிப்படை வசதிகளுக்கே கூட போராட வேண்டிய சூழ்நிலையும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. தமிழக கிராம மக்களுக்குக் கிராமிய வாழ்வை விடவும் இடம் பெயர்ந்து நகர் நோக்கிச் செல்வதே விருப்பமானதாக  இருக்கிறது.

  1. தனிநபரின் உழைப்பிற்கான வாய்ப்புகள் கிராமத்தை விட நகரில் அதிகமிருப்பதாக நம்புவதால் பலரும் கிராம வாழ்வை விட நகரை நோக்கி அதிகமாகச் செல்கின்றனர்.
  2. கிராமப்புறத்தில் கல்வி கற்பதற்கான ஆரம்ப நிலை வசதிகள் மட்டுமே இதுவரை சாத்தியமாகியிருக்கின்றன. அதனால் உயர்கல்வியின் பொருட்டு மாணவர்கள் சிறிய பெரிய நகரங்களுக்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் நகரங்களில் குடியேறுவதைப் பலரும் விரும்புகிறார்கள்; மேலும் கிராமப்புற கல்வியின் தரம் மிக மோசமடைந்து காணப்படுவதாலும், நவீன கணினி மற்றும் தொழில் நுட்ப வசதிகள் அளிக்கப்படாததால் கிராமக் கல்வியைப் பலரும் விரும்புவதில்லை.
  3. அடிப்படை மருத்துவ வசதிகள் பெரும்பான்மை கிராமங்களில் கிடைக்கவில்லை. பல கிராமங்களிலும் மருந்தகம் அமைக்கப்பட்ட போதும் போதுமான மருத்துவர்கள் மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இல்லை; மேலும் பெண்கள், குழந்தைகளுக்கான மருத்துவ வசதிகள் மிக சொற்பமாகவே கிடைக்கின்றன.
  4. கிராமப்புற வளர்ச்சிக்கு அரசால் வழங்கப்படும் பணம் பெருமளவு திட்ட நடைமுறைப்படுத்தபடும் முன்பாக, வீண் செலவிலும் வளர்ச்சிப் பணிகளுக்குத் தரப்படும் பணம் பெருமளவு வீணடிக்கப்படுகின்றன. புதிய தொழில்கள் தொடங்குவோர்கள் பலரும் நகரை மையமாகக் கொண்டதால் கிராமம் பின் நோக்கிப் போவது தவிர்க்கப்பட முடியாமல் உள்ளது.

மேலும் தகவல் தொடர்பு சாதனங்கள் புதிய வணிக களமாக நகரை ஒரு கற்பனா மையமாக பெருக்கிக் காட்டியபடி இருப்பதாலும், நகரில் அறிமுகமாகும் பல்வேறு ஆடை அணிகலன், உணவு, நவீன சாதனங்கள், உபயோகப் பொருட்கள், கேளிக்கைகள் காரணமாக கிராமம் ஒரு விலக்கப்பட்ட பகுதி போன்றதொரு நினைப்பை பலருக்குள்ளும் உருவாக்கி விடுகிறது. கிராமம் இன்னமும் சாதிய அமைப்புகளில் இருந்து தன்னை முற்றாகத் துண்டித்துக் கொள்ளவில்லை. சாதிய மத சம்பிரதாயங்களும் அடக்கு முறைகளும் இன்றும் குறைந்த பாடில்லை. இதைத் தவிரவும் பிராந்திய மனப்பாங்கும், தொடர்ந்து அரசாங்க திட்டங்களால் கவனிக்கப்படாத, நிறைவேற்றப்படாத தன்மையும் கிராமத்தைப் பற்றிய சொர்க்க கனவுகளைத் தகர்த்துவிட்டது.

ஒவ்வொரு மாவட்டமும் அதன் கிராம அளவில் தனக்கென பிரத்யேகப் பிரச்சனைகளைக் கொண்டிருக்கிறது. இப்பிரச்சனை மற்ற மாவட்டவாசிகளுக்குத் தொடர்பற்றது மற்றும் புரிந்து கொள்ளப்பட முடியாதது. இன்னொருபக்கம் ஒவ்வொரு மாவட்டமும் அதன் நிலவியல் அளவில் வேறுபாடு கொண்டதாகவும் அது சார்ந்த வாழ்வியல் கொண்டதாக இருப்பதால் பொதுப்பிரச்சனைகளாக இருப்பவை பெரும்பாலும் அடிப்படை வசதிகள் குறித்தவையாகவே இருக்கின்றன.

விவசாயம் செம்மையாக நடைபெறும் ஒரு சில மாவட்டங்களில் விவசாயத்திற்கான பாசனநீர் முக்கிய பிரச்சனையாக உள்ளது. மேலும் இங்கு விவசாயக் கூலிகளாக வேலை செய்ய ஆள் கிடைக்காமல் தேடிப்பிடிக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது. விவசாயம் முறையாக நடைபெற்ற போதும் அதற்கான விநியோகம் மற்றும் விலை முறைமைப்படுத்தப்படவில்லை. இதனால் ஆண்டுதோறும் விலை வீழ்ச்சி தொடர்பற்று ஏறி இறங்குகிறது. விவசாயக் குடும்பங்களின் தேவைகளாக முன்பு இருந்த கலாச்சார கூறுகள் மாறி பெரும்பான்மை வீடுகளில் ஒரேவிதமான உபயோகப் பொருட்கள், சாதனங்கள், உணவு முறைகள் அறிமுகமாகி விட்டன. இதனால் நகரைப் போலவே உணவு தொடர்பான புதிய தேடுதல் கிராமபுறத்திலும் அதிகரித்து விட்டது. இதனைப் பூர்த்தி செய்யவே ஹோட்டல்கள், சிற்றுண்டி கடைகள் சாலையோரக் கடைகள் என கிராமங்களிலும் புதிய அவசர உணவுப் பழக்கம் தொற்றிக் கொண்டு விட்டது.

கிராமிய வாழ்வின் கனவாக பலருக்கும் இருந்தவை அங்கு கிடைக்கும் தண்ணீரும், காற்றும் ஏகாந்தமான வெளியும் தான். இந்த மூன்றும்  இந்த 50 ஆண்டுகளில் அதிகமான அளவில் மாசுபட்டும் பிரச்சனைக்குட்பட்டும் இருக்கின்றன. கிராமங்களில் சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் நோய் பரவுவதும் ஆரோக்கியகேடு அதிகமாவதும் தொடர்கிறது. இதுபோலவே விவசாய நிலங்கள் தரிசுகளாகியும் வேறு தொழில்களுக்கு விற்கப்பட்டும் வருவது அதிகரித்துள்ளது. கிராமம் சார்ந்து உருவான தொழில் புதிய வேலை வாய்ப்புகளைத் தந்த போதும் கிராம முன்னேற்றத்திற்கு அவை எந்த வகையிலும் உதவவில்லை.

அரசாங்கம் வருடம் தோறும் பல்வகையான நலத்திட்டங்களைக் கிராம மேம்பாட்டிற்காக திட்டமிடுகிறது. இதற்கான நிதியை ஒதுக்குகிறது. இந்த நிதியில் பாதிகூட கிராமப்புறங்களில் முறையாகச் செலவு செய்யப்படுவதில்லை. மாறாக இந்தத் திட்டப் பணம் பெருமளவு நிர்வாக செலவுகளுக்கே சரியாகிவிடுவதோடு முறையற்று செலவு செய்யப்படுவதும் நடைபெறுகிறது.

கிராமவங்கிகளும் கூட தங்கள் சேவையால்  கிராம வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. பெருமளவு இந்த வங்கிகள் ஒரு சேமிப்புக் கணக்கு வைக்குமிடமாகவே செயல்படுகின்றது.

கிராம வாழ்வியல் பிரச்சனைகளால் பெண்களும் குழந்தைகளுமே அதிகமாகப் பாதிப்படைந்துள்ளனர். பெண் சிசு பிறப்பு, கல்வி, திருமணம், வேலை என பல நிலைகளிலும் பெண் போராட வேண்டிய சூழல் உள்ளது. குழந்தைகள் போதுமான மருத்துவ வசதி, சரிவிகித உணவு மற்றும் சுகாதார வசதிகள் அற்று நோய்மையுறுவதும் காண முடிகிறது.

கிராமம் மொத்த அளவில் தனது அயல் கிராமங்களுடன் கொண்டிருந்த உறவு நிலைகளில் பெருத்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அரசியல் மற்றும் சாதியப் பெருக்கத்தால் கிராமத்தின் சுபாவம் திரிந்து அது சண்டைக்களம் போலதொரு தோற்றம் கூடியுள்ளது. பரஸ்பர நம்பிக்கையை இழந்த உறவுகளும், பண மதிப்பீடுகளால் முடிவாகும் அதிகாரமும் ஒவ்வொரு குடும்பத்தையும் பாதித்துள்ளது.

கிராமப்புற இளைஞர்கள் தங்களுக்கென எதிர்காலம் வெளியே தொலைவில் இருப்பதாக முடிவு செய்தவர்களாக இருக்கிறார்கள். வேலையற்றவர்கள் கிராமிய வன்முறைகளுக்கு ஏதோ வகையில் துணைபோகிறார்கள்.

ஊடகங்கள் பெருகிவிட்டதால் கேபிள் டிவி, சினிமா இரண்டும் கிராமத்தையும் கைப்பற்றிக் கொண்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்த பிம்பங்களின்  ஆட்சியில் பீடிக்கப்பட்ட மனிதர்கள் நாள்தோறும் அதிகரித்து வருகிறார்கள்.

தமிழகக் கிராமப்புறத்தின் வெளித்தோற்றம் இப்போதும் இயல்பில் இருப்பதுபோல தோன்றிய போதும் அதன் உள்முகம் மெல்ல நோய்மையுற்று சிதைந்து வருவதையே அறிய முடிகிறது. கலாச்சார நினைவுகள் மற்றும் நில மதிப்பு இன்னமும் தொடரும் விவசாய வாழ்வு மற்றும் வழிபாடுகள் சடங்குகள் மட்டுமே கிராமத்தைக் காப்பாற்றி தக்கவைத்து வருகிறது. இக்காரணங்கள் மட்டுமின்றி நகர்சார் வாழ்வியல் நெருக்கடிகள், பொருளாதார பிரச்சனைகள், மற்றும் கலாச்சார கூறுகளும் தான் கிராமத்தை இன்றும் வாழுமிடமாகத் தொடரச் செய்கின்றன.

You Might Also Like