Star Mountain

My travels and other interests

Rural Tamilnadu

கவனிக்கப்படாத சில பிரச்சனைகள் (2000)

கிராமப்புற வாழ்வும் கவனிக்கப்படாத சில பிரச்சனைகளும்

விவசாயம்

தமிழகத்தில் முழுமையாக விவசாயம் நடைபெறும் மாவட்டங்களாக நான்கைந்து மாவட்டங்களே உள்ளன. இந்த மாவட்டங்களில் விவசாயம் பெரிதும் ஆற்றுப் பாசனத்தை நம்பியே இருக்கின்றன. இந்த மாவட்டக் கிராமங்களில் விவசாயம் முக்கியத் தொழிலாகக் கொண்ட போதும் விவசாய வேலைகளுக்கான வேலையாட்கள் கிடைப்பது முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதர பகுதி விவசாயிகள் பாசனத்திற்கான கிணறு, கண்மாய், ஏரி போன்றவைகளை நம்பியிருக்கிறார்கள். மழையை நம்பிய விவசாயம் தமிழகத்தில் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நடைபெறுகிறது. இங்கு விவசாயம் மழையற்றுப் போனால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. கண்மாய், குள்ளங்கள், கிணறு போன்றவை வழியாக பாசனமுறைகள் பயன்படுத்தப்படுவதால் நிலத்தடி நீரின் உபயோகம் அதிகரித்துள்ளது. காவேரிப் பாசனத்திற்கான அணைநீர் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனை முற்றாகத் தீர்க்கப்படாததால் இதன் எதிரொலி விவசாய வாழ்வில் காணமுடிகிறது. முறையான நீர்ப் பங்கீடும் நிர்வாகமின்மையும் விவசாயத்தின் அடிப்படை வசதியை சிதைவுறச் செய்வதால் விவசாய நெருக்கடி உருவாவதைக் காணமுடிகிறது.

விவசாய முறைகளில் தமிழக கிராமத்தில் அதிக அளவில் மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. இயந்திரங்களின் பயன்பாடு உழவு, அறுவடை, நீர்பாய்ச்சுதல் என பல விதங்களிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் ரசாயன உரங்கள், விதைகள் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதற்கு மாற்றாக இயற்கை வேளாண்மையை முதன்மைப்படுத்தும் சில முயற்சிகளும் கூட தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த இயந்திரங்களின் வருகை விவசாயப் பணிகள நவீனமாக்கியபோதும் கூட இதற்கான செலவு மற்றும் பராமரிப்பு மிக அதிகமாகவே உள்ளது. மேலும் வணிக நோக்கமானது இதில் அதிகமாக தலை தூக்குகிறது.

50 ஆண்டுகளில் பெரும்பான்மை கிராமங்களில் அதிக நிலம் படைத்த நிலக்கிழார் போன்றவர்கள் குறைந்து, குறைந்த பட்ச நிலமுடைய விவசாயிகள் அதிகமாகியிருப்பதைக் காண முடிகிறது. அவரவர் சொந்த நிலங்களில் பாடுபடுவதே இன்றைய விவசாயமாக உள்ளது. மேலும் பணப்பயிர்களாக அறியப்படுவதை மட்டுமே விவசாயம் செய்வதென்ற போக்கும் அதிகமாகியுள்ளது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கறிவேப்பிலையை முக்கியப் பயிராக விவசாயம் செய்வது சமீபமாக அதிகரித்துள்ளது. இதனால் தினசரி வருமானம் கிடைக்கிறது என்கிறார்கள் விவசாயிகள். இதுபோலவே மதுரை திண்டுக்கல் மாவட்டங்களில் பல்வகையான பூக்கள் பயிரிடுகிறார்கள். இதுவும் தினசரி வருமானம் தரும் தொழிலாகவே கருதப்படுகிறது. மரபான விவசணாயத்தை விடவும் பண்ணைகள் வைப்பது பணம் சம்பாதிக்க எளிமையான வழியென கருதும் விவசாயிகள் பழப்பண்ணைகள் , தென்னை பண்ணைகள், தேக்குப் பண்ணைகள் வைக்க முயலுகிறார்கள். ஒரு வணிக நோக்கில் பல லட்ச ரூபாய் செலவில் அறிமுகப்படுத்தி தேக்கு மரத்திட்டம் என விளம்பரப்படுத்தி பொதுமக்களிடம் பணம் பறித்த நிறுவனங்களம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதிகமாக இருந்தன. பணப்பயிர்களைப் போலவே குறுகிய காலப் பயிர்களைப் பயிரிடுவதும் நடைமுறையில் உள்ளது.

விவசாயப் பொருட்கள் விளைந்து வரும்போது அதனை விற்பதற்காக அரசாங்கம் முறையான விலை நிர்ணயிக்கப்படாததால் விவசாயிகள் பெரும்பாலும் தனியார் வியாபாரிகளை நம்பியே இருக்கிறார்கள். அரசாங்க கூட்டுறவு விநியோக சங்கங்களை விட இந்தத் தனியார் முறை உடனடியாகப் பணம் தருவதாகச் சொல்கிறார்கள். விளைபொருட்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து மற்ற இடத்திற்குக் கொண்டு போக போதுமான வாகன வசதிகள் இல்லை என்பதாலும் இதற்கான செலவு அதிகமிருப்பதாலும் பொருட்கள் கிடைத்த விலைக்கு விற்கப்படுகின்றன. விவசாயத்திற்கான கடன் வழங்குவதும் அதைத் திரும்பப் பெறுவதும் மிகவும் சிரமமான நடைமுறையாக வங்கிகளும் கூட்டுறவச் சங்கங்களும் கருதுகின்றன. கட்ட முடியாத கடன் தொகை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போவதால் பல கூட்டுறவு சங்கங்கள் கடனில் மூழ்கியுள்ளன. விவசாயக் காலத்தில் பயிர்களுக்கு முறையான பாதுகாப்பீடு தர அரசோ மற்ற நிறுவனங்களோ ஆர்வம் காட்டுவதேயில்லை. கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக அரசாங்கம் விவசாயத்திற்கென இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. ஆனாலும் விவசாயிகள் இதை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. விவசாயிகளுக்கும் அரசாங்கத்திற்கும் ஊடே விவசாயத் துறை என அரசு நிறுவனமுள்ளது. இது சார்ந்து விவசாய வல்லுநர்கள் அதிகாரிகள் பலர் அரசுப் பணியில் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் கிராமங்களில் நேரடியாகப் பங்கு பெறுவதேயில்லை.

குடும்பம்

முந்தைய கிராம வாழ்வில் குடும்பமே கிராம மையமாக இருந்தது. பெரும்பாலும் கூட்டுக்குடும்பங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் ஆறேழு குழந்தைகள் இருந்தன. விவசாய பணி சார்ந்த வாழ்வு என்பதால் நெல்லும் உணவு தானியங்களும் எளிதில் கிடைத்தன. காய்கறிகள், பால் மற்றும் தங்கள் பகுதியில் கிடைக்கும் பழங்கள் சுலபமாகக் கிடைத்தன. குடும்பம் அதன் தலைவனின் கீழ் அடங்கியதாக இருந்தது. மண உறவுகள் உள்ளுக்குள்ளே முடிந்து கொள்ளப்பட்டன. அந்தக் குடும்பம் தொன்றுதொட்டு வரும் நம்பிக்கைகள் மரபுகளைத் தனது வழிமுறையாகக் கொண்டிருந்தது. இதன் சாதகபாதக அம்சங்கள் குடும்பத்தில் படிந்திருந்தன.

இன்றைய கிராம குடும்பம் நகரைப் போலவே தனிக்குடும்பம் ஒன்றோ இரண்டோ குழந்தைகள். வீடு பூர்வீக வீட்டை மாற்றிக் கட்டியோ அல்லது வாடகை வீடாகவோ இருக்கிறது. பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். ஆண் பெண் குழந்தைகள் கல்வி கற்க அனுப்பப்படுகிறார்கள். விவசாயப் பணி குறைந்து பல்வேறு வேலைகளுக்குப் போவதால் வீட்டு வேலைகள் உணவு தயாரிப்பது யாவும் மாறியிருக்கின்றன. நவீன வீட்டு உபயோக சாதனங்கள் வந்துள்ளன. பெணகள் சுயதொழிலில் ஈடுபடுகிறார்கள். ஆனாலும் கலாச்சார ரீதியான பாதிப்பு இன்றும் மாறாமல் தொடர்கின்றன.

இது ஒருபுறம் இருந்தபோதும் பெண்குழந்தைகள் பிறப்பு மற்றும் பெண் திருமணம் இரண்டிலும் கிராமம் இன்னமும் தனது கல்காலத்தன்மையையே கொண்டிருக்கிறது. சேலம் தேனி மாவட்டங்களில் இப்போதும் பெண் சிசுக்கொலை நடைபெறுவதை முற்றாகத் தடுக்க முடியவில்லை. மேலும் தமிழகம் முழுவதும் பரவி பீடித்துள்ள வரதட்சணை பிரச்சனை கிராமத்தையும் தீவிரமாகப் பற்றியுள்ளது. இத்தோடு திருமணங்களில் சாதிய தலையீடு அதிகரித்துள்ளது. ஒரு பக்கம் ஊடகங்களால் காட்டப்படும் பெண் சுதந்திரம் மற்றும் நவநவீன கனவுகளும் மறுபக்கம் அடி உதை மற்றும் அடக்குமுறையாலும் கிராமப்புறு பெண் துயருற்று வருகிறாள். இதற்கு மாற்று வழியாகவே பல கிராம இளம்பெண்களும் நகருக்கு வந்து விடுவதை நியாயப்படுத்துகிறார்கள். மதம், சாதி மற்றும் மரபான நம்பிக்கைகள் ஆண்களை விடவும் பெண்கள் மீதே அதிகமாக திணிக்கப்படுகின்றன. இதை மீறும் போது தண்டிப்பதும் நடைபெறுகிறது.

கல்வி

இந்த 50 ஆண்டுகளில் கிராமம் ஏதாவது ஒரு துறையில் முன்னேறி இருப்பதாக மதிப்பிடுவதென்றால் அது கல்வி என்றே சொல்லவேண்டும். மாவட்டத்தின் பெரும்பான்மையான கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு விட்டன. இதனால் கல்வியின் பொருட்டு ஊர் ஊராக அலைய வேண்டிய சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது. அரசாங்கப் பள்ளிகளைப் போலவே தனியார் பள்ளிகளும், குழந்தைகளுக்கு ஆங்கிலக் கல்வி தரும் ஆரம்பப் பள்ளிகளும் கிராமங்களிலும் உருவாகி விட்டது. ஆனாலும் போதுமான கட்டிடங்கள் இல்லாமை, ஆசிரியர்கள் இல்லாமை கற்கும் உபகரணங்கள் இல்லாமை போன்ற காரணங்களால் கிராமப்புற கல்வியின் தரம் மிகக் குறைவாகவேயுள்ளது.

பெண்கள் கல்வி கற்பது முந்தைய நாட்களை விட இப்போது மிக அதிகமாகி உள்ளது. கடந்த சில வருடங்களாக நடைபெற்று வரும் அறிவொளி இயக்கத்தின் மூலம் அனைவருக்குமான ஆரம்பக் கல்வி தரும் வாய்ப்புகள் பெருமளவு ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் விருதுநகர், சிவகாசி, திருப்பூர், சென்னை, கோவை போன்ற பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பட்டாசு, தீப்பெட்டி, பனியன், சாயம் போடுவது போன்ற பல தொழிலிலும் ஈடுபடுவதால் பள்ளியில் இருந்து பாதியிலேயே விடுபடுவது கணிசமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்க உலக தொழிலாளர் நிறுவன உதவியுடன் மாற்றுக் கல்வி வேலைவாய்ப்பு திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. முந்தைய காலத்தை விடவும் நகரங்களுக்குச் சென்று கல்வி கற்க வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. கல்வியின் தரத்தினை மேம்படுத்தவும் உரிய கல்வி வசதி செய்யப்பட்டால் கிராமம் இந்த விஷயத்திலாவது தன்னிறைவு அடையக்கூடும்.

சினிமா டிவி மற்றும் செய்தித் தாள்

முன் எப்போதையும் விட தற்போதைய கிராமவாசி நாள் ஒன்றிற்கு சராசரியாக இரண்டு முதல் நான்கு சினிமா பார்த்துவிடுகிறான். இதற்காக திரையரங்குகளுக்குப் போவதை விடவும் கேபிள் டிவி வழியே சினிமா பார்ப்பது பெருகிவிட்டது. அன்றாட உணவு, தூக்கம் போல அன்றாட சினிமாவிற்குப் பழகிவிட்டார்கள். தீப்பெட்டி தொழில் அலுவலகங்களில் கூட கேபிள் டிவி இணைப்பு தரப்பட்டிருக்கிறது.

சினிமா போலவே நாள் ஒன்றிற்கு 5 முதல் 8 தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து விடுகிறார்கள். இதில் பெண்கள் ஈடுபாடு அதிகம். குழந்தைகளும் வயதானவர்களும் தற்போதைய ஒரே பொழுதுபோக்காக டிவியைச் சார்ந்திருக்கிறார்கள். இது இந்த 5 வருடங்களில் மிக அதிகமாகியுள்ளது.

தொடர்ந்து சினிமா, தொடர் விளம்பரங்கள் வழியாக ஒரு கலாச்சார மாற்றமும் வணிக சந்தைக்கான வழிகளும் பெருகிவிட்டன. கிராமப்புறத்தில் புதிய ரசிகர் மன்றங்கள், நவநாகரீக உடைகள் மற்றும் அலங்காரங்கள், பற்பசை, அலங்கார சோப், கோக், குளிர்பானங்கள், நூடுல்ஸ், பாடிஸ்பிரே என பல பொருட்களும் ஊடுகலந்து விட்டன. இதன் தாக்கம் அவர்களின் வாழ்வியலில் அதிகமாகப் பாதித்துள்ளது.

சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை

தென்மாவட்டக் கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாகப் பெருகிவரும் சாதிய சண்டைகளும் வன்முறைகளும் கிராமத்தை அபாயகூடமாக மாற்றியுள்ளன. இதனால் குற்றங்களும் வன்செயல்களும் அதிகரித்து வருகின்றன. இதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக காவல்துறை செயல்பட்ட போதும் பல நேரங்களில் அவர்களின் மூலமே வன்முறை துவங்குவதும் தொடர்கிறது. கிராமப்புறங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, திருட்டுத் தொழிலில் ஈடுபடுவது போன்றவை இன்றும் முற்றாக ஒழிக்கப்படவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் சில பகுதிகள் இதுபோன்ற செயல்களுக்கு மையமாக விளங்குகின்றன. காவல்துறை சரியாகச் செயல்படுவதில்லை என்ற பொது குற்றச்சாட்டு தமிழகமெங்கும் காணமுடிகிறது.

மின்சாரம் மற்றும் தெருவிளக்கு

கிராமப்புறத்தில் இன்றும் போதுமான மின்சார விநியோகம் நடைபெறவேயில்லை. பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் மின்சார விளக்குகளே கிடையாது. வீடுகளுக்கு மின்சாரம் கிடைத்த போதும் இவை முறையாக அளிக்கப்படுவதில்லை. மின்வெட்டு கோடைக் காலத்தில் மிக அதிகமாக உள்ளது. மேலும் விவசாயம் நடைபெறும் காலங்களில் மின்வெட்டினால் ஏற்படும் பாதிப்பு நீடித்து வருகிறது. தெருவிளக்குகள் கிராமங்கள் தோறும் இருந்த போதும் அவை முறையாகப் பராமரிக்கப்படுவது சொற்ப அளவிலே நடைபெறுகிறது. இதனால் ஒவ்வொரு கிராமத்திலும் சில குறிப்பிட்ட பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

பஞ்சாயத்து நிர்வாகம்

தேர்தல் முறையில் தேர்வு செய்யப்பட்ட இந்த அமைப்பு பஞ்சாயத்தை நிருவகிப்பதை விடவும் இதன் நிதியாதாரங்களைச் செலவு செய்வதையும் அதைப் பங்கிட்டுக் கொள்வதிலும் அதிக கவனம் காட்டுகிறது. பஞ்சாயத்துத் தலைவர்களாகத் தேர்வு செய்யப்பட்ட பெண்கள் சுதந்திரமாகச் செயல்படுவதை விடாத நிலையும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மக்கள் சபையில் பங்கு எடுத்து விவாதிக்க முடியாத நிலையில் பல பஞ்சாயத்து அமைப்புகளில் உள்ளது. பஞ்சாயத்துகள் செயல்பட்ட போதும் சில கிராமங்களில் இறந்தவர்களுக்குச் சுடுகாடு கூட முறையாக இல்லாத அவலநிலை உள்ளது. பஞ்சாயத்து நிர்வாகத்தில் அரசியல் மற்றும் சாதிய தலையீடுகள் மிக அதிகமாக இருக்கின்றன. இதனால் நிர்வாக சீர்கேடு மிக அதிகமாக நடைபெறுகின்றன.

You Might Also Like